ஜே.வி.பி.யின் பலம்பொருந்திய பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவுக்கு அண்மையில் லண்டனில் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் ஏற்பட்ட அனுபவங்கள்


டி.பி.எஸ். ஜெயராஜ்

ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தலைமையில் இன்று உள்ள ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) றோஹண விஜேவீர தாபித்த அதே ஜே.வி.பி. அல்ல. அது இனிமேலும் அரசியலில் தன்னெண்ணப்படி செயற்படக்கூடிய ஒரு கட்சியாக இல்லை. தேசிய மக்கள் சக்தி என்ற கூட்டணியின் பிரதான அங்கத்துவ கட்சியாக ஜே.வி.பி. இருக்கிறது. தேசிய மக்கள் சக்தியின் அங்கமாக தேர்தல்களில் போட்டியிட்ட போதிலும், அது முக்கியமான முடிவுகளை தானாகவே எடுத்து செல்வாக்குச் செலுத்திக் கொண்டிருக்கிறது. ஜனாதிபதி திசநாயக்க ஜே.வி.பி.யினதும் அதன் தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினதும் தலைவராக இருக்கிறார்.

2024 செப்டெம்பர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற தேசிய மக்கள் சக்தி அதையடுத்து இரு மாதங்களில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பாராளுமன்றத்தின் 225 ஆசனங்களில் 159 ஆசனங்களைக் கைப்பற்றியது. 2025 மே மாதத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையான பிரதேச சபைகள், நகரசபைகள் மற்றும் மாநகரசபைகளில் முதலாவதாக வந்தது. மெச்சத்தக்க அந்த வெற்றிகளை பெற்ற போதிலும், பிரசாரம் என்பது சொற்பகட்டான கவிதை என்பதையும் ஆட்சிமுறை என்பது கடினமான உரைநடை என்பதையும் ஜே.வி.பி. அனுபவத்தின் ஊடாக கற்றுவருகின்றது

இந்த அடிப்படையில் ஜே.வி.பி. பழையவற்றை மறப்பதும் புதியவற்றைக் கற்பதுமான ஒரு செயன்முறைக்கு உள்ளாகியிருக்கிறது. தேர்தல்களுக்கு முன்னர் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் பலவற்றை அது கைவிட்டுவிட்டது. கொள்கை அடிப்படையிலும் கூட அது மறுதலையாக திரும்பியிருக்கிறது. பொருளாதாரக் கொள்கையை பொறுத்தவரை, சர்வதேச நாணய நிதியத்துடன் ஜே.வி.பி. கொண்டிருக்கும் நட்பிணக்கமான புரிந்துணர்வும் வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவுடனான நெருக்கமும் இதற்கு சிறந்த உதாரணங்களாகும்.

இனத்துவ உறவுகளை பொறுத்தவரையிலும் ஜே.வி.பி.யிடம் முக்கியமான இன்னொரு மாற்றத்தைக் காணக்கூடியதாக இருக்கிறது. அது ‘ சிங்கள சோசலிஸ்ட் ‘ என்ற தோற்றப்பாட்டைக் கைவிட்டு சிறுபான்மைச் சமூகங்களான இலங்கைத் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் மலையகத் தமிழிர்களுக்கு நேசக்கரம் நீட்டுகிறது. இதன் விளைவாக ஜே.வி.பி. பெரும் பயனடைந்திருக்கிறது. பாராளுமன்றத்தில் ஒரு கணிசமான எண்ணிக்கையில் தமிழ், முஸ்லிம் உறுப்பினர்களை ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கொண்டிருக்கிறது. தமிழர்கள், முஸ்லிம்கள் மத்தியில் ஜனாதிபதி திசநாயக்க பெருமளவுக்கு செல்வாக்கைக் கொண்டவராகவும் விளங்குகிறார்.

மாற்றத்தின் சோதனைகள்

ஆனால், ஜே.வி.பி. தன்னை மாற்றிக்கொள்ள முயற்சிக்கின்றபோது மாற்றத்தின் சோதனைகளை எதிர்கொள்கின்றது. ஜே.வி.பி. தன்னை வித்தியாசமானதாக காண்பிக்க முயற்சிக்கின்ற அதேவேளை, அதன் கடந்த காலம் சந்தேகத்துடன் நோக்கப்படுகின்றது. இதை ஜே.வி.பி.க்கும் இலங்கை தமிழர்களுக்கும் இடையிலான உறவுகளைப் பொறுத்தவரை மிகவும் தெளிவாகக் காணக்கூடியதாக இருக்கிறது. தேர்தல்களில் மட்டக்களப்பு மாவட்டத்தை தவிர, வடக்கு, கிழக்கின் தமிழர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட மாவடடங்களில் ஜே.வி.பி. குறிப்பிடத்த்க அளவில் வெற்றிகளை பெற்றிருக்கிறது. வடக்கில் கட்சியின் செயற்பாட்டை அதன் தலைவர்கள் தங்களது தேர்தல் வெற்றி என்ற மகுடத்தின் அணிகலன் என்று வர்ணிக்கிறார்கள்.

என்றாலும், இலங்கை தமிழர்கள் விடயத்தில் ஜே வி.பி. அதன் வெற்றிகளை வலுப்படுத்தி முன்னேற முடியாமல் இருக்கிறது. பாரம்பரிய தமிழ் தேசியவாத கட்சிகள் கடந்த காலத்தை நினைவுபடுத்துவதன் மூலமாக ஜே.வி.பி. தொடர்பில் தமிழர்கள் மத்தியில் அச்சத்தையும் சந்தேகத்தையும் மீண்டும் ஏற்படுத்துகின்றன. போரை ஆதரித்து ஊக்கப்படுத்தியதில் ஜே.வி.பி. வகித்த பாத்திரம், வடக்கு– கிழக்கு இணைப்பு, சுனாமி நிவாரணக் கட்டமைப்பு ஆகியவற்றை முறியடித்த செயல்கள் முக்கியமாக சுட்டிக் காட்டப்படுகின்றன.

கடந்த காலத்தை மறப்பதிலும் இலங்கை தமிழர்களுடன் புதிய எதிர்காலம் ஒன்றை அமைத்துக் கொள்வதிலும் ஜே.வி.பி. எதிர்நோக்கும் சிக்கலை அதன் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவுக்கு ஐக்கிய இராச்சியத்தில் அண்மையில் ஏற்பட்ட அனுபவம் தெளிவாக விளக்குகிறது. ரில்வின் ஐயா என்றும் லொக்கு ஐயா என்றும் அறியப்படும் ஜே.வி.பி.யின் பலம்பொருந்திய பொதுச் செயலாளர் கடந்த வாரம் பிரிட்டனுக்கு குறுகியகால விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இலங்கை தமிழர்களுடன் உறவுகளைச் சீர்செய்து கொண்டு பிரகாசமான சிறந்த ஒரு எதிர்காலத்தை நோக்கி முன்னேறிச் செல்வதில் ஜே.வி.பி. எதிர்நோக்கும் திரிசங்கு நிலையை லண்டனில் ரில்வினுக்கு நடந்தவை தெளிவாகக் காட்டுகின்றன.

மூத்த தலைவர்

71 வயதான ரில்வின் ஜே.வி.பி.யின் மிகவும் மூத்த தலைவர்களில் ஒருவராவார். அவர் 1978 ஆம் ஆண்டில் கட்சியில் இணைந்தார். 1987 –89 கிளர்ச்சிக்காலத்தில் அவர் களுத்துறை மாவட்டத்தின் ஜே.வி.பி. தலைவராக இருந்தார்.இலங்கை பயங்கரவாதத்துக்கு எதிராக இலங்கை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளில் கொல்லப்படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய ஜே.வி.பி.யின் உயர்மட்டத் தலைவர்களில் ரில்வினும் ஒருவர். ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சிக்கு பின்னரான மீள் எழுச்சியில் 1995 ஆம் ஆண்டில் அவர் கட்சியின் பொதுச்செயலாளராக தெரிவுசெய்யப்பட்டார். கடந்த 30 வருடங்களாக பொதுச்செயலாளராக இருந்துவரும் அவர் கட்சிக்குள் சகல வல்லமையும் பொருந்திய தலைவராக கருதப்படுகிறார்.

ஜே.வி.பியினதும் தேசிய மக்கள் சக்தியினதும் தலைவராக ஜனாதிபதி திசநாயக்க இருக்கிறார். நடைமுறையில் சமாந்தரமான அதிகார மையம் ஒன்று இருக்கிறது. அது ஜே.வி.பி.யின் நீண்டகால பொதுச்செயலாளர் ரில்வினைத் தவிர வேறுயாருமில்லை. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மிகவும் பெருமளவுக்கு ஜே.வி.பி.யினால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆறு உறுப்பினர்களைக் கொண்ட ஜே.வி.பியின் அரசியற்குழுவும் 28 உறுப்பினர்களைக் கொண்ட மத்திய குழுவும் பத்தரமுல்ல, பெலவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் கிரமமாக கூடுகின்றன. ரில்வின் அரசியற்குழுவிலும் மத்திய குழுவிலும் மிகவும் செல்வாக்குடையவராக விளங்குகிறார். பெலவத்தையில் இருந்து ரில்வின் தான் இந்த அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் என்று எதிர்க்கட்சிகளின் அரசியல்வாதிகள் அடிக்கடி கூறுவார்கள்.

அல்பேர்ட்டன் உயர் பாடசாலை

ஜே.வி.பி.யின் லண்டன் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 36 வது கார்த்திகை வீரர்கள் தின நாகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொள்வதற்காக ரில்வின் சில்வா ஐக்கிய இராச்சியத்துக்கு சென்றார். லண்டன் வெம்பிளியில் உள்ள அல்பேர்ட்டன் உயர் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை அந்த நிகழ்வு நடைபெற்றது. சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த ஜே.வி.பி. உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், நலன்விரும்பிகள் என்று பெரும் எணாணிக்கையானோர் அங்கு கூடினர்.

முன்னைய நாட்களில், ஐக்கிய இராச்சியத்துக்கு விஜயம் செய்த இலங்கை அரசின் தலைவர்களுக்கும் முக்கிய அமைச்சர்களுக்கும் எதிராக புலம்பெயர்ந்த இலங்கை தமிழ்ச் சமூகத்தின் உறுப்பினர்கள் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்தவந்திருக்கிறார்கள். இந்த நடைமுறை 2024 ஆம் ஆண்டில் திசநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவியேற்ற பாறகு இல்லாமல் போனது. சுகாதார அமைச்சர் வைத்தியக்கலாநிதி நாளிந்த ஜயதிஸ்ஸ, நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார, பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் ஆகியோர் சில வாரங்களுக்கு முன்னர் லண்டன் சென்றிருந்தனர். அப்போது அவர்களுக்கு எதிராக எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இடம்பெறவில்லை.

இத்தகைய சூழ்நிலைகளில் ஜே.வி.பி.யின் நிகழ்வை ஒழுங்கு செய்தவர்கள் எந்தவகையான குழப்பமும் ஏற்படும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. அது தவிர, அந்த நிகழ்வு ஜே.வி.பி.யின் ‘ மாவீரர்களை ‘ நினைவு கூருவதற்காகவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கையில் மாவீரர் தின நிகழ்வுகளில் மக்கள் இறந்த விடுதலை புலிகள் இயக்கப் போராளிகளை நினைவுகூருவதற்கு இருந்த கட்டுப்பாடுகளை ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீக்கியிருந்தது. அதனால் ஜே.வி.பி.யின் நினைவேந்தல் நிகழ்வில் புலிகளைச் சேர்ந்தவர்களோ அல்லது புலிகளுக்கு ஆதரவான சக்திகளோ குழப்பத்தை ஏற்படுத்துவார்கள் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. புலம்பெபயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள முக்கியமான எந்தவொரு அமைப்பும் ஜே.வி.பி. யின் நிகழ்வுக்கு எதிராகவோ அல்லது ரில்வின் சில்வாவுக்கு எதிராகவா அறிக்கை எதையும் வெளியிடவுமில்லை.

அதனால் அல்பேர்ட்டன் உயர் பாடசாலைக்கு வெளியே நூறுக்கும் அதிகமான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுகூடி துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து பதாகைகளையும் ஏந்திய வண்ணம் சுலோகங்களை எழுப்பிபோது ஜே.வி.பி. நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். பெரும்பாலான துண்டுப்பிரசுரங்கள், பதாகைகள், சுலோகங்கள் இலங்கை ஆயுதப்படைகளுக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையிலான போரின்போது ஜே.வி.பி.யின் நடநத்தைகளை கண்டனம் செய்பவையாக இருந்தன. ஆயுதப்படைகளுக்கு உதவியதாகவும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை சீர்குலைத்ததாகவும் ஜே.வி.பி. மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

எதிர்பார்த்திராத ஆர்ப்பாட்டம்

அல்பேர்ட்டன் பாடசாலை வளாகத்தில் கடமையில் இருந்த பொலிசார் எதிர்பார்த்திராத ஆர்ப்பாட்டத்தைக் கண்டவுடன் வன்முறை மூளக்கூடும் என்று சந்தேகித்து உடனடியாக தங்களது உயரதிகாரிகளுடன் தொடர்புகொண்டு பொலிசாரின் எண்ணிக்கையை அதிகரித்தனர்.ரில்வின் சில்வா பயணம் செய்த மேர்சிடெஸ் – பென்ஸ் கார் பாடசாலை வாயிலில் பிவேசித்தபோது அதை வழிமறித்து பல இளைஞர்கள் ‘ இலங்கை அரசாங்கம், பயங்கரவாத அரசாங்கம், நிறுத்து, நிறுத்து இனப்படுகொலையை ‘ என்று சத்தமிட்டனர்.சிலர் காரை பின்னுக்குத் தள்ளுவதற்கு முயன்றனர்.

உடனடியாக செயலில் இறங்கிய மெட்ரோபோலிட்டன் பொலிசார் குழப்பக்காரர்களை தள்ளி வெளியில் அனுப்பினர்.வாகனத்தை மறித்து நின்றவர்களுடன் இணைந்துகொள்வதற்கு முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்களையும் பொலிசார் தடுத்தனர். சிறிய எண்ணிக்கையான ஆர்ப்பாட்டக்காரர்கள் ரில்வின் சில்வாவின் வாகனத்தை மறிப்பதற்கு முயற்சித்த போதிலும், பெரும்பான்மையான ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாகைகளை ஏந்திய வண்ணம் சுலோகங்களை எழுப்பிக்கொண்டு நடைபாதையில் தங்களது போராட்டத்தை நடத்தினர்.

லண்டன் பொலிஸ் எடுத்த உறுதியான நடவடிக்கைகள் காரணமாக ரில்வின் சில்வாவின் வாகனம் அதற்கு துணையாக வந்த வாகனங்களுடன் சேர்ந்து ஆர்ப்பாடடத்தைக் கடந்து செல்லக்கூடியதாக இருந்தது. பதற்றமடைந்தவராக தனது காரில் இருந்து இறங்கிய ரில்வினை ஆரவாரம் செய்து வரவேற்ற ஜே.வி.பி. ஆதரவாளர்கள் பகிடிவிட்டு அந்த சம்பவத்தை அலட்சியம் செய்தனர். பிறகு ரில்வின் உள்ளே சென்றபோது மண்டபத்தில் கூடியிருந்தோரினால் வரவேற்கப்பட்டார். சில நிமிடங்களுக்குள்ளாகவே ரில்வின தனது வழமையான இனிய சுபாவத்துக்கு திரும்பிவிட்டார்.

நினைவேந்தல் நிகழ்வு

நினைவேந்தல் நிகழ்வு ஒழுங்காக நடைபெற்றது. அதை ஒரு இளைஞன் சிங்களத்திலும் சிறுமி ஒருத்தி தமிழிலும் தொகுத்து வழங்கினர். சிங்களத்திலும் தமிழிலும் உரைகளும் பாடல்களும் இடம்பெற்றன. போரில் கொல்லப்பட்ட சகலரையும் நினைவுகூரும் வகையில் எழுதப்பட்ட தமிழ்க்கவிதை ஒன்றை தமிழ் இளைஞர் ஒருவர் வாசித்தார். நிகழ்வில் உரையாற்றிய சிங்களப் பெண்மணி ஒருவர் யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்தில் தனது அனுபவங்களை விபரித்தார்.

நிகழ்வில் மிகவும் சிறப்பான அம்சமாக ரில்வின் தோழரின் உரையே அமைந்தது சுமார் ஒரு மணி நேரம் அவர் பேசினார். அவர் தனது உரையில் ஜே.வி.பி.யினதும் அதன் தாபகத் தலைவர் றோஹண விஜேவீரவினதும் வரலாற்றை சுருக்கமாக நினைவு மீட்டினார். ஜனாதிபதிகள் ஜே.ஆர். ஜெயவர்தன, ரணசிங்க பிரேமதாச ஆகியோரின் கீழான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட கைதுகள், சித்திரவதைகள் மற்றும் படுகொலைகளில் ஆயிரக்கணக்கான ஜே.வி.பி. போராளிகளும் ஆதரவாளர்களும் கொல்லப்ட்ட 1987 — 1989 காலப்பகுதியின் இருண்ட நாட்கள் பற்றியும் ரில்வின் பேசினார். ஜே.வி.பி.யின் குறிப்பிடத்தக்க அரசியல் மறுமலர்ச்சி குறிப்பிட்ட அவர் 2024 தேர்தல்களில் கட்சி அதிகாரத்துக்கு வந்த கதையையும் கூறினார். அரசாங்கம் செய்ய முயற்சிக்கின்ற காரியங்களையும் அவை தொடர்பில் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளையும் பற்றியும் அவர் பேசினார். நிகழ்வில் கலந்துகொண்ட ஐவருடன் தொடர்புகொண்டு நான் பேசினேன். அவர்கள் அனைவரும் ரில்வினின் உரையை பாராட்டினர்.

அல்பேர்ட்டன் உயர் பாடசாலைக்கு வெளியே இடம்பெற்றதைப் போன்ற ஆர்ப்பாட்டங்களுக்கு பிறகு தமிழ் வாய்ச்சொல் வீரர்கள் சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொள்வது கடந்த காலத்தில் வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. ஆர்ப்பாட்டங்கள் மாபெரும் வெற்றியாக அமைந்ததாக காண்பிக்கப்படுவதும் ஆர்ப்பாட்டங்களின் இலக்காக இருந்தவர்களை இழிவுபடுத்தித் தாக்குதல் தொடுப்பதும் வழமையாகும். அத்தகைய ஆர்ப்பாட்டங்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள் பொதுவில் வழமையாக இருந்துவிடுவர். ஆனால், இந்த தடவை அந்த கடந்தகால போக்கில் ஒரு மாறுதலைக் காணக்கூடியதாக இருந்தது.

ஆர்ப்பாட்டம் மீது கண்டனம்

ரில்வினுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தைக் கண்டித்து பல தமிழர்கள் சமூக ஊடகங்களில் பதிவுகளைச் செய்தார்கள். இவ்வாறு கண்டனம் செய்தவர்களில் பலர் இலங்கையில் இருப்பவர்களாக தெரிகிறது. இலங்கையில் வெளியாகின்ற சில தமிழ்ப்பத்திரிகைகளும் கூட கண்டனத்துக்கு இலக்காகின. ஆர்ப்பாட்டம் மீதான இந்த கண்டனக்கள் இரு அடிப்படையான அம்சங்களைக் கொண்டவையாக இருந்தன.

முதலாவதாக, ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அண்மையில்தான் ஒரு வருடத்தை நிறைவு செய்திருக்கிறது. தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் சிலவற்றை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்ற போதிலும், அது தமிழர்களுக்கு எதிரான எந்தவொரு பெரியளவிலான நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. அதனால் அரசாங்கத்துக்கு மேலும் காலஅவகாசத்தைக் கொடுக்க வேணடும். அத்துடன் ரில்வினுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் இந்த சந்தர்ப்பத்தில் காலப்பொருத்தமற்றதும் அநாவசியமானதுமாகும்.

இரண்டாவதாக, புலம்பெயர் தமிழர்களின் இத்தகைய ஆர்ப்பாட்டம் அர்த்தமற்றதாகும். பகைமையான ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய தேவை எதுவும் இருக்கவில்லை. வெம்பிளி ஆர்ப்பாட்டத்தைப் போன்ற புலம்பெயர் தமிழர்களின் கோணங்கித்தனமான நடவடிக்கைகள் பொதுவில் இலங்கையிலும குறிப்பாக வடக்கு, கிழக்கிலும் வாழ்கின்ற தமிழர்களுக்கு எந்த பயனையும் தரப்போவதில்லை, உதவப்போவதுமில்லை. மேலும், பிரதான தமிழ் அரசியல் கட்சியான இலங்கை தமிழரசு கட்சி ஜனாதிபதி திசநாயக்கவை சந்திப்பதற்கு நேரம் கேட்டு அதைப் பெற்றுமிருந்தது. தமிழரசு கட்சியுடனான பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி புதிய அரசியலமைப்பு ஒன்று தொடர்பில் கலந்தாலோசனைகளை தொடங்கப்போவதாக உறுதியளித்திருந்தார். மாகாணசபை தேர்தல்கள் விரைவில் நடத்தப்படும் என்றும் அவர் உத்தரவாதம் வழங்கினார்.

ரில்வினுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் மீதான தமிழர்களின் பெருமளவு கண்டனங்கள் வழமைக்கு மாறானவையாகும். இந்த கண்டனங்களுக்கு எதிரான பிரதிபலிப்புகளையும் காணக்கூடியதாக இருந்தது. துரோகிகள், அரசாங்கத்தின் கைக்கூலிகள், றோவின் ( இந்திய புலனாய்வுப் பிரிவு ) முகவர்கள் என்ற வழமையான பட்டஞ்சூட்டல்களும் இடம்பெற்றன. ஆனால் அவை பொருட்படுத்தக்கூடியவையாக இருக்கவில்லை. அறிவியல்பூர்வமான எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை என்றாலும் மேலோட்டமாக நோக்கும்போது ஆர்ப்பாட்டத்தைக் கண்டனம் செய்த தமிழ்ச் சமூக ஊடகப்பதிவுகளே அதை ஆதரித்த பதிவுகளை விடவும் அதிகமானவையாக இருந்தன.

விமல் வீரவன்ச

ஜே.வி.பி.யின் முன்னாள் முக்கியஸ்தரும் தற்போதைய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச தனது பழைய தோழர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்த முயற்சித்தார். ஆர்ப்பாட்டம் ஜே.வி.பி.யினால் ‘ திட்டமிடப்பட்ட நாடகமாக ‘ இருக்கக்கூடும் என்று அவர் கூறினார். வீரவன்சவின் வக்கிரத்தனமான தர்க்கம் ரில்வினுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒரு ஏமாற்று நடவடிக்கை என்று மறைமுகமாக குறிப்பிடுவதாக அமைந்தது. விடுதலை புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழ்ச் சமூகம் ஜே.வி.பி. அரசாங்கத்துக்கு எதிரானதாக இருக்கின்ற அதேவேளை, அரசாங்கம் உண்மையில் அந்த சமூகத்தின் ஆணைகளின் பிரகாரம் செயற்படுகிறது என்ற ஒரு எண்ணத்தை உருவாக்குவதையே வீரவன்சவின் கருத்து நோக்கமாக கொண்டிருந்தது. புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள விடுதலை புலாகளுக்கு ஆதரவான சக்திகள் வீரவன்சவின் குற்றச்சாட்டில் இருந்து ஒரு சாடைக்குறிப்பை எடுத்துக்கொண்டு ரில்வினுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஜே.வி.பி.க்கு எதிரான அரசியல் கட்சிகளின் சிங்கள ஆதரவாளர்களினால் நடத்தப்பட்டது என்று கதையைப் பரப்பின. சில சிங்களவர்கள் ஆர்ப்பாட்டத்துக்கு நிதியுதவி செய்ததாகவும் விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் போன்று பாசாங்கு செய்து கொண்டு சில தமிழர்களும் சிக்களவர்களும் கூலிப்படைகளாகச் செயற்பட்டதாகவும் கூறப்பட்டது.

இரண்டு ‘லிங்கங்கள்

இதில் அறவே உண்மையில்லை. லண்டனில் உள்ள விடயமறிந்த சில வட்டாரங்களுடன் தொடர்புகொண்டு நான் வினவினேன். எனக்கு கிடைத்த தகவல்களின் பிரகாரம் நியூயோர்க்கில் இருந்து இயங்கும் ” பிரதமர் ” விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தலைமையிலான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துடன் முன்னர் சம்பந்தப்பட்டிருந்த இருவரினாலேயே ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு ஆர்ப்பாட்டத்தில் எந்த சம்பந்தமும் இல்லை.’லிங்கம்’ என்று முடிவடையும் பெயர்களைக் கொண்ட இருவரே ஆர்ப்பாட்டத்தின் பிரதான ஏற்பாட்டாளர்கள்.

ஆர்ப்பாட்த்தில் கலந்து கொண்டவர்களில் பெருமறவானோர் இரு பரந்த வகைகளைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். தமிழர் ஒருங்கிணைப்புக்குழு என்று அறியப்படும் அமைப்புடன் தொடர்புடைய இளைஞர்களை உள்ளடக்கியது ஒரு வகை. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுடன் தொடர்புடைய ஆர்ப்பாட்டக்காரர்களில் பலர் ஐரோப்பா கண்டத்தில் இருந்து வந்தவர்கள் பொதுவில் அந்த இளைஞர்கள் மேற்குலகில் பிறந்தவர்களாக அல்லது குழந்தைகளாக மேற்குலகிற்கு வந்து ஐரோப்பிய நாடுகளில் வளர்ந்தவர்கள். இரண்டாவது வகையினர் ஐக்கிய இராச்சியத்தில் அகதி அந்தஸ்துக்கு விண்ணப்பித்துவிட்டு இருப்பவர்களை உள்ளடக்கியது. அவர்களது அகதி அந்தஸ்துக் கோரிக்கை வலுவானதாக இல்லை. அத்துடன் பிரிட்டனில் தற்போது நிலவுகின்ற குடியேற்றவாசிகளுக்கு எதிரான மனநிலையில் இவர்களின் அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பியனுப்பப்படக்கூடிய சாத்தியமும் இருக்கிறது. அகதிக் கோரிக்கை வழக்குகளைக் கையாளும் பழிபாவத்துக்கு அஞ்சாத சில வழக்கறிஞர்கள் இலங்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுமாறு இந்த துரதிர்ஷ்டவசமான இளைஞர்களை தூண்டிவிடுகிறார்கள். இளைஞர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு அவர்கள் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டால் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற காரணத்தினால் ஆபத்தை எதிர்நோக்க வேண்டிவரும் என்று இந்த வழக்கறிஞர்கள் வாதிடமுடியும்


விடுதலை புலிகளின் கொடி

ரில்வினுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் விடுதலை புலிகளின் கொடிகளை வைத்திருந்தது இன்னொரு புதிரான அம்சமாகும்.விடுதலை புலிகள் இயக்கம் ஐக்கிய இராச்சியத்திலும் சுமார் 25 ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் ஒரு பயங்கரவாத அமைப்பாக தடை செய்யப்பட்டிருக்கிறது ஆனால், விடுதலை புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்கள் தொடர்ந்தும் அவற்றின் நிகழாவுகளிலும் ஆர்ப்பாட்டங்களிலும் புலிகளின் கொடிகளை பயன்படுத்துகிறார்கள். விடுதலை புலிகளின் உண்மையான கொடியில் இருக்கும் இரு துப்பாக்கிகளை அகற்றிவிட்டு அதை தமிழீழ தேசியக்கொடி என்று பெ்ய்யாகக் காட்டுகிறார்கள். விடுதலை புலிகள் மாத்திரமே தடைசெய்யப்பட்டிருக்கிறார்கள் என்றும் தமிழீழம் தடைசெய்யப்டவில்லை என்றும் கூறுகிறார்கள். இந்த ஏமாற்றின் காரணமாக புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தில் இருக்கும் புலிகளுக்கு ஆதரவான சக்திகள் தண்டனைக்கு ஆளாக வேண்டிவருமே என்ற பயமில்லாமல் அந்த கொடிகளை பறக்க விடுகிறார்கள். ஆனால், ரில்வினுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வைத்திருந்த கொடிகளில் விடுதலை புலிகளின் உண்மையான கொடிகளில் இருக்கும் துப்பாக்கிகளை காணக்கூடியதாக இருந்தது.

ரில்வினுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்துக்கு இலங்கையிலும் வெளிநாடுகளிலும் ஊடகங்களில் பரந்தளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதன் மூலமாக் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள தமிழர்கள் எதிர்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தார்கள் என்ற எண்ணம் உருவாக்கப்பட்டது. ஆனால், உண்மையில் ஐக்கிய இராச்சியத்தில் வாழும் ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்களில் ஒரு சில நூறு பேர் மாத்திரமே ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தை பெரும் எண்ணிக்கையான தமிழ் மக்கள் கண்டித்தார்கள் என்பதற்கு போதிய ஊடக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.


ரில்வின் சந்தித்த தமிழர் தூதுக்குழு

ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு இரண்டு நாட்கள் கழித்து நவம்பர் 25 ஆம் திகதி ஜே.வி.பி.யின் செயலாளருக்கும் புலம்பெயர் இலங்கைத் தமிழர் அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்திய நான்கு உறுப்பினர்களைக் கொண்ட தூதுக்குழுவுக்கும் இடையில் அமைதியான சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. கணக்காளரும் ஈழப்பதீஸ்வரர் சிவன் கோவிலின் பிரதம தர்மகர்த்தாவுமான இராஜசிங்கம் ஜெயதேவன், லண்டனை தளமாகக்கொண்ட தமிழ் ஒலிபரப்பு மற்றும் தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தை (TBC Radio) இயக்குபவரான வீரையா ராம்ராஜ், தமிழ் தகவல் மையத்தின் பணிப்பாளரான சார்ள்ஸ் அந்தனிதாஸ் மற்றும் சுயாதீன ஆய்வாளரான வி. சிவலிங்கம் ஆகியோரே அந்த நான்கு பேருமாவர்.

அந்த தூதுக்குழு ரில்வின் சில்வாவுடன் பயனுறுதியுடைய இரு மணி நேர பேச்சுவார்த்தையை நடத்தியது. பல்வேறு விடயங்கள் விரிவாக ஆராயப்படன. ரில்வின் மிகவும் மனந்திறந்து பேசினார். அந்த தூதுக்குழுவில் ஒருவர் ரில்வினை பதினைந்து வருடங்களுக்கு முன்னரும் சந்தித்திருந்தார். அண்மைய சந்திப்புக்கு பிறகு என்னுடன் பேசிய அவர் ரில்வினில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் காணக்கூடியதாக இருப்பது உற்சாகம் தருவதாக இருக்கிறது என்று கூறினார். ” பதினைந்து வருடங்களுக்கு முன்னரான அந்த சந்திப்பில் ரில்வின் மிகவும் கடுமையானவராகவும் விட்டுக்கொடுக்காதவர்கவும் இருந்தார். ஆனால் இந்த சந்திப்பில் அவர் மிகவும் மென்மையாகவும் நெகிழ்ச்சித்தன்மையுடன் மற்றவர்களின் கருத்துக்களைை கேட்பதற்கு தயாரானவராகவும் இருந்தார்” என்று அவர் கூறினார்.

இலங்கையின் இனப்பிளவின இரு மருங்கிலும் உள்ளவர்கள் மத்தியில் தீவிரவாதப் போக்கு மீண்டும் தோன்றிவருவது, அண்மையில் திருகோணமலையில் புத்தர்சிலை தொடர்பாக மூண்ட சர்ச்சை, தொல்லியல் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், வனத் திணைக்களம் போன்ற அரசாங்க நிறுவனங்கள் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்களை கையக்கப்படுத்துவதும் நடத்தைகள், மாகாண சபைகளின் எதிர்காலம் என்று பல்வேறு விடயங்கள் சந்திப்பில் ஆராயப்பட்டன.

முற்போக்கான அம்சங்களுடன் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்கிற அதேவேளை தற்போது இருக்கின்ற மாகாணசபை ஆட்சிமுறை தொடர்ந்தும் பேணப்பட்டு பலப்படுத்தப்ட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படுவதற்கு முன்னதாக மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். புதிய அரசியலமைப்புக்கு முன்னதாக அந்த தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பதில் ரில்வினுக்கு முழுமையான இணக்கம் இருக்கிறது. ஆனால், தேர்தல்களுக்கான திடடவடடமான காலவரையறையை கூறுவதில் அவர் நழுவல் தன்மையுடன் நடந்து கொண்டார்.


பொதுவான எதிர்காலம்

வெளிநாட்டில் வாழும் இலங்கை தமிழர்கள் அமைப்பைச் ( Orgabization of Non – resident Tamils of Sri Lanka ) தூதுக்குழு ரில்வின் சில்வாவுடனான சந்திப்பு குறித்து திருப்தி தெரிவித்தது. ” இலங்கை அதன் சமூகங்கள் வேதனையும் சந்தேகமும் பழைய நினைவுகளும் கொண்ட வெவ்வேறு உலகங்களில் வாழ்வதன் மூலம் முன்னேற்றமடைய முடியாது. வெவ்வேறான கடந்த காலத்தையல்ல, பொதுவான ஒரு எதிர்காலத்தையே நாம் கட்டியெழுப்ப வேண்டும் ” என்று ரில்வின் கூறியபோது மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சி தங்களுக்கு ஏற்பட்டதாக தூதுக்குழுவின் ஒரு உறுப்பினர் என்னிடம் கூறினார். என்றாலும் ஜாக்கிரதையுடன் கூடிய நம்பிக்கையுடன் மாத்திரமே நாம் தொடர முடியும் என்றும் அவர் கூறினார். ” எமது பேச்சுவார்த்தை நேர்மறையானதாக இருந்தது.ரில்வின் கூறிய பல விடயங்கள் நம்பிக்கை தருவதாக இருந்தன. ஆனால், அவையெல்லாம் வெறும் வார்த்தைகள் தானா அல்லது எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படுமா என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியிருக்கிறது” என்று அவர் குறிப்பிட்டார்.

இதுவே புலம்பெயர் இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் பிரிவுகளுடனான ரில்வினின் அனுபவங்களாகும். ஒரு பிரிவு கடுமையான பகைமையை வெளிப்படுத்தி பிரசித்தி தேடிக்கொள்கிறது. மற்றைய பிரிவு நெகிழ்ச்சித் தன்மையுடன் அர்த்தமுடைய பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தயாராக இருக்கிறது. ஐக்கிய இராச்சியத்தில் ரிர்வின் சில்வாவின் இந்த முரண்பாடான அனுபவங்கள் எதிர்மறையான கடந்த காலப் போக்கைக் கைவிட்டு சகல சமூகங்களுக்கும் பொதுவான எதிர்காலம் ஒன்றை அரவணைப்பதில் ஜே.வி.பி.க்கு இருக்கும் சிக்கல்களை வெளிக்காட்டுகின்றன.
_______________

D.B.S.Jeyaraj can be reached at dbsjeyaraj@yahoo.com

ஆங்கில மூலம்: டி. பி. எஸ். ஜெயராஜ் (Daily Mirror)

தமிழில்: வீரகத்தி தனபாலசிங்கம்

நன்றி: வீரகேசரி

******************************************************************************