டி.பி.எஸ். ஜெயராஜ்
” தமிழ் அரசியல் தலைவர்கள் சமஷ்டி ஆட்சிமுறைக்காக குரலெழுப்புவதற்கு நீண்ட காலத்துக்கு முன்னதாகவே 1920 களின் முற்பகுதியில் இளம் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்கவும் 1920 களின் பிற்பகுதியில் டொனமூர் ஆணைக்குழுவின் முன்னிலையில் கண்டி சிங்களப் பிரதிநிதிகளும். இலங்கையில் சமஷ்டி ஆட்சிமுறைக்காக குரல்கொடுத்தனர். வடக்கு – கிழக்கு மாகாணம் ஒன்று உட்பட மூன்று மாகாணங்களுடன் சமஷ்டி இலங்கை யோசனையை கண்டிச் சிங்களவர்கள் முன்வைத்தனர்.
” உண்மையில் கண்டிச் சிங்களவர்கள் தங்களை ஒரு தேசமாக (Nation ) நோக்கியதுடன் தங்களது இலட்சியத்தை முன்னெடுப்பதற்கு அவர்கள் நிறுவிய அமைப்புக்களின் பல ஆவணங்களில் மிகவும் அண்மைய கடந்த காலத்தில் தமிழ்த் தேசியவாதிகளும் தமிழ் அரசியல் குழுக்களும் பயன்படுத்தியதை ஒத்த சொல்லாடல்களையும் வாதங்களையும் கொண்டிருந்தன. கண்டிப் பிராந்தியத்துக்குள் கரையோரச் சிங்களவர்கள் பெரும் எண்ணிக்கையில் வந்தது குறித்து கண்டிச் சிக்களவர்கள் கவலை கொண்டிருந்தனர்.”
” சமஷ்டிமுறை ; மாயைகளும் யதார்த்தங்களும்” என்ற தலைப்பில் எழுதிய சிறப்பான கட்டுரையொன்றில் கலாநிதி றொஹான் எதிரிசிங்க இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
அந்த யுகத்தின் அரசியல் தலைவர்கள் மத்தியில் தலைசிறந்த அறிவுஜீவுயான பண்டாரநாயக்கவே சமஷ்டி முறை குறித்து முதன்முதலாக யோசனையை முன்வைத்தார் என்பதைக் காணக்கூடியதாக இருந்தது. ஒரு வகையான சமஷ்டி முறை மாத்திரமே தீர்வாக இருக்கும் என்று அவர் மிகவும் முன்கூட்டியே 1926 ஆம் ஆண்டளவில் வாதாடினார். கண்டிச் சிங்களவர்கள் கரையோரச் சிங்களவர்களுக்கும் மலைநாட்டுச் சிங்களவர்களுக்குமாக இரு அலகுகளையும் தமிழர்களுக்காக வடக்கு — கிழக்கில் ஒரு அலகையும் கொண்ட ஒரு சமஷ்டி ஏற்பாட்டை 1927 ஆம் ஆண்டில் விதந்துரைத்தனர்.
சிங்களவர்களினால் விதந்துரைக்கப்பட்டபோது சமஷ்டி முறையை இலங்கைத் தமிழர்கள் நிராகரித்தார்கள் என்பது மிகவும் விசித்திரமானதாகும். தங்களுக்கு கிடைத்த அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள் வடக்கு — கிழக்கு தமிழர்களுக்காக சமஷ்டிமுறை வழங்குமாறு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம். கோரிக்கையை முன்வைத்திருந்தால் அது ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதற்கான சகல சாத்தியப்பாடுகளும் இருந்தன. கண்டிச் சிங்களத் தலைலர்களும் இலங்கைத் தமிழ் தலைவர்களும் அரசியல் குறடு ஒன்றில் கரையோரச் சிக்களவர்களுக்கு நெருக்கதலைக் கொடுத்திருக்க முடியும். ஆனால் , அவ்வாறு நடைபெறவில்லை.
பிரிட்டிஷார் ஆட்சிசெய்த காலத்தில் இலங்கைத் தமிழ் அரசியல் தலைவர்கள் சமஷ்டி முறையையோ அல்லது தனிநாட்டையோ கூட கோரவில்லை. பதிலாக , இந்த கோரிக்கைகளை தமிழ்த் தலைவர்கள் பிரிட்டிஷார் இலங்கையில் இருந்து வெளியேறிய பின்னர் மாத்திரமே முன்வைத்தனர்.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து இலங்கை சுந்திரம் பெற்ற நேரத்தில் பிரதான இலங்கை தமிழ்க் கட்சியாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸே விளங்கியது. அப்போது அதன் தலைவராக ஜீ.ஜீ. பொன்னம்பலமும் பிரதி தலைவராக எஸ்.ஜே.வி. செல்வநாயகமும் இருந்தனர். ஜீ. ஜீ. அவரது ஆதரவாளர்களினால் நடைமுறைச் சாத்தியமான முறையில் சிந்திக்கின்ற ஒரு தலைவராக நோக்கப்பட்டார். பூரண சுதந்திரம் பிறந்த பிறகு பொன்னம்பலம் டி.எஸ். சேனநாயக்கவின் அமைச்சரவையில் இணைந்து கைத்தொழில் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சரானார். ஆனால், செல்வநாயகம் , சி. வன்னியசிங்கம், ஈ.எம்.வி. நாகநாதன் மற்றும் வீ. நவரத்தினம் போன்ற தமிழ் காங்கிரஸ். தலைவர்கள் பொன்னம்பலத்துக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர்.
தமிழரசு கட்சி
அவர்கள் பிரிந்துசென்று 1949 ஆம் ஆண்டில் புதிய கட்சியொன்றை அமைத்தனர். தமிழில் அது இலங்கை தமிழரசு கட்சி என்று அழைக்கப்பட்ட அதேவேளை, ஆங்கிலத்தில் ‘ஃ பெடரல் பார்ட்டி ‘ (Federal Party ) என்று அழைக்கப்பட்டது. புதிய கட்சி ஐக்கிய இலங்கை ஒன்றுக்குள் தமிழர்களின் ஆதிக்கத்தில் இருந்த வடக்கு மாகாணத்தையும் தமிழர்களை பெரும்பான்மையினராகக் கொண்ட கிழக்கு மாகாணத்தையும் உள்ளடக்கிய சுயாட்சி தமிழ் அரசு ( Autonomous Tamil State ) ஒன்றைக் கோரியது.
சுதந்திரத்துக்கு பின்னர் சமஷ்டி யோசனையை பிரதான கோட்பாடாகவும் இலக்காகவும் கொண்ட முதலாவது கட்சியாக இருந்ததால் தமிழரசு கட்சியின் தோற்றம் இலங்கை அரசியலில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காகவும் இனங்களுக்கு இடையில் இணக்கப்போக்கை ஏற்படுத்துவதற்காகவும் தமிழரசு கட்சி சமஷ்டி முறையை விரும்பியது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, தமிழரசு கட்சி நியாயப்படுத்திய சமஷ்டிமுறை சர்ச்சைக்குள் சிக்கியது. அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது, தவறாக வியாக்கியானம் செய்யப்பட்டது.
அதனால், பெருமளவுக்கு பழிதூற்றலுக்கும் வெறுப்புக்கும் உள்ளானது. பெரும்பான்மைச் சமூகத்தினர் மத்தியில் கணிசமான பிரிவினர் சமஷ்டியை ‘ தகாத சொல்லாக’ கருதிய போதிலும், தமிழரசு கட்சி தொடர்ந்து சமஷ்டி யோசனையின் அடிப்படையிலான அரசியல் இணக்கத் தீர்வொன்றை கோரிநின்றது. ஒப்புரவான அதிகாரப்பகிர்வுக்கான ( Equitable power sharing ). இலங்கைத் தமிழர்களின் வேட்கை தொடருகிறது.
சமஷ்டி நூற்றாண்டு
இலங்கையில் சமஷ்டி ஆட்சிமுறைக்கான அறைகூவலை பண்டாரநாயக்க விடுத்த பிறகு நூறு வருடங்கள் கடந்தோடிவிட்டன. அதனால். 2026 அவரின் சமஷ்டி யோசனையின் நூற்றாண்டு வருடமாகும். இலங்கைத் தமிழர்களின் பிரதான அரசியல் கட்சியான தமிழரசு கட்சி அதிகாரப்பகிர்வுக்கான. பொருத்தமான ஒரு வகைமாதிரியாக (Model) சமஷ்டியை ஊக்குவிப்பதற்கு பொது இயக்கம் ஒன்றை முன்னெடுப்பதன் மூலம் ‘சமஷ்டி நூற்றாண்டை’ குறித்துக் காட்டவிருக்கிறது. இந்த திட்டத்தின் பின்னணியில் உள்ள இயங்கு சக்தியாக தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளரும் யாழ்ப்பாண மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் இருக்கிறார்.
” எமது நாட்டுக்கு சமஷ்டி முறை யோசனையை பண்டாரநாயக்க அறிமுகம் செய்த பின்னரான 100 வது வருடத்தை இந்த வருடம் குறித்து நிற்கிறது. மோர்ணிங் லீடர் பத்திரிகைக்கு அவர் ஆறு கடிதங்களை எழுதியதுடன் சமஷ்டி ஆட்சிமுறைதான் இலங்கைக்கு மிகவும் பொருத்தமான முறைமை. என்று தமிழர்களை நம்பவைப்பதற்கு ‘ யாழ்ப்பாண விரிவுரையை ‘ நிகழ்த்த 1926 ஜூலையில் யாழ்ப்பாணத்துக்கு செனாறார். அதிகாரப்பகிர்வு வகைமாதிரிகளை ஆராய்வதற்கும் இன்றைய பின்னணியில் அதிகாரப் பகிர்வை மிகவும் அர்த்த புஷ்டியானதாக்கக்கூடிய உகந்த வகைமாதிரியை மேம்படுத்துவதற்காகவும்அரங்கம் ஒன்றை தொடங்குவதற்கு நான் உத்தேசிக்கிறேன். இந்த செயற்பாட்டில் என்னுடன் இணைவதற்கு விருப்பம் கொண்டுள்ள தென்னிலங்கையில் உள்ள பலருடன் நான் கதைத்திருக்கிறேன்” என்று இந்த பத்திக்கு சுமந்திரன் கூறினார்.
பண்டாரநாயக்க இன்று எம்மத்தியில் இல்லை. ஆனால், 1926 ஆம் ஆண்டில். சமஷ்டி முறைக்காக அவர் விடுத்த அறைகூவலின் நினைவு நூறு வருடங்களுக்கு பிறகு ஏற்புடைய ஒரு அதிகாரப்பகிர்வு ஏற்பாட்டை நாடும் திட்டத்தின் பின்னால் ஒரு உந்துசக்தியாக இருக்கிறது போன்று தெரிகிறது.
ஏற்கெனவே குறிப்பிட்டதை போன்று காலனித்துவ ஆட்சிக் காலத்தில் சமஷ்டி முறை யோசனையை முன்வைத்த முதன் முதலான மேன்மையான நபர் பண்டாரநாயக்கவே ஆவார். மாகாண சபைகளை அமைப்பது குறித்தும் அவரே மனக் கண்ணால் நோக்கினார்.
அதனால், இத்தகைய ஒரு பின்புலத்தில் இந்த வாரம் இந்த பத்தி பண்டாரநாயக்க குறித்தும் நூறு வருடங்களுக்கு முன்னர் சமஷ்டி முறைக்காக அவர் குரல்கொடுத்தது குறித்தும் கவனத்தைக் குவிக்கிறது. பண்டாரநாயக்கவை பற்றி முன்னர் நான் எழுதியிருக்கிறேன். எனது முன்னைய எழுத்துக்களில் சிலவற்றின் உதவியுடன் இந்த பத்தியை தொடருகிறேன்.
எஸ். டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க என்று அறியப்பட்ட சொலமன் வெஸ்ட் றிட்ஜ்வே டயஸ் பண்டாரநாயக்க சுதந்திர இலங்கையின் நான்காவது பிரதமராவார். 1899 ஜனவரி 8 பிறந்த அவர் 1959 செப்டெம்பர் 26 கொலை செய்யப்பட்டார்.
ஒக்ஸ்போர்ட் , கிறைஸ்ட் சேர்ச் கல்லூரியில் பிரகாசமான கல்வியைப் பெற்ற பிறகு இளம் பண்டாரநாயக்க 1925 ஆம் ஆண்டு நாடு திரும்பினார். காலனித்துவ ஆட்சியின் கீழ்்இருந்த நாடுகளைச் சேர்ந்த பல இளம் இலட்சியவாதிகளைப் போன்றே பண்டாரநாயக்கவும் தனது நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற பற்றார்வத்துடன் நாட்டுக்கு வந்தார்.
முற்போக்கு தேசிய கட்சி
இலங்கை தேசிய காங்கிரஸின் உறுப்பினராக இருந்த அதேவேளை, பண்டாரநாயக்க அரசியல் சுயாட்சி இலக்கை அடைவதற்காக முற்போக்கு தேசிய கட்சி என்று அறியப்பட்ட ஒரு அரசியல் கட்சியையும் ஆரம்பித்தார். அந்த கட்சியின் தலைவராக பண்டாரநாயக்கவும் செயலாளராக யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸை சேர்ந்த சி. பொன்னம்பலமும் இருந்தனர்.
ஒக்ஸ்போர்ட்டில் இருந்து திரும்பிய பண்டாரநாயக்க இலங்கை கூட்டரசு முறை(federation ) ஒன்றைக் கொண்ட நாடாக வரவேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தார். முற்போக்கு தேசிய கட்சி அதன் யாப்பில் பண்டாரநாயக்கவின் மனதில் இருந்த சமஷ்டி ஆட்சிமுறை பற்றிய திட்ட வரைவு ஒன்றை உள்ளடக்கியதாக இருந்தது. அந்த யாப்பு கரையோரச் சிங்களவர்களையும் மலைநாட்டு சிக்களவர்களையும் தமிழர்களையும் நாட்டின் பிரதான குழுக்களாக குறிப்பிட்ட அதேவேளை சமஷ்டி முறைமை ஒவ்வொன்றும் முற்றுமுழுதான சுயாட்சியைக் கொண்ட ஒன்பது மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று கோரியது. மக்கள் சபையையும் செனட் சபையையும் கொண்ட இரு சபைகளுடனான சட்டவாக்க சபையொன்று ( பாராளுமன்றம்) இருக்க வேண்டும் என்பதும் கட்சியின் நிலைப்பாடாக இருந்தது.
சமஷ்டி அரசியலமைப்பு ஒன்றுக்கான பண்டாரநாயக்கவின் யோசனையை ஒருவரைத் தவிர, முற்போக்கு தேசிய கட்சியின் சகல உறுப்பினர்களும் ஆதரித்தனர். பண்டாரநாயக்கவின் நெருங்கிய நண்பரும் சகாவுமான கல்விமான் ஜேம்ஸ் ரி. இரத்தினமே அவ்வாறு தன்னந்தனியனாக எதிர்ப்பை வெளிக்காட்டினார். ஜேம்ஸ் இரத்தினம் பிரபலமான திரைப்படத் தயாரிப்பாளர் சந்திரன் இரத்தினத்தின் தந்தையாவார்.
சிலோன் மோர்ணிங் லீடர்
சிலோன் மோர்ணிங் லீடர் பத்திரிகைக்கு தொடர்ச்சியாக ஆறு கட்டுரைகளை எழுதிய பண்டாரநாயக்க சமஷ்டி முறை தொடர்பான தனது நோக்கை விளக்கிக். கூறினார். முதலாவது கட்டுரை 1926 மே 19 வெளியானது. அந்த கட்டுரையின் அறிமுகப் பந்திகள் வருமாறு ;
“சுயாட்சிக்கான விருப்பம் முன்னெப்போதையும் விட உறுதியாக வளர்ந்துவரும் ஒரு நேரத்தில், கட்டங்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘ சீர்திருத்தங்கள் ‘ சுயாட்சி இலக்கை. பெரும்பாலும் விரைவில் அடைந்துவிடக்கூடிய சாத்தியத்தை தோற்றுவித்திருப்பதாக தெரிகிற ஒரு நேரத்தில், முனைப்பான கவனத்துடன் சிந்தித்துப் பார்க்க வேண்டிய மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இரு பிரச்சினைகள் எழுகின்றன. முதலாவது பிரச்சினை வெளியுலகில் இலங்கையின் அந்தஸ்து(external status) , அதாவது ஏனைய தேசங்களுடனான உறவில் ஒரு தேசமாக இலங்கையின் நிலை என்ன என்பது (Position ) பற்றியது.
” இரண்டாவது பிரச்சினை இலங்கையின் உள்ளக அந்தஸ்து ( Internal status) பற்றியது. அதாவது நாட்டில் வாழ்கின்ற வெவ்வேறு பிரிவினரின் நியாயமான தேவைகளை நிறைவேற்றக்கூடிய அரசாங்க வடிவம் (Form if government) ஒன்றை ஏற்றுக்கொள்வது பற்றியது. இந்த பிரச்சினைகளை பரிசீலிப்பதற்கு அக்கறையுடனான எந்தவொரு முயற்சியும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை என்பது மாத்திரமல்ல, இவ்வாறான பிரச்சினைகள் இருக்கின்றன என்பது கூட சில வட்டாங்களில் புரிந்துகொள்ளப்படவும் இல்லை.
” வழமையான தெளிவற்ற சிந்தனை, பிரச்சினைகளை பொதுமைப்படுத்துகின்ற வழமையான போக்கு ஆகியவற்றையே காணக்கூடியதாக இருக்கிறது. கவர்ச்சியான சொற்பதங்கள் உலகம் பூராவும் அரசியல்வாதிகளின் சாபக்கேடாக இருக்கிறது….. இலங்கையில் ‘ சகவாழ்வு , சுயாட்சி, அமைச்சரவை அரசாங்கம் போன்ற சொற்பதங்கள் அவை பற்றிய தெளிவான விளக்கமின்றி பயன்பாட்டில் இருக்கின்றன. அந்த சொற்பதங்கள் எவற்றுடன் சம்பந்தப்பட்டவை எனபதைப் பற்றியோ அல்லது எமது குறிப்பிட்ட சிக்கல்களுக்கு அவற்றைப் பியோகிக்கக்கூடிய சாத்தியப்பாடு பற்றியோ எந்த விளக்கமும் இல்லை. இங்கு குறிப்பிடப்படும் பிரச்சினைகளுக்கு உண்மையான தீர்வு சமஷ்டி முறையில் இருக்கிறது என்று கட்டுரையாளர் நம்புகிறார். இந்த கட்டுரைகள் சமஷ்டி முறை தொடர்பில் பொதுவான. அறிமுகத்தைச் செய்யும் நோக்கம் கொண்டவை.”
சமஷ்டிமுறையை நியாயப்படுத்தி பண்டாரநாயக்க முன்வைத்த வாதங்கள் அந்த நேரத்தில் அரசியல் அரங்கில் பெரிதாக கவனத்தைப் பெறவில்லை. சிறிய சலசலப்பையே ஏற்படுத்தியது. சமஷ்டி முறை தொடர்பிலான யோசனை அந்த நேரத்தில் இனவாத உணர்வுகளையோ அல்லது சிங்களவர்களிடமிருந்து எதிர்ப்பையோ கிளப்பவில்லை. அந்த யோசனைக்கு மிகவும் கடுமைான எதிர்ப்பு ஒரு சிக்களவரிடமிருந்து அல்ல, ஒரு தமிழரிடமிருந்தே வந்தது.
தனது நண்பரான பண்டாரநாயக்க முன்வைத்த கருத்துக்களை எதிர்த்துவாதிட்டு கல்விமான் ஜேம்ஸ் ரி. இரத்தினம் சிலோன் மோர்ணிங் லீடரில் கட்டுரைகளை எழுதினார். ஜேம்ஸ் இரத்தினம் ஒற்றையாட்சி அரசியலமைப்பையே ஆதரித்தார். சமஷ்டி அரசியலமைப்பை எதிர்த்த அவர் அது மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தும் என்று அவர் குறினார். ஆனால், 1926 ஆம் ஆண்டில் கொண்டிருந்த அபிப்பிராயத்தை மாற்றிக்கொண்ட ஜேம்ஸ் இரத்தினம் முப்பது வருடங்களுக்கு பிறகு அதாவது 1956 ஆம் ஆண்டுக்கு பிறகு சமஷ்டி முறையை ஆதரித்தார்.
பண்டாரநாயக்கவின் யாழ்ப்பாண விரிவுரை
பண்டாரநாயக்க 1926 ஆம் ஆண்டில் சமஷ்டி யோசனையை முன்வைத்தபோதுN யாழ்ப்பாண மாணவர் காங்கிரஸும் ( பிறகு அதன் பெயர் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் என்று மாற்றப்பட்டது) அதை எதிர்த்தது. யாழ்ப்பாணத்தில் விரிவுரையொன்றை நிகழ்த்துவதற்காக பண்டாரநாயக்கவை யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் அழைத்தது. 1926 ஜூலை 26 ஆம் திகதி நடைபெற்ற அந்த கூட்டத்தில் சமஷ்டி குறித்து. உரையாற்றுவதற்காக பண்டாரநாயக்க யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார். அந்த கூட்டத்துக்கு கலாநிதி ஐசாக் தம்பையா தலைமைதாங்கினார். ‘ எமது அரசியல் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு சமஷ்டிமுறையே ‘ என்ற தலைப்பில் பண்டாரநாயக்க நாவன்மையுடன் உரையாற்றினார். இன வேறுபாடுகளைக் கையாளுவதற்கு பிராந்திய சுயாட்சியே சீரான வழி என்று அவர் வாதிட்டார்.
தமிழ்ச் சபையோர் சமஷ்டி முறை குறித்த பண்டாரநாயக்கவின் விளக்கத்தினால் கவரப்படவில்லை. இலங்கைத் தீவுக்கு சமஷ்டி முறையே பொருத்தமானது என்ற அவரின் வாதத்தை எதிர்த்து பெருவாரியான கேள்விகள் தொடுக்கப்பட்டன. பெரும் அறிவாழத்துடன் அவர் பதிலளித்தார். ஆனால், அன்று யாழ்ப்ப்ணத்தில் இருந்த தமிழர்கள் மத்தியில் சமஷ்டி முறையை ஏற்பாரில்லை. இருந்தாலும், தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த பண்டாரநாயக்க ,” சமஷ்டி முறைக்கு எதிராக ஆயிரத்தியொரு ஆட்சேபனைகளை கிளப்பமுடியும். ஆனால், ஆட்சேபனைகள் அருகிப்போகும்போது ஒரே தீர்வு. ஒரு வகையான சமஷ்டி அரசாங்க முறையே என்று நான் திடமாக நம்புகிறேன்” என்று கூறினார்.
சிங்கள மகாசபை
1931 ஆம்ஆண்டில் டொனமூர் அரசியலமைப்பின் மூலமாக சர்வஜன வாக்குரிமையும் பிராந்திய அடிப்படையிலான பிதிநிதித்துவமும் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து பண்டாரநாயக்கவின் அரசியல் நோக்கில் மாற்றம் ஏற்பட்டது. தேசிய ஐக்கியத்தைக் கொண்டுவருவதற்கு மிகப்பெரிய சமூகத்தவர்களான சிங்களவர்களை ஐக்கியப்படுத்த வேண்டும் என்று அவர் அப்போது உணர்ந்தார். அதனால், தன்னைப் போன்று எண்ணமுடைய சிலரைச் சேர்த்துக் கொண்டு பண்டாரநாயக்க 1936 ஆம் ஆண்டில் சிங்கள மகாசபையை அமைத்தார்.
1931 ஆம் ஆண்டிலும் 1936 ஆம் ஆண்டிலும் அரசாங்க சபை (state Council) தேர்தல்களில் பண்டாரநாயக்க வியாங்கொடை தொகுதியில் போட்டியிட்டார். இரு சந்தர்ப்பங்களிலும் அவர் எதிர்ப்பின்றி தெரிவு செய்யப்பட்டார். 1936 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட தனிச்சிங்கள அமைச்சரவையில் ( Pan – Sinhala board of ministers) அவர் உள்ளூராட்சி அமைச்சரானார்.
அதைத் தொடர்ந்து பண்டாரநாயக்க சமஷ்டி முறைக்காக குரல்கொடுப்பதை விடுத்து பன்முகப்படுத்தலை ( Decentralisation ) ஆதரித்தார். அன்று சமஷ்டி முறை மீது வெறுப்பு இருக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அக்கறையற்ற ஒரு நிலையே காணப்பட்டது. பெரிய அரசியல் அபிலாசைகளைக் கொண்டிருந்த பண்டாரநாயக்க சிங்கள மகாசபையூடாகவும் உள்ளூராட்சி அரசாங்க முறைமையூடாகவும் தனது ஆதரவுத்தளத்தை கட்டியெழுப்புவதில் நாட்டம் காட்டினார். அதனால் அவர் உள்ளூராட்சி முறையை மேம்படுத்தி பன்முகப்படுத்தலின் மூலமாக பெருமளவில் சுயாட்சியை வழங்க விரும்பினார்.
மாகாண சபைகள்
பெரிய உள்ளூராட்சி அதிகார அலகாக மாகாணங்களை பண்டாரநாயக்க நோக்கத் தொடங்கினார். மாகாணசபைகளை அமைக்க அவர் விரும்பினார். உத்தேச மாகாண சபைகளுக்கு பெருமளவு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் வலியுறுத்தும் அறிக்கை ஒன்றை உள்ளூராட்சி அரசாங்க அமைச்சின் நிறைவேற்றுக்குழு வெளியிட்டது. 1940 ஆம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ். குணவர்த்தன மாகாண சபைகளை அமைப்பதற்கான யோசனையை முன்வைத்து அரசாங்க சபையில் பிரேரணையொன்றை கொண்டுவந்தார். அரசாங்க சபை அதை அங்கீகரித்தது. ஆனால், விளங்கிக்கொள்ளமுடியாத சில காரணங்களுக்காக பண்டாரநாயக்க மாகாணசபைகளை அமைக்கும் திட்டத்தை மேலும் முன்னெடுக்கவில்லை. அரசாங்க சபையின் பதவிக்காலத்தில் சட்டமூலம் ஒன்றைக் கொண்டுவரவுமில்லை.
பண்டாரநாயக்க பிறகு தனது சிங்கள மகாசபையுடன் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்ததுகொண்டார். சுதந்திர இலங்கையில் டி.எஸ். சேனநயக்கவின் கீழான முதலாவது அமைச்சரவையில் அவர் உள்ளூராட்சி அமைச்சராக நியமிக்கப்பட்டார். மக்களுக்கு நெருக்கமாக அரசாங்கத்தைக் கொண்டு செல்வதற்கான ஒரு வழிமுறையாக பண்டாரநாயக்க தனது மாகாணசபை திட்டத்துக்கு மீண்டும் உயிர்கொடுக்க முயற்சித்தார் என்று கூறப்பட்டது. முழுமைவாய்ந்த அமைச்சர்களாக அதிகாரத்தை அனுபவித்த அவரது அமைச்சரவைச் சகாகக்கள் புதிதாகப் பெற்ற தங்களது அதிகாரத்தை குறைக்கவோ அல்லது தளர்த்தவோ தயங்கினார்கள். அதனால் பண்டாரநாயக்கவினால் தனது திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க முடியாமல் போனது.
இது உண்மையிலேயே கவலைக்குரிய ஒரு விடயம். ஏனென்றால், பிற்காலத்தில் மாகாணசபை பெற்ற இனத்துவப் பரிமாணம் அப்போது இருக்கவில் ல என்பதால் அந்த சபைகளை பெருமளவுக்கு பிரச்சினை இல்லாமல் அமைத்திருக்க முடியும். 1951. ஆம் ஆண்டில் பண்டாரநாயக்க ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தரப்புக்கு மாறி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஆரம்பித்தார்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 1956 பொதுத்தேர்தல் சிங்கள சமூகத்துக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் இடையில் ஆழமான பிளவை ஏற்னபடுத்தியது. தென்னிலங்கையில். பண்டாரநாயக்க தலைமையிலான கூட்டு முன்னணியான மகாஜன எக்சத் பெரமுன (மக்கள் ஐக்கிய முன்னணி ) மாபெரும் வெற்றியைப் பெற்ற அதேவேளை, எஸ். ஜே.வி. செல்வநாயகம் தலைமையிலான இலங்கை தமிழரசு கட்சி வடக்கில் ஒன்பது ஆசனங்களில் ஆறு ஆசனங்களையும் கிழக்கில் ஏழு ஆசனங்களில் நான்கு ஆசனங்களையும் கைப்பற்றியது.
புதிய அரசாங்கம் மேற்கொண்ட முதல் நடவடிக்கைகளில் ஒன்று சிங்களத்தை மாத்திரம் அரசகரும மொழியாக்கியதாகும். நாடுபூராவும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் மூண்டன. இனப்பதற்றம் அதிகரித்த நிலையில் நாடு இரத்தக்களரியை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக தோன்றியது.
பிராந்திய சபைகள்
இலங்கையின் சகல பிரதமர்கள் மத்தியிலும் மிகுந்த அறிவுஜீவி என்று சொல்லக்கூடிய பண்டாரநாயக்க அன்று நாட்டில் நிலைவரத்தை தடுத்து மாறாறியமைக்க வேண்டும் என்பதை புரிந்துகொண்டார். தீர்வு காணவேண்டிய அவசியத்தைக் கொண்ட. உண்மையான மனக்குறைகள் தமிழர்களுக்கு இருக்கிறது என்பதை அவர் விளங்கிக் கொண்டார். 1926 ஆம் ஆண்டில் இலங்கைக்கு பொருத்தமானது சமஷ்டி முறையே என்று யோசனையை முன்வைத்த மனிதரான பண்டாரநாயக்க பயனுறுதியுடைய அதிகாரப்பகிர்வு மாத்திரமே தீர்வாக இருக்க முடியும் என்பதை தெரிந்துகொண்டார். சமஷ்டி முறைக்குப் பதிலாக, பிராந்திய சபைகளை ( regional councils) அமைப்பதன் மூலமாக பரந்தளவிலான அதிகாரப்பகிர்வைக் கொண்டுவர விரும்பினார்.
பண்டா — செல்வா ஒப்பந்தத்தின் விளைவாக பண்டாரநாயக்க பிராந்திய சபைகள் திட்டத்தை அறிமுகப்படுத்தவிருந்ததாக பரவலாக நம்பப்பட்டது. உண்மையில் பிராந்திய சபைகளுக்கான வரைவுச் சட்டமூலம் 1957 மே 17 ஆம் திகதி வெளியிடப்பட்டது. பண்டா — செல்வா ஒப்பந்தம் பிறகு ஜூலையில் வந்தது. பிராந்திய சபைகள் சட்டமூலத்தை சமர்ப்பித்த பிறகு பண்டாரநாயக்க தமிழ்த் தலைவர்களுடன் ஒரு புரிந்துணர்வுக்கு வந்து அதை மேலும் திருத்தியமைக்க விரும்பினார்.
அரசாங்கம் — தமிழரசு பேச்சுவார்த்தை
பண்டாரநாயக்கவுக்கும் தமிழரசு கட்சியின் தலைவரான சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகத்துக்கும் இடையில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஏற்பாடு பிரதமர் பண்டாரநாயக்கவின் முன்முயற்சியினாலேயே முன்னெடுக்கப்பட்டது. முதல் சந்திப்பு ஹொரகொல்லையில் உள்ள. பிரதமரின் வாசஸ்தலத்தில் 1957 ஜூன் 22 ஆம் திகதி இடம்பெற்றது. சமஷ்டி முறையே பொருத்தமான தீர்வு என்று 1920 களில் பண்டாரநாயக்க கொண்டிருந்த கருத்தே சமஷ்டி முறையின் அடிப்படையிலான தீர்வை தமிழரசு கட்சி கோருவதற்கு உத்வேகமளித்தது என்று செல்வநாயகம் தலைமையிலான தூதுக்குழு சுட்டிக்காட்டியது. நாட்டில் சமஷ்டி முறை பற்றிய யோசனையை முன்வைப்பதில் முன்னோடியாக பண்டாரநாயக்க வகித்த வரலாற்று முக்கியத்துவ பாத்திரத்தை ஒப்புக்கொள்வதன் மூலமாக சமஷ்டி நோக்கு ஒன்றின் ஊடாக விவகாரங்களை பார்ப்பதற்கு அவரை ஊக்கப்படுத்துவதே தமிழரசு கட்சியின் அணுகுமுறையாக இருந்தது.
ஆனால் , அது 30. வருடங்களுக்கு முந்திய விடயம். பிறகு நிலைவரம் மாறிவிட்டது. சமஷ்டி முறைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட எதிர்மறையானதும் வெறித்தனமானதுமான பிரசாரம் பொதுவில் சிங்களவர்களின் எண்ணத்தில் அந்த கோட்பாட்டின் அர்த்தத்தை திரிவுபடுத்திவிட்டது. சமஷ்டிமுறை என்றால் என்ன என்பதை பெரிய மேதையான பண்டாரநாயக்க நன்கு தெரிந்திருந்த போதிலும் , இப்போது அவர் சமஷ்டி முறையை ஏற்றுக்கொள்வதற்கோ அல்லது அதனுடன் தன்னை அடையாளப்படுத்துவதற்கோ தயாராயில்லை.
அதனால், சமஷ்டிக் கோட்பாட்டை முன்னர் அரவணைத்த பண்டாரநாயக்க அன்று சமஷ்டியை ஆதரித்துப் பேசிய போதிலும், தனது மனதை பிறகு மாற்றிக் கொண்டுவிட்டதாக பதிலளித்தார். தவிரவும், சமஷ்டி முறையை அறிமுகப்படுத்துவதற்கான மக்கள் ஆணையும் அவருக்கு கிடையாது. ” தமிழர்களின் மனக்குறைகளுக்கும் அபிலாசைகளுக்கும் தீர்வைத் தரக்கூடிய சமஷ்டி முறைக்கு குறைவான மாற்று தீர்வு ஒன்று குறித்து தமிழரசு கட்சியினால் சிந்திக்க முடியாதா? என்று பண்டாரநாயக்கா கேட்டார்.
‘. சமஷ்டி சுயாட்சி இல்லாத ஆனால், பெருமளவு பன்முகப்படுத்தலை
( massive decentralisation ) விதந்துரைக்கும் மாற்று யோசனைகளுடன் வருமாறு தமிழரசு கட்சிக்கு அப்போது பண்டாரநாயக்க யோசனை கூறினார். அதற்கு இணங்கிக் கொண்டு தமிழரசு கட்சி தலைவர்கள் கிளம்பிச் சென்றனர். அதற்கு பிறகு அரசாங்கத்துக்கும் தமிழரசு கட்சிக்கும் இடையில் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இறுதியில் ஒப்பந்த வரைவு ஒன்று தயாரிக்கப்பட்டது.
பண்டாரநாயக்கவும் செல்வநாயகமும் 1957 ஜூலை 26 ஆம் திகதி கைச்சாத்தாட்ட ஒப்பந்தம் சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். பதவியில் இருந்த பிரதமரும் பெரிய தமிழ் அரசியல் கட்சியின் தலைவரும் தங்களுக்கு இடையில் கண்ட புரிந்துணர்வு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால், ஆரம்பக் கட்டங்களில் இருந்த இனநெருக்கடியை கட்டுப்படுத்தி வைத்திருக்க நிச்சயமாக உதவியிருக்கும்.
பண்டா — செல்வா ஒப்பந்தம்
பண்டா — செல்வா ஒப்பந்தம் என்று அறியப்பட்ட. அந்த இணக்கப்பாடு தென்னிலங்கையில் கிளம்பிய அரசியல் எதிர்ப்பு காரணமாக செயற்படுதற்கு ஒருபோதும் அனுமதிக்கப்படவில்லை.எதிர்ப்பு சிங்கள பௌத்த மதகுருமார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இருந்த கடும் போக்காளர்களிடமிருந்தும் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகள் மத்தியில் இருந்த தீவிர போக்குடையவர்களிடமிருந்தும் வந்தது.
பண்டா — செல்வா ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்த வண்ணம் 200 பௌத்த பிக்குமாரும் வேறு 300 பேரும் 1958 ஆம் ஆண்டு ஏப்ரில் 9 ஆம் திகதி பண்டாரநாயக்கவின் வாசஸ்தலத்திற்கு வெளியே மறியல் போராட்டம் நடத்தினர். இறுதியாக, பண்டாரநாயக்க அடிபணிந்து ஒருதலைப்பட்சமாக ஒப்பந்தத்தை மறுதலித்து அதன் பிரதியொன்றை அடயைாளபூர்மாக கிழித்தெறிந்தார்.
இதுவே சமஷ்டி முறையை ஆதரித்துப் பேசுவதில் முன்னோடியாக ஆரம்பித்து பிறகு மாகாணசபைகள் மற்றும் பிராந்திய சபைகளின் வடிவில் பன்முகப்படுத்தலுக்காக குரல்கொடுத்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் கதை. சமஷ்டிமுறை யோசனையை முன்வைத்ததில் இருந்து பன்முகப்படுத்தலுக்காக குரல்கொடுடுத்தது வரையான இந்த நிலைமாற்றம் செல்வநாயகத்துடன் பண்டாரநாயக்க கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தின் மூலமாக விதந்துரைக்கப்பட்ட பிராந்திய சபைகளின் சாராம்சம் மற்றும் தன்மையின் மூலமாக முனைப்பாக தெளிவுபடுத்தப்படுகிறது.
தனிச்சிறப்பான காரணி
பண்டாரநாயக்கவின் அரசியல் படிமுறை வளர்ச்சியும் நிலைமாற்றமும் சுவாரஸ்யமான ஒரு ஆய்வாகும். பண்டாரநாயக்காவின் அரசியல் நோக்கில் மாற்றங்கள் ஏற்பட்டதற்கு மத்தியிலும், இந்த எழில்மிகு தீவினதும் அதன் மக்களினதும் நல்வாழ்வுக்கு ஒரு வகையான பன்முகப்படுத்தப்மட்ட அதிகாரப் பகிர்வே அவசியானது என்ற நிலைப்பாடே அவரது அரசியல் சிந்தனையில் நிலையாக இழையோடிக் கொண்டிருந்தது. இது தனிச்சிறப்பான எந்தவொரு அரசியலமைப்பு உருவாக்க செயன்முறையிலும் அல்லது அரசியலமைப்புச் சீர்திருத்தச் செயன்முறையிலும் நிராகரிக்கவோ, அலட்சியம் செய்யவோ, கவனிக்காமல் விடவோ அல்லது மூடிமறைக்கவோ முடியாத தனிச்சிறப்பான காரணியாகும்.
_____________
D.B.S.Jeyaraj can be reached at dbsjeyaraj@yahoo.com
ஆங்கில மூலம்: டி. பி. எஸ். ஜெயராஜ் (Daily Mirror)
தமிழில்: வீரகத்தி தனபாலசிங்கம்
நன்றி: வீரகேசரி
*******************************************************************************

