டி.பி.எஸ். ஜெயராஜ்
வாசகர்களுக்கு ஒரு மன்னிப்புக்கோரலுடனும் விளக்கத்துடனம் இந்த கட்டுரையை தொடங்குகிறேன். இந்த பத்தி கடந்தவாரம் நான் எழுதிய கட்டுரையின் ( ஜனாதிபதி திசநாயக்கவின் சிம்மாசனத்தின் பின்னால் இருக்கும் சக்தி ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா? ) இரண்டாவதும் இறதியானதுமான பாகமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், இந்த வாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் அரச புலனாய்வு பிரிவின். முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது மற்றும் தடுப்புக்காவல் பற்றி எழுதவேண்டியதாயிற்று. ரில்வின் சில்வா பற்றிய கட்டுரை அடுத்த வாரம் பிரசுரமாகும்.
இராணுவ புலனாய்வு பிரிவு மற்றும் அரச புலனாய்வு பிரிவு ஆகியவற்றின் முன்னாள் தலைவரான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தின் (சி.ஐ.டி.) விசேட பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்றினால் 2026 பெப்ரவரி 25 புதன்கிழமை காலை 8.10 மணிக்கு பேலியகொடையில் கைது செய்யப்பட்டார். முதலில் அவரை விசாரணைக்காக 72 மணித்தியாலங்கள் தடுத்துவைப்பதற்கு கொடூரமான பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஏற்பாடுகள் பயன்படுத்தப்பட்டன. தற்போது அவர் 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
போதுமான சாட்சியங்களின் அடிப்படையிலேயே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சுரேஷ் சாலே கைதுசெய்யப்பட்டதாக பெயர் குறிப்பிடாத சிரேஷ்ட அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ‘ தி இந்து ‘ பத்திரிகையின் கொழும்பு செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசன் செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இந்த கைதை ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளில் ஏற்பட்டிருக்கும்்ஒரு முக்கியமான முன்னேற்றம் என்று அந்த அதிகாரி வர்ணித்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
2019 ஏப்ரில் 21 (ஈஸ்டர் ஞாயிறு ) காலையில் கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்களும் நான்கு ஹோட்டல்களும் இஸ்லாமிய தீவிரவாதக் குழுவொன்றைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளின் தாக்குதல்களுக்கு இலக்காகின. அந்த தாக்குதல்களில் 45 வெளிநாட்டவர்கள் உட்பட 270 பேர் கொல்லப்பட்டதுடன் 500க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.
செய்தியாளர்கள் மகாநாடு
பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் சாலே கைது செய்யப்பட்ட காரணத்தால் விசாரணை செய்வதற்காக அவரை 72 மணித்தியாலங்கள் (மூன்று நாட்கள் ) தடுத்துவைக்க முடியும் என்று பொலிஸ் திணைக்களத்தின் சட்டப்பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் ஜாலிய சேனாரத்ன விசேட செய்தியாளர்கள் மகாநாடொன்றில் கூறியதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின.
” அதற்கு பிறகு சான்றுகளின் அடிப்படையில் தடுப்புக்காவல் உத்தரவைப் பெறுவதற்கு நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றும் இந்த நோக்கத்துக்காக சட்ட ஏற்பாடுகள் நடைமுறையில் இருக்கின்றன ” என்று அவர் மேலும் கூறினார். சாலேயின் கைது தொடர்பில் பொது மக்கள் அறியவேண்டிய தகவல்கள் உரிய நேரத்தில் தெரியப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
அதே செய்தியாளர்கள் மகாநாட்டில் உரையாற்றிய மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ மெதவத்த , 2019 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சான்றுகளின் அடிப்படையில் சாலே கைது செய்யப்பட்டதாக கூறினார். இது தொடர்பில் நீண்ட விசாரணைகளை நடத்த வேண்டியிருக்கிறது என்றும் உரிய நாளடைவில் கூடுதலான தகவல்கள் வெளியிடப்படும் என்றும் மெதவத்த மேலும் கூறினார்.
ஒரு சில மணித்தியாலங்களுக்குள் மேலும் தகவல்களை வெளியிடுவது சிரமமானது என்று குறிப்பிட்ட அவர் பொலிசார் தங்களது கடமைகளை உகந்த முறையில் செய்திருப்பதாகவும் கூறினார்.
காரணத்தை உகந்த முறையில் கூறாமல் சாலேயை கைது செய்ததாக பொலிசாருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்த
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர் இந்த கைதைச் செய யாமல் விட்டிருந்தால் பொலிசார் அவசியமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கும். என்று குறிப்பிட்டார். சாலேயை தொடர்ந்து விசாரணை செய்யும் போது ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்கு பின்னால் இருந்த சூத்திரதாரி பற்றிய தகவல் கண்டறியப்படும் என்று மெதவத்த மேலும் கூறினார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்படும் என்பது ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க. நாட்டு மக்களுக்கு வழங்கிய முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாகும். 2024 செப்டெம்பரில் திசநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு கைதுசெய்யப்பட்ட மிகவும் உயர்ந்த தரத்திலான முதலாவது பாதுகாப்புத்துறை அதிகாரி சாலேயேயாவார். ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் புலனாய்வு தலைவர் கைது செய்யப்பட்டமைக்கு தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்கள் பெரும் முக்கியத்துவத்தைக் கொடுத்து செய்திகளை வெளியிட்டிருந்தன.
உயர்நிலைப் பதவிகள்
ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே இலங்கையின் பாதுகாப்பு மற்றும் இராஜதந்திரத் துறைகளில் மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக பல்வேறு உயர்நிலைப் பதவிகளை வகித்தவர். 1987 ; இலங்கை இராணுவத்தில் இணைந்தார். 2006 — 2009 ; பாரிஸில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் முதலாவது செயலாளர். 2012 — 2016 ; இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர். 2016 — 2018 ; மலேசியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்தில் மினிஸடர் கவுன்ரிலர். 2019 (ஜனவரி — நவம்பர்) ; புதுடில்லி தேசிய பாதுகாப்பு கல்லூரியில் மாணவர். 2019 — 2024 ; அரச புலனாய்வுப் பணிப்பாளர். அந்த பதவியில் இருந்து. 2024 பிற்பகுதியில் நீீக்கப்பட்டதைத் தொடர்ந்து முக்கியமான சிந்தனைக் குழாமான பாத்ஃபைண்டர் பவுண்டேசனில் ஒரு சிரேஷ்ட அந்தஸ்தில் இணைந்துகொண்டார்.
சனல் 4 தொலைக்காட்சி
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் சுரேஷ் சாலேக்கு இருந்ததாகக் கூறப்படும் தொடர்புகள் குறித்து பொலிசாரிடம் இருக்கக்கூடிய சான்று குறித்தோ அல்லது ‘புதிய ‘ சான்றுகளை பெறப்பட்டிருக்கின்றனவா என்று என்பது குறித்து இந்த கட்டுரையாளருக்கு தெரியாது. ஆனால், குண்டுத் தாக்குதல்களில் சாலேக்கு இருந்ததாகக் கூறப்படும் தொடர்புகள் குறித்து பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் அசாத் மௌலான என்ற முஹம்மட் ஹன்சீர் முதன்முதலாக பொது வெளியில் கூறினார். அசாத் மௌலான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சருமான பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தனின் முன்னாள் நெருங்கிய உதவியாளராவார்.
தேசிய தௌஹீத் ஜமாத்தின் தலைவரும் பிரதான தற்கொலைக் குண்டுதாரியுமான சஹ்ரான் ஹாசிமுக்கும் தனக்கும் ( சாலே ) இடையில் புத்தளம் மாவட்டத்தில் சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்துதருமாறு கேட்டுக்கொண்டார் என்பதே சாலேக்கு எதிராக அசாத் மௌலானா முன்வைத்த பிரதான குற்றச்சாட்டாகும். ஆனால், இதற்கு அப்போது பதிலளித்த சாலே இந்த சந்திப்பு இடம்பெறுவதாகக் கூறப்படுகின்ற நேரத்தில் தான் மலேசியாவில் இருந்ததை நிரூபித்தார். ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்ற வேளையில் தான் புதுடில்லியில் இருந்ததாகவும் சாலே கூறினார்.
தொடர்பாடல்
மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயை நான் ஒருபோதும் சந்தித்ததில்லை. ஆனால், அவர் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்தபோது 2014 முற்பகுதியில் கனடாவில் இருந்து மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டேன்.விடுதலை புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் புத்துயிர் அளிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட தோல்விகண்ட முயற்சி தொடர்பில் தகவல்களைப் பெறுவதற்காகவே அவ்வாறு தொடர்பு கொண்டேன். தகவல்களை வெளியிடுவதில் அவர் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடந்து கொண்டார். சாலே திறமையும் ஆற்றலும் அறிவும் கொண்டாஒரு புலனாய்வுத் தலைவர் என்பதை தொலைவில் இருந்து மேற்கொண்ட அந்த குறுகிய தொடர்பாடல் மூலம் புரிந்துகொண்டேன்.
இத்தகைய பின்புலத்தில், இந்த பத்தியில் சுரேஷ் சாலேயின் கைது மற்றும் 2019 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுடன் அவருக்கு இருந்ததாகக் கூறப்படும் தொடர்பு ( அசாத் மௌலானாவின் குற்றச்சாட்டின் பின்னணியில் ) குறித்து எனது கடந்தகால எழுத்துக்களின் உதவியுடன் கவனம் செலுத்துகிறேன்.
சதிக்கோட்பாடுகள்
தவறாக வழிநடத்தப்பட்ட முஸ்லிம் தீவிரவாதிகளினால் கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நான்கு ஹோட்டல்களிலும் 2019 ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று (ஏப்ரில் 21) ஒருங்கிணைந்த முறையில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்கு பிறகு பல்வேறு சதிக்கோட்பாடுகள் வெளியாகின. முன்னாள் பாதுகாப்பு செயலாளரான கோட்டாபய ராஜபக்சவை அதிகாரத்துக்கு கொண்டுவருவதற்கு வசதிசெய்யும் நோக்குடன் குண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கு இலங்கையின் புலனாய்வுச் சேவைகளைச் சேர்ந்த ஒரு அதிகாரி அல்லது அதிகாரிகள் முஸ்லிம் இளைஞர்களை சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்ற சந்தேகமே இந்த சதிக்கோட்பாடுகளில் பிரதானமானது.
பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி 2023 செப்டெம்பர் 5 ஆம் திகதி செவ்வாய்கிழமை இலங்கை தொடர்பில். விவரணத் தொகுப்பு நிகழ்ச்சியை ( Sri Lanka’s Easter bombings ) ஔிபரப்பியபோது இந்த சதிக்கோட்பாட்டுக்கு பெரியளவில் விளப்பரம் கிடைத்தது. பிள்ளையானின் முன்னாள் செயலாளரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பேச்சாளருமான அசாத் மௌலானா என்ற முஹம்மட் மில்ஹிலார் முஹம்மட் ஹன்சீர் சர்ச்சைக்குரிய தகவல்களை அதில் வெளியிட்டார்.
அந்த விவரணத் தொகுப்பு நிகழ்ச்சி 2023. செப்டெம்பர் 21 வியாழக்கிழமை மாலை ஜெனீவாவில் உலகளாவிய மனித உரிமைகள் பேரவையினால் (Universal Human Rights Council – UHRC ) திரையிப்பட்டது. அதற்கு பிறகு கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. கலந்துரையாடலுக்கு முன்னதாக அதில் கலந்துகொண்டவர்கள் மத்தியில் அசாத் மௌலானாவின் விரிவான அறிக்கை ஒன்றின் பிரதிகள் விநியோகிக்கப்பட்டன. அந்த நிகழ்வில் நேரடியாகக் கலந்து கொள்ளாத அசாத் மௌலானா பிறகு வீடியோ இணைப்பின் மூலமாக கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அசாத் மௌலாவினால் வெளியிடப்பட்ட அறிக்கை சனல் 4 தொலைக்காட்சியின் விவரணத் தொகுப்பு நிகழ்ச்சியில் அவர் கூறியவற்றின் விரிவாக்கமாகவும் தெளிவுபடுத்தலாகவும் அமைந்தது.
” 2019 ஏப்ரில் 21 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரத் தாக்குதலில் 45 சிறுவர்கள், 40 வெளிநாட்டவர்கள் உட்பட 269 பேர் கொல்லப்பட்டதுடன் 500க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். தாக்குதல்களுக்கு பிறகு தற்கொலைக்குண்டு தாரிகளின் அடையாளங்களை ஊடகங்கள் வெளியிட்டபோதுதான் சூத்திரதாரிகள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் பற்றி என்னிடம் வலுவான சான்றுகள் இருக்கிறது என்பதையும் தாக்குதல்களின் நோக்கத்தையும் நான் புரிந்துகொண்டேன். இந்த கொடூரமான தாக்குதல்களுக்கான ஏற்பாடுகளைச் செய்ததிலோ அல்லது அவற்றை நடத்தியதிலோ எனக்கு எந்தவிதத்திலும் சம்பந்தம் கிடையாது.
” 2015 ஆம் ஆண்டில் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் தோல்வியைத் தொடர்ந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பாக பிள்ளையான் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். 2005 கிறிஸ்மஸ் தினத்தன்று மட்டக்களப்பு சென். மேரீஸ தேவாலயத்தில் வைத்து அவர் சுட்டுக் கொலை செய ப்பட்டார்.பிள்ளையானின் ஒரு செயலாளர் என்ற வகையில், சட்ட விவகாரங்கள் தொடர்பாக பேசுவதற்காக அவரின் சட்டத்தரணிகளுடன் சேர்ந்து சிறைச்சாலைக்குள் செல்வதற்கு எனக்கு அனுமதி வழங்கப்பட்டது.
2017 ஆம் ஆண்டில் சிறைச்சாலைக்கான ஒரு விஜயத்தின்போது தன்னுடன் ஒரே சிறைக்கூட அறையில் காத்தான்குடியைச் சேர்ந்த சில முஸ்லிம் கைதிகள் இருப்பதாக பிள்ளையான் என்னிடம் சொன்னார். தீவிரவாத நடவடிக்கைகளுக்காகவும் காத்தின்குடியில் இன்னொரு முஸ்லிம் குழு மீது தாக்குதல் நடத்தியதற்காகவும் ஒரு தந்தை, அவரது மகன் மற்றும் ஆறு பேர் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் தேசிய தௌஹீத் ஜமாத் என்று அழைக்கப்படும் அமைப்பொன்றைச் சேர்ந்தவர்கள்.
” பிள்ளையானின் வேண்டுகோளின்பேரில், நான் சைனி மௌலவியைச் சந்தித்தேன். பிறகு இந்த கைதிகளை பிணையில் வெளியில் எடுப்பதற்காக அவர்களின் உறவினர்களிடமிருந்து பணத்தை ஏற்பாடு செய்வதற்கு இராணுவப் புலனாய்வுடன் தொடர்புகொள்ளுமாறு பிள்ளையான் என்னிடம் கேட்டுக்கொண்டார். அவர்கள் 2017 ஒக்டோபர் 24 ஆம் திகதி விடுவிக்கப்பட்டார கள். 2018 ஜனவரி பிற்பகுதியில் அப்போது ஒரு பிரிகேடியராக இருந்த சுரேஷ் சாலேக்கும் சைனி மௌலவியின் குழுவுக்கும் இடையில் இரகசியச் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்யுமாறு பிள்ளையான் என்னிடம் கூறினார். சந்திப்புக்கான இடம், நேரம் பற்றி சுரேஷ் சாலே எனக்கு அறிவிப்பார் என்றும. பிள்ளையான் கூறினார்.
” சில நாட்களுக்கு பிறகு சுரேஷ் சாலே என்னுடன் தொடர்புகொண்டு புத்தளம் வனாத்தவில்லு பகுதிக்கு வருமாறு சைனி மௌலவிக்கு கூறுமாறு என்னிடம் கேட்டுக்கொண்டார். மறுநாள் இராணுவப் புலனாய்வு அதிகாரி ஒருவருடன் கொழும்பில் இருந்து புத்தளத்துக்கு பயணம் செய்தேன். சைனி மௌலவியின் குழு குருநாகலையில் இருந்து வந்தது. இந்த சந்திப்புக்காக சொந்த வாகனத்தையோ அல்லது சாரதியையோ பயன்படுத்த வேண்டாம் என்று எமக்கு ஆலோசனை கூறிய பிள்ளையான் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் போக்குவரத்து வசதியைச் செய்து தருவார்கள் என்று கூறினார்.
2018 பெப்ரவரி முற்பகுதியில். புத்தளத்துக்கு வெளியில் 50 — 60 ஏக்கர்கள் பரப்பளவைக் கொண்ட பெரிய தென்னந் தோட்டம் ஒன்றிற்குள் சந்திப்பு இடம்பெற்றது. சுரேஷ் சாலே சாரதி ஒருவருடன் சாம்பல் நிற ரொயோட்டா காரில் வந்து சேர்ந்தார். 30 நிமிடங்கள் கழித்து சைனி மௌலவி ஆறு பேர் கொண்ட குழுவுடன் வெள்ளை வான் ஒனனறில் வந்தார். குழுவின் தலைவர் என்று தனது மூத்த சகோதரர் மௌலவி சஹரானை சைனி மௌலவி அறிமுகப்படுத்தினார். இரண்டு மணித்தியாலங்களுக்கும. கூடுதலான நேரமாக சந்திப்பு நீடித்தது. நான் அதில் பங்கேற்வில்லை. ஆனால், வெளியில் காத்துக் கொண்டிருந்தேன்.
” சந்திப்புக்கு பிறகு நான் மட்டக்களப்புக்குச் சென்று நடந்தவற்றை மறுநாள் பிள்ளையானுக்கு விளக்கிக் கூறினேன். சுரேஷ் சாலேக்கு பெரிய ஒரு திட்டம் இருப்பதாகவும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியுடன் இருப்பதைப் போன்று அவருக்கு சஹரானின் குழுவுடனும் உடன்பாடு ஒன்று இருப்பதாகவும் பிள்ளையான் என்னிடம் கூறினார். புத்தளத்தில் நடந்த சந்திப்பை இரகசியமாக வைத்திருக்குமாறும் அவர்கள் ஏதாவது உதவி கேட்டால் செய்துகொடுக்குமாறும் அவர் கூறினார். 2017 செப்டெம்பரில் சைனி மௌலவியை சிறையில் சந்தித்ததற்கு புறம்பாக, சஹ்ரானையும் அவரது குழுவினரையும் ஒரேயொரு தடவை 2018 பெப்ரவரியில் சுரேஷ் சாலேயுடனான சந்திப்பின்போது மாத்திரமே நான் சந்தித்தேன்.இதைத் தவிர எனக்கு அவர்களுடன் வேறு எந்த தொடர்போ அல்லது உறவுமுறையோ இருக்கவில்லை. அவர்களது பயங்கரவாத நோக்கம் குறித்தோ அல்லது திட்டம் குறித்தோ பயங்கரத் தாக்குதல் இடம்பெறும் வரை எனக்கு தெரியாது.
” 2019 ஏப்ரில் 21 ஈஸ்டர் ஞாயிறன்று காலை 7 மணியளவில் என்னுடன் தொடர்புகொண்ட சுரேஷ் சாலே கொழும்பில் தாஜ்சமுத்ரா ஹோட்டலில் காத்துக் கொண்டு நிற்கும் ஒருவரைக் கூட்டிச் செல்வதற்காக உடனடியாகச் அங்கு செல்லுமாறும் அவரது தொலைபேசி இலக்கத்தை எடுத்துக் கொள்ளுமாறும் கூறினார். நான் கொழும்பில் அல்ல மட்டக்களப்பில் தற்போது நிற்கிறேன் என்று அவரிடம் கூறினேன்.
” இந்த சம்பாஷணைக்கு சுமார் ஒரு மணித்தியாலம் கழித்து நாட்டில் ஏககாலத்தில் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றன. தாக்குதல்களையடுத்து உடனடியாக தன்னை வந்து அவசரமாகச் சந்திக்குமாறு சிறைக்காவலர் ஒருவர் மூலமாக பிள்ளையான் எனக்கு செய்தி அனுப்பினார். ஈஸ்டர் ஞாயிறு காலை 11 மணியளவில் பிள்ளையானை நான் சந்தித்தபோது குண்டுத் தாக்குதல்களுக்கு பின்னாலிருக்கும் சூத்திரதாரி சுரேஷ் சாலே என்றும் இவ்வாறு தாக்குதல்கள் இடம்பெறும் என்று தான் நினைத்ததாகவும் கூறினார்.
” சைனி மௌலவியை தொடர்புகொண்டு கேட்குமாறு பிள்ளையான் என்னிடம் கூறினார். நான் தொடர புகொண்டபோது பதில் இல்லை. மாலையில் ஊடகச் செய்திகளைப் பார்த்த பின்னர்தான் பிள்ளையானின் வேண்டுகோளின் பேரில் நான் ஏற்பாடு செய்த சந்திப்பில் பங்குபற்றியவர்களே ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் ஈடுபட்ட தற்கொலைக் குண்டுதாரிகள் என்பதைப் புரிந்துகொண்டேன்.
” நான் சந்திக்க வேண்டும் என்று சுரேஷ் சாலே விரும்பிய நபர் தாஜ்சமுத்ராவில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தும் பொறப்பு ஒப்படைக்கப்பட்ட ஜமீல் என்பவர் என்றும் இறுதி நேரத்தில் அந்த தாக்குதல் திட்டத்தைக் கைவிட்டு வெளியே சென்று தெஹிவளையில் சிறிய ஹோட்டல் ஒன்றில் குண்டை வெடிக்க வைத்து தற்கொலை செய்துகொண்டவர் என்றும் அறிந்து கொண்டேன்.”
அரசியல் தஞ்சம்
இலங்கையில் இருந்து இந்தியா சென்று அங்கிருந்து ஐரோப்பாவுக்கு சென்ற பிறகு அசாத் மௌலான சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்தார். அதற்கு பிறகு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்குச் சென்று அவர் அங்கு இலங்கையின் பொறுப்புக்கூறல் திட்டத்தைச் சேர்ந்த ஒரு குழுவினருக்கு விரிவான சாட்சியத்தை ஒன்றை அளித்தார். அதற்கு அவருக்கு ஐந்து நாட்கள் எடுத்தன.
மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு புறம்பாக, அவர் வேறு பல மனித உரிமைகள் அமைப்புக்களுக்கும் சர்வதேச அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களுக்கும் வாக்குமூலங்களைக் கொடுத்தார். அதனால் 2019 ஏப்ரில் 21 தாக்குதல்கள் தொடர்பில் பெருமளவு தகவல்களை வழங்கக்கூடிய ஆற்றலும் சாத்தியமும் கொண்ட நபராக அசாத் மௌலானாவைப் பார்க்க முடியும்.
அதேவேளை, அசாத் மௌலான தான் கூறுகின்றவற்றை இலங்கை நீதிமன்றம் விசாரணை மன்றம் ஒன்றில் தானாக சாட்சியம் அளித்து சட்டத்தரணிகளினால் குறுக்கு விசாரணை செய்யப்பட்டு நிரூபிக்காத வரை நீதிமன்றம் ஒன்றில் நடைமுறையில் அவரது குற்றச்சாட்டுக்கள் பெறுமதியற்றவை. தொலைவில் இருந்து மின்னியல் சாதனங்கள் ஊடாகவும் கூட அவர் அந்த சாட்சியத்தை வழக்கலாம்.
மௌலானாவின் தயக்கம்
இலங்கையின் நீதிமுறைமையுடன் மாத்திரம் ஒத்துழைப்பதற்கு அசாத் மௌலான தயங்குவது ஒரு பிரச்சினையாக இருக்கிறது. சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்றின் முன்னிலையில் சாட்சியமளிக்க அவர் முன்வந்தார். சனல் 4 தொலைக்காட்சியில் அவர் கூறியவையும் ஜெனீவாவில் பொதுக் கூட்டம் ஒன்றில் அவர் தெரிவித்த கருத்துக்களும் அவரின் அந்த எண்ணத்தை வெளிப்படுத்தின.
” இலங்கையில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல் திட்டமிடல்கள், அரசியல் கொலைகள் மற்றும் ஆட்த்தல்களுக்கு ஒரு சாட்சி என்ற வகையில் இந்த குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகளில் சாட்சியமளிக்க நான் விரும்புகிறேன். ஆனால், உண்மையை வெளிப்படுத்துவதில் இலங்கையில் உள்ள அதிகாரிகளுக்கு அக்கறை இருப்பதாக நான் நம்பவில்லை. அதனால் சுயாதீனமான சச்வதேச விசாரணை ஒன்றின் முன்னிலையில் மாத்திரம் நான் சாட்சியம் அளிக்கத் தயாராயிருக்கிறேன்” என்று அவர் கூறினார்.
அதனால், அசாத் மௌலான இப்போது தனது மனதை மாற்றி திறந்த நீதிமன்றம் ஒன்றில் சாட்சியமளிக்கத் தயாராயிருக்கிறாரா என்பதே முக்கியமான கேள்வி. ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததையடுத்து விசாரணைகளில் மௌலானா ஒத்துழைப்பதற்கு வழி பிறந்திருக்கிறதா? அவ்வாறானால் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் பற்றி மேலும் பல தகவல்களை. இலங்கைப் புலனாய்வாளர்களினால் பெறக்கூடியதாக இருந்திருக்கிறதா?
பிள்ளையான்
மேலும், பிள்ளையானும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 2025 ஏப்ரில் தொடக்கம் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். ஏப்ரில் குண்டுத் தாக்குதல்கள் குறித்து அவரிடம் விசாரணை செய்யப்படுவதாக ஊடகச் செய்த அறிக்கைகள் தெரிவித்திருக்கின்றன.அந்த விசாரணைகளில் சுரேஷ் சாலேயை கைது செய்வதற்கு வழிவகுத்த தகவல்களை. பெறக்கூடியதாக இருந்ததா? இந்தக் கட்டத்தில் எமக்கு அது பற்றி தெரியாது. செய்தியாளர்கள் மகாநாட்டில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரினால் உறுதியளிக்கப்பட்டதன் பிரகாரம் உகந்த நேரத்தில் பொலிசார் மேலும் விபரங்களை வெளியிடும் வரை நாம் காத்திருக்க வேண்டியிருக்கிறது.
ஆனால், அசாத் மௌலானாவினால் தெரிவிக்கப்பட்ட சகல குற்றச்சாட்டுக்களும் சரியானவையா என்று பரிசீலிக்கப்பட்டு இன்னமும் உறுதிப் படுத்தப்படவில்லை என்பதை வலியுறுத்திக் கூறவேண்டியிருக்கிறது. மேலும், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் குறிப்பாக மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, அசாத் மௌலானா கூறியவை பொய்கள் என்று நிராகரித்திருக்கிறார்கள்.
ஊகங்களும் அனுமானங்களும்
சுரேஷ் சாலேக்கு எதிரான பிரதான குற்றச்சாட்டு, ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களில் நேரடியாகச் சம்பந்தப்பட்டவரும் தேசிய தௌஹீத். ஜமாத்தின் தலைவருமான சஹ்ரானை ஹாசிமுக்கும் அவருக்கும் இடையில் புத்தளம் கரடிப்பூவல் பகுதியில் இடம்பெற்ற சந்திப்பைச் சுற்றியதாகவே இருக்கிறது. மௌலானாவின் குற்றச்சாட்டுக்கள் அந்த சந்திப்பை அடிப்படையாகக் கொண்ட ஊகங்களும் அனுமானங்களுமாகவே இருக்கின்றன.
எவ்வாறெனினும், அந்த சந்திப்பு இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற நேரத்தில் தான் இலங்கையில் இருக்கவில்லை என்று சுரேஷ் சாலே நிராகரிப்பதை நாம் கவனித்தாக வேண்டும். இந்த விடயம் குறித்து இப்போது பொலிசாருக்கு மேலும் தகவல்கள் கிடைத்திருக்கின்றனவா? சுரேஷ் சாலேயின் கைது, தடுப்புக்காவல் மற்றும் அவர் மீதான விசாரணை எல்லாம் 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான தற்போதைய விசாரணைகளில் முன்னேற்றத்துக்கு வழிவகுக்குமா?
_____________
>D.B.S.Jeyaraj can be reached at dbsjeyaraj@yahoo.com
ஆங்கில மூலம்: டி. பி. எஸ். ஜெயராஜ்(Daily Mirror)
தமிழில்: வீரகத்தி தனபாலசிங்கம்
நன்றி: வீரகேசரி
****************************************************

