டி.பி.எஸ். ஜெயராஜ்
விஜய் என்று உலகில் பிரபல்யமாக அறியப்படும சந்திரசேகர் ஜோசப் விஜய் சந்தேகத்துக்கு இடமின்றி தமிழ்ச் சினிமாவில் ‘ சூப்பர் ஸ்டாராக ‘ விளங்குகிறார். மூத்த நடிகர் ரஜினிகாந்த் தன்னந்தனியான ‘சூப்பர் ஸ்டாராக’ நீணடகாலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்திருக்கின்ற போதிலும், அண்மைக் காலத்தில் அந்த நிலைமை மாறிவிட்டது. கடந்த ஜூனில் தனது 51வது பிறந்த தினத்தைக் கொண்டாடிய விஜய் மக்கள் செல்வாக்கு மற்றும் திரைப்பட வசூலை பொறுத்தவரை, எதிர்வரும் டிசம்பரில் 75 வது வயதைக் கொண்டாடவிருக்கும் ரஜினிகாந்தை விடவும் பெரியளவில் முன்னிலையில் திகழ்கிறார்.
இலங்கையில் பெருமளவில் ரசிகர்களைக் கொண்ட விஜய் யாழ்ப்பாணத்தின் சுழிபுரத்தைச் சேர்ந்த சங்கீதா சொர்ணலிங்கம் என்ற பெண்மணியை திருமணம் செய்தார். அவர்களுக்கு இரு பிள்ளைகள். இன்று தமிழ்ச்சினிமாவில் அதிகம் கூடுதலான சம்பளத்தைப் பெறுபவராக விளங்கும் விஜய் திரைப்படம் ஒன்றுக்கு சுமார் 200 கோடி இந்திய ரூபாவை பெறுவதாக கூறப்படுகிறது. இன்றைய தமிழ் நடிகர்கள் மத்தியில் வசூல் மன்னனாகவும் அவரே விளங்குகிறார்.இந்தி சினிமாவின் ஷாருக்கான் மற்றும் தெலுக்கு சினிமாவின் அல்லு அர்ஜுன் ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது பெரிய தொகையை ஒரு திரைப்படத்துக்கு விஜய் சம்பளமாக பெறுகிறார்.
திரைப்பட நடிகர்கள் அரசியலில் பிரவேசித்து தங்களது சொந்த கட்சிகளை அமைக்கும் நீண்ட பாரம்பரியம் ஒன்றை தமிழ்நாடு கொண்டிருக்கிறது. சிலர் முதலமைச்சர்களாகவும் வந்திருக்கிறார்கள். முன்னாள் முதலமைச்சர்கள் சி.என். அண்ணாத்துரையும் மு. கருணாநிதியும் புகழ்பெற்ற திரைப்பட கதைவசனகர்த்தாக்கள். அரசியலில் பிரவேசித்த தமிழ்ச்சினிமா நடிகர்களில் என்.எஸ். கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா, கே.ஆர். இராமசாமி, எம்.ஜி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்.), சிவாஜி கணேசன், எஸ். எஸ். இராஜேந்திரன், வீ.என். ஜானகி, ஜெயலலிதா ஜெயராம், ரி.ராஜேந்தர், எஸ்.வி.சேகர், நெப்போலியன், விஜயகாந்த், சீமான், சரத்குமார், ராதிகா, கமல் ஹாசன் மற்றும் உதயநிதி ஸ்ராலின் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்ராலினும் ஒரு சில திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருக்கிறார்.
தமிழக வெற்றிக்கழகம்
அரசியல் தலைவர்களாக தங்களை மாற்றிக் கொள்ளும் தமிழ்த் திரைப்பட நடிகர்களின் நீண்ட பட்டியலில் மிகவும் அண்மையில் இணைந்திருப்பவர் விஜய். அவர் கடந்த வருடம் தனது தலைமையில் ‘தமிழக வெற்றிக்கழகம்’ என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தார்.விஜய்க்கு இருந்த சுமார் 85 ஆயிரம் ரசிகர் மன்றங்கள் கட்சிக் கிளைகளாக மாற்றப்பட்டன. கட்சி உறுப்பினர்களின் தொகை பல மில்லியன்கள் என்று கூற்படுகிறது.
விஜயும் அவரது கட்சியும் தேர்தல் களத்தில் இன்னமும் பரீட்சித்துப் பார்க்கப்படவில்லை என்ற போதிலும், ஊடகங்களில் பெருமளவில் முக்கியத்துவம் கிடைக்கிறது. தற்போதைக்கு உகந்த முறையில் மதிப்பிட முடியாது என்ற போதிலும், அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு மாநில சட்டசபை தேர்தலில் விஜயும் அவரது தமிழக வெற்றிக்கழகமும் ஒரு கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் சாாத்தியத்தில் சந்தேகமில்லை.
அடுத்த வருடத் தேர்தலுக்கான அவரது பிரசாரத்தின் ஒரு பகுதியாக கடந்த செப்டெம்பர் முதல் விஜய் மாவட்ட ரீதியாக அரசியல் கூட்டங்களை நடத்தத் தொடங்கினார். ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் திருச்சி, அரியலூர், நாகபட்டினம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் கூட்டங்களில் விஜய் உரையாற்றினார். ஆனால், செப்டெம்பர் 27 ஆம் திகதி கரூரில் நடைபெற்ற கூட்டம் பெரிய மனித அனர்த்தத்தில் முடிந்தது.
கரூர் கூட்ட சனநெரிசல்
தமிழ்நாட்டில் கரூர் மாநிலத் தலைநகர் சென்னையில் இருந்து தென்மேற்கே சுமார் 245 மைல்கள் தொலைவில் இருக்கும் ஒரு பெருநகராட்சியாகும். தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் கூட்டம் கரூரில் ஈரோடு — கரூர் நெடுஞ்சாலையில் வேலுசாமிபுரம் என்ற இடத்தில் நடைபெற்றது. 10,000 தொடக்கம் 15, 000 வரையான மக்களே அதில் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இறுதியில் எதிர்பார்க்கப்பட்தை விடவும் பெருமளவுக்கு கூடுதலாக 25,000 க்கும் 28,000 இடைப்பட்ட எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொண்டதாக மதிப்பிடப்பட்டது. பயங்கரமான சனநெரிசல் ஏற்பட்டு 41 பேர் மரணமடைந்ததுடன் 105 பேர் காயமடைந்தனர். இறந்தவர்களில் பத்துப்பேர் சிறுவர்கள்.
கரூர் அனர்த்தம் தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் ஊடகங்களில் பெருமளவு முக்கியத்துவத்தைப் பெற்றது. இந்தியாவில் சனநெரிசலில் மக்கள் இறப்பது ஒன்றும் புதியதில்லை என்ற போதிலும், அரசியல் கூட்டங்களில் இந்தளவில் அதிக எண்ணிக்கையில் மக்கள் மரணமடைவது மிகவும் அரிதாகும். அதனால் கரூர் சம்பவம் சர்ச்சைக்குரிய ஒரு விடயமாக தொடர்ந்தும் பேசப்படுகின்றது.கரூர் அனர்த்தத்தையும் அதன் விளைவுகளையும் எதிர்வரும் கட்டுரை ஒன்றில் விரிவாக ஆராயப்படும்.
அதேவேளை, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தின் விதிவசமான கரூர் கூட்டமும் அதன் பின்னரான நிலைவரமும் தமிழ்நாட்டின் விசித்திரமான அரசியல் மீது பெருமளவுக்கு கவனத்தை ஈர்த்திருக்கின்றன. திராவிட அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டை தொடர்ச்சியாக ஆட்சி செய்துவருவது ஒரு அம்சம். திராவிட முன்னேற்றக் கழகமும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமும் 1967 ஆம் ஆண்டில் இருந்து மாறிமாறி.மாநிலத்தை ஆட்சி செய்து வருகின்றன. அரசியல் பரப்பில் திரைப் படங்களினதும் சினிமா நடிகர்களினதும் செல்வாக்கு மற்றைய அம்சமாகும்.
திராவிடக் கட்சி ஆதிக்கம்
தமிழ்நாட்டில் திராவிடக் கட்சி ஆதிக்கமும் அரசியலிஞ் சினிமாவின் செல்வாக்கும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய விவகாரங்களாகும். ஒரு வகையில் திராவிட அரசியலின் எழுச்சியும் அரசியலில் சினிமாவின் செல்வாக்கும் ஒன்றுக்கு ஒன்று உதவியாக அமைந்த செயன்முறைகளாகும்.
விஜயைப் போன்ற முன்னணி நடிகர் ஒருவர் சொந்தத்தில் அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கக் கூடியதாக இருப்பதும் தமிழ்நாட்டின் எதிர்கால முதலமைச்சராக வருவது குறித்து ஆசைப்படுவதும் பிரதானமாக மாநிலத்தில் நிலவுகின்ற ‘ சினிமா அரசியல் சூழலின்’ விளைவானதாகும். இந்த பின்புலத்தில் முன்னைய எனது எழுத்துக்களின் உதவியுடன் இந்த கட்டுரை ‘ திராவிடத் தமிழ்நாட்டில் சினிமா அரசியலின் படிமுறை வளர்ச்சி குறித்து ஆராய்கிறது.
சுதந்திரப் போராட்டம்
இந்திய அரசியலில் பிரபல்யமான கலைஞர்களின் ஈடுபாடு என்பது இந்தியாவின் சுதந்திரத்துக்கான போராட்ட காலத்தில் இருந்து தொடங்கியதாகும். அன்று மாகாண மட்டத்தில் அரசியலில் பாடகர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் நாடகக் கலைஞர்கள் அரசியலில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு மகாத்மா காந்தியினதும் சுதந்திரத்தினதும் அருமை பெருமைகளை போற்றிப்புகழும் செய்திகளை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் சபையோர் மத்தியில் எடுத்துக் கூறினார்கள். சமூக சீர்திருத்தத்துக்காகவும் அவர்கள் குரல் கொடுத்தார்கள்.
முன்னாள் மெட்ராஸ் மாகாணத்தின் (Madras Presidency ) தமிழ்பேசும் பகுதிகளில் நடிகர்களினதும் பாடகர்களினதும் அரசியல் ஆற்றல் வளத்தை அடையாளம் கண்டு அவர்களின் சேவைகளைப் பயன்படுத்தத் தொடங்கியவர் காங்கிரஸ் தலைவரான சத்தியமூர்த்தி. பாடகியும் நடிகையுமான கே.பி. சுந்தராம்பாளும் டி.கே. எஸ். சகோதரர்களின் நாடகக்குழுவும் இந்த துறையில் பிரகாசமான உதாரணங்களாக விளங்கினர்.
சுவராஜ்த்துக்கான செய்தி பாடல்கள், வீதி நாடகங்கள், நாட்டுக் கூத்து, மேடை நாடகங்கள் ஊடாகவும் பிறகு ஊயைப்படங்கள் மற்றும் பேசும்படங்கள் ஊடாகவும் மக்களிடம் கொண்டுசெல்லப்பட்டது. இது பல சந்தர்ப்பங்களில் தேசபக்திக்கு வழகாட்டியது. உதாரணமாக, ‘ சதி அனுசுயா ‘ என்ற இதிகாசத் திரைப்படத்தில் புராணகாலத்து பெண்கள் கைத்தறியில் கதர் ஆடைகளை நெய்வது போன்ற காட்சிகளைக் கொண்டிருந்தது.
திரைப்படத் தொழில்துறை வளரத் தொடங்கியதும் முன்னைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் சில திரைப்படங்கள் தேசத்துரோக உள்ளடக்கங்களைக் கொண்டிருந்ததாக கருதினார்கள். ‘ ஆட்சேபத்துக்குரிய ‘ சில திரைப்படங்களுக்கு எதி்ராக அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. இதற்கு குறிப்பிடத்தக்க உதாரணமாக 1938 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட ‘தியாகபூமி’ திரைப்படத்தைக் கூறமுடியும். அது முதலில் திரைப்படத்துக்காக ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தியினால் எழுதப்பட்டு ஆனந்தவிகடன் வாரச்சஞ்சிகையில் தொடராகப் பிரசுரிக்கப்பட்டது. கே. சுப்பிரமணியம் நெறியாள்கை செய்த அந்த திரைப்படம் பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கும் பிரிட்டிஷ் ஆட்சிக்கும் எதிராக துணிச்சலுடன் பேசியது.
இந்தியா சுதந்திரத்துக்கு பின்னரான ஆரம்ப வருடங்களில் தென்னிந்தியாவில் குறிப்பாக சென்னை மாநிலத்தில் (தமிழ்நாடு அவ்வாறுதான் அன்று அழைக்கப்பட்டது) சினிமாவும் அரசியலும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவையாக வளர்ந்தன. பிரமாண்டமான திரை நட்சத்திரங்களும் திரைப்படத்துறை ஆளுமைகளும் அரசியல் அரங்கை ஆக்கிரமித்தனர். தமிழ்த் திரைப்பட நட்சத்திரங்கள் வெறுமனே அணிகலன்களாக மாத்திரமல்ல, பெறமதிமிக்க சொத்துக்களாக விளங்கினர். அவர்கள் தாங்கள் சார்ந்திருந்த அரசியல் கட்சிகளின் பிரிக்கமுடியாத அங்கங்களாக செயற்பட்டனர். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கட்சிகளே சுற்றிச் சுழல்கின்ற ‘ நட்சத்திரங்களாக ‘ அவர்கள் விளங்கினார்கள். தமிழ்நாட்டின் சினிமா அரசியலில் திரைப்பட நடிகர்களின் எழுச்சி பெருமளவுக்கு மாநிலத்தின் திராவிடப் பாரம்பரியத்தின் விளைவானதாகும்.
சுயமரியாதை இயக்கம்
இன்று 7 கோடி 20 இலட்சத்துக்கும் அதிகமான சனத்தொகையைக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டில் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் ஈ.வெ. இராமசாமி நாயக்கரினால் (பெரியார் ) இந்தியாவின் மூலமுதல் பகுத்தறிவு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. சுயமரியாதை இயக்கம் என்று அறியப்பட்ட அந்த இயக்கம் சாதி அடக்குமுறை, தேசிய மொழியாக இந்தித் திணிப்பு, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் மதமூடநம்பிக்கை ஆகியவற்றுக்கு எதிரான ஆரோக்கியமான அரசியல் போராட்டங்களை ஊக்குவித்தது.
பெரியார் 1943 ஆம் ஆண்டில் திராவிட கழகத்தையும் ஆரம்பித்தார். அதில் இருந்து தோன்றியவைதான் தமிழ்நாட்டின் இன்றைய ஆளும் கட்சியான திராவிட முன்னனேற்றக் கழகமும் பிரதான எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும். பகுத்தறிவுவாதம் மற்றும் சுயமரியாதை உணர்வைக் கொண்ட ‘ திராவிட ‘ பாரம்பரியம் ஒன்று இருந்தபோதிலும், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அரசியலில் மேலாதிக்கத்தை செலுத்துவதற்கு திரைப்பட நடிகர்களை அனுமதித்தது தமிழ்நாடுதான்.
ஆரிய — திராவிடப் பிளவு
கடந்த 85 –90 வருடங்களாக தமிழ்நாட்டு அரசியலை ஆரிய — திராவிட பிளவு பற்றிய எண்ணங்கள் ஆக்கிரமித்து வந்திருக்கின்றன. இந்த கோட்பாடு விஞ்ஞானபூர்வமான ஒன்று அல்ல. அது பெருமளவுக்கு பெருமளவுக்கு தொன்மைப்படுத்தப்பட்டு விட்டது. இருந்தாலும், இந்த உணர்வு தமிழ்நாட்டு மக்களில் கணிசமான பிரிவுகளை அரசியல்மயப்படுத்துவதற்கு உதவியதுடன் முழு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் மீது செல்வாக்கு செலுத்துவதாகவும் விளங்குகிறது.
இந்தியாவில் ஆதிகாலத்தில் வாழ்ந்தவர்கள் திராவிடர்களே என்றும் ஆக்கிரமித்த ஆரியர்கள் வடக்கை தங்கள் கட்டுபாபாட்டில் கொண்டுவந்த பிறகு திராவிடர்களை தெற்கு நோக்கி தள்ளிவிட்டார்கள் என்றும் திசாவிட கோட்பாட்டின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். மேலும் அன்று வரை சாதிகளற்ற சமுதாயம் ஒன்றைக் கொண்டிருந்த திராவிடர்கள் மீது ஆரியர்கள் தங்களது சாதிக்கட்டமைப்பையும் திணித்தார்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த படிநிலை உச்சியில் பிராமணர்களை வைத்தது. தமிழ்ப் பிராமணர்கள் தமிழைப் பேசுகின்றபோதிலும், அவர்கள் தமிழ்கள் அல்ல, அந்நியர்களான ஆரியர்களின் வரலாற்றுச் சின்னங்களே என்று திராவிட தத்துவவாதிகள் கூறினா்கள். திராவிட இயக்கத்தின் சமூகச் சீர்திருத்த பிரசாரக்களம் முற்றிலும் முற்போக்கானதாக இருந்த அதேவேளை, ஆரிய — திராவிட இடைமுகம் பற்றிய அதன் குரூரமான விளக்கமும் தமிழ்ப் பிராமணர்கள் மீதான அதன் நச்சுத்தனமான விரோதம் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதல்ல.
தமிழ்நாடு மாநிலத்தில் ஆளும் உயர் குழாத்தினராக பிராமணர்களே தொடர்ந்தும் இருப்பதற்கு சமூக — வரலாற்றுக் காரணங்கள் வழிவகுத்தன. அவர்கள் படித்தவர்களாக இருந்ததுடன் உத்தியோகங்கள் மற்றும் கலைகள் உட்பட பெரும்பாலான துறைகளில் ஆதிக்கம் செலுத்தினார்கள். இதற்கு மேலதிகமாக, வைதீகத்தனமான இந்துமதம் தமிழ்ப் பிராமணர்களுக்கு அதிகார முத்திரையை வழங்கியது. வெளிக்கிளம்பிவந்த பிராமணர் அல்லாத உயர்குழாத்தினர் பிராமண மேலாதிக்கம் என்று தாங்கள் கண்டதை தூக்கியெறிவதற்கு திராவிட கோட்பாட்டை கடைப்பிடிக்கத் தொடங்கினார்கள்.
எண்ணிக்கையில் குறைவானவர்களாக இருந்த கொணடிருந்ததாக கருதப்பட்ட அதிகார நிலை அவர்களை எளிதில் பாதிக்கப்படக்கூடிய இலக்குகளாக்கியது. ஜனநாயக செயன்முறை, திராவிட கோட்பாட்டின் அடிப்படையில் பிராமணர்கள் அல்லாத சாதிக்குழுக்களை அணிதிரட்டுவதற்கு வசதியாக அமைந்தது.
எல்லாமாக 19 திராவிட மொழிகள் இருக்கின்றன. அவற்றில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் துலு ஆகியவை முக்கியமானவை. தென்னிந்தியாவின் ஏனைய மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம் (தெலுங்கு ), கேரளா ( மலையாளம்), மற்றும் கர்நாடகா ( கன்னடம்) ஆகியவற்றில் திராவிட கோட்பாட்டுக்கு ஆதரவு கிடையாது. ஆனால், அந்த கோட்பாடு தமிழ்நாட்டில் ஆழமாக வேரூன்றிவிட்டது.
திராவிடஅரசு
தற்போதைய கேரளா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி, ஆந்திரப்பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகியவற்றை உள்ளடக்கிய திராவிட அரசு ஒன்றே திராவிடக் கட்சிகளின் அடிப்படை அரசியல் கோரிக்கையாக இருந்தது. அது பிறகு தமிழ்நாடு மீது மாத்திரம் கவனத்தைக் குவித்து ஒரு பிரிவினைவாத இயக்கமாக தன்னை மாற்றிக்கொண்டது. சீ்ாவுடனான 1962 போருக்கு பின்னர் மாத்திரமே திராவிட முன்னேற்றக் கழகம் தேசிய ஐக்கியத்தினதும் பாதுகாப்பினதும் நலன்களுக்காக அதன் பிரிவினைக் கோரிக்கையை கைவிட்டது. இப்போது அந்த கழகம் இந்திய ஒன்றியத்திற்குள் கூடுதலான சுயாட்சிக்காக குரலெழுப்புகிறது.
அரசியலில் பங்கேற்பதை பெரியாரின் திராவிட சமூக சீச்திருத்த இயக்கம் எதிர்த்தது. அந்த இயக்கம் மிகவும் பெருமளவுக்கு அவரின் எதேச்சாதிகாரத்தனமான கட்டப்பாட்டின் கீழ் இருந்தது. காஞ்சீவாரம் நடராஜன் அண்ணாத்துரையின் தலைமையில் ஒரு குழுவினர் கிளர்ந்தெழுந்து 1949 ஆம் ஆண்டில் திராவிட முனானேற்றக் கழகத்தை அமைத்தது. ஒரு சமூக சீர்திருத்த இயக்கமாக செயற்படத் தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழகம் பிறகு ஜனநாயக வழிமுறைகளின் ஊடாக அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றாமல் மாற்றம் சாத்தியமில்லை என்று தீர்மானித்தது. இந்திய சுதந்திரத்துக்கு பின்னரான காலப்பகுதியின் திராவிடக் கட்சி அரசியலை கீழே சுருக்கமாக தருகிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம்
1957 ஆம் ஆண்டில் தேர்தல் அரசியலில் பிரவேசம் செய்யத் தீர்மானித்த திராவிட முன்னேற்றக்கழகம் மாநில சட்டசபையில் 15 ஆசனங்களையும் இரண்டு பாராளுமன்ற ஆசனங்களையும் கைப்பற்றியது. 1962 ஆண்டில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. சட்டசபையில் 50 வரையான ஆசனங்களும் பாராளுமன்றத்தில் 8 ஆசனங்களும் கிடைத்தன. 1967 ஆம் ஆண்டில் சட்டசபையின் 234 ஆசனங்களில் 138 ஆசனங்களைப் பெற்ற திராவிட முன்னேற்றக் கழகம் முதற்தடவையாக மாநிலத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியது. லோக்பாவுக்காக போட்டியிட்ட சகல ஆசனங்களிலும் (25) அது வெற்றிபெற்றது. அண்ணாத்துரை முதலமைச்சராக வந்தார்.
அண்ணா என்று பரவலாக அழைக்கப்பட்ட அண்ணாத்துரை 1969 பெப்ரவரியில் மரணமடைந்தார். புதிய முதலமைச்சராக முத்துவேல் கருணாநிதி பதவியேற்றார். 1971 தேர்தலில் கருணாநிதி தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் சட்டசபையில் 184 ஆசனங்களையும் பாராளுமன்றத்தில் 23 ஆசனங்களையும் கைப்பற்றி பிரமாண்டமான வெற்றியை பதிவு செய்தது. வெற்றிகொள்ள முடியாத கட்சியாக அது தோன்றியது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
ஆனால், 1972 ஆம் ஆண்டில் ஒரு பெரிய பிளவு ஏற்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரதான வாக்குச் கேரிப்பாளரும் பிரபல்யமான சினிமா ஆளுமையுமான மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்.) திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறி அந்த வருடம் தனியாக கட்சியொன்றை ஆரம்பித்தார். அண்ணாத்துரையின் பெயரில் கட்சியை அமைத்த அவர் அதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்று பெயரிட்டார். பிறகு அது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. எம்.ஜி.ஆரின் கட்சி அடுத்தடுத்து மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்றது. மாநில சட்டசபைக்கு 1977 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் 125 ஆசனங்களையும் 1980 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் 130 ஆசனங்களையும் 1984 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் 125 ஆசனங்களையும் அந்த கட்சி கைப்பற்றியது. கருணாநிதி 11 வருடங்களாக எதிர்க்கட்சி தலைவராகவே இருக்கவேண்டியதாயிற்று.
1987 ஆம் ஆண்டு இறுதியில் எம்.ஜி.ஆர். காலமானதையடுத்து அவரின் மனைவியும் முன்னாள் சினிமா நடிகையுமான வீ.என். ஜானகி முதலமைச்சராக பதவியேற்றார். ஆனால், காங்கிரஸ் கட்சியின் சூழ்ச்சியினால் ஒரு மாதத்துக்கு பிறகு ஜானகியின் அரசாங்கம் வீழ்ச்சி கண்டது. எம்.ஜி.ஆருடன் பெருவாரியான திரைப்படங்களில் சோடிசேர்ந்து நடித்தவரும் அன்று அண்ணா தி.மு.க.வின் பிரசாரச் செயலாளராக இருந்தவருமான ஜெயலலிதாவும் கட்சியின் தலைமைத்துவத்துக்கு உரிமை கோரியதை தொடர்ந்து ஒரு பிளவு ஏற்பட்டது. பிளவுபட்ட அண்ணா தி.மு.க. 1989 ஆம் ஆண்டில் சட்டசபை தேர்தலில் ஜானகியினதும் ஜெயலலிதாவினதும் தலைமையில் இரு அணிகளாக போட்டியிட்டது.
ஜானகி அணியை (ஒரேயொரு ஆசனம்) ஜெயலலிதாவின் அணி (25 ஆசனங்கள் ) படுமோசமாகத் தோற்கடித்தது. ஆனால், கருணாநிதியின் தலைமையின் கீழ் திராவிட முனானேற்றக்கழகமே பெருவெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணத்துக்கு பிறகு 1991 தேர்தலில் ஜெயலலிதா — காங்கிரஸ் கூட்டணி திராவிட முன்னேற்றக் கழகத்தை படுதோல்வியடையச் செய்தது. கருணாநிதி மாத்திரமே அவரது தொகுதியில் வெற்றிபெறக் கூடியதாக இருந்தது. 1996 ஆம் ஆண்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்த திராவிட முன்னே்ற்றக் கழகம் 2001 ஆண்டுவரை பதவியில் தொடர்ந்தது.
2001 ஆண்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவை கருணாநிதி 2006 தேர்தலில் மீண்டும் தோற்கடித்தார். சக்கரம் சுழன்று மீண்டும் 2011 ஆம் ஆண்டில் ஜெயலலிதா முதலமைச்சராக பதவிக்கு வந்தார். 2016 ஆம் ஆண்டிலும் மீண்டும் அவர் தலைமையில் அண்ணா தி.மு.க. தேர்தலில் வெற்றி பெற்றது. அதே வருடம் டிசம்பரில் ஜெயலலிதாவின் மரணத்தை அடுத்து ஓ. பன்னீர்ச்செல்வம் முதலமைச்சரானார். பிறகு ஏற்பட்ட குழப்பகரமான சூழ்நிலையில் அவரை எடப்பாடி பழனிச்சாமி பதிலீடு செய்தார். கருணாநிதி 2018 ஆம் ஆண்டில் காலமானார்.2021 தேர்தலில் கருணாநிதியின் மகன் மு.க. ஸ்ராலின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தது. அடுத்த சட்டசபை தேர்தல் 2026 மே மாதத்தில் நடைபெறவிருக்கிறது.
அண்ணாத்துரை
தமிழ்நாட்டில் காணக்கூடியதாக இருந்த அரசியல் அதிகாரப் போராட்டமும் அதன் விளைவுகளும் கடந்துபோன வருடங்களில் திராவிட கட்சிகளின் ஏற்ற இறக்கங்களை காட்டின. இவை எல்லாவற்றிலும் மிகவும் முக்கியமாக கவனிக்கத்தக்கது திரைப்படங்களினதும் திரையுலக ஆளுமைகளினதும் வகிபாகமாகும். சுந்திரத்துக்கு பின்னரான வருடங்களில் அரசியல் பிரசாரத்துக்காக சினிமாவைப் பயன்படுத்துவதற்கு முதலில் முயற்சித்தது திராவிட முன்னனேற்றக் கழகமேயாகும். ஒரு செய்தியை மக்களிடம் கொண்டுசெல்வதற்கு 10, 000 அரசியல் கூட்டங்கள் தேவை என்றால் அதே செய்தியை வெற்றிகரமான ஒரேயொரு திரைப்படத்தின் மூலம் சொல்லிவிடலாம் என்று அண்ணாத்துரை ஒரு தடவை கூறினார். அவரும் அவரது சீடர் கருணாநிதியும் அந்த முயற்சியில் இறங்கினார்கள். அண்ணாத்துரை கதைவசனம் எழுதிய திரைப்படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. அந்த திரைப்படங்களின் அரசியல் உள்ளடக்கம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால், கதைவசனகர்த்தா என்ற வகையில் உண்மையில் சாதனை படைத்தவர் கருணாநிதியே.
கருணாநிதி
கவர்ச்சியான அடுக்கு மொழியில் எழுதும் ஒரு பாணியை கருணாநிதி திறமையாக வளர்த்துக் கொண்டார். அவரது எழுத்துப்பாணி விரைவாகவே மக்கள் மத்தியில் பிரபல்யமானது. நீதிமன்றக் காட்சிகள், வரலாற்றுத் திரைப்படங்களில் அரசவை விசாரணைகள், திரைப்படங்களில் நவீன பினபுலத்தில் அறிமுகப்படுத்தபட்ட சிறிய நாடகங்கள் கவர்ந்திழுக்கும் கருணாநிதியின் வசனநடைக்கு பெரிய வாய்ப்பை வழங்கின.
” கதை, வசனம் கலைஞர் மு. கருணாநிதி” என்று தங்களது திரைப்படங்களுக்கு தயாரிப்பாளர்கள் விளம்பரம் செய்கிற அளவுக்கு கருணாநிதி புகழ்பெற்றவராக விளங்கினார். திரையரங்குகளில் படங்களின் எழுத்துக்கள் காண்பிக்கப்படும்போது நடிகர்களின் பெயர்களுக்கு முன்னதாக கருணாநிதியின் பெயர் காண்பிக்கப்படும். அவ்வேளைகளில் அரங்குகள் கரகோசங்களால் அதிரும். உள்டக்கத்திலும் எழுத்துநடையிலும் கருணாநிதியை பின்பற்றிய ஆசைத்தம்பி, கிருஷ்ணசுவாமி, மாறன், கண்ணதாசன் போனற வேறு எழுத்தாளர்களும் இருந்தார்கள். வசனகர்த்தாக்களின் வரிகளை மிகுந்த ஆற்றலுடன் உச்சரிக்கக்கூடிய நடிகர்கள் குழுவென்றையும் திராவிட முன்னேற்றக்கழகம் வளர்த்தெடுத்தது.
சிவாஜி கணேசன்
அரசியல் பிரசாரத்துக்காக நடிகர்களை திராவிட முன்னேற்றக் கழகம் பயன்படுத்தத் தொடக்கியபோது அவர்களை காங்கிரஸ் தலைவர் காமராஜ் கூத்தாடிகள் என்று கேலி செய்தார். ஆனால் காமராஜின் இந்த கருத்துக்கு முரணான கருத்தைக் கொண்டிருந்த அரசியல் ஆசான் சத்தியமூர்த்தி அரசியலில் கலைஞர்களை உற்சாகப்படுத்தினார். ‘ அரிதாரபம்’ பூசுகிறவர்கள் ‘ ‘அரசியலுக்கு ‘ வரக்கூடாது என்று காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் வாதிட்டார்கள். ஆனால், காங்கிரஸ் விரைவாகவே அதன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு சிவாஜி கணேசன் போன்ற நடிகர்கள் மற்றும் கண்ணதாசன் போன்ற பாடலாசிரியர்கள் — வசனகர்த்தாக்கள் மீது தங்கியிருக்க வேண்டாயதாயிற்று. அவர்கள் இருவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேற காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டவர்கள்.
எம்.ஜி.இராமச்சந்திரன்
அரசியல் பிரசாரங்களுக்காக திரைப்பட நடிகர்கள் பயன்படுத்தப்பட்ட அதேவேளை, நடிகர்களும் தங்களது தனிப்பட்ட முன்னே்ற்றத்துக்காக அரசியலைப் பயன்படுத்திக் கொண்டார்கள். எம்.ஜி. இராமச்சந்திரன் தனக்கென்று ஒரு அரசியல் தளத்தை கட்டியெழுப்பி வலுப்படுத்திக் கொண்டார். திராவிட முன்னேற்றக் கழக தத்துவவாதிகள் கதைவசனம் எழுதாத படங்களில் நடித்த வேளைகளிலும் கூட எம்.ஜி. ஆரின் படங்களில் வசனங்கள் அரசியல் உள்ளர்த்தத்தை கொண்டிருந்தன. உதாரணமாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சின்னமான உதயசூரியனைப் பற்றி அவர் தொடர்ச்சியாக குறிப்பிடுவார். வர்ணத்தில் தயாரிக்கப்படும் திரைப்படங்களில் கட்சியின் கொடியின் நிறங்களான சிவப்பிலும் கறுப்பிலும் எம்.ஜி.ஆர். அணிந்து உடைகளை அணிந்துகொள்வார்.
படிப்படியாக, எம்.ஜி.ஆரின் திரையுலக புகழ் திராவிட முன்னேற்றக் கழகத்தின் படிமத்திலும் பியதிபலாக்கத் தொடங்கியது. திரையுலகிற்கும் நிஜ உலகிற்கும் இடையிலான வேறுபாடு மங்கலாகத் தொடங்கிய அதேவேளை எம்.ஜி.ஆர். தொடர்ச்சியாக மக்கள் கூட்டத்தைக் கவர்ந்தார். ஊம்.ஜி.ஆரைப் பற்றி அண்ணாத்துரை ஒரு தடவை “அவர் சொல்லுக்கு பத்து இலட்சம், அவர் முகத்துக்கு முப்பது இலட்சம்” என்று கூறினார்.
தனது திரைப்படங்களில் எம்.ஜி.ஆர். எப்போதும் கஷ்டப்பட்ட மக்களுக்காக குரல்கொடு்க்கின்ற, ஒடுக்குமுறையையும் அநீதியையும் எதிர்த்துப் போராடுகின்ற பாத்திரங்களிலேயே தோன்றுவார். பெரும்பாலான பாடல்களில் சமூகத்துக்கான செய்தி ஒன்று கூறப்டுவதை உறுதிசெய்வதில் அவர் விசேட அக்கறை காட்டுவார். சமுதாயத்தின் பல்வேறு தரப்புகளும் தங்களை அவருடன் அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடியதாக வேறுபட்ட பாத்திரங்களில் நடிப்பதிலும் எம்.ஜி.ஆர். கவனம் செலுத்தினார்.
ரசிகர் மன்றங்கள்
ரசிகர் மன்றங்கள் பல்கிப்பெருகியது தென்னிந்திய திரைப்பட நடிகர்களுக்கும் அவர்களது ரசிகர்களுக்கும் இடையாலா உறவுமுறையைப் பொறுத்தரை தனித்துவமான ஒரு அம்சமாகும். 1940 களில் இருந்தே எம்.ஜி.ஆர் .ரசிகர் மன்றங்கதை ஊக்குவிக்கத் தொடக்கினார். நன்கு கட்டமைக்கப்பட்ட அமைப்புக்களாக வளர்ந்த ரசிகர் மன்றங்களின் பல இலட்சம் உறுப்பினர்களைக் கொண்டிருந்தன. இந்த மன்றங்கள் வருடாந்த மகாநாடுகளை நடத்தியதுடன் சமூக சேவைத் திட்டங்களிலும் பங்கேற்றன.
எம். ஜி.ஆர். தீவிர அரசியலில் பிரவேசித்தபோது அவரது ரசிகர் மன்றங்களும் அரசியல் மயப்படுத்தப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரசார இயந்திரத்தின் தவிர்க்கமுடியாத அங்கமாகின. இரு துறைகளும் பரஸ்பரம் ஒன்றை மற்றது வலுப்படுத்தியது. திரைப்பட செல்வாக்கு அரசியல் அனுகூலத்தைக் கொடுத்த அதேவேளை அரசியல் அந்தஸ்து திரைப்பட பிரசித்தத்தை வலுப்படுத்தியது. தற்போது நடிகர் விஜயும் கூட தனது ரசிகர் மன்றக் கட்டமைப்புக்களை தமிழக வெற்றிக் கழகத்தின் கிளைகளாக மாற்றியிருக்கிறார்.
எம்.ஜி.ஆர். என்ற தோற்றப்பாடு தனித்துவமானது என்பதில் சந்தேகமில்லை. அவரது மாயை இன்றும் தமிழ் மனத்தின் மேலாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. அவரது மரணத்துக்கு முன்னதாக எம்ஜி.ஆர். சாதாரண மக்களின் அபிலாசைகளை உருவகிப்பவராக — ஒரு அடையாளம் என்பதற்கு மேலாக விளங்கினார். அரசியல் தலைவர் என்ற வகையில் மக்கள் அவரை தங்களது கனவுகளை நனவாக்கும் ஒரு சாதனமாகவும் பார்த்தார்கள்.
ஜெயலலிதா
எம்.ஜி.ஆர். யுகத்தில் இருந்து நிலைமாற்றத்தை அடையாளப்படுத்துபவராக ஜெயலலிதா விளங்கினார். முதலமைச்சராக இருந்தபோது எம்.ஜி.ஆர். தனது முன்னாள் சினிமா கதாநாயகியை அரசியலுக்கு அறிமுகப்படுத்தினார். எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு என்று ஜெயலலிதா புகழப்பட்டார். கட்சியின் பிரசாரச் செயலாளராகவும் ராஜ்யசபா உறுப்பினராகவும் இருந்ததால் அவர் கட்சிக்குள் தனது ஆதரவுத்தளத்தை விரைவாக வலுப்படுத்திக்கொண்டு மாநிலத்தில் அரசியலமைப்பு அதிகாரத்துக்கு புறம்பான ஒரு அதிகாரமாக வெளிக்கிளம்பினார்.
ஜெயலலிதா முதலமைச்சராக 1991 — 1996, 2001 — 2006, 2011 — 2016 காலப்பகுதிகளில் தமிழ்நாட்டை ஆட்சி செய்தார். அவரும் ஜெறயலலிதா பேரவை என்ற பெயரில் ரசிகர் மன்றக் கட்டமைப்புக்களைை அமைத்தார். தேசிய அரங்கில் ஒரு முக்கியமான அரசியல் ஆளுமையாக மாறி அவர் பெருமளவு அதிகாரத்தை அனுபவித்தார்.
தமிழ்நாட்டு அரசியல் சூழலில் ஜெயலலிதாவின் உயர்ச்சியை விசித்திரமான ஒரு முரண்பாடாக பார்க்கலாம். திராவிடவாதமே மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் கோட்பாடாக விளங்குகிறது. அது பிராமண சமூகத்தை ஆரியர்கள் என்றும் தமிழர்களை திராவிடர்கள் என்று பார்க்கிற தொன்மையான ஆரிய — திராவிட பிளவை அடிப்படையாகக் கொண்டதாகும். திராவிட அரசியல் கருத்தாடலில் பிராமண எதிர்ப்பு ஒரு மைய அம்சமாகும். ஜெயரலலிதா பிராமண சமூகத்தைச் சேச்ந்தவர்.
அதனால் தமிழ்நாட்டில் அதுகாலவரை ஆதிக்கம் செலுத்திவந்த அரசியல் கோட்பாட்டின் கூலத்துக்கு எதிரானதாக ஜெயயலிதாவின் தோற்றப்பாட்டை பார்க்கமுடியும். அவர் பிராமண எதிர்ப்பு கோலோச்சுகின்ற தமிழ்நாட்டை ஆட்சி செய்த ஒரு ‘ பாப்பாத்தி.’
தமிழ்நாட்டின் சமூக — அரசியல் பரப்பில் இந்த உருவகத்தின் வெற்றி ஒரு முரண்பாடாகும். ஒரு வகையில் ஜெயலலிதா ஒரு விதிவிலக்கு அல்லது பிறழ்வு.
விஜயின் அரசியல் பிரவேசம்
அதனால், தமிழ்நாட்டில் திராவிட அரசியல் கட்சிகளின் எழுச்சி மாநிலத்தின் அரசியல் பரப்பில் சினிமாவின் செல்வாக்கை மேம்படுத்துவதற்கு பெரிதும் உதவியது என்று கூறமுடியும். இந்த பாரம்பரியத்தை அடியொற்றியதே நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம். ஆனால், அவரும் அவரது தமிழக வெற்றிக்கழகமும் திராவிட முன்னேற்றக் கழகத்தை அரசியல் எதிரியாகவும் பாரதிய ஜனதா கட்சியை கோட்பாட்டு எதிரியாகவும் பார்க்கிறார்கள்.விஜயினதும் அவரது கட்சியினதும் அரசியல் வாய்ப்புக்கள் குறித்து இன்னொரு கட்டுரையில் ஆராய்வோம்.
D.B.S.Jeyaraj can be reached at dbsjeyaraj@yahoo.com
ஆங்கில மூலம்: டி. பி. எஸ். ஜெயராஜ் (Daily Financial Times)
தமிழில்: வீரகத்தி தனபாலசிங்கம்
நன்றி: வீரகேசரி
******************************************************************************

