தமிழ்த் தேசியவாத அரசியலின் எதிர்காலம்’ நூல் எழுப்பும் கேள்விகள்

சமுத்திரன்

கொழும்பில் இயங்கும் மார்க்சிய கற்கைகளுக்கான சண்முகதாசன நிலையத்தின் வெளியீடாக அண்மையில் எட்டுக் கட்டுரைகளின் தொகுதியாக வெளிவந்துள்ள ‘ தமிழ் தேசியவாத அரசியலின் எதிர்காலம் ‘ நூலில் இலங்கையின் வடக்குக் கிழக்கின் தமிழ்த் தேசியவாத அரசியலின் தற்போதைய நிலைமைகளை எதிர்கால நோக்கில் ஆராய்கிறார் வீரகத்தி தனபாலசிங்கம். நூலாசிரியர் நீண்டகால அனுபவமும் விமர்சனப் பார்வையும் கொண்ட பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் பொதுவெளிப் பேச்சாளர். முன்னுரையில் ஈழத் தமிழ்த் தேசியவாத அரசியலின் இன்றைய நிலை பற்றி அவருடைய கணிப்பை அக்கறையுடன் பதிவிடுகிறார்.

‘இலங்கை அரசியல் வரலாற்றில் இனத்துவ உறவுகளைப் பொறுத்தவரை எல்லைக் கோடாக அமைந்த 1983 ஜூலை வன்முறைக்குப் பின்னர் 42 வருடங்களையும் போர் முடிவுக்குப் பின்னரான 16 வருடங்களையும் கடந்துவந்த நிலையில் இன்று தமிழர்களின் அரசியல் இருப்பு கேள்விக்குறியாக … இடர்மிகு கட்டத்தில் வந்து நிற்கிறது. தமிழர் அரசியல் குறித்து நாம் ஆழ்ந்து ஆய்வறிவு நிலைப்பட்டுச் சிந்திக்க வேண்டிய முட்டுச்சந்தில் நிற்கிறோம்.’

இந்தத் தொகுப்பு பிரதானமாக இலங்கை இனத்துவ அரசியல் சூழலில் வடக்குக் கிழக்கின் தமிழ் சமூகத்தை மையப்படுத்திச் சமீப தசாப்தங்களின் வரலாற்றுப் பின்னணியில் கடந்த 16 வருடகால அரசியல் போக்குகளை அலசி எதிர்காலம் தொடர்பான சில கேள்விகளை எழுப்புகிறது. ஆயினும் தமிழ்த் தேசியவாதத்தின் கருத்தியல்சார் உள்ளடக்கம் பற்றிய விளக்கங்கள், மற்றும் விவாதங்கள் இந்தத் தொகுப்பின் பேசுபொருட்களில் அடங்கவில்லை. தேசிய இனப் பிரச்சனையைப் பொறுத்தவரை ஒரு அரசியல் தீர்வின் அவசியத்தையும் சாத்தியப்பாட்டையும் மனதில் கொண்டு அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளையும் அவற்றிடையில் எழுந்துநிற்கும் முரண்பாடுகளையும் சுட்டிக்காட்டி விமர்சிக்க முற்படுகிறார் நூலாசிரியர்.

ஆயினும் பன்மைத்தன்மையுடைய இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையின் முழு உள்ளடக்கத்தின் அம்சங்களில் ஒன்றான வடக்குக் கிழக்கு தமிழ் சமூகத்தின் அரசியல் இருப்பே நூலின் மையக்குவியமாகப் படுகிறது. இதனால் இந்தக் கட்டுரைகள் ஒரு குறுப்பிட்ட அரசியல் பரப்பைப் பிரதானப்படுத்தி எழுதப்பட்டிருக்கின்றன என்று எண்ணத் தோன்றுகிறது.

உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து 16 வருடங்கள் கழிந்துவிட்ட நிலையிலும் எதிர்காலம் குறித்துத் தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்கக்கூடிய எந்தவிதமான அறிகுறியையும் இலங்கையின் அரசாங்கங்கள், தற்போதைய அரசாங்கம் உட்பட, வெளிப்படுத்தாத சூழலில் தமிழ் அரசியல் தலைமைத்துவம் பற்றிய தனது திடமான அவதானிப்பையும் ஏமாற்றத்தையும் முதலாவது கட்டுரையிலேயே பின்வருமாறு அவர் பதிவிடுகிறார்.

உள்நாட்டுப்போரின் முடிவுக்கு பின்னரான இன்றைய காலப் பகுதியில் உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைவரங்களுக்கு இசைவான முறையில் நடைமுறைச் சாத்தியமான கொள்கைகளுடனும் அணுகுமுறைகளுடனும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தை விவேகமான முறையில் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தக்கூடிய அரசியல் தலைமைத்துவம் தமிழர்கள் மத்தியில் இன்று இல்லை என்பது பெரும் கவலைக்குரியது.

முட்டுச்சந்தில் நிற்கும் தமிழ்த் தேசியவாத அரசியலுக்கு ஒரு மாற்று வழியைத் தேடும் ஆற்றலுள்ள தமிழ்த் தலைமைத்துவம் தென்படாத சூழலில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு வடக்கு கிழக்கில் கணிசமான அளவில் வாக்குகளை வழங்கி அந்த அமைப்பின் ஏழு அங்கத்தவர்களை வெற்றிபெறச் செய்துள்ளார்கள். இது தமிழ் பாரளுமன்ற அரசியலில் ஒரு தன்மைசார் திருப்பத்தின் அறிகுறியா அல்லது வழமையான போக்கிலிருந்து ஒரு தற்காலிக விலகலா?

தங்களை இதுகாலவரை பிரதிநிதித்துவப்படுத்திவந்த தமிழ்த் தேசியவாதக் கட்சிகளின் செயற்பாடுகளின் மீதான வெறுப்பின் காரணமகவே தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தியின் பக்கம் திரும்ப நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என வாதிடும் தனபாலசிங்கம் மக்களின் அந்த வெறுப்பிற்கான ஆதாரங்களையும் பல இடங்களில் முன்வைக்கிறார். இந்த விளக்கம் பற்றி மேலும் ஆராய முன் இதனுடன் தொடர்புள்ள சில அம்சங்கள் பற்றி அவர் பகிர்ந்துள்ள அவதானிப்புகளை அலசுதல் பயனளிக்குமென்று நம்புகிறேன்.

இந்த வகையில் முக்கியத்துவம் பெறும் விடயங்களில் ஒன்று இலங்கையின் யாப்பின் பதின்மூன்றாம் திருத்தத்தின் தற்போதைய அரசியல் தராதரம், தமிழ்க் கட்சிகளிடையே இது பற்றி நிலவும் முரண்பாடுகள் மற்றும் இதனுடைய நடைமுறையாக்கச் சாத்தியப்பாடு. இது பற்றிப் பார்த்தபின் மற்ற விடயங்களுக்கு வருவோம்.

அரசியல் தீர்வைக் காண்பதற்கு உள்நாட்டில் முன்னெடுக்கப்பட்ட எந்தவொரு முயற்சியுமே வெற்றிபெறாத வரலாற்றுப் பின்னணியில் உள்நாட்டுப்போர் தொடரும் சூழலில் இந்தியாவின் தலையீட்டின் விளைவாகச் சட்டமாக்கப்பட்ட 13ஆம் திருத்தம் மற்றும் அது வழங்கும் மாகாண சபை முறை தொடர்பாகப் பிரதான தமிழ்த் தேசியவாத அரசியல் கட்சிகளுக்கிடையிலான முரண்பாடுகளும் பிளவுகளும் ஏற்கனவே அரசியல்ரீதியில் பலவீனமடைந்த நிலையிலுள்ள தமிழ் சமூகத்தை மேலும் பாதித்துள்ளது. இன்றைய சூழலில் 13ஆம் திருத்தத்திற்கு எதிராகப்போராடிய ஜே.வி.பி. தலைமையிலுள்ள தற்போதைய இலங்கை அரசாங்கத்துடன் நல்லிணக்கத்தை பேணுவதில் கண்ணாயிருக்கும் இந்திய அரசாங்கமும் அதன் நடைமுறையாக்கலில் ஆர்வத்தைக் காட்டுவதாகத் தெரியவில்லை.

இந்தப் பின்னணியில் மாகாண சபை முறையை முற்றாக நிராகரிக்கும் தமிழ்த் தேசியவாத அரசியலை விமர்சிக்கும் நூலாசிரியர் 13ஆவது திருத்தம் போதுமானது அல்ல ஆயினும் தமிழ் அரசியல் சமுதாயம் அதன் வரலாற்றில் மிகவும் மோசமாகப் பலவீனமடைந்து சிதறுபட்டிருக்கும் சூழலில் அதுவும் இல்லாமல் போனால் நிலைமை என்னவாகும் எனும் கேள்வியை எழுப்புகிறார்.
மாகாண சபை முறையை மக்களின் உரிமைகளையும் நலன்களையும் முன்னெடுக்கும் அணிதிரட்டல் அரசியலுக்கு உதவும் வழிமுறையாகப் பயன்படுத்த முடியாதா எனும் கேள்வி எழுகிறது. முடியும் என நான் நம்புகிறேன்.

ஆனால் இப்போதைய தமிழ்க் கட்சிகளால் அதைச் சாதிக்க முடியும் என நான் நம்பவில்லை என்பது தொடர்பாக கடந்த காலத்தில் எழுதியுமுள்ளேன்.

இலங்கையின் ஒற்றையாட்சி முறை நீக்கப்பட்டு ஒரு புதிய அரசியல் அமைப்பின் கீழ் சமஷ்டி முறையிலான ஒரு எதிர்காலத் தீர்வைக் கோரி நிற்கும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மாகாண சபைகள் முறையை முற்றாக நிராகரிக்கிறது. சமஷ்டியை ஆதரிக்கும் தமிழரசுக் கட்சி மாகாண சபைகளை முற்றாக நிராகரிக்கவில்லை. தமிழ்க் கட்சிகளால் ஒன்றிணைந்த நிலைப்பாடொன்றை முன்வைப்பதற்குக்கூட முடியவில்லை.

13 ஆவது திருத்தம் வழங்கும் குறைந்தபட்ச அதிகாரப் பகிர்வைக் கூட இதுகாலவரை நடைமுறைப்படுத்தாமல் இருக்கும் இலங்கை அரசாங்கங்களிடமிருந்து சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை பெறமுடியுமா? வெறுமனே இந்தியாவிடமும் சர்வதேச சமூகத்திடமும் கோரிக்கையை விடுப்பதன்மூலம் மாத்திரம் அதை அடைந்துவிடலாமா? தற்போதைய சூழலில் 13 ஆவது திருத்தத்தின் நடைமுறையாக்கலில் ஆர்வம் காட்டத் தயங்கும் இந்திய ஆட்சியாளரிடமிருந்து அதற்கும் மேலான ஒரு தீர்வில் அக்கறையை எதிர்பார்க்கலாமா? ‘13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப் படுத்தினால் இலங்கை இதுவரை காணாத மிகப்பெரிய இனக்கலவரம் மூளும் என்று சிங்கள இனவாதிகள் இப்போதும் கூட பேசுகிறார்கள்’ எனும் கசப்பான செய்தியையும் நினைவூட்டும் நூலாசிரியர் புதிய யாப்பு வரும் பட்சத்தில் அது சமஷ்டியை உள்ளடக்குமா? எனக் கேட்கிறார். அவர் எழுப்பும் கேள்விகள் நியாயமானவை. அவை வேறு கேள்விகளையும் தூண்டுகின்றன.

உதாரணமாக, இந்தக் கேள்விகளின் தொடராக எழும் இன்னொரு கேள்வியை இங்கு குறிப்பிடுதல் அவசியம். தமிழ் மக்களின் கோரிக்கைகளையும் அவற்றின் நியாயப்பாட்டினையும் சிங்கள மக்களிடம் எடுத்துச் செல்லும் வழிவகைகள் எவை? இந்தக் கேள்வியை நான் எழுப்புவது இதுதான் முதல் தடவையல்ல. நான் இந்தக் கேள்வியை எழுப்பிய முதலாவது தமிழருமல்ல. இது போன்ற கேள்விகளை வடக்கு கிழக்கில் தமிழ் – முஸ்லிம் அரசியல் உறவு பற்றியும் எழுப்ப வேண்டிய நிலையில் உள்ளோம். வடக்கு கிழக்குக்கு விசேட முக்கியத்துவம் கொடுக்கும் இந்தத் தொகுப்பின் கட்டுரைகளில் இந்த விடயம் விடுபட்டிருப்பது வருத்தத்திற்குரிய குறைபாடாகும்.

ஒரு முதற்படியாக, இலங்கையின் ஒன்பது மாகாணங்களுக்கும் பொதுவான பதின்மூன்றாம் திருத்தம் முழுமையாக நடைமுறையாக்கப்படுமாயின் எல்லா மாகாணங்களும் நன்மை பெறமுடியும் போன்ற ஒரு கோரிக்கையை எல்லா இனங்களுக்குமிடையிலான புரிந்துணர்வுக்கும் செயற்பாடுகளுக்கும் உதவக்கூடிய வகையில் உருவாக்கமுடியாதா? இத்தகைய ஒரு அணுகுமுறை நிலம் மற்றும் இயற்கை வளங்களின் உரிமைகள் மற்றும் அவற்றின் நிலைபெறு பயன்பாடு தொடர்பான அதிகாரப் பகிர்வு மற்றும் மனித மேம்பாட்டிற்கு முன்னுரிமை கொடுக்கும் அபிவிருத்தி போன்ற விடயங்களைப் பேசுபொருட்களாக முன்னெடுக்க உதவ மாட்டாதா? அந்தத் திருத்தத்தின் குறைபாடுகளையும் மேலும் தெளிவாக மக்களுக்கு வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் கிடைக்கலாம் அல்லவா? இதற்கூடாக ஒரு தொடர்புவழியைத் திறக்க முடியாதா?

புலம்பெயர்வும் வடக்குக் கிழக்கின் இனம்சார்-சனத்தொகையியலும் இனத்துவப் புவியியல்சார், மாற்றங்களும் முக்கியத்துவம்பெறும் இன்னொரு விடயமாகும். இது தொடர்பாகச் சில அவதானிப்புகளைப் பதிவு செய்திருக்கிறார் தனபாலசிங்கம். முக்கியமாக ‘மக்களும் நிலமும் இல்லாமல் எந்தத் தேசியவாதத்தையும் பாதுகாக்க முடியாது’ எனும் வாதத்தின் அடிப்படையில் தனது கருத்துக்களை முன்வைத்திருக்கிறார். அதாவது வடக்குக் கிழக்கில் தொடர்ந்தும் வாழ்ந்தால் தமக்கும் தமது சந்ததிகளுக்கும் வளமான எதிர்காலம் இருக்கும் என்ற நம்பிக்கை இல்லாவிட்டால் புலப்பெயர்வு தொடர்வதைத் தவிர்க்க முடியாது. தற்போதைய தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுக்கே அந்த நம்பிக்கை இருப்பதாகத் தெரியவில்லை.

தமிழ்த் தேசியவாதக் கட்சிகளிடம் வடக்கு கிழக்கின் சமூக முன்னேற்றத்தை நோக்காகக் கொண்ட அபிவிருத்திக் கொள்கையோ, வேலைத்திட்டமோ இருக்கவில்லை. இது அந்தக் கட்சிகளின் தலைமைகளுக்கும் மக்களுக்குமிடையிலான வெளியை, தொடர்பின்மையைக் காட்டுகிறது. ஒக்டோபர் 2013இல் இடம்பெற்ற முதலாவது வடமாகாண சபைத் தேர்தலில் பெரும் வெற்றி ஈட்டி ஐந்து வருடங்களுக்கு அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் ஒரு கொள்கை அடிப்படையிலான செயற்பாட்டுத் திட்டத்தைக் கொண்டிருக்கவில்லை. இன்றும்கூடப் பொதுவாக மக்களின் சமூக-பொருளாதார முன்னேற்றம் பற்றிய கொள்கைசார் விடயங்கள் தமிழ்த் தேசியவாதக் கட்சிகளின் அரசியலில் ஒரு முக்கிய பேசுபொருளாக இருப்பதாகத் தெரியவில்லை.

வடக்குக் கிழக்கின் இனம்சார் புவியியல் மாற்றங்களின் தற்போதைய நிலைமையைச் சமீபத்தில் வெளிவந்த இலங்கை சனத்தொகைக் கணிப்பு தரும் புள்ளி விபரங்களின் உதவியுடன் ஆராய்தல் அவசியம். நீண்ட காலப் போர், புலப்பெயர்வு மற்றும் அரச நிலத்தில் தொடரும் குடியேற்றத் திட்டங்கள் எல்லாவற்றினதும் விளைவுகள் தேசிய இனப் பிரச்சினையின் மீது தன்மைசார் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன எனும் கருத்தை நான் கடந்த பல வருடங்களாக வலியுறுத்தி வந்துள்ளேன்.

இலங்கையில் 2022 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மக்கள் கிளர்ச்சி மற்றும் அது தொடர்பான தமிழ்த் தேசியவாத எதிர்வினை பற்றி நூலில் காணப்படும் குறிப்புகள் கவனிக்கப்படவேண்டியவை. இலங்கையின் மிகப் பாரதூரமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இடம்பெற்ற பல்லினத்தன்மை மிக்க மக்கள் கிளர்ச்சியை உதாசீனம் செய்த தமிழ்த் தேசியவாதக் கட்சிகள் அந்த நெருக்கடி தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சினை அல்ல எனக் கூறியது அவற்றின் வர்க்கத் தன்மையையும் குறுகிய இனத்துவமையப் பார்வையையும் காட்டியது. இதை மேலும் பறைசாற்றுவது போல் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் தனவந்தர்களை இலங்கையில் சுதந்திரமாக முதலீடு செய்ய அனுமதித்தால் பொருளாதாரப் பிரச்சனைக்கு இடமிருக்காது என்று பாரளுமன்றத்தில் பேசினார்கள் சில தமிழ் அரசியல்வாதிகள் எனும் தகவலையும் பதிவிடுகிறார்.

எனது அபிப்பிராயத்தில் அந்த மக்கள் கிளர்ச்சி சிங்கள சமூகத்தில் பலமட்டங்களில் செயற்படும் முற்போக்குக் குழுக்களை இனம் காண உதவியது. ஆனால் அவற்றுடன் தேசிய இனப்பிரச்சனை தொடர்பான ஒரு தொடர்பு வழியை வளர்த்தெடுக்கக் கிடைத்த சந்தர்ப்பத்தை வடக்குக் கிழக்குத் தமிழ் சமூகம் நன்கு பயன்படுத்தத் தவறி விட்டது எனத் தெரிகிறது.

தமிழ்த் தேசியவாதக் கட்சிகளின் செயற்பாடுகளின் மீதான வெறுப்பின் காரணமாகவே தேசிய இனப் பிரச்சனைக்கு எதுவித தீர்வையும் முன்வைக்காத ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியை தமிழ் மக்கள் கடந்த பொதுத் தேர்தலில் ஆதரித்து வாக்களித்தார்கள் எனும் விளக்கத்தில் நிறைய நியாயமுண்டு. எனினும் தேசிய மக்கள் சக்தியை பரந்த அளவில் ஆதரித்தமைக்கு இந்த ஏமாற்றம் நிறைந்த வெறுப்புடன் வேறு காரணங்களும் இருக்கவில்லையா என்ற கேள்வியும் எழுகிறது.

இந்தக் காரணங்கள் தமிழ் சமூகத்தின் உள்ளார்ந்த பிரிவுகளின் தேவைகளின் அவசியத்தைப் பொறுத்து வேறுபடலாம். உதாரணமாக, வாழ்வாதாரப் பாதுகாப்பு, தமிழ் சமூகத்திற்குள் நிலவும் வர்க்க, சாதி, பால் சார்ந்த பாதுகாப்பின்மை, பாகுபாடு, அடக்குமுறை போன்ற காரணங்கள். அபிவிருத்தி மற்றும் சமூகப் பாதுகாப்பு தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வாக்குறுதிகள் சிங்கள மக்கள் மத்தியில் எடுபட்டது போன்று தமிழ் மக்களுக்கும் நம்பிக்கை ஊட்டியிருக்கலாம். வடக்குக் கிழக்கில் தமிழர்கள் முன்னரும் அரசாங்கக் கட்சிகளுக்கு வாக்களித்துள்ளார்கள். எனினும் தேசிய மக்கள் சக்திக்கு மிகவும் அதிகளவில் வெளிப்படையாக ஆதரவைக் காட்டி வாக்களித்துள்ளார்கள். ஜனாதிபதி அனுராவின் நம்பிக்கையூட்டும் பேச்சும் பொதுமக்களுடன் சுலபமாக நெருக்கமாகும் அவருடைய இயல்பும் தமிழ் மக்களையும் கவர்ந்துள்ளதாகவே தெரிகிறது.

ஆனால், ஆட்சிக்கு வந்ததும் பரவலான எதிர்பார்ப்புக்கு மாறாக அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பொருளாதாரக் கொள்கையை முற்றாக ஏற்று நடைமுறைப்படுத்தத் தொடங்கியது. இது உழைக்கும் மக்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. இந்த அம்சம் இங்கு ஆராயப்படும் நூலின் உள்ளடக்கம் சார்ந்ததல்ல என்பதால் இது பற்றி மேலும் இந்தக் கட்டுரையில் பேசுவதைத் தவிர்ப்போம்.

தேசியஇனப் பிரச்சனையைப் பொறுத்தவரை சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்க அரச உருவாக்கத்திற்குச் சாதகமான அரசியல் போக்கையே ஜே.வி.பி கடைப்பிடித்து வந்துள்ளளது. சமீபகாலங்களில் அந்த அமைப்பின் தலைவர்கள் பிரச்சார மேடைகளில் இனவாதம் பேசாவிட்டாலும் தனபாலசிங்கம் சொல்வதுபோல் தேசிய இனப்பிரச்சனையின் தீர்வைப் பொறுத்தவரை அவர்கள் சிங்களப் பேரினவாதத்தின் கைதிகளே. மேலும் அவர் சொல்வதுபோல் இந்தப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட சகல முயற்சிகளையும் கடுமையாக எதிர்த்த ஒரு கசப்பான வரலாற்றை ஜே.வி.பி கொண்டிருக்கிறது.

ஆயினும் தற்போது ஜனாதிபதியும் அரசாங்கங்கத் தலைவர்களும் இனவாதப் பேச்சைத் தவிர்த்து நாட்டின் எல்லா இனத்தவரும், மதத்தவரும் சமமான இலங்கையரே அதாவது சிறீலங்கர்களே எனும் கருத்தை பிரபலமாக்கி வருகிறார்கள். இது தாராள தனிமனித சமத்துவத்தின் அடிப்படையிலான குடியுரிமைக் கோட்பாடு சார்ந்த சுலோகம் போலவே கேட்கிறது.

இந்தப் பின்னணியிலேயே தற்போது அரசாங்கம் பேசும் ‘புதிய அரசியல் கலாச்சாரம்’, மற்றும் எதிர்பார்க்கப்படும் புதிய அரசியல் அமைப்பின் உள்ளடக்கங்கள் பற்றிய கேள்விகள் எழுகின்றன.
புதிய அரசியல் அமைப்பு இப்போதிருக்கும் அரசியல் அமைப்பிலிருந்து எந்த வழிகளில் வித்தியாசமாக, முன்னேற்றகரமானதாக இருக்கப்போகிறது எனும் கேள்வி அடிப்படையானது. இது விவாதிக்கப்படவேண்டிய பல அம்சங்களை அடக்கும் ஒரு பரந்த கேள்வி.

தனபாலசிங்கம் இரண்டு முக்கிய விடயங்களை வலியுறுத்துகிறார். ஒன்று, ஜனாதிபதி ஆட்சிமுறையின் ஒழிப்பு. மற்றது நாட்டின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில் தேசிய இனப்பிரச்சனைக்கு அதிகாரப் பகிர்வின் அடிப்படையிலான தீர்வு. இந்த இரண்டையும் உறுதியாகச் செயற்படுத்தக்கூடிய தலைவர்கள் இதுவரை இலங்கைக்குக் கிடைக்கவில்லை. அநுர திசநாயக்க அந்த வரிசையில் தானும் இணைய விரும்பமாட்டார் என நம்புவோமாக எனப் பதிவிடுகிறார்.

இந்த இரண்டையும் செயற்படுத்த வேண்டிய பெரும்பான்மையைப் பாராளுமன்றத்தில் அரசாங்கம் கொண்டுள்ளது. அதேபோல் இரண்டையும் செயற்படுத்தி வரலாறு படைக்கும் அரசியல் உறுதிப்பாடு (political will) அரசாங்கத்திடம் இருக்கிறதா? எனும் பெரிய கேள்விக்குக் காலம் பதில் சொல்லும்.

********************************************************************