டி.பி.எஸ். ஜெயராஜ்
<em>தமிழில் தேசியகீதத்தை இசைத்தல் -2
இலங்கையின் தேசியகீதத்தை தமிழில் இசைப்பதன் வரலாற்றை கடந்த வாரம் வெளியான இந்த கட்டுரையின் முதல் பாகம் சுருக்கமாக விளக்கியது. இரண்டாவதும் இறுதியுமான இந்த பாகம் தமிழில் தேசியகீதத்தை இசைப்பதில் பல வருடங்களாக காணக்கூடியதாக இருந்த பின்னடைவையும் முன்னேற்றத்தையும் பற்றி ஆராய்கிறது. ஏற்கெனவே குறிப்பிட்டதை போன்று தமிழ் தேசியகீதப் பிரச்சினை ஒரு வகையில் இலங்கை நெருக்கடி தீவிரமடைந்ததை அடையாளபூர்வமாக குறித்துக் காட்டுவதாகவும் அமைந்தது.
இனநெருக்கடி தீவிரமடைந்த நிலையில் இலங்கையில் நிலைவரங்கள் எல்லாம் முற்றுமுழுதாக மாற்றமடைந்து சிங்கள, தமிழ்ச் சமூகங்கள் மெதுமெதுவாக பிரிந்து சென்றன. 1956 ஆம் ஆண்டுக்கு முன்னர் அனேகமாக யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு முக்கிய பாடசாலையிலும் மாணவர்களுக்கு சிங்களம் படிப்பிக்க சிங்கள ஆசிரியர்கள் ( அவர்களில் பலர் பௌத்த பிக்குமார்) இருந்தனர். அது தன்னியல்பாகவே நடைபெற்றது. தமிழைப் புறந்தள்ளி உத்தியோகபூர்வ தொழியாக சிங்களம் மாத்திரம் திணிக்கப்பட்ட பிறகு அந்த நடைமுறை இல்லாமல் போய்விட்டது.
அதைப் போன்றே தமிழ்ப் பகுதிகளில் பாடசாலைகளில் தமிழில் தேசியகீதம் இசைப்பதும் வழக்கத்தில் இல்லாமல் போனது. தெற்கில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளிலும் இது ஓரளவுக்கு பிரதிபலித்தது. ஆனால், நாட்டின் பல பாகங்களில் தமிழ்மொழி மூல முஸ்லிம் பாடசாலைகள் பலவற்றில் தமிழில் தேசியகீதம் இசைக்கும் நடைமுறை தொடர்ந்தது.
தமிழ் அரசியல் மனமும் (Tamil political psyche ) பல தசாப்தங்களாக மாற்றம் கண்டுவிட்டது இராமநாதன் — அருணாச்சலம் காலத்தில் தமிழர்கள் தங்களை இந்த தேசத்தை தாபிக்கும் இரு இனங்களில் ஒரு இனமாக, சிங்களவர்களுக்கு சமமானவர்களாக நோக்கினார்கள் ; ஜீ.ஜீ. பொன்னம்பலம் காலத்தில் தமிழர்கள் தங்களை இலங்கை முழுவதிலும் பிரதானமான சிறுபானமைச் சமூகமாகப் பார்த்தார்கள் ; எஸ். ஜே.வி. செல்வநாயகம் காலத்தில் தமிழர்கள் தங்களை வடக்கு — கிழக்கில் ஒரு பிராந்திய சிறுபான்மையினத்தவர்களாக கருதினார்கள் ; அமிர்தலிங்கம் காலத்தில் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் தோற்றத்தை அடுத்து தமிழர்கள் தங்களை தனியான ஒரு தாயகத்துக்கும் சுயநிர்ணய உரிமைக்கும் உரித்துடைய தனித்துவமான ஒரு தேசிய இனமாக கருதினார்கள் ; வேலுப்பிள்ளை பிரபாகரனும் ஏனைய தமிழ்த் தீவிரவாத தலைவர்களும் தமிழீழத்துக்கான 1977 ஆணையின் அடிப்படையில் இந்த தாயகத்தின் விடுதலைக்கு ஆயுதமேந்திய போராட்டத்துக்கு தலைமை தாங்கினார்கள்.
” தமிழ் அரசு தேசியகீதம் ”
இனநெருக்கடியில் கட்டவிழ்ந்து கொண்டிருந்த புதிய நிலைவரத்தில், தேசிய கீதத்தை இசைக்கும் நடைமுறை மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக தமிழ் அரசியல் சமுதாயத்தின் மத்தியில் வழக்கில் இல்லாமல் போனது. இலங்கை தமிழரசு கட்சினதும் அடுத்து தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியினதும் அரசியல், அரசியல் கூட்டங்களில் ஒரு மாற்று ‘ தமிழ் அரசு ” கீதம் இசைக்கப்படுகின்ற சூழ்நிலை ஒன்றைத் உருவாக்கியது. குறைந்தபட்சம் மூன்று வெவ்வேறு கீதங்கள் பயன்பாட்டில் இருந்தன.
பரமஹம்சதாசன் எழுதிய ” வாழ்க ஈழத்தமிழகம், வாழ்க என்றும் வாழ்கவே” என்பது தமிழரசு கீதங்களில் ஒன்று. மற்றையது ” எங்கள் ஈழத் தமிழ்த் திருநாடு, கலை வாழும் பொன்னாடு” என்ற கீதம். இதை எழுதியவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேருவின் தந்தையும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தனின் பாட்டனாருமான ‘ திருக்கோவில்’ அரியநாயகம். ‘மாவையிட்ட மங்கை’ திரைப்படத்துக்காக கவியரசர் கண்ணதாசன் எழுதிய ” எங்கள் திராவிடப் பொன்னாடு ” என்று தொடங்கும் பாடலைத் தமுவியே இதை அரியநாயகம் எழுதினார். ” எங்கள் தங்க மாமணித் தமிழ்ஈழம் ” என்பது மூன்றாவது தமிழ் அரசுக்கீதம். இதை எழுதியவர் தற்போது சென்னையில் வாழும் ஈழம்வாதியான உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்.
” தமிழ் ஈழத்தேசிய கீதம் ” ஒன்றின் இந்த மூன்று வடிவங்கள் தமிழ்த் தீவிர தேசியவாதமும் பிரிவினைவாதமும் உச்சக்கட்டத்தில் இருந்த தசாப்தங்களில் இசைக்கப்பட்டவை.இவை தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல்களில் இருந்து வேறுபட்டவை. தமிழ்த்தாயை போற்றிப் பாடுவது சகல தமிழ்க் கலாசார வைபவங்களிலும் ஒரு கட்டாயமாகும். தமிழ் மொழியை ” தாய்த்தமிழாக ” உருவகப்படுத்துவதையும் அவளைப் புகழ்ந்து பாடுவதையும் தமிழர்கள் அல்லாதவர்களினால் விளங்கிக்கொள்வது கஷ்டமான ஒன்றாகும்.
வழமையாக சுப்பிரமணிய பாரதியாரின் ” வாழ்க நிரந்தரம், வாழ்க தமிழ்மொழி, வாழிய வாழியவே” அல்லது பாரதிதாசனின் ” தமிழுக்கும் அமுதென்று பேர், அந்த தமிழ், இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்ற பாடல்கள் கலாசார வைபவங்களில் தமிழ்த்தாயைக் கௌரவித்து இசைக்கப்படுகின்றன.
எமது அயல்நாடான இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் பேராசிரியர் சுந்நரம்பிள்ளையின் ” மனோன்மணீயத்தில் ” இருந்து எடுத்த ” நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலோங்கும்” என்ற பாடல் தமிழ்த்தாய் வாழ்த்தாக பயன்படுத்தப்படுகிறது. அந்த வரிகள் இந்தியாவின் தமிழ்நாட்டை மாத்திரம் குறிப்பதால் அந்த நடைமுறை இலங்கைத் தமிழர்களினால் பின்பற்றப்படுவதில்லை.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் குறிப்பிட்ட சில பிராந்தியங்களை விடுதலை புலிகள் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த பிறகு இலங்கைத் தேசியகீதத்தை இசைக்கும் நடைமுறை நிறுத்தப்பட்டது. விடுதலை புலிகளிடம் ஒரு மாற்று தமிழீழ கீதம் இருக்கவில்லை.. பதிலாக ‘ புலிக்கொடியின் ‘ பெருமைகளையே அவர்கள் போற்றிப் பாடினார்கள். புலிக்கொடி தமிழீழக் கொடியாக அல்லது தமிழ்த் தேசியக் கொடியாக காட்சிப்படுத்தப்பட்டது.” ஏறுது பார், கொடி ஏறுது பார்” என்ற பாடலை விடுதலை புலிகளின் கவிஞர் புதுவை இரத்தினதுரை எழுதினார். விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் பெரும்பாலான வைபவங்களில் புலிக்கொடி ஏற்ற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. அந்த வைபவங்களில் புதுவையின் இந்த பாடல் இசைக்கப்பட்டது.
விடுதலை புலிகளின் தோல்வி
விடுதலை புலிகளிடம் இருந்து பிராந்தியங்களை இலங்கை ஆயுதப்படைகள் மீளக்கைப்பற்றத் தொடங்கிய பிறகு கொழும்பு அதன் ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் மீளப் பெற்றுக்கொண்டது. மோதல்கள் விரிவடைந்ததன் விளைவாக வடக்கு, கிழக்கில் தேசாயகீதம் இசைப்பது கணிசமானளவுக்கு குறைந்துவிட்ட போதிலும், 2009 மே மாதத்தில் விடுதலை புலிகளின் இராணுவத் தோல்விக்கு பிறகு மீண்டும் தேசிய கீதம் இசைக்கும் நடைமுறை தொடங்கியது. தேசியக்கொடி வடக்கு, கிழக்கில் பறந்ததுடன் தேசியகீதமும் இசைக்கப்பட்டது. அது ஒரு வகையில் கடந்த காலத்தின் மீள்வருகையாக அல்லது சுதந்திரத்தின் பின்னரான ஆரம்ப வருடங்களில் நிலவிய சூழ்நிலையின் மீட்சியாக இருந்தது.
ஆரம்பத்தில் வடக்கில் தேசியகீதம் சிங்களத்தில் மாத்திரம் இசைக்கப்பட்டது அல்லது ஒலிபரப்பப்பட்டது. ஆனால், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்த ஒரேயொரு இலங்கைத் தமிழ் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சி காரணமாக தேசியகீதத்தை இசைப்பதில் தமிழ்மொழியின் பயன்பாடும் தொடங்கியது. மெதுமெதுவாக ஆனால், நிலையாக தமிழிலும் தேசியகீதம் இசைக்கப்படுவது நடைமுறைக்கு வந்தது.
ஆனால், பல தசாப்தகால அன்னியமயத்துக்கு பிறகு இலங்கைத் தமிழர்கள் மீண்டும் பிரதான நீரோட்டத்திற்குள் இழுக்கப்படத் தொடங்கினார்கள் என்பது முக்கியமான ஒன்றாகும். மீண்டும் அவர்கள் பரந்தளவிலான இலங்கையர் இடையாளத்தை அவர்கள் வலியுறுத்த தொடங்கினார்கள். இந்த மனநிலையை விளக்குவதற்கு தேசியகீதம் இசைக்கப்பட்டதை விடவும் வேறு எது சிறந்த வழியாக இருக்க முடியும்?
அதேவேளை, தேசிய கீதத்தை தங்களது தாய்மொழியில் இசைப்பதன் மூலம் தங்களது இனத்துவ அடையாளத்தை நிலைநிறுத்தவும் தமிழர்கள் விரும்பினார்கள். தேசிய கீதத்தை தமிழில் இசைப்பதே இலங்கையர்களாகவும் தமிழய்களாகவும் இருப்பதன் சிறந்த உதாரணமாக இருக்கும். விடுதலை புலிகளுக்கு எதிரான போரை ‘ வென்றதாக ‘ கூறப்படும் மகிந்த ராஜபக்ச இலங்கைத் தமிழர்கள் அரசியல் வனாந்தரத்தில் இருந்து வெளியில் வந்து மீண்டும் இலங்கைத் தேசத்தின் இன்றியமையாத அங்கமாக மாறுவதை ஊக்கப்படுத்துவதன் மூலமாக சமாதானத்தையும் ‘ வென்றெடுக்க ‘ என்று மக்கள் எதிர்பார்த்தனர்.
மகிந்த ராஜபக்ச
இத்தகைய பின்புலத்தில், தமிழில் தேசிய கீதத்தின் பயன்பாட்டின் மீது மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் ஒரு திடீர் ” தாக்குதல் ” தொடுக்கப்பட்போது உண்மையில் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. தேசியகீதத்தின் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் வடிவத்தை இல்லாதொழித்து உத்தியோகபூர்வமாக தேசியகீதத்தை இசைப்பதற்கு பயன்படுத்தக்கூடிய ஒரே மொழியாக சிங்களத்தை திணிப்பதற்கு அரசாங்கத்திற்குள் இருந்த சில பிரிவினரால் முயற்சிகள் கடுமையான முன்னெடுக்கப்பட்டன. இது தொடர்பில் 2020 டிசம்பர் 8 ஆம் திகதி அமைச்சரவைப் பத்திரம் ஒன்று அரசாங்கத்தினால் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது.
அந்த காலகட்டத்தில் அரசியல் ரீதியில் அத்தகையதொரு குறுகிய நோக்குடனான நடவடிக்கையை எடுக்கக்கூடியதாக இருந்தது என்பது நம்பமுடியாததாக இருந்தது. பல தசாப்தகாலப் பிரிவினைவாத மோதல் ஒன்றுக்கு பிறகு, அந்நியப்பட்டிருந்த தமிழ் மக்கள் ஐக்கியப்பட்ட தேசம் ஒன்றுக்குள் அரசியல் பிரதான நீரோட்டத்திற்குள் மீண்டும் ஒன்றிணைவதற்கு மெதுமெதவாக முயற்சித்துக் கொண்டிருந்தது. அதை உற்சாகப்படுத்துவதற்கு பதிலாக தங்கள் தாய்மொழியில் தமிழர்கள் தேசிய கீதத்தை இசைப்பதற்கான உரிமை மறுக்கப்பட்டது. தமிழர்கள் மீது அடையாள முக்கியத்துவமுடைய ஒரு தாக்குதல் தொடுக்கப்பட்டது.
இராணுவ ரீதியாக விடுதலை புலிகள் தோற்கடிக்கப்பட்டதற்கு பின்னரான காலப்பகுதியில் இந்த உரிமை மறுப்புச் செயல் வேறு குழப்பகரமான கற்பிதங்களுக்கு வழிவகுத்தது. அதை போர் வெற்றிக்களிப்பின் ஒரு சின்னம் என்று சிலர் வியாக்கியானம் செய்தனர். ” வெற்றிகொள்ளப்பட்ட ” ஒரு மக்களாக தமிழர்கள் நடத்தப்படுகிறார்களா? ” வெற்றிகொண்டவரின் ” மொழியில் தேசியகீதத்தை இசைக்க வேண்டும் என்று அவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்களா?
அமைச்சரவை பத்திரம்
தேசியகீதத்தை இசைப்பது தொடர்பில் அன்றைய பொதுநிருவாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன 2010 நவம்பர் 3 ஆம் திகதி அமைச்சரவை பத்திரம் ஒன்றைச் சமர்ப்பித்தார். தேசியகீதம் சிங்கள மொழியில் மாத்திரம் இசைக்கப்பட வேண்டும் என்று சிபாரிசு செய்த அந்த பத்திரம் பல தசாப்தக்களாக பயன்பாட்டில் இருந்துவந்த தமிழ் மொழிபெயர்ப்பு முற்றாக ஒழிக்கப்படவேண்டும் என்று யோசனை கூறியது. சிங்கள மொழியில் பரிச்சயம் இல்லாதவர்கள் சிங்களச் சொற்களை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் எழுதி தேசியகீதத்தை இசைக்கவேண்டும் என்றும் யோசனை முன்வைக்கப்பட்டது.
தேசியகீதத்தை சிங்கள மொழியில் மாத்திரம் இசைக்கவேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சரவை பத்திரம் அரசாங்கத்திற்குள் சூடான விவாதத்துக்கு பிறகு ” கிடப்பில் ” போடப்பட்டது. பல தமிழ் மற்றும் முஸ்லிம் அமைச்சர்களும் வாசுதேவ நாணயக்கார, டாக்டர் ராஜித சேனாரத்ன போன்ற முற்போக்குச் சிந்தனை கொண்ட சிங்கள அமைச்சர்களும் அந்த முயற்சியை கடுமையாக எதிர்த்தனர். ஆனால், தேசியகீதம் தமிழ்மொழியில் இசைக்கப்படக் கூடாது என்ற உத்தரவுகள் மிகவும் நாசூக்கான முறையில் அரசாங்க அதிகாரிகளுக்கும் ஆயுதப்படைகளின் அதிகாரிகளுக்கும் பிறப்பிக்கப்பட்டது.
உத்தியோகபூர்வமாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. ஆனால், ” உத்தியோகபூர்வமாக அனுமதிக்கப்பட்ட உத்தியோகபூர்வமற்ற அறிவுறுத்தல்கள் ” தமிழ்த் தேசிய கீதத்தை மௌனமாக்கின. இந்த பிரச்சினை பரந்தளவில் தமிழ்பேசும் மக்களின் உணர்வுகளைப் பாதித்தது. இது தவிரவும், தேசியகீதத்தின் தமிழ் வடிவம் தமிழர்கள் செறிந்து வாழ்கின்ற பகுதிகளில் அல்லது தமிழ்மொழி மூல பாடசாலைகளுடன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் இசைக்கப்படுவதை முற்றிலும் அபத்தமானதாகத் தோன்றியது. கவலைக்குரிய வகையில் 2015 ஜனவரியில் ஆட்சிமாற்றம் ஏற்படும் வரை இந்த் நிலைவரமே தொடர்ந்தது.
மைத்திரி — ரணில் அரசாங்கம்
2015 ஆம் ஆண்டில் மைத்திரிபால சிறிசேன — ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் பதவிக்கு வந்ததை அடுத்து இன அமைதி மற்றும் இணக்கப்பாட்டுச் சூழ்நிலை ஒன்று தோன்றியது. தேசிய கீதத்தை தமிழில் இசைக்கும் நடைமுறை மீண்டும் கொண்டு வரப்பட்டமை அதில் ஒரு முக்கிய காரணியாக இருந்தது.
அடையாளபூர்வ முக்கியத்துவமுடைய , அர்த்தபுஷ்டியான நிகழ்வொன்று யாழ்ப்பாணக் குடாநாட்டின் வளலாய்ப் பகுதியில் 2015 மார்ச் 23 ஆம் திகதி இடம்பெற்றது. அதில் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் கலந்துகொண்டனர். உயர்பாதுகாப்பு வலயம் ஒன்றைப் பேணுவதற்காக ஆயுதப்படைகளினால் கையகப்படுத்தப்பட்ட 400 ஏக்கர்களுக்கும் அதிகமான காணிகள் நீண்டகாலமாக அவற்றைப் பெறமுடியாமல் இருந்த சட்டரீதியான உரிமையாளர்களுக்கு கையளிக்கப்பட்டது. வளலாய் நிகழ்வு இனங்களுக்கு இடையிலான உறவுகளைப் பொறுத்தரை இன்னொரு எளிமையான ஆனால் வலிமையான சமிக்ஞையைக் காட்டுவதற்கும் உதவியது. தேசியகீதம் சிங்களத்திலும் தமிழிலும் அங்கு இசைக்கப்பட்டது.
அதற்கு பிறகு இலங்கையின் 68 வது சுதந்திரதினம் 2016 பெப்ரவரி 4 ஆம் திகதி வந்தது. உத்தியோகபூர்வமான சுதந்திரதினக் கொண்டாட்டம் கொழும்பு கோட்டை காலிமுகத்திடலில் நடைபெற்றது. எமது தேசியகீதம் சிங்களத்திலும் தமிழிலும் இசைக்கப்பட்டமை அன்றைய தினத்தின் முக்கியமான ஒரு அம்சமாக அமைந்தது. அப்போது ” டெயிலி மிறர்” பத்திரிகையில் நான் எழுதிய ஒரு கட்டுரையின் ஒரு பந்தி வருமாறு ;
” சுதந்திரதினத்தில் இடம்பெறும் உத்தியோகபூர்வ கொண்டாட்டக்கள் பலவற்றை நான் கடந்த தசாப்தங்களில் கண்டிருக்கிறேன். ஆனால், எனது வாழ்நாளில் ஒருபோதுமே நடைபெறாமல் போகக்கூடியது என்று நான் நினைத்த ஒரு காட்சியை எனது வாழ்வில் முதல் தடவையாக இணையத்தில் பார்த்தேன். சிறுவர்களும் சிறுமிகளும் அடங்கிய குழுவொன்று எனது தாய்மொழியான தமிழில் இலங்கையின் தேசியகீதத்தை இசைத்ததை பார்த்தும் கேட்டும் மகிழ்ந்தேன். அதை இசைப்பதற்கு அவர்களுக்கு 2 நிமிடம் 32 செக்கன்கள் எடுத்தன. அந்த குழுவினர் பம்பரப்பிட்டி இராமந்தன் மகளிர் கல்லூரியையும் கொழும்பு விவேகானந்தா கல்லூரியையும் சேர்ந்தவர்கள். மிகவும் இன்னயமான முறையில் அவர்கள் தேசியகீதத்தை இசைத்தார்கள். பல தசாப்தங்களுக்கு பிறகு அரசின் ஏற்பாட்டிலான சுதந்திரதின கொண்டாட்டத்தில் உத்தியோகபூர்வ அங்கீகாரத்துடன் தேசியகீதம் தமிழில் இசைக்கப்பட்டது.”
2017, 2018 , 2019 ஆண்டுகளில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ சுதந்திரதினக் கொண்டாட்டங்களிலும் தமிழில் தேசியகீதம் இசைக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டின் முன்னுதாரணம் உறுதியான முறையில் வேரூன்றிவிட்டது போன்று தோன்றியது. தமிழில் தேசியகீதத்தை இசைப்பது நாட்டுக்கோ அல்லது சிங்களப் பெரும்பான்மை இனத்துக்கோ எந்த வகையிலும் குந்தகமானது அல்ல என்பதை இலங்கை மக்களினால் பார்க்கவும் விளங்கிக்கொள்ளவும் கூடியதாக இருந்தது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை, தமிழில் தேசியகீதத்தை இசைப்பதற்கான உரிமை என்பது அவர்கள் இழந்த உரிமைகளை மீளப் பெற்று, இந்த நாட்டில் பெரும்பான்மை இனத்தவர்களுடன் சமத்துவமானவர்கள் என்ற அந்தஸ்தை அடைந்துவிட்டதாக அர்த்தப்படாது. இருந்தாலும், சுதந்திரதின நிகழ்வில் தமிழில் தேசிய கீதத்தை இசைப்பது என்பது அடையாளபூர்வமான ஒரு பெறுமதியைக் கொண்டது. எதிர்காலத்தில் சமத்துவம், ஐக்கியம், இணக்கப்போக்கு மற்றும் அமைதிக்கான பிரகாசமான வாய்ப்புக்களைை அது வெளிக்காட்டியது.
கோட்டாபய ராஜபக்ச
2019 தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு மீண்டும் ராஜபக்ச ஆட்சி வந்ததை அடுத்து நேர்மறையானதும் எதிர்மறையானதுமான பல மாற்றங்கள் ஏற்பட்டன. சுதந்திரதினக் கொண்டாட்டங்களில் தமிழில் தேசியகீதம் இசைக்கப்படுவதில் செய்யப்பட்ட மாற்றம் அந்த ” மாற்றங்களில் ” ஒன்று.
” 1972 வது சுதந்திரதினம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பெப்ரவரி 4 ஆம் திகதி நடைபெறும் ” என்று 2020 ஜனவரியில் பொதுநிருவாக அமைச்சு அறிவித்தது. சிங்களத்தில் மாத்திரம் தேசியகீதம் இசைக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பு மேலும் கூறியது.
அடுத்த சுதந்திரதினக் கொண்டாட்டங்களில் ( 2020 பெப்ரவரி 4) தமிழில் தேசியகீதம் இசைக்கப்படுவதை தடைசெய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அன்றைய பொதுநிருவாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் பி.பி.சி.க்கு கூறினார். தேசியகீதம் இரண்டாகப் பிரிக்கப்படக்கூடாத ஒன்று என்று அவர் மேலும் கூறினார். வேறு சில அமைச்சர்கள் தெரிவித்த கருத்துக்களும் தமிழிலும் அல்ல சிங்களத்தில் மாத்திரமே தேசியகீதம் இசைக்கப்படும் என்பதை வெளிக்காட்டின. ” சிங்களம் மாத்திரம் ” தேசியகீதத்துக்காகவே 69 இலட்சம் வாக்காளர்கள் கோட்டாவை ஜனாதிபதியாக தெரிவு செய்தார்கள் என்று கூட ஒரு அமைச்சர் கூறினார்.
கோட்டாபய ராஜபக்ச ஆட்சியின் கீழ்்2020, 2021, 2022 சுதந்திரதினக் கொண்டாட்டங்களில் தமிழில் தேசியகீதம் இசைக்கப்படவில்லை. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வந்த பிறகு 2023 ,2024 ஆண்டுகளில் தமிழில் தேசியகீதம் இசைக்கப்படும் நடைமுறை மீண்டும் கொணடுவரப்பட்டது. இப்போது ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க 2025 ஆம் ஆண்டில் அதே நடைமுறையை பாராட்டத்தக்க முறையில் தொடர்ந்தார்.
சட்டரீதியான சவால்
தமிழில் தேசியகீதம் இசைக்கப்படுவதற்கு எதிராக 2016 ஆம் ஆண்டில் வழக்கொன்று தொடுக்கப்பட்டது என்பது மிகவும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாகும்.20016 பெப்ரவரி 4 ஆம் திகதி தமிழில் தேசியகீதம் இசைக்கப்பட்டதை அடுத்தே அவ்வாறு செய்யப்பட்டது. சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் தமிழில் தேசியகீதத்தை இசைப்பதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்துக்கு எதிராக 2016 பெப்ரவரியில் களனி பகுதியைச் சேர்ந்த மூவர் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்தனர். சடடமா அதிபரினதும் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்த தரப்புகளினதும் சமர்ப்பணங்களை ஆராயந்த பிறகு நீதியரசர்கள் பிரியசத் டெப், கே ரி. சித்திரசிறி, பிரசன்ன ஜெயவர்தன ஆகியோரைக் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு அடிப்படை உரிமை மீறல் மனுவை தொடக்கத்திலேயே நிராகரிக்கத் தீர்மானித்தது. அந்த மனுவை விசாரணை செய்வதற்குைஅனுமதி வழங்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்
கொழும்பை மையமாகக் கொண்ட அரசாங்க சார்பற்ற தன்னார்வ நிறுவனமான மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் அந்த வழக்கில் இடையீட்டு மனுவொன்றைத் தாக்கல் செய்தது. அந்த நிலையத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது ;
” சஞ்சீவ சுதத் பெரேரா என்பவரும் வேறு இரு நபர்களும் 2016 உத்தியோகபூர்வ சுதந்திரதினக் கொண்டாட்டங்களில் தமிழில் தேசியகீதம் இசைப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து 2016 பெப்ரவரி 26 ஆம் திகதி உயர்நதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்தனர். தேசியகீதத்தை தமிழில் இசைப்பது தேசியகீதம், சமத்துவம் மற்றும் பாரபட்சமின்மைக்கான உரிமைகள் தொடர்பிலான இலங்கை அரசியலமைப்பின் 7 ஆம், 12 ஆம் சரத்துக்களுக்கு முரணாக அமைகிறது.
” மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையமும் அதன் நிறைவேற்று பணிப்பாளருமான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவும் 2016 மார்ச் 4 ஆம் திகதி இடையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்தனர். தமிழில் தேசியகீதத்தை இசைப்பது அரசியலமைப்புக்கு இசைவானதே என்று வாதிட்ட அந்த மனு முதலில் சிங்களமும் தமிழும் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழிகள் என்றும் தேசிய மொழிகள் என்றும் கூறும் அரசியலமைப்பின் 18 ஆம் , 19 ஆம் சரத்துக்களைச் சுட்டிக்காட்டியது.
மேலும், பாராளுமன்ற சட்டங்கள் போன்ற கீழ்நிலையான சட்டவாக்கங்களைப் போலன்றி, அரசியலமைப்பு தமிழ் வடிவத்துக்கு மேலாக சிங்கள வடிவம் செல்லுபடியாகக் கூடியது என்று கூறும் ஏற்பாடு எதுவும் அரசியலமைப்பில் இல்லை. அதனால் இலங்கை அரசியலமைப்பின் தமிழ் வடிவத்தின் மூன்றாம் அட்டவணையுடன் சேர்த்து 7 ஆம் சரத்தினால் அங்கீகரிக்கப்பட்டவாறு தமிழில் தேசியகீதத்தின் சொற்களும் இசையும் அரசியலமைப்புக்கு உடன்பாடானவையே.
” இடையீட்டு மனு மேலும் அரசியலமைப்பின் 12 ஆம் சரத்தையும் சுட்டிக்காட்டி சிங்களத்தில் மாத்திரம் தேசியகீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற பிரகடனம் 12 ஆம் சரத்தை நேரடியாகே மீறுவதாக அமைவதுடன் அதன் மூலமாக தமிழ்பேசும் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் இருக்கிறது. தமிழில் தேசியகீதத்தை இசைப்பது அரசியலமைப்புக்கு ஏற்புடையதே என்று கூறும் வேறு இரு இடையீட்டு மனுக்களையும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் ஆதரித்தது.
” நீதிமன்றில் மனுவை பரிசீலனை செய்யக்கூடிய அளவுக்கு போதுமான காரணங்கள் இருக்கின்றனவா என்பதை ஆராய்வதற்கு உயர்நீதிமன்றம் 2016 நவம்பர் 16 ஆம் திகதி மனுவை விசாரணைக்கு எடுத்தது. விசாரணையின்போது பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இலங்கையின் உத்தியோகபூர்வ , தேசிய மொழிகளில் தேசியகீதம் இசைக்கப்படுவதை அங்கீகரிக்கின்றதும் தமிழில் தேசியகீதம் இசைப்பது அரசியலமைப்பை மீறுவதாக அமையாது என்று கூறுகின்றதுமான 18 ஆம், 18 ஆம் சரத்துக்களைச் சுட்டிக்காட்டினார். அதனால், மனுதாரர்கள் தங்களது மனு பரிசீலனைக்கு எடுக்கப்படுவதற்குரிய நியாயமான காரணங்களை முன்வைக்கவில்லை என்று கூறிய உயர்நீதிமன்றம் மனுவை நிராகரித்தது.”
அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தமை தமிழில் தேசியகீதம் இசைக்கப்படுவது சட்டரீதியானதும் அரசியலமைப்பு ரீதியானதுமாகும் என்பதை எந்தவிதமான சந்தேகத்துக்கும் இடமின்றி நிரூபித்தது.
தாய்மொழியில் தேசியகீதம்
இலங்கையில் அமைதியாக இருக்கும் பெரும்பான்மையான தமிழர்கள் தமிழில் தேசியகீதத்தை இசைக்கவும் தங்களது நாட்டுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவும் விரும்புகிறார்கள். இது ஒன்றும் அவர்கள் முன்வைக்கும் புதிய கோராக்கை அல்ல, ஆனால், ஏற்கனவே அனுபவித்த உரிமையின் தொடர்ச்சியே அவர்கள் கோருகிறார்கள். சிங்களத்தில் தேசாயகீதத்துக்கு பெருமைக்குரிய இடத்தைக் கொடுக்கின்ற அதேவேளை, சாத்தியமான வேளைகளில், சாத்தியமான இடங்களில் தங்கள் தாய்மொழியில் தேசியகீதத்தை இசைப்பதற்கு மாத்திரமே அவர்கள் விரும்புகிறார்கள்.
சிங்களத்துடன் சேர்த்து தமிழிலும் தேசியகீதத்தை இசைப்பதற்கு சிறந்த சந்தர்ப்பம் தேசிய சுதந்திரதின நிகழ்வாகவே இருக்கமுடியும். சமத்துவம், ஐக்கியம், இணக்கப்போக்கு மற்றும் அமைதிக்கான பிரகாசமான வாய்ப்புக்களை வெளிக்காட்டக்கூடிய பெரும் அடையாளபூர்வமான பெறுமதியாகவும் அது அமையும்.
D.B.S.Jeyaraj can be reached at dbsjeyaraj@yahoo.com
ஆங்கில மூலம்: டி. பி. எஸ். ஜெயராஜ் (Daily Mirror)
தமிழில்: வீரகத்தி தனபாலசிங்கம்
நன்றி: வீரகேசரி
************************************************************************************************