டி.பி.எஸ். ஜெயராஜ்
2025 செப்டெம்பர் முதலாம் திகதி கச்சதீவுக்கு சென்றதன் மூலம் ஜனாதிபதி அநுரா குமார திசநாயக்க அந்த மண்ணில் காலடி வைத்த இலங்கையின் முதலாவது அரச தலைவர் என்று வரலாறு படைத்திருக்கிறார். வடபகுதி கடலோரத்துக்கு அப்பால் இருக்கும் அந்த சின்னஞ்சிறிய தீவுக்கு கடற்படையின் பி.211 அதிவேகப்படகில் ஜனாதிபதி செய்த கன்னிப்பயணத்தில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, கடற்படையின் வடக்கு தளபதி றியர் அட்மிறல் புத்திக்க லியனகமகே ஆகியோரும் கூடச் சென்றனர்.
தீவு என்று அழைக்கப்பட்டாலும், அளவில் கச்சதீவு உண்மையில் ஒரு குட்டித்தீவேயாகும். 285 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட கச்சதீவு 1.6 கிலோமீட்டர் நீளத்தையும் 300 மீட்டர் அகலத்தையும் உடையதாகும். மக்கள் வாழாத அதில் புனித அந்தோனியார் கத்தோலிக்க தேவாலயமும் இலங்கை கடற்படையின் சிறியதொரு பிரிவுமே இருக்கின்றன. பழைய உப்புத்தண்ணீர் கிணறு ஒன்றைத் தவிர, கச்சதீவின் மணல் பாங்கான நிலத்தில் நன்னீருக்கான வளம் எதுவும் கிடையாது.
” கண்காணிப்பு விஜயம் ” என்று வர்ணிக்கப்பட்ட ஜனாதிபதி திசாநாயக்கவின் குறுகிய அடையாள பூர்வமான விஜயம் தற்போதைய அரசியல் பின்புலத்தில் இரட்டைச் செய்தியொன்றை கூறியது. முதலாவதாக, ஒரு காலத்தில் சரச்சைக்குரியதாக இருந்த அந்த தீவு இப்போது இலங்கையின் ஒரு பகுதி என்பது தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இரண்டாவதாக, இலங்கைப் பிராந்தியத்தின் ஒரு பகுதியான அந்த தீவை கைவிடுவதற்கு இலங்கை தயாராக இல்லை என்பது நுட்பமான முறையில் கூறப்பட்டிருக்கிறது.
முன்கூட்டியே அறிவிக்கப்படாத விஜயம் ஆச்சரியத்தை தந்தது. ஜனாதிபதி திசநாயக்கவின் வட மாகாணத்துக்கான இரு நாள் விஜயத்தின் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரலில் கச்சதீவு விஜயம் பற்றி எந்த குறிப்பும் இல்லை. மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் விரிவாக்கத்தின் மூன்றாம் கட்ட அங்குரார்ப்பண சமாபிரதாயபூர்வ நிகழ்விலேயே கச்சதீவு விஜயத்துக்கான முதலாவது அறிகுறி வந்தது.
அந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி திசநாயக்க,” மக்களின் நன்மைக்காக சுறிறியுள்ள கடல் பிராந்தியத்தையும் தீவுகளையும நிலப்பரப்புகளையும் பாதுகாப்பதில் அரசாங்கம் பற்றுறுதி கொண்டிருக்கிறது. இது விடயத்தில் எந்த வெளிச் சக்தியும் செல்வாக்குச் செலுத்த அனுமதிக்கப் போவதில்லை” என்று கூறினார். பிறகு கச்சதீவுக்கு விஜயம் செய்ய உத்தேசித்திருப்பதாக கூறிய அவர் அதன் பிரகாரம் அங்கு சென்றார்.
இலங்கையின் வடபகுதி நெடுந்தீவில் இருந்து தெற்கே 14.5 கிலோமீட்டர் தொலைவிலும் இந்தியாவின் தென்பகுதி பாம்பன் தீவில் இராமேஸ்வரத்தில் இருந்து வடகிழக்கே 16 கிலோமீட்டர் தொலைவிலும் கச்சதீவு அமைந்திருக்கிறது. இந்தியாவின் இராமேஸ்வரத்துக்கும் இலங்கையின் நெடுந்தீவுக்கும் இடையில் அதன் புவியியல் அமைவிடத்தைக் கொண்டிருப்பதன் விளைவாக கச்சதீவின் உடைமை குறித்து பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் இந்திய அரசாங்கத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் தகராறு நிலவிவந்தது.
சுதந்திரத்துக்கு பின்னரான காலப்பகுதியில் இந்தியாவிலும் இலங்கையிலும் முறையே உலகின் முதலாவது பெண் பிரதமரும் இரண்டாவது பெண் பிரதமரும் பதவியில் இருந்தபோது அந்த தகராறுக்கு தீர்வு காணப்பட்டது. இந்திய பிரதமர் இந்திரா காந்தியும் இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவும் இரு இருதரப்பு உடன்படிக்கைகளை 1974 ஆம் ஆண்டிலும் 1976 ஆம் ஆண்டிலும் கைச்சாத்திட்டு கசசதீவை இலங்கையின் ஒரு பகுதி என்று அங்கீகரித்ததன் மூலம் தகராறுக்கு தீர்வு காணப்பட்டது. புதிதாக வரையப்பட்ட சர்வதேச கடல் எல்லைக்கோடு கச்சதீவையும் அதன் அருகாமையில் ஒரு கிலோமீட்டர் கடல்பரப்பையும் இலங்கையின் செயலாணைக்கும் அதிகாரத்துக்கும் உரியதாக வகுத்தது.
தகராறுக்கான காரணம்
இந்த இணக்கத்தீர்வுக்கு மத்தியிலும், கச்சதீவு அண்மைக்காலமாக குறிப்பாக, தென்னிந்தியாவின தமிழ்நாடு மாநிலத்தில் சர்ச்சைக்குரியதாக மாறியிருக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் பல வருடங்களாக இலங்கையின் வடபிராந்திய கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டுவருவதே அதற்கு காரணமாகும். இலங்கையின் கடற்பரப்புக்குள் அத்துமீறிப் பிரவேசிக்கும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடிக்கடி கைதுசெய்து அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துவருகிறார்கள். அவ்வாறிருந்த போதிலும், இந்தியர்கள் தொடர்ந்தும் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுகிறார்கள். பெரும் எண்ணிக்கையில் இந்திய மீன்பிடிப் படகுகள் இலங்கையின் கடற்பரப்பிற்குள் ஆக்கிரமிப்புச் செய்கின்றன.
தமிழ்நாட்டின் கரையோர மாவட்டங்களைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் வடக்கில் இலங்கையின் கடற்பிராந்தியத்தில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டு வருவது இலங்கையின் தமிழ் மீனவர்களை பாதிக்கின்ற ஒரு முக்கியமான பிரச்சினையாகும். இது ஒரு சில படகுகள் அவ்வப்போது இலங்கை கடற்பரப்புக்குள் வந்து மீன்பிடித்துவிட்டு போகிற ஒரு விவகாரம் அல்ல. இது பாரிய விளைவுகளைக் கொண்டுவந்திருக்கும் பாரதூரமான ஒரு பிரச்சினையாகும். நான் கடந்தகாலத்திலும் இந்த பிரச்சினை பற்றி பெருமளவுக்கு கவனம் செலுத்தியிருக்கிறேன். அதனால் எனது முன்னைய எழுத்துக்களின் உதவியுடன் இந்த இரு பாகங்களைக் கொண்ட கட்டுரையில் பிரச்சினையை ஆராய முனைந்திருக்கிறேன்.
தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களது பாரம்பரிய கடற்பரப்பில் மீன்பிடிக்கின்றபோது இலங்கை கடற்படை அவர்களை கைது செய்கிறது என்பதே இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பது தொடர்பாக தமிழ்நாட்டு மீனவர்களும் அரசியல்வாதிகளும் ஊடகஙாகளில் ஒரு பிரிவும் கட்டிவிட்ட கதையாகும். இலங்கையின் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடிப்பவர்களையே இலங்கை கடற்படை கைது செய்கிறது என்ற உண்மை மூடிமறைக்கப்படுகிறது, அலட்சியம் செய்ப்படுகிறது.
மேலும் ஒரு திரிப்பாக, இலங்கைக்கு கச்சதீவை இந்தியா விட்டுக் கொடுத்ததே தமிழ்நாட்டு மீனவர்களின் நெருக்கடிக்கு முக்கிய காரணம் என்று பிரசாரம் செய்யப்படுகிறது. கச்சதீவு இந்தியாவின் கீழ் இருந்தால் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யமுடியாமல் போகும் என்ற மாயையும் பரப்பப்படுகிறது. கச்சதீவுக்கு அண்மையாக கடலில் அவ்வப்போது மீன்பிடிக்கும் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை கொடுமைப்படுத்துகிறது என்ற பெரிய பொய்யும் பரப்பப்படுகிறது. கச்சதீவை மீண்டும் இந்தியா சொந்தமாக்கிக் கொண்டால் தமிழ்நாட்டு மீனவர்களின் தொல்லைகள் எல்லாம் முடிவுக்கு வந்துவிடும் என்றும் தவறாகக் கூறப்படுகிறது.
உண்மையில் இடம்பெற்றுவருவது இதுதான். இலங்கை கடற்படை கச்சதீவை ஒரு எல்லைக்கோடாக பயன்படுத்துகிறது. கச்சதீவு இலங்கை கடற்பிராந்தியத்துக்குள் இருப்பதால், அதைக் கடந்து இலங்கை கடலுக்குள் வருகின்ற சகல இந்திய படகுகளையும் அத்துமீறிச் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுகின்றவை என்று இலங்கை கடற்படை கருதுவது சுலபமாக இருக்கிறது. ஒருவகையில் கச்சதீவு கடற்பிராந்திய எல்யையை நிர்ணயிப்பதிலும் சட்டவிரோத மீன்பிடியை வரையறை செய்வதிலும் தீர்மானிக்கும் காரணியாக விளங்குகிறது. அதனால், கச்சதீவை இந்தியாவின் கீழ் கொண்டுவந்தால், இலங்கையின் கடறனபரப்புக்குள் தாங்கள் தொடர்ந்தும் மீன்பிடியில் ஈடுபடக்கூடியதாக இருக்கும் என்று தமிழ்நாட்டு மீனவர்கள் கருதுகிறார்கள். சுருக்கமாகச் சொல்வதானால், கச்சதீவு ஒரு எல்லைக்கோடாக இல்லாமல் இலங்கையின் கடற்பரப்புக்குள் தொடர்ந்து மீன்பிடிக்க அவர்கள் விரும்புகிறார்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரை, இந்திய — இலங்கை மீனவர் தகராறு தொடர்பிலான பேச்சுவார்த்தைகளில் இலங்கையின் வடபகுதி மீனவர்களின் நெருக்கடிகள் கருத்தில் எடுக்கப்படுவதில்லை என்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும். பகைமையுணர்வு கொண்ட இலங்கை கடற்படைக்கும் அப்பாவி தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் இடையிலான ஒரு பிரச்சினையாகவே இது காண்பிக்கப்படுகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் இலங்கையின் வடபகுதி தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரங்களை அபகரிக்கிறார்கள் என்பது பற்றி எதுவும் பேசப்படுவதில்லை. ஒரு சில விதிவிலக்குகள் தவிர, இந்திய ஊடகங்களில் இலங்கை தமிழ் மீனவர்களின் இடர்பாடுகள் முற்றுமுழுதாக இருட்டடிப்பு செய்யப்படுகிறது.
கச்சதீவு உடைமை
பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் கச்சதீவை சொந்தமாக்குவது ஒரு முக்கியமான காரணியாக காண்பிக்கப்படுகிறது. கச்சதீவு ஒரு காலத்தில் இந்தியாவுக்கு சொந்தமானதாக இருந்தது என்றும் புதுடில்லி இலங்கைக்கு அதை அன்பளிப்பாக கொடுத்தது, அதனால் கச்சதீவை மீளப் பெறுவதற்கு இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தவறாக கூறப்படுகிறது. அந்த வகையில் புதுடில்லி ஒன்றில் கச்சதீவை மீளச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் அல்லது அந்த தீவை இந்தியாவுக்கு 99 வருட குத்தகைக்கு வழங்குவதற்கு கொழும்பை நிர்ப்பந்திக்க வேண்டும் என்று பிரசாரம் செய்யப்படுகிறது.
கச்சதீவை இந்தியா இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது என்ற வாதம் முற்றுமுழுதாக தவறானது. இந்தியா அந்த தீவை இலங்கைக்கு ஒருபோதும் விட்டுக் கொடுத்திருக்க முடியாது. ஏனென்றால், அவ்வாறு விட்டுக்கொடுப்பதற்கு கச்சதீவு ஒருபோதும் இந்தியாவின் பகுதியாக இருந்ததில்லை. அந்த தீவுக்கு இந்தியா உரிமை கோரியதே தவிர, அதை ஒருபோதும் சொந்தமாகக் கொண்டிருந்ததில்லை. கச்சதீவுக்கு உரிமை கோருவதென்பது தகராறுக்குரிய ஒரு பிரச்சினையாக மாத்திரமே இருந்து வந்தது. இந்தியா செய்தது என்னவென்றால், 1974 ஆம் ஆண்டில் கச்சதீவுக்கு உரிமை கோருவதை கைவிட்டு பிறகு 1976 ஆம் ஆண்டில் அதை மீளவும் உறுதிப்படுத்திக் கொண்டது மாத்திரமே. இந்தியா கச்சதீவை விட்டுக்கொடுக்கவில்லை, ஏனென்றால் இலங்கைக்கு கைமாற்றுவதற்கு அந்த தீவு இந்தியாவுக்கு சொந்தமானதாக ஒருபோதும் இருந்ததில்லை.
தமிழ்நாடு
ஆனால், இது கச்சதீவை இந்தியா மீளப்பெற வேண்டும் என்று தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் கோரிக்கை விடுப்பதை தடுக்கவில்லை. வெவ்வேறு காலப்பகுதிகளில் தமிழ்நாடு சட்டசபையில் நான்கு தீர்மானங்கள் நறைவேற்றப்பட்டன. முன்னாள் முதலமைச்சர்கள் முத்துவேல் கருணாநிதியும் ஜெயலலிதா ஜெயராமும் தனித்தனியாக இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்குகளையும் தாக்கல் செய்தனர். இந்த வழக்குகள் இன்னமும் விசாரணையில் இருக்கின்றன. தற்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சர் எம்.கே. ஸ்ராலின் கச்சதீவை மீட்குமாறு கோரிக்கை விடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கும் வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கருக்கும் கடிதங்களை எழுதியிருக்கிறார்.
நடிகர் விஜய்
விஜய் என்று அறியப்படுகின்ற பிரபல்யமான தமிழ் சினிமா நடிகர் ஜோசப் விஜய் சந்திரசேகர் விடுத்த கோரிக்கை காரணமாக கச்சதீவு விவகாரம் அண்மைய நாட்களாக இந்தியாவிலும் இலங்கையிலும் ஊடகங்களின் பெரும் கவனத்தைப் பெற்றது. இலங்கை தமிழ் பெண்மணியான சங்கீதா சொர்ணலிங்கத்தை திருமணம் செய்த விஜய் ” தமிழக வெற்றிக்கழகம் ” என்ற பெயரில் தனது சொந்த அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். சுமார் 85 ஆயிரம் விஜய் இரசிகர் மன்றங்கள் கட்சிக் கிளைகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. பல இலட்சம் உறுப்பினர்களைக் கொண்டிருப்பதாக கட்சி உரிமை கோருகிறது.
தமிழக வெற்றிக்கழகம் அதன் இரண்டாவது மகாநாட்டை 2025 ஆகஸ்ட் 21 ஆம் திகதி மதுரையில் நடத்தியது. அந்த மகாநாட்டில் உரையாற்றிய விஜய் கச்சதீவு பிரசசினையை மீண்டும் கிளப்பினார். இலங்கையிடமிருந்து கச்சதீவை மீட்பதன் மூலமாக தமிழ்நாட்டு மக்களுக்கு உதவுமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் வேண்டுகோள் விடுத்தார்.
திரைப்பட நடிகர்கள் அரசியலில் பிரவேசிக்கும் நீண்ட பாரம்பரியம் ஒன்றை தமிழ்நாடு கொண்டிருக்கிறது. பல நடிகர்கள் கடந்த காலத்தில் தங்களது சொந்த கட்சிகளை ஆரம்பித்தார்கள். நடிகர்கள் எம்.ஜி. இராமச்சந்திரனும் ஜெயலலிதாவும் மாநிலத்தின் முதலமைச்சர்களாக இருந்தார்கள். தற்போதைய முதலமைச்சர் ஸ்ராலினும் கூட சில திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நாடகத் தொடர்களிலும் நடித்திருக்கிறார். அத்தகைய ஒரு சூழ்நிலையில், தேர்தல் ஒன்றில் செல்வாக்கு பரீட்சிக்கப்படாவிட்டாலும் கூட, நடிகர் விஜயும் அவரது கட்சியும் ஊடகங்களில் பெருமளவில் பிரபல்யத்தை பெறுவதை காணக்கூடியதாக இருக்கிறது. உகந்த ஒரு மதிப்பீட்டைச் செய்வதற்கு இந்த நேரம் பொருத்தமானது அல்ல என்ற போதிலும், அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் விஜயும் தமிழக வெற்றிக்கழகமும் கணிசமானளவு தாக்கத்தை செலுத்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
51 வயதான விஜய் தமிழ் சினிமாவில் மிகவும் உயர்ந்த ஊதியத்தை பெறுபவராக விளங்குகிறார். அவரது திரைப்படங்கள் வசூலில் மிகப்பெரிய சாதனைகளைப் படைக்கின்றன. இவ்வாறு இருந்த போதிலும், அடுத்த வருடம் வெளியாகவிருக்கும் ” ஜனநாயகன்” என்ற தனது கடைசி திரைப்படத்துக்கு பிறகு சினிமா உலகில் இருந்து விலகி முழுநேர அரசியலில் இறங்கப் போவதாக அவர் உறுதியளித்திருக்கிறார். திரைப்பட நடிகர் என்ற வகையில் அவரது செல்வாக்கை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது விஜயின் அரசியல் பிரவேசம் ஊடகங்களின் கவனத்தை அவர் மீது பிரமாண்டமான அளவுக்கு திருப்பியிருக்கிறது.
இந்த பின்புலத்தில், கச்சதீவை மீட்க வேண்டும் என்று விஜயின் கோரிக்கை பரந்த பிரசித்தத்தை குறிப்பாக, வட இந்திய ஊடகங்களில் பெற்றிருக்கிறது. விஜயின் கச்சதீவுக் கோரிக்கை இலங்கையிலும் பெருமளவு கவனத்தைப் பெற்றிருக்கிறது. சமூக ஊடகங்கள் அவரை கடுமையாகத் தாக்கத் தொடக்கியிருக்கின்றன. இலங்கை கச்சதீவை இழக்கக்கூடிய ஆபத்து பற்றி ஊடகங்களின் செல்வாக்குடன் ஒரு மாயை உருவாக்கப்படுகிறது. விஜயின் கோரிக்கை தொடர்பாக கருத்து வெளியிட்ட இலங்கையின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது…… அது இலங்கையின் பிராந்தியம், அதில் ஒருபோதும் மாற்றம் ஏற்படப்போவதில்லை ” என்று குறிப்பிட்டார்.
அநுரா குமார திசநாயக்க
இத்தகைய பின்புலத்திலேயே ஜனாதிபதி அநுரா குமார திசநாயக்க கச்சதீவுக்கு தனது விஜயத்தை மேற்கொண்டார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதையும் அதை எந்த வெளிச்சக்தியும் எடுக்க முடியாது என்பதையும் அந்த விஜயம் அறிவிப்புச் செய்தது. அவர் கச்சதீவுக்கு சென்றதை இலங்கை ஊடகங்கள் பரவலாக பாராட்டி வரவேற்றன. இந்திய ஊடகங்களிலும் அது சர்ச்சைக்குரிய ஒரு விவகாரமாகியது. ஜனாதிபதி அரச தலைவர் என்ற வகையில் தனது சொந்த நாட்டில் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இருந்தாலும், தமிழ்நாட்டில் உள்ள சில ஊடக வட்டாரங்கள் திசநாயக்க ஏதோ இந்திய பிராந்தியத்திற்குள் அத்துமீறிப் பிரவேசத்து விட்டார் என்பதைப் போன்று அந்த விஜயத்தை காண்பித்தன.
உண்மையான பிரச்சினை
பொதுவில் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளும் ஊடகங்களில் சில பிரிவுகளும் கச்சதீவு தொடர்பாக தொடர்ந்து சர்ச்சையை உருவாக்கவே செய்யும். கச்சதீவு போன்ற திசை திருப்பல்களினால் முக்கியமான பிரச்சினையில் இருந்து விலகிச் செல்வதை தவிர்த்துக்கொள்வதே இலங்கைக்கும் இலங்கையர்களுக்கும் முக்கியமானது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை பாதிக்கும் உண்மையான பிரச்சினை கச்சதீவு யாருக்கு சொந்தமானது என்பது அல்ல. இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் சட்ட விரோதமாக மீன்பிடிப்பதே அந்த பிரச்சினையாகும். முதலில் கையாள வேண்டியது இந்த ” திமிங்கிலப் ” பிரச்சினையே அன்றி, கச்சதீவு என்ற ” நெத்தலி” பிரச்சினை அல்ல.
கச்சதீவு என்பது முடிந்துபோன விவகாரம். அந்த தீவு மீது இலங்கைக்கு இருக்கும் இறைமையும் சுயாதிபத்தியமும் பற்றி எந்த கேள்விக்கும் இடமில்லை. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும் தலைவர்களும் எவ்வளவுதான் பிரச்சினையைக் கிளப்பினாலும், இலங்கை கச்சதீவை இழப்பதற்கு வாய்ப்பே கிடையாது. கச்சதீவுப் பிரச்சினை தமிழ்நாட்டில் தேர்தல் காலங்களில் மாத்திரமே முக்கியத்துவம் பெறுகிறது. தேர்தர்கள் முடிவடைந்ததும் அது மறக்கப்பட்டுவிடும். இது ஒரு பருவகாலப் பிரச்சினை போன்றது.
இலங்கையின் வடபிராந்திய கடற்பரப்பில் தமிழ்நாட்டு மீனவர்கள் சட்ட விரோதமாக மீன்பிடிக்கும் பாரதூரமான பிரச்சினை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதைப் பற்றியே இலங்கையர்களும் இலங்கை அரசாங்கமும் அக்கறை கொள்ள வேண்டும். பதிலாக, கச்சதீவு பிரச்சினை மீது கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.
யதார்த்தமாக நோக்கினால் கச்சதீவு ஒரு பிரச்சினையே அல்ல. சட்டவிரோத மீன்பிடியே பாரதூரமானதும் பெரும் சேதத்தை விளைவிக்கின்றதுமான பிரச்சினையாகும். ஆனால், நடப்பது என்னவென்றால், திட்டமிட்டோ அல்லது தற்செயலாகவோ சடடவிரோத மீன்பிடிப் பிரச்சினையை மூடிமறைப்பதற்கு ஒரு புகைத்திரையாக கச்சதீவு விவகாரம் பயன்படுத்தப்படுகிறது. கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதையும் பொருட்படுத்தாமல் வட பிராந்திய கடலில் தமிழ்நாட்டு மீனவர்கள் ஆக்கிரமிப்புச் செய்து தொடர்ந்து மீன்பிடிப்பார்கள் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். கச்சதீவு இந்தியாவின் கீழ் வருமானால், எமது கடல்வளங்கள் தமிழ்நாட்டு மீனவர்களினால் சூறையாடப்படுவதற்கு எல்லையே இலாலாமல் போகும்.
மீன்பிடிப்படகுகள் தொகுதி
தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்பிராந்தியத்தில் பல வருடங்களாக சட்டவிரோத மின்பிடியில் ஈடுபட்டுவருகிறார்கள். அவர்களது படகுகள் ஒரு தொகுதியாக — ஒரு நேரத்தில் 500 க்கும் அதிகமான படகுகளைக் கொண்ட பெரிய தொகுதியாக எமது கடற்பிராந்தியத்திற்குள் ஊடுருவி மீன்பிடியில் ஈடுபடுகின்றன. அவற்றில் பல இழுவைப் படகுகளாகும். இது முன்கூட்டியே திட்டமிட்ட ஒரு செயற்பாடாகும். இந்த படகுத்தொகுதிகள் ஒரு கடற்படை போன்று ( Armada ) செயற்பட்டு மன்னார்க்குடா, பாக்குநீரிணை மற்றும் வங்காளவிரிகுடாவில் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுகின்றன.
இந்திய மீன்பிடிப் படகுகள் யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இலங்கை கரையோரத்துக்கு மிகவும் நெருக்கமாக வருகின்றன. நெடுந்தீவு, நயினாதீவு, கச்சதீவு போன்ற வடபகுதி தீவுகளுக்கு நெருக்கமாகவும் வந்து இந்திய மீனவர்கள் பெருமளவில் மீன்பிடியில் ஈடுபடுகிறார்கள். இந்திய படகுகள் வழமையாக நள்ளிரவுக்கு சற்று முன்னதாகவே எமது கடற்பரப்புக்குள் பிரவேசித்து பொழுது புலர்வதற்கு முன்னதாக திரும்பிச் சென்று விடுகின்றன.
இந்த இந்தியப் படகு தொகுதிகள் வலிந்து தாக்குதல் மற்றும் தற்காப்பு நோக்கங்களுக்காகவே பெரும் எண்ணிக்கயில் ஒன்றாக வருகின்றன. பெரும் எண்ணிக்கையில் இந்திய படகுகள் வருவதால் அவற்றை எதிர்த்து நிற்க இலங்கை மீனவர்களினால் இயலாமல் இருக்கிறது. இந்திய படகு தொகுதிகளை கண்டதுமே இலங்கை மீனவர்கள் பயப்படுகிறார்கள். இந்தியர்களிடம் அகப்படுகின்ற சில இலங்கை மீனவர்கள் கடுமையான தாக்குதல்களுக்கு இலக்காவதுடன் அவர்களின் படகுகளும் சேதப்படுத்தப்படுகின்றன. இத்தகைய பெருவாரியான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
இலங்கை கடற்படை
இந்திய மீன்பிடி படகு தொகுதி ஒன்றுக்கு நடுவே இலங்கை கடற்படை கூட விரைந்து செல்வதில்லை. அவ்வாறு இலங்கை கடற்படைக் கப்பல்கள் செல்கின்றபோது அவற்றை இந்திய படகுகள் சுற்றிவளைத்து மோதுகின்றன. அண்மைய சம்பவம் ஒன்றில் இந்திய படகின்ல் மோதுண்ட இலங்கை கடற்படை வீரர் ஒருவர் காயங்களுக்கு உள்ளாகி மரணமடைந்தார்.
இது ஒரு சமாதான காலம். இலங்கை இந்தியாவுடன் போர் செய்யவில்லை. அதனால், இந்திய மீன்பிடிப்படகுகளில் இருக்கும் ” சிவிலியன் ஆக்கிரமிப்பாளர்களை ” நோக்கி இலங்கை கடற்படை துப்பாக்கிப் பிரயோகம் செய்யமுடியாது, செய்யப்போவதுமில்லை. இதன் காரணமாக இந்திய மீனவர்கள் பயமின்றி மீன்பிடித்து வருகிறார்கள். ஆனால், அப்பாவி இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் நிரம்பி வழியும்.
அதேவேளை, இலங்கை கடற்படையினர் ஒன்றும் செயற்படாமலும் இருப்பதில்லை. சாத்தியமான வேளைகளில் தொலைவில் இருந்து கடற்படை கண்காணிப்பை மேற்கொள்கிறது. இதனால் பல சந்தர்ப்பங்களில் இந்திய மீனவர்களினால் இலங்கையின் கரையோரத்துக்கு நெருக்கமாக வரமுடியாமலும் போகிறது. பாதுகாப்பான படகுகள் தொகுதியில் இருந்து பிரிந்து தனியே வருகின்ற இந்திய படகுகளை கடற்படையினர் மடக்கிப்பிடிக்கவும் செய்கின்றனர்.
சில இந்திய படகுகள் எமது கரையோரங்களுக்கு மிகவும் நெருக்கமாகவும் கடலுக்குள் முன்னேறி வருகின்றன. இவ்வாறு பிரிந்து உதிரியாக வருகின்ற படகுகளை தருணம்பார்த்து கடற்படை சுற்றி வளைத்து கைது செய்கிறது. அந்த படகுகளை கைப்பற்றும் கடற்படையினர் அவற்றில் இருக்கும் மீனவர்களை கைது செய்கின்றனர். 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து வந்த 550 மீனவர்களை கடற்படையினர் கைது செய்ததாக அறிவிக்கப்பட்ட அதேவேளை, படகுகளின் சொந்தக்காரர்கள் என்று கூறப்படுபவர்கள் உட்பட சிலர் நீதிமன்றங்களினால் குற்றவாளிகளாகவும் காணப்பட்டிருக்கின்றனர். ஒத்திவைக்கப்பட்ட தண்டனைகளுக்கு பிறகு மீனவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள். இந்த வருடம் 100 க்கும் அதிகமான இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் சுமார் 70 பேர் இலங்கையில் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இழுவைப்படகுகள்
பெரும் எண்ணிக்கையில் மீன்பிடிப் படகுகள் ஒரு தொகுதியாக எல்லைமீறி பிரவேசித்து எமது மீனை, இறாலை, கணவாயை, நண்டுகளை பிடிப்பது என்பது இந்த இந்திய ஊடுருவலின் ஒரு அம்சம் மாத்திரமே. அத்தகைய நடவடிக்கைகளின் மூலமாக கட்டுப்பாடற்ற முறையில் ஒரு நிரந்தரமான முறையில் அழிவுகளை ஏற்படுத்துவது மற்றைய மிகவும் ஆபத்தான அம்சமாகும். பெரும்பாலான இந்திய மீன்பிடிப் படகுகள் இழுவை மீன்பிடியில் ஈடுபடும் படகுகளாகும் (Bottom trawlers). இழுவைப்படகுகள் மீனையும் கூனி இறால்களையும் இலக்கு வைப்பதற்கு மேலதிகமாக , கடற்படுக்கையில் இருந்து மீன்முட்டைகள், சிறிய மீன்வகைகள், கடல் தாவரங்கள் என்று சகலதையும் வாரி அள்ளக்கூடிய மிகப் பெரிய வலைகளைக் கொண்டவையாகும்.
தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு கரையோர மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்கள் பல தசாப்தங்களாக இந்த நடைமுறையைப் பின்பற்றுகிறார்கள். அதனால் இந்தியாவின் கடலுணவு ஏற்றுமதி மேம்பட்டு பெரும் இலாபம் கிடைக்கிறது. மீன்வளம் அருகிக் கொண்டுபோவதே இதன் எதிர்மறையான விளைவாகும். தமிழ்நாட்டு கடலில் குறிப்பாக பாக்குநீரிணையின் இந்திய பக்கத்தில் இதுவே நிலைமை.
இலங்கை கடற்பரப்புக்குள் தமிழ்நாட்டு மீனவர்கள் ஊடுருவி சட்டவிரோதமாக மீன்பிடிப்பதற்கு இது ஒரு மேலதிக காரணமாகும். பெரியளவில் இழுவைப்படகுகளை பயன்படுத்துவதன் மூலமாக இந்திய மீனவர்கள் இலங்கையின் கடல்வளங்களை நிர்மூலம் செய்து வருகின்றார்கள். இன்னும் சில வருடங்களில், மீன்பிடியை நிலைபேறான ஒரு தொழிலாகச் செய்வது சாத்தியமில்லாமல் போகக்கூடிய அளவுக்கு இலங்கையின் கடல்வளங்கள் அருகிப் போய்விடலாம். தங்களது சொந்த கடல் வளங்களுக்கு மீட்டெடுக்கமுடியாத பாதிப்பை ஏற்படுத்திய சுயநலம் கொண்ட தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கையின் கடல்வளத்தையும் அழித்துவிடுவதில் மும்முரமாக இருக்கிறார்கள்
துன்பந்தரும் முரண்நகை
இந்த நிலைவரம் துன்பந்தரும் ஒரு முரண்நகையாகும். பொதுவில் இந்தியாவும் குறிப்பாக தமிழ்நாடும் கடந்த காலத்தில் இலங்கைத் தமிழர்களை மிகுந்த அபிமானத்துடன் நோக்கின. இலங்கையில் பெரும்பான்மையினத்தவர்களின் வன்முறைகளினால் பாதிக்கப்பட்டபோது ஆயிரக்கணக்கான தமிழர்கள் தஞ்சம் தேடி தமிழ்நாட்டுக்கே சென்றார்கள். இப்போதும் கூட ஒரு இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் தமிழ்நாட்டில் அகதிகளாக வாழ்கிறார்கள். கடலாலும் குடியுரிமையாலும் பிரிக்கப்பட்டிருக்கின்ற போதிலும், இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டில் உள்ள தங்களது சகோதர்களுடன் அரவணைப்பு உறவுமுறையைக் கொண்டிருக்கிற்ர்கள்.
ஆனால், மீனவர் பிரச்சினை அந்த உறவுமுறையை மாற்றத் தொடங்கியிருப்பது கவலைக்குரியதாகும். அன்பாதரவுடன் நோக்குவதற்கு பதிலாக இலங்கை தமிழ் மீனவர்கள் தமிழ்நாட்டு மீனவர்களை ஆக்கிரமிப்பாளர்களாக நோக்கும் ஒரு துரதிர்ஷ்டவசமான நிலை. இலங்கை தமிழர்கள் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமளவுக்கு நன்றியுடையவர்களாக இருக்கிறார்கள். இந்திய தலையீடு இல்லையென்றால், 1983 ஜூலையில் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவன்செயல் முடிவுக்கு வந்திருக்காது. இப்போதும் கூட மீண்டும் ஒரு ” கறுப்பு ஜூலை ” நிகழுமானால் தமிழர்கள் இந்தியாவுக்குத்தான் தப்பியோடுவார்கள். ஆனால், கடற்தொழில் என்று வரும்போது அண்ணன் தம்பியை மிகவும் நேர்மையற்ற முறையில் நடத்துகிறான்.
மீட்கமுடியாத பாதிப்பு
தமிழ்நாட்டு மீனவர்கள் இரக்கமற்ற முறையிலும் பேராசையுடனும் இலங்கையின் வடபகுதி கடல்வளங்களை சுரண்டுவதன் மூலமாக எமது கடல் உயிரினங்களுக்கு மீட்கமுடியாத பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள் என்பது தெளிவானது. மேலும், தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கையில் உள்ள தங்களது தமிழ்பேசும் சகோதரர்களை நம்பமுடியாத அளவுக்கு பகைமையுடன் நோக்குகிறார்கள். இதற்கான காரணங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து இந்த கட்டுரையின் இரண்டாம் பாகத்தில் பார்ப்போம்.
_________________
D.B.S.Jeyaraj can be reached at dbsjeyaraj@yahoo.com
ஆங்கில மூலம்: டி. பி. எஸ். ஜெயராஜ் (Daily Financial Times)
தமிழில்: வீரகத்தி தனபாலசிங்கம்
நன்றி: வீரகேசரி
******************************************************************************

