யாழ்ப்பாண பத்திரிகையாளர்களில் முதன்மை வாய்ந்தவராக விளங்கிய வீரகேசரியின் ” செய்தி மன்னன்” செல்லத்துரை

டி.பி.எஸ். ஜெயராஜ்

இலங்கை கடந்த காலத்தில் மிகவும் திறமைவாய்ந்த பல பத்திரிகையாளர்களை தோற்றுவித்திருக்கிறது. சிங்கள, தமிழ் அல்லது ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதிய இந்த மேன்மையான பத்திரிகையாளர்கள் பல வருடங்களாக பரந்தளவு வாசகர்களை கவர்ந்ததுடன் தங்களது முத்திரையைப் பதித்துச் சென்றிருக்கிறார்கள். சிலர் இரு மொழிகளிலும் பணியாற்றினார்கள். துரதிர்ஷ்டவசமாக, இவர்களில் பெரும்பாலானவர்கள் தாங்கள் எழுதிய பத்திரிகைகள் அல்லது சஞ்சிகைகளின் மொழியைத் தெரிநனதவர்களினால் மாத்திரமே அறியப்பட்டிருந்தார்கள். ஒரு பிரிவு வாசகர்களின் வீடுகளில் அன்றாடம் பேசப்படுகின்ற பெயர்களாக இருந்த போதிலும், இந்த பத்திரிகையாளர்கள் மற்றைய வாசகர்களினால் உண்மையில் அறியப்படாதவர்களாகவே இருந்தார்கள்.

இத்தகைய பின்புலத்தில் இந்த கட்டுரை துடிப்பாக பணியாற்றிய காலத்தில் ஒரு ஜாம்பவானாக தமிழ்ப் பத்திரிகை உலகில் கோலோச்சிய ஒரு பத்திரிகையாளர் மீது கவனத்தை செலுத்துகிறது. 36 வருடங்களாக வீரகேசரி தமிழ்த் தினசரியின் யாழ்ப்பாண நிருபராக பணியாற்றிய சின்னத்தம்பி செல்லத்துரையின் பிறப்பு நூற்றாண்டு 2025 பெப்ரவரி 26 ஆம் திகதி வந்துபோனது. ஒரு பிராந்திய நிருபராக இருந்தபோதிலும், வீரகேசரி ஊடாக அவர் தனக்கென்று தனித்துவமான பெயரை ஏற்படுத்திக்கொண்டார். யாழ்ப்பாணத்தில் இருந்து வீரகேசரிக்கு அவர் அனுப்பிய செய்திகளின் அளவும் தரமும் தமிழ்ப் பத்திரிகை உரகில் அவரை தமிழ்ப் பத்திரிகை உலகில் ஒரு ” காவிய நாயகனாக ” விளங்கவைத்தன சின்னத்தம்பி செல்லத்துரை அவரது காலத்தில் யாழ்ப்பாண பத்திரிகையாளர்களில் முதன்மையானவாராக திகழ்ந்தார்.

95 வருடங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட வீரகேசரி பத்திரிகை 2030 ஆம் ஆண்டில் அதன் நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடப் போகிறது. புகழ்பெற்ற வீரகேசரி இலங்கையில் முன்னணி தமிழ்ப் பத்திரிகையாக விளங்குகிறது. அந்த எழுச்ச்சியைச் சாத்தியமாக்கியவர்கள் அதன் கடந்தகால் ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள், நிருபர்கள், கட்டுரையாளர்கள் மற்றும் பிராந்தியச் செய்தியாளர்களுமேயாவர். வீரகேசரியின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்தவர்கள் மத்தியில் செல்லத்துரை மிகவும் முக்கியமானவர். அவரது தொழில்சார் வாழ்க்கை வீரகேசரியுடன் விடுவிக்க முடியாத வகையில் பின்னிப் பிணைந்ததாகும். அவர் ” வீரகேசரி செல்லத்துரை ” என்றே பரவலாக அழைக்கப்பட்டார்.

நாவற்காடு அச்சுவேலி

யாழ்ப்பாண குடாநாட்டின் அச்சுவேலி நாவற்காடு கிராமத்தில் செல்லத்துரை 1925 பெப்ரவரி 26 ஆம் திகதி பிறந்தார். குடும்பத்தில் ஏழு பிள்ளைகளில் அவர் மூத்தவர். தனது ஆரம்பக்கல்வியை அச்சுவேலி சரஸ்வதி வித்தியாலயத்திலும் இரண்டாம் நிலைக் கல்வியை அச்சுவேலி கிறிஸ்ரியன் கல்லூரியிலும் ( தற்போது அச்சுவேலி மகாவித்தியாலயம்) பெற்ற செல்லத்துரை அந்த கல்லூரியில் சிரேஷ்ட பாடசாலை தராதரத்தை (எஸ்.எஸ்.சி) பூர்த்திசெய்தார். குடும்பத்தின் நிதி நிலைமை காரணமாக அவரால் மேற்கொண்டு கல்வியைத் தொடர முடியவில்லை. குடும்பத்தின் சொத்தாக சில நிலங்கள் இருந்தன. வேறு நிலங்களை குத்தகைக்கும் எடுத்துக் கொண்டார்கள். தனது பதினகவைகளின் பிற்பகுதியில் செல்லத்துரை ஒரு விவசாயியானார்.

ஈழகேசரி

அவரது முறைப்படியான பாடசாலைக் கல்வி முடிவுக்கு வந்தபோதிலும், செல்லத்துரை வாழ்நாள் பூராவும் ஒரு மாணவனாகவே விளங்கினார். பெரும் வேட்கையுடைய ஒரு வாசகரான அவர் தமிழில் நிறையவே வாசித்தார். மேலும், எழுத்துத் துறையில் அவருக்கு இயல்பான ஒரு ஆற்றல் இருந்தது. அந்த நாட்களில் யாழ்ப்பாணத்தில் சுன்னாகத்தில் இருந்து வெளியான ‘ஈழகேசரி’ பிரபலமான தமிழ் வாரப்பத்திரிகையாக விளக்கியது. அதன் ஆசிரியராக இருந்த சிவபாதசுந்தரம் பிறகு லண்டனுக்குச் சென்று பி.பி.சி.வானொலியில் தமிழ்ச் சேவையை ஆரம்பித்தார். நன்கு அறியப்படட பழம்பெரும் தமிழ் இலக்கிய ஆளுமை கனக. செந்திநாதன் இளம் செல்லத்துரையை ஆசிரியர் சிவபாதசுந்தரத்துக்கு அறிமுகப்படுத்தினார்.

ஈழகேசரியின் ஒரு சுயாதீனமான பத்திரிகையாளராக செல்லத்துரை பணியாற்றத் தொடங்கினார். பல நிகழ்வுகளுக்கு சென்று செய்தி சேகரித்து அந்த வாரப்பத்திரிகையில் எழுதினார். செல்லத்துரையின் எழுத்துக்களினால் கவரப்பட்ட ஆசிரியர் பலரை நேர்காணல் செய்வதற்கு அவரை அனுப்பியதுடன் முக்கியமான பிரமுகர்களின் வாழ்க்கைக் குறிப்புகளை எழுதவும் வைத்தார். ஈழகேசரியின் மகளிர் பகுதியிலும் கூட செல்லத்துரை எழுதினார். இலக்கியக் கட்டுரைகளை ‘ இளவரசு ‘ என்ற புனைபெயரிலும் மகளிர் பக்கத்துக்கு ‘ செல்லம் ‘ என்ற புனைபெயரிலும் அவர் எழுதினார்.

அச்சுவேலி நிருபர்

இந்திய தமிழ் வர்த்தக பிரமுகரான சுப்பிரமணியம் செட்டியார் 1930 ஆம் ஆண்டில் கொழும்பில் வீரகேசரி தமிழ்த் தினசரியை வெளியிட ஆரம்பித்தார். வீரகேசரி பெரும்பாலும் கொழும்பிலும் மலையகத்திலும் வாழ்ந்த இந்திய வம்சாவளி தமிழர்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தியே வெளிவந்தது. இருந்தது. இரண்டாவது உலகமகா யுத்தம் முடிவடைந்த பிறகு இலங்கையின் வடக்கு, கிழக்கிற்கும் வீரகேசரி விரிவாக்கமடையத் தொடங்கியது. 1946 ஆம் ஆண்டில் செல்லத்துரை அதன் அச்சுவேலி நிருபராக நியமிக்கப்பட்டார். ‘ அச்சுவேலி செல்லத்துரை ‘ என்று அவர் பிரபல்யமானார்.

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பாகங்களுக்கும் பல நிருபர்களை வீரகேசரி நியமித்தபோதிலும், அவர்களில் எல்லோருமே செல்லத்துரையை போன்று செயற்திறன் மிக்கவர்களாகவோ அல்லது கடும் உழைப்பாளிகளாகவோ இருக்கவில்லை. இளம் செல்லத்துரை செய்திகளுக்காகவும் செய்திக் கட்டுரைகளுக்காகவும் தகவல்களை பெறுவதற்கு யாழ்ப்பாணக் குடாநாட்டின் சகல பாகங்களுக்கும் சைக்கிளில் செல்வார். அந்த செய்திகள் அச்சுவேலி நிருபர் என்ற பெயரின் கீழ் வீரகேசரியில் வெளியாகின.

யாழ்ப்பாண நிருபர்

யாழ்ப்பாணம் ஈச்சமோட்டையைச் சேர்ந்த ஒரு கத்தோலிக்க பாடசாலை ஆசிரியர் வீரகேசரியின் யாழ்நகர் நிருபராக இருந்தார். ஆனால், அவர் துடிப்பாக செயற்படவில்லை. அதனால் செல்லத்துரை அச்சுவேலி நிருபராக இருந்துகொண்டே யாழ்ப்பாண நிருபராகவும் பணியாற்றவேண்டி வந்தது. 1953 ஆம் ஆண்டு அவர் வீரகேசரியின் யாழ்ப்பாண நிருபராக உத்தியோகபூரவமாக நியமிக்கப்பட்டார். 1982 ஆம் ஆண்டில் மரணமடையும் வரை அவர் யாழ்ப்பாண நிருபராக பணியாற்றினார்.

அதேவேளை, சுப்பிரமணியம் செட்டியார் இந்தியாவுக்கு திரும்பிச் சென்ற பிறகு கொழும்பில் இருந்த இந்திய தமிழ் வர்த்தகர்கள் குழு ஒன்று வீரகேசரியை வாங்கியது. யாழ்ப்பாணத்தில் பத்திரிகை நன்றாக விற்பனையாக வேண்டும் என்று அவர்கள் விருப்பினார்கள். ஆனால், ஒரு பிரச்சினை இருந்தது. கொழும்பில் வீரகேசரி ஆசிரிய பீடத்தில் பணியாற்றியவர்கள் பெரும்பாலும் இந்திய தமிழர்களே. அவர்கள் வெளியிட்ட செய்திகள் பிரதானமாக இந்திய விவகாரங்கள் பற்றியவையாகவும் இலங்கையில் வாழும் இந்திய தமிழர்களைப் பற்றயவையாகவமே இருந்தன. அது மாத்திரமல்ல, செய்திகளினதும் கட்டுரைகளினதும் சொற்தொகுதியும் இலக்கணக் கட்டமைப்பும் இந்தியாவில் இருந்து வெளிவந்த தமிழ்ப் பத்திரிகைகளை ஒத்தவையாகவே இருந்தன.

அதனால், அன்றைய யாழ்ப்பாண வாசகரை வீரகேசரி கவரவில்லை. அது ஒரு ‘ இந்தியப் ‘ பத்திரிகையாகவே நோக்கப்பட்டது. படிப்படியாக உள்ளூர் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அது உள்ளடக்கத்தையும் எழுத்து நடையையும் மாறியது யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் அது கூடுதலான இடத்தை வழங்கத் தொடங்கியது. யாழ்ப்பாணத்தில் வீரகேசரியை பிரபல்யப்படுத்துவதில் அதன் யாழ்ப்பாண நிருபரான செல்லத்துரை மிகப்பெரிய பாத்திரத்தை வகித்தார். யாழ்ப்பாணத்தில் இருந்து செய்தி அறிக்கைகளை அனுப்புவதற்கு அவர் ஓய்வின்றி உழைத்தார். அவர் முன்னெடுத்த முயற்சிகளின் விளைவாக யாழ்ப்பாண வாசகர்கள் மத்தியில் பரநனதளவில் வாசிக்கப்படும் பத்திரிகையாக வீரகேசரி மாறியது.

வீரகேசரிக்கு அந்த நாட்களில் யாழ்ப்பாணத்தில் அலுவலகம் ஒன்று இருக்கவில்லை. யாழ்நகரில் ஒரு முடிதிருத்தும் நிலையத்தின் பின்புறத்தில் இருந்துகொண்டே செல்லத்துரை தனது செய்திகளை எழுதுவார். அந்த நிலையத்தின் உரிமையாளர் வேறு யாருமல்ல, ‘மல்லிகை ‘ மாதாந்த இலக்கிய சஞ்சிகையான ‘ மல்லிகை’ யின் ஆசிரியரான பிரபலமான இலக்கியவாதி டொமினிக் ஜீவாவே. செல்லத்துரையின் செயற்பாடுகளின் விளைவான உந்துதல் காரணமாக ஜீவா ‘ செய்தி வேட்டை ‘ என்ற சிறுகதையையும் எழுதினார்.

சில காலத்துக்கு பிறகு யாழ்நகலில் மின்சார நிலைய வீதியில் ஒரு கடையின் பகுதியை வீரகேசரி அதன் அலுவலகத்துக்காக வாடகைக்கு எடுத்தது. செல்லத்தரைக்கு அங்கு ஒரு மேசையும் கதிரையும் கிடைத்தது. நாளடைவில் வீரகேசரியை நிருவகித்த எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பேய்ஸ் சிலோன் லிமிட்டெட் யாழ்நகர் புகையிரத நிலைய வீதியில் பெரியதொரு அலுவலகத்தை அமைத்துக்கொண்டது. இன்று வரை அதுவே வீரகேசரியின் யாழ்ப்பாண அலவலகமாக இயங்குகிறது.

செய்திகளின் பிரதிகளை அனுப்புதல்

அந்த நாட்களில் யாழ்ப்பாணத்தில் இருந்து செய்திகளின் பிரதிகளை அனுப்புவது என்பது பெரிய சிரமமான பணியாகும். செலூலர் தொலைபேசிகள் கிடையாது. கொழும்புக்கான நீண்டதூர அழைப்புகளுக்கு தொலைபேசி பரிவர்த்தனை நிலையத்தின் ஊடாக அழைப்புகளுக்கு பதிவு செய்யவேண்டியிருந்தது. மிகவும் பிந்திய அல்லது மிகவும் முக்கியமான செய்திகளே தொலைபேசி மூலம் கொடுக்கப்பட்டன. பெரும்பாலான செய்திகளும் கட்டுரைகளும் தபால் மூலமே அனுப்பப்பட்டன. புகைப்படங்கள் யாழ்ப்பாண ஸ்ரூடியோக்களில் பிரதியெடுக்கப்பட்டு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

ஆனால், செல்லத்துரை வழமைக்கு மாறான சில நடைமுறைகளில் நாட்டம் காட்டி புதுமுறைகளை கையாளுவதில் கெடடிக்காரர். தந்தி மூலம் செய்திகளை அனுப்புவது ஒரு வழிமுறை. தினமும் இரவு தபால் ரயிலில் பார்சலாக செய்திப் பிரதிகளை அனுப்பவது இன்னொரு வழமுறை. கொழும்பில் வீரகேசரி அலுவலக உதவியாளர் ஒருவர் தினமும் காலையில் கோட்டை புகையிரத நியைத்துக்கு சென்று செய்திப் பார்சல்களை ஆசிரிய பீடத்துக்கு எடுத்துவருவார். பின்னரான வருடங்களில் செல்லத்துரை தனது செய்திப் பார்சல்களை யாழ்ப்பாணத்தில் இருந்து ஏயார் சிலோன் மற்றும் உபாலி ஏயார்லைன்ஸ் விமானங்கள் மூலமும் கூட அனுப்பிவைப்பார். பிலிம் சுருள்களை ஸ்ரூடியோ ஒன்றுக்கு எடுத்துச் சென்று கச்சிதமாக வெட்டி கொழும்புக்கு அனுப்பவைப்பது செல்லத்துரையின் இன்னொரு புதுமுறை. வெட்டி அனுப்பப்பட்ட பிலிம்கள் கொழும்பில் பிரதியெடுக்கப்படும்.

இவ்வாறாக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு செய்திகளை விரைவாக செல்லத்துரையினால் அனுப்பிவைக்கக்கூடியதாக இருந்தது. இந்த வழிமுறைகளை ஏனைய பிராந்திய நிருபர்களும் சாத்தியமான வேளைகளில் பின்பற்றினார்கள். ஆனால், யாழ்ப்பாணத்தில் வீரகேசரியை உச்சத்தில் வைத்திருந்தது அதன் யாழ்ப்பாண நிருபரினால் அனுப்பிவைக்கப்பட்ட செய்திகளின் எண்ணிக்கையும் தரமுமே என்பதே உண்மையாகும். அந்த செய்திகள் திறமையாக எழுதப்பட்டதுடன் நம்பகத்தன்மை வாய்ந்தவையாகவும் இருந்தன.வீரகேசரியின் யாழ்ப்பாண நிருபரினால் அனுப்பப்பட்ட செய்திகளை வாசகர்கள் உறுதியாக நம்பினார்கள்.

பின்னரான வருடங்களில் போட்டிச் செய்திப்பத்திரிகை ஒன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு ஆன்மீகத் தலைவரான குன்றக்குடி அடிகளாரின் யாழ்ப்பாண விஜயம் பற்றிய செல்லத்துரையின் செய்தி அறிக்கை தொடர்பில் அவதூறு பரப்பியது. அந்த பத்திரிகை செல்லத்துரையின் நம்பகத்தன்மையை மலினப்படுத்தி அதன் பத்திகளில் நீண்ட நாட்களாக பிரசாரம் செய்து அவரது பெயருக்கு இழுக்கை ஏற்படுத்தியது. ஆனால், அவர் துவண்டு் போகவில்லைா; தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்றார். இறுதியில் அந்த செல்லத்துரை விரோதப் பிரசாரம் கைவிடப்பட்டது.

செல்லையா குமாரசூரியர்

இன்னொரு கடுமையான பிரச்சினை பிரதமச் சிறிமா பண்டாரநாயக்கவின் ஐக்கிய முன்னணி அரசாங்க காலத்தில் இடம்பெற்றது. அந்த அமைச்சரவையில் இருந்த ஒரேயொரு தமிழ் அமைச்சர் செல்லையா குமாரசூரியர். தபால், தொரைத்தொடர்பு அமைச்சராக அவர் பதவி வகித்தார். கர்வத்தனம் கொண்ட குமாரசூரியர் அடிவருடிகள் கும்பல் ஒன்றின் ஊக்குவிப்புடன் தமிழ்ப்பகுதிகளில் ஒரு குட்டிச் சர்வாதிகாரி போன்று நடந்து கொண்டார்.

சுதந்திரமாகச் செயற்பட்ட பத்திரிகையாளரான செல்லத்துரை குமாரசூரியரின் கோபத்துக்கு ஆளாக வேண்டியேற்பட்டது. அமைச்சரின் விருப்புக்கேற்ற முறையில் அவர் செயற்படாததே அதற்கு காரணமாகும். ஆத்திரமடைந்த குமாரசூரியர் செல்லத்துரையை வேலை நீக்கம் செய்யுமாறு வீரகேசரி முகாமைத்துவத்துக்கு நெருக்குதலைக் கொடுத்தார். ஆனால், அதற்கு முகாமைத்துவம் விட்டுக் கொடுக்கவில்லை. அதையடுத்து வீரகேசரிக்கு அரசாங்க விளம்பரங்கள் கிடைக்காமல் செய்வதற்கு குமாரசூரியர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தினார்.” செல்லத்துரையை நீங்குங்கள் அல்லது விளம்பரம் மூலமான வருமானம் இல்லாமல் போகும்” என்பதே மறைமுகமான அச்சுறுத்தல். வீரகேசரி ஆசிரியரும் அதன் முகாமைத்துவமும் தங்களது யாழ்ப்பாண நிருபரின் பக்கமே உறுதியாக நின்றனர். அமைச்சரின் கோரிக்கைக்கு அடிபணிந்து செல்லத்துரையை பதவி நீக்காமல் அரசாங்க விளம்பரம் மூலமான வருமானத்தை முகாமைத்துவம் இழந்தது.

சுயாதீன பத்திரிகையாளர்

இங்கு ஒரு விசித்திரம் என்னவென்றால் வீரகேசரி முகாமைத்துவம் பதவி நீக்குவதற்கு செல்லத்துரை ஒன்றும் அலவலக நிருபர் அல்ல. மிக நீண்டகாலமாக வீரகேசரியில் பணியாற்றிய போதிலும், செல்லத்துரை ஒரு சுயாதீனப் பத்திரிகையாளராகவே ( Freelancer) தொடர்ந்தார். அவரை வீரகேசரி அலுவலக நிருபராக்க விரும்பியபோதிலும், செல்லத்துரை அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அலுவலகத்தினால் கட்டுப்படுத்தப்படாமல் சுயாதீனமான பத்திரிகையாளராக இருக்க அவர் விரும்பியது அதற்கு ஒரு காரணம். வியப்புக்குரிய வகையில் பெருமளவு செய்திகளையும் கட்டுரைகளையும் அனுப்பியதனால் ஒரு அலுவலக நிருபர் பெற்ற சம்பளத்தையும் விட ஒவ்வொரு மாதமும் கூடுதலான வருமானத்தை செல்லத்துரை பெற்றுவந்தது அடுத்த காரணமாகும். அதுவே முக்கிய காரணமும் கூட. அவர் அனுப்பிய செய்திகளின் நீளம் அங்குலத்தில் அளவிடப்பட்டு கொடுப்பனவு செய்யப்பட்ட போதிலும் , பெரும்பாலான அலுவலகச் சகாக்கள் பெற்ற சம்பளத்தையும் விட இரண்டு மடங்கிற்கும் கூடுதலான வருமானத்தை அவர் பெற்றுவந்தார்.

பத்திரிகையின் அலவலக ஊழியராக செலலத்துரை இல்லாவிட்டாலும், வீரகேசரியுடன் இருந்த தசாப்தங்களில் அவரே யாழ்ப்பாணத்தில் அதன் ஆதாரம். அவரின் செய்திப் பிரதிகள் தவறு எதுவும் இல்லாமல் கச்சிதமானவையாக இருந்த காரணத்தால் ஆசிரிய பீடத்தில் உதவி ஆசிரியர்களினால் திருத்தம் செய்ய வேண்டிய தேவை இருக்கவில்லை. அவர் பத்திரிகையாளர் பின்பற்றுவதற்கான ஒரு வகைமாதிரி. ஒரு முன்னுதாரணம்.

ஆசிரியரின் ஆலோசனை

வீரகேசரியில் ஒரு அலுவலக நிருபராக 1977 ஆம் ஆண்டில் இணைந்து பத்திரிகைத்துறையில் பிரவேசித்தபோது அப்போது பிரதம ஆசிரியராக இருந்த கே. சிவப்பிரகாசம் செல்லத்துரையின் செய்திப் பிரதிகளை கவனமாக வாசிக்குமாறும் செய்திகளை கட்டமைத்து எழுதுவதில் அவரின் வழிமுறையைப் பின்பற்றுமாறும் எனக்கு ஆலோசனை கூறினார். அவரது ஆலோசனையை கடமையுணர்ச்சியுடன் பின்பற்றி அந்த வழியில் பத்திரிகைக் கலையின் அடிப்படைக் கூறுகளைக் கற்றுக்கொண்டேன். பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் அதை நான் செல்லத்துரையிடம் கூறியபோது பண்பட்ட செய்தியாளரான அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.

வீரகேசரியில் வெளியான செய்தி ஒன்று குறித்து பேசுவதற்காக முன்னாள் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ். வித்தியானந்தன் ஆசிரியர் சிவப்பிரகாசத்துடன் ஒரு தடவை தெலைைபேசியில் தொடர்புகொண்டார். அந்த தொலைபேசி அழைப்பு வந்த வேளையில் ஆசிரியருக்கு முன்னால் நான் அமர்ந்திருந்தேன். அந்த செய்தி சரியானதா என்று சிவப்பிரகாசத்திடம் பேராசிரியர் வினவினார். அதற்கு பதிலளித்த சிவப்பிரகாசம் சம்பந்தப்ட்ட செய்தி யாழ்ப்பாண நிருபர் செல்லத்துரையினால் எழுதப்பட்டது என்றும் அதனால் தவறாக இருக்கவே முடியாது என்று துணை வேந்தருக்கு கூறிவைத்தார். அந்த மாதிரியாக செல்லத்துரை மீதான நம்பிக்கை இருந்தது.

ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போன்று செல்லத்துரை வீரகேசரி மீது நம்புதற்கரிய விசுவாசத்தை கொண்டிருந்தார். வீரகேசரியின் யாழ்ப்பாண நிருபராக வருவதற்கு முன்னதாக அவர் ஈழகேசரி மற்றும் சுதந்திரன் போன்ற பத்திரிகைகளுக்கு எழுதிக்கொண்டிருந்தார். ஆனால், வீரகேசரியுடனான பிணைப்பு நிலைபேறானதும் மற்றைய பத்திரிகைகளுக்கு எழுதுவதை நிறுத்திக் கொண்டார். வீரகேசரிக்காக எழுதுவது என்பது அவரது வாழ்வில் கட்டுப்படுத்த முடியாத ஒரு பற்றார்வமாக மாறிவிட்டது. கொழுத்த சம்பளம் தருவதாகக் கூறி மற்றைய பத்திரிகைகள் தங்களுடன் இணைந்து கொள்ளுமாறு கேட்டபோதிலும், செல்லத்துரை அவற்றை அடியோடு நிராகரித்து வீரகேசரிக்கே தொடர்ந்து விசுவாசமாக பணியாற்றினார்.

“வீரகேசரி ” செல்லத்துரை

நாளடைவில் செல்லத்துரை ” வீரகேசரி” செல்லத்துரை என்று பிரபல்யமானார். நாவற்காடு கிராமத்தில் புதிதாக கட்டிய தனது வீட்டுக்கு அவர் ” வீரகேசரி ” என்றே பெயர் சூட்டினார். வீட்டின் முன்விறாந்தை மேல் சுவருக்கும் கூரைக்கும் இடைப்பட்ட பகுதியில் வீரகேசரி என்று பொறித்தார். செல்லத்துரையின் மரணத்துக்கு பிறகு சில வருடங்கள் கழித்து அந்த வீடு பெரிதாக்கப்பட்டு மீள நிர்மாணிக்கப்பட்டது. ஆனால், வீரகேசரி என்று பெயர் பொறிக்கப்பட்ட பகுதியை புனரமைப்புச் செய்யாமல் அந்த எழுத்துக்கள் அப்படியே இருப்பதை குடும்பத்தினர் உறுதிசெய்தனர்.

செல்லத்துரை யாழ்ப்பாணத்தின் ஆதிக்க சாதிகளைச் சேர்ந்தவரல்ல என்பது அவரைப் பற்றிய விடயங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று. அவ்வாறிருந்த போதிலும், ” சாதி உணர்வு ” கொண்ட யாழ்ப்பாணத்தில் ஒரு முன்னணிப் பத்திரிகையாளராக திகழ அவரால் இயலுமாக இருந்தது. யாழ்பாணத்தின் சகல அரசியல் தலைவர்களினாலும் செல்லத்துரை பரந்தளவில் மதிக்கப்பட்டார். பல அரசியல்வாதிகள் அவரிடம் அரசியல் விவகாரங்களில் ஆலோசனையையும் அபிப்பிராயங்களையும் கேட்டார்கள்.

அரசியல் செய்தி அறிக்கைகளைப் பொறுத்தவரை, செல்லத்துரை விகிதாசார அடிப்படையில் ஒரு விதிமுறையை வகுத்துக்கொண்டார். அதாவது யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் இருந்த அரசியல் பலத்துக்கு ஏற்ற விகிதாசாரத்தில் அவற்றுக்கு செய்திகளில் முக்கியத்துலம் கொடுத்தார்.இலங்கை தமிழரசு கட்சியும் பிறகு தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியும் யாழ்ப்பாணத்தில் உயர்ந்தளவு செல்வாக்குடைய அரசியல் கட்சிகளாக விளங்கியதால் அவற்றுக்கு செய்திகளில் பெரும் முக்கியத்துத்தை செல்லத்துரை கொடுத்தார். ஆனால், எந்த ஒரு கட்சியையும் அவர் அலட்சியம் செய்யவுமில்லை, போதுமானளவு முக்கியத்துவம் கொடுக்காமல் நிராகரிக்கவுமில்லை

ஈ.வெ.ரா. பெரியார்

தனது இளமைக் காலத்தில் செல்லத்துரை தமிழ்நாட்டின் திராவிடர் கழகத் தலைவர் பெரியார் என்று அறியப்பட்ட ஈ.வெ. இராமசாமியின் ஒரு ஆதரவாளர். சுயமரியாதை மற்றும் சமூகநீதி கோட்பாடுகளில் பெரியாருக்கு இருந்த நம்பிக்கை அவரைக் கவர்ந்தது. ஒரு தடவை இந்தியாவுக்குச் சென்று பெரியாரை அவர் நேரில் சந்தித்தார். கலைஞர் மு. கருணாநிதி எழுதிய நாடகங்களையும் செல்லத்துரை மேடையேற்றினார். ஆனால், 1949 ஆம் ஆண்டில் இலங்கை தமிழரசு கட்சியின் தோற்றத்துக்கு பிறகு அவர் அதன் அரசியல் கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டார்.

தமிழரசு கட்சி / தமிழர் விடுதலை கூட்டணி

செல்லத்துரையின் சொந்தக் கிராமமான அச்சுவேலி கோப்பாய் தேர்தல் தொகுதியின் ஒரு பகுதி. வன்னியசிங்கம், பாலசுந்தரம், கதிரவேற்பிள்ளை மற்றும் ஆலாலசுந்தரம் என்று கோப்பாய் தொகுதியைப் பிரதிநிதித்துவம் செய்த சகல பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் செல்லத்துரை மிகவும் நெருக்கமாகப் பழகினார். பின்னரான வருடங்களில் அவர் செல்வநாயகம், நாகநாதன், கா.பொ. இரத்தினம், அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், ஜெயக்கொடி மற்றும் வி.என்.நவரத்தினம் போன்ற தமிழரசு / தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் தலைவர்களுடன் நெருக்கமாகிக் கொண்டார். அவ்வாறிருந்தாலும், அரசியல் செய்திகளை எழுதுவதில் எப்போதுமே சுதந்திரமாகடும் நேர்மையாகவும் அவர் செயற்பட்டார்.

1970 பொதுத்தேர்தலுக்கு முன்னதாக செல்லத்துரை எழுதிய மூடநம்பிக்கை சாரந்த செய்தி ஒன்று அந்த நாட்களில் பெரிதாகப் பேசப்பட்டது. வெவ்வேறு தேர்தல் கூட்டங்களில் எதிர்பாராத மூன்று இடையூறுகள் ஏற்பட்டன. முன்னாள் உடுப்பிட்டி பாராளுமன்ற உறுப்பினர் எம்.சிவசிதம்பரத்தினால் நடத்தப்பட்ட கூட்டத்தின் மேடையில் மேசையில் வைக்கப்பட்டிருந்த நிறைகுடம் கவிழ்ந்து போனது. முன்னாள் வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினர் அ அமிர்தலிங்கத்தின் கூட்டம் ஒன்றில் மேடை உடைந்தது. முன்னாள் நல்லூர் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஈ.எம்.வி. நாகநாதனின் கூட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த பந்தல் வீழ்ந்தது.

இந்த வெவ்வேறு சம்பவங்களையும் ஒன்றாகச் சேர்த்து அவை மூன்று அபசகுனங்கள் என்ற தொனியில் செய்தி ஒன்றை செல்லத்துரை எழுதினார். அப்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருநனத நாகநாதன், அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் ஆகியோர் 1970 தேர்தலில் முறையே நல்லூர், வட்டுக்கோட்டை, உடுப்பிட்டி தொகுதிகளில் தோல்வியைத் தழுவினர். செல்லத்துரையின் அந்த அபசகுனச் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வெள்ளை வேட்டி, இளமஞ்சள் சேர்ட்

செல்லத்துரை வெள்ளை வேட்டியையும் இளமஞ்சள் நிற நீளக்கைச் சேர்ட்டையும் அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அது அவருடைய சீருடை போன்று ஆகிவிட்டது. தொழிலைப் பொறுத்தவரை பத்திரிகையாளராக இருந்தாலும், விவசாயத்தை அவர் கைவிடவேயில்லை. காலையில் நேரத்தோடு எழுந்து விவசாயத்தை கவனிப்பார். மிளகாய், வெங்காயம் ஆகியவற்றையே பெரும்பாலும் பயிர் செய்தார்.

மதிய உணவை நேரத்தோடு சாப்பிட்டுவிட்டு யாழ்ப்பாணத்துக்கு பஸ் ஏறிவிடுவார். அச்சுவேலி யாழ்நகரில் இருந்து 16 கிலோமீற்றர் தொலைவில் இருக்கிறது. புகையிரத நிலைய வீதியில் உள்ள வீரகேசரி அலுவலகத்துக்கு சென்று தனது கடமையை அவர் ஆரம்பிப்பார். கச்சேரி, மாநகரசபை, நீதிமன்றங்கள் அல்லது பொலிஸ் நிலையங்களுக்கு செல்லவேண்டிய வேளைகளில் அலுவலக சைக்கிளையே அவர் பயன்படுத்துவார். மற்றும்படி அலுவலக தொலைபேசியைப் பயன்படுத்திக் கொள்வார். தேவை ஏற்பட்டால் கொழும்புக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது செய்திகளை எழுதுவார். அவர் எப்போதும் சுறுசுறுப்பாக துரித கதியில் வேலை செய்வார்.

மாலை 6.30 மணிக்கு தனது கடமையை முடித்துக்கொண்டு அவர் அருகாமையில் உள்ள புகையிரத நிலையத்துக்கு நடந்துசென்று கொழும்பு செல்லும் தபால் பகையிரதத்தில் செய்திப் பார்சல்களை அனுப்பி வைத்துவிட்டு யாழ். பஸ் நிலையத்துக்கு நடந்து செல்வார். அங்கு பூபாலசிங்கம் புத்தகசாலையில் பத்திரிகைகள், சஞ்சிகைகள், புத்தகங்கள் மீது ஒரு கண்ணோட்டத்தை விட்ட பிறகு செல்லத்துரை தனது வழமையான சுருட்டுக்கட்டையும் பிள்ளைகளுக்கு இனிப்பு பண்டங்கள், பிஸ்கட்டுகளை வாங்கிக்கொண்டு பருத்தித்துறை செல்லும் பஸ்ஸில் ஏறுவார்.ஆவரங்கால் சந்தியில் இறங்கி அவர் வீடு செல்வார்.காலை வேளைகளில் அல்லது மாலைவேளைகளில் நிகழ்வுகளுக்கு அல்லது கூட்டங்களுக்கு செல்லவேண்டும் என்றால் அவரின் இந்த வழமையான நடைமுறையில் மாற்றம் ஏற்படும்..

வைத்தியசாலையில் அனுமதி

கடும் உழைப்பாளியான செல்லத்துரை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று 1981 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதை அவர் ஒரு சில மாதங்கள் தாமதித்தார். யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி சபையின் ஆரம்பக் கூட்டத்தை பற்றிய செய்தியை அவர் எழுத விரும்பியதே அதற்கு காரணமாகும். பல தமிழர்களைப் போன்று அதிகாரப்பகிர்வை கொண்டுவக்கூடிய ஒரு திட்டத்துக்காக செல்லத்துரையும் ஏங்கினார். மாவட்ட சபைகள் அமைக்கப்பட்டபோது அவர் மகிழ்ச்சியடைந்தார். ஆனால், அதுவும் ஒரு தோல்வியாகவே முடிந்தது. மாவட்ட அபிவிருத்தி சபையின் ஆரம்பக் கூட்டம் தொடர்பாக செய்தி எழுதவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகவே செல்லத்துரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதை தாமதித்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பிறகு வீடு திரும்பினார். ஒரு சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. முடிவு தவிர்க்கமுடியாததாக தோன்றியது.

செய்தி மன்னன்

வீடு திரும்பிய செல்லத்துரை 1982 ஏப்ரில் 29 ஆம் திகதி காலமானார். அப்போது அவருக்கு 57 வயது.” செய்தி மன்னன் செல்லத்துரை ” என்ற மகுடத்தில் அவரைப் பற்றி ஆசிரிய தலையங்கம் தீட்டி வீரகேசரி கௌரவித்தது.பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த அரசியல்வாதிகள் உட்பட பெருந்திரளான மக்கள் அவரது இறுதிச்சடங்கில் கலந்து இறுதிமரியாதை செலுத்தினர்.

செல்லத்துரை தனது சொந்த மைத்துனி இராஜேஸ்வரியை திருமணம் செய்தார். அவர்களுக்கு பத்துப் பிள்ளைகள். நான்கு மகன்கள், ஆறு மகள்கள். அவரது பிளனளைகளில் சிலர் இப்போது வெளிநாடுகளில் வாழ்கிறார்கள்.சிலர் இலங்கையில் இருக்கிறார்கள். ஒரு மகன் விடுதலை புலிகள் இயக்கத்தில் இணைந்து கடற்படையுடனான மோதல் ஒன்றில் பலியானார். இன்னொரு மகன் யாழ்ப்பாணத்தில் வீரகேசரியில் செய்தியாளராகப் பணியாற்றினார். பிறகு அவர் நெதர்லாந்துக்கு சென்றுவிட்டார்.

யாழ்ப்பாணத்தில் பணி

யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய மூன்று சந்தர்ப்பங்களில் நான் செல்லத்துரையுடன் பழகினேன். முதலாவது சந்தர்ப்பம், 1979 ஆம் ஆண்டில் கொழும்பில் இரு ஊடக மகாநாட்டில் அவர் பங்கேற்க வேண்டியிருந்தபோது இரு நாட்கள் நான் யாழ்ப்பாண நிருபராக பணியாற்றினேன். யாழ்ப்பாணத்தில் நிலைவரத்தை என்னால் சமாளிக்க முடியுமோ என்று கவலைப்பட்ட அவர் எனக்கு பெருமளவு ஆலோசனைகளைக் கூறினார். அப்போது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக காலஞ்சென்ற லயனல் பெர்னாண்டோ பதவி வகித்தார். பேட்டி ஒன்றில் லயனல் யாழ்ப்பாண மாவட்டத்துக்கென்று நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் ஒருங்கிணைக்கப்பட்ட அபிவிருத்தி திட்டம் ஒன்றின் விபரங்களை வெளியிட்டார். அது நல்லதொரு செய்தி என்று தெரிந்து கொண்டதும் உடனடியாகவே அனுப்பிவைத்தேன்.

வீரகேசரி அலுவலகத்தில் இருந்து மிகவும் அண்மையாக இருந்ததால் யாழ்ப்பாண புகையிரத நிலையத்தின் விருந்தினர் அறைகளில் ஒன்றில் அப்போது நான் தங்கியிருந்தேன். செல்லத்துரை கொழும்பில் இருந்து புகையிரதத்தில் யாழ்பாணம் திரும்பியபோது நான் நல்ல தூக்கத்தில் இருந்தேன். எனது அறைக்கு வந்த செல்லத்துரை வீரகேசரி ஞாயிறு பத்திரிகையை ஆச்சரியத்துடன் எனக்கு காட்டி ” மற்றைய பத்திரிகைகள் எல்லாவற்றையும் முந்திக்கொண்டு ஒரு முக்கிய செய்தியைக் கொடுத்துவிட்டீர்கள். அவர்கள் முன்பக்கத்தில் பிரதான தலைப்புச் செய்தியாக பிரசுரித்திருக்கிறார்கள். மிகவும் நல்லது, மிகவும் நல்லது” என்று கூறினார். அதற்கு பிறகு அவர் என்னை அன்புடன் நடத்தி மதிப்புத் தந்தார்.

இரண்டாவது சந்தர்ப்பம் 1981 ஜூன் முதல்வாரம். அட்டகாசத்தில் இறங்கிய பொலிசார் சிறப்புமிக்க யாழ்ப்பாண பொதுநூலகம், ஈழநாடு பத்திரிகை அலுவலகம், யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீடு, தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் அலுவலகம் மற்றும் கட்டிடங்கள், கடைகள், வாகனங்களக்கு தீவைத்தனர். அது ஒரு அவசரகால நிலை போன்ற சூழ்நிலை. யாழ்ப்பாணத்தில் செல்லத்துரையுடன் பணியாற்றுவதற்கு வீரகேசரி என்னை உபாலி விமானசேவை மூலம் அனுப்பிவைத்தது. அந்த நாட்கள் பரபரப்பானவை என்றாலும் கலக்கம் மிகுந்தவையாக இருந்தன. வீரகேசரி வாசகர்களுக்காக நானும் செலாலத்துரையும் இணைந்து பணியாற்றினோம். அந்த அனுபவம் எங்கள் இருவருக்கும் இடையிலான பிணைப்பை வலும்படுத்தியது.

மூன்றாவது சந்தர்ப்பம் செல்லத்துரைக்கு புற்றுநோய் ஏற்பட்டிருக்கிறது என்று கண்டறியப்பட்டதை அடுத்து வந்தது. தான் வைத்தியசாலையில் இருக்கும்போது யாழ்ப்பாண நிருபராக நானே பணியாற்ற வேண்டும் என்பது செல்லத்துரையின் விருப்பம். தனக்கு பதிலாக யார் பணியாற்ற வேண்டும் என்பது குறித்து ஆசிரியர் சிவப்பிரகாசத்துக்கு அவர் ஒரு கடிதம் எழுதினார். செல்லத்துரை எனது பெயரைக் குறிப்பிடவில்லை. ஆனால் கடிதத்தில் அவர் குறிப்பிட்ட சில நிபந்தனைகள் எனக்கு மாத்திரமே பிரயோகிக்கக்கூடியவையாக இருந்தன. கடிதத்தை வாசித்த சிவப்பிரகாசம் கொடுப்புக்குள் சிரித்துவிட்டு ” நான் உங்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பவேண்டும் என்று செல்லத்துரை விரும்புகிறார். ஆனால், அவ்வாறு நேரடியாக எனக்கு சொல்லாமல் உணர்த்தியிருக்கிறார்” என்று என்னிடம் கூறினார். இவ்வாறாகத்தான் நான், செல்லத்துரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாட்களில் அவருக்கு பதிலீடாக வீரகேசரியின் யாழ்ப்பாண நிருபரானேன்.

யாழ்ப்பாணத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த வேளையில், தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் முக்கியமான கூட்டச் செய்தியை அதன் திருநெல்வேலி அலுவலகத்தில் சேகரிக்க வேண்டியிருந்தது. மூடிய அறைக்குள் நடைபெற்ற அந்த கூட்டத்திற்கு பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. எதிர்க்கட்சி தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் உரையே அந்த கூட்டத்தில் முக்கியமானது. சில தந்திரோபாயங்களை பயன்டுத்தி என்னால் கூட்டத்திற்குள் ஊடுருவக்கூடியதாக இருந்தது. நான் அனும்பிய செய்தியை வீரகேசரி மறுநாள் முன்பக்க தலைப்புச் செய்தியாகப் பிரசுரித்திருந்தது. அந்த கூட்டத்தைப் பற்றி மிகவும் விரிவாக என்னால் எவ்வாறு எழுதக்கூடியதாக இருந்தது என்று யாழ்ப்பாணத்தில் உள்ள சக பத்திரிகையாளர்களுக்கு ஆச்சரியம்.

செல்லத்துரையிடமிருந்து மிகப்பெரிய பாராட்டு எனக்கு கிடைத்தது. ” உங்களால் எவ்வாறோ தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் அந்த கூட்டத்தில் பிரசன்னமாகி இருக்க முடிந்திருக்கிறது ” என்று அவர் கூறினார். நேரடியாக அங்கு பிரசன்னமாக இல்லாமல் அமிர்தலிங்கத்தின் பேச்சை இந்தளவு விரிவாக எவராலும் எழுதியிருக்க முடியாது. என்னால் அதை எவ்வாறு சாதித்திருக்க முடியும் என்று செல்லத்துரை ஊகித்தார் . அதை அவர் சரியாகவே கண்டு பிடித்துவிட்டார். வைத்தியசாலை கட்டிலில் இருந்துகொண்டு பத்திரிகையை வாசித்த அவர் அந்த செய்தி எவ்வாறு எழுதப்பட்டது என்பதை விளங்கிக் கொண்டார். பத்திரிகைத்துறையில் அத்தகையது அவரது அனுபவமும் தனித்துவமான திறமையும்!

செல்லத்துரை அண்ணனின் வேண்டுகோள்

இதுவே தனது தொழிலை அர்ப்பணிப்பணிப்புச் சிந்தையுடன் செய்த ஒரு தமிழ்ப் பத்திரிகையாளரின் கதை. செல்லத்துரையுடன் ஊடாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது எனது அதிர்ஷ்டம் என்றே கருதுகின்றேன். என் மீது மிகவும் அன்பு கொண்டிருந்த அவர் ” ஒரு நாள் நீ வீரகேசரியின் ஆசிரியராக வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று சொல்வார். நான் அவரை அன்பாக செல்லத்துரை அண்ணன் என்றே அழைப்பேன்.

நான் ” த ஐலண்ட் ” பத்திரிகையில் இணைந்து ஆங்கிலப் பத்திரிகை உலகிற்கு சென்றபோது அவர் பெரும் ஏமாற்மடைந்தார் என்றாலும் என்னை வாழ்த்தியனுப்பினார். ” தமிழையும் தமிழர்களையும் மறக்க வேண்டாம்” என்பதே செல்லத்துரை அண்ணன் என்னிடம் விடுத்த ஒரே வேண்டுகோள். அந்த வேண்டுகோளை நான் மறக்கவில்லை.

___________________

D.B.S.Jeyaraj can be reached at dbsjeyaraj@yahoo.com

ஆங்கில மூலம்: டி. பி. எஸ். ஜெயராஜ் (Daily Mirror)

தமிழில்: வீரகத்தி தனபாலசிங்கம்

நன்றி: வீரகேசரி

************************************************************************************************