டி.பி.எஸ். ஜெயராஜ்
இலங்கை அரசினாலும் அதன் நிறுவனங்களினாலும் தனியாருக்கு சொந்தமான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருவது அண்மைக்காலமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் ஆழ்ந்த விசனத்துக்குரிய ஒரு சர்ச்சையாக இருக்கிறது. இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் ஆகியவற்றினாலும்் தொல்லியல், வனப்பாதுகாப்பு, கரையோரப் பாதுகாப்பு , கரையோரப் பாதுகாப்பு முகாமை திணைக்களங்கள் போன்ற அரச நிறுவனங்களினாலும் பல்வேறு காரணங்களின் கீழ் ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டிருக்கின்றன.
இது விடயத்தில் காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் ( Land Settlement Ordinance ) 4 வது பிரிவின் கீழ் 2025 மார்ச் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2430/25 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் பிந்திய அதிர்ச்சியாக வந்திருக்கிறது. இந்த காணி நிர்ணய அறிவித்தலின் பட்டியலில் இலக்கங்கள் இலக்கங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும் — 5617 (யாழ்ப்பாணம் ), 5618 ( யாழ்ப்பாணம் ), 5619 (கிளிநொச்சி), 5620 (முல்லைத்தீவு ), 5621 (முல்லைத்தீவு), 5622 ( முல்லைத்தீவு), 5623 ( மன்னார் ) காணிகளில் எந்த ஒன்றுக்கும் 2025 மாரச் 28 ஆம் திகதியில் இருந்து மூன்று மாதங்களுக்குள் உரிமை கோரப்படாத பட்சத்தில் அவை காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் கீழ் அரசுடைமையாக்கப்படும் என்று பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது.
ஏழு பட்டியல்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கும் காணிகளின் மொத்த பரப்பளவு 5941ஏக்கர்களாகும். இவற்றில் 3668 ஏக்கர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திலும் 1703 ஏக்கர்கள் முல்லைத்தீவு மாவட்டத்திலும் 515 ஏக்கர்கள் கிளிநொச்சி மாவட்டத்திலும் 54 ஏக்கர்கள் மன்னார் மாவட்டத்திலும் இருக்கின்றன. வடமாகாணத்தில் நிலத்தால் சூழப்பட்டிருக்கும் ஒரே மாவட்டமான வவுனியாவுக்கு வர்த்தமானி அறிவித்தலில் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
வர்த்தமானி பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெரும்பாலான காணிகள் இந்த மாவட்டங்களின கரையோரப் பகுதிகளில் இருப்பவையாகும் என்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாகும். நாட்டின் வடமேற்கில் மன்னார் மாவட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் காணிகள் முசலி உதவி அரசாங்க அதிபர் பிரிவில் உள்ளதாகும். வடக்கிலும் வடகிழக்கிலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் காணிகளை ஒன்றாக எடுத்துப்பார்த்தால் புவியியல் ரீதியில் அவை வடமராட்சி கிழக்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் இருந்து கரைதுறைப்பற்று உதவி அரசாங்க அதிபர் பிரிவு வரை கரையோரமாக வியாபித்திருக்கின்றன.
இதனால் இந்த காணிகள் வடக்கில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் காலூன்றுவதற்கு விரும்பும் வல்லமை பொருந்திய ஏதாவது ஒரு அமைப்புடன் தொடர்புடைய எதிர்கால திட்டங்களுக்காக வஞ்சகத்தனமான முறையில் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனவா என்ற சந்தேகம் எழுகிறது.
வர்த்தமானி அறிவித்தல்
இந்த காணிகளை வர்த்தமானியில் அரசாங்கம் வெளியிட்ட பாங்கும் வழிவகையும் வடபகுதி தமிழர்களை மேலும் கலக்கத்துக்கு உள்ளாக்கியது. சம்பந்தப்பட்ட காணிகள் தமிழர்களுக்கு சொந்தமானவை என்பதுடன் தமிழ்பேசும் பிராந்தியங்களிலேயே அமைந்திருக்கின்றன. ஆனால், மார்ச் 28 வர்த்தமானி அறிவித்தல் தொடக்கத்தில் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் மாத்திரமே வெளியிடப்பட்டது. காணிகள் தமிழ்ப் பகுதிகளில் அமைந்திருக்கின்றன, தமிழர்களுக்கே சொந்தமானவை. ஆனால், வர்த்தமானி அறிவித்தல் தமிழில் இல்லை. அறிவித்தல் தமிழில் இல்லாத பட்சத்தில் இந்த காணிகளின் சட்டபூர்வமான உரிமையாளர்களை அல்லது குடியிருப்பவர் அவற்றுக்கு மூன்று மாதங்களில் எவ்வாறு உரிமைகோர முடியும்?
குறித்துரைக்கப்பட்ட மூன்று மாதங்களில் காணிகளுக்கு உரிமை கோரப்பட்டிருக்காவிட்டால், அரசாங்கம் அவற்றை தவறாக சுவீகரித்திருக்கக் கூடும் இது வடக்கின் கரையோரப் பகுதிகளில் இருக்கும் இந்த காணிகள் தொடர்பில் சந்தேகத்துக்கு இடமான ஏதோ காரியம் நடந்துகொண்டிருக்கிறது என்பதை உணர்த்தவில்லையா?
சம்பந்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் குறித்து ஒரு மாதத்துக்கும் மேலாக பொதுவில் பெரும்பாலான தமிழர்களுக்கும் குறிப்பாக வடக்கில் உள்ள மக்களுக்கு எதுவுமே தெரியாது. வர்த்தமானி அறிவித்தலில் பரந்தளவு காணிகள் இலக்கு வைக்கப்பட்டிருந்த போதிலும் கூட, அது குறித்து எந்த அதிர்வலையும் ஏற்படவில்லை.
துணிவாற்றல் கொண்ட ஒரு இளம் பத்திரிகையாளரான என். லோகதயாளன் தான் ஒரு மாதத்துக்கு பிறகு மார்ச் 28 வர்த்தமானி அறிவித்தலை ” கண்டுபிடித்து ” முதலில் அதன் விளைவுகளை புரிந்துகொண்டார். இது தொடர்பாக எல்லோலையும் முந்திக்கொண்டு லோகதயாளன் எழுதிய செய்தி டிஜிட்டல் பத்திரிகையான ” காலைமுரசு ” வில் மே முன்னுரிமை கொடுத்து வெளியிடப்பட்டது வர்த்தமானி பற்றிய செய்தி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதேவேளை, 2025 மே 2 ஆம் திகதி தமிழிலும் வர்த்தமானி வெளியிப்பட்ட விசித்திரத்தையும் காணக்கூடியதாக இருந்தது.
சர்ச்சைக்குரிய வர்த்தமானி அறிவித்தல் பற்றிய செய்தி வடக்கில் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. உள்ளூராட்சி தேர்தல்கள் மே 6 ஆம் திகதி நடைபெறவிருந்தன. தமிழ்ப் பகுதிகளில் பாராளுமன்றத் தேர்தலில் பெற்றதைப் போன்ற பெரிய வெற்றியைப் பெறமுடியும் என்ற மிகுந்த நம்பிக்கையை ஆளும் தேசிய மக்கள் கொண்டிருந்தது. ஆனால், வர்த்தமானி அறிவித்தல் நிலைவரத்தை மாற்றிவிட்டது. இந்த பிரச்சினையில் தேசிய மக்கள் சக்தி குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டது. 5941 ஏக்கர்கள் “நிலத்தை அபகரிக்கும்” இரகசிய நடவடிக்கை ஒன்றில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஈடுபட்டதா?
யாழ்ப்பாண மாவடடத்தின் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அவ்வாறு ஒரு வர்த்தமானியே கிடையாது என்று நிராகரித்ததன் மூலம் விவகாரத்தை மேலும் சிக்கலாக்கினார். வடக்கு,கிழக்கில் உள்ளூராட்சி தேர்தல்களில் ” திசைகாட்டியின் ” மக்கள் ஆதரவு ஒப்பீட்டளவில் குறைந்தமைக்கு வர்த்தமானி அறிவித்தல் பங்களிப்புச் செய்திருக்கக்கூடும் என்பதை முடிவுகள் வெளிக்காட்டின.
பரபரப்பு
வர்த்தமானி அறிவித்தல் தொடர்பான பரபரப்பு தொடருகிறது. தமிழ் , முஸ்லிம் பாராளுமன்ற உறூப்பினர்கள் பலர் அது தொடர்பாக பாராளுமன்றத்தில் பிரச்சினை கிளப்பினார்கள். வர்த்தமானி வாபஸ் பெறப்பட வேணாடும் ஒரு தமிழ்பேசும் ” கருத்தொருமிப்பு ” ஒன்று தோன்றியது. சில தமிழ் அரசியல்வாதிகள் கொழும்பில் உள்ள மேற்கத்தைய நாடுகளின் தூதரங்களுக்கு சென்று இந்த வர்த்தமானி பிரச்சினை தொடர்பாக இலாஜதந்திரிகளுக்கு விளக்கம் அளித்தனர்.
இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவுக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதினார். அடுத்து அவர் தமிழரசு கட்சியின் தற்போதைய தலைவர் சி.வி.கே. சிவஞானத்துடன் கூட்டாக இன்னொரு கடிதத்தையும் அனுப்பினர். வர்த்தமினியில் பட்டியலிடப்பட்டிருக்கும் காணிகளின் சொந்தக்காரர்களுக்கு சட்ட ஆலோசனை முகாம்களையும் சுமந்திரன் நடத்தினார். பல சட்டத்தரணிகளும் சட்ட மாணவர்களும் தாங்களாகவே முன்வந்து அந்த முகாம்களில் தங்கள் சேவைகளை வழங்கினார்கள். ஒத்துழையாமை இயக்கம் ஒன்றை முன்னெடுப்பதற்கும் தமிழரசு கட்சி திட்டமிட்டது.
அதை தொடர்ந்து பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்த பிரச்சினை குறித்து ஆராய்வதற்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவம் செய்யும் சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து கூட்டம் ஒன்றை நடத்தினார். விவசாய, கால்நடை வளர்ப்பு, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்தவும் காணி அமைச்சின் அதிகாராகளும் அந்த கூட்டத்தில் பங்குபற்றினர். வர்த்தமானி வெளியிடப்பட்டதை நியாயப்படுத்திய சில அதிகாரிகள் அதை வாபஸ் பெறக்கூடாது என்று வலியுறுத்தினர். வர்த்தமானி பிரச்சினையை அமைச்சரவை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவது என்று தீர்மானிக்கப்பட்டது.
ஊடக அறிக்கை
மார்ச் 28 வெளியிடப்பட்ட வர்த்தமானியை ( 2430/ 25) வாபஸ்பெறுவதற்கு தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டிருப்பதாகவும் இது விடயத்தில் சட்டமா அதிபரின் அபிப்பிராயத்தை கோரப்படுகிறது என்றும் 2025 மே 25 ஆம் திகதி விவசாய, கால்நடை வளர்ப்பு, காணி மற்றும் நீர்பாசன அமைச்சு ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இன்னொரு நிகழ்வாக, யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த அமைச்சர் லால்காந்த வர்த்தமானி வாபஸ் பெறப்படும் என்றும் அது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் பதிலளித்தார்.
அதனால் வர்த்தமானி ஆபத்து முடிவுக்கு வந்துவிட்டது போன்று தோன்றியது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் சுமந்திரனும் அந்த தீர்மானத்தை வரவேற்றதுடன் அரசாங்கத்துக்கு நன்றியும் தெரிவித்தனர். ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுப்பதற்கான திட்டமும் ஒத்திவைக்கப்பட்டது.
ஆனால், நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தாலும் உருப்படியாக எந்த நடவடிக்கையையும் காணவில்லை. வர்த்தமானி வாபஸ் பெறப்மடவுமில்லை. அது தொடர்பில் அறிவிப்பு வெளிவரவுமில்லை. பிரச்சினை குறித்து தெளிவு பெறும் நோக்கில் இந்த கட்டுரையாளரும் விவசாய, கால்நடை வளர்ப்பு, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். ஆனால், அதற்கு பதில் எதுவும் இல்லை.
மோசமான நில அபகரிப்பு
மீண்டும் மனநிலை கசப்படையத் தொடங்கியது. சந்தேகங்கள் அதிகரித்தன. வர்த்தமானியை வாபஸ் பெறுவது என்ற தீர்மானம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி நேர்மையாக இருக்கிறதா? மூன்று மாதகால அவகாசம் நெருங்கிக்கொண்டு வருவதால் பலரும் குழப்பமடைந்திருக்கிறார்கள். வர்த்தமானியில் பட்டியலிடப்பட்ட காணிகளுக்கு 2025 ஜூன் 28 ஆம் திகதியளவில் உரிமை கோரப்படாத பட்சத்தில், அவை இயல்பாகவே அரசினால் கையக்கப்படுத்தப்பட்டுவிடும்.
இத்தகைய சூழ்நிலைகளின் கீழ், அரசாங்கம் ஒருபுறத்தில் தமிழ் மக்கள் மத்தியில் பதற்றத்தை தணிப்பதற்கு முயற்சித்துக்கொண்டு மறுபுறத்தில் மோசமான நில அபகரிப்பு ஒன்றுக்கு களம் அமைக்கின்றதா ? எவ்வளவுக்கு தாமதிக்கப்படுகிறதோ அந்தளவுக்கு வர்த்தமானியில் பட்டியலிடப்பட்டிருக்கும் காணிகளை தமிழ் மக்கள் இழக்கக்கூடிய ஆபத்து இருக்கிறது.
அடிப்படை உரிமைமீறல் மனு
இந்த பின்புலத்தில் தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் சுமந்திரன் இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கையில் இறங்குவதற்கு தீர்மானித்தார். ஜனாதிபதி சட்டத்தரணியான அவர் 2025 ஜூன் 12 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை ( எஸ்.சி. எவ். ஆர். 112/ 2025 ) தாக்கல் செய்தார். தனது சொந்தத்திலும் பொதுநலனின் அடிப்டையிலும் இந்த மனுவை அவர் தாக்கல் செய்தார்.
மனுவில் முதலாவது பிரதிவாதியாக காணி ஆணையாளர் நாயகமும் இரண்டாவது பிரதிவாதியாக காணி உறுதி நிர்ணய ஆணையாளரும் குறிப்பிடப்பட்டிருக்கின்றனர். விவசாய, கால்நடை வளர்ப்பு, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளரும் அமைச்சரும் முறையே மூன்றாவது,நான்காவது பிரதிவாதிகளாவர்.
வடமாகாண சபைக்கான மாகாணக் காணி நிருவாக திணைக்களத்தின் காணி ஆணையாளர் ஐந்தாம் பிரதிவாதி. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் செயலாளர்கள் ( அரசாங்க அதிபர்கள் ) முறையே ஆறாம், ஏழாம் , எட்டாம் பிரதிவாதிகளாகவும் குடியரசின் சட்டமா அதிபர் பத்தாவது பிரதிவாதியாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மனுவின் முக்கியமான அம்சங்கள்
மனுதாரரான சுமந்திரன் தனது அடிப்படை உரிமை மீறல் மனுவில் குறிப்பிட்டிருக்கும் முக்கியமான அம்சங்கள் வருமாறு ;
2430/25 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் 2025 மார்ச் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட பிறகு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் காணிகளில் வசிப்பவர்களுக்கும் சட்டரீதியான உடைமையாட்சியை கொண்டிருப்பவர்களுக்கும் ஏற்படக்கூடிய பாரதூரமானதும் பரந்தளவிலானதுமான விளைவுகள் மனுதாரருக்க்கு தெரியவந்தது. இந்த வர்த்தமானி நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு,மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த எண்ணற்ற நபர்களும் குடும்பங்களும் ( அவர்களில் பலர் வரலாற்று ரீதியாக இடம்பெர்ந்து இருப்பதுடன் அவர்களின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகளின் விளைவாக முறைப்படியான ஆவணங்களையும் தம்வசம் கொண்டிருக்கவில்லை ) அந்த காணிகளையும் வாழ்வாதாரத்தையும் இழக்கவேண்டிவரும் என்று மனுதாரர் உறுதியாக நம்புகிறார்.
மனுதாரர் ஒரு சட்டத்தரணி என்ற வகையில் சட்டத்துறையை சேர்ந்த ஏனைய உறுப்பினர்களுடன் சேர்ந்து வர்த்தமானி அறிவித்தலினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து விளக்குவதற்காக யாழ்ப்பாணத்திலும் முல்லைத்தீவிலும் 2025 மே 2 ஆம் திகதி இரு சட்ட உதவி முகாம்களை நடத்தினார். இந்த முகாம்களின்போது வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதிகளில் வாழும் பெருவாரியான மககளுக்கு சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அவர்களில் பலர் தங்களது காணிகளை இழக்கும் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கிறார்கள். இந்த சந்திப்புக்களின் ஊடாக மனுதாரருக்கு வர்த்தமானியின் நடைமுறைப்படுத்தலுடன் சம்பந்தப்பட்ட பாரதூரமான சட்ட மற்றும் செயல்முறைக் குறைபாடுகளும் சமத்துவம் மற்றும் உடைமைக்கான உரிமை உட்பட அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகள் மீறப்படக்கூடிய வாய்ப்புக்களும் தெரிய வந்தது.
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தவர் என்பதுடன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியான இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் என்ற வகையில் மனுதாரர் இந்த வர்த்தமானியின் விளைவாக ஏற்படக்கூடிய பாரதூரமான சட்ட, மனிதாபிமான மற்றும் சமூக — அரசியல் விளைவுளை ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவின் கவனத்துக்கு கொண்டுவரும் நோக்கில் 2025 மே 3 ஆம் திகதி அவருக்கு ஒரு கடிதத்தை அனுப்பினார். அந்த கடிதத்தில் மனுதாரர் நீதி, சமத்துவம் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் அடிப்படை உரிமைகளின் பாதுகாப்பு நலன்களின் அடிப்படையில் வர்த்தமானியை வாபஸ் பெறுவதற்கான உடனடியான — பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதியை வலியுறுத்தினார்.
வாபஸுக்கு வலியுறுத்தல்
இரண்டாவது கடிதம் ஒன்றையும் 2025 மே 27 ஆம் திகதி ஜனாதிபதிக்கு அனுப்பியதாக மனுதாரர் மேலும் குறிப்பிட்டிருக்கிறார். இரண்டாவது கடிதத்தில் அவர் வர்த்தமானியின் நடைமுறைப்படுத்தலின் விளைவாக, போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஏற்படக்கூடிய — மட்டுமீறிய தாக்கங்களை விரிவாக விளக்கிக் கூறி வர்த்தமானியை வாபஸ் பெறுமாறு வலியுறுத்தினார். பின்வருவன உட்பட சம்பந்தப்பட்ட பகுதிகளின் மக்களைப் பாதிக்கும் சவாலான கள யதார்த்தங்களையும் சட்ட இடையூறுகளையும் மனுதாரர் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.
1) மோதல், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய காரணங்களால் பல தடவைகள் இடம்பெயர்ந்த வடக்கு , கிழக்கு மாகாணங்களின் மக்கள் உகந்த முறையில் இன்னமும் மீள்குடியமர்த்தப்படவில்லை. அத்துடன் செல்லுபடியாகக் கூடிய காணி உறுதிகளும் வழங்கப்படவில்லை.
2) மோதல் மற்றும் சுனாமி இயற்கை அனர்த்தத்துடன் தொடர்புடைய பாதிப்புக்கள் காரணமாக இடம்பெயர்ந்தவர்களில் பலர் தங்களது காணிகளுக்கான உறுதிகளை இழந்துவிட்ட அதேவேளை, அரசாங்கத்தினால் வீடுகள் வழங்கப்பட்ட ஏனையவர்களுக்கும் ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக, முறைப்படியான உரித்து ஆவணம் வழங்கப்படவில்லை.
3) காணிகளின் உண்மையான உரிமையாளர்கள் இறந்துபோன பல சந்தர்ப்பங்கள் உண்டு. ஆனால் ,சட்டரீதியான வாரிசுகளுக்கு முறைப்படியாக அந்த காணிகள் உரிமை மாற்றம் செய்யப்படவில்லை. அதனால், இந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிபந்தனைகளின் அடிப்படையில் அந்த வாரிசுகள் சடடரீதியாக காணிகளுக்கு உரிமை கோருவதில் நெருக்கடிகளை எதிர்நோக்குகிறார்கள்.
4) பல ஆயிரக்கணக்கான தமிழ் அகதிகள் குறிப்பாக, இந்தியாவில் வாழ்பவர்கள், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட போதிலும், வர்த்தமானியில் குறித்துரைக்கப்பட்ட குறுகிய கால அவகாசத்திற்குள் நாடு திரும்புவதற்கு அல்லது காணிகளுக்கான உரிமை கோரலை சமர்ப்பிப்பதற்கு இயலாதவர்களாக இருக்கிறார்கள்.
5) சுனாமி இயற்கை அனர்த்தத்துக்கு பின்னரான அரசாங்கத்தின் புனர்நிர்மாணத் திட்டத்தின் கீழ் குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டிருப்பதும் தெரிய வந்திருக்கிறது. ஆனால், பல குடும்பங்கள் ஒரு தசாப்தத்துக்கும் மேலாக, தொடர்ச்சியாக அந்த வீடுகளில் வசிக்கின்ற போதிலும், அவற்றுக்கு உறுதிப்பத்திரங்கள் விநியோகிக்கப்படவில்லை. இத்தகைய சந்தர்ப்பங்களில் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தை பிரயோகிக்கும்போது குடியிருப்பாளர்கள் அநியாயமாக தண்டிக்கப்படுவர் என்பதுடன் சட்ட மற்றும் மனிதாபிமானப் பிரச்சினைகளும் மேலும் சிக்கலடையும்.
சம்பந்தப்பட்ட வர்த்தமானி தொடர்பில் பொதுவெளியில் தவறான முறையில் தகவல்கள் பரிமாறப்பட்டிருப்பதாக கூறும் ஊடக அறிக்கை ஒன்று விவசாய, கால்நடை வளர்ப்பு, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சினால் வெளியிடப்பட்டது குறித்தும் தனக்கு தெரிய வந்ததாக மனுதாரர் மேலும் கூறியிருக்கிறார்.
வர்த்தமானியை வாபஸ் பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் இது விடயத்தில் பத்தாவது பிரதிவாதியிடமிருந்து அபிப்பிராயம் கோரப்பட்டிருப்பதாகவும் அந்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருக்கிறது. வர்த்தமானியை வாபஸ் பெறுவதற்கு வசதியாக அலோசனையை வழங்குவதுடன் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் சட்டமா அதிபருக்கு வேண்டுகோள் விடுத்து அமைச்சு செயலாளரினால் 2025 மே 26 ஆம் திகதி அனுப்பப்பட்ட கடிதத்தின் ( இல. 8/2/4/1 ) பிரதி ஒன்றும் ஊடக அறிக்கையுடன் இணைக்கப்பட்டிருந்தது.
நியாயபூர்வமான எதிர்பார்ப்பு
மேற்கூறப்பட்ட ஊடக அறிக்கையினதும் 2025 மே 26 ஆம் திகதி அமைச்சின் செயலாளர் சட்டமா அதிபருக்கு அனுப்பிய கடிதத்தினதும் அடிப்படையில் நோக்கும்போது மார்ச் 28 வெளியிடப்பட்ட வர்த்தமானி வாபஸ் பெறப்பட வேண்டிய தேவை உட்கிடையாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்று கூறும் மனுதாரர் வர்த்தமானியை வாபஸ் பெறப்படுவதற்கு அவசியமான நடவடிக்கைகள் தாமதமின்றி எடுக்கப்பட வேண்டும் என்ற தனதும் பாதிக்கப்பட்ட சமூகங்களினதும் எதிர்பார்ப்பு நியாயப்படுத்தப்படுகிறது என்று குறிப்பிடுகிறார். ஊடக அறிக்கையும் உத்தியோகபூர்வ கடிதமும் வர்த்தமானியின் விளைவான சட்டவிரோதமானதும் தன்னிச்சையானதுமான விளைவுகளை சீர்செய்வதற்கு நிருவாகச் செயன்முறை முன்னெடுக்கப்படுகிறது என்ற நியாயபூர்வமான நம்பிக்கை ஏற்படுவதற்கு வழிவகுத்தது.
அதன் பிரகாரம், மனுதாரர் நல்லெண்ண அடிப்படையில் போராட்டத்தை மேலும் ஒத்திவைத்ததுடன் வர்த்தமானி முறைப்படியாக வாபஸ் பெறப்படும் என்று எதிர்பார்த்தார். ஆனால், இதுவரை அது நடைபெறவில்லை. ஊடக அறிக்கையிலும் அமைச்சின் செயலாளரின் கடிதத்திலும் குறிப்பிடப்பட்டதன் பிரகாரம் செயற்படத் தவறியிருப்பது அரசியலமைப்பின் 12(1) பிரிவின் கீழ் நேர்மையாக நடத்தப்படுவதற்கும் சமத்துவமான முறையில் பாதுகாப்பைப் பெறுவதற்கும் மனுதாரருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இருக்கின்ற உரிமைகளை மீறுவதற்கு ஒப்பானதாகும். 1931 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் மூன்று மாதகால அவகாசம் 2025 ஜூன் 28 காலாவதியாகப் போகிறது.
அடிப்படை உரிமைகள் மீறல்
வர்த்தமானி தொடர்ந்தும் செயல்முறையில் இருந்து நடைமுறைப்படுத்தப்படுமானால் அது அரசியலமைப்பின் 12(1), 12(2) மற்றும் 12(1) (எச் ) பிரிவுகளின் கீழ் தனக்கு உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகளை மீறுவதாக அமையும். மோதல் மற்றும் இயற்கை அனர்த்தங்களின் விளைவாக மக்கள் இடம்பெயர்ந்தார்கள் என்பதும் சட்டபூர்வமான ஆவணங்களை இழந்தார்கள் என்பதும் உறுதிப் பத்திரங்களை
வழங்குவதில் தாமதங்கள் ஏற்பட்டது என்பதும் நன்கு பதிவு செய்யப்பட்டிருப்பதையும் பொருட்படுத்தாமல் நடைமுறைச் சாத்தியமற்ற ஒரு குறுகிய காலப்பகுதிக்குள் சம்பந்தப்பட்ட காணிகளுக்கு உரிமை கோரப்பட வேண்டும் என்று கேட்கப்பட்டிருக்கிறது. அந்த கால அவகாசத்திற்குள் உரிமை கோரப்படாத பட்சத்தில் பெருமளவு நிலப்பரப்பு அரசுடைமையாகும் என்று வர்த்தமானி கூறுகிறது. இது நாட்டின் ஏனைய பிராந்தியங்களுடன் ஒப்பிடும்போது வடக்கில் உள்ளவர்கள் சமத்துவமற்ற முறையில் எதேச்சையாக நடத்தப்படுவதற்கும் அதன் மூலமாக சட்டத்தின் கீழ் சமத்துவமான பாதுகாப்பை பெறுவதற்கு அவர்களுக்கு இருக்கும் உரிமை நிராகரிக்கப்படுவதற்கும் வழிவகுக்கும்.
தேசவழமைச் சட்டம்
வடமாகாணத்தில் வாழ்கின்ற தமிழர்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு காணிகளுடனான தொடர்புகளை தீர்மானிப்பதில் தேசவழமைச் சட்டத்தைப் பிரயோகிப்பது முக்கியமான ஒரு அம்சம் என்று மனுதாரர் மேலும் கூறுகிறார். தேசவழமைச் சட்டம் பல நூற்றாண்டுகளாக தலைமுறை தலைமுறையாக இலங்கை தமிழர்கள் அனுபவித்துவருகின்ற ஒரு தனியான (Personal Law ) சட்டமாகும். வர்த்தமானியில் பட்டியலிடப்பட்டிருக்க்கும் காணிகள் அதன் கீழேயே வருகின்றன.
அதனால் இந்த வர்த்தமானி நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் வடமாகாணத்தில் உள்ள தமிழர்களுக்கு காணிகள் தொடர்பில் இருக்கும் உரிமை தகாத முறையில் மறுக்கப்படும் என்பதுடன் தேசவழமைச் சட்டத்தின் கீழ் காணிகளுக்கான உரித்தை கோருவதற்கான ஆற்றல் எதிர்காலத்தில் கட்டுப்படுத்தப்படக்கூடிய ஆபத்து இருப்பதாகவும் இது அரசியலமைப்பின் 12(1), 12(2) பிரிவுகளின் கீழ் அந்த மாகாணத்தில் வாழும் தமிழர்களுக்கு உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகளை மீறுவதாக அமையும் என்றும் மனுதாரர் கூறுகிறார்.
மனுவின் ஊடாக கோரப்பட்டிருப்பதன் பிரகாரம் நீதிமன்றம் இடைக்கால உத்தரவொன்றை பிறப்பிக்காத பட்சத்தில் தனக்கு பாரதூரமானதும் சீர்படுத்த முடியாததுமான இழப்பும் கெடுதியும் ஏற்படும் என்று மனுதாரர் கூறுகிறார். அதனால், அரசியலமைப்பின் 17 வது பிரிவுடன் சேர்த்து 126 வது பிரிவின் கீழ் உயர்நீதிமன்றத்துக்கு இருக்கும் நியாயாதிக்கத்தை மனுதார் நாடுகிறார். மேற்கூறப்பட்ட வர்த்தமானியை செய்ல்முறைக்கு வருவதையும் நடைமுறைப்படுத்தப்படுவதையும் இடைநிறுத்தும் வகையில் இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை ( மனுவை விசாரணை செய்து நீதிமன்றம் ஒரு தீர்மானத்துக்கு வரும்வரை ) பிற்பிக்குமாறு மனுதாரர் கோரிநிற்கிறார்.
ஆங்கில மூலம்: டி. பி. எஸ். ஜெயராஜ் (Daily Mirror)
தமிழில்: வீரகத்தி தனபாலசிங்கம்
நன்றி: வீரகேசரி
************************************************************************************************

