வடமாகாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றத்துக்கு பிறகு கடந்துவிட்ட 35 வருடங்கள் :துன்பியல் நிகழ்வின் நினைவுகளை மீட்கும் ஒரு முயற்சி .


டி.பி.எஸ். ஜெயராஜ்

இலங்கையின் வடமாகாணத்தின் முஸ்லிம்களின் வரலாற்றில் 1990 அக்டோபர் கொடூரமானதும் மறக்க முடியாததுமான ஒரு மாதமாகும். அந்த மாதத்தில்தான் விடுதலை புலிகள் இயக்கம் இனச்சுத்திகரிப்புக்கு ஒப்பான ஒரு கொடூரமான நடவடிக்கையில் வடமாகாணத்தில் இருந்து தமிழ்பேசும் முஸ்லிம்களை பலவந்தமாக வெளியேற்றியது. பல நூற்றாண்டுகளாக முஸ்லிம்கள் வாழ்ந்து வந்த அவர்களது தாயகத்தில் இருந்து துப்பாக்கி ஏந்திய மொழிரீதியான சகோததர்களினால் ஒரு சில வாரங்களுக்குள் முற்றாக விரட்டப்பட்டார்கள்.

ஒரு மக்களை அவர்களது வரலாற்று ரீதியான வாழ்விடத்தில் இருந்து துப்பாக்கி முறையில் அப்புறப்படுத்துவதும் அவர்களது பணம், நகைகளை பறித்துக் கொண்டு விரட்டியடிப்பதும் மன்னிக்க முடியாததும் வெறுக்கத்தக்கதுமான செயலாகும். இந்த துன்பியல் நிகழ்வு குறித்து கடந்த காலத்தில் நான் அடிக்கடி எழுதியிருக்கிறேன். விடுதலை புலிகள் பலம்பொருந்தியவர்களாக செயற்பட்டுக் கொண்டிருந்தபோது முஸ்லிம்களின் வெளியேற்றம் தொடர்பில் விரிவாக எழுதியதுடன் கடுமையாகக் கண்டனமும் செய்தேன். அந்த வெளியேற்றத்தின் 35 வது வருடாந்தத்தை முன்னிட்டு அதை திரும்பிப் பார்க்கிறேன். இந்த துன்பியல் நிகழ்வின் கதையை சுருக்கமாக கூறுவதன் மூலமும் அதனுடன் தொடர்புடைய தொடர் நிகழ்வுகளின் தடத்தை ஆராய்வதன் மூலமும் அந்த வெளியேற்றத்தின் நினைவுகளை மீட்கும் ஒரு முயற்சியில் எனது முன்னைய எழுத்துக்களின் உதவியையும் நாடுகிறேன்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் 1990 ‘ கறுப்பு அக்டோபர் ‘ சாவகச்சேரியில் இருந்து அக்டோபர் 15 முஸ்லிம்களை வெளியேற்றுவதில் தொடங்கி யாழ்ப்பாண நகரில் இருந்து அவர்களை அக்டோபர் 30 வெளியேற்றியதுடன் முடிவடைந்தது. யாழ்ப்பாண நகரில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றத் தொடங்குவதற்கு சில நாட்கள் முன்னதாக வடக்கு பெருநிலப்பரப்பில் இருந்து அவர்களை பெருமளவில் வெளியேற்றும் நடவடிக்கைகள் தொடங்கின. குடாநாட்டில் இருந்து முஸ்லிம்களைச் சுத்திகரித்த பிறகு சில நாட்களில் அது முடிவடைந்தது.

இந்த வெளியேற்றத்துக்கு பிறகு வட மாகாணத்தில் இரு பகுதிகளில் மாத்திரமே முஸ்லிம்கள் எஞ்சியிருந்தனர். ஒன்று வவுனியா நகரமும் வவுனியாவில் அரசாங்க கட்டுப்பாட்டில் இருந்த சில கிராமங்களும். பாதுகாப்பு படைகளின் பெருமளவிலான பிரசன்னம் காரணமாக அரசாங்க கட்டுப்பாட்டில் இருந்த வவுனியாப் பகுதிகளில் விடுதலை புலிகளினால் முஸ்லிம்களுக்கு தீங்கிழைக்க முடியவில்லை. வெளியேற்றத்துக்கு பிறகு வடக்கில் முஸ்லிம்கள் எஞ்சியிருந்த மற்றைய பகுதி நயினாதீவாகும்.

நயினாதீவில் முஸ்லிம்களின் சனத்தொகை சில நூறுகளாகவே இருந்தது. குடாநாட்டில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றிய பிறகு நயினாதீவில் இருந்தும் கூட அவர்களை வெளியேற்ற விடுதலை புலிகள் விரும்பினார்கள். நயினாதீவு முஸ்லிம்கள் நாகதீப ரஜமகா விகாரையின் அன்றைய விகாராதிபதி வண. பிரமனாவத்த தம்மகித்தி திஸ்ஸ மகாநாயக்க தேரரிடம் தஞ்மடைந்தனர். அந்த பௌத்த மதகுரு முஸ்லிம்களுக்கு கடற்படை மூலமாக போதிய பாதுகாப்பை உறுதிசெய்தார். நயினாதீவில் இருந்து ஒரு முஸ்லிமும் அனுப்பப்பட மாட்டார்கள் என்று விடுதலை புலிகளுக்கு பச்சையாக கூறினார்.

1981 சனத்தொகை கணக்கெடுப்பின் பிரகாரம் வடமாகாணத்தின் மொத்த முஸ்லிம் சனத்தொகை 50, 991 அல்லது 4.601 சதவீதமாகும். 1990 ஆண்டில் வெளியேற்றப்பட்ட நேரத்தில் வட மாகாண முஸ்லிம்களின் சனத்தொகை சுமார் 81, 000 என்று முஸ்லிம் சமூகத் தலைவர்கள் கூறுகிறார்கள். யாழ்ப்பாணத்தில் இருந்த சுமார் 20,000 பேர், மன்னாரில் இருந்த 45,000 பேர் , முல்லைத்தீவில் இருந்த 7000 பேர், வவுனியாவில் இருந்த 8000 பேர், கிளிநொச்சியில் இருந்த சுமார் 1000 பேர் அந்த சனத்தொகையில் அடக்கும். இவர்களில் வவுனியாவிலும் நயினாதீவிலும் இருந்தவர்களை தவிர, சுமார் 75,000 முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். வெளியேற்றத்தை அடுத்து உடனடியாக உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் 67,000 முஸ்லிம்கள் பதிவு செய்யப்பட்டார்கள். எஞ்சியவர்கள் முகாம்களுக்கு வெளியே உறவினர்களுடனும் நண்பர்களுடனும் தங்கியிருந்தனர்.

சாவகச்சேரி

வெளியேற்றத்துக்கு முன்னதாக , யாழ்ப்பாணக் குடாநாட்டில் சாவகச்சேரியில் முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றது. 1990 செப்டெம்பர் 14 ஆம் திகதி ‘ உதவியாளர்களாக’ விடுதலை புலிகளுடன் சேர்ந்திருந்த தமிழர்கள் குழு ஒன்று சாவகச்சேரி பள்ளிவாசலுக்கு அண்மையாக சில முஸ்லிம்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது. சிலர் பள்ளிவாசலை தாக்கவும் முற்பட்டார்கள். சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இந்த தமிழர்களில் சிலரைப் பிடித்த முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அவர்களை விடுதலை புலிகளிடம் ஒப்படைத்தார்கள். அவர்களை விடுவித்த விடுதலை புலிகள் முஸ்லிம் ‘ சிறுபானமையினர் ‘ தமிழ் ‘ பெரும்பான்மையினரை ‘ புண்படுத்தக்கூடாது என்று எச்சரிக்கை செய்தனர்.

செப்டெம்பர் 25 ஆம் திகதி குடாநாட்டை விட்டு வெளியில் செல்வதற்கு ‘ பாஸ் ‘ மறுக்கப்பட்டதை ஆட்சேபித்த முஸ்லிம் இளைஞர் ஒருவரை ‘ கைது ‘ செய்த விடுதலை புலிகள் இயக்கப் போராளிகளின் தாக்குதலுக்கு இலக்கானார். அதற்கு பிறகு அவர் காணாமல் போய்விட்டார்.

பெரும்பாலான சாவகச்சேரி முஸ்லிம்கள் நகரில் டச்சு ரோட்டிலேயே வசித்தனர். முஸ்லிம்களுக்கு இடையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் ஒன்றை விசாரணை செய்தவேளையில் விடுதலை புலிகள் இறைச்சிக்கடைகாரர் ஒருவரின் வீட்டில் சில வாள்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். விடுதலை புலிகள் அளித்த ‘ விளக்கத்தின்’ பிரகாரம் அந்த சம்பவம் ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்தது. முஸ்லிம்களின் வீடுகளிலும் வர்த்தக நிறுவனங்களிலும் தேடுதல் வேட்டை நடத்திய விடுதலை புலிகள் பிரபலமான முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான கடையொன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் இருந்து 75 வாள்களை கண்டெடுத்தனர். இது பயங்கரமான சதித்திட்டம் ஒன்றின் அங்கமாக நோக்கப்பட்டது. இந்த விளக்கம் உண்மையானதாக இருந்திருந்தாலும் கூட, விடுதலை புலிகளின் கிளாஸ்னிகோவ்களுக்கு எதிராக 75 வாள்களினால் எந்த பிரயோசனமும் கிடையாது.

வாள்கள் கண்டெடுக்கப்பட்ட கடை வர்த்தகத்துக்காக யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையில் போய்வருகின்ற லொறிகளின் உரிமையாளரான முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமானது என்று கண்டுபிடிக்கப்பட்டது. மட்டுமீறிய பிரமை கொண்டது என்று அறியப்பட்ட விடுதலை புலிகளின் புலனாய்வுப் பிரிவு பெரியதொரு சதித்திட்டம் இதன் பின்னணியில் இருப்பதாக சந்தேகித்தது. கொழும்புக்கு அடிக்கடி பிரயாணம் செய்கின்ற முஸ்லிம் வர்த்தகர்களை சதிவேலைகளைச் செய்வதற்கு கையாட்களாக அல்லது உளவாளிகளாக பாதுகாப்பு — புலனாய்வு பிரிவினர் பயன்படுத்தக்கூடும் என்று சந்தேகிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கையான நடவடிக்கை அவசியம் என்று உணரப்பட்டது.

எனவே பிரதானமாக டச்சு ரோட்டில் செறிவாக வாழ்ந்த சாவகச்சேரி முஸ்லிம்கள் 1990 அக்டோபர் 15 ஆம் திகதி வெளியேற்றப்பட்டனர். ஆயிரம் பேர் வரையில் துப்பாக்கி முனையில் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர். வடமாகாணத்தின் தென் அந்தலை நகரான வவுனியாவுக்கு அப்பால் சென்றுவிடுமாறு அவர்களுக்கு கூறப்பட்டது. சாவகச்சேரி முஸ்லிம்கள் அக்டோபர் 18 ஆம் திகதி வவுனியாவை வந்தடைந்தனர். அவர்களை வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் தொடர் எதிர்வினை தொடங்கியது.

மன்னார்

1981 சனத்தொகை கணக்கெடுப்பின் பிரகாரம் மன்னார் மாவட்டத்தின் சனத்தொகையில் முஸ்லிம்கள் 26 சதவீதத்தினராக இருந்தனர். தளாளாடி பாலத்தினால் பிரதான நிலப்பரப்புடன் இணைக்கப்படும் மன்னார் தீவின் சனத்தொகையில் 46 சதவீதத்தினர் முஸ்லிம்கள். மனானார் தீவில் முதன்மையானதும் ஒப்பீட்டளவில் வளமுடையதுமான முஸ்லிம் கிராமம் எருக்கலம்பிட்டியாகும். 1990 அக்டோபர் 21 ஆம் திகதி எருக்கலம்பிட்டியை சுற்றிவளைத்த சுமார் 300 விடுதலை புலிகள் இயக்கப் போராளிகள் முஸ்லிம்களின் பணம், நகைகள் மற்றும் பெறுமதியான மின்னியல் பொருட்களை கொள்ளையடித்தனர். சுமார் 800 — 850 வீடுகள் கொள்ளைக்கு இலக்காகின.

அக்டோபர் 22 ஆம் திகதி மன்னார் — புத்தளம் மாவட்ட எல்லைக்கு அண்மையாகவுள்ள மறிச்சுக்கட்டி கிராமத்தைச் சேர்ந்த சில முஸ்லிம்களை ஆயுதப்படைகளுடன் இரகசிய தொடர்புகளை வைத்திருந்தனர் என்று கூறி விடுதலை புலிகள் கைது செய்தனர். மறிச்சுக்கட்டி கிராமத்தில் இருந்து வெளியேறுமாறு அக்டோபர் 23 ஆம் திகதி முஸ்லிம்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து மறிச்சுக்கட்டி அமைந்திருக்கும் முசலி உதவி அரசாங்க அதிபர் பிரிவில் இருந்து சகல முஸ்லிம்களை வெளியேறுமாறு அக்டோபர் 24 உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முசலி முஸ்லிம்களை பெரும்பான்மையினராகக் கொண்ட ஒரு உதவி அரசாங்க அதிபர் பிரிவாக இருந்தது.

முஸ்லிம்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்தன. மன்னார் தீவில் வாழும் சகல முஸ்லிம்களும் அக்டோபர் 28 ஆம் திகதியளவில் வெளியேறிவிட வேண்டும் என்றும் வெளியேற்றும் நடவடிக்கைகளை இறுதிசெய்வதற்காக உள்ளூரில் விடுதலை புலிகளின் அலுவலகத்திற்கு அறிவிக்க வேணடும் என்றும் அக்டோபர் 24 ஆம் திகதி ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர். உதவியற்ற முஸ்லிம்கள் அவ்வாறு வெளியேறுவதற்கு தயாராகி மூட்டை முடிச்சுக்களை கட்டத் தொடங்கினர். அக்டோபர் 28 ஆம் திகதி எருக்கலம்பிட்டிக்குள் மீணடும் ‘ படையெடுத்த’ விடுதலை புலிகள் முஸ்லிம்களின் உடைமைகளின் சகல பொதிகளையும் கைப்பற்றினர். வெளியேற்ற உத்தரவு தொடர்பாக கத்தோலிக்க மதகுருமார் உட்பட மன்னார் தமிழர்கள் பலர் விடுதலை புலிகளிடம் ஆட்சேபம் தெரிவித்த போதிலும் பயனில்லாமல் போய்விட்டது. பிறகு விடுதலை புலிகள் முஸ்லிம்கள் வெளியேறுவதற்கான காலக்கெடுவை நவம்பர் 2 ஆம் திகதிக்கு நீடித்தனர்.

அக்டோபர் 28 ஆம் திகதி பின்னேரம் எருக்கலம்பிட்டியையும் மன்னார் தீவில் உள்ள ஏனைய முஸ்லிம் பகுதிகளையும் சுறாறிவளைத்து தடைசெய்தனர். மன்னார் நகர் மற்றும் எருக்கலம்பிட்டி, தாராபுரம், புதுக்குடியிருப்பு, உப்புக்குளம், கொந்தைப்பிட்டி போன்ற பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் சகலரும் கடற்கரையோரத்தில் குறிப்பிட்ட இடங்களில் ஒன்றுகூடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர். உணவோ, தண்ணீரோ அல்லது தனிப்பட்ட தேவைகளுக்கான உகந்த வசதிகளோ இன்றி அவர்கள் அவதிப்பட்டனர். அவர்கள் மீது அக்க்றை கொண்ட மன்னாரைச் சேர்ந்த தமிழர்கள் விடுதலை புலிகளுடன் வாக்குவாதப்பட்டு, கடற்கரையில் நின்ற மக்களுக்கு பாணையும் தண்ணீரையும் எடுத்துச் சென்றனர்.

மன்னார்தீவு

அதற்கு பிறகு மன்னார்தீவின் முஸ்லிம்கள் பலவந்தமாக கடல் மார்க்கமாக 60 மைல்கள் தொலைவில் உள்ள வடமேல் மாகாணத்தின் கற்பிடடிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நோக்கத்திற்காக மன்னாரிலும் புத்தளத்திலும் முஸ்லிம்களுக்கு சொந்தமான படகுகள் பயன்படுத்தப்பட்டன. முழு நடவடிக்கைகளுக்கும் மூன்றுக்கும் அதிகமான நாட்கள் சென்றன. ஒரு பிள்ளை கடலில் வீழ்ந்து மரணமடைந்தது. சில குழந்தைகளும் வயோதிபர்களும் கற்பிட்டியை சென்றடைவதற்கு முன்னதாக இறந்து விடடனர்.

மன்னார் பிரதான நிலப்பரப்பு

மன்னார்தீவு முஸ்லிம்களின் பரிதாபத்துக்குரிய அவலம் இதுவாக இருந்தது என்றால் மன்னார் மாவட்டத்தின் பிரதான நிலப்பரப்பில் முஸ்லிம்களின் நிலைவரம் அதேயளவுக்கு துயர்மிகுந்ததாக இருந்தது. முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட முசலி உதவி அரசாங்க அதிபர் பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்களும் விடத்தல்தீவு, பெரியமடு, சன்னார், முருங்கன், வட்டக்கண்டல், பரப்பான்கண்டல், போன்ற ஏனைய பகுதிகளில் வாழ்ந்த முஸ்லிம்களும் அவர்களது வாகனங்கள், சைக்கிள்கள், எரிபொருட்கள், மற்றும் மின்னியல் பொருட்கள் எல்லாவற்றையும் பள்ளிவாசலில் அல்லது உள்ளூர் பாடசாலையில் ஒப்படைக்குமாறு அக்டோபர் 25 ஆம் திகதி விடுதலை புலிகளினால் உத்தரவிடப்பட்டனர்.

மாவட்டத்தை விட்டு எவ்வாறு ‘வெளியேற’ வேண்டும் என்ற அறிவுறுத்தல்களை பெறுவதற்காக உள்ளூர் விடுதலை புலிகளின் அலுவலகத்துக்கு வரவேண்டும் என்று அவர்களுக்கு அக்டோபர் 26 உத்தரவிடப்பட்டது. ஒவ்வொரு குடும்பமும் ஐந்து பயணப் பைகளில் தங்களது உடமையும் 2000 ரூபா பணத்தையும் ஒரு பவுண் தங்கத்தையும் தங்களுடன் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மடு, பண்டிவிரிச்சான் மற்றும் வவுனியா நகருக்கு அண்மையாக ஒரு இடம் என்று மூன்று இடங்களில் முஸ்லிம்கள் மீது சோதனை நடத்தப்பட்டது.

அனுமதிக்கப்பட்டதை விடவும் கூடுதலாக பொருட்களை கொண்டு வந்தவர்களிடம் மடுவிலும் பண்டிவிரிச்சானிலும் மேலதிக பொருட்களை பறிமுதல் செய்த விடுதலை புலிகள் பற்றுச்சீட்டுக்களை வழங்கினர். ஆனால், வவுனியாவுக்கு அண்மையாக சுடுநீர்ப் போத்தல்கள் உட்பட்ட பொருட்கள் முஸ்லிம்களிடமிருந்து அடாத்தாக கொள்ளையிடப்பட்டன. இந்த தொகுதி முஸ்லிம்கள் வவுனியாவுக்கு நடந்தே வந்துசேர்ந்தனர்.

முல்லைத்தீவு

வடக்கு வன்னி பிரதான நிலப்பரப்பில் ஏனைய பாகக்களிலும் முஸ்லிம்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்தன. முல்லைத்தீவு மாவட்டத்தின் நீராவிப்பிட்டியில் சில முஸ்லிம்கள் ஆயுதப் படைகளுக்கு தகவல் வழங்கினார்கள் என்ற ‘ சந்தேகத்தில்’ அக்டோபர் 22 ஆம் திகதி காலை கைது செய்யப்பட்டனர். அதே தினம் மாலையில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த சகல முஸ்லிம்களும் ஒரு வாரகாலத்திற்குள் வெளியேறிவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

கிளிநொச்சி

அடுத்த நாள் அக்டோபர் 23 ஆம் திகதி கிளிநொச்சியில் உள்ள முஸ்லிம்கள் சகலரும் ஐந்து நாட்களுக்குள் வெளியேறிவிட வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டனர்.1981 சனத்தொகை கணக்கெடுப்பின் பிரகாரம் முல்லைத்தீவின் சனத்தொகையில் 4.6 சதவீதத்தினராகவும் கிளிநொச்சியின் சனத்தொகையில் 1.6 சதவீதத்தினராகவும் முஸ்லிம்கள் இருந்தனர்.

வவுனியா

1981 சனத்தொகை கணக்கெடுப்பின் பிரகாரம் வவுனியா மாவட்டத்தின் சனத்தொகையில் முஸ்லிம்கள் 6.9 சதவீதத்தினராக இருந்தனர். அவர்களில் பருமளவானவர்கள் அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழ்ந்தனர். ஆனால், விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழ்ந்த சில முஸ்லிம் குடும்பங்கள் நவம்பர் முதலாம் திகதியளவில் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

யாழ்ப்பாணம்

வன்னியில் வெளியேற்றம் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையிலும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் கலக்கமடையவில்லை. 1981 சனத்தொகை கணக்கெடுப்பின் பிரகாரம் யாழ்ப்பாண மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் 1.66 சதவீதத்தினராக முஸ்லிம்கள் இருந்தனர். அவர்களில் சாவகச்சேரியில் வாழ்ந்த ஒரு பகுதியினர் ஏற்கெனவே விரட்டியடிக்கப்பட்டு விட்டனர். ஆனால், யாழ்ப்பாண நகரப்பகுதி முஸ்லிம்கள் தங்களுக்கு ஏதும் ஆபத்து நேரும் என்று உணர முடியவில்லை. யாழ்ப்பாண முஸ்லிம்கள் தங்களைை யாழ்ப்பாணத்துடன் தவிர்க்கமுடியாத பகுதியினராக பிணைந்தவர்களாக பார்த்தார்கள். தங்களது தமிழ்ச் சகோதரர்களிடமிருந்து தங்களுக்கு தீங்கு எதுவும் நேரும் என்று அவர்கள் நினைக்கவில்லை. ஆனால், அவர்களுக்கு பயங்கரமான அதிர்ச்சி காத்திருந்தது.

காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளின் வீதிகளிலும் ஒழுங்கைகளிலும் வாகனங்களில் ஒலிபெருக்கிகளுடன் விடுதலை புலிகள் வரத்தொடங்கினர். ஒவ்வொரு முஸ்லிம் குடும்பத்தினதும் பிரதிநிதிகள் நண்பகல் 12 மணியளவில் ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானத்தில் ஒன்றுகூட வேண்டும் என்று ஒலிபெருக்கிகளில் இடையறாது அறிவிப்புச் செய்யப்பட்டது. ஆயுதமேந்திய விடுதலை புலிகள் வீதிகளில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர். மக்கள் செறிவாக வாழ்ந்த ஒழுங்கைகளிலும் கிளை ஒழுங்கைகளிலும் வீடுவீடாகச் சென்று சில விடுதலை புலிகள் அறிவிப்பைச் செய்தனர்.

ஆஞ்சநேயர் / இளம்பரிதி

மக்கள் தாங்கள் செய்துகொண்டிருந்த வேலைகளை எல்லாம் போட்டுவிடு மைதானத்துக்கு விரைந்தனர். நண்பகல் 12.30 மணியளவில் விடுதலை புலிகளின் மூத்த ஒரு தலைவரான ஆஞசநேரய் அந்த மக்கள் மத்தியில் உரையாற்றினார். ஆஞ்சநேயருக்கு பிறகு இளம்பரிதி என்ற பெயரிலும் அழைக்கப்பட்டார். அவர் குறுகிய செய்தியொன்றை அந்த மக்களுக்கு கூறினார். சகல முஸ்லிம்களும் இரு மணித்தியாலங்களுக்குள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பாதுகாப்புக் காரணங்களுக்காக விடுதலை புலிகளின் உயர் தலைமைப்பீடம் தீர்மானித்திருக்கிறது. அவ்வாறு வெளியேறத் தவறினால் தண்டனைக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என்று கூறிய அவர் வேறு விளக்கம் எதையும் அளிக்கவில்லை

மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கியபோது இளம்பரிதி தனது பொறுமையை இழந்துவிட்டார். முஸ்லிம்கள் உத்தரவுகளை பின்பற்ற வேண்டியதுதான் அல்லது விளைவுகளுக்கு முகங்கொடுக்க வேண்டிவரும் என்று அவர்கள் மீது அவர் சத்தம்போட்டு பாய்ந்து விழுந்தார். அடுத்து தனது துப்பாக்கியால் ஆகாயத்தை நோக்கி பல தடவைகள் வேட்டுக்களை தீர்த்தார். அவரது மெய்க்காவர்களில் ஒரு சிலரும் அவ்வாறே செய்தனர். அவர்கள் அதன் மூலம் கூறிய செய்தி தெளிவானது. இராணுவம் யாழ்ப்பாணத்திற்குள் படையெடுக்கப்போகிறது என்றும் அதனால் எல்லோரையும் வெளியேறுமாறு விடுதலை புலிகள் க்கிறார்கள் என்றும்தான் தொடக்கத்தில் மக்கள் நினைத்தார்கள். முஸ்லிம்களை வெளியேறுமாறு அவர்கள் உத்தரவிடுகிறார்கள் என்பதை தாமதித்தே அவர்கள் விளங்கிக் கொண்டார்கள்.

மேலும் கூடுதல் எண்ணிக்கையில் ஆயுதமேந்திய விடுதலை புலிகள் அந்த பகுதிக்கு வந்துகுவியத் தொடங்கியதும் குழப்பமடைந்த முஸ்லிம்கள் மூட்டை முடிச்சுக்களை கட்டத் தொடங்கினார்கள். எடுத்துச் செல்லக்கூடிய பொருட்கள் மீது எந்த கட்டுப்பாடு குறித்தும் அவர்களுக்கு ஆரம்பத்தில் கூறப்படவில்லை. அதனால் மக்கள் உடைகள், பெறுதியான பொருட்கள், நகைகள் மற்றும் பணம் எல்லாவற்றையும் பொதிகளாக கட்டினார்கள். போக்குவரத்துக்கு விடுதலை புலிகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட பஸ்கள், வான்கள் மற்றும் லொறிகள் தயாராயிருந்தன. பல முஸ்லிம்கள் தங்களது தனிப்பட்ட போக்குவரத்து ஏற்பாடுகளையும் கூட செய்திருந்தனர்.

ஐந்து முச்சந்தி

தங்களது வீடுகளை விட்டு வெளியேறிக்கொண்டிருந்த முஸ்லிம்களுக்கு இப்போது புதிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது. ஐந்து முச்சந்தியில் வரிசையாக நிற்குமாறு அவர்கள் கேட்கப்பட்டார்கள். வரிசையில் நின்ற மக்களுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. பணம், உடைமைஉள் மற்றும் நகைகளை தங்களிடம் கையளிக்குமாறு விடுதலை புலிகளின் ஆண் போராளிகளும் பெண் போராளிகளும் முஸ்லிம்களிடம் கேட்கத் தொடங்கினர். ஒவ்வொருவரும் 150 ரூபாவை மாத்திரம் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர். ஒருவர் ஒரு சோடி ஆடையை மாத்திரம் கொண்டு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டது.

பலவீனமான எதிர்ப்பு கிளம்பியது. நவீனரக ஆயுதங்களை சுழற்றிக்காட்டி அட்டகாசமான தொனியில் விடுதலை புலிகள் அச்சுறுத்தியதை அடுத்து அந்த எதிர்ப்பு அடங்கிப்போனது. உடைகளுடனும் ஏனைய உடைமைகளுடனும் சூட்கேசுகள் பறிமுதல் செய்யப்படன. அந்த சூட்கேசுகள் திறக்கப்பட்டு குறிப்பிட்ட உடைகள் வெளியில் எடுக்கப்பட்டன. ஒருவர் நீளக்காற்சட்டை அணிபவராக இருந்தால் அவருக்கு மேலதிகமாக ஒரு நீளக்காற்சட்டையும் சேர்ட்டும் கொடுக்கப்பட்டது. சாரம் அணிபவர்களுக்கு மேலதிகமாக ஒரு சாரமும் சேர்ட்டும் கொடுக்கப்பட்டது. சகல பணமும் சொத்துக்களின் உறுதிப்பத்திரங்கள் உட்பட ஆவணங்களும் மற்றும் காசோலைப் புத்தகங்கள் , தேசிய அடையாள அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

பெண்களிடமும் சிறுமிகளிடமும் இருந்து சகல நகைகளும் பறிக்கப்பட்டன. சில பெண் போராளிகள் மிகவும் கொடூரமான முறையில் முஸ்லிம் பெண்களின் காதுகளில் இருந்து தோடுகளை இழுத்தெடுத்தபோது காதுமடல்களில் இருந்து இரத்தம் பீறிட்டது. சிறுவர்களும் விட்டு வைக்கப்படவில்லை. ஒரு கைக்கடிகாரத்தைக் கூட அவர்களால் கொண்டு செல்ல முடியவில்லை. இந்த முழு நடவடிக்கைகளையும் மட்டக்களப்பைச் சேர்ந்த கரிகாலனே மேற்பார்வை செய்தார் என்று பின்னர் யாழ்ப்பாண முஸ்லிம்கள் தெரிவித்தனர்.

குறைந்தது 35 தனவந்த முஸ்லிம் வர்த்தகர்கள் கடத்தப்பட்டு விடுதலை புலிகளினால் தடுத்து வைக்கப்பட்டனர். மறைத்து வைத்த தங்கம் பற்றிய விபரங்களைக் கூறுமாறு சில முஸ்லிம் நகை வியாபாரிகள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். ஒரு நகைவியாபாரி மற்றவர்கள் முன்னிலையில் அடித்துக் கொல்லப்பட்டார். பிறகு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களை விடுவிப்பதற்கு பெருந்தொகைப் பணம் கோரப்பட்டது. சிலர் 3 மில்லியன் ரூபா வரை கொடுத்தனர். கடத்தப்பட்டவர்கள் பல வருடகால இடைவெளியில் கட்டங்கட்டமாக விடுவிக்கப்பட்டனர். ஆனால், 13 பேர் ஒருபோதுமே திரும்பி வரவில்லை. அவர்கள் இறந்துவிட்டதாகவே கருதப்பட்டது.

யாழ்ப்பாண முஸ்லிம்களை வெளியேற்றிய பிறகு அவர்களின் பகுதிகளுக்குள் எவருமே செல்லமுடியாதவாறு விடுதலை புலிகள் கயிறுளைக் கட்டி தடைசெய்தனர். முஸ்லிம்கள் திரும்பிவரும் வரை அவர்களது சொத்துக்களை பாதுகாப்பதற்காகவே அவ்வாறு செய்யப்பட்டதாக 1990 நவம்பர் 2 ஆம் திகதி வீரகேசரி செய்தி வெளியிட்டது. மனக்கலக்கமுற்ற சில முஸ்லிம்கள் தங்களது வெளியேற்றம் தற்காலிகமானதே என்று நினைத்தனர். உண்மையான நிலைவரத்தை விளங்கிக் கொள்வதற்கு அவர்களுக்கு பல மாதங்கள் எடுத்தது. வசதிபடைத்தவர்களாக இருந்து இப்போது வறியவர்களாகிப்போன சில முஸ்லிம்கள் நாட்கள் நகர புதிய நிலைவரத்துக்கு தங்களை இசைவாக்கம் செய்ய முடியாதவர்களாக இருந்தனர். பல வருட இடைவெளியில் அவர்களின் வாழ்க்கைத் தரம் பெரிதும் வீழ்ச்சி கண்டது.

யாழ்ப்பாண மாநகரப் பகுதி

பின்னோக்கிப் பார்க்கும்போது யாழ்ப்பாண முஸ்லிம்கள் விடயத்தில் விடுதலை புலிகள் மிகவும் கொடூரமாக நடந்துகொண்டார்கள் என்று தோன்றுகிறது. யாழ்ப்பாண மாநகரப் பகுதிக்குள் இரண்டு அல்லது மூன்று வட்டாரங்களில் முஸ்லிம்கள் செறிவாக வாழ்ந்தார்கள் சோனகத்தெரு, ஓட்டுமடம் மற்றும்் பொம்மைவெளி ஆகியவையே அவர்களின் பகுதிகளாகும். அவர்கள் யாழ்ப்பாண சமூகத்துடன் ஒன்றிணைந்த அங்கமாக வாழ்ந்தனர்.

முன்னாள் மேயர் அல்பிரட் துரையப்பாவினால் திறக்கப்பட்ட யாழ்ப்பாண புதிய சந்தை உண்மையில் முஸ்லிம்களின் ஆதிக்கத்தில் இருந்த காலம் ஒன்று இருந்தது. சந்தையின் மூன்று தொகுதிகளில் இரண்டு தொகுதிகள் முற்றாக அவர்களின் தனியாதிக்கத்தில் இருந்தது. யாழ்ப்பாணத்தில் இரும்புக் கடைகள் , லொறிப் போக்குவரத்து, நகைக்கடைகள் மற்றும் இறைச்சி வியாபாரம் முஸ்லிம்களின் கட்டுபாபாட்டிலேயே இருந்தது.

யாழ்ப்பாண தமிழர்களைப் போன்றே யாழ்ப்பாண முஸ்லிம்களும் பெருமைக்குரிய கல்விப் பாரமாபரியத்தை கட்டிவளர்த்தனர். முன்னாள் சிவில் சேவை அதிகாரியும் கொழும்பு சாஹிரா கல்லூரி அதிபருமான ஏ.எம்.ஏ. அசீஸ், உயர்நீதிமன்ற நீதியரசர் அப்துல் காதர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி எம்.எம். ஜமீல் கல்விப் பணிப்பாளர் மன்சூர் போன்றவர்கள் யாழ்ப்பாண முஸ்லிம்கள் மத்தியில் இருந்த முக்கியமான பிரமுகர்களில் சிலர். மாநகரசபை உறுப்பினர்களாகவும் பல முஸ்லிம்கள் இருந்தனர். முன்னாள் மாநகரசபை உறுப்பினர்களான பஷீரும் சுல்தானும் யாழ்ப்பாணத்தின் பிரதி மேயர்களாகவும் ஏன் பதில் மேயர்களாகவும் கூட பதவி வகித்தனர்.

புத்தளம் மாவட்டம்

வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் புத்தளம் மாவட்டத்தில் தற்காலிகமாக குடியேறினர். வேறு பலர் வவுனியா, நீர்கொழும்பு, கொழும்பு மாவடடக்களுக்கு சென்றனர். அநுராதபுரம், குருநாகல், கம்பஹா, மாத்தளை, கண்டி மாவட்டங்களிலும் அவர்கள் குடியேறினர். கணிசமான யாழ்ப்பாண முஸ்லிம்கள் வெளிநாடுகளுக்கு அகதிகளாகவும் சென்றனர்.

ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் புத்தளம் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்களுக்கான முகாம்களில் பல வருடங்களாக நெருக்கடிகள் மத்தியில் தங்கியிருந்தனர். வடக்கு பிரதான நிலப்பரப்பில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களில் அதிகப் பெரும்பாலானவர்கள் கற்பிட்டியிலும் புளிச்சகுளத்திலும் செறிவாக தங்கியிருந்தனர். யாழ்ப்பாண குடாநாட்டில் இருந்து இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களில் பெருமளவானோர் புத்தளத்தின் தில்லையடியில் தங்கியிருந்தனர்.

அதேவேளை, முஸ்லிம்களின் வீடுகளில் விட்டு வைக்கப்பட்டிருந்த சகல உடைமைகளும் பெரும்பாலும் விடுதலை புலிகளினால் கொள்ளையிடப்பட்டன. பல வீடுகளின் கூரை ஓடுகள், கதவு, ஜன்னல் நிலைகள் எல்லாம் கழற்றிச் செல்லப்பட்டன. கொள்ளையடிக்கப்பட்ட தளபாடங்களில் பெருமளவானவை விடுதலை புலிகளின் கடைகள் அல்லது ‘மக்கள் கடைகள்’ ஊடாக தமிழர்களுக்கு விற்கப்பட்டன. 2002 போர் நிறுத்தத்துக்கு பின்னர் வடக்கிற்கு திரும்பிய சில முஸ்லிம்கள் மற்றையவர்களின் வீடுகளிலும் வர்த்தக நிலையங்களிலும் இருந்த தங்களது உடைமைகளை அடையாளம் கண்டனர்.பல முஸ்லிம்களின் வீடுகள், காணிகள் மற்றும் வாகனங்கள் விடுதலை புலிகளினால் சட்டவிரோதமாக தமிழர்களுக்கு விற்கப்பட்டன.

கிழக்கு மாகாணம்

1990 கறுப்பு அக்டோபரில் வடக்கு முஸ்லிம்களை விடுதலை புலிகள் ஏன் முற்றாக வெளியேற்றினர். பல்வேறு விளக்கங்கள் கூறப்படுகின்றன. ஆனால், கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் வடமாகாணத்தில் இடம்பெற்ற இந்த பயங்கரமான அனர்த்தத்தின் மீது பெருமளவுக்கு செல்வாக்கு செலுத்தின போன்று தெரிகிறது.

1990 மார்ச்சில் இந்திய இராணுவம் வெளியேறிய பிறகு வட மாகாணத்தின் பெருமாபாலான பகுதிகளை விடுதலை புலிகள் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். 1990 ஜூனில் போர் மீண்டும் மூண்டது. தமிழர்களைப் போன்றே வடக்கு முஸ்லிம்களும் அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்த போரினால் சம அளவுக்கு பாதிக்கப்பட்டனர். அவர்களும் தமிழ்க் குடிமக்களைப் போன்று ஷெல் வீச்சுக்கள் மற்றும் விமானக் குண்டுவீச்சுக்களின் போது அடிக்கடி தங்களது வீடுகளை விட்டு வெளியேறவேண்டி வந்தது. அவர்கள் பெரும்பாலும் ஒருசில நாட்களில் தங்களது வீடுகளுக்கு திரும்பி விடுவார்கள். ஆனால், கிழக்கு மாகாண நிலைவரம் வித்தியாசமான ஒரு திருப்பத்தை எடுத்தது.

கிழக்கில் தமிழர் — முஸ்லிம் பகைமை தீவிரமடைந்தது. விடுதலை புலிகளில் இருந்த சில முஸ்லிம் போராளிகள் இயக்கத்தை விட்டு வெளியேறியதும் ஒருசிலர் எதிரியின் பக்கத்துக்கு சென்றதும் கருணாவினதும் ( இராணுவத்தளபதி) கரிகாலனினதும் ( அரசியல் பொறுப்பாளர்) தலைமையின் கீழ் இருந்த கிழக்கு விடுதலை புலிகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இயக்கத்தில் இருந்த வேறுபல முஸ்லிம் போராளிகள் தலைமைத்துவத்தினால் கொல்லப்பட்டனர். அன்று கிழக்கு விடுதலை புலிகள் மத்தியில் முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வு பரவியது.

மறுபுறத்தில், ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் தீவிரமடைந்த இந்த பகைமை உணர்வுகளை தனக்கு அனுகூலமாக பயன்படுத்தியது. முஸ்லிம்கள் மத்தியில் இருந்த சமூகவிரோதப் பிரகிருதிகள் பலர் ஊர்க்காவல் படையினராக சேர்க்கப்பட்டனர். இந்த பிரிவினர் தமிழர்களுக்கு எதிராக வன்முறைகளை தூண்டிவிடுவதில் பாதுகாப்பு படைகளுடன் ஒத்துழைத்தனர்.

சில சந்தர்ப்பங்களில் தமிழ்க் குடிமக்களின் படுகொலைகளுக்கு முஸ்லிம் ஊர்க்காவல் படையினர் பொறுப்பாக இருநதனர். முஸ்லிம் ஊர்க்காவல் படையினர் தலைமையிலான குண்டர்கள் சில தமிழ்க் கிராமங்களை நிர்முலம் செய்தனர். அவர்களுக்கு பாதுகாப்பு படைகளின் பிரிவுகளின் மறைமுகமான ஆதரவு இருந்தது.

இதற்கு பதிலடியாக விடுதலை புலிகளும் முஸ்லிம் குடிமக்களை கொடூரமான முறையில் படுகொலை செய்தனர். சம்மாந்துறை, காத்தான்குடியில் பள்ளிவாசல்களில் தொழுகையில் இருந்த வேளையில் நடத்தப்பட்ட தாக்குதல், ஏறாவூரில் சதாம் ஹுசெய்ன் மாதிரிக்கிராமத்தில் குடிமக்கள் படுகொலை ஆகியவை விடுதலை புலிகளின் கொடூரமான தாக்குதல்களுக்கு சில உதாரணங்களாகும். பல முஸ்லிம்கள் காணாமலும் போயினர். சவூதி அரேபியாவில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த முஸ்லிம் யாத்திரிகர்கள் குருக்கள்மடத்துக்கு அண்மையாக கொல்லப்பட்டனர்.

‘ காப்டன் முனாஸ்’

பாதுகாப்புத்துறையின் ஒரு பிரிவினர் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் முரண்நிலையை தூண்டிவிடுவதற்கு திட்டமிட்ட முறையில் முயற்சித்ததே இந்த நிலைவரங்களில் மிகவும் கொடிய ஒரு அம்சமாகும். சந்தேகத்துக்கிடமான ‘ காப்டன் முனாஸ்’ என்பவர் இதற்கு ஒரு உதாரணம். இந்த காப்டன் முனாஸின் தலைமையின் கீழ் இருந்த ஒரு ‘பிரிவு ‘ சத்துருக்கொண்டான் மற்றும் வந்தாறுமூலை போன்ற இடங்களில் இடம்பெற்றதைப் போன்று 1990 ஆம் ஆண்டில் மட்டக்களப்பில் தமிழர்கள் கொல்லப்பட்ட, காணாமல்போன சம்பவங்கள் பலவற்றுக்கு பொறுப்பாக இருந்ததாக கூறப்பட்டது.

காப்டன் முனாஸ் என்ற பெயரைக் கேட்டால் தமிழர்கள் வெறுத்தார்கள், அஞ்சினார்கள். அவர் ஒரு முஸ்லிம் என்று கருதப்பட்டது. ஆனால், பின்னரான வருடங்களில் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் நியமிக்கப்பட்ட சோசா விசாரணை ஆணைக்குழு றிச்சரட் டயஸ் என்ற பெயரைக் கொண்ட ஒரு சிங்கள ‘ புலனாய்வு ‘ அதிகாரியே உண்மையில் காப்டன் முனாஸ் என்று கூறப்பட்ட பேர்வழி என்பதை வெளிப்படுத்தியது.

கிழக்கில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்த போதிலும் கூட, வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் நிலைவரம் முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. இரு சமூகங்களும் அமைதியாக சகவாழ்வைத் தொடர்ந்தன. அங்கு முஸ்லிம்கள் சிறிய ஒரு சிறுபான்மையினராக இருந்ததால் பெரும்பான்மையினரான தமிழர்களுக்கு அச்சுறுத்தல் எதையும் தோற்றுவிக்கவில்லை என்பது அதற்கு ஒரு காரணம்.

கரிகாலன்

கிழக்கில் பதற்றநிலை தொடர்ந்த நிலையில் வடக்கில் முஸ்லிம்கள் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த சூழ்நிலை கிழக்கு விடுதலை புலிகளுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. முஸ்லிம்களுக்கு எதிராக ‘ கடுமையான ‘ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை இணங்க வைப்பதற்காக அன்றைய கிழக்கு விடுதலை புலிகளின் அரசியல் பொறுப்பாளர் கரிகாலன் தலைமையில் தூதுக்குழு ஒன்று வடக்கிற்கு சென்றது. முஸ்லிம்களுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்று உண்மையில் கரிகாலன் விரும்பினார்.

விடுதலை புலிகளின் உயர் தலைமைத்துவத்துக்கு இவ்வாறாக நெருக்குதல் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் , யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மராட்சி பிரிவில் சாவகச்சேரியில் ஒரு சம்பவம் இடம்பெற்றது. பிரபலமான முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான கடையொன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 75 வாள்களை விடுதலை புலிகள் கண்டெடுத்ததாக கூறப்பட்டது. அந்த வர்த்தகரின் லொறிகள் வர்த்தகத்துக்காக யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்க்கும் இடையே சென்று வருபவை.

கொழும்புக்கு அடிக்கடி சென்றுவரும் முஸ்லிம் வர்த்தகர்களை சதிவேலைகளுக்கு அல்லது உளவு வேலைகளுக்கு பாதுகாப்பு — புலனாய்வுத்துறை பயன்படுத்தக்கூடும் என்று விடுதலை புலிகளின் புலனாய்வுப் பிரிவு சந்தேகித்தது. அதையடுத்து ஒரு ‘ முன்னெச்சரிக்கை ‘ நடவடிக்கையாக வடக்கில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றுவதற்கான தீர்மானத்தை விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனும் பிரதி தலைவர் மாத்தயாவும் எடுத்தனர் என்று விடுதலை புலிகளின் வட்டாரங்கள் மூலம் அறியக்கூடியதாக இருந்தது.

விடுதலை புலிகளினால் பின்னர் கூறப்பட்ட விளக்கங்களின் பிரகாரம் அந்த அக்டாபரில் வடக்கில் கரிகாலனின் தலைமையின் கீழ் விடுதலை புலிகளின் கிழக்கு படையணியொன்றின் பிரசன்னம் முஸ்லிம்கள் வெளியேற்றும் தீர்மானத்துக்கு பெருமளவுக்கு பொறுப்பாகும். கரிகாலன் யாழ்ப்பாணம் நகரில் நின்று முஸ்லிம்கள் வெளியேற்றப்படுவதை மேற்பார்வை செய்ததாக கூறப்பட்டது. அந்த வெளியேற்றம் கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு ஒரு வகையான பதிலடி எச்சரிக்கையாக காண்பிக்கப்பட்டது. மிகைப்படுத்தப்பட்ட அச்சுறுத்தல் எண்ணம் இந்த தீர்மானத்தில் மேலும செல்வாக்கு செலுத்தியது.

நியாயப்படுத்தல் இல்லை

பீதிகொண்ட மனநிலையில் ஐந்தாம் படையாக வரக்கூடியவர்களாக முஸ்லிம்கள் நோக்கப்பட்டார்கள். இத்தகைய ஒரு பின்புலத்தில்தான் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள். வெளியேற்றத்துக்கு கூறப்பட்ட காரணங்கள் உண்மையாக இருந்தாலும் கூட, அது வெறுமனே நடந்து முடிந்ததற்கான ஒரு விளக்கம் மாத்திரமே. அது ஒரு நியாயப்படுத்தலாக இருக்க முடியாது. உண்மையில் அந்த கொடூரமான நடவடிக்கைக்கு எந்த நியாயமும் இருக்க முடியாது.

ஐந்து வருடங்களுக்கு பிறகு 1995 ஆம் ஆண்டில் தமிழர்களும் கூட பெரும் எண்ணிக்கையில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். அந்த வெளியேற்றம் விடுதலை புலிகளினால் திட்டமிட்டுச் செய்யப்பட்டது. பிறகு 2007 — 2009 காலப்பகுதியில் போர் தீவிரமடைய வன்னி பெருநிலப்பரப்பில் தமிழர்கள் இடத்துக்கு இடம் நகர வேண்டியிருந்தது. இறுதியில் முல்லைத்தீவு கரையோரத்தில் ஒரு சிறிய பகுதியில் தமிழர்கள் மட்டுப்பட்டு நிற்கவேண்டியதாயிற்று. அதை கர்மவினை அல்லது தர்மத்தின் செயல் என்று சிலர் சொல்லக்கூடும்.

வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது குறித்து கடந்த காலத்தில் நான் பல தடவைகள் எழுதியிருக்கிறேன். அதற்கு பெருமளவு தகவல்கள் பாதிக்கப்பட்ட வடக்கு முஸ்லிம்களினாலயே தரப்பட்டது. 1990 கறுப்பு அக்டோபரில் நடந்தவை பற்றி ஆங்கிலத்தில் எழுதிய முதல் தமிழன் நான்தான்.

இனச்சுத்திகரிப்பு

முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை இனச்சுத்திகரிப்பு என்று வர்ணித்த முதல் தமிழ் பத்திரிகையாளனும் நானே. விடுதலை புலிகள் பலம் பொருந்தியவர்களாக தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த வேளையில் நான் அவ்வாறு செய்தேன். அதற்காக விடுதலை புலிகளின் ஆதரவாளர்களினால் நான் கடுமையாக விமர்சிக்கப்பட்டேன். இருந்தாலும், பொதுவில் இலங்கையர்களினதும் குறிப்பாக தமிழர்களினதும் அவலங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து எழுதி வருவதைப் போன்றே வடக்கு முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதி குறித்தும் நான் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறேன்.

எனது முன்னைய பல கட்டுரைகளில் நான் கூறிய சில விடயங்களை மீண்டும் கூறி இந்த கட்டுரையை நிறைவுசெய்ய விரும்புகிறேன். வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களில் நான் சந்தித்த சிலரிடம் தமிழர்கள் மீது நேரடியாக காணக்கூடிய கசப்புணர்வு இல்லாதிருந்தது அவர்களின் மிகப்பெரிய பண்பாகும். தங்களது இடர்பாடுகளுக்கு விடுதலை புலிகளே பொறுப்பு என்பதை அவர்கள் விளங்கிக் கொள்கிறார்கள். சாதாரண தமிழர்களை அவர்கள் குற்றஞ்சாட்டவில்லை. எலலாவற்றுக்கும் மேலாக தமிழ் மொழி, அதன் இலக்கியங்கள், திரைப்படங்கள், நாடகங்கள் மற்றும் ஊடகங்கள் மீதான முஸ்லிம்களின் அபிமானம் குறையவேயில்லை.

வடக்கு எமது தாயகமும் கூட

மேலும், அவர்கள் யாழ்ப்பாணத்தில் தங்களது கடந்த கால வாழ்வை நினைவு கூர்ந்து வடக்குத்தான் தங்களது தாயகம் என்று பெருமையுடன் கூறினார்கள். வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் திரும்பிச் செல்வதற்கான தங்களது உரிமையை வலியுறுத்தியபோது ‘ வடக்கு எங்களது தாயகமும் கூட ‘ என்று தொடர்ச்சியாக நினைவு படுத்துவார்கள். தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு மத்தியிலும் அவர்களன காட்டிய இந்த பெருந்தன்மை தமிழ்ச் சமூகத்தை வெட்கித் தலைகுனிய வைக்கிறது. முஸ்லிம்களுக்கு எதிரான இந்த அட்டூழியத்தைச் செய்தமைக்காக ஒரு சிலரைத் தவிர விடுதலை புலிகளுக்கு எதிராக பலம்வாய்ந்த முறையில் குரல் கொடுக்கப்படவில்லை.

உண்மையான இணக்கப்போக்கு

தேசிய ரீதியிலும் உலகளாவிய ரீதியிலும் நல்லிணக்கம் பற்றி பேசப்படுகின்ற ஒரு சூழ்நிலையில் வடக்கில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் உண்மையான நல்லிணக்கப்போக்கு ஏற்பட வேண்டியது அவசியமாகும். முஸ்லிம்களை நோக்கி மானசீகமாக நேசக்கரத்தை நீட்ட வேண்டும். 35 வருடங்களுக்கு முன்னர் விடுதலை புலிகளினால் முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமைக்காக தமிழ் அரசியல் தலைவர்கள் அந்த மக்களிடம் மெய்யானதும் தாழ்மையானதுமான மன்னிப்பைக் கோரவேண்டும்.

__________________

D.B.S.Jeyaraj can be reached at dbsjeyaraj@yahoo.com

ஆங்கில மூலம்: டி. பி. எஸ். ஜெயராஜ் (Daily Mirror)

தமிழில்: வீரகத்தி தனபாலசிங்கம்

நன்றி: வீரகேசரி

*******************************************************************************