டி.பி.எஸ். ஜெயராஜ்
தமிழீழ விடுதலை புலிகளுக்கும் 2025 ஜூன் 9 ஆம் திகதி காலமான பிரபல ஆங்கில நாவலாசிரியர் ஃபிரெடரிக் ஃபோசைத்துக்கும் ஒரு தொடர்பு இருக்கிறதா? இந்த கேள்விக்கான எளிதான பதில் ‘இல்லை ‘ என்பதேயாகும். ஆனால், ஃபோசைத்தினால் எழுதப்பட்ட நாவல் ஒன்றில் விபரிக்கப்பட்ட.உபாயம் ஒன்றை விடுதலை புலிகள் ஆட்களை கொலைசெய்வதற்கு பிரதிபண்ணினார்கள் என்று கொஞ்சக்காலம் ஊகங்கள் நிலவியது என்பதை நிச்சயம் சொல்லத்தான் வேண்டும்.
அதுவெல்லாம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் ஸ்ரீபெரும்புதூரில் 1991 மே 21 ஆம் திகதி முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை விடுதலை புலிகள் கொலை செய்வதுடன் தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராஜீவ் காந்தி கட்சியின் வேட்பாளர் மரகதம் சந்திரசேகருக்கு ஆதரவாக நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக ஸ்ரீபெரும்புதூருக்கு வருகை தந்தார்.
அப்போதுதான் ‘ தனு ‘ என்ற பெயரால் அறியப்பட்ட இலங்கை தமிழ் யுவதி ராஜீவ் காந்திக்கு நெருக்கமாக சென்றார். செம்மஞ்சள் மற்றும் பச்சை நிறத்திலான சுறிதார் அணிந்திருந்த — மூக்குக்கண்ணாடி போட்ட அவள் ராஜீவ் காந்தியின் பாதங்களை தொடுவதற்காக மரியாதையுடன்குனிந்தாள். தனது உடம்பைச் சுற்றிக் கட்டியிருந்த பட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டை அவள் வெடிக்க வைத்தாள். ராஜீவ் காந்தியும் கொலையாளி தனுவும் குறைந்தது வேறு 18 பேரும் அந்த குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர். 42 பேர் படுகாயமடைந்தனர்.
இந்தியாவை உலுக்கிய அந்த கொலை உலகம் பூராவும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அதுவே வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஒரு ‘ தற்கொலைப்பட்டி ‘ கொலைமுயற்சி ஒன்றுக்கு பயன்படுத்தப்பட்ட முதல் சந்தர்ப்பமாகும். வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன, ஆனால், தற்கொலைப்பட்டி பயன்படுத்தப்பட்ட முதல் சம்பவமாக இது பதிவாகியது. அடுத்து வந்த வருடங்களில் விடுதலை புலிகள் ‘ கரும்புலிகள் ‘ என்று அறியப்பட்ட தற்கொலைக்குண்டு போராளிகளை பல தாக்குதல்களில் பயன்படுத்தினர். அது விடுதலை புலிகளின் முத்திரையாக மாறியது.
” த நெகோஷியேற்றர் ”
ராஜீவ் காந்தி கொலை இயல்பாகவே இந்தியாவில் ஊடக விவாதங்களில் சூடான ஒரு தொனிப்பொருளாக மாறியது. பல புனைகருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அத்தகைய புனை கருத்துக்களில் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 1989 ஆம் ஆண்டில் வெளியாகி நன்கு விற்பனையான ஃபோசைத்தின் ‘ த நெகோஷியேற்றர் ‘ (The Negotiator) நாவலில் இருந்தே வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட தற்கொலைப் பட்டியொன்றை ( Suicide belt ) பயன்படுத்தும் எண்ணத்தைப் பெற்றுக் கொண்டார்கள் என்பதே அந்த கருத்தாகும்.அந்த புனைவு நாவலில் தீயவர்கள் ஒரு அமெரிக்க ஜனாதிபதியின் மகனைக் கொலை செய்வதற்கு குண்டுப்பட்டி ஒன்றைப் பயன்படுத்துகிறார்கள்.
நம்பத்தகாத ஒரு தற்செயல் பொருத்தமான நிகழ்வாக, நாவலில் பயன்படுத்தப்படுகின்ற குண்டுப்பட்டிக்கும் ராஜீவை கொலை செய்வதற்கு விடுதலை புலிகளின் கொலையாளி தனு அணிந்திருந்த உண்மையான குண்டுப் பட்டிக்கும் இடையில் பல ஒற்றுகைள் இருந்தன. இரு பட்டிகளும் இறுக்கி வரிந்துகொள்வதற்கு வசதியாக கொக்கி, வளையங்களைக் கொண்டதாக (Velcro closure) தோலினாலும் டெனிம் துணியினாலும் செய்யப்பட்டிருந்ததுடன் மூன்று அங்குல அகலமுடையவையாகவும் நிரப்பப்பட்ட வெடிபொருட்கள் முதுகெலும்புடன் வரித்துக்கொள்ளப்பட்டதாகவும் இருந்தன என்று இந்திய விசாரணையாளர்களையும் ஆய்வாளர்களையும் மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் கூறின.
ராஜீவ் காந்தி கொலையையும் ஃபோசைத்தின் நாவலை தொடர்புபடுத்தி அன்று பெரும் பரபரப்புக் காட்டின. எனது நினைவு சரியாக இருக்கும் என்று நம்புகிறேன். ஒரு இந்திய பத்திரிகையாளர் ஃபோசைத்தை பேட்டியும் கண்டார்.பெருவாரியான ஊகத்தனமான வாதங்களும் புனைவுகளும் முன்வைக்கப்பட்ட போதிலும், ‘ த நெகோஷியேற்றர் ‘ தரைப்படத்தில் இருந்துதான் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட தற்கொலைப் பட்டி யோசனையை பெற்றார்கள் என்பதற்கான உருப்படியான தொடர்பு எதுவும் நிரூபிக்கப்படவில்லை. கலையை நிஜவாழ்வில் பின்பற்றி அதைப்போன்று போலிசெய்த ஒரு உதாரணமாக இது இருந்திருக்கலாம் அல்லது இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், ‘ நியூயோர்க் ரைம்ஸ் ‘ வர்ணித்ததை போன்று ஃபோசைத்தே அந்த ” பரபரப்பூட்டும் புவிசார் அரசியல் திரைப்படத்தின் விற்பன்னர் ” என்ற எண்ணம் வலுப்படுவதற்கு அது உதவியது.
மூன்று பிரிட்டிஷ் எழுத்தாளர்கள்
மூன்று பிரிட்டிஷ் எழுத்தாளர்களின் ” துப்பறியும் மர்ம நாவல்களை ” வாசிப்பதில் பேரர்வம் கொண்டிருந்தேன். இப்போதும் அப்படித்தான். முதலாவது எழுத்தாளர் பல தசாப்தங்களுக்கு முன்னர் 1964 ஆம் ஆண்டில் காலமான இயன் ஃபிளெமிங். இரண்டாமவர் 2020 ஆம் ஆண்டில் காலமான ஜோன் லா கேர். மூன்றாமவர் சில நாட்களுக்கு முன்னர் காலமான பிரெடெரிக் ஃபோசைத். ஃபிளெமிங்கின் ஜேம்ஸ் பொண்ட் காதல் — வீர சாகசங்கள் செய்பவர். லா கேரின் ஜோர்ஜ் சிமைலீ உளவியலில் பெருமளவுக்கு தங்கியிருக்கும் சூழ்ச்சித் திறமிக்க சிந்தனாவாதி. ஆனால், ஃபோசைத் வேறுபட்டவர்.
ஃபோசைத்துக்கு கிரமமான கதாநாயகன் கிடையாது. அவர் தனது நூல்களில் வேறுபட்ட கதாபாத்திரங்களை பற்றி எழுதுவார். அவரது பல்வேறு வகைப்பட்ட கதையமைப்புக்கள் சூழ்ச்சி, வேவு பாரத்தல் , புவிசார் அரசியல், ஆட்சிக்கலை, தேசிய பாதுகாப்பு, நடைமுறை யதார்த்த அரசியல் மற்றும் ஆழமான அரசு (Deep state ) போன்ற விடயங்களுடன் தொடர்புடைய வேறுபட்ட பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டவை. நன்கு ஆய்வு செய்யப்பட்ட அவரது எழுத்துக்கள் துல்லியமானவையாகவும் அறிவூட்டும் தகவல்கள் நிறைந்ததாகவும் இருக்கும். அவர் கவனத்தைப் பெரிதும் ஈர்க்கும் ஒரு கதைசொல்லி. கருத்தை ஈர்த்துப் பிடிக்கும் அவரது கதைகூறல் முறையில் மறைபுதிர் இருக்கும் என்றாலும் நம்பக்கூடியதாகவும் எல்லாவற்றுக்கும மேலாக சுலபமாக விளங்கி சுவைக்கக் கூடியதாகவும் இருக்கும்.
சர்வதேச நெருக்கடிகளின் நடைமுறை மெய்ம்மைகளை உருப்படுத்திக்காட்டுவதில் ஃபோசைத்தின் ஆற்றலும் இராணுவ மற்றும் அரசாங்க செயற்பாடுகளை ஒரு உள்ளாள் போன்று அவர் செய்யும் விபரிப்புகளும் விமர்சகர்களினால் பிரத்தியேகமாக அவதானிக்கப்பட்டன. ‘ இலக்கிய உயிரியல் அகராதி’ யின் ( Dictionary of Literary Biography ) பங்களிப்பாளரான அனட்ரூ எவ். மக்டொனால்ட் ஃபோசைத்தை பற்றி கூறியதைப் போன்று ” நிகழ்வுகளை அண்மையில் இடம்பெற்றதாக காட்டுவதில் அவருக்கு இருக்கும் உணர்வு,உலக விவகாரங்களை அவற்றில் சம்பந்தப்பட்ட உள்ளாள் போன்று நோக்குவது, மனிதர்களுக்கே உரித்தான பலவீனங்களுடன் கூடிய உலகப் பிரமுகர்கள் விரைவாக நகரும் கதையமைப்பு ஆகியவையே அவரின் பிரபல்யத்துக்கு முக்கியமான காரணிகளாகும்.”
திரைப்படங்கள்
ஃபோசைத்தின் நாவல்களின் பின்னால் உள்ள முக்கியமான செய்தி யதார்த்தவாதமாகும் என்று ‘ என்சைக்கிளோபீடி. கொம் (Encyclopedi.com) கூறுகிறது. புதிய ஒரு இலக்கிய நடையின், அமெரிக்க எழுத்தாளரான ட்ரூமன் கபோற்றின் ‘ In the Cold Blood ‘ என்ற புனைவுசாரா நாவலினால் முதன்முதலாக பிரபல்யப்படுத்தப்பட்ட ஒரு இலக்கிய நடையின்,ஃபோசைத் பு திகலூட்டும் ஆவணத் திரைப்படங்களின் ஆரம்பகர்த்தாவாக ஃபோசைத் புகழப்படுகிறார். ஒவ்வொரு நூல் தொடர்பிலும் மாதக்கணக்கில் ஃபோசைத் செய்த ஆராய்ச்சிகளில் மாத்திரமல்ல, பல்வேறு வகைப்பட்ட சொந்த அனுபவங்களிலும் நாவல்கள் தங்கியிருக்கின்றன. அந்த அனுபவங்கள் அவரது எழுத்துக்களுக்கு பெருமளவில் நம்பகத்தன்மையை கொடுக்கின்றன.
ஃபோசைத்தின் நூல்களின் வெற்றிக்கும் பிரபல்யத்துக்கும் மத்தியிலும், பல இலக்கிய அறிஞர்களும் உயர்தரமான விமர்சகர்களும் அவரை ஏளனமாக பார்த்தார்கள். புரிந்துகொள்ளத்தக்க அவரது எளிமையான உரைநடை நயமற்றது என்றும் சலிப்பூட்டுவது என்றும் அகந்தையுடன் நிராகரிக்கப்பட்டது. யதார்த்தபூர்வமான விபரங்களில் அவர் செலுத்திய அவதானம் ” நளினம் இல்லாத ஒரு உரைநடைப் பாணி ” என்று நையாண்டி செய்யப்பட்டது. அவர் பல சந்தர்ப்பங்களில் கற்பனைத்திறனுடைய எழுத்தாளராக அன்றி ஒரு கடுமையாக நிருபராகவும் குறைகூறப்பட்டார். ஃபோசைத் பத்திரிகைத்துறை நிபுணத்துவம் கொண்டவர் என்பதை தவிர வேறு எதற்கும் உரிமைத்தகுதி கொண்டவர் அல்ல என்று இலக்கிய விமர்சகர் ஜூலியன் சைமன்ஸ் கூறினார்.
ஆனால், அந்த விமர்சனங்களை இலேசாக எடுத்துக் கொண்ட அவர் ஒரு பெரிய இலக்கிய ஜாம்பவானாக இருப்பதாக தான் பாசாங்கு செய்யவில்லை என்று கூறினார். வாசகர்களை மகிழ்விக்கவும் பணம் சம்பாதிக்கவுமே தான் எழுதுவதாக கூறிய அவர் அதற்கு நிரூபணமாக தனது நூல்கள் பல இலட்சக்கணக்கில் விற்பனை செய்யப்பட்டதை சுட்டிக்காட்டினார்.
மொழிகள்
பிரெடெராக் மக்காதி ஃபோசைத் கென்ற், ஆஷ்போர்ட்டில் 1938 ஆகஸ்ட் 25 ஆம் திகதி பிறந்தார். அவரது பெற்றோர் 4, நோர்த் வீதியில் வியாபாரம் செய்தனர். தாயார் பிலிஸ் ஆடைகளையும் தந்தையார் பிரெடெரிக் சீனியர் கம்பளிகளையும் விற்பனை செய்தனர். இளம் பிரெடெரிக் ரொன்பிரிட்ஜில் தனியார் பாடசாலை ஒன்றில் கல்வி பயின்றார். மொழிகளில் இயல்பான ஒரு ஆர்வத்தைக் காட்டிய அவர் பிரெஞ்சு, ஜேர்மன், ரஷ்யன் மற்றும் ஆங்கில மொழாகளில் கைதேர்ந்தவராக விளங்கினார்.
விமானி
குடும்பத்தில் ஒரேயொரு பிள்ளையான பிரெடெரிக் சிறுபராயத்தில் தனியாக வாழவேண்டியிருந்த சூழ்நிலையில் நூல்களை வாசிப்பதில் பேராரவம் காட்டின்ர். ஸ்பெயினின் மஞ்சி விரட்டு தொடர்பான ஏர்ணெஸ்ட் ஹெமிங்வேயின் ‘ Death in the Afternoon ‘ நூலினால் கவரப்பட்ட ஃபோசைத் ஸ்பானிய மொழியைப் படிப்பதற்காக ஸ்பெயினில் உள்ள கிரனடா பல்கலைக்கழகத்தில் இணைந்துகொண்டார். அதேவேளை, மஞ்சி விரட்டு விளையாட்டில் ஈடுபடுவதிலும் ஆர்வம் காட்டினார். சில மாதங்களில் நாடு திரும்பிய அவர் றோயல் விமானப்படையில் இணைந்தார். போர்விமான ஓட்டியாக வந்த ஃபோசைத் 1958 ஆம் ஆண்டில் விமானப்படை அதிகாரியாக (Flying Officer ) நியமிக்கப்பட்டார்.
பத்திரிகையாளர்
வெளிநாடுகளில் றோயல் விமானப்படையின் முனானரங்கத்தில் நின்று பணியாற்ற ஃபோசைத் விரும்பியபோதிலும், அவர் உள்நாட்டில் துணை விமானப்படையில் பணியாற்றுவதற்கு நியமிக்கப்பட்டார். அவர் அதை விரும்பவில்லை. போர்விமான ஓட்டி றோயல் விமானப் படையில் இருந்து விலகி ‘ஈஸ்ரேண் டெயிலி பிறெஸில் ‘ ஒரு பத்திரிகையாளராக பணியாற்றத் தொடங்கினார். சில வருடங்களுக்கு பிறகு ஃபோசைத் ராய்ட்டர்ஸ் செய்திச்சேவையில் இணைந்து முதலில் பாரிஸிலும் அடுத்து ஜேர்மனியிலும் அதன் செய்திப் பணியகங்களுக்கு நியமிக்கப்பட்டார். மீண்டும் சில வருடங்களுக்கு பிறகு பிரிட்டன் சென்ற அவர் பிரிட்டிஷ் ஒலிபரப்பு கூட்டத்தாபனத்தில் (பி.பி.சி.) இராஜதந்திர செய்தியாளராக இணைந்துகொண்டார்.
பயாஃபிறா
1967 ஆம் ஆண்டில் நைஜீரியாவில் இக்போ இன மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையில் ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள். பல இலட்சக் கணக்கானவர்கள் இடம்பெயர்ந்தார்கள். அதன் விளைவாக இக்போ இனத்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு நைஜீரியாவின் பகுதிகள் பிரிந்து பயாஃபிறா என்ற சுதந்திர நாடு பிரகடனம் செய்யப்பட்டது. ஃபோசைத் பயாஃபிறாவுக்கான பி.பி.சி.யின் செய்தியாளராக பணியாற்றினார்.
ஆனால், பயாஃபறா தனிநாடாகப் பிரிந்து செல்வதை அனுமதிக்க நைஜீரிய அரசாங்கம் மறுத்ததை அடுத்து கொடூரமான உள்நாட்டுப்போர் மூண்டது. பிரிட்டனின் கொள்கை விரைவாகவே பயாஃபிறாவுக்கு எதிரானதாக மாறியது. பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக இருந்தமைக்காக ஃபோசைத்துடன் பிரிட்டிஷ் அரசாங்கமும் பி.பி.சி.யின் முக்கிய அதிகாரிகளுடன் முரண்பட்டுக் கொண்டார்கள்.
உளவாளி
பி.பி.சி.யில் இருந்து ஃபோசைத் வெளியேறினார். ஆனால் பயாஃபறாவில் ஒரு சுயாதீனப் பத்திரிகையாளராக தொடர்ந்தும் தங்கியிருந்தார். அவர் பயாஃபிறாவின் ஆட்சியாளர் ஜெனரல் ஒடுமேக்வு ஒயுக்வுவின் நெருங்கிய சகாவாகவும் நண்பராகவும் மாறினார். அதேநேரம் ஃபோசைத் எம்.ஐ. 16 என்று அறியப்பட்ட பிரிட்டிஷ் இரகசிய சேவையின் ஒரு உளவாளியாகவும் தகவல் கொடுப்பவராகவும் மாறினார்.பயாஃபிறா பிரிவினை படிப்படியாக இராணுவ ரீதியாக ஒடுக்கப்பட்டது.
1969 ஆம் ஆண்டில் ஃபோசைத் ஆர்வக்கிளர்ச்சியின் விளைவான ஒரு முயற்சியாக பயாஃபிறா மக்களுக்கு உதவுவதற்கு ‘ பயாஃபிறா கதை ‘ (Tge Biafra Story ) என்ற நூலை எழுதி வெளியிட்டார். ஏழு மாதங்களுக்கு பிறகு பயாஃபிறா கிளர்ச்சி முற்றுமுழுதாக நசுக்கப்பட்டது. பயாஃபிறா உள்நாட்டுப் போர் முடிவுக்கு வருவதற்கு சில வாரங்கள் முன்னதாக பிரிடடனுக்கு திரும்பிய ஃபோசைத் பல வருடக்களுக்கு பிறகு பயாஃபிறா தொடர்பான தனது நூலை விரிவுபடுத்தி ‘ ஆபிரிக்க காவியத்தை படைத்தல் ; பயாஃபிறா கதை ‘ என்ற தலைப்பில் வெளியிட்டார்.
சார்ள்ஸ் டீ கோல்
ஃபோசைத் மீண்டும் பிரிட்டனுக்கு வந்துவிட்டார். ஆனால், வேலை எதுவும் இல்லை. அவர் பொருளாதார ரீதியில் பெரும் கஷ்டத்துக்கு உள்ளானார். இரக்க சுபாவமுடைய நண்பர் ஒருவர் அவருக்கு தனது தொடர்மாடி வீட்டில் தங்குவதற்கு இடம் கொடுத்தார். ஒரு கட்டில் மாத்திரம். பெரும் விரக்தியடைந்த நிலையில் ஃபோசைத் கொஞ்சம் பணம் சம்பாதிப்பதற்காக நூல் ஒன்றை எழுதுவது குறித்து சிந்தித்தார். அவர் ராய்ட்டர்ஸ் செய்திச்சேவைக்காக பாரிஸில் பணியாற்றிக்.கொண்டிருந்தபோதுஅன்றைய பிரெஞ்சு ஜனாதிபதி சார்ள்ஸ் டீ கோலை கொலை செய்வதற்கு சில இராணுவ அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டார்கள். வட ஆபிரிக்காவில் பிரெஞ்சு காலனி நாடாக இருந்த அ ல்ஜீரியாவுக்கு சுதந்திரம் கொடுத்தமைக்காக டீ கோல் மீது அந்த அதிகாரிகளுக்கு ஆத்திரம்..ஆனால், எந்த கொலை முயற்சியும் வெற்றி பெறவில்லை.
அந்த கொலை முயற்சிகளை அடிப்படையாக வைத்து நூல் ஒன்றை எழுதுவது குறித்து ஃபோசைத் சிந்தித்தார். டீ கோல் இருபோதுமே கொலை செய்யப்படவில்லை என்பதால், நாவல் தோல்விகண்ட கற்பனாவாத கொலை முயற்சியை வர்ணிப்பதாக அமையப்போகிறது. அது டீ கோலை செய்வதற்கு அமர்த்தப்படும் ‘ ஜக்கோல் ‘ என்ற குறிப்பெயரைக் கொண்ட பிரிட்டிஷ் கொலையாளியையும் அந்த கொலை முயற்சியை தடுக்க முயற்சிக்கும் பிரெஞ்சு பொலிசாரையும் பற்றியதாக இருக்கும். ஃபோசைத் 35 நாட்களில் ‘ டே ஒஃப் த ஜக்கோல் ‘ ( Day of the Jackal ) என்ற நூலை எழுதி முடித்தார்.
டே ஒஃப் த ஜக்கோல்
ஃபோசைத் மரணமடைந்த பிறகு பிரிட்டிஷ் எழுத்தாளர் மைக் றிப்ளே ‘ த கார்டியன் ‘ பத்திரிகையில் எழுதிய இரங்கல் குறிப்பில் பின்வருமாறு குறிப்பிடுகிறார் ;
” ஃபோசைத் வேலையில்லாத ஒரு வெளிநாட்டு நிருபராக 1970 களின் முற்பகுதியியில் இருந்தபோது எங்கும் எடுத்துச் செல்லத்தக்க தட்டச்சு இயந்திரத்தை பயன்படுத்தி ‘ டே ஒஃப் த ஜக்கோலை ‘ எழுதிமுடித்தார். ஆனால், ஒரு நாவலாசிரியராக வரும் நோக்கம் ஒருபோதும் அவருக்கு கிஞ்சித்தும் இருந்ததில்லை.
” ஃபோசைத்தின் நாவலின் தட்டச்சு பிரதிகள் மூன்று பிரசுரகர்த்தாக்களினால் நிராகரிக்கப்பட்டது. 1971 ஆம் ஆண்டில் மூன்று புத்தக உடன்படிக்கை ஒன்றில் ஹச்சின்சன் பிரசுர கம்பனியினால் அந்த தட்டச்சு பிரதிகள் பொறுப்பேற்கப்படுவதற்கு முன்னதாக நான்காவது பிரசுரகர்த்தாவினாலும் நிராகரிக்கப்பட்டது. அப்போதும் கூட சந்தேக்கள் கிளம்பின. சார்ள்ஸ் டீ கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சதிமுயற்சியை பற்றியதாக இருந்த நூலை விற்பனை செய்யமுடியும் என்பதில் ஹச்சின்சனின் விற்பனை பிரதிநிதிகளில் அரைவாசிப் பேருக்கு நம்பிக்கை இருக்கவில்லை என்பதே அதற்கு காரணம். அந்த கொலை முயற்சி ஒருபோதுமே இடம்பெறாக சம்பவம் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தது.
” கொலைச்சதி முயற்சி மெய்யானது என்று மாத்திரமல்ல, அனாமதேய கொலையாளியான ஜக்கோல் பெரும்பாலும் தனது நோக்கத்தைச் சாதித்துவிட்டான் என்றும் வாசகர்கள் நம்பக்கூடியதாக அதன் ஒழுங்குநடையும் தடயவியல் விபரங்களும் அமைந்திருந்ததே நூலின் சாமர்த்தியமாகும். உண்மையில், குறிப்பிட்ட சில கட்டங்களில், வாசகர்களின் அனுதாபம் கொலை செய்யப்படவிருந்தவர் மீது அன்றி ஜக்கோல் மீதே இருந்தது.
” அந்த நூல் ஒரு பிரசுரச் சாதனையாக அமைந்தது. சிறந்த முதலாவது நாவலுக்கான அமெரிக்க மர்ம எழுத்தாளர்கள் விருதை வென்ற நூல் ஃபிராங்க்பேர்ட புத்தக கண்காட்சியில் பெருமளவில் விற்பனையாகி சாதனையும் படைத்தது. அமெரிக்க இயக்குநரான ஃபிரெட் சின்னெமான் விரைவாகவே அதை திரைப்படமாகவும் எடுத்தார். ஈவிரக்கமற்ற ஜக்கோலாக எட்வேர்ட் ஃபொக்ஸ் நடித்தார். திரைப்படத்தின் உரிமைகளுக்காக ( 20 ஆயிரம் ஸ்டேர்லிங் பவுண்கள் ) தயாரிப்பாளர் ஒரு குறிப்பிட்ட தொகையை அல்லது ஒரு தொகையுடன் இலாபத்தில் ஒரு சதவீதத்தையும் ஃபோசைத்துக்கு வழங்க முன்வந்தார். அவர் குறிப்ப்பிட்ட தொகையையே ஏற்றுக்கொண்டார். பணம் தனக்கு அத்தியாவசியமாக தேவைப்பட்டது என்று அவர் கூறினார். 1972 ஆம் ஆண்டில் ‘ டே ஒஃப் த ஜக்கோல்’ 33 மூன்று தடவைகள் மீள்பிரசுரம் செய்யப்பட்டது. தொடர்ந்தும் அச்சில் இருக்கிறது.
” த ஒடேசா ஃபைல்
” தொடர்ச்சியான மூன்று நூல்களில் டே ஒஃப் த ஜக்கோல் முதலாவது. இரண்டாவது நூலாக ‘ த ஒடேசா ஃபைல் ( The Odessa File) வெளியப்பட்டது. அது ஜேர்மனியில் ஔிந்திருந்த முன்னாள் நாஜி போர்க்குற்றவாளியை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளைப் பற்றியது. அவன் ஒடேசா என்ற முன்னாள் நாஜி இரகசிய அமைப்பு ஒன்றினால் பாதுகாக்கப்பட்டதாக கூறப்பட்டது. பிறகு அது திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. ஜோன் வொயிற், மேறி ராம் மாஸ்மிலியன் மேறியா ஷெல் ஆகிய நடிகர்கள் அதில் நடித்தனர்.
டோக்ஸ் ஒஃப் வோர்
மூன்றாவதும் இறுதியுமான நாவல் ‘ டோக்ஸ் ஒஃப் வோர்.’ அது பாரிய பிளாட்டினம் தாது படிவுகளை மலிவாகப் பெறுவதற்காக ஆபிரிக்க நாடொன்றின் அரசாங்கத்தை கவிழ்த்து பொம்மை ஆட்சி ஒன்றை பதவியில் அமர்த்துவதற்காக கூலிப்படைகளை பயன்படுத்தும் பிரிட்டிஷ் சுரங்கத் தொழில்துறை நிறைவேற்று அதிகாரி ஒருவரைப் பற்றியது. இந்த நாவலும் திரைப்படமாக்கப்பட்டது. ரொன் பெரெஞ்சரும் கிறிஸ்தோபர் வோக்கெனும் அதில் நடித்தனர்.
மும்மணிகள்
ஐந்து தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக நீடித்த தனது ஆக்க இலக்கிய வாழ்வில் ஃபோசைத் பல்வேறு நாவல்களையும் பல சிறுகதைகளையும் எழுதினார். அவை எல்லாமே பிரசுரிக்கப்பட்டு வாசகர்கள் மத்தியில் மகத்தான வரவேற்பைப் பெற்றது. அவரது ஆரம்பக்கட்ட எழுத்துக்களில் டே ஒஃப் த ஜக்கோல், த ஒடேசா ஃபைல், டோக்ஸ் ஒஃப் வோர் ஆகிய நாவல்களே அவரது கிரீடத்தில் மும்மணிகளாக அமைந்தன. மூன்று நாவல்களுமே திரைப்படங்களாக எடுக்கப்பட்டு வசூலிலும் பெரும் சாதனை படைத்தன.
பிரெடரிக் ஃபோசைத் 1973 ஆம் ஆண்டில் முன்னாள் மாடல் அழகியான கரோல் கன்னிங்ஹாமை மணமுடித்தார். தம்பதியருக்கு இரு புதல்வர்கள். 1988 ஆம் ஆண்டில் இணக்கபூர்வமாக விவாகரத்துப் பெற்றுக்கொண்ட பிறகு ஃபோசைத் 1994 ஆம் ஆண்டில் சாண்டி மொலோய் என்ற பெண்மணியை மறுமணம் செய்தார். அந்த இரண்டாவது மனைவி 2024 ஆம் ஆண்டில் மரணமடைந்தார். ஃபோசைத்துக்கு நடிகை ஃபாய் டனவேயுடன் காதல் தொடர்பு இருந்ததாகவும் பேசப்பட்டது. அவர் 2025 ஜூன் 9 ஆம் திகதி பக்கிங்ஹாம்ஷயரின் ஜோர்டன்ஸில் குறுதியகால சுகவீனத்துக்கு பிறகு தனது 86 வது வயதில் காலமானார்.
_________________
D.B.S.Jeyaraj can be reached at dbsjeyaraj@yahoo.com
ஆங்கில மூலம்: டி. பி. எஸ். ஜெயராஜ் (Daily Mirror)
தமிழில்: வீரகத்தி தனபாலசிங்கம்
*******************************************************************************

