டி.பி.எஸ். ஜெயராஜ்
‘ கூட்டு எதிரணி ” என்று தங்களை அழைக்கும் இலங்கை எதிர்க்கட்சிகளின் குழுவொன்று ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவின் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி. ) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தப்போவதாக அறிவித்திருக்கின்றன.
ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் பிவிதுறு ஹெல உறுமய ஆகியவையே இந்த போராடடத்தில் சம்பந்தப்பட்ட பிரதான எதிரணிக் கட்சிகளாகும். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, சர்வஜன சக்தி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவை இந்த போராட்ட இயக்கத்தில் பங்கேற்கப் போவதில்லை.
தலைநகர் கொழும்புக்கு வெளியே நுகேகொடை நகரில் நவம்பர் 21 ஆம் திகதி நடத்தப்படவிருக்கும் மக்கள் பேரணி ஒன்றுடன் போராட்ட இயக்கம் ஆரம்பமாகும். ‘ மக்கள் குரல்’ ( மகாஜன ஹந்த ) என்று பெயரிடப்பட்டிருக்கும் நுகேகொடை பேரணியை தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியான மக்கள் பேரணிகள் நடத்தப்படும். இந்த போராட்ட இயக்கத்தில் எதிரணி கட்சிகள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தவறான ஆட்சிமுறை, ஊழல் மற்றும் ஒடுக்குமுறை ஆகியவற்றை முன்னிலைப்படுத்தப் போவதாக அறிவித்திருக்கின்றன.
அறிவிக்கப்பட்டிருக்கும் எதிரணியின் வியூகமும் செயற்பாட்டு முறையும் ஏற்கெனவே பார்த்த ஒரு அனுபவ உணர்வைத் தருகின்றன. 2025 நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடத்தப்படவிருக்கும் ‘ மக்கள் குரல் ‘ பேரணிக்கும் 2015 பெப்ரவரி 18 ஆம் திகதி நடத்தப்பட்ட ‘மகிந்த காற்று’ பேரணிக்கும் இடையில் ஒப்பீடுகள் செய்யப்படுகின்றன. தற்போதைய எதிரணிக் கட்சிகள் மக்கள் குரல் பேரணியை ஏற்பாடு செய்வதற்கு மகிந்த காற்று பேரணி ஒரு உத்வேகமாக அயைந்திருப்பதாகவும் கூட கூறப்படுகிறது.
2005 நவம்பர் முதல் ஜனாதிபதியாக இருந்துவந்த மகிந்த ராஜபக்ச 2015 ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவினால் தோற்கடிக்கப்பட்டார். அரசியல் வீழ்ச்சி கண்ட மகிந்த துணிச்சலுடன் போராடி இழந்த செல்வாக்கை மீணடும் பெற்றார். ஜனாதிபதி தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு பிறகு நுகேகொடயில் அரசியல் பேரணி ஒன்று நடத்தப்பட்டது. ‘ மகிந்த காற்று ‘ ( மகிந்த சுலங்க ) என்று பெயரிடப்பட்ட அந்த பேரணியில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கலந்துகொண்டனர்.
அதற்கு பிறகு நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் மகிந்த காற்று கூட்டங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டன. அந்த பேரணிகள் மகிந்தவுக்கு ஆதரவாக மக்களை அணிதிரட்டியதுடன் அரசியலில் ஒரு ராஜபக்ச மீள் எழுச்சியையும் கொண்டுவந்தன. 2016 நவம்பரில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டது. 2018 பெப்ரவரியில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்களில் பெரும்பான்மையான உள்ளூராட்சி சபைகளை பொதுஜன பெரமுன கைப்பற்றியது. 2019 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெற்றார். 2020 ஆகஸ்டில் பாராளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுன மகத்தான வெற்றியைப் பெற்றது.
மகிந்த காற்று பேரணியினதும் மக்கள் குரல் பேரணியினதும் அரங்கு நுகேகொடையாக இருப்பதனால் இரண்டுக்கும் இடையில் ஒரு ‘ தொடக்க ‘ ஒற்றுமை இருக்கிறது. மகிந்த காற்று பேரணிக்கு பிறகு நடந்ததைப் போன்றே மக்கள் குரல் பேரணியை தொடர்ந்து வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக பேரணிகளை நடத்துவதற்கு தற்போதைய கூட்டு எதிரணி திட்டமிடுகிறது. ஆனால், இரண்டு பேரணிகளுக்கும் இடையில் ஒரு சமாந்தரத்தை வரையும் முயற்சிகள் ஒரு மேலெழுந்தவாரியான ஒப்பீடாகவே அமைய முடியும்.
2015 பெப்ரவரி நுகேகொடை மகிந்த காற்று பேரணி தனித்தன்மை வாய்ந்த ஒரு தோற்றப்பாடாகும். அது பிரத்தியேகமான அரசியல் சூழ்நிலை ஒன்றின் பின்புலத்தில் வேறுபட்ட ஒரு நேரத்தில் திடமிடப்பட்டு நடத்தப்பட்டது. தற்போதைய பின்புலத்தில் அந்த பேரணி பற்றி குறிப்பிட்டுக் கொண்டிருக்கும் பல அரசியல் அவதானிகள் ஒரு தசாப்தத்துக்கு முன்னர் நடந்ததை அறியாதவர்களாக அல்லது அதைப் பற்றிய தவறான தகவலைப் பெற்றவர்களாக இருக்கிறார்கள் போன்று தோன்றுகிறது. அதனால் இத்தகைய ஒரு பின்புலத்தில் எனது முன்னைய எழுத்துக்களின் உதவியுடன் 2015 பெப்ரவரி 18 ஆம் தகதி நுகேகொடையில் நடைபெற்ற மகிந்த காற்று பேரணி பற்றியும் அதன் தாக்கம் பற்றியும் இந்த கட்டுரை கவனம் செலுத்துகிறது.
மகிந்தவின் தோல்வி
மூன்றாவது பதவிக்காலத்துக்கு ஜனாதிபதியாக தெரிவாகுவதற்கான ஒரு முயற்சியில் உரிய காலத்துக்கு முன்கூட்டியே 2015 ஜனவரியில் ஜனாதிபதி தேர்தலுக்கு அழைப்பு விடுத்து மகிந்த ராஜபக்ச பெருந்தவறை இழைத்தார். அவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதச்செயலாளராக இருந்துகொண்டு எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேனவிடம் கசப்பான தோல்வியைக் கண்டார். 2015 ஜனவரி 8 ஆம் திகதி இரவு தோல்வியை எதிர்நோக்கிய பிறகு மகிந்த ராஜபக்ச முற்றுகைக்குள்ளான நிலையில் இருந்தார்.
தோல்விக்கு பின்னரான நிலைவரத்தில் ஒரு மந்தாரமான வாய்ப்புக்களை எதிர்நோக்க வேண்டிய நிலை அவருக்கு இருந்தது. அந்த வாய்ப்புக்கள் அவர் இழைத்ததாக கூறப்படுகிறன்ற குற்றங்களுக்காக உள்நாட்டு விசாரணை தொடக்கம் சர்வதேச அமைப்புக்களில் கண்டனத்துக்கு உள்ளாகுவது வரையானவையாக இருந்தன. ஆனால், அவரைச் சூழ்வதற்கு அசாசுறுத்திக் கொண்டிருந்த தோல்வி இருளுக்குள் மூன்று நம்பிக்கை ஔிக்கீற்றுக்களும் தென்பட்டன.
மூன்று ஔிக்கீற்றுகள்
முதலாவதாக, ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற மைத்திரிபால சிறிசேன பெரும்பான்மை இனத்தவர்களின் பெரும்பான்மையான வாக்குகளைப் பெறத் தவறினார். சிங்கள சமூகத்தவர்களினால் அளிக்கப்பட்ட வாக்குகளில் 55 சதவீமானவை மகிந்த ராஜபக்சவுக்கே கிடைத்ததாக கணிப்பிடப்பட்டது. மறுபுறத்தில், இலங்கைத் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும இந்திய வம்சாவளி தமிழர்கள் என்று மூன்று சிறுபான்மைச் சமூகத்தவர்களினாலும் அளிக்கப்பட்ட வாக்குகளில் 81 சதவீதமானவற்றை மைத்திரிபால சிறிசேனவே பெற்றார் என்று கணிப்பீடுகள் கூறின.
இது சிங்கள வாக்காளர்கள் மத்தியில் கண்ட பின்னடைவை ஈடுகட்டி தேர்தலில் வெற்றிபெறுவதற்கு சிறிசேனவுக்கு உதவியது. இறுதி முடிவுகள் சிறிசேனவுக்கு சாதகமானதாக இருந்த போதிலும் கூட, அவரால் சிங்கள மக்களில் பெரும்பான்மையானவர்களை வென்றெடுக்கக்கூடியதாக இருக்கவில்லை. நாட்டின் மொத்த சனத்தொகையில் சிங்களவர்கள் 74 சதவீதத்தினராக இருப்பதுடன் சிங்கள வாக்குகளில் அரைவாசிக்கும் அதிகமானவற்றை ராஜபக்ச பெற்றதனால், மெதமுலான மகிந்தவை அரசியலில் இருந்து சுலபமாக ஓரங்ககட்ட முடியவில்லை. அவருக்கு கிடைத்த அந்த ஆதரவுக்கு சிலர் ஒரு இனவாதச் சாயத்தைப் பூசியபோதிலும், அது மகிந்தவுக்கு சார்பான ஒரு பலம்வாய்ந்த அம்சமாக இருந்தது. அத்துடன் தேர்தலில் தோல்விக்கு மத்தியிலும், அவருக்கு கணிசமான செல்வாக்கைக் கொடுத்தது.
இரண்டாவதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் அதன் பிரதான அங்கத்துவக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இறுதி வெற்றியாளரான மைத்திரிபால சிறிசேனவை உறுதியாக எதிர்த்துக்கொண்டே இருந்தன. சுந்திர கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் அவற்றில் இருந்தவர்களும் தேர்தலில் சிறிசேனவுக்கு ஆதரவைத் தெரிவித்திருக்கலாம். ஆனால், அந்த இரு கட்சிகளும் மகிந்த ராஜபக்சவுக்கு பின்னால் உறுதியாக நின்றன.
சிறிசேனவின் வெற்றிக்கு பிறகு ‘ வாசி பத்த ஹொய்யா ‘ மனப்பான்மையே மேலோங்கும் என்றும் சுதந்திர கட்சி / ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும் எண்ணிக்கையில் வௌயேறுவர் என்றும முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது. பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறியபோதிலும், பருமளவானவர்கள் மகிந்தவுடனேயே தொடர்ந்து நின்றனர். பிரதானமாக பெரும்பான்மையான சிங்கள வாக்காளர்கள் மகிந்தவையே தொடர்ந்தும் ஆதரித்தார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டிய காரணத்தினாலேயே எதிர்பார்க்கப்பட்ட பெரியளவிலான வெளியேற்றம் இடம்பெறவில்லை. மைத்திரிபால சிறிசேனவுக்கு பின்னால் செல்வதை விடுத்து பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் மகிந்தவுடன் நிற்கவே தீர்மானித்தனர்.
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அன்றைய பாராளுமன்றத்தில் கச்சிதமாக பிரதிபலிக்கவில்லை என்று மூன்றாவதும் மிகவும் முக்கியமானதூமான அம்சமாகும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் அன்று ஒரு சிறுபான்மை அரசாங்கமே பதவியில் இருந்தது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமாக அதிகாரத்தில் அமர்ந்த அதேவேளை , பருமளவு ஆசனங்களை தொடர்ந்தம் தன்வசம் வைத்திருந்த சுதந்திர கட்சி எதிர்க்கட்சி தரப்பில் இருந்தது. அந்த பாராளுமன்றம் 2016 ஏப்ரில் வரை பதவியில் நீடிப்பதற்கான தகுதியைக் கொண்டதாக இருந்தது. அது அரசாங்கம் உண்மையில் ‘நொண்டி வாத்து ‘ போன்று இருந்த ஒரு விசித்திரமான நிலைவரமாகும்
ஜனாதிபதி தேர்தலில் அதிகப் பெரும்பானமையான தமிழ் வாக்காளர்களும் முஸ்லிம் வாக்காளர்களும் தன்னை நிராகரித்தது குறித்து மகிந்த ராஜபக்ச ஆத்திரமடைந்தார் என்பது வெளிப்படையானது. அதை தனக்கு அனுகூலமாகப் பயன்படுத்தி அவர் தன்னைச் சிறுபான்மை இனத்தவர்களே தோற்கடித்தாக மக்கள் மத்தியில் கூறினார். தனக்கு எதிராக விடுதலை புலிகளுக்கு ஆதரவான புலம்பெயய்ந்த தமிழர்களை சதி செய்ததாக கூறியதன் மூலம் மேலும் நிலைவரத்தை மகிந்த கூர்மையானதாக்கினார்.
அதையடுத்து சுதந்திர கட்சியையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியையும் சேர்ந்த பல அரசியல்வாதிகள் போரை வென்று நாடு பிளவுபடுவதை தடுத்த ‘ நாயகனை ‘ தேர்தலில் தோற்கடித்ததன் மூலமாக சிறுபான்மை இனத்தவர்கள் பழிவாங்கிவிட்டார்கள் என்ற கதையைப் பரப்பினார்கள். சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிரான உணர்வுகளை மகிந்தவும் அவரது ஏவலாட்களும் தங்களுக்கு வசதியாக பயன்படுத்தினர்.
அரசியல் ஓய்வு
தோல்விக்கு மத்தியிலும் , மகிந்தவே அந்த நேரத்தில் சிங்கள அரசியல் தலைவர்கள் மத்தியில் மிகுந்த மக்கள் செல்வாக்குடைய தனியொரு தலைவராக விளங்கினார். இத்தகைய அனுகூலமான நிலை இருந்த போதிலும், மகிந்த நேரடியாக மோதல் அரசியலில் ஈடுபடவில்லை. எந்த வித மறுப்பும் இன்றி சுதந்திர கட்சியின் தலைமைத்துவத்தை மைத்திரிபால சிறிசேனவுக்கு விட்டுக்கொடுத்த மகிந்த அரசியலில் இருந்து ஓய்வுபெற்று மதச் சிந்தனையில் ஈடுபடும் எண்ணத்தைக் கொண்டவர் போன்று தேின்றியது.
கொழும்பில் இருந்து மெதமுரானவிலும் தங்காலையிலும் உள்ள தனது வீடுகளுக்கு திரும்பிய அவர் பௌத்த வணக்கத் தலங்களுக்கும் விஜயம் செய்தார். தோல்விகண்ட ஜனாதிபதியைப் பொறுத்தவரை, அரசியல் பதவியிலும் அரசியலில் அக்கறையில்லாதவர் என்ற தோற்றப்பாடு ஒன்றைக் காண்பிக்க வேணடியது மிகவும் அவசியமாக இருந்தது. அரசியலில் இருந்து ஓய்வுபெற அவர் விரும்புவது போன்று போன்று தோன்றியது.
வெளியில் தெரியக்கூடியதாக ஒரு மட்டத்தில் இத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த அதேவேளை, இன்னொரு மட்டத்தில் அரசியலில் ராஜபக்சவின் மீள்பிரவேசத்துக்கு மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்கான வேறுபட்ட முயற்சி ஒன்று தொடங்கப்பட்டது. ஆனால், ஜனாதிபதி தேர்தலில் தோல்விகண்ட உடனடியாகவே அரசியல் பதவிக்கு ராஜபக்ச அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறார் என்ற எண்ணம் ஏற்படக்கூடாது என்பதும் முக்கியமானது. ஓய்வுபெற்ற அரசியல் மேதகை ஒருவர் மக்களின் வேண்டுகோளின் விளைவாக தயக்கத்துடன் அரசியலுக்கு மீண்டும் இழுத்துவரப்படுகிறார் என்ற ஒரு தோற்றப்பாட்டைக் காட்டவேண்டியிருந்தது.
மக்கள் வருகை
‘ ருஹுணுவின் சிங்கத்தை ‘ அவரது பாரம்பரிய குகைகளான மெதமுலானவிலும் தங்காலையிலும் பார்ப்பதற்கு நாட்டின் சகல பாகங்களிலும் இருந்து வருகை தருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அவ்வாறு வருகை தந்த மக்களுக்கு உணவு மற்றும் குளிர்பான வசதிகளும் போக்குவரத்துச் செலவுக்கு பணமும் கொடுக்க ஏற்பாடுகள் இருந்தன. ஆனால், மக்கள் பெந்தற ஆற்றைக்கடந்து தென்பகுதிக்கு தாங்களாகவே பயணம் செய்து பார்த்துவிட்டுத் திரும்புவதற்கு அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார்கள். அந்த பயணத்துக்கு எவரும் நிர்ப்பந்திக்கப்படவில்லை. மக்கள் தாங்களாகவே தீர்மானித்து பயணம் செய்தார்கள். வீழ்ச்சி கண்ட தங்களது ‘ நாயகனை’ பார்ப்பதற்கு அத்தகைய ‘ யாத்திரைகளை ‘ மேற்கொண்டவர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த வசதி குறைந்த மக்களே என்பதை உண்மையை மறந்துவிடக்கூடாது. தேர்தல் முடிவுகள் கூட, இலங்கைச் சமூகத்தின் மத்தியில் பெருமளவு ஆதரவை மகிந்த தக்கவைத்துக் கொண்டார் என்பதை வெளிக்காட்டின.
மகிந்தவை சந்திக்க வந்த இந்த கிராமப்புற மக்கள் வெளிக்காட்டிய உணர்வுகள் நகர்ப்புற உயர் வர்க்கத்தவரின் போலித்தனமான பாசாங்கைப் போலன்றி உண்மையிலேயே போலிப்பசப்பற்றதாக இருந்தன. மகிந்தவை பார்த்துவிட்டு கிராமங்களுக்கு திரும்பிய மக்கள் அங்கு கூறிய விடயங்களின் விளைவான பிரதிபலிப்பு ‘ அபே மகிந்த’ வுக்கு பெருமளவுக்கு ஆதரவானதாக அமைந்தது.
மக்களின் கிரமமான இந்த வருகை சோர்வடைந்திருந்த மகிந்தவுக்கு உத்வேகத்தைக் கொடுத்தது என்பது உண்மை என்கிற அதேவேளை பரந்தளவிலான அரசியல் அர்த்தத்தில் அவருக்கு அது உதவவில்லை. தங்களது முன்னாள் ஜனாதிபதியை பார்ப்பதற்கு ‘ குரக்கன் நாட்டுக்கு ‘ பஸ்கள் நிறைய வந்த மக்கள் கூட்டம் தேசிய எண்ணத்தை கவருவதற்கு அல்லது சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்கு போதுமானதாக இருக்கவில்லை. அம்பாந்தோட்டைக்கான பயணங்கள் முழு இலங்கையையும் அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில் பெரிதாக விளைவை ஏற்படுத்தவில்லை.
சுதந்திர கட்சியின் கடிவாளம் ‘ உத்தியோகபூர்வமாக ‘ ராஜபக்சாக்களின் கைகளில் இல்லாத நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் மகிந்தவுக்கு ஆதரவாக இருந்த சக்திகள் சுறுசுறுப்பாக்கப்பட்டன. சுதந்திர கட்சியின் வெளிப்படையான ஈடுபாடு இல்லாமலேயே மகிந்தவுக்கு ஆதரவான இயக்கம் முன்னெடுக்கப்பட்டது.
மகிந்தவை மீண்டும் கொண்டுவருதல்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நான்கு அங்கத்துவக் கட்சிகளைச் சேர்ந்த நம்பிக்கைக்குரிய நான்கு முக்கிய அரசியல்வாதிகளிடம் ‘ மகிந்தவை மீண்டும் கொண்டுவரும்’ இயக்கத்தை தொடங்கி மேம்படுத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. தினேஷ் குணவர்தன ( மக்கள் ஐக்கிய முன்னணி ), வாசுதேவ நாணயக்கார ( ஜனநாயக இடதுசாரி முன்னணி ), விமல் வீரவன்ச ( தேசிய சுதந்திர முன்னணி ) மற்றும் உதய கம்மன்பில (பிவிதுறு ஹெல உறுமய ) ஆகியோரே அந்த நால்வருமாவர். மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒரு மாகாணசபை உறுப்பினரையும் கொண்ட இந்த நால்வர் அணியே ‘ மகிந்தவை மீண்டும் கொண்டுவரும் ‘ இயக்கத்தின் முதலாவது நுகேகொடை பேரணியை ஒழங்குசெய்தது.
நுகேகொடை பேரணியே ‘ மகிந்தவை மீண்டும் கொண்டுவரும் ‘ இயக்கத்தினால் திட்டமிடப்பட்ட தொடரான அரசியல் சதுரக்க நகர்வுகளில் முதலாவதாகும். அது ஒரு முன்னோடி அரசியல் பரிசோதனையாக அமைந்தது. ஏற்பாட்டாளர்கள் மிகவும் ஆழ்ந்து சிந்தித்து பேரணிக்கான இடத்தை தெரிவு செய்தனர்.
அந்த நாட்களில் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய தளமாக கருதப்பட்ட கொழும்பு நகரை தெரிவு செய்வதற்கு அவர்களுக்கு துணிச்சல் வரவில்லை. ஆனால், ஒரு பகட்டு வெளிப்பாடாக கொழும்பு மாவட்டத்திற்குள் வேறு இடத்தை தெரிவு செய்தனர். கொழும்பு நகருக்குள் உள்ள பல்லின தேர்தல் தொகுதிகளைப் போலன்றி மகிந்த ராஜபக்சவுக்கு பெருமளவு மக்கள் ஆதரவு இருந்த – சிங்களவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட மகரகம, கோட்டே, ஹோமகம மற்றும் கொட்டாவ போன்ற தேர்தல் தொகுதிகளுக்கு நெருக்கமாக கொழும்பின் புறநகர்ப் பகுதியில் பேரணி அரங்கு அமைந்தது.
இரண்டு மடக்கு சோதனை
நுகேகொடையில் பேரணியை நடத்துவதன் மூலமாக இரண்டு மடங்கு சோதனையை செய்து பார்ப்பதில் நாட்டம் காட்டப்பட்டது. முதலாவது நோக்கம் மகிந்தவை மீண்டும் தீவிர அரசியலுக்குள் கொண்டுவர வேண்டும் என்று கோரும் இயக்கத்தை முன்னெடுப்பதற்கு ஏதுவாக கள நிலைவரங்களும் மக்களின் மனநிலையும் இருக்கிறதா என்று பார்ப்பதாகும். இரண்டாவது நோக்கம் சுதந்திர கட்சியின் தலைவராக புதிய அவதாரம் எடுத்திருந்த ஜனாதிபதி சிறிசேனவின் அரசியல் நாடித்துடிப்பையும் தோன்றக்கூடிய சவாலுக்கு எவ்வாறு அவர் பிரதிபலிப்பை வெளிக்காட்டுகிறார் என்பதையும் பார்ப்பதாகும்.
அரசியல் கூட்டங்களுக்கு மக்களை ‘ திட்டமிட்டுக் கூட்டிவருகின்ற ‘ இந்திய, இலங்கை நடைமுறைகளின் பிரகாரம் நுகேகொடை பேரணியிலும் பெரிய மக்கள் கூட்டத்தை காட்டுவதற்காக ஏற்பாட்டாளர்கள் பஸ்கள் நிறைய மக்களை கொண்டுவந்தார்கள். 2015 ஜனவரி 8 மகிந்த அடைந்த அரசியல் தோல்விக்கு பின்னரான அத்தகைய முதலாவது கூட்டமாக அது இருந்ததால் மக்கள் தாங்களாகவே விரும்பி அதில் கலந்து கொள்வார்கள் என்று மாத்திரம் ஏற்பாட்டாளர்களினால் நம்பியிருக்க முடியவில்லை.
முதலாவது பேரணியிலேயே குறைந்தளவில் மக்கள் கலந்துகொண்டிருந்தால் அது ஒரு அரசியல் அனர்த்தமாக போயிருக்கும். அதனால் ஆயிரக்கணக்கான மக்கள் அரங்குக்கு கூட்டிவரப்பட்டனர். ஆனால், எதிர்பாராத வகையில் மக்கள் தாங்களாகவே பெருளவில் கலந்து கொண்டதை பார்த்த மகிந்த இயக்க ஏற்பாட்டாளர்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தார்கள். திட்டமிட்டுக் கட்டிவரப்பட்ட மக்களை விடவும் கூடுதல் எண்ணிக்கையானவர்கள் தாங்களாகவே விரும்பி வந்தனர். கலந்துகொண்ட மக்களின் எண்ணிக்கையை ஏற்பாடாடாளர்கள் ஆறு இலக்கங்களில் மிகைப்படுத்திக் கூறினர். ஆனால், உண்மை அதுவல்ல. ஐந்து இலக்கங்களில் தான் அதைக் கூறமுடியும். அது கூட மகிந்தவுக்கு எதிரான முகாமில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்துவதற்கு போதுமானதாக இருந்தது.
மக்களுக்கு தூண்டுதல் அளித்து பக்திமயமாக்கும் விவிலியக் குழுக்களின் கூட்டங்களைப் போன்று மகிந்த இயக்கத்தின் பேரணியிலும் கூட ‘ ஏற்பாடு செய்யப்படட உணர்ச்சிப் பெருக்கை ‘ காணக்கூடியதாக இருந்தது. பேரணியில் மகிந்த கலந்து கொள்ளவில்லை. ஆனால், அவரது செய்தியை கல்விமானும் முன்னாள் இராஜதந்திரியுமான கலாநிதி தயான் ஜெயதிலக ஆர்வப்பெருக்குடன் நாட்டு மக்களுக்கு வாசித்தார்.
ராஜபக்ச மறுமலர்ச்சி
நாட்டை ‘அதிர்ச்சிக்கும் வியப்புக்கும் ‘ உள்ளாக்குவதில் நுகேகொடை பேரணி வெற்றிகண்டது. திறமையான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த பேரணியின் மூலமாக மகிந்த ராஜபக்சவினால் தான் ஒரு செலவழிந்துபோன சக்தி அல்ல, இன்னமும் கூட கணக்கில் எடுக்கப்பட வேண்டிய சக்தியே என்பதை நிரூபிக்கக்கூடியதாக இருந்தது. அது அரசியலில் ராஜபக்சவின் மறுமலர்ச்சிக்கு கட்டியம் கூறுவதாக இருந்தது. சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிரான பிரசாரம் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் மேற்கொள்ளப்பட்டமை அந்த பேரணியின் எதிர்மறையான அம்சமாக இருந்தது. சிங்கள மக்களுக்கு மாத்திரம் அழைப்பு விடுத்தே பெரும்பாலான பேச்சாளர்கள் உரையாற்றினர். அதன் விளைவாக பெரும்பான்மையான தமிழ், முஸ்லிம் வாக்காளர்கள் ராஜபக்சாக்களுக்கு ஆதரவானவர்களாக இருக்கவில்லை.
ஏற்கெனவே குறிப்பிடப்பட்டதைப் போன்று ‘ மகிந்த காற்று ‘ நுகேகொடை பேரணியின் இரட்டை நோக்கம் ஒரு புறத்தில் மகிந்த ராஜபக்சவின் அரசியல் செல்வாக்கை மதிப்பிட்டு வெளிக்காட்டுவதும் மறுபுறத்தில் புதிய ஜனாதிபதியும் சுதந்திர கட்சியின் புதிய தலைவருமான சிறிசேனவின் அதிகாரத்துக்கு துணிச்சலுடன் அரசியல் சவாலைத் தோற்றுவிப்பதுமேயாகும். அது ஒரு வகையில் நெருக்குதலின் கீழ் சிறிசேன எவ்வாறு நடந்துகொள்கிறார் என்பதை பார்ப்பதற்கான பரிசோதனையாகவும் அமைந்தது.
ஏற்பாட்டாளர்களைப் பொறுத்தவரை, நுகேகொடை பேரணி ஒரு பெரிய வெற்றி. திட்டமிட்டு வாகனங்களில் கூட்டிவரப்பட்டவர்களும் தாங்களாக விரும்பி வந்தவர்களுமாக மிகவும் பெரியதொரு மக்கள் கூட்டம் அரங்கை ஆக்கிரமித்திருந்தது. மேடையில் ஏறாவிட்டாலும் கூட பெரும் எண்ணிக்கையான சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராடசி சபை உறுப்பினர்கள் பேரணியில் பங்கேற்றனர்.
மைத்திரிபாலவுக்கு அமிலப் பரிசோதனை
சதந்திர கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் மற்றைய சபைகளின் உறுப்பினர்களும் காட்டிய துணிச்சல் புதிய தலைவர் மைத்திரிபாலவுக்கு ஒரு நேரடியான அவமதிப்பாகும். அது அவருக்கு ஒரு அமிலப் பரிசோதனையாக அமைந்தது. எவ்வாறு அவர் எதிர்வினையைக் காட்டுவார்? குளவி போன்று கொட்டி யார் தலைவர் என்பதை காட்டுவாரா?
ஆனால், சிறிசேன குளவி போன்று கொட்டவில்லை. அவ்வாறு அவர் செய்திருந்தாலும் கூட அது ஒரு வண்ணத்துப்பூச்சி போன்றே இருந்தது. வெற்று எச்சரிக்கைகளும் பலவீனமான அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டன. அவற்றில் எதுவுமே பாரதூரமானதாக நோக்கப்படவில்லை. எந்தவிதமான தண்டிக்கும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சிறிசேன பலவீனமான ஒரு தலைவராகவே கருதப்பட்டார். மகிந்த இயக்கம் இரத்தத்தை ருசிபார்த்தது. கண்டி, இரத்தினபுரி, மாத்தறை, குருநாகல் போன்ற இடங்களில் கிரமமான இடைவெளிகளில் தொடர்ச்சியாக பேரணிகள் நடத்தப்பட்டன.
அவற்றில் பங்கேற்ற சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் மற்றைய சபைகளின் உறுப்பினர்களினதும் எண்ணிக்கை அதிகரித்தது. சிலர் மேடைகளில் ஏறி பேசவும் செய்தார்கள். சில மாதங்களுக்கு பிறகு ‘ இரும்பு வண்ணத்துப்பூச்சி’ ஹருணிக்கா பிரேமச்சந்திர,’ நுகேகொடை பேரணிக்கு பிறகு சுதந்திர கட்சிக்காரர்கள் மீது ஜனாதிபதி சிறிசேன கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருந்தால் ஏனைய கூட்டங்கள் நடைபெற்றிருக்காது ‘ என்று கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது.
சிறிசேன பலவீனமானவராக காணப்படடதால் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. ‘ மகிந்தவை மீண்டும் கொண்டுவரும்’ இயக்கம் தணிந்து போவதற்கு பதிலாக தொடர்ந்து உத்வேகம் பெற்றது. இறுதியில் அந்த இயக்கம் மகிந்தவை ‘ அலரிமாளிகைக்கு ‘ மீண்டும் கொண்டு வரும் குறிக்கோளைச் சாதித்தது.
மேலாண்மை நிலையில் அரசாங்கம்
அரங்கு ஒன்றாக இருக்கிறது என்பதற்கு அப்பால் மகிந்த காற்று பேரணியும் மக்கள் குரல் பேரணியும் முற்றிலும் வேறுபட்டவையாகும். எதிரணியுடன் ஒப்பிடும்போது ஜே.வி.பி. / தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒரு மேலாண்மை நிலையில் இருக்கிறது போன்று தெரிகிறது. அநுர குமார திசநாயக்க தற்போது இலங்கை அரசியலில் மிகுந்த மக்கள் செல்வாக்குடைய தனியொரு தலைவராக விளங்குகிறார். அவரது உயர்த்திக்கு சமனாக எதிரணி கட்சிகளின் தலைவர்களில் எவரும் இல்லை.
தேசிய மக்கள் சக்தியின் செல்வாக்கு உள்ளூராட்சி தேர்தல்களில் குறைந்து போயிருக்கலாம் ஆனால், எதிரணி கட்சிகளுடன் ஒப்பிடும்போது திசைகாட்டியே பருமளவு ஆசனங்களைக் கைப்பற்றியது என்ற உண்மையை மறந்துவிடலாகாது. அரசாங்கம் ந்டில் பெருமளவுக்கு மக்கள் ஆதரவை இழந்து விடவில்லை. அதிருப்தியின் முணுமுணுப்புக்கள் தெளிவாகத் தெரிகின்ற போதிலும், பரந்தளவில் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் மத்தியில் இருந்து எதிர்ப்புக்குரல்கள் எழும்பவில்லை.
எதிரணிக் கட்சிகள் கிளப்புகின்ற பிரச்சினைகள் தற்போதைய தருணத்தில் மக்களின் அக்கறைக்குரியவையாக இருக்கவில்லை. மேலும், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளினால் தாங்கள் தண்டிக்கப்படக்கூடும் என்று எதிரணி அரசியல்வாதிகளில் பலர் அஞ்சுகிறார்கள்.
சில உள்ளகப் பதற்றங்களுக்கு மத்தியிலும் அரசாங்க அணிகளுக்கு இடையில் ஒட்டுமொத்தத்தில் ஐக்கியம் நிலவுகிறது. அதனால் தற்போதைய தருணத்தில் அரசாங்கத்திற்குள் உட்பூசல்களை எதிரணியினர் தூண்டிவிடுவதற்கு வாய்ப்பு இல்லை. மாறாக, எதிரணிக் கட்சிகள் மத்தியிலேயே பெருமளவில் முரண்பாடுகள் காணப்படுகின்றன.
பாராளூமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருப்பவரின் தலைமையிலான பிரதான எதிர்க்கட்சி அரசாங்கத்துக்கு எதிரான இயக்கத்தில் இருந்து தூரவிலகிநிற்கிறது. இது இராமர் பாத்திரம் இல்லாமல் இராமாயணம் நாடகத்தை கேடையேற்றுவது போன்று இருக்கிறது. மேலும்,திரணிக் கட்சிகள் மத்தியில் காணப்படுகின்ற ஐக்கியத்தின் சஞ்சலமான சாயலும் கூட மாகாணபை தேர்தல்கள் வந்தால் குலைந்துவிடக்கூடிய சாத்தியமிருக்கிறது.
காலம்தான் பதில் சொல்லும்
அதனால் , ‘மகிந்த காற்று’ நுகேகொடை பேரணியும் உத்தேச ‘ மக்கள் குரல்’ நுகேகொடை பேரணியும் முற்றிலும் வேறுபட்டவை. முன்னைய பேரணியின்போது நிலவிய அரசியல் சூழ்நிலையை தற்போதைய சூழ்நிலைக்கு பிரயோகிக்க முடியாது. நவம்பர் 21 நுகேகொடை பேரணி வெற்றிகரமானதாக அமையுமா இல்லையா என்பதை இந்த சந்தர்ப்பத்தில் மதிப்பிடுவது காலப்பொருத்தமானது அல்ல. காலம் மாத்திரமே பதில் சொல்லும்.
______________
D.B.S.Jeyaraj can be reached at dbsjeyaraj@yahoo.com
ஆங்கில மூலம்: டி. பி. எஸ். ஜெயராஜ் (Daily Financial Times)
தமிழில்: வீரகத்தி தனபாலசிங்கம்
நன்றி: வீரகேசரி
******************************************************************************

