சுண்டிக்குளி மகளிர் உயர்பாடசாலையின் 18 வயது மாணவி கிருசாந்தி குமாரசுவாமியின் துன்பக் கதையும் செம்மணி மனிதப் புதைகுழிகளும்

டி.பி.எஸ். ஜெயராஜ்

யாழ்ப்பாணக் குடாநாட்டில் மக்கள் செறிந்து வாழாத செம்மணி அண்மைய நாட்களாக ஐயத்துக்குரிய ஒரு பிரபல்யத்தை பெற்றிருக்கிறது. மக்களின் எண்ணத்தில் யாழ்ப்பாணத்தில் நல்லூர் பிரபல்யம் வாய்ந்த நல்லூர் கந்தசாமி கோவிலுடன் நேர்மறையாக நோக்கப்படுகின்ற அதேவேளை, செம்மணி மனிதப் புதைகுழிகளுடன் எதிர்மறையான எண்ணத்தில் நோக்கப்படுகின்றது.

இலங்கை ஆயுதப் படைகளுக்கும் விடுதலை புலிகள் இயக்கத்துக்கும் இடையிலான நீண்ட போரின் விளைவாக ஆட்கள் காணாமல் போன சம்பவங்களும் சட்டத்துக்கு புறம்பான கொலைகளும் பெருமளவில் இடம்பெற்றன. அந்த கொடூர சம்பவங்களின் அடையாளபூர்வமான சான்றாக செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் விளங்குகின்றன.

1998 ஜூலையில் யாழ்ப்பாண மாணவி கிருசாந்தி குமாரசவாமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்தமைக்காகவும் அவளது குடும்பத்தினரை கொலை செய்தமைக்காகவும் கோர்பரல் சோமரத்ன ராஜபக்சவும் ஏனைய சில படை வீரர்களும் குற்றவாளிகளாக காணப்பட்டனர். 1996 ஆம் ஆண்டில் கொல்லப்பட்ட 300 — 400 தமிழ்க் குடிமக்கள் செம்மணி பகுதியில் புதைக்கப்பட்டதாக ராஜபக்ச தனக்கு தீர்ப்பு வழங்கப்பட்ட தினத்தன்று நீதிமன்றத்தில் கூறினார்.

அவர் வெளியிட்ட தகவலைத் தொடர்ந்து 1999 ஆம் ஆண்டில் அந்த பகுதி தோண்டப்பட்டபோது 15 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் இரு எலும்புக்கூடுகள் 1996 ஆம் ஆணடில் காணாமல் போகச் செய்யப்பட்ட இளைஞர்களினுடயவை என்று அடையாளமும் காணப்பட்டது. அவர்கள் இருவரும் தாக்ககுதலுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள் என்று தடயவியல் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்ட போதிலும், வழக்கு தொடுப்பதற்கு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நீதி வழங்கப்படவில்லை. கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் பகுப்பாய்வுக்காக கிளாஸ்கோ பல்கலைக்கழகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. அவை இன்னமும் ஸ்கொட்லாந்திலேயே வைக்கப்பட்டிருக்கின்றன.

இவ்வருடம் பெப்ரவரி 13 ஆம் திகதி செம்மணி பகுதியில் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் நிர்மாணப் பணியாளர்கள் மனித எலும்புகளை கண்டெடுத்தனர். மயானத்தை புனர் நிர்மாணம் செய்யும் பணிகளில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர். அந்த பகுதியை ஒரு மனிதப் புதைகுழி என்று முறைப்படி பிரகடனம் செய்த யாழ்ப்பாணம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அதன் மேற்பார்வையில் அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதுவரையில் குழந்தைகள், சிறுவர்கள் உட்பட 67 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டிருக்கின்றன. புத்தகப் பை, விளையாட்டுப் பொம்மை, வளையல்கள், செருப்புக்கள் மற்றம் உடைகளின் துண்டுகள் என்று பல்வேறு தனிப்பட்ட பொருட்களும் புதைகுழிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டன. இரு வாரங்களுக்கு முன்னர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் ஜூலை 21 திங்கட்கிழமை முதல் தொடங்கப்பட்டிருக்கின்றன. மேலும் எலுப்புக் கூடுகள் மீட்கப்படுகின்றன.

புத்தகப் பை, விளையாட்டுப் பொம்மை போன்ற பொருட்களுடன் குழந்தைகள், சிறுவர்கள் உட்பட 60 க்கும் அதிகமான எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டிருப்பது தமிழ் மக்கள் மத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எலும்புக்கூடுகள் தமிழ்க்குடி மக்களினுடையவை என்று தோன்றுகிறது. கண்டெடுக்கப்படுபவை தொடர்பாக பல சிங்களவர்களும் அதிர்ச்சியும் கவலையும் வெளியிட்டிருக்கின்றனர். செம்மணியில் கண்டெடுக்கப்படும் மனித எச்சங்கள் 1996 ஆம் ஆண்டில் காணாமல் போகச்செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான குடிமக்களினுடையவை என்று நம்பப்படுகிறது. பல வருடங்களுக்கு பிறகு செம்மணி மண் பேசத் தொடங்கியிருக்கிறது.

1996 ஆம் ஆண்டில் நடந்தது இதுதான். வடக்கு, கிழக்கில் இருந்து இந்திய இராணுவம் வெளியேறிய பிறகு 1990 ஆம் ஆண்டில் இருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டையும் வடக்கு பிரதான நிலப்பரப்பின் பெரும்பகுதியையும் விடுதலை புலிகளே அவர்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். சமாதானத்தை கொண்டு வரப்போவதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்த சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
தொடக்கத்தில் போர்நிறுத்தம் பிரகடனம் செய்யப்பட்டு குமாரதுங்க அரசாங்கத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால், விடுதலை புலிகள் 1995 ஏப்ரிலில் மீண்டும் போருக்கு சென்றனர்.

” ஒப்பறேசன் றிவிரெச ”

இலங்கை இராணுவம் ” றிவிரெச ” என்ற பெயருடன் இராணுவ நடவடிக்கையை கட்டங் கட்டமாக முன்னெடுத்தது. அதன் விளைவாக விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டை இராணுவம் மீளக் கைப்பற்றியது. குடாநாட்டில் இருந்து தமிழ்க் குடிமக்களை விடுதலை புலிகள் பெருமளவில் ‘வன்னி’ பெருநிலப்பரப்புக்கு இடம்பெயர வைத்தனர். திட்டமிட்ட அந்த வெளியேற்றம் ஓரளவுக்கு வெற்றிகரமானதாக அமைந்த போதிலும், பெரும் எண்ணிக்கையான தமிழ்க் குடிமக்கள் யாழ்ப்பாணத்தில் தங்களது வீடுகளில் தொடர்ந்தும் இருக்கத் தீர்மானித்தனர். ஆயுதப்படைகளுக்கு மத்தியில் வாழ்வதற்கு துணிந்தனர்.

நிமால் சிறிபால டி சில்வா

தொடக்கத்தில் ஆயுதப்படைகள் தங்களது அதிகாரத்தை நிலைநிறுத்திய அதேவேளை யாழ்ப்பாண மக்களின் மனங்களை வென்றெடுக்கவும் முயற்சிகளை மேற்கொண்டனர். யாழ்ப்பாணத்தில் விடுதலை புலிகளின் பிரசன்னம் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டதாக நம்பப்பட்டது. போரினால் சிதைவடைந்த யாழ்ப்பாணத்தில் புனர்நிர்மாண செயற்திட்டம் ஒன்றை முன்னெடுக்க அரசாங்கம் விரும்பியது.

அன்றைய வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா யாழ்ப்பாணத்துக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். வடக்கு புனர்வாழ்வு — புனரமைப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவராக அவர் இருந்தார். அன்றைய யாழ்நகர் தளபதி பிரிகேடியர் ஆனந்த ஹமங்கொட யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் சிறிபால டி சில்வா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

விடுதலை புலிகள் இரகசியமாக யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள் ஊடுருவிக் கொண்டிருந்தார்கள் என்பது இராணுவ உயரதிகாரிகளுக்கு தெரிந்திருக்கவில்லை. விடுதலை புலிகள் மக்களுடன் மக்களாக கலந்து தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டமிட்டுக் கொண்டிருந்தனர்.

குடாநாட்டுக்குள் தாங்கள் திரும்பி வந்திருப்பதை விடுதலை புலிகள் ” பேரொலியுடன் ” அறிவித்தனர். ஜூலை 4 ஆம் திகதி நடைபெற்ற அந்த கூட்டத்துக்கு பிறகு அங்கிருந்து அமைச்சரும் பிரிகேடியரும் வெளியேறிக் கொண்டிருந்த வாகனத்துக்கு அண்மையாக உடலில் கட்டிக்கொண்டு வந்த குண்டுகளை ஒரு பெண் வெடிக்க வைத்தார். சிறிபால டி சில்வாவே பிரதான இலக்காக இருந்தபோதிலும், அவர் காயங்களுடன் தப்பி விட்டார். ஆனால், பிரிகேடியர் ஹமங்கொட உட்பட 23 பேர் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து ஹமங்கொட மரணத்துக்கு பிறகு மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டார்.

இரு வாரங்கள் கழித்து விடுதலை புலிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினார். வடக்கு பிரதான நிலப்பரப்பில் அந்த தாக்குதல் இடம்பெற்றது. 1996 ஜூலை 18 ஆம் திகதி முல்லைத்தீவு இராணுவ முகாமை தாக்கி விடுதலை புலிகள் அதை நிர்மூலம் செய்தனர். நூற்றுக்கணக்கான படைவீரர்கள் கொல்லப்பட்டனர்.

கடுமையான நடவடிக்கை

1996 ஜூலையில் இடம்பெற்ற இரு தாக்குதல்களும் குறிம்பாக, யாழ்ப்பாணத்தில் அரசியல் — இராணுவ சூழ்நிலையை மாற்றி விட்டன. யாழ்ப்பாணத்தில் மக்களின் மனங்களை வென்றெடுப்பதற்கான அணுகுமுறை கைவிடப்படடது. அதற்கு பதிலாக, விடுதலை புலிகளை யாழ்ப்பாணத்தில் இருந்து துடைத்தெறிவதற்கு கடுமையான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. தமிழ் மக்கள் என்ற சமுத்திரத்தில் விடுதலை புலிகள் மீன்கள் போன்று நீந்தித்திரிவதாக சந்தேகிக்கப்பட்டதால், குடிமக்கள் பெருமளவு இடர்பாடுகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

பெருமளவு மக்கள், பெரும்பாலும் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர் அல்லது காணாமல் செய்ப்பட்டனர். தமிழ் குடிமக்களை இலக்கு வைப்பதற்கும் பெருமளவில் மனித உரிமைமீறல்களில் ஈடுபடுவதற்கும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ அனுமதிப்பத்திரம் வழங்கியது போன்று நிலைவரம் இருந்தது. அதை தொடர்ந்து அந்த கட்டத்தில் 600 க்கும் அதிகமானவர்கள் காணாமல்போகச் செய்யப்பட்டதாக பதிவானது.

செம்மணி மண்ணின் இருண்ட இரகசியங்கள்

இந்த சூழ்நிலையில்தான் செம்மணி மனிதப்புதை குழிகளுடன் அடையாளப்படுத்தப்பட்டது. நான் ஏற்கெனவே கூறியது போன்று, 1996 ஆம் ஆண்டில் நூற்றுக்கணக்கான குடிமக்கள் புதைக்கப்பட்டதாக 1998 ஆம் ஆண்டில் முதன் முதலில் கூறியவர் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவேயாவார். 1999 ஆம் ஆண்டில் பதினைந்து மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. இப்போது தசாப்தங்களுக்கு பிறகு மேலும் பல மனித எலும்புக்கூடுகள் தோண்டியெடுக்கப்படுகின்றன. செம்மணி மண்ணுக்குள் பல இருண்ட இரகசியங்கள் புதையுண்டு கிடப்பதாக தோன்றுகிறது. அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கத்துக்கு அரசியல் துணிவாற்றல் இருக்குமேயானால், அந்த இரகசியங்களை வெளியில் கொண்டு வரமுடியும்.

செம்மணி புதைகுழிகள் விவகாரம் கிருசாந்தி குமாரசுவாமி பாலியல் வல்லுறவு, கொலை வழக்கின் மீது பெருமளவுக்கு கவனத்தை ஈர்த்திருக்கிறது. அந்த வழக்கின் முதலாவது குற்றவாளி கோப்ரல் ராஜபக்சவே குற்றவாளியாக காணப்பட்ட பிறகு செம்மணி புதைகுழிகள் பற்றிய பூதத்தை முதலில் வெளியில் விட்டார். இப்போது கிருசாந்தி குமாரசுவாமி பற்றி பெருமளவில் பேசப்படுவதுடன் அவளுக்கு அன்று என்ன நடந்தது என்பதை அறிவதிலும் அக்கறை காட்டப்படுகிறது. இத்தகைய ஒரு பின்புலத்தில், இரு பாகங்களைக் கொண்ட இந்த கட்டுரை அவளின் துன்பக்கதை மீது கவனத்தைச் செலுத்துகிறது.

விவேகமான மாணவி

யாழ்ப்பாணத்தில் அங்கிளிக்கன் திருச்சபையினால் நிருவகிக்கப்படும் மதிப்புமிக்க ஒரு கல்வி நிறுவனமான சுண்டிக்குளி மகளிர் உயர்பாடசாலையின் 18 வயது மாணவியான கிருசாந்தி குமாரசுவாமி 1996 செப்டெம்பர் 7 ஆம் திகதி கைதடியில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது துன்பக்கதை தொடங்குகிறது. மிகுந்த விவேகமுடைய மாணவியான கிருசாந்தி கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்டையில் எடடுப்பாடங்களிலும் அதிவிசேட சித்திகளை பெற்றாள். அப்போது அவள் உயர்தரப் பரீட்சை எழுதிக்கொண்டிருந்தாள். உயிர் இடைநடுவில் பறிக்கப்படுவதற்கு முன்னதாக தோற்றிய உயர்தரப் பரீட்சையில் இரு பாடங்களில் அவள் அதிவிசேட சித்திகளைப் பெற்றிருந்தாள்.) ஒரு மருத்துவராக வந்து தனது தாயாரை மகிழ்ச்சிப்படுத்துவதே அவளின் அபிலாசையாக இருந்தது. பாடசாலைக்கு அவள் சைக்கிளில் தான் செல்வது வழக்கம்.

1996 செப்டெம்பர் 7 ஆம் திகதி உயர்தரத்தில் இரசாயன பாடப் பரீட்சையை எழுதிய பிறகு கிருசாந்தி, கௌதமி சுந்தரம் என்ற ஒரு நண்பியுடன் முதல்நாள் விபத்து ஒன்றில் மரணமடைந்த வகுப்புத் தோழியான ஜானகியின் வீட்டுக்கு சென்றாள். இராணுவ வாகனம் ஒன்றே ஜானகியை மோதியது. அந்த வீட்டில் இருந்து வெளியேறி கௌதமியிடம் விடை பெற்றுக்கொண்டு கிருசாந்தி தனது சைக்கிளில் வீடுநோக்கி புறப்பட்டாள்.

கிருசாந்தியின் தந்தையார் ஏற்கெனவே இறந்துவிட்டார். அவளது 59 வயதான தாயார் இராசம்மா குமாரசுவாமி பட்டதாரி ஆசிரியையும் பாடசாலையின் பிரதி அதிபருமாவார். கிருசாந்தியின் 20 வயதான சகோதரி பிரசாந்தி கொழும்பில் கணக்கியல் படித்துக் கொண்டிருந்தாள். 16 வயதான இளைய சகோதரன் பிரணவன் யாழ்நகர் சென். ஜோன்ஸ் கல்லூரி மாணவன். மூத்த சகோதரியை தவிர குடும்பம் யாழ்ப்பாணத்தின் தென்மராட்சி பிரிவைச் சேர்ந்த கைதடி கிராமத்தில் வசித்து வந்தது.

கைதடி

கைதடி தென்மராட்சியின் எல்லையில் நாவற்குழிக்கு நெருக்கமான கிராமமாகும். இரு கிராமங்களின் பெரும் பகுதியை யாழ்ப்பாண கடல்நீர் ஏரி பிரிக்கிறது. நாவற்குழிக்கு அடுத்ததாக இருக்கும் அரியாலையில் இருந்து யாழ்ப்பாண மாநகர எல்லை தொடங்குகிறது. ” யாழ்ப்பாணம் உங்களை வரவேற்கிறது ” என்று எழுதப்பட்ட அலங்கார வளைவு ஒன்று யாழ்ப்பாணம் — கண்டி வீதியில் தென்மராட்சியில் இருந்து மாநகர பகுதியை பிரிக்கிறது. அந்த இடத்தில் இருந்து ஒரு வீதி செம்மணி, நாயன்மார்கட்டு மற்றும் கல்வியங்காடு ஊடாக நல்லூருக்கு செல்கிறது.

அரியாலையில் மாம்பலம் சந்தியில் இருந்து இன்னொரு வீதியும் செம்மணியை ஊடறுத்துச் செல்கிறது. பெருமளவுக்கு சதுப்பு நிலங்களைக் கொண்ட இந்த பகுதியில் மக்கள் செறிவாக வசிப்பதில்லை. அந்த நாட்களில் இந்த சதுப்பு நிலங்கள் உட்பட செம்மணியின் பெரும்பகுதி ஒரு உயர் பாதுகாப்பு வலயமாக இருந்தது. அருகாமையில் இராணுவ முகாம்கள் இருந்ததால் குடிமக்கள் செல்ல முடியாதவை என்று அந்த பகுதிகள் பிரகடனம் செய்யப்பட்டிருந்தன.

சோதனை நிலையம்

அரியாலை — செம்மணி — நாவற்குழி எல்லையில் யாழ்ப்பாணம் — கண்டி வீதியில் சோதனை நிலையமும் கண்காணிப்பு நிலையமும் ஒன்றாக அமைக்கப்பட்டிருந்தன. சோதனை நிலையம் உண்மையில் செம்மணி பகுதியிலேயே அமைந்திருந்தது. அந்த சோதனை நிலையத்தின் ஊடாக கிருசாந்தி கணிசமான காலமாக சைக்கிளில் யாழ்ப்பாணத்துக்கு போய்வந்து கொண்டிருந்தார். சோதனை நிலையத்தை கடந்து அடிக்கடி சென்று வந்த ஒருவர் என்ற வகையில் கிருசாந்தி வழமையாக சோதனைக்கோ அல்லது விசாரணைக்கோ உள்ளாக்கப்பட்டதில்லை. ஆனால், அந்த விதிவசமான தினத்தன்று அவள் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையில் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்காக சோதனை நிலையத்தின் பதுங்கு குழிக்கு உள்ளே கூட்டிச்செல்லப்பட்டாள். கிருசாந்தியை ஒரு ‘ பெண்புலி ‘ என்றும் தீவிர விசாரணை செய்ய வேண்டியிருக்கிறது என்றும் அவளுக்கு படையினர் கூறினர்.

இந்த ” விசாரணை ” நடைபெற்றுக் கொண்டிருந்தபோது வேறு கைதடி வாசிகள் சோதனை நிலையத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். தான் விடுதலை புலிகள் இயக்கத்தின் ஒரு உறுப்பினரே அல்ல என்று கடமையில் இருந்த படையினரிடமும் பொலிஸ்காரர்களிடமும் கிருசாந்தி கெஞ்சிக் கூறியதை கேட்ட சாட்சி இருந்தது.

தனது சாதாரணதர பரீட்சை முடிவுகளைக் கூறிய கிருசாந்தி உயர்தர வகுப்பில் படித்துக் கொண்டிருப்பதாகவும் பல்கலைக்கழகப் பிரவேசமே தனது ஒரே குறிக்கோள் என்றும் அவர்களிடம் விளக்கினாள். தனக்கு தந்தை இல்லை என்றும் தாயாரை மகிழ்ச்சிப் படுத்துவதற்காக ஒரு மருத்துவராக வர வேண்டும் என்பது மாத்திரமே தனது வாழ்நாள் இலட்சியம் என்றும் அவள் படையினரிடம் கூறினாள். தனக்கு அரசியலில் எந்த அக்கறையும் கிடையாது என்று உறுதியாக அவள் கூறினாள். ” உங்கள் மீது நம்பிக்கை வைத்தே நாங்கள் இங்கே வாழ்வதற்கு திரும்பி வந்திருக்கிறோம். ஏன் எனக்கு இப்படிச் செய்கிறீர்கள் என்று கிருசாந்தி பரிதாபமாக மன்றாடினாள்.

அவளது வார்த்தைகள் ‘ விசாரணையாளர்களிடம் ‘ எடுபடவில்லை. விளக்கமாக பேசக்கூடிய விவேகமுடைய நடுத்தர வர்க்க யுவதி கிருசாந்தி, ‘ பலம்பொருந்திய ‘ வர்க்கமாக இப்போது மாறிவிட்ட நாட்டுப்புற சிங்கள படை வீரர்களுக்கு ஒரு பூர்ஷுவா தமிழ் பிம்பத்தை உருவகப்படுத்துபவளாக தோன்றினாள் என்ற முடிவுக்கு உளவியல் ஆய்வாளர்கள் வரக்கூடும். அந்த பின்புலத்தில் படையினருக்கு தங்களது அதிகாரத்தை வெளிக்காட்ட வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியிருக்கக் கூடும். அந்த படையினரைத் தூண்டிய காரணிகள் எவையாக இருந்தாலும் அன்றைய தினத்துக்கு பிறகு கிருசாந்தி ஒருபோதும் உயிருடன் காணப்படவில்லை.

கவலையடைந்த தாயார்

பிற்பகலாகியும் கூட, மகள் வீடு திரும்பவில்லை என்பதால் தாரார் இராசம்மா கவலையடைந்தார். செம்மணி சோதனை நிலையத்தில் கிருசாந்தி தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக கைதடியைச் சேர்ந்த சிலரிடமிருந்து அவருக்கு தகவல் கிடைத்தது. நம்பிக்கைக்குரிய ஒரு அயலவரான 35 வயதான சிதம்பரம் கிருபாமூர்த்தி அந்த தகவலை உறுதிப்படுத்தினார். எனவே கிருசாந்தியின் தாயார், சகோதரர் மற்றும் நல்லுள்ளம் படைத்த அயலவர் கிருபாமூர்த்தி ஆகியோர் ( அன்று யாழ்ப்பாணத்தில் பொதுவான போக்குவரத்துச் சாதனமாக விளங்கிய ) தங்களது சைக்கிள்களில் சோதனை நிலையம் நோக்கிச் சென்றனர். மகனின் சைக்கிளின் பாரில் இராசம்மா ஏறியிருந்தார். கிருபா தனது சைக்கிளை ஓட்டிச் சென்றார்.

பிற்பகல் 3 மணியளவில் சோதனை நிலையத்தைச் சென்றடைந்த அவர்கள் அங்கு கடமையில் இருந்தவர்களிடம் கிருசாந்தியைப் பற்றி கேட்டனர். அதற்கு பிறகு அவர்கள் மூவரும் ” காணாமல்” போயினர். ஒரு குடும்பமும் அவர்களது அயலவரும் ” மறைந்து போயினர்.” மறுநாள் கைதடியைச் சேர்ந்த வேறு சிலர் செம்மணியிலும் அரியாலையிலும் இருந்த சில இராணுவ நிலைகளுக்குச் சென்று அந்த குடும்பத்தைப் பற்றி கேட்டனர். கிருசாந்தி பற்றியோ , அவளது குடும்பத்தவர்கள் மற்றும் அயலவர் பற்றியோ தங்களுக்கு எதுவும் தெரியாது என்று ” அதிகாரிகள் ” மறுத்தனர்.

ஜோசப் பரராஜசிங்கம்

ஆனால், அவர்கள் “காணாமல்போனது ” தொடர்பான செய்தி வேகமாகப் பரவத் தொடங்கி கொழும்பு வரைக்கும் சென்றது. கிருசாந்தியின் உறவினரான தமிழ்ச் சட்டத்தரணி ஒருவரை அவரது சகோதரி மூலமாக அந்த தகவல் எட்டியது. அதையடுத்து ஏனைய தமிழ்ச் சட்டத்தரணிகளும் அரசியல்வாதிகளும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் சம்பவத்தை அறிந்து கொண்டனர். தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் முன்னாள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சபையில் 1996 செப்டெம்பர் 13 ஆம் திகதி இது தொடர்பாக பிரச்சினை கிளப்பினார். அந்த விவகாரத்தை கவனிப்பதாக முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அநுருத்த ரத்வத்தை பதிலளித்தார். விவகாரத்தில் பெரும் அக்கறையை வெளிக்காட்டிய கொழும்பில் இருந்த பல இராஜதந்திரிகளினால் அரசாங்க உயர்மட்டத்தின் மீது நெருக்குதல் பிரயோகிக்கப்பட்டது.

நீலன் திருச்செல்வம்

தமிழர் ஐக்கிய விடுதலைகூட்டணியின் முன்னாள் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி நீலன் திருச்செல்வம் கிடைக்கக்கூடிய தகவல்களை திரட்டி ஆவணம் ஒனறைத் தயாரித்தார். அன்றைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை சந்தித்து அந்த ஆவணத்தை அவர் கையளித்தார். அந்த பிரச்சினையை ஜனாதிபதி குமாரதுங்க மிகுந்த அனுதாபத்துடனும் அக்கறையுடனும் அணுகினார். ஆட்கள் ” காணாமல்போன ” அந்த சம்பவம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு பகுதியில் இடம் பெற்றிருப்பதால் அரசாங்கத்துக்கு பொறுப்பு இருக்கிறது என்ற அபிப்பிராயத்தை சந்திரிகா கொண்டிருந்தார். அதன் விளைவாக, உடனடியாகவே அவர் நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவு பிறப்பித்தார்.

பிரசாந்தி மகிந்தரத்ன

மனித உரிமை மீறல்களுடன் சம்பந்தப்பட்ட ஏனைய சம்பவங்களைப் போலன்றி, இந்த சம்பவத்தில் அரசும் அதன் அமைப்புக்களும் மூடிமறைபைச் செய்ய முயற்சிக்கவில்லை. உண்மையில் நடந்ததை கண்டறிவதற்கான பணியில் சட்டமா அதிபர் திணைக்களமும் இராணுவத்தின் பொலிஸ் பிரிவும் ஒத்துழைத்துச் செயற்பட்டன. அன்றைய சட்டமா அதிபர் சரத் என். சில்வா ஒரு இளம் அரச சட்டவாதியான பிரசாந்தி மகிந்தரத்னவிடம் இந்த விவகாரத்தைக் கையாளும் பொறுப்பை ஒப்படைத்தார். பிரசாந்தி முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் டி.பி. குமாரசிங்கவின் வழிகாட்டலின் கீழ் பணியாற்றினார்.

பிரசாந்தி யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து இந்த வழக்கு தொடர்பான பணிகளை தொடங்கினார். யாழ்ப்பாணத்தில் அன்று இராணுவப் பொலிஸ் தலைவராக இருந்த கேணல் காலிங்க குணரத்னவின் முழுமையான ஒத்துழைப்பும் உதவியும் அவருக்கு கிடைத்தது. குற்றவியல் விசாரணை திணைக்களத்தைச் (சி.ஐ.டி.) சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றும் விசாரணைகளில் ஈடுபட்டது.

விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் , செப்டெம்பர் 7 ஆம் திகதி சோதனை நிலையத்தில் கடமையில் இருந்தவர்கள் விசாரணைக்காக கைது செய்யப்பட்டனர். எட்டு படைவீரர்களும் மூன்று றிசர்வ் பொலிஸ்காரர்களும் அன்றையதினம் கடமையில் இருந்தனர். தீவிர விசாரணைகள் சாதகமான விளைவுகளைத் தந்தன. செம்மணியில் இருந்த குறிப்பிட்ட ஒரு இடம் குறித்து பெறுமதியான தகவல்களை விசாரணையாளர்கள் பெற்றனர். மண்ணுக்குள் புதைக்கப்பட்ட சைக்கிள் ஒன்று முதலில் கண்டெடுக்கப்பட்டது. பிறகு முக்கிய கண்டுபிடிப்புகள் வந்தன. கிருசாந்தி, அவளது தாயார், சகோதரர் மற்றும் அயலவர் ஆகியோரின் உருக்குலைந்த சடலங்கள் மீட்கப்பட்டன. கிருசாந்தியின் உடல் வெட்டப்பட்டிருந்த அதேவேளை மற்றையவர்கள் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டிருந்தார்கள். அக்டோபர் பிற்பகுதியில் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டன.

இரு அரச சாட்சிகள்

குறிப்பிட்ட தினத்தன்று சோதனை நிலையத்தில் கடமையில் இருந்த 11 பேருக்கும் தொடக்கத்தில் குற்றப்பத்திரங்கள் கையளிக்கப்பட்டன. அவர்களில் இருவர் அரச சாட்சிகளாக மாறினார்கள். அது வழக்குத்தொடுநர் தரப்பை பொறுத்தவரை பெரிதும் வரவேற்கத்தக்க நிகழ்வாக அமைந்தது. அல்லாவிட்டால் அன்றைய தினம் நடந்தவற்றில் பெரும்பாலானவற்றை கூறுவதற்கு ஒரு சாட்சி கூட இல்லாமல் போயிருக்கும்.

செப்டெம்பர் 7 சோதனை நிலையத்தில் கடமையில் இருந்த இரு றிசர்வ் பொலிஸ்காரர்களான பி.ஏ. சமரவிக்கிரமவும் ஏ.எச். நசாருமே அந்த இரு அரச சாட்சிகள். பாலியல் வல்லுறவிலோ அல்லது கொலைகளிலோ இருவரும் நேரடியாக ஈடுபடவில்லை என்பதால் , அவர்களுக்கு நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு வழங்கப்பட்டது. அவர்கள் சடலங்களை புதைப்பதில் மாத்திரமே சம்பந்தப்பட்டனர். அதை தொடர்ந்து எட்டு படைவீரர்களும் ஒரு பொலிஸ்காரருமாக ஒன்பது பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு ஜூரர்கள் இல்லாமல் ட்ரயல் – அட் – பார் விசாரணை நடைபெற்றது.

குற்றஞ்சாட்டப்பட்ட ஒன்பது பேரினதும் விபரங்கள் வருமாறு ; கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச ( முதலாவது பிரதிவாதி ), முதியானசலாகே ஜயசிங்க, ( இரண்டாவது), றிசரவ் பொலிஸ் பிரதீப் பிரியதர்சன ( மூனாறாவது ), பிரியந்த பெரேரா ( நான்காவது), விஜயானந்த அல்விஸ் (ஐந்தாவது ), டி.ஜி. முத்துண்டா ( ஆறாவது ), லான்ஸ் கோப்ரல் முதியானசலாகே ஜெயதிலக ( ஏழாவது ), டி.வி. இந்திரஜித் குமார ( எட்டாவது ), பத்திரன்லாகே நிசாந்த ( ஒன்பதாவது ).

சட்டவிரோதமாக கூடிநின்றமை, ஆட்கடத்தல்,பாலியல் வல்லுறுவு மற்றும் கொலை என்று அவர்கள் செய்ததாகக் கூறப்படும் குற்றச்செயல்களுக்காக தண்டனைச் சட்டக்கோவையின் 140 , 146, 296, 357 ஆகிய பிரிவுகளின கீழ் குற்றஞ்சுமத்தப்பட்டது. இந்த குற்றச்சாட்டுக்கள் கிருசாந்தியுடன் சம்பந்தப்பட்டவை. அதேவேளை, மற்றைய குற்றச்சாட்டுக்கள் கிருசாந்தியின் தாயார், சகோதரன், அயலவர் கடத்தப்ட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பானவை.

ட்ரயல் – அட் – பார்

ட்ரயல் – அட் – பார் விசாரணை கொழும்பில் 1997 நவம்பரில் தொடங்கியது. மேல்நீதிமன்ற நீதிபதிகள் நிமால் திசநாயக்க, காமினி அபேரத்ன, அன்ட்ரூ சோமவன்ச ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் அந்த விசாரணை இடம்பெற்றது. இதற்கான சட்ட முன்னேற்பாட்டு பணிகளை அரச சட்டவாதி பிரசாந்தி மகிந்தரத்ன செய்திருந்தார். பிறகு மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் டி.பி. குமாரசிங்கவும் அரச பிரதம சட்டவாதியாக இணைந்துகொண்டார்.

விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் ஐந்தாவது பிரதிவாதி விஜயானந்த அல்விஸ் விளக்கமறியலில் மூளைக்காய்ச்சல் நோயினால் மரணமடைந்தார். சிறை அதிகாரிகள் சரியான முறையில் அவரை பராமரிக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. விசாரணையின் ஆரம்ப நாட்களில் ஒன்பதாவது பிரதிவாதியான பத்திரனலாகே நிசாந்த உறுதியான சான்று இல்லை என்ற காரணத்துக்காக வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆறாவது பிரதிவாதியான டி.ஜி. முத்துபண்டா தீர்ப்பு வழங்கப்படவிருந்த தினத்தன்று அவருக்கு எதிராக கணிசமான சான்று இல்லை என்று நீதிமன்றம் தீர்மானித்ததை அடுத்து விடுவிக்கப்பட்டார்.

ட்ரயல் – அட் – பார் விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் இரு பிரதிவாதிகள் விளக்கமறியலில் இருந்து தப்பியோடி விட்டனர். அவர்களுக்கு காவலாக இருந்தவர்கள் அதற்கு உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்பட்டது. தப்பியோடியவர்களில் ஒருவரான முதலாவது பிரதிவாதி கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச சில நாட்கள் கழித்து இரத்தினபுரியில் கைதுசெய்யப்பட்டார். மற்றையவர் எட்டாவது பிரதிவாதி டி.வி. இந்திரஜித் குமார ஒருபோதும் பிடிபடவில்லை. இன்னமும் கூட அவர் தலைமறைவாகவே இருக்கிறார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் சகலரும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளாக இருந்தபோதிலும், இந்த குற்றச்செயல்கள் மோதலின் உசசக்கட்டத்திலோ அல்லது மோதலுக்கு உடனடியாக பின்னரோ இழைக்கப்பட்டவை அல்ல என்பது வழக்கில் தெளிவுபடுத்தப்பட்டது. விடுதலை புலிகளின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கோடும் இந்த குற்றச்செயல்கள் இடம்பெறவில்லை. அந்த நேரத்தில் விடுதலை புலிகள் என்று சந்தேகிக்கப்பட்டவர்களை கைதுசெய்யும் உண்மையான நோக்குடனும் பிரதிவாதிகள் செயற்படவில்லை. பதிலாக, அது ஒரு கீழ்த்தரமான பாலியல் வல்லுறவு மற்றும் கொலையாகும். குற்றச்செயலை மூடிமறைப்பதற்காக முழுக்குடும்பமும் கொலை செய்யப்பட்டது.

விரிவான தீர்ப்பு

தலைமறைவாக இருந்த படைவீரர் உட்பட ஆறு பிரதிவாதிகளுக்கும் எதிராக விரிவான ஒரு தீர்ப்பை நீதிபதிகள் 1998 ஜூலை 3 ஆம் திகதி வழங்கினர். வழங்கப்பட்ட தண்டனைகள் பற்றிய விபரங்களும் கிருசாந்தி குமாரசுவாமி பாலியல் வல்லுறவு, கொலை தொடர்பாக எவ்வாறு விசாரணைகள் நடத்தப்பட்டன என்பது பற்றிய தகவல்களும் இந்த கட்டுரையின் இரண்டாம் பாகத்தில் கூறப்படும்.


D.B.S.Jeyaraj can be reached at dbsjeyaraj@yahoo.com

ஆங்கில மூலம்: டி. பி. எஸ். ஜெயராஜ் (Daily Financial Times)

தமிழில்: வீரகத்தி தனபாலசிங்கம்

நன்றி: வீரகேசரி

************************************************************************************************