டி.பி.எஸ். ஜெயராஜ்
இலங்கையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களில் மிகவும் முதிர்ந்த வயதுவரை வாழ்ந்தவரான முதபெரும் அரசியல்வாதி செல்வையா இராஜதுரை அவரது 98 வது வயதில் 2025 டிசம்பர் 7 ஆம் திகதி காலமானார்.
மட்டக்களப்பைச் சேர்ந்த வசீகரமான ஒரு ஆளுமையான அவர் பாராளுமன்ற உறுப்பினராக, மாநகரசபை மேயராக, கபினெட் அமைச்சராக, உயர்ஸ்தானிகராக குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் மிகப்பல நிறைந்த ஒரு அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரர்.
எதிர்க்கட்சியில் இருந்து தொல்லையில்லாமல் இராஜதுரை அரசாங்கத்தில் இணைவதற்கு வசதியாக இலங்கையின் அரசியலமைப்புக்கு திருத்தச்சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்ட அளவுக்கு அவர் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவராக விளங்கினார்.
அன்று நடந்தது மிகவும் சுவாரஸ்யமானதும் முன்னென்றும் இல்லாததுமாகும்.
இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பு ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் பதவிக்காலத்தில் 1978 செப்டெம்பரில் நடைமுறைக்கு வந்தது. அதற்கு பிறகு அரசியலமைப்புக்கு 21 தடவைகள் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. அவற்றில் அரைவாசிக்கும் அதிகமான திருத்தங்கள் ஜெயவர்தன் அதிகாரத்தில் இருந்த வருடங்களிலேயே கொண்டுவரப்பட்டன. அவற்றில் பல திருத்தங்கள் சர்ச்சைக்குரியவையாக அமைந்தன.
அரசியலமைப்புக்கான இரண்டாவது திருத்தம் அத்தகைய சர்ச்சைக்குரியவற்றில் ஒன்று.1979 பெப்ரவரி 26 ஆம் திகதி நடைமுறைக்கு வந்த அந்த திருத்தம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவி விலகலுடனும் வெளியேற்றப்படுதலுடனும் தொடர்புடையதாகும்.
பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தில் உறுப்பினர் ஒருவர் தனது கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டால் அந்த வெளியேற்றத்தை விசாரணை செய்து பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கக்கூடிய பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு முறையீட்டைச் செய்வதற்கு வாய்ப்பை வழங்குவதே அந்த திருத்தத்தின் சாராம்சமாகும்.
பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு பிறகு வெளியேற்றத்துக்கு ஆதரவாக பெரும்பான்மையான உறுப்பினர்கள் வாக்களித்தால் மாத்திரமே சம்பந்தப்பட்ட உறுப்பினர் தனது ஆசனத்தை இழப்பார்.
திருத்தத்தின் தோற்றுவாய்
அரசியலமைப்புக்கான இரண்டாவது திருத்தத்தின் தோற்றுவாய் மிகவும் சுவாரஸ்யமானது. ஒரு அரசியல் கட்சியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவாகும் உறுப்பினர் ஒருவர், தானாக விலகுவதன் மூலம், வெளியேற்றப்படுவதன் மூலம் அல்லது வேறு வழிகளில் அந்த கட்சியின் உறுப்பினராக இல்லாமல்போகும் பட்சத்தில் சபையில் தனது ஆசனத்தை இழப்பார் என்ற ஏற்பாட்டை புதிய 1978 அரசியலமைப்பு கொண்டிருந்தது.
அந்த ஏற்பாடு பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான அரசியல் கட்சியின் அதிகாரத்தை பலப்படுத்தியதுடன் கட்சி மாறல்களையும் கொள்கை கோட்பாடின்றிய கட்சித்தாவல்களையும் தடுத்தது.
ஆனால், எதிர்க்கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது ஆசனத்தை இழக்காமல் கட்சி மாறுவதற்கு வசதி செய்வதற்கு ஜனாதிபதி ஜெயவர்தனவும் ஐக்கிய தேசிய கட்சியும் விரும்பிய ஒரு சூழ்நிலை தோன்றியது. ( 1977 பொதுத்தேர்தலில் தொகுதி அடிப்படையிலான தேர்தல் முறையில் அதிகூடுதல் வாக்குகளைப் பெற்று முதலாவதாக வரும் வேட்பாளரே தெரிவாகும் அடிப்படையிலேயே சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவாகியிருந்தனர்.)
பாராளுமன்றத்தின் மொத்த 168 ஆசனங்களில் அன்று ஐக்கிய தேசிய கட்சி 143 ஆசனங்களைக் கொண்டிருந்தது. இருந்தாலும், குறிப்பிட்ட இந்த பாராளுமன்ற உறுப்பினர் தனது கட்சியில் இருந்து பிரிந்து அரசாங்கத்தரப்பில் இணைந்துகொள்ள வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சி கருதியது.
இந்த காரணத்துக்காகவே அரசியலமைப்பு இரண்டாவது தடவையாக திருத்தப்பட்டது. பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கு பிரமாண்டமான பெரும்பானமைப் பலம் இருந்ததால், இரண்டாவது திருத்தம் நடைமுறையில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் அரசாஙகத்துடன் இணைந்து கொள்வதற்கு வசதியாக இருந்த அதேவேளை, அரசாங்கத் தரப்பு உறுப்பினர் ஒருவர் எதிர்க்கட்சிக்கு மாறுவதை தடுத்தது. அந்த திருத்தம் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான ஜெயவர்தனவின் கட்டுப்பாட்டை வலுப்படுத்திய போதிலும், உண்மையில் அது தனியொரு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதற்கு வசதி செய்வதற்கே கொண்டுவரப்பட்டது.
இராஜதுரை திருத்தம்
ஏற்கெனவே கூறியதைப் போன்று சம்பந்தப்பட்ட அந்த பாராளுமன்ற உறுப்பினர் வேறுயாருமல்ல, டிசம்பர் 7 ஆம் திகதி சென்னையில் காலமான செல்லையா இராஜதுரை அவர்களே. இரண்டாவது அரசியலமைப்புத் திருத்தம் அந்த நாட்களில் ‘ இராஜதுரை திருத்தம் ‘ என்று ஏளனமாகக் குறிப்பிடப்பட்டது.
இராஜதுரை எதிர்க்கட்சியில் இருந்து அரசாங்கத் தரப்புக்கு மாறுவதற்கு வசதியாக அரசியலமைப்புக்குத் திருத்தம் ஒன்றை கொண்டுவரவேண்டிய அளவுக்கு அரசியல் ரீதியில் அவரை முக்கியமானவராக ஜே.ஆரும் அவரது ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமும் ஏன் கருதினர்?
இராஜதுரை 1977 ஆம் ஆண்டில் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியில் இருந்து மட்டக்களப்பு தொகுதியின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார். அன்று அது இரட்டை அங்கத்தவர் தொகுதியாக இருந்தது. அவர் முதன்முதலாக 1956 ஆம் ஆண்டில் இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். 1960 மார்ச், ஜூலை , 1965 மார்ச், 1970 மே பொதுத் தேர்தல்களிலும் தொடர்ச்சியாக மட்டக்களப்பில் இருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டு வந்தார்.
1976 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தமிழர் ஐக்கிய விடுதலையின் பிரதான அங்கத்துவக் கட்சியாக தமிழரசு கட்சி விளங்கியது. 1977 ஆம் ஆண்டில் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் வேட்பாளராக இராஜதுரை மட்டக்களப்பில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தெரிவானார். 1956 ஆம் ஆண்டில் இருந்து 1989 ஆம் ஆண்டு வரை மொத்தமாக 33 வருடங்கள் அவர் மட்டக்களப்பை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்தார்.
பிராந்திய அபிவிருத்தி
ஐக்கிய தேசிய கட்சியில் 1979 ஆம் ஆண்டில் இணைந்துகொண்ட பிறகு பிராந்திய அபிவிருத்திக்கான கபினெட் அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்து சமய விவகாரங்கள் மற்றும் தமிழ்மொழி அமுலாக்கல் ஆகியவற்றுக்கு பொறுப்பாகவும் அவர் நியமிக்கப்பட்டார். 1979 ஆண்டு தொடக்கம் 1989 ஆண்டுவரை பத்து வருடங்களாக இராஜதுரை அமைச்சராகப் பதவி வகித்தார்.
1990 ஆம் ஆண்டில் அவர் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவினால் மலேசியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டார். 1994 ஆம் ஆண்டுவரை கோலாலம்பூரில் அவர் இலங்கையின் தூதுவராக பதவி வகித்தார்.
1967 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல் மேயராக தெரிவு செய்யப்பட்ட பெருமையும் இராஜதுரைக்கு உரியது.
அதனால் இராஜதுரை தனது காலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த — செல்வாக்குமிகுந்த கிழக்கின் தமிழ் அரசியல் தலைவராக விளங்கினார் என்பதை புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது. தனது பேச்சாற்றல் காரணமாக ‘சொல்லின் செல்வர் ‘ என்று அறியப்பட்ட அவர் பொதுவில் தமிழ்த் தேசியவாத இலட்சியத்தையும் குறிப்பாக, தமிழரசு கட்சியின் அரசியல் செல்வாக்கையும் கிழக்கில் வளர்ப்பதில் பல வருடங்களாக முக்கியத்துவம் வாய்ந்த – ஆக்கபூர்வமான பாத்திரத்தை வகித்தார்.
மட்டக்களப்பு தமிழர்கள் மத்தியில் யாழ்ப்பாண எதிர்ப்பு மனோபாவம் குறைவடைவதற்கும் தமிழர் ஐக்கியம் மேம்படுவதற்கும் இராஜதுரை பெருமளவுக்கு காரணமாக இருந்தார்.
தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து தமிழர் ஐக்கிய விடுதலை க கூட்டணி 1977 ஜூலை தேர்தலில் போட்டியிட்டது. தமிழர்களின் ஆதிக்கத்தில் உள்ள வடக்கில் சகல14 தெ்குதிகளிலும் கூட்டணி வெற்றிபெற்றது. ஆனால், தமிழர்களை பெரும்பான்மையாகக் கொண்ட கிழக்கில் தேர்தல் முடிவுகள் கலப்பானவையாக இருந்தன.
கிழக்கில் முஸ்லிம்கள் பெரும்பான்மையானராக வாழும் எந்தவொரு தொகுதியிலும் கூட்டணியினால் வெற்றி பெறமுடியவில்லை. கிழக்கு மாகாணத்தின் 12 பாராளுமன்ற உறுப்பினர்களில் எட்டுப்பேர் ஆளும் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். அவர்களில் கல்குடா தொகுதியைப் பிரதிநிதித்துவம் செய்த கே.டபிள்யூ. தேவநாயகம் ஒருவர். தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் சார்பில் பொத்துவில் தொகுதியின் இரண்டாவது உறுப்பினராக பாராளுமன்றத்துக்கு தெரிவான எம். கனகரத்தினம் ஐக்கிய தேசிய கட்சிக்கு மாறியதையடுத்து கிழக்கில் அரசாங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்தது.
கிழக்கு மாகாணத்தில் தமிழீழக் கோரிக்கையை பலவீனப்படுத்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் விரும்பியது. நாட்டுப் பிரிவினையைக் கோரிநின்ற தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியை விடவும் பிரிவினைவாதத்துக்கு எதிரான கட்சிகளுக்கு கிழக்கில் கூடுதல் வாக்குகள் கிடைத்தன என்பது ஏற்கெனவே சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
கிழக்கில் கூட்டணியின் மூன்று உறுப்பினர்களுக்கு எதிராக தங்களுக்கு ஒன்பது உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருந்தார்கள் என்பதை அரசாங்கம் சுட்டிக்காட்டியது. இப்போது இராஜதுரையுடன் கிழக்கில் அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பத்தாகியது. கிழக்கில் 1956 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக பாராளுமன்றத்துக்கு தெரிவான சாதனை வரலாற்றைக் கொண்ட மிகவும் மூத்த உறுப்பினராக இராஜதுரை விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது அரசியலமைப்பு திருத்தம் காரணமாக இராஜதுரை இப்போது ஐக்கிய தேசிய கட்சியின் கிழக்கு கிரீடத்தில் ஒரு அணிகலனாக இருந்தார். இராஜதுரையைப் போன்ற முக்கியமான ஒரு தமிழ்த் தேசியவாத அரசியல் தலைவர் அரசாங்கத்துக்கு மாறுவதற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் எவை? இந்த கேள்விக்கான பதிலுக்கு கடந்த காலத்தை சுருக்கமாக திரும்பிப்பார்க்க வேண்டியது அவசியமாகும்.
தனிப்பட்ட குறிப்பு
இத்தகைய பின்புலத்திலேயே நான் இந்த இரண்டுபாகக் கட்டுரையில் இராஜதுரை மீது கவனம் செலுத்துகிறேன். அதை தனிப்பட்ட குறிப்புடன் தொடக்க விரும்புகிறேன். கடந்த நூற்றாண்டின் அறுபதுகளின் முற்பகுதியில் ஒரு சிறுவனாக நான் இராஜதுரையை முதன்முதலாக சந்தித்தேன். மெதடிஸ்ட் மதகுருவான எனது தாய்மாமனார் அன்று மட்டக்களப்பில் இருந்தார். பாடசாலை விடுமுறைகளின்போது எமது குடும்பம் அடிக்கடி மட்டக்ளப்பு விஜயம் செய்வது வழமை.
மெதடிஸ்ட் திருச்சபையினால் நிருவகிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்த இராஜதுரை எனது மாமனாரைச் சந்திக்க அடிக்கடி வருவார். தமிழ்க் கல்விமானும் எழுத்தாளரும் கவிஞருமான எனது பாட்டனாருடனும் அவர் கலந்துரையாடுவார்.
சிறுவர்களான எங்களைப் பார்த்து சிரித்தவாறு தலையைத் தடவி ‘ எல்லோரும் நன்றாகப் படிக்கிறீர்களா?’ என்று அவர் கேட்பார். அப்போது அவரை எனக்கு நன்றாகப் பிடிக்கும்.
பின்னரான வருடங்களில் நான் வளர்ந்த பிறகு அரசியலில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் இராஜதுரையின் பேச்சுக்களை கேட்பேன், வாசிப்பேன். 1970 தேர்தல் பிரசார காலத்தில் யாழ்ப்பாணத்தில் அவரின் பல பேச்சுக்களைக் கேட்டது எனக்கு நினைவிருக்கிறது.
1977 ஆம் ஆண்டில் வீரகேசரியில் ஒரு நிருபராக இணைந்து பத்திரிகைத்துறையில் நான் பிரவேசித்த பிறகு மட்டக்களப்பில் மூன்று மாதங்கள் அலுவலக நிருபராக பணியாற்றினேன். அப்போது இராஜதுரையுடன் நெருக்கமாகப் பழகத் தொடங்கினேன்.
அவர் ஒரு அமைச்சராக வந்த பிறகு அவரது அமைச்சு சம்பந்தப்ட்ட செய்திகளை சேகரிப்பது எனது கடமைகளில் ஒன்றாக இருந்தது. 1988 ஆம் ஆண்டில் நான் இலங்கையை விட்டு வெளியேறிய பிறகு இராஜதுரையுடனான தொடர்பை இழந்துவிட்டேன்.
அல்வாய் – சத்துருக்கொண்டான்
இராஜதுரை 1927 ஜூலை 27 ஆம் திகதி மட்டக்களப்பில் பிறந்தார். அவரது தந்தையார் யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாயைச் சேர்ந்தவர். புகையிலை வியாபாரியான அவர் மட்டக்களப்பில் குடியேறினார். தாயார் மட்டக்களப்பில் உள்ள சத்துருக்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர். மட்டக்களப்பு நகரின் கோட்டைமுனை பகுதியிலேயே இராஜதுரை வளர்ந்தார்.
அவர் தனது ஆரம்பக்கல்வியை அரசடியியில் உள்ள மெதடிஸ்ட் ஆண்கள் பாடசாலையிலும் இரண்டாம் நிலைக் கல்வியை அன்று மெதடிஸ்ட் திருச்சபையினால் நிருவகிக்கப்பட்ட மட்டக்களப்பு மத்திய கல்லூரியிலும் பெற்றார்.
இராஜதுரை தமிழில் விவேகமுடைய எழுத்தாளரும் பேச்சாளருமாவார். அவர் நல்ல பாடகர் என்பது மாத்திரமல்ல, நல்ல மேடை நாடக நடிகராகவும் விளங்கினார். இந்த ஆற்றல்கள் எல்லாம் அவரை பாடசாலை நாட்களில் பிரபல்யமானவராக்கின.
ஆறாவது ஜோர்ஜ்
மாணவப் பராயத்தின்போது இராஜதுரையின் அரசியல் ஞானஸ்நானம் காலனித்துவ எதிர்ப்புத் தன்மை கொண்டதாக இருந்தது. இலங்கை 1948 ஆம் ஆண்டுவரை பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. அனறைய இங்கிலாந்து மனானர் ஆறாவது ஜோர்ஜ் தனது 50 வது பிறந்ததினத்தை 1945 டிசம்பரில் கொண்டாடினார்.
அவரது பிறந்ததினத்தைக் கொண்டாடுவதற்கு மட்டக்களப்பில் விமரிசையான வைபவம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது 18 வயது இளைஞனாக இருந்த இராஜதுரை மன்னரின் பிறந்ததினக் கொண்டாட்டத்தை எதிர்த்து ஒரு ஆர்ப்பாட்ட இயக்கம் ஒன்றை ஏற்பாடு செய்தார்.
அவரின் தலைமையிலான மாணவர்கள் குழு ஒன்று கொண்டாட்டங்களை பகிஷ்கரிக்குமாறு கோரி சுவரொட்டிகளை ஒட்டியதுடன் துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தது. அதன் விளைவாக மிகவும் குறைந்த எண்ணிக்கையானவர்களே கலந்துகொண்ட நிலையில் கொண்டாட்டம் களைகட்டவில்லை.
இராஜதுரையை அழைத்த பொலிசார் பகிஷ்கரிப்பு தொடர்பாக அவரை தீவிர விசாரணை செய்தனர். கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்ட பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
ஆனால், இந்த சம்பவத்தினால் இராஜதுரையின் உணர்வுகள் தணிந்து விடவில்லை. அவர் தொடர்ந்தும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். பிறகு இராஜதுரை தீவிரமான ஒரு சமஷ்டிவாதியாக வந்தபோதிலும், அவர் தனது பதினகவைகளினதும் இருபதுகளினதும் முற்பகுதியில் ஒரு பகுத்தறிவாளராகவும் இடதுசாரியாகவும் விளங்கினார்.
தீவிரமான ஒரு வாசகரான அவர் ஒருபுறத்தில் ரொட்ஸ்கியவாதம் மற்றும் கம்யூனிசம் தொடர்பான தமிழ் நூல்களினதும் மறுபுறத்தில் ஈ.வெ.ரா. பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கத்தின் நூல்களினதும் செல்வாக்கிற்கு ஆளானார்.
இடதுசாரி
முற்போக்கு வாலிபர் சங்கம் என்று அழைக்கப்பட்ட இடதுசாரிக் கொள்கைகள் சார்பான அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கு இராஜதுரை காரணகர்த்தராக விளங்கினார். இந்த அமைப்பு மட்டக்களப்பில் இருந்த லங்கா சமசமாஜ கட்சி மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி கிளைகளுடன் தொடர்புளைக் கொண்டிருந்தது. சிலர் இந்த கட்சிகளின் உறுப்பினர்களாகவும் இருந்தனர்.
இராஜதுரை ஒருபோதுமே சமசமாஜ கட்சியினதோ அல்லது கம்யூனிஸ்ட் கட்சியினதோ உறுப்பினராக இருக்கவில்லை. ஆனால், ரொட்ஸ்கியவாதிகளுடனும் கம்யூனிஸ்டுகளுடனும்்நெருங்கிப் பழகினார். கலாநிதி என். எம். பெரேராவை பிரதம விருந்தினராக அழைத்து பிறின்ஸ் காசிநாதர் ( இவர் பிறகு மட்டக்களப்பு மத்திய கல்லூரி அதிபராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் வந்தார்) சமசமாஜ கட்சியின் கூட்டம் ஒன்றை நடத்தியபோது இராஜதுரையும் அவரது முற்போக்கு வாலிபர் சங்கத்தினரும் அதற்கான ஏற்பாட்டுப் பணிகளை செய்தனர்.
அதேபோன்றே மட்டக்களப்பு கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான கிருஷ்ணகுட்டி ( இவர் ஒரு மலையாளி) தமிழ்நாட்டு கம்யூனிஸ்ட் தலைவரான பி. ஜீவானந்தத்தை மட்டக்களப்புக்கு அழைத்தபோது சகலவிதமான ஏற்பாடுகளையும் இராஜதுரை முன்னின்று செய்ததோடு ஜீவா சென்ற இடமெல்லாம் அவருடன் கூடச்சென்றார்.
பகுத்தறிவாளர்
இடதுசாரிக் கொள்கைகளுக்கு சார்பானவராக இருந்த அதேவேளை, இராஜதுரை இன்று தமிழ்நாடு என்று அறியப்படுகின்ற அன்றைய இந்திய மெட்ராஸ் மாநிலத்தில் இருந்துவந்த பகுத்தறிவு மற்றும் திராவிட கோட்பாடுகளினாலும் கவரப்பட்டார். பெரியார் என்று அழைக்கப்படும் ஈ.வெ. இராமசாமி திராவிடர் கழகத்தையும் சுயமரியாதை இயக்கத்தையும் ஆரம்பித்தார். திராவிடர் கழகமும் அதில் இருந்து பிரிந்த திராவிட முன்னேற்றக் கழகமும் பகுத்தறவுக் கோட்பாடுகளைக் கொண்டவையாக இருந்தன.
ஈ.வெ.ரா. பெரியாரினால் பெரிதும் கவரப்பட்ட இராஜதுரையும் அவரைப் போன்ற இளைஞர்களும் ‘ அறிவுதான் கடவுள் ‘ என்ற தாரகமந்திரத்துடன் கூடிய பகுத்தறிவு சங்கம் ஒன்றை மட்டகளப்பிலும் ஆரம்பித்தனர். கறுப்பு உடைகளை அணியும் திராவிடர் இயக்க நடைமுறையைப் பின்பற்றி இராஜதுரையும் அந்த நாட்களில் கறுப்புச் சால்வையை அணிவதை பழக்கமாகக் கொண்டிருந்தார்.
இந்து ஆலயங்களில் ஆடுகளும் கோழிகளும் பலியிடப்படவதற்கும் தீமிதிப்புச் சடங்குகளுக்கும் எதிராக அவர் மிகவும் தீவிரமாகப் பிரசாரம் செய்தார். இந்து ஆலயங்களுக்குள் தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்ட இயக்கங்களுக்கு இராஜதுரை தலைமை தாங்கினார்.
மட்டக்களப்பு மாமாங்கம் பிள்ளையார் கோவிலுக்குள் வெற்றிகரமான பிரவேச இயக்கத்தை தலைமை தாங்கி முன்னின்று நடத்தியவர் இராஜதுரையேயாவார்.
சிலப்பதிகாரம்
ஏற்கெனவே குறிப்பிடப்பட்டதை போன்று இராஜதுரை நல்ல ஒரு நாடக நடிகர்.பல நாடகங்களுக்கு அவரே கதைவசனம் எழுதி நடித்தார். அத்துடன் பெருவாரியான இலக்கியப் பேச்சுக்களையும் அவர் நிகழ்த்தினார். தமிழ் இலக்கியத்தில் மிகுந்த புலமையுடையவரான இராஜதுரை தமிழ்க் காவியமான சிலப்பதிகாரத்தின் இலக்கியச் சிறப்புக்களைப் பற்றி பேசுவதில் தனித்திறமை வாய்ந்தவர்.
முதல் தடவையாக அவர் பாராளுமன்ற தேர்தலில் அவரது எதிர்முகாமைச் சேர்ந்தவர்கள் ‘ சிலப்பதிகாரத்தை தவிர இராஜதுலையால் பாராளூமன்றத்தில் வேறு எதைப் பேசமுடியும் ? என்று இகழ்ச்சியாக கேட்டனர். அந்தளவுக்கு சிலப்பதிகாரத்தில் அவரின் புலமை இருந்தது.
தனது நடிப்பு மற்றும் பேச்சு ஆற்றல்களுக்கு புறம்பாக தமிழில் சிறந்த எழுத்தாளராகவும் இராஜதுரை விளங்கினார். சுதந்திரத்துக்கு பின்னரான வருடங்களில் மட்டக்களப்பு மண் படைப்பிலக்கியத்தில் தங்களது திறமையைக் காண்பிக்க முயன்ற பெருமளவு இளைஞர்களை தோற்றுவித்தது. அவர்களில் இராஜதுரை ஒருவர்.
பேரார்வம் கொண்ட இந்த இளைஞர்கள் மட்டக்களப்பில் பல வருடங்களாக பல பத்திரிகைகளையும் சஞ்சிகைகைளையும் ஆரம்பித்தனர். அவற்றில் எதுவுமே காலத்தின் சோதனைக்கு தாக்குப்பிடிக்க முடியவில்லை.
ஒரு பிரசுரகர்த்தாவாக, ஆசிரியராக, பங்களிப்புச் செய்யும் எழுத்தாளராக இந்த முயற்சிகளில் பலவற்றில் இராஜதுரை ஈடுபாடு காட்டினார். ஒரு தடவை தனது கடந்த காலம் பற்றி அவர் குறிப்பிடும்போது அந்த வெளியீடுகளின் பெயர்களை தங்குதடையின்றி ஒப்புவித்தார். பல தசாப்தங்களுக்கு முன்னர் அவர் கூறிய அந்த விபரங்களை எனக்கு இப்போது நினைவில் இல்லை.
எழுத்தாளர்
மட்டக்களப்பின் முடாசூடா மன்னன் என்று ஒரு காலத்தில் வர்ணிக்கப்பட்ட இராஜதுரை புனைகதை மற்றும் புனைவுசாரா இலக்கியத்தில் திறமையான ஒரு எழுத்தாளராகவும் விளங்கினார். அவரது பல நூல்கள் வெளிவந்தன. நாவல்கள், குறுநாவல்கள் , சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் அவரது கட்டுரைகளினதும் உரைகளினதும் தொகுப்பு அவற்றில் அடங்கும். ‘ராசாத்தி’ என்ற குறுநாவலும் ‘மிஸ் கனகம் ‘ என்ற சிறுகதை தொகுப்பும் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவை.
சென்னையில் தற்போது வசித்துவரும் எழுத்தாளரான அவரின் பேத்தி சரண்யா மணிவண்ணன் பாட்டனாரின் இலக்கிய மரபணுவை பினானுரிமையாகப் பெற்றிருக்கிறார்.
இளைய மகன் இளங்கோவின் பெயரில் இராஜதுரை ஒரு அச்சகத்தையும் நடத்தினார். காலஞ்சென்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம்.எச்.எம். அஷரப் இராஜதுரையின் ஒரு அபிமானி. தனது பேச்சுப்பாணியை வளர்ப்பதில் இராஜதுரையை ஒரு முன்மாதிரியாக பின்பற்றியதாக ஒரு தடவை அஷ்ரப் எனானிடம் கூறினார். இராஜதுரையின் எழுத்தாற்றலை பற்றியும் என்னிடம் புகழ்ந்து கூறிய அஷ்ரப் அவரின் அரசியல் பிரவேசம் தமிழ் இலக்கியத்துக்கு பெரும் இழப்பு என்றும் குறிப்பிட்டார். அஷ்ரப்பைப் பற்றியும் அவ்வாறு கூறமுடியும் என்பதே உண்மை.
எஸ். ஜே.வி. செல்வநாயகம்
எஸ். ஜே.வி. செல்வநாயகத்தின் வருகையும் இலங்கை தமிழரசு கட்சியின் தோற்றமும் இராஜதுரையின் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தன. கோப்பாய் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கே. வன்னியசிங்கம், செனட்டர் ஈ.எம். வி. நாகநாதன் ஆகியோர் சகிதம் செல்வநாயகம், ஜீ.ஜீ. பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸில் இருந்து வெளியேறி 1949 டிசம்பரில் இலங்கை தமிழரசு கட்சியை ஆரம்பித்தனர்.
முறைப்படியாக கட்சியை அங்குரார்ப்பணம் செய்வதற்கு முன்னதாக செல்வநாயகம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று தனது சமஷ்டிக் கொள்கைகளை பிரசாரம் செய்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்துக்கும் செல்வநாயகம் சென்றார். அன்று மட்டக்களப்பு மாவட்டம் தற்போதைய அம்பாறை மாவட்டத்தையும் மட்டக்களப்பு மாவட்டத்தையும் உள்ளடக்கியதாக இருந்தது. வடக்கில் வாகரை தொடங்கி தெற்கில் பாணமை வரை அது விரிந்திருந்தது.
மட்டக்களப்பில் செல்வநாயகம் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருந்தது. எஸ்.யூ. எதிர்மன்னசிங்கம், வி.நல்லையா ( இருவரும் பாராளுமன்ற உறுப்பினர்கள்) போன்ற கிழக்கின் தமிழ் அரசியல் முக்கியஸ்தர்கள் செல்வநாயகத்தை யாழ்ப்பாணத்தமிழன் என்று இகழ்ச்சியாகக் கூறி அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தனர்.
தமிழரசு கட்சியின் தொடக்கம்
ஆனால், செல்வநாயகத்தை வரவேற்று அவருடன் பேச்சுவார்த்தை நடத்திய ஒரு மட்டக்களப்பு தமிழ்க்குழுவுக்கு இராஜதுரை தலைமை தாங்கினார். பேச்சுவார்த்தையின் போது செல்வநாயகத்தின் கொள்கைப் பற்றினால் இராஜதுரை கவரப்பட்டார். அவரின் உற்சாகத்தைக் கண்டு செல்வநாயகமும் பெரு மகிழ்ச்சியடைந்தார்.
அதன் விளைவாக இராஜதுரை சமஷ்டிக் கொள்கையை தழுவிக் கொண்டார். எனவே, 1949 டிசம்பர் 18 ஆம் திகதி கொழும்பில் அரசாங்க எழுதுவினைஞர் சேவை சங்கத்தின் மண்டபத்தில் இலங்கை தமிழரசு கட்சி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டபோது மட்டக்களப்பில் இருந்துவந்து கலந்துகொண்ட ஐவரில் இராஜதுரை ஒருவராக இருந்தார்.
சுதந்திரன்
செல்வநாயகம் ‘சுதந்திரன் ‘ பத்திரிகையையும் ஆரம்பித்தார். முதலில் அந்த பத்திரிகை தினசரியாக வந்து பிறகு வாரப் பத்திரிகையாகியது. அதில் ஒப்புநோக்காளராகவும் உதவி ஆசிரியராகவும் இணைந்து கொள்ளுமாறு இராஜதுரையை செல்வநாயகம் அழைத்தார். அந்த அழைப்பை ஏற்ற அவர் கொழும்புக்கு வந்தார்.
1952 தேர்தல்
1952 ஆம் ஆண்டில் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டபோது புதிய கட்சியான தமிழரசு கட்சி பாரிய சவாலை எதிர்நோக்கியது. குறிப்பாக மட்டக்களப்பில் வேட்பாளர்களை நியமிப்பதில் கட்சி சிக்கல் ஏற்பட்டது.
இறுதியில் மட்டக்களப்பில் இருந்து ஒரு வேட்பாளரை தமிழரசு கட்சியினால் நிறுத்த முடியாமல் போனது. இரு சுயேச்சை வேட்பாளர்களை — கல்குடாவில் சுப்பிரமணியம் சிவஞானம், மட்டக்களப்பில் ஆர்.பி. கதிர்காமர் — தமிழரசு கட்சி ஆதரித்தது. சிவஞானம் தோல்வி கண்டார். வெற்றிபெற்ற கதிர்காமர் உடனடியாகவே ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் இணைந்துகொண்டார்.
1947 பாராளுமன்ற தேர்தலில் இராஜதுரை சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட மட்டக்களப்பின் முன்னணி வழக்கறிஞரான கே.வி.எம். சுப்பிரமணியத்தை ஆதரித்து வேலை செய்தார். சுப்பிரமணியம் அந்த தேர்தலில் தோல்வி கண்டார்.
1952 ஆம் ஆண்டில் ஆர்.பி. கதிர்காமரை ஆதரித்து வேலை செய்வதற்கு இராஜதுரை விரும்பவில்லை.
திருகோணமலைக்கு சென்ற அவர் அங்கு தமிழரசு கட்சியின் வேட்பாளரான என்.ஆர். இராஜவரோதயத்தை ஆதரித்து பிரசாரங்களில் ஈடுபட்டார். இராஜவரோதயத்துக்கு ஆதரவாக பல்வேறு கூட்டங்களில் உரையாற்றிய இராஜதுரை தன்னை ஒரு சிறந்த பேச்சாளர் என்பதை நிறுவிக் கொண்டார்.
1952 தேர்தலில் தமிழரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டவர்களில் இருவர் மாத்திரமே வெற்றி பெற்றனர். வடக்கில் கோப்பாயில் வன்னியசிங்கமும் கிழக்கில் திருகோணமலையில் என்.ஆர். இராஜவரோதயமுமே அவ்விருவருமாவர். இராஜவரோதயத்தின் வெற்றியில் இராஜதுரை வகித்த பாத்திரம் செல்வநாயகத்தினாலும் தமிழரசு கட்சியானாலும் பெரிதும் பாராட்டப்பட்டது.
1956 தேர்தல்
இலங்கையின் அரசியலில் 1956 ஆம் ஆண்டு ஒரு மைல் கல்லாக அமைந்தது. பிரதானமாக் சிங்களத்தை மாத்திரம் அரசகரும மொழியாக்குவதையும் தமிழை புறக்கணிப்பதையும் சுற்றியதாகவே அந்த தேர்தல் அமைந்தது. தமிழரசு கட்சியின் வேட்பாளர்களாக போட்டியிடுவதற்கு பெருமளவானோர் முண்டியடித்தனர். என்றாலும் மட்டக்ளப்பில் ஒரு சிக்கல் இருக்கவே செய்தது. ” படித்த, ஆங்கிலம் பேசுகின்ற ” பொருத்தமான வேட்பாளரை மட்டக்களப்பு தொகுதியில் களமிறக்க தமிழரசு கட்சியினால் முடியாமல் போனது.
இறுதியில் செல்வநாயகம் துணிச்சலான ஒரு முடிவை எடுத்தார். மூன்றாம் நிலைக் கல்வியைப் பெற்றிராத — தமிழை மாத்திரமே பேசச்கூடிய இராஜதுரையை மட்டக்களப்பு வேட்பாளராக நிறுத்துவதற்கு அவர் தீர்மானித்தார்.
இராஜதுரையின் நியமனத்தை தமிழரசு கட்சிக்குள் இருந்த சிலர் விரும்பவில்லை. ஆனால் பெரும்பான்மையானவர்கள் அவரை ஆதரித்தனர்.
இத்தகைய சூழ்நிலையில் ” சாமானியன் ” இராஜதுரை 1956 தேர்தலில் தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு வேட்பாளராக போட்டியிட்டார்.அந்த தேர்தலில் பெரிய வெற்றியைப் பெற்ற அவர் அடுத்தடுத்த தேர்தல்களிலும் தொடர்ந்து மடக்களப்பின் உறுப்பினராக பாராளுமன்றத்துக்கு தெரிவாகி வந்தார்.
இறுதியில் இராஜதுரை பல வழிகளில் தமிழரசு கட்சியின் நங்கூரமாக மாறினார். இருந்தாலும், எதிர்பாராத வகையில் விதியின் திருப்பமாக, சூழ்நிலைகளின் காரணமாக இராஜதுரை கட்சி மாறி ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் இணைய நிர்ப்பந்திக்கப்பட்டார். ஏன் இவ்வாறு நடந்தது? அதற்கு பிறகு என்ன நடந்தது? இந்த கட்டுரையின் இரண்டாம் பாகத்தில் பார்ப்போம்.
________________
D.B.S.Jeyaraj can be reached at dbsjeyaraj@yahoo.com
ஆங்கில மூலம்: டி. பி. எஸ். ஜெயராஜ் (Daily Mirror)
தமிழில்: வீரகத்தி தனபாலசிங்கம்
நன்றி: வீரகேசரி
*******************************************************************************

