ரணில் விக்கிரமசிங்கவை இலக்குவைக்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சட்டத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறதா?

டி.பி.எஸ். ஜெயராஜ்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐந்து தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக அரசியலில் இருக்கிறார். பாராளுமன்ற உறுப்பினராக, பிரதி அமைச்சராக, கபினெட் அமைச்சராக, எதிர்க்கட்சி தலைவராக, பிரதமராக, ஜனாதிபதியாக பதவிகளை வகித்த விக்கிரமசிங்க அரசியலில் ‘ பயனிழந்துபோன ஒரு சக்தி ‘ என்று அடிக்கடி வர்ணிக்கப்பட்டு வந்திருக்கிறார். உறுதிவாய்ந்த ரணில் அரசியல் களத்தில் வலிமையுடன் திரும்பவும் குதித்து எப்போதுமே தனது எதிரிகளை தவறு என்று நிரூபித்து வந்திருக்கிறார். அண்மைய நிகழ்வுகள் மன எழுச்சிமிக்க ரணில் தன்னை எளிதில் தள்ளுபடி செய்துவிடக்கூடிய ஒரு ஆள் அல்ல என்று மீண்டும் நிரூபிக்கக்கூடும் என்பதற்கான அறிகுறியாக தோன்றுகின்றன.

ரணில் விக்கிரமசிங்க 2025 ஆகஸ்ட் 22 ஆம் திகதி குற்றப்புலனாய்வு பொலிசாரினால் (சி.ஐ.டி. ) கைதுசெய்யப்பட்டு பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் 5 (1) பிரிவு மற்றும் தண்டனைச் சட்டக்கோவையின் 386 &388 பிரிவுகளின் கீழ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார். அவர் ஆகஸ்ட் 26 ஆம் திகதி வரை நான்கு நாட்களுக்கு கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நிலுப்புலி லங்காபுரவினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அதன் மூலமாக விக்கிரமசிங்க இலங்கையின் வரலாற்றில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முதலாவது முன்னாள் ஜனாதிபதியாகவும் முன்னாள் பிரதமராகவும் விளங்குகிறார்.

கைவிலங்கிடப்பட்ட நிலையில் அவர் சிறைச்சாலை வாகனத்தில் மகசீன் சிறைச்சாலைக்கு கூட்டிச்செல்லப்பட்டார். அங்கு சென்ற பிறகு முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. முதலில் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் பிறகு அங்கிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

விக்கிரமசிங்கவுக்கு இரத்தக்குளாய்களில் மூன்று அடைப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும் இதயத் தசைகள் அழுகல் நீரிழிவு மற்றும் சுவாசப்பைத் தொற்று நோய் ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கண்டறியப்பட்டது. இந்த நோய்களின் விவைான பாதிப்புக்கள் வெளித்தோற்றத்தில் தெரியவராது. கடந்த ஏழு வருடங்களாக இருதயநோயினால் விக்கிரமசிங்க பாதிக்கப்பட்டிருக்கிறார்.

கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 26 ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது உடல்நிலை காரணமாக விக்கிரமசிங்கவினால் ஆஜராக இயலாமல் போய்விட்டது. தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் படுத்திருந்த வண்ணம் இணையவழியின் மூலமாக நீதிமன்றத்தில் தனது பிரசன்னத்தை உறுதிசெய்துகொண்டார் .

விக்கிரமசிங்வுக்காக முன்னாள் சட்டமா அதிபரும் அமைச்சருமான திலக் மாரப்பன, ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜா பிரேமரத்ன ஆகியோர் தலைமையில் ஆஜரான சட்டத்தரணிகள் குழு உடல்நிலையை கருத்திற்கொண்டு அவருக்கு பிணை வழங்குமாறு கோரியது. விக்கிரமசிங்கவின் அன்றைய உடல்நிலை தெடர்பான விரிவான மருத்துவ அறிக்கைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றில் தேசிய வைத்தியசாலையைச் சேரந்த ஆறு விசேட வைத்திய நிபுணர்களின் அறிக்கைகளும் அடங்கும்.

சட்டத்தரணிகளின் வாதங்களை கேட்டதுடன் மருத்துவ அறிக்கைகளையும் பரிசீலனை செய்த கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நிலுப்புலி லங்காபுர முன்னாள் ஜனாதிபதி, பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கின்ற போதிலும் பிணையில் செல்ல அனுமதித்தார். தலா ஐந்து மில்லியன் ரூபா மூன்று சரீரப்பிணையில் விக்கிரமசிங்க விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு மீண்டும் 2025 அக்டோபர் 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படும்.

‘ கட்டவிழ்த்து விடப்பட்டது’

ரணில் ஒருசில தினங்கள் மேலதிகமாக வைத்தியசாலையில் தங்கியிருந்தார். ஆகஸ்ட் 29 ஆம் திகதி அவர் அங்கிருந்து வெளியேறினார். ஒரு நூலைக் கையில் வைத்திருந்த வண்ணம் அவர் வெளியேறியதை காண்பிக்கும் படம் பரவலாக பிரபல்யம் பெற்றது. அது ‘ கட்டவிழ்த்து விடுவிக்கப்படடது’
( Unleashed) என்ற தலைப்பில் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் போறிஸ் ஜோன்சன் எழுதிய அவரது சுயசரிதையே அந்த நூல். கடுமுனைப்பான தலைப்புடனான நூல் விக்கிரமசிங்கவின் எதிர்கால அரசியல் பற்றி பெருமளவு பரபரப்பும் ஊகங்களும் கிளம்புவதற்கு வழிவகுத்தது. ‘ பயனிழந்துபோன சக்தி சுகாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் மீண்டும் அரசியல் மைய அரங்கிற்கு வரப்போகின்றது என்று தோன்றியது.

விக்கிரமசிங்கவின் கைதையும் விளக்கமறியலையும் அடுத்து எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் எதிர்பாராத வகையிலான ஒருமைப்பாடும் ஐக்கியமும் ஏற்பட்டதை காணக்கூடியதாக இருந்தது. முன்னாள் ஜனாதிபதியின் கைதை கண்டனம் செய்வதற்கு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் செய்தியாளர் மகாநாடுகளைக் கூட்டினார்கள். இந்த தலைவர்களில் பலர் கடந்த காலத்தில் விக்கிரமசிங்கவை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்தவர்கள். விக்கிரமசிங்கவுக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான நட்பார்வம் குன்றிய உறவுமுறையில் ஒரு சுமுகநிலை ஏற்படுவதாக தோன்றியதே அரசியல் சூழ்நிலையில் ஏற்பட்ட இந்த மாற்றத்தில் மிகவும் கவனிக்கத்தக்க ஒரு அம்சமாக இருந்தது.

ஐக்கிய தேசிய கட்சிக்கும் அதில் இருந்து பிரிந்துசென்ற ஐக்கிய மக்கள் சக்திக்கும் (சமகி ஜன பலவேகய) இடையில் மீள் இணைவு ஏற்படக்கூடும் என்று அரசியல் வட்டாரங்களில் இப்போது ஒரு நம்பிக்கை உணர்வு நிலவுகிறது. அரசியல் போக்ககளை இந்த கட்டத்தில் மதிப்பிடுவது சரியானதாக இருக்காது. ஆனால், கட்டவிழும் புதிய அரசியல் நாடகத்தில் ஒரு முன்னணிப் பாத்திரத்தை விக்கிரமசிங்க வகிக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது போன்று தோன்றுகிறது. அவரின் எதிர்கால அரசியல் உடல்நிலையிலேயே தங்கியாருக்கிறது.

வீடு திரும்பிய பிறகு கண்டிப்பான மருத்துவ கவனிப்பு, கண்காணிப்பின் கீழ் இருந்துவரும் விக்கிரமசிங்க தான் கைது செய்யப்பட்ட வேளையில் இருந்து தன்னை ஆதரித்த சகலருக்கும் நன்றியறிதலை வெளிப்படுத்தினார். தனது கைதின்போது நேரடியாகவும் இணைய வழியிலும் ஒருமைப்பாட்டை வெளிக்காட்டிய பலருக்கும் குழுக்களுக்கும் நன்றிகூறி விக்கிரமசிங்க விசேட காணொளிச் செய்தி ஒன்றை வெளியிட்டார். ” நான் கைது செய்யப்பட்ட நேரம் தொடக்கம் எனக்கு உறுதுணையாக நின்ற சகலருக்கும் நன்றி கூறுகின்றேன். என்னை ஆதரித்தவர்கள் சகலரையும் விரைவில் சந்திப்பதற்கு உத்தேசித்திருக்கிறேன்.மீண்டும் உங்கள் எல்லோருக்கும் எனது நன்றி ” என்று அவர் அந்த செய்தியில் கூறினார்.

ரணிலை தூற்றுதல்

அதேவேளை, அரசாங்க அரசியல்வாதிகளும் தேசிய மக்கள் சக்தியின் பரிவாரங்களும் விக்கிரமசிங்கவுக்கு எதிரான பல்வேறு வகைப்பட்ட பிரகிருதிகளும் ரணிலை விமர்சிக்கும் தங்களது விருப்பான பொழுது போக்கை தொடர்ந்த வண்ணம் இருந்தனர். தாங்கள் நினைத்ததை போன்று ரணிலை விளக்கமறியல் சிறைக் கூண்டுக்குள் அடைக்க முடியாமல் போய்விட்டதே என்று அதிகாரத்தின் படிக்கட்டுகளில் இருப்பவர்கள் சிலருக்கு பெரிய ஏமாற்றம்.

எவ்வளவு தான் சிறந்தமுறையில் வகுத்தாலும் திட்டங்கள் தவறாகப் போய்விடுவதுண்டு என்று எழுதினார் றொபேர்ட் பேர்ண்ஸ். முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்கவை அவமானப்படுத்தி தண்டிப்பதற்கான திட்டமும் குறைந்த பட்சம் தற்போதைக்காவது தவறாகப்போய்விட்டது போன்று தெரிகிறது.

எனது முன்னைய கட்டுரையில் விக்கிரமசிங்கவின் கைதுக்கும் விளக்கமறியலுக்கும் வழிவகுத்த சூழ்நிலைகளின் பின்னணி மீது கவனம் செலுத்தி அவர் இலக்கு வைக்கப்படுவது ஒரு அரசியல் சூனிய வேட்டையா என்று கேள்வி எழுப்பியிருந்தேன். இந்த அம்சங்களை மேலும் விரிவாக இந்த கட்டுரையில் ஆராய்கிறேன்.


பயனிழந்துபோன சக்தி

இந்த கட்டுரையின் முற்பகுதியில் குறிப்பிட்டதை போன்று ரணில் விக்கிரமசிங்க கடந்த காலத்தில் அவரது எதிரிகளினால் தொடரச்சியான தோல்வியாளர் என்றும் பயனிழந்துபோன சக்தி என்றும் எளிதாக நிராகரிக்கப்பட்டார். இருந்தாலும் பயனிழந்துபோனதாகக் கருதப்படுகின்ற இந்த சக்தி கயமைத்தனமான முறையில் தொடர்ச்சியாக பழித்துரைக்கப்பட்டு வருகிறார்.

கைவிலங்கிடப்பட்ட நிலையில் சிறைச்சாலை வாகனத்தில் ரணில் ஏற்றிச்செல்லப்பட்ட காட்சியைக் கண்டு மகிழந்தவர்கள் அவர் கையில் ‘ கட்டவிழ்த்து விடப்பட்டது’ என்ற தலைப்புடனான நூலை கையில் வைத்துக் கொண்டு உற்றசாகத்துடன் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியதைக் கண்டு ஏமாற்றம் அடைந்திருப்பார்கள்.

இதன் விளைவாகத்தான் ரணிலுக்கு எதிரான தாக்குதல்கள் தீவிரமடைந்திருக்கின்றன போலும். பயனிழந்துபோன சக்தி என்றும் தொடர்ச்சியான தோல்வியாளர் என்றும் வர்ணிக்கப்பட்ட ஒருவர் கடுமையான தாக்குதல்களுக்கு இலக்காக வேண்டியிருப்பது உண்மையில் விசித்திரமானதாகவும் வேடிக்கையானதாகவும் இருக்கிறது. செத்துப்போன குதிரைக்கு சவுக்கால் அடிக்கமாட்டார்கள் என்று செத்துப்போன நாயை எவரும் உதைக்க மாட்டார்கள் என்றும் கூறுவார்கள். ரணில் உண்மையில் ” முடிந்துபோன ” ஒருவர் என்றால், ஏன் அவர் மீது தொடர்ந்தும் தாக்குதல் நடத்தப்படுகிறது? விக்கிரமசிங்க எதை கட்டவிழ்த்துவிடக்கூடிய ஆற்றல் கொண்டவர் என்பது பற்றி அவரது அரசியல் எதிரிகள் மத்தியில் இருக்கும் கலக்கமும் பாதுகாப்பின்மை உணர்வும்தான் அதற்கு காரணமா?

பட்டலந்த

எனது முன்னைய கட்டுரை பட்டலந்த தடுப்பு முகாம் பற்றியும் ரணில் விக்கிரமசிங்க பற்றியும் மிகவும் விரிவாக ஆராய்ந்தது. விக்கிரமசிங்க விரைவில் சட்ட நடவடிக்கையை எதிர்நோக்குவார் என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரும் சபை முதல்வருமான பிமால் இரத்நாயக்க பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்பித்த பிறகு கூறினார். ஆனால், சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டபோது அது பட்டலந்த தொடர்பானதாக இல்லாமல் வொல்வெர்ஹம்டன் பற்றியதாக இருந்தது.

மூன்று காரணங்கள்

இதற்கு மூன்று காரணங்கள் இருக்கலாம். முதலாவதாக, பட்டலந்த காயங்களை மீண்டும் திறப்பது தங்களுக்கும் பாதகமாக அமையக் கூடும் என்பதை ஜே.வி.பி.யினர் புரிந்து கொண்டார்கள். 1987 — 1990 காலப்பகுதியில் ஜே.வி.பி. செய்த அட்டூழிங்கள் மற்றும் கொடூரமான நடத்தைகள் பற்றிய நினைவுகள் கணிசமானளவுக்கு மங்கிப்போய்விட்டன. தேசிய மக்கள் சக்தி என்ற போர்வையை அணிந்துகொண்டதன் மூலம் தங்களை ஒரு புதிய அமைப்பாக காட்டிக்கொண்ட ஜே.வி.பி.யினரால் மக்களை திசைகாட்டிக்கு வாக்களிக்க வைக்கக் கூடியதாக இருந்தது. ஆனால், பட்டலந்த விசாரணையை முன்னெடுத்தால் அது பழைய இருண்ட நினைவுகளை மீள்விக்கக்கூடும். பட்டலந்த சித்திரவதை முகாம் அமைக்கப்படுவதை அவசியப்படுத்தியது எது என்று மக்கள் மனங்களில் கேள்வி எழமுடியும்? ” தூய்மையான கரங்களுடன் நீதியை நாடு” என்ற முதுமொழியின் பெறுமதியை ஜே.வி.பி. விளங்கிக்கொண்டது.

இரண்டாவதாக, சடடவிரோத தடுப்புக்காவல், சித்திரவதை மற்றும் மரணதண்டனைகளுக்கு நேரடியாகப் பொறுப்பாக இருந்தவர் யார் என்ற கேள்வி இருக்கிறது. உயர்மட்டத்தில் இருந்து உத்தரவுகள் வந்திருக்கக்கூடும், ஆனால், அவற்றை நிறைவேற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டவர்கள் பொலிஸ், விசேட அதிரடிப்படை, முப்படைகள் மற்றும் பரா இராணுவ அமைப்புக்களைச் சேர்ந்தவர்களே. ரணிலை குற்றச்சாட்டில் சிக்கவைக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்படக்கூடிய ஒரு தீவிரமான விசாரணை பொலிஸையும் ஆயுதப் படைகளைச் சேய்ந்தவர்களையும் குற்றச்சாட்டில் சிக்கவைக்கக்கூடியதாக நினையாப் பிரகாரமான விளைவுகளைக் கொண்டு வந்திருக்கக்கூடும்.

ஜே.வி.பி. 1994 ஆம் ஆண்டில் இருந்து ஆயுதப்படைகளை பேணிவளர்த்து வந்தது. முப்படைகளின கூட்டு அமைப்பான ‘ திட்டன ‘ அமைக்கப்பட்டது. அதனால், பட்டலந்த விசாரணையை முன்னெடுப்பது ஆயுதப்படைகளை அன்னியப்படுத்தி பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விளைவுகளை கொண்டு வரலாம்.

மூன்றாவதாக, பட்டலந்த பயங்கரத்தில் ரணிலின் உண்மையான நேரடி ஈடுபாடு குறித்து ஒரு கேள்வி இருக்கிறது. எனது முன்னைய கட்டுரையில் கூறியதைப் போன்று, பட்டலந்த தடுப்புக்காவல் முகாமை அமைப்பதற்கு பட்டலந்த வீடமைப்பு தொகுதியில் இருந்து கட்டிடங்களை பெறுவதில் விக்கிரமசிங்க ஒரு பங்கை வகித்ததாக கூறப்பட்டது. ஆனால், சித்திரவதைகளில் நேரடியாக ரணிலுக்கு ஈடுபாடு இருந்ததாக காட்டுவதற்கு விக்கிரமசிங்கவின் அரசியல் எதிரிகள் கடந்த காலத்தில் முயற்சித்திருந்த போதிலும், சித்திரவதை முகாமில் நடந்தவற்றில் அவருக்கு தொடர்பு இருக்கவில்லை.

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க 1994 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக வந்தபோது அவர் பல விசாரணை ஆணைக்குழுக்களை நியமித்தார். அவற்றில் ஒன்று பட்டலந்த தடுப்புக்காவல் முகாம் தொடர்பானது. தனது பிரதான அரசியல் எதிரியான விக்கிரமசிங்கவை ‘ சிக்கவைப்பதற்காகவே’ பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவை ஜனாதிபதி குமாரதுங்க நியமித்ததாக பெருமளவு ஊகங்கள் அடிபட்டன. ஆனால், அந்த ஆணைக்குழுவினால் விக்கிரமசிங்கவை பட்டலந்தவில் இடம்பெற்ற சித்திரவதை நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டதாக குற்றச்சாட்டில் சிக்க வைக்கக்கூடியதாக செல்லுபடியாகக்கூடிய எந்தவொரு சான்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

மத்திய வங்கி

இந்த சூழ்நிலைகளின் கீழ் பட்டலந்த தொடர்பாக ரணில் விக்கிரமசிக்க மீது வழக்குத் தொடுக்கும் தெரிவை கைவிடுவதை தவிர ஜே.வி.பி. க்கு வேறு தெரிவு இருக்கவில்லை. அவருக்கு எதிராக குற்றச்சாட்டை சுமத்துவதற்கு மத்திய வங்கி திறைசேரி பிணைமுறி விவகாரம் இன்னொரு தெரிவாக இருந்தது. அந்த விவகாரம் தொடர்பில் அதிகாரிகள் அவரை விசாரணை செய்தார்கள். ஆனால், அவருக்கு எதிராக நிரூபிப்பதற்கு அதில் உருப்படியாக எதுவுமில்லை. அவரைக் குறைகூறுபவர்களும் அரசியல் எதிரிகளும் அந்த விவகாரம் தொடர்பில் அவர் மீது தொடர்ந்தும் சேறுபூசிக் கொண்டேயிருக்கிறார்கள். எவ்வாறிருந்தாலும், திறைசேரி பிணைமுறி விவகாரத்தின் விளைவாக பொதுமக்களின் மனதில் ரணிலின் ‘ தூய்மையான பிம்பத்துக்கு’ ( Clean image ) ஓரளவு பாதிப்பு ஏற்படடுவிடடது என்பதை ஒத்துக்கொண்டேயாக வேண்டும். இந்த விவகாரத்தில் தவறு எதையும் செய்ததாக அவர் குற்றவாளியாக கணடுபிக்கப்பட்டதாக இது அர்த்தப்படாது.

செப். 2023 ஐக்கிய இராச்சிய விஜயம்

இத்தகைய பின்புலத்தில் 2023 செப்டெம்பர் ஐக்கிய இராச்சிய விஜயம் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டது. மிகவும் அண்மையில் ஜனாதிபதி செயலகத்துக்கு மாற்றம் செய்யப்பட்ட அதிகாரி ஒருவரினால் செயலகத்தில் உள்ளக கணக்காய்வு ஒன்று செய்யப்ட்டது. 2023 ஆம் ஆண்டில் விக்கிரமசிங்க செய்ததாகக் கூறப்படும் ” மோசடி ” ஒன்று கண்டறியப்பட்டது அல்லது அம்பலப்படுத்தப்பட்டது. ஐக்கிய இராச்சியத்துக்கு மேற்கொண்ட தனிப்பட்ட விஜயத்துக்கான செலவினங்களுக்காக ( அந்த விஜயத்தை உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றின் பகுதியாக காண்பித்து) அரசாங்க நிதியைப் பய்படுத்தினார் என்பதே விக்கிரமசிங்க செய்ததாக குறப்படும் மோசடியாகும். தனது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட வொல்வெர்ஹம்டன் பல்கலைக்கழக நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்கு ரணில் 2023 செப்டெம்பர் 22 — 23 பிரிட்டனுக்கு பயணம் செய்தார் என்று கூறப்பட்டது.

ஐக்கிய இராச்சியத்துக்கான விஜயம் உத்தியோகபூர்வமானது அல்ல என்றும் அந்த விஜயம் கியூபாவுக்கும் அமெரிக்காவுக்குமான உத்தியோகபூர்வ விஜயங்களின் ஒரு பகுதியாக இணைத்துக் கொள்ளப்பட்டது என்றும் மேலும் கூறப்பட்டது. விக்கிரமசிங்கவின் 2023 லண்டன் பயணம் தனிப்பட்ட நோக்கம் கொண்டது என்றும் தனிப்பட்ட விஜயத்துக்கு உத்தியோகபூர்வ செலவினத்தை பயன்படுத்தியது தனிப்பட்ட நன்மைக்காக ஜனாதிபதியின் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்ததற்கு சமமானதாகும் என்று கூறப்பட்டது.


ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தி பதற்றம்

அதேவேளை, ஜே.வி.பி.யின் ‘பழைய ‘ கடும்போக்கு மார்க்சியவாத உறுப்பினர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் ‘ புதிய ‘ தாராளவாத உறுப்பினர்களுக்கும் இடையில் பதற்றநிலை ஏற்படத் தொடங்கியது. ஜே வி.பி. தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து 40 — 50 தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பிரிவொன்று பிரிந்துசெல்லக்கூடும் என்று சந்தேகிக்கப்பட்டது. அரசாங்க அணிகளை பிளவுபடுத்தும் செயற்பாடுகளில் சிறந்த மதியூகியான விக்கிரமசிங்கவுக்கு சம்பந்தம் இருந்ததாகவும் சந்தேகிக்கப்பட்டது. ஜே.வி.பி.யின் பழைய தலைவர்கள் மத்தியில் அவருக்கு எதிரான பகைமை அதிகரித்தது.

இன்னொரு சிக்கலான காரணியும் இருக்கிறது. அநுரா குமார திசநாயக்கவும் ஜே.வி.பி. தலைமையானான தேசிய மக்கள் சக்தியும் பல்வேறு வாக்குறுதிகளை நாட்டு மக்களுக்கு வழங்கிய வண்ணமே அதிகாரத்துக்கு வந்தனர். ரணில் விக்கிரமசிங்கவை கடுமையாக கண்டனம் செய்த அவர்கள் அவரின் பொருளாதாரக் கொள்கைகளை குறிப்பாக, சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்ட உடன்படிக்கையை குற்றஞ்சாட்டினர்.

அவ்வாறு இருந்தாலும், அதிகாரத்துக்கு வந்த பிறகு புதிய ஜனாதிபதியும் அரசாங்கமும் தங்களது எந்தவொரு பிரதான தேர்தல் வாக்குறுதியையும் காப்பாற்றவில்லை. மேலும் விக்கிமசிங்கவின் அதே கொள்கைகளையே குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை ஜனாதிபதி திசநாயக்கவும் அவரது அரசாங்கமும் பின்பற்ற ஆரம்பித்தனர். திசைகாட்டிக்கு வாக்களித்த மக்களில் ஒரு பிரிவினர் மத்தியில் ரணிலின் செல்வாக்கு அதிகரித்துக் கொண்டிருந்தது.

ரணில் காரணி அரசியல் பரப்பில் ஜே.வி.பி.க்கு அச்சுறுத்தலாக வரக்கூடியதாக தோன்றிக்கொண்டிருக்கிறது. இந்த அரசியல் அச்சுறுத்தலுக்கு எதிராக எதையாவது செய்ய வேண்டியிருந்தது. அரசியலில் செல்லுபடியாகக் கூடிய காலம் முடிவடைந்துவிட்ட ஒரு பயனிழந்துபோன ஒரு சக்தியாக விக்கிரமசிங்கவை ஏளனம் செய்த ஜே.வி.பி.யின் உயர்மட்டத் தலைவர்கள் அவரின் ஆறறல்களைப் பற்றி நன்கு அறிவார்கள். விரைவாக எதையாவது செய்யவேண்டும் என்று அவர்கள் உணர்ந்தார்கள்.

ஊழல் முறைப்பாடு

விக்கிரமசிங்க செய்ததாகக் கூறப்படுகின்ற மோசடி தொடர்பாக ஜனாதிபதி அநுரா குமார திசநாயக்கவின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்கவின் சார்பில் ஜனாதிபதி செயலகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவரினால் 2025 மே 23 ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதையடுத்து சி.ஐ.டி. விசாரணையை ஆரம்பித்தது. 2025 ஜூனில் சி.ஐ.டி.யினால் பி.- அறிக்கை தயாரிக்கப்பட்டது.

விக்கிரமசிங்க செய்ததாக கூறப்படுகின்ற மோசடி குறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணை செய்தனர். வெளிநாடொன்றுக்கு பயணம் செய்கின்றபோது முன்னாள் அரச தலைவருக்கு இருக்கக்கூடிய உரிமைகள் மற்றும் வசதி வாய்ப்புக்களுடன தொடர்புடையது என்பதால் இந்த விவகாரம் அரசியல் சர்ச்சைக்குரியதாக இருந்தது. வெளிநாட்டுக்கு உத்தியோகபூர்வ அல்லது தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொள்கின்றபோது அரச தலைவர் ஒருவர் பயன்படுத்தக்கூடிய உரித்துக்கொண்ட அரச வளங்கள் எவை? அத்தகைய சிக்கலான பிரச்சினைகளில் சட்டமா அதிபரிடமிருந்து ஆலோசனை பெறவேண்டிய தேவை இருக்கிறது. ஆனால், விசாரணை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக சட்டமா அதிபருடன் கலந்தாலோசிக்கப்பட்டது என்பதற்கான அறிகுறிகள் கிடைக்கக் கூடியதாக இருந்தாக ஊடகச் செய்திகளில் இருந்து அறியமுடியவில்லை.

சி.ஐ.டி. அதன் விசாரணையை தொடர்ந்து முன்னெடுத்து 38 பேரை அழைத்து வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்டது. ஐக்கிய இராச்சியத்துக்கான பயணத்தில் விக்கிரமசிங்கவுடன் சென்ற அதிகாரிகள் மற்றும் பாதூகாப்பு அதிகாராகளும் அவர்களில் அடங்குவர். ஜனாதிபதி செயலகத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் விக்கீரமசிங்கவின் செயலாளர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டன.


ஆகஸ்ட் 22 வெள்ளிக்கிழமை

இறுதியாக ஆகஸ்ட் 22 ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு விக்கிரமசிங்கவுக்கு ஆகஸ்ட் 19 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பிறகு விக்கிரமசிங்க கைது செய்யப்படக்கூடும் என்று அவரது சட்டத்தரணிகள் அவரிடம் கூறினர். முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சி.ஐ.டி. தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பிறகு அவர்களைக் கைதுசெய்து நீதிமன்றங்களில் ஆஜர் செய்யும் ஒரு நடைமுறை அண்மைக்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 22 வெள்ளிக்கிழமை என்பதால் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு பிணை வழங்கப்படாமல் வாரஇறுதியில் விளக்கமறியலில் வைக்கப்படக்கூடிய சாத்தியப்பாடு இருந்தது.

ஆனால், தான் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படப்போவதில்லை என்ற ஒரு நம்பிக்கை விக்கிரமசிங்கவுக்கு இருந்தது. தனது வாக்குமூலம் மாத்திரமே பதிவுசெய்யப்படும் என்ற அபிப்பிராயமே அவரிடமிருந்தது. சட்டத்தரணியான அவர் உத்தியோகபூர்வ நடைமுறைகளில் நன்கு பரிச்சயம் கொண்டவரும் கூட. எந்த குற்றத்திலும் ஒரு குற்றவாளி அல்ல என்பது அவரது அபிப்பிராயமாக இருந்தது. அதனால், பொலிசார் தனது வாக்குமூலத்தை ஏற்றுக்கொண்டு திருப்திப்படுவார்கள் என்று விக்கிரமசிங்க நினைத்தார். ஆனால், விதிவசமான அந்த வெள்ளிக்கிழமை அவ்வாறு நடைபெறவில்லை.

விக்கிரமசிங்கவின் வாக்குமூலம் பெறப்பட்ட பிறகு அவர் கைது செய்யப்பட்டு தற்போதைய சி.ஐ.டி. பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் சி.ஐ.டி. அதிகாரிகள் குழுவொன்றினால் நீதிமன்றத்துக்கு கூட்டிச் செல்லப்பட்டார். விக்கிரமசிங்க மீது பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் 5 (1) பிரிவு மற்றும் தண்டனைச் சடடக்கோவையின் 386 & 388 பிரிவுகளின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டது. அவர் செய்ததாகக் கூறப்படுகின்ற குற்றம் பொதுச்சொத்துக்கள் சட்டத்தின் கீழ் வருவதால் பிணை வழங்க முடியாது.

முப்பது பக்கங்கள் கொண்ட பி. – அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு கேடடுக் கொண்டார். மருத்துவ காரணங்களின் அடிப்படையில் விக்கிரமசிங்கவை பிணையில் விடுவிக்குமாறு அவரின் சட்டத்தரணிகள் மாஜிஸ்திரேட்டிடம் வேண்டிக்கொண்டனர். ஆனால், விக்கிரமசிங்கவை மாஜிஸ்திரேட் ஆகஸ்ட் 26 ஆம் திகதிவரை நான்கு நாட்களுக்கு விளக்க மறியலில் வைக்க உத்தரவிடடார்.

ரணில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதற்கான எதிர்வினை எதிர்பார்த்திராத அளவுக்கு பலமானதாக இருந்தது. மகிந்த ராஜபக்ச மற்றும் சஜித் பிரேமதாச உட்பட பரந்தளவில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கடுமையான கண்டனத்தை வெளியிட்டனர். பல சட்டத்தரணிகள், கல்விமான்கள் மற்றும் ஊடக ஆய்வாளர்களும் கண்டனம் செய்தனர். ரணில் விக்கிரமசிங்கவை இலக்குவைத்து அரசாங்கம் அரசியல் சூனியவேட்டை நடத்துவதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்கள் குற்றஞ்சாட்டினர். விக்கிரமசிங்கவை இலக்கு வைப்பதற்கு அரசாங்கம் சட்டத்தை ஆயுதமாகப் பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. செயற்பாடுகளின் சட்டபூர்வத்தன்மை (Legality) ஏற்றுக் கொள்ளப்படுகிறது, ஆனால், நியாயபூர்வத்தன்மை (Legitimacy ) தொடர்பில் கேள்வி இருக்கிறது.

யூரியூபர் சுடா

யூரியூபர் ஒருவர் கூறிய எதிர்வு விக்கிரமசிங்கவுக்கு எதிரான நடவடிக்கைகள் பழிவாங்கும் நோக்குடனானவை என்றும் அரசியல் நோக்கம் கொண்டவை என்றும் நிலவுகின்ற நம்பிக்கைக்கு வலுச்சேர்ப்பதாக இருந்தது.’ சுடா ‘ என்று பிரபலமாக அறியப்படும் சுதந்த திலகசிறி என்ற யூரியூபர் ஆளும் ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் உயர்மட்டத் தலைவர்களுக்கு நெருக்கமானவர் என்று கருதப்படுகிறார்.

முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்க ஆகஸ்ட் 22 வெள்ளிக்கிழமை வாக்குமூலத்தைக் கொடுக்க சி.ஐ.டி.க்கு செல்வாராக இருந்தால், அதிகாரிகள் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கவேண்டியது ” கட்டாயமாகும்” என்று திரகசிறி சமூக ஊடகத்தில் பதிவொன்றைச் செய்திருந்தார். அவ்வாறு நடைபெறவில்லையானால், யூரியூப் நிகழ்ச்சிகளை தயாரிப்பதையே வைிட்டுவிடுவதாகவும் அவர் அந்த பதிவில் தெரிவித்திருந்தார்.

இந்த யூரியூப் நாடகம் ரணில் விக்கிரமசிங்கவை கைதுசெய்து விளக்கமறியலில் வைப்பதற்கான தீய்மானம் அதிகாரத்தில் உள்ளவர்களினால் ஏற்கெனவே எடுக்கப்பட்டிருந்தது என்பதுடன் அது பற்றி யூரியூபரைப் போன்ற உள் ஆள் ஒருவருக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியது.

அரசியல் பச்சைவிளக்கு

விக்கிரமசிங்க விவகாரத்தில் சட்டம் அதன் வேலையைச் செய்யும் என்பதுடன் பொலிசார் சுதந்திரமாகவே செயற்படுகின்றார்கள என்ற நிலைப்பாட்டையே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எடுத்திருந்தது. அந்த நிலைப்பாடு பெரும்பாலானவர்களினால் சந்தேகத்துடனேயே நோக்கப்பட்டது. அரசியல் பச்சைவிளக்கு காண்பிக்கப்படாமல் விக்கிரமசிங்க போன்ற மதிப்புவாய்ந்த ஒருவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவது கஷ்டமாகும். ரணில் விக்கிரமசிங்கவை அவமானப்படுத்தி ஒரு அரசியல் கண்காட்சியை காட்டுவதற்கான திட்டமிட்ட முயற்சி முன்னெடுக்கப்படுவதாக நம்பப்பட்டது. தவிரவும், வேட்டை தொடங்கிவிட்டது என்றும் விக்கிரமசிங்க மேலும் பல குற்றச்சாட்டுக்களுக்கு முகக்கொடுக்க வேண்டிய சாத்தியம் இருக்கிறது என்றும் சில அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் ஆரவாரத்துடன கூறிக் குதூகலித்தார்கள்.

முன்னாள் ஜனாதிபதி உண்மையிலேயே அரசாங்க நிதியை தனிப்பட்ட நோக்கங்களுக்கு தவறான முறையில் பயன்படுத்திருந்தார் என்றால், அந்த தொகையை அரசாங்கத்துக்கு திருப்பிச் செலுத்துவதற்கு வாய்ப்பை அவருக்குை கொடுத்திருக்க முடியும் என்று பக்கச்சார்பற்ற அவதானிகள் சுட்டிக்காட்டினார்கள். ஒரு முன்னாள் ஜனாதிபதிக்கு அத்தகைய கௌவரமான தெரிவைக் கொடுத்திருக்க வேண்டும். அந்த பணத்தை அவர் திருப்பிச் செலுத்த மறுத்திருந்தார் என்றால் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்கைத் தொடுக்கும் தெரிவைப் பரிசீலித்திருக்க முடியும்.

ரணிலுக்கு எதிரான நடவடிக்கையின் விளைவாக ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தவறான ஒரு மதிப்பீட்டைச் செய்து விட்டது போன்று தெரிகிறது. பொதுமக்கள் மத்தியில் பெரிய தாகாகத்தை ஏற்படுத்தாது என்று உணர்ந்த காரணத்தினால்தான் முதரல் இலக்காக விக்கிரமசிங்கவை தெரிவுசெய்து அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கக் கூடும். அதிகாரத் துஷ்பிரயோகக் குறாறச்சாட்டுக்கள் என்று வரும்போது மகிந்த ராஜபக்சவுக்கும் கோட்டாபய ராஜபக்சவுக்கும் எதிராக பல குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன.

மகிந்த ராஜபக்ச வெளிநாடுகளுக்கு விஜயங்களை மேற்கொண்ட வேளைகளில் எல்லாம் பெரும் எண்ணிக்கையில் உறவினர்களையும் பரிவாரங்களையும் கூட்டிச்சென்றார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது தனது செல்லப்பிராணியான நாய்க்குட்டியை ஏற்றுவதற்காக விமானம் ஒன்றை கொழும்புக்கு திசைதிருப்புவதற்கு அதிகாரத்தைப் பயன்படுத்தியது பற்றி கோட்டாபயவுக்கு எதிராக இன்னொரு குற்றச்சாட்டு இருக்கிறது. ஆனால், அந்த இரு உயர்மட்ட ராஜபக்சாக்கள் மீது கைவைக்கப்படவில்லை. அரசியல் ரீதியில் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து ஜே.வி.பி. அஞ்சுவது அதற்கு காரணமாக இருக்கலாம்.ரணில் விடயத்தில் அவ்வாறான அச்சம் ஆரம்பத்தில் அரசாங்கத்துக்கு இருக்கவில்லை. அதனாலதான் அவருக்கு எதிராக நடவடிக்கை.

பின்வாங்க முடியாத எல்லைக்கோடு

பொதுச்சொத்துக்கள் சட்டத்தின் கீழேயே ரணில் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. விதிவிலக்கான சூழ்நிலைகளை தவிர மற்றும்படி அந்த சட்டத்தின் கீழ் பிணைவழங்க முடியாது. கடந்த காலத்தில் எந்தளவுக்கு பொதுச்சொத்துக்களை தாங்கள் நிர்மூலம் செய்தார்கள் என்பதை ஜே.வி.பி.யினர் மறந்து விட்டார்கள் போன்று தோன்றுகிறது. அதனால் சிவப்புச்சட்டைத் தோழர்கள் காலடி வைப்பது புத்திசாலித்தனமானதாக இருக்காத ஒரு பகுதிக்குள் செல்வதற்கு ரணில் மீதான வெறுப்புணர்வு சிவப்புச்சட்டைத் தோழர்களை உந்தித் தள்ளியிருக்கிறது போன்று தெரிகிறது. விக்கிரமசிங்க கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் கூறியதைப் போன்று பின்வாங்க முடியாத எல்லைக் கோடு கடக்கப்பட்டுவிட்டது.

உண்மையான முகம் அம்பலம்

ஆனால் , அரசாங்கம் என்னதான் மறுத்தாலும், அவருக்கு எதிரான நடவடிக்கை ஒரு அரசியல் பழிவாங்கல் அல்ல என்பது பெருமளவுக்கு நம்ப முடியாததாக வந்துவிட்டது. அவரை இலக்கு வைப்பதற்கு சட்டம் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படவில்லை என்று நம்பமுடியாமல் இருக்கிறது. அதற்கு வலுவான சந்தேகங்கள் உள்ளன. சிறைச்சாலைக்கு கூட்டிச் செல்லப்பட்டபோது ” தற்போதைய நிருவாகத்தின் உண்மையான முகம் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது ” என்று ரணில் குறிப்பிட்டதாக கூறப்பட்டது.

____________

D.B.S.Jeyaraj can be reached at dbsjeyaraj@yahoo.com

ஆங்கில மூலம்: டி. பி. எஸ். ஜெயராஜ் (Daily Financial Times)

தமிழில்: வீரகத்தி தனபாலசிங்கம்

நன்றி: வீரகேசரி

******************************************************************************