கடந்த காலத்தில் பிர்டிஷாருக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களில் கணிசமான ஒரு பிரிவினர் முன்னணிப் படையாக நின்றார்கள் .சுதநாதிரத்துக்கான வேட்கையில் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் வகித்த முன்னணிப் பாத்திரம் இப்போது மறக்கப்பட்டுவிட்டது

டி.பி.எஸ். ஜெயராஜ்

பிரிட்டனிடமிருந்து பெற்ற சுதந்திரத்தின் 78 வது வருட நிறைவை இலங்கை 2026 பெப்ரவரி 4 ஆம் திகதி கொண்டாடியது. ஆனால், சில தமிழ்த் தேசியவாத கட்சிகளும் சிவில் சமூக அமைப்புக்களும் பெப்ரவரி 4 ஆம் திகதியை கரிநாளாக பிரகடனம் செய்து ஒரு நாள் துக்கதினத்தை அனுஷ்டித்தன. காலனித்துவ அடிமைத்தனத்தில் இருந்து விடுபட்டிருக்கும் எவருக்கும் சுதந்திர. தினம் மகிழ்ச்சிக்குரிய ஒரு தினமேயாகும். ஆனால் , பல வருடக்களாக பல இலங்கைத் தமிழர்களுக்கு அவ்வாறாக இருந்ததில்லை.

பல தமிழர்கள் சுதந்திர தினக்கொண்டாட்டங்களில் உணர்வுபூர்வமான பங்காளிகளாக இல்லை. பெருமளவு தமிழர்கள் இன்னமும் இலங்கை அரசியல் இருந்து அன்னியப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். சுதந்திர தினம் தொடர்பில் தற்போது வெளிப்படுத்தப்படுகின்ற வெறுப்பணர்ச்சியை இருண்ட மனநிலை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

இந்த பின்பலத்தில், இந்த பத்தி சுதந்திரத்தின் பின்னரான இலங்கையின் அண்மைய கடந்த காலத்தைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்து இதே போன்ற முன்னைய எழுத்துக்களின் உதவியுடன் எதிர்காலம் குறித்து விரிவான முறையில் கவனத்தைக் குவிக்கிறது.

இலங்கை தமிழரசு கட்சி

சுதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதியை பல தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டிப்பது என்பது சுதந்திமடைந்த முதலாவது தசாப்தத்திற்குள் தொடங்கிய ஒரு நடைமுறையாகும். இலங்கை தமிழரசு கட்சியின் தோற்றத்தையும் கடந்த நூற்றாண்டின் ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் தமிழ்த் தேசியவாதத்தின் எழுச்சியையும் அடுத்து சுதந்திர தினத்தை துக்கதினமாக அனுஷ்டிக்குமாறு தமிழ் அரசியல் சமுதாயத்திடம் கேட்டப்பட்டது. அதற்கான காரண காரிய அடிப்படை பிரிட்டிஷாரிடமிருந்து பெற்ற சுதந்திரம் சிங்களவர்களின் ஆட்சிக்கு வழிவகுத்தது என்பதேயாகும். எசமானர்கள் மாத்திரமே மாறினார்கள். அதனால் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பதை தவிர, அதில் கொண்டாடுவதற்கு எதூவுமில்லை என்று வாதிடப்பட்டது.

இந்த அடையாளபூர்வமான போராட்டங்கள் 1972 குடியரசு அரசியலமைப்புக்கு பிறகு ஒரு மாற்றத்துக்கு உள்ளாகின. அதற்கு பிறகு மே 22 ஆம் திகதியும் கரிநாளாக அனுஷ்டிக்கப்பட்டது. பெப்ரவரி 4 அதன் முக்கியத்துவத்தை சிறிது இழந்தது.ஆனால், சுதந்திர தினத்தன்று அடையாளபூர்வமான கறுப்புக்கொடி போராட்டங்கள் தொடரவே செய்தன. நெருக்கடி தீவிரமடைந்து அதன் விளைவாக மக்கள் துன்பத்துக்கு உள்ளாகிய நிலையில் சுதந்திரம் என்ற கோட்பாடு தமிழர்களைப் பொறுத்தவரை அர்த்தமற்றதாகியது. ஆயுதமோதலும் தமிழ் மக்கள் மீதான. அதன் தாக்கமும் பயங்கரமானதாக இருந்தது. பல வருடகால அடக்குமுறை பல இலங்கை தமிழர்கள் மத்தியில் தங்களது மூதாதையரின் மண்ணில் அன்னியப்படுத்தப்படுத்தப்படுவதான உணர்வை வளர்த்தது.

பல தசாப்தங்களாக தமிழ் அரசியல் மனமும் (tamil political psyche) கூட
மாற்றமடைந்தது. இராமநாதன் — அருணாச்சலம் யுகத்தில் இந்த தேசத்தின் தாபக இனமாக சிங்களவர்களுடன் தங்களை தமிழர்கள் நோக்கினார்கள் ; ஜீ.ஜீ. பொன்னம்பலம் காலத்தில் தமிழர்கள் இலங்கையின் பிரதானமான சிறுபான்மைச் சமூகமாக தங்களைக் கண்டார்கள் ; எஸ். ஜே.வி. செல்வநாயகத்தின் காலத்தில் தமிழர்கள் தங்களை வடக்கு — கிழக்கில் பிராந்திய ரீதியான ஒரு சிறுபான்மைச் சமூகமாக பாரத்தார்கள் ; அமிர்தலிங்கத்தின் வருடக்களிலும் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் தோற்றத்தை தொடர்ந்தும் தமிழர்கள் தங்களை தனியான ஒரு தாயகத்தையும் சுயநிர்ணய உரிமையையும் கொண்ட தனித்துவமான ஒரு தேசிய இனமாக கருதினார்கள்.

1977 ஜூலை பொதுத் தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியினால் பெறப்பட்ட தமிழீழத்துக்கான ஆணையின் அடிப்படையில் ‘ தாயகத்தை’ விடுதலை செய்வதற்கான ஆயுதப் போராட்டத்துக்கு வேலுப்பிள்ளை பிரபாகரனும் ஏனைய தமிழ் போராளி இயக்கங்களின் தலைவர்களும் தலைமை தாங்கினார்கள். தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பிரிவினைவாதப் போர் 2009 மே மாதத்தில் அந்த இயக்கம் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து முடிவுக்கு வந்தது.

மோதல் இப்போது முடிந்துவிட்டது. இராணுவ ரீதியாக நாடு ஐக்கியப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், அரசியல் ரீதியாக நாடு ஐக்கியப்படுத்தப்பட்டிருக்கிறதா என்பது பதிலளிக்கப்படாத ஒரு கேள்வியாகவே தொடருகிறது.

இறைமை தொடர்பான தமிழர்களின் உணர்வு

இறைமை தொடர்பான தமிழர்களின் உணர்வு பல வருடங்களாக வேறுபடுகிறது. யாழ்ப்பாண இராச்சியம் 1619 ஆம் ஆண்டில் போர்த்துக்கீசரிடம் போர்க்களத்தில் அதன் இறைமையை இழந்தது. பிறகு அந்த இறைமை 1658 ஆம் ஆண்டில் டச்சுக்காரரிடம் விட்டுக் கொடுக்கப்பட்டது. 1796 ஆம் ஆண்டில் டச்சுக்காரரிடமிருந்து பிரிட்டிஷார் அதை பொறுப்பேற்றார்கள்.

1832ஆம் ஆண்டின் கோல்புரூக் – கமரூன் சீர்திருத்தங்களுக்கு பிறகு 1833 ஆம் ஆண்டில் மாத்திரமே தமிழ் பிராந்தியங்கள் ஐக்கியப்பட்ட்ட ஒரு இலங்கைக்குள் இணைக்கப்பட்டன. அதுவரையில் தனித்தனியாகவே அவை நிருவகிக்கப்பட்டு வந்தன. 1948 ஆம் ஆண்டில் பிரிட்டிஷார் பெரும்பான்மைச் சிங்களவர்களிடம் அதிகாரத்தைக் கையளித்தனர். 1948 ஆம் ஆண்டில் சுதந்திரத்துக்கு வழிவகுத்த 1948 தனியாணை ஆட்சியுரிமை அரசியலமைப்பு (Dominion constitution ), 1972 முதலாவது குடியரசு அரசியலமைப்பு மற்றும் 1978 இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு ஆகியவை தமிழர்களினால் தெரிவு செய்யப்பட்ட பெரும்பான்மையான பிரதிநிதிகளின் சம்மதமின்றி திணிக்கப்பட்டவை என்பதே தமிழர்களின் நிலைப்பாடாக இருந்து வருகிறது.

எனவே, தமிழர் இறைமை என்பது தமிழ்த் தேசத்திற்குள்ளேயே இன்னமும் இருக்கிறது என்பதுடன் தமிழர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு சிங்களப் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. அரசியல் மேடைகளில் அடிக்கடி கூறப்பட்ட இந்த கருத்துநிலை 1976 அமிர்தலிங்கம் ட்ரயல் – அட் – பார் வழக்கில் நீதிமன்றத்தில் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் முருகேசு திருச்செல்வம் கியூ.சி. அவர்களினால் மிகவும் சிறப்புவாய்ந்த முறையில் வாதிடப்பட்டது.

சுதந்திரப் போராட்டத்தின் முன்னணிப் படை

ஆனால், சுதந்திரத்துக்கு பின்னரான அரசியல் பிரச்சினைகள், கடந்த காலத்தில் பிர்டிஷாருக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களில் கணிசமான ஒரு பிரிவினர் முன்னணிப் படையாக நின்றார்கள் என்ற உண்மையைப் பார்க்க விடாமல் எமது கண்களை மறைத்து விடக்கூடாது.

சுதநாதிரத்துக்கான வேட்கையில் தமிழர்கள் வகித்த முன்னணிப் பாத்திரம் இப்போது மறக்கப்பட்டுவிட்டது என்பது கவலைக்குரியது. தேசிய காங்கிரஸுக்கான அத்திபாரத்தை அமைத்த சேர். பொன்னம்பலம் அருணாச்சலத்தின் ” எமது அரசியல் தேவைகள் ” என்ற தலைப்பிலான பிரபல்யமான சொற்பொழிவில் இருந்து யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸின் செயற்பாடுகள் வரை தமிழர்களின் முயற்சிகள் இது விடயத்தில் மிகவும் மெச்சத்தக்கவையாக இருந்து வந்திருக்கின்றன.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வீரமிகு 1818 & 1848 கிளர்ச்சிகளுக்கு பிறகு தென்னிலங்கை பொதுவாக அமைதியாகவே இருந்தது. சிங்கள அரசியல் ஆதிக்க வர்க்கம் பிரிட்டிஷாருடன் மோதுவதை விடவும் ஒத்துழைப்பதற்கே விரும்பியது. இடதுசாரிகள் மாத்திரமே சூரியமல் இயக்கம் மற்றும் பிறேஸ்கேர்டில் விவகாரம் போன்றவற்றின் ஊடாக காலனித்துவ எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

பெருமளவு தொழிற்சங்க நடவடிக்கைகளும் வேலைநிறுத்தப் போராட்டங்களும் இடம்பெற்றன. காலனித்துவத்துக்கு எதிரான இடதுசாரிச் சார்பான இந்த ‘ அறகலயக்களில்’ தங்களது சிங்களத் தோழர்களுடன் பெரும் எண்ணிக்கையான தமிழர்கள் இணைந்து செயற்பட்டனர்.

தொழிற்சங்க இயக்கத்தின் முன்னோடியான ஏ.ஈ. குணசிங்க தீவிரமாக செயற்பட்ட நாட்களில் பிரிட்டிஷாரின் ஆட்சியை. எதிர்த்துப் போராடுவதற்காக இளம் இலங்கையர் கழகத்தை (Young Sri Lanka League) ஆரம்பித்தார். ஆனால், டி.எஸ். சேனநாயக்க, சேர் பாரன் ஜெயதிலக மறறும் சேர் ஒலிவர் குணதிலக போன்ற முக்கியமான தலைலர்கள் கடைப்பிடித்த அரசியல் பாதை வேறுபட்டதாக இருந்தது. கிளர்ச்சி செய்வதை விடுத்து பேச்சுவார்த்தைகள் ஊடாக சுயாட்சியை ( Self – rule ) பெறுவதற்கு அவர்கள் பாடுபட்டனர்.

அதன் விளைவாக, இந்தியாவில் மகாத்மா காந்தியினால் முன்னெடுக்கப்பட்ட அகிம்சைப் போராட்டம் அல்லது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் முன்னெடுத்த இராணுவ ரீதியான போராட்டம் போன்ற காலனித்துவ எதிர்ப்பு போராட்டம் எதையும் இலங்கை ஒருபோதும் கண்டதில்லை.

யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ்

நாட்டில் பிரிட்டிஷாருக்கு எதிரான — சுதந்திரத்துக்கு ஆதரவான போராட்டத்தை முன்னெடுத்ததாக சொல்லக்கூடிய ஒரு இயக்கம் வடக்கில் இருந்தே தொடங்கியது. ஹண்டி பேரின்பநாயகம்,’ ஒறேட்டர் ‘ சுப்பிரமணியம், ஜே.வி. செல்லையா, எம். பாலசுந்தரம், எஸ். குலேந்திரன்,கே. நேசையா மற்றும் சி. பொன்னம்பலம் போன்றவர்களின் தலைமையிலான ( தற்போது மறக்கப்பட்டு விட்ட ) யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் தான் அந்த இயக்கமாகும்.

யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸே டொனமூர் ஆணைக்குழுவினால் பிரேரிக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களை நிராகரித்து முதன் முதலாக பிரிட்டிஷாரிடமிருந்து இலங்கைக்கு முற்றுமுழுதான சுயாட்சியை (பூர்ண சுவராஜ்) கோரியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பிரபல்யமான சுதந்திரப் போராட்டத் தலைவர்களில் இருவரான கமலாதேவி சட்டோபாத்யாயவின் உணர்ச்சியூட்டும் சொற்பொழிவைக் கேட்ட பிறகு நூற்றுக் கணக்கான யாழ்ப்பாண இளைஞர்கள் யாழ்நகரின் வீதிகளில் இறங்கி ‘ சுவராஜ், சுவராஜ் ‘ என்று உரத்த சத்தத்துடன் முழக்கங்களை எழுப்பியதாக வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. மகாத்மா காந்தியின் இலட்சியங்களினால் உத்வேகம் பெற்ற யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் பூர்ண சுவயாஜ் ( முற்று முழுதான சுதந்திரம்) கோரிக்கையை முன்வைத்ததுடன் அதற்கு ஆதரவாக முதலாவது அரசாங்க சபைத் தேர்தலை மக்கள் பகிஷ்கரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

முதலாவது அரசாங்க சபை தேர்தல் 1931 ஆம் ஆண்டில் நடைபெற்றபோது யாழ்ப்பாணத்தில் எந்தவொரு போட்டியிடவில்லை. யாழ்ப்பாணத்துக்கென்று ஒதுக்கப்பட்ட அரசாங்க சபையின் நான்கு ஆசனங்கள் 1934 ஆம் ஆண்டு வரை காலியாக இருந்தன. ஆனால், யாழ்ப்பாணத்தில் மாத்திரமே 1931 பகிஷ்கரிப்பு அனுஷ்டிக்கப்பட்டது. நாட்டின் ஏனைய பகுதிகள். அதைப் பின்பற்றவில்லை. இறுதியில் பகிஷ்கரிப்பு தோல்வியில் முடிந்தது.

யாழ்ப்பாண பகிஷ்கரிப்பை இந்திய சுதந்திரப் போராட்டக்கால நிகழ்வுகளுடன் ஒப்பிட்ட பிரிட்டிஷ் கல்வியாளரான ஜேன் றஸல் மயிலைப் பார்த்து வானகோழி ஆட முயற்சிப்பதைப் போன்றது என்று வர்ணித்தார். அந்த உருவகிப்பு அவ்வையாரின் ‘ கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி…’ என்ற பாடலில் இருந்து பெறப்பட்டதாகும்.

பிறகு தென்னிலங்கை வரலாற்று ஆசிரியர்கள் பகிஷ்கரிப்பு அழைப்பை திரிபுபடுத்த முயற்சித்து அதை ஒரு இனவாத அறைகூவல் என்று காண்பித்தார்கள். யாழ்ப்பாணத்தில் வடஅயர்லாந்தில் இருந்ததைப் போன்ற சூழ்நிலையைக் கொண்டுவரப்போவதாக இலங்கை சட்டசபையின் முன்னாள் உறுப்பினரும் வழக்கறிஞருமான எச்.ஏ.பி. சந்திரசாகர வேறுபட்ட ஒரு பின்னணியில் விடுத்த எச்சரிக்கையை சிலர் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸின் பகிஷ்கரிப்பு அழைப்புடன் ஒப்பிட்டுக் குழப்பினார்கள்.

ஆனால் , அது உண்மையல்ல. யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸின் பகிஷ்கரிப்பு மேன்னையான நோக்கங்களினால் தூண்டப்பட்டதாகும். யாழ்ப்பாணம் காட்டிய வழியை சிங்களவர்கள் பின்பற்ற வேண்டும் என்று இலங்கையில் மார்க்சியத்தின் தந்தை என்று வர்ணிக்கப்படுகின்ற பிலிப் குணவர்தன ‘ சேர்ச்லைற் ‘ சச்சிகையில் எழுதிய கட்டுரையில் புகழ்ந்துரைக்கும் அளவுக்கு இளைஞர் காங்கிரஸின் தாக்கம் வலிமையானதாக இருந்தது.

யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் பற்றி சாந்தசீலன் கதிர்காமரின் நூலுக்கு விமர்சனம் ஒன்றை எழுதிய பேராசிரியர் விஸ்வ வர்ணபால இளைஞர் காங்கிரஸை வெகுவாக பாராட்டியதுடன் காலனித்துவகால சிங்களத் தலைவர்களை ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகள் என்று கடுமையாக கண்டனம் செய்தார்.

சுதந்திரத்துக்கு ஆதரவாக யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் பல்வேறு கூட்டக்களையும் சத்தியாக்கிரகங்களையும் நடத்தியது. இந்திய அரசியல் தலைவர்களை குடாநாட்டுக்கு அழைத்த அவர்கள் மாபெரும் பேரணிகளையும் ஊர்வலங்களையும் நடத்தினர். அவ்வாறு குடாநாட்டுக்கு வந்த இந்திய தலைவர்களில் ஜவஹர்லால் நேரு, சி. இராஜகோபாலாச்சாரியார், சரோஜினி நாயுடு மற்றும் கமலாதேவி சட்டோபாத்யாய ஆகியோர் அடங்குவர்.

இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தையும் இணக்கப் போக்கையும் மேம்படுத்துவதற்கு உரையாற்றுவதற்காக பி. டி எஸ். குலரத்ன தொடக்கம் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க வரை பல்வேறு சிங்களத் தலைவர்களையும் இளைஞர் காங்கிரஸ் குடாநாட்டுக்கு அழைத்தது. அன்றைய வேல்ஸ் இளவரசர் யாழ்ப்பாணத்துக்கு மேற்கொண்ட விஜயத்தை பகிஷ்கரித்ததும் பிரிட்டிஷ் கொடிக்கு பதிலாக நந்திக்கொடியை ஏற்றியதும் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸின் அருஞ்செயல்களில் குறிப்பிடத் தக்கவையாகும்.

இளைஞர் காங்கிரஸுக்கு முன்னோடியாக அமைந்தது வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி வளாகத்தில் 1920 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாண மாணவர் காங்கிரஸாகும். அன்று ஐந்தாவது ஜோர்ஜ் மன்னர் முடியாட்சியில் இருந்தார். பிறகு எட்டாவது எட்வேர்ட் மன்னராக முடிசூடிய வேல்ஸ் இளவரசர் ( பிறகு முடிதுறந்தார்) 1921 ஆம் ஆண்டில் இலங்கைக்கு விஜயம் செய்தார்.

யாழ்ப்பாண மாணவர் காங்கிரஸின் முயற்சிகளின் விளைவாகவே யாழ்ப்பாணத்தில் வேல்ஸ் இளவரசரின் விஜயம் பகிஷ்கரிக்கப்பட்டது. சில வருடங்களுக்கு பிறகு அது யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸாக பெயர் மாற்றப்பட்டது. துணிச்சலான ஒரு அடையாளபூர்வ எதிர்ப்பு நடவடிக்கையாக இளைஞர் காங்கிரஸ் சாம்ராச்சிய தினத்தன்று பிரிட்டிஷ் கொடிக்கு பதிலாக முன்னைய யாழ்ப்பாண இராச்சியத்தின் நந்திக்கொடியை ஏற்றியது.

சுதந்திர இலங்கையின் இயலாமை

அப்புறம் என்ன தவறு நடந்தது இலங்கையில்? இந்த அழகான தோட்டத்திற்குள் புகுந்த பாம்பு எது? பல காரணங்களைக் கூறமுடியும். இந்த மாதிரியான விவகாரங்களில் ஒரு பக்கத்தை மாத்திரம் குற்றம் சொல்ல முடியாது.

அடிப்படையாக நோக்குகையில், சுதந்திரம் பெற்ற பிறகு தேசத்தன்மையை (nationhood) மீள்வரையறை செய்து கட்டமைப்பதற்கு ‘ சுநத்திர இலங்கையினால் ‘ பரிதாபத்துக்குரிய வகையில் இயலாமல் போனமையின் விளைவாகவே நெருக்கடி தோன்றியது. இலங்கை புராதன நாகரிகத்துடன் கூடிய ஒரு நவீன அரசாகும். ஆனால், இலங்கையை ஒரு நவீன தேச அரசாக ( Nation State) வரையறை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியே இனங்களுக்கு இடையிலான முரண்நிலைக்கும் அரசியல் பூசலுக்கும் வழிவகுத்தது.

அதிகாரம் பெரும்பான்மை இனத்திடம் குவிக்கப்பட்ட நிலையில் மற்றைய சமூகங்கள் அலட்சியப்படுத்தப்பட்டன. இது பெரும்பான்மை இனத்தவர்களுக்கு பாலையும் சிறுபான்மை இனத்தவர்களுக்கு கசப்பான பழத்தையும் கொடுப்பது ( மகா ஜாதியட்ட கிரி, சுளு ஜாதிவலட்ட கெக்கிரி) போன்ற நிலையாகும். இலங்கை என்ற கருத்து ஒரு காலனித்துவ உருவாக்கமாகும். பிரிட்டிஷார் தனியொரு நிருவாகமாக நாட்டை ஐக்கியப்படுத்தினார்கள். இவ்வாறு நடந்தது இலங்கையில் மாத்திரமல்ல. பிரிட்டிஷாரால் ஆட்சி செய்யப்பட்ட பெரும்பாலான நாடுகள் நவீன அர்தத்தில் இவ்வாறாகவே அவர்களால் உருவாக்கப்பட்டவை.

பிரிட்டிஷ்காரர்கள் வெளியேறிய பிறகு பல நாடுகளில் இன முரண்நிலையும் தகராறுகளும் மூண்டன. இந்திய உபகண்டம் தொடக்கம் பிஜி தீவுகள் வரை, நைஜீரியா தொடக்கம் மலேசியா வரை இதற்கு பல உதாரணங்கள் உள்ளன.

காலனித்துவவாதிகளினால் சுதந்திரத்துக்கு முன்னதாக வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் சுதந்திரத்தின் பின்னரான முரண்நிலைக்கு உதாரணமாக இலங்கையையும் வகைப்படுத்த முடியும். சில முன்னாள் காலனி நாடுகள் புதிய வடிவங்களிலான அதிகாரப்பகிர்வை வகுத்து இனப்பதற்றங்களை தணித்து நிலைவரத்தை சமாளித்துக் கையாண்டன. அவை சமத்துவத்தின் அடிப்படையில் தங்களை ‘புதிய ‘ தேசங்களாக வடிவமைத்து வலிமையான பொது அடையாள உணர்வை ஏற்படுத்திக் கொண்டன. தேச அரசு என்பது அடிப்படையில் ஒரு மனநிலைதான்.

பாகுபாட்டுக்குள்ளாகி அந்நியப்படுத்தப்பட்டிருப்பதாக தமிழர்கள் தற்போது உணரலாம், ஆனால் அவர்கள் இலங்கைத் தேசத்தின் பிரிக்கமுடியாத ஒரு அங்கம் என்பதை மறுதலிக்க முடியாது. எமது தலைவிதி இலங்கைத் தீவில் வாழுகின்ற ஏனைய இனங்களின் தலைவிதியுடன் பின்னிப்பிணைந்ததாக இருக்கிறது. எதிர்காலம் நடைமுறைச் சாத்தியமற்ற இலக்குகளை நோக்கிச் செல்வதில் அல்ல, சகல சமூகங்களையும் அரவணைக்கக்கூடிய துணிச்சலான புதியதொரு தேசத்தை உருவாக்குவதற்காக நீதியையும் சமத்துவத்தையும் வேண்டிநிற்கும் சகல மக்களுடனும் சேர்ந்து போராடுவதிலேயே தங்கியிருக்கிறது.

ஏனைய சமூகங்களை நோக்கி சகோதரத்துவ — நல்லிணக்க உணர்வுடன் நேசக்கரத்தை நீட்ட வேண்டியது பெரும்பான்மைச் சமூகத்தில் உள்ள நியாய சிந்தை கொண்டவர்களின் கடமையாகும்.

விதியுடனான சந்திப்பு

இந்தியா நள்ளிரவில் சுதந்திரத்தைப் பெற்றபோது ஜவஹர்லால் நேரு விதியுடனான தனது தேசத்தின் சந்திப்பு (tryst with destiny ) பற்றி பேசினார். இந்தியாவின் தெற்கு அயல்நாடு 78 வருடங்களுக்கு பிறகு அதன் உண்மையான விதிக்காக காத்துக் கொண்டிருக்கிறது. இலங்கை அரசை மீள்கட்டமைப்புச் செய்து தவிர்க்கமுடியாத விதியுடனான அதன் சந்திப்புக்காக புதுப்பிக்க வேண்டியது அவசியமாகும். சுதந்திர இலங்கை அதன் 78 வது வயதில் பன்முகத்தன்மை கொண்டதும் சமத்துவமானதுமான புதிய தேசம் ஒனறைக் கட்டியெழுப்பும் சவாலை இன்னமும் எதிர்நோக்கிக் கொண்டேயிருக்கிறது.
______________

D.B.S.Jeyaraj can be reached at dbsjeyaraj@yahoo.com

ஆங்கில மூலம்: டி. பி. எஸ். ஜெயராஜ்

தமிழில்: வீரகத்தி தனபாலசிங்கம்

*******************************************************************************