ஜீவன் — சீதை திருமணம்: தமிழ்நாடு சிவகக்கை மாவட்டத்தின் திருப்பத்தூரில் நவம்பர் 23 காலை , கெட்டிமேளம் முழங்க ஜீவன் குமாரவேல் தொண்டமான், சீதை ஸ்ரீ நாச்சியார் இராமேஸ்வரனின் கழுத்தில் தாலியைக் கட்டினார்.

டி.பி.எஸ். ஜெயராஜ்

பகவான் ஸ்ரீசத்ய பாபாவின் 99 வது பிறந்ததினம் 2025 நவம்பர் 23 ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. அன்றைய தினம் உலகம் பூராவுமுள்ள கோடிக்கணக்கான பாபா பக்தர்களுக்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்த தினமாகும்.

ஆனால், நவம்பர் 23 இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் நுவரேலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானைப் பொறுத்தவரை, திருமணமாகாத ஆடவர் என்ற அந்தஸ்துக்கு அவர் விடைகொடுத்த தினமாக அமைந்து விட்டது.

ஜீவன் அல்லது ஜீவன் தொண்டமான் என்று அறியப்படும் ஜீவன் குமாரவேல் தொண்டமான் நவம்பர் 23 கெட்டிமேளம் முழங்க சீதை ஸ்ரீ நாச்சியார் இராமேஸ்வரனின் கழுத்தில் தாலியைக் கட்டினார். இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சிவகக்கை மாவட்டத்தின் திருப்பத்தூரில் அமைந்திருக்கும் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரி வளாகத்தில் காலை 10.15 மணிக்கும் 11.15 மணிக்கும் இடைப்பட்ட சுபமுகூர்த்த நேரத்தில் திருமணம் இடம்பெற்றது.

முன்னாள் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அவரது பாரியார் பேராசிரியை மைத்ரி விக்கிரமசிங்க, சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மற்றும் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் தலைவி பிரேமலதா விஜயகாந்த் உட்பட பெருந்திரளான பிரமுகர்கள் திருமண வைபவத்தில் கலந்து கொண்டனர்.

திருமண வரவேற்புபசாரம் நவம்பர் 28 ஆம் திகதி கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெறவிருக்கிறது. இன்னொரு வரவேற்புபசாரம் மலையகத்தில் கொட்டகலையில் நடைபெறும்.

ஆறுமுகமன் தொண்டமான் — இராஜலக்சுமி தொண்டமான் தம்பதியரின் புதல்வரான ஜீவன் தொண்டமான் 2020 ஆகஸ்ட் பொதுத்தேர்தலில் நுவரேலியா மாவட்டத்தில் இருந்து முதற்தடவையாக பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார். பிறகு அவர் இராஜாங்க அமைச்சராகவும் கபினெட் அமைச்சராகவும் பதவி வகித்தார். 2024 நவம்பர் பொதுத்தேர்தலில் அவர் மீண்டும் பாராளுமன்றத்துக்கு தெரிவானார்.

1994 நவம்பர் 9 ஆம் திகதி பிறந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரின் பிரமச்சரிய வாழ்வுக்கு முடிவுகட்டிய தினமாக நவம்பர் 23 ஞாயிற்றுக்கிழமை பதிவாகியிருக்கிறது.

ஜீவனின் மணமகள் சீதை ஸ்ரீ நாச்சியார் அல்லது சீதை அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் ( Royal College of Surgeons in Ireland -RCSI ) நான்காவது ஆண்டு மருத்துவ மாணவியாவார். அவர் என். இராமேஸ்வரன் — பிரியா இராமேஸ்வரன் தம்பதியரின் புதல்வியாவார்.

மணமகனின் குடும்பமும் மணமகளின் குடும்பமும் நீண்டகாலமாக ஒன்றுக்கு ஒன்று நன்கு தெரிந்தவையே. ஜீவனின் தாயார் இராஜலக்சுமி தொண்டமானின் விருப்பத்தின் பேரில் இந்த திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஜீவனின் தந்தையார் ஆறுமுகமனும் சீதையின் தந்தையார் இராமேஸ்வரனும் தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் ஏற்காட்டில் உள்ள மொன்ற்போர்ட் ஆண்கள் பாடசாலையின் பழைய மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பூட்டனார்கள் (Great Grandfathers)

மணமகனின் பூட்டனார்சௌமியமூர்த்தி தொண்டமானுக்கும் மணமகளின் பூட்டனார்என்.ரி.எஸ். ஆறுமுகம்பிள்ளைக்கும் இடையிலான நட்புறவுக் காலந்தொட்டு இரு குடும்பங்களும் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருக்கின்றன. தொண்டமானும் ஆறுமுகம்பிள்ளையும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

சௌமியமூர்த்தி தொண்டமானின் பூர்வீகக் கிராமம் ஆறுமுகம்பிள்ளையின் திருப்பத்தூர் கிராமத்தில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மூனாபுதூர் ஆகும். இரு பூட்டனார்களுமே இப்போது உயிருடன் இல்லை. ஆனால், இரு குடும்பங்களுக்கும் இடையிலான பிணைப்புகள் இரு பூட்டப்பிள்ளைகளினதும் திருமணத்துக்கு வழிவகுத்திருக்கிறது. திருமண அழைப்பிதழில் இரு பூட்டனார்
களுக்கும் வழங்கப்பட்ட பெருமைக்குரிய இடம் இதை தெளிவாக வெளிப்படுத்தியது.

மணமக்களின் பிறப்புக்களில் ஒரு சுவாரஸ்யமான அம்சம் இருக்கிறது. ஜீவனும் சீதையும் காரைக்குடியில் உள்ள சென். ஜோன்ஸ் மருத்துவ நிலையத்தில் வெவ்வேறு வருடக்களில் பிறந்தனர். இரு மகப்பேறுகளின்போதும் ஒரே மருத்துவரே தாய்மாரை கவனித்தார். அந்த மருத்துவமனையின் ஒரே அறையிலேயே இருவரதும் தாய்மார் மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்டனர்.

ஜீவனினதும் சீதையினதும் பூட்டனார்கள் தங்களது கிராமங்களை விட்டு வெளியேறி இரு வெவ்வேறு நாடுகளுக்குச் சென்று தங்களது துறைகளில் தங்களை வெற்றிகரமானவர்களாக நிறுவியது இரு குடும்பங்களுக்கும் இடையிலான இன்னொரு ஒற்றுமையாகும்.

தொண்டமானைப் பொறுத்தவரை, அவரது தந்தையார் கருப்பையா குமாரவேல் தொண்டமான் பிரிட்டிஷ் காலனியாதிக்க காலத்தில் இலங்கைக்கு வந்தார். கடுமையான உழைப்பினாலும் வர்த்தக மதிநுட்பத்தினாலும் முன்னேறிய அவர் றம்பொடையில் உள்ள வேவண்டன் உட்பட பல பெருந்தோட்டங்களின் உரிமையாளராகினார்.

அவரது மகன் சௌமியமூர்த்தி தொண்டமான் 1926 ஆம் ஆண்டால் மூனாபுதூரில் இருந்து தனது 13 வது வயதில் இலங்கைக்கு வந்தார். அவர் இலங்கையில் பலம்பொருந்திய ஒரு தொழிற்சங்கவாதியாகவும் அரசியல் தலைவராகவும் கபினெட் அமைச்சராகவும் உயர்ந்தார்.

என்.ரி.எஸ். ஆறுமுகம்பிள்ளை

என்.ரி.எஸ். ஆறுமுகம்பிள்ளையை பொறுத்தவரை, அவர் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் 1929 ஆம் ஆண்டில் மலாயா என்று அறியப்பட்ட மலேசியாவுக்கு சென்றார். அவர் அங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு மனை வணிகத்துறையில் வெற்றிகரமானவராக தன்னை நிறுவினார். நாளடைவில் ஆறுமுகம்பிள்ளை முக்கியமான நில உடைமையாளராகவும் பெருந்தோட்டக்களின் சொந்தக்காரராகவும் விளங்கினார். அவர் மலேசியாவில் பல ஆலயங்களையும் பாடசாலைகளையும் நிர்மாணிப்பதற்கு நிலத்தையும் பணத்தையும் நன்கொடையாக வழங்கி உதவினார்.

ஆறுமுகம்பிள்ளை சில வருடங்கள் மலேசிய இந்திய காங்கிரஸின் பினாங் மாநில தலைவராகவும் பதவி வகித்ததுடன் ‘ தமிழ் முரசு ‘ என்ற தினசரிப் பத்திரிகையையும் வெளியிட்டார். ‘டத்தோ ‘ என்ற பட்டம் வழங்கப்பட்டு மலேசியா அரசாங்கத்தினால் கௌரவிக்கப்பட்ட ஆறுமுகம்பிள்ளையின் பெயரில் பினாங்கில் வீதியொன்றும் ( ஜலங் ஆறுமுகம்பிள்ளை ) இருக்கிறது.

தனது சொந்த ஊரான திருப்பத்தூரில் ஆறுமுகம்பிள்ளை 1965 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக கல்லூரி ஒன்றையும் நிறுவினார். அதற்கு ஆறுமுகம்பிள்ளை சிதையம்மாள் கல்லூரி என்று அவர் பெயரிட்டார். தமிழ்நாடு காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழக பல்கலைக்கழகத்துடன் இணைந்ததாக சீதையம்மாள் கல்லூரி இயங்கிவருகிறது.

அதை தற்போது ஆறுமுகம்பிள்ளையின் பேரனும் ஜீவன் தொண்டமானின் மாமனாராக வந்திருப்பவருமான இராமேஸ்வரன் நிருவகித்துவருகிறார். ஜீவன் — சீதையின் திருமண வைபவம் சீதையம்மாள் கல்லூரி வளாகத்திலேயே நடைபெற்றது.

அரசியல் குடும்பங்கள்

‘ அரசியல் குடும்பக்களின் ‘ தோற்றமும் வளர்ச்சியும் இலங்கையில் பொதுவான நிகழ்வுப்போக்காக இருக்கிறது. கிழக்கில் அப்துல் மஜீதுகளில் இருந்து தெற்கில் யாப்பா அபேவர்தனாக்கள் வரை இலங்கையின் அரசியல் குடும்பங்களின் பட்டியலை நோக்கும்போது குடும்ப அரசியல் ஆதிக்கத்துக்கு இனத்துவம் ஒரு தடையல்ல என்பதை தெரிந்துகொள்ள முடியும்.

தொணடமான் குடும்பம் ‘ மலையகத் தமிழர்கள் ‘ என்று அழைக்கப்படுகின்ற இந்திய வம்சாவளி தமிழர்கள் மத்தியில் மிகவும் முக்கியமான அரசியல் குடும்பமாக விளங்குகிறது. ஜீவன் இந்த குடும்பத்தின் நான்காவது தலைமுறையைச் சேர்ந்தவர். தொண்டமான் குடும்பம் பொதுவில் இலங்கையினதும் குறிப்பாக மலையகத் தமிழர்களினதும் அரசியலில் முக்கியமான ஒரு பாத்திரத்தை தொடர்ந்து வகித்து வருகிறது.

சௌமியமூரத்தி தொண்டமான்

இந்த அரசியல் வம்சத்தின் தாபகர் சௌமியமூர்த்தி தொண்டமான் இலங்கையில் தோட்டத் தொழிலாளர்களை / மலையகத் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மிகப்பெரிய தொழிற்சங்கமாகவும் அரசியல் கட்சியாகவும் விளங்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கேள்விக்கிடமின்றிய தலைவராக பல தசாப்தங்களாக கோலோச்சினார். அவர் பல வருடங்களாக நியமன பாராளுமன்ற உறுப்பினராகவும் மக்களால் தெரிவு செயாயப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும் கபினெட் அமைச்சராகவும் இருந்துவந்தார்.

அவரது மகன் இராமநாதன் தொண்டமான் மத்திய மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டதுடன் மாகாண அமைச்சராகவும் பதவி வகித்தார்.

ஆறுமுகன் தொண்டமான்

சௌமியமூர்த்தியின் பேரனும் இராமநாதனின் மகனுமான ஆறுமுக ன் தொண்டமானும் முக்கியமான ஒரு அரசியல் தலைவராக விளங்கினார். அவர் நுவரேலியா மாவட்டத்தில் இருந்து 1994 ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆண்டுவரை தொடர்ச்சியாக பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக இருந்ததற்கு மேலதிகமாக கபினட் அமைச்சராகவும் ஆறுமுகன் பல வருடங்கள் பதவியில் இருந்தார்.

ஆறுமுகன் மகனான ஜீவன் தொண்டமான் 2020 ஆண்டில் தனது தந்தையாரின் மறைவையடுத்து பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். இராஜாங்க அமைச்சராகவும் கபினெட் அமைச்சராகவும் பதவிகளை வகித்த ஜீவன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக இருக்கிறார்.

ஆறுமுகன் மருமகன் ( சகோதரி ஆதிலக்சுமியின் மகன்) செந்தில் தொண்டமானும் அரசியலில் இருக்கிறார். முதலில் ஊவா மாகாண சபையில் ஒரு அமைச்சராக இருந்த அவர் ஒரு குறுகிய காலம் கிழக்கு மாகாண ஆளுநராக பதவி வகித்தார். அவர் தற்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக இருக்கிறார்.

சௌமியமூர்த்தி தொண்டமானின் இரு பூட்டப்பிள்ளைகள் ( மைத்துனர்கள்) தற்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு தலைமை தாங்கி வழிநடத்துகிறார்கள்.

ஆறுமுகன் தொண்டமான் தஞ்சாவூரைச் சேர்ந்த இராஜலக்சுமி நடராஜனை திருமணம் செய்தார். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள்..கோதை நாச்சியார், விஜயலக்சுமி என்ற இரு மூத்த பெண் பிள்ளைகளும் மருத்துவக்கல்வி கற்றவர்கள். அவர்கள் திருமணம் செய்து பிள்ளைகளும் இருக்கிறார்கள். இளையவரான ஜீவன் 1994 நவம்பர் 9 ஆம் திகதி பிறந்தார்.

கொழும்பு கேற்வே ஆரம்ப பாடசாலையில் பாலர் வகுப்பிலும் முதலாம் தரத்திலும் கல்வி கற்ற ஜீவன் தமிழ்நாடு சென்னையில் உள்ள சீமாட்டி ஆண்டாள் வெங்கட சப்பாராவ் பாடசாலையில் இரண்டாம் தரத்துக்கு சேர்ந்தார். சென்னை பாடசாலையில் 12 ஆம் தரம் வரை கல்விகற்ற ஜவன் ஒரு வருட காலத்துக்கு கோயம்புத்தூரில் உள்ள சின்மயா சர்வதேச வதிவிட பாடசாலைக்கு சென்றார்.

நோதம்ப்றியா பல்கலைக்கழகம்

அதற்கு பிறகு அவர் சட்ட இளமானி (LLB) பட்டப்படிப்புக்காக ஐக்கிய இராச்சியத்தின் நியூகாசிலில் உள்ள நோதம்ப்றியா பல்கலைக்கழஓத்தில் இணைந்துகொண்டார். 2017 ஆண்டில் சித்தியெய்திய அவர் லண்டனில் உள்ள சட்த்தரணிகள் அலுவலகத்தில் ( நாளடைவில் பார் அற் லோ பரீட்டைக்கு தோற்றும் நோக்கத்துடன்) சட்டத்துறைப் பயிற்சிக்காக சேர்ந்தார்.

சடடத்தரணியாக வரவேண்டும் என்பதே ஜீவனின் அபிலாசையாக இருந்தது. ஒரு கட்டத்தில் அவர் இலங்கை சட்டக்கல்லூரியில் இணைந்துகொள்ளும் நோக்கத்துடன் இலங்கை திரும்பினார். ஆனால், அவரை ‘ அப்பா’ ஆறுமுகன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இணைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுத்தினார். காங்கிரஸின் இளைஞர் பிரிவிற்கு பொறுப்பாக அவர் நியமிக்கப்பட்டார்.

இளைஞரான ஜீவன் மலையகத் தமிழர்களின் இளைய தலைமுறையினரின் அபிலாசைகளை புரிந்துகொண்டு அவர்களின் உணர்வுகளை மதித்துச் செயற்பட்டார். இது அவரை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வெற்றிகரமான இளந்தலைவராக மாற்றியது. மகன் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு தேர்தல்களில் போட்டியிட வேண்டும் என்றும் ஆறுமுகன் விரும்பினார். ஆனால், ஜீவன் அதை உறுதியாக மறுத்துவந்தார்.

அதிர்ச்சியான அனுபவம்

தந்தையார் ஆறுமுகன் 2020 மே மாதத்தில் மாரடைப்பு நோயினால் திடீரென்று மரணமடைந்ததன் விளைவாக ஜீவனின் வாழ்க்கையில் சடுதியான மாற்றம் ஏற்பட்டது. அது அவருக்கு ஒரு பெரிய அதிர்ச்சி அனுமவமாக இருந்தது. மாரடைப்பினால் தந்தை நிலைகுலைந்து வீழ்ந்தபோது ‘ ஜீவன் ‘ என்று அழைத்தார். அதுவே அவரது இறுதி வார்த்தை.

சம்பிரதாயத்தின் பிரகாரம் ஜீவன் தலையை மொட்டையடித்துக் கொண்டு தந்தையாருக்குரிய இறுதிக் கடன்களைச் செய்தார். மலையக மக்கள் மத்தியில் ஏற்பட்ட சோகம் ஆறுமுகன் தொடர்பில் ஊடகங்களில் சில பிரிவுகளினால் எதிர்மறையான ஒரு படிமத்தைக் காட்டினாலும், அவர் அந்த மக்கள் மத்தியில் கொண்டிருந்த செல்வாக்கை வெளிக்காட்டியது.

அதை தொடர்ந்து தனது தந்தையின் இடத்தை நிரப்ப ஜீவன் நுவரேலியா மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கட்சி, தொழிற்சங்கம், குடும்பம் மற்றும் நட்பு வட்டங்கள் விரும்பின. அவர்களின் விருப்பத்துக்கு அவர் இணங்கினார். 2020 ஜூனில் அவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளராக ஏகமனதாகத் தெரிவானார்.

காங்கிரஸ் 2020 ஆகஸ்ட் பொதுத் தேர்தலில் ராஜபக்சாக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பட்டியலில் இணைந்து போட்டியிட்டது.

நுவரேலியா பாராளுமன்ற உறுப்பினர்.

ஐந்து அடி , ஒன்பது அங்குல உயரமும் தென்னிந்திய நடிகர் சித்தார்த்தின் தோற்றத்தையும் கொண்ட ஜீவன் வாக்காளர்கள் மத்தியில் பெருமளவுக்கு செல்வாக்குடையவராக மாறினார். 2020 பாராளுமன்றத் தேர்தல் ஜீவன் தொண்டமானின் அக்கினிப்பரீட்சையாக அமைந்தது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேர்தல் பிரசாரங்களுக்கு அவரே தலைமைதாங்கினார். 109, 155 வாக்குகளைப் பெற்ற ஜீவன் நுவரேலியா மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவராக விளங்கினார்.

அன்று பாராளுமன்றத்தில் மிகவும் இளைய உறுப்பினராக இருந்த ஜீவன், கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தில் பெருந்தோட்ட வீடமைப்பு, சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

2022 ஆம் ஆண்டில் ‘ அறகலய ‘ போராட்டம் தீவிரமடையவே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோட்டாபய அரசாங்கத்தில் இருந்து வெளியேறியது. ரணில் விக்கிரமசிங்க முதலில் பிரதமராகவும் பிறகு ஜனாதிபதியாகவும் பதவியேற்றபோது முதலில் அவருக்கு ஆதரவு வழங்கிய கட்சிகளில் ஒன்றாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் விளங்கியது. அப்போது பாராளுமன்றத்தில் காங்கிரஸுக்கு இரு ஆசனங்களே ( ஜீவனும் மருதுபாண்டி இராமேஸ்வரனும்) இருந்தன.

இராஜாங்க அமைச்சர் பதவி ஜீவனுக்கு வழங்கப்பட்ட போதிலும் அதை ஏற்றுக் கொள்வதற்கு அவர் மறுத்துவிட்டார். பதிலாக கபினெட் அமைச்சராக வரவேண்டும் என்ற எதிர்பார்பில் அவர் நாட்களைக் கடத்தினார். அது ஒரு வகையில் அரசியல் சூதாட்டம் தான். அது பயனளித்தது.

அன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கத்தில் ஜீவன் கபினெட் அமைச்சராக சேர்த்துக் கொள்ளப்பட்டார். 2023 ஜனவரி 19 ஆம் திகதி அவர் நீர்விநியோகம், பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி விக்கிரமசிங்க முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.

மிகவும் இளைய கபினெட் அமைச்சர்

கபினெட் அமைச்சராக வந்ததில் ஜீவன் தனது சொந்தத்தில் ஒரு சாதனையையும் படைத்தார். 1994 நவம்பர் 9 ஆம் திகதி பிறந்த அவர் இலங்கையில் பதவியேற்ற மிகவும் இளைய கபினெட் அமைச்சராக விளங்கினார். முதலில் அந்த சாதனைக்கு சொந்தக்காரராக ரணில் விக்கிரமசிங்கவே இருந்தார். தனது சொந்தச் சாதனையை முறியடிப்பதற்கு விக்கிரமசிங்க ஜீவனுக்கு உதவியது ஒரு முரண்நகையான நிகழ்வாக அமைந்தது.

1949 மார்ச் 24 ஆம் திகதி பிறந்த விக்கிரமசிங்க 1978 செப்டெம்பரில் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவினால் இளைஞர் விவகார மற்றும் தொழில்வாய்ப்பு கபினெட் அமைச்சராக நியமிக்கப்பட்டபோது அவர் 29 வருடங்கள் ஐந்து மாதங்கள் வயதைக் கொண்டிருந்தார். ஜனாதிபதி விக்கிரமசிங்கவினால் கபினெட் அமைச்சராக ஜீவன் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டபோது அவருக்கு வயது 28 வருடங்கள் 2 மாதங்கள்.

தைப்பொங்கல்

2024 ஜனவரியில் தைப்பொங்கலைக் கொண்டாடுவதற்காக ஜீவன் தொண்டமான் அட்டன் நகரில் கலாசார நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்தார். தென்னிந்திய நடிகைகளான ஐஸவர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா டத்தா, சம்யுக்தா மேனன் மற்றும் மீனாக்சி ஆகியோர் அந்த நிகழ்வில் பங்கேற்றனர். மக்கள் கூட்டம் அந்த அழகிய நடிகைகளுக்கு பெரும் வரவேற்பைக் கொடுத்தது.

அந்த நிகழ்வை ‘ வீண் செலவு’ என்று கூறி பல எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் ஜீவனைக் கடுமையாகக் கண்டனம் செய்தனர்.

கண்டனங்களுக்கு பதிலளித்த ஜீவன் அந்த நிகழ்வை தேசிய தைப்பொங்கல் விழாவாக பல்வேறு அரச நிறுவனங்களே ஏற்பாடு செய்ததாகவும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காகவே அதில் தென்னிந்திய நடிகைககள் அழைக்கப்பட்டதாகவும் கூறினார். அந்த நடிகைகளின் பங்கேற்பு தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கும் மலையக பிராந்தியத்தில் பெண்களை வலுவூட்டவும் உதவியதாக ஜீவன் மேலும் சொன்னார்.

இந்த தைப்பொங்கல் விழா சர்ச்சை நடிகைகள் இந்தியாவுக்கு திரும்பியபோது ஒரு வேடிக்கையான திருப்பத்தை எடுத்தது. அவர்கள் ஜீவனை வாயாரப் புகழ்ந்து பாராட்டினார்கள். அந்த நான்கு நடிகைகளில் மிகவும் பிரபல்யமானவரான ஐஸ்வர்யா ராஜேஷ் இந்திய ஊடகங்களிடம் ஜீவனைப் பற்றி தேனொழுகப் பேசினார்.

முன்னதாக அட்டனில் தைப்பொங்கல் விழாவில் உரையாற்றியபோது ஐஸ்வர்யா ஜீவனை உலகிலேயே மிகவும் இளமைவாய்ந்த — மிடுக்கான அமைச்சர் என்று வர்ணித்தார். இறுதியில் அதன் விளைவாக ஜீவன் பெருமளவில் நகைசப்புக்கிடமானவராக வேண்டியேற்பட்டது.

இளம் உலகத்தலைவர்

2024 ஏப்ரிலில் உலகப் பொருளாதார மன்றம் (World Economic Forum ) இளம் உலகத் தலைவர்கள் பட்டியலை அறிவித்தது. அதில் இலங்கையின் நீர்விநியோகம், பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பெயரும் அடங்கியிருந்தது. பொதுப்பிரமுகர்கள் பட்டியலில் அவரது பெயர் குறிப்பிடப்பட்டது. அரசியல், வர்த்தகம், சிவில் சமூகம், கலைத்துறை மற்றும் கல்வித்துறை உட்பட பல்வேறு துறைகளையும் சேர்ந்த வளரும் இளம் முக்கியஸ்தர்களை அது பட்டியலிட்டிருந்தது

யானைச் சின்னம்

2024 ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்தது. ரணில் தோல்வி கண்டார். ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரான அநுர குமார திசநாயக்க ஜனாதிபதியாகத் தெரிவானார்.

2024 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்டது. ஜீவன் மீண்டும் நுவரேலியா மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவான போதிலும் வாக்குகளில் பெருமளவு வீழ்ச்சி காணப்பட்டது. அவருக்கு 46,438 விருப்பு வாக்குகளே கிடைத்தன.

பாராளுமன்றத்தில் தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் ஜீவன் ‘ பெயரளவில்’ சபையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக இருக்கிறார்.

2025 உள்ளூராட்சி தேர்தல்களில் பல்வேறு பிரதேச சபைகள், நகர சபைகள் மற்றும் மாநகர சபைகளில் போட்டியிட்ட இலக்கை தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர்களில் 62 பேர் மக்களினால் தெரிவு செய்யப்பட்டனர்.

எதிர்பார்க்கப்படாத ஒரு நகர்வாக மலையகப் பகுதிகளில் பல்வேறு உள்ளூராட்சி சபைகளில் நிருவாகங்களை அமைப்பதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தேசிய மக்கள் சக்தியுடன் கூட்டுச் சேர்ந்தது. அந்த முடிவை ஜீவனே எடுத்தார்.

தோட்டத் தொழிலாளர்களுக்காக அரசாங்கத்தினால் 1750 ரூபா தினச்சம்பளம் அறிவிக்கப்பட்ட காரணத்தினால் 2026 பட்ஜெட்டுக்கு ஆதரவாக ஜீவன் பாராளுமன்றத்தில் வாக்களித்தார்.

ஜீவன் — சீதை திருமணம்

இத்தகைய பின்புலத்திலேயே மலையகத்தின் இளம் தமிழ்த் தலைவர் நவம்பர் 23 ஆம் திகதி திருமணம் செய்துகொண்டார். ஜீவன் குமாரவேல் தொண்டமான்– சீதை ஸ்ரீ நாச்சியார் இராமேஸ்வரன் புதுமணத் தம்பதியருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

ong>D.B.S.Jeyaraj can be reached at dbsjeyaraj@yahoo.com

ஆங்கில மூலம்: டி. பி. எஸ். ஜெயராஜ் (Daily Financial Times)

தமிழில்: வீரகத்தி தனபாலசிங்கம்

நன்றி: வீரகேசரி

******************************************************************************