டி.பி.எஸ். ஜெயராஜ்
அநுர குமார திசநாயக்க 2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ‘ பிரமாண்டமான பாய்ச்சல் ‘ என்று வர்ணிக்கப்பட்ட ஒரு வெற்றியைப் பெற்றார். 2019 ஜனாதிபதி தேர்தலில் பெற்ற 418, 553 ( 3.16 சதவீதம் ) வாக்குகளில் இருந்து 2024 ஜனாதிபதி தேர்தலில் அவர் தனது வாக்குகளை 5, 634, 915 ( 42.31 சதவீதம் ) ஆக அதிகரித்தார். சஜித் பிரேமதாசவுடனான இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கையில் திசநாயக்க 5,740, 179 ( 55. 89 சதவீதம் ) வாக்குகளை பெற்றார்.
2024 செப்டெம்பர் 23 ஆம் திகதி கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற மிகவும் எளிமையான வைபவத்தில் திசநாயக்க இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியேற்றார். பதவியேற்பு வைபவத்தில் அவர் பின்வருமாறு கூறினார் ;
” நான் வெற்றி பெறுவதற்கு ஜனநாயகம் உதவியது. சிலர் எனக்கு வாக்களித்தார்கள், வேறு சிலர் எனக்கு வாக்களிக்கவில்லை. ஆனால், எனக்கு வாக்களிக்காதவர்களின் நம்பிக்கையையும் வென்றெடுப்பதற்கு கடுமையாக பாடுபடுவதற்கு நான் உறுதிபூணுகிறேன். இது ஜனாதிபதியாக எனது பணியின் முக்கியமான ஒரு பகுதியாகும்.
” நான் ஒரு மந்திரவாதியல்ல. நான் அதிசயங்களை நிகழ்த்துபவன் அல்ல. எனக்கு தெரிந்த விடயங்களும் இருக்கின்றன, தெரியாத விடயங்களும் இருக்கின்றன. ஆனால், சகல நேரங்களிலும் சரியானவற்றை செய்து எமது தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான கூட்டு முயற்சிக்கு தலைமை தாங்குவதற்கு என்னை நான் அர்ப்பணிப்பேன்.”
ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு திசநாயக்க கூறிய இந்த வார்த்தைகளின் பின்புலத்திலேயே, இந்த கட்டுரை ஜனாதிபதியாக அவரது முதல் வருட செயற்பாடுகளின் முன்னேற்றத்தின் மீது இவ்வாரம் கவனம் செலுத்துகிறது. மக்களின் வாக்குகளைப் பெறவதற்காக செய்ப்படுகின்ற பிரசாரங்களை அழகான வார்த்தை ஜாலங்களுடனும் ஆட்சிமுறையின் சிக்கல்களை வெறுப்பான உரை நடையுடனும் ஒப்பிடுவதுண்டு. இந்த பின்புலத்தில் இந்த இருபாக கட்டுரை திசநாயக்கவினால் தேர்தல்களுக்கு முன்னர் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளையும் அவற்றை நிறைவேற்றுவது தொடர்பில் கடந்த ஒரு வருட காலத்தில் அவரின் செயற்பாடுகளையும் ஆராய்கிறது. முதலாவது பாகம் திசநாயக்கவின் தேர்தல் பிரசாரங்கள் பற்றியும் இரண்டாவது பாகம் தேர்தலுக்கு பின்னரான அவரது செயற்பாடுகளையும் ஆராயும்.
திசநாயக்க இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக வந்த பிறகு அவர் தேசிய மக்கள் சக்தியை் 2024 நவம்பர் பாராளுமன்ற தேர்தலில் புகழ்மிக்க வெற்றிக்கு வழிநடத்திச் சென்றார். 2020 பாராளுமன்ற தேர்தலில் 445,958 ( 3.28 சதவீதம் ) வாக்குகளை மாத்திரமே பெறக்கூடியதாக இருந்த தேசிய மக்கள் சக்தி 6, 863,186 ( 61.6 சதவீதம் ) வாக்குகளை பெற்றது. அதற்கு பாராளுமன்றத்தில் 159 ஆசனங்கள் கிடைத்தன. பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி ஜனாதிபதி தேர்தலில் திசநாயக்க பெற்ற வெற்றியை விடவும் பிரமிக்கத்தக்கதாக இருந்தது.
அரசியல் வெற்றி
முன்னதாக குறிப்பிடப்பட்டதை போன்று பதவியேற்பு வைபவத்தில் திசநாயக்க தான் ஒரு மந்திரவாதியோ அல்லது அதிசயங்களை நிகழ்த்துபவனோ அல்ல என்று கூறினார். என்றாலும் அரசியலில் அவரின் குறிப்பிடத்தக்க எழுச்சியும் அடுத்தடுத்து இரு தேசிய தேர்தல்களில் பதிவுசெய்த வெற்றிகளும் நம்பமுடியாத ஒரு புனைகதையின் ஔிவட்டத்தை வெளிப்படுத்தியது. திசநாயக்கவின் அரசியல் வெற்றி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கடைப்பிடிக்கப்பட்ட அணுகுமுறையினதும் உத்தியினதும் விளைவானதாகும்.
2024 ஜனாதிபதி தேர்தலில் 36 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். அவர்களில் நான்கு பேர் மாத்திரமே உண்மையான போட்டியாளர்களாக கருதப்பட்டார்கள். மற்றையவர்கள் ‘ அவர்களும் போட்டியிட்டார்கள்’ என்ற வகையறாவைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அநுர குமார திசநாயக்க மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரே அந்த நான்கு பிரதான வேட்பாளர்கள். அவர்களுக்கு மத்தியிலும் கூட உண்மையான போட்டி ரணில், சஜித், அநுர ஆகியோருக்கு இடையிலான முக்கோணப் போட்டியாகவே இருந்தது. ஆனால், அநுரவே வெறாறிபெற்றார். அவர் தன்னை மக்கள் முன்னிறுத்துவதற்கு கடைப்பிடித்த செயல்முறையும் பாங்குமே அந்த வெற்றியின் முக்கியமான ஒரு காரணியாகும்.
ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும நாமல் ராஜபக்சவும் வெவ்வேறுபட்ட தரங்களில் அரசியல் குடும்ப மரபுகளைக் கொண்டவர்களாக இருந்தனர். ரணில் ஒரு காலத்தில் அரசாங்கங்களை ஆக்கவும் அழிக்கவும் வல்லமை கொண்டவராக விளங்கியவர் என்று கருதப்பட்ட எஸ்மண்ட் விக்கிரமசிங்கவின் மகன். அத்துடன் ரணில் முன்னாள் பிரதமரும் ஜனாதிபதியுமான ஜே.ஆர். ஜெயவர்தனவின் மருமனுமாவார். சஜித் இன்னொரு முன்னாள் பிரதமரும் ஜனாதிபதியுமான ரணசிங்க பிரேமதாசவின் மகன். நாமலும் முன்னாள் பிரதமரும் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்சவின் மகன்.
இந்த மூவருடனும் ஒப்பிடும்போது திசநாயக்க அரசியல் பின்புலம் எதையும் கொண்டிராதவர். அவரது தந்தையார் ரண்பண்டா திசநாயக்க ஒரு சாதாரண விவசாயி என்பதுடன் அரசாங்க திணைக்களம் ஒன்றின் சிற்றூழியர். தனது பிரதான போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது திசநாயக்க வசதி வாய்ப்புடனான ஒரு கல்வியைப் பெற்றவருமல்ல. ரணிலும் சஜித்தும் நாமலும் புகழ்மிக்க கொழும்பு பாடசாலைகளின் பழைய மாணவர்கள் என்கிற அதேவேளை, அநுர தம்புத்தேகம மத்திய கல்லூரியிலேயே கவ்விகற்றார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு சில வாரங்கள் முன்னதாக திசநாயக்கவின் பழைய பாடசாலையின் மாணவர்களும் ஆசிரியர்களும் அவரை வரவேற்று பாராட்டு நிகழ்வொன்றை நடத்தினார்கள். அந்த நிகழ்வில் உரையாற்றியபோது திசநாயக்க தனது பிரதான போட்டியாளர்களை விடவும் வேறுபட்ட முறையில் அமைந்திருந்த தனது வசதிகுறைந்த வாழ்க்கை அந்தஸ்தை சுட்டிக்காட்டினார். தனது போட்டியாளர்கள் நன்கு நிலைபெற்ற அரசியல் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் புகழ்மிக்க கொழும்பு பாடசாலைகளின் பழைய மாணவர்கள் என்றும் அவர் கூறினார்.
சுருக்கமாகச் சொல்வதானால், திசநாயக்க தன்னை அதிகாரத்தையும் வசதிவாய்ப்பையும் எதிர்த்து நிற்கின்ற ஒரு எளிமையான பின்புலத்தைக் கொண்ட நலிவுற்ற வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவராக மக்கள் முன்னிறுத்தினார். பின்தங்கிய சமூகப் பின்புலத்தை தனது அரசியல் அனுகூலத்துக்காக அவர் பயன்படுத்திக் கொண்டார். அவர் கடைப்பிடித்த அந்த அணுகுமுறை தம்புத்தேகம பாடசாலை நிகழ்வில் கூடியிருந்தவர்களை தாண்டி நாடு பூராவும் இருந்த வாக்களிப்பு நிலையங்களில் நேர்மறையான முறையில் பிரதிபலித்தது. 2019 ஆம் ஆண்டில் 3 சதவீதமாக இருந்த்த திசநாயக்கவின் வாக்குகள் 2024 ஆம் ஆண்டில் 42 சதவீதத்துக்கு உயர்ந்தது.
கோட்டாவின் வாக்குகள்
3 சதவீதத்தில் இருந்து 42 சதவீதத்துக்கு தனது வாக்குகளை 14 மடங்கினால் அதிகரித்த இந்த பிரமாண்டமான பாய்ச்சலை திசநாயக்க எவ்வாறு செய்தார்? 2019 ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச பெற்ற வாக்குகளில் சுமார் 80 சதவீதமான வாக்குகளை 2024 ஆம் ஆண்டில் திசாநாயக்கவுக்கு அளிக்கப்படதாக ஆய்வுகள் கூறுகின்றன. கோட்டாவின் 69 இலட்சம் வாக்குகளில் சுமார் 15 சதவீதமானவை ரணில் விக்கிரமசிங்கவுக்கு விழுந்த அதேவேளை, எஞ்சிய வாக்குகள் நாமல் ராஜபக்சவுக்கும் திலித் ஜயவீரவுக்கும் கிடைத்தன. பின்னோக்கிய அறிவுடன் நோக்கும்போது வெளிப்படையாக செய்யவில்லை என்று தோன்றினாலும், தேர்தலில் திசநாயக்க பிரதானமாக கோட்டாவின் வாக்குகளை இலக்கு வைத்தார் போன்று தெரிகிறது.
பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கிய இலங்கையில் ‘ அறகலய ‘ என்று வர்ணிக்கப்பட்ட மக்கள் போராட்டத்தின்போது திசநாயக்க கடைப்பிடித்த தந்திரோபாயமே அவரின் தேர்தல் வெற்றிக்கு பிரதான காரணமாகும். முன்னென்றும் இல்லாத வகையிலான பொருளாதார நெருக்கடியை நாடு எதிர்நோக்கியபோது ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.
தேசிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் சக்தியும்
தேசிய நலன்களை அடிப்படையாகக் கொண்டு கூட்டு முயற்சி ஒன்றின் ஊடாக பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்வதற்கு தனது அரசாங்கத்துடன் ஒத்துழைக்க முன்வருமாறு அன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிச்க்கட்சிகளுக்கு தொடர்ச்சியாக அழைப்பு விடுத்தபோது தேசிய மக்கள் சக்தியும் ( ஜாதிக ஜன பலவேகய ) ஐக்கிய மக்கள் சக்தியும் சிக்கலான நிலைவரம் ஒன்றை எதிர்நோக்கின. அத்தகைய ஒரு அழைப்பை நிராகரித்து பகைமை உணர்வு கொண்ட, ஒத்துழையாத அணுகுமுறை ஒன்றை கடைப்பிடித்ததை மக்கள் வரவேற்காமல் இருந்திருக்கலாம். நெருக்கடியான நிலைவரம் ஒன்றின் போது கட்சிக்கு மேலாக நாட்டைப்பற்றி சிந்திக்கவில்லை என்பதற்காக எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கக் கூடும்.
பொருளாதார நெருக்கடியின் பாரதூரத்தன்மையை குறைத்து மதிப்பிட்டதன் மூலமாக இந்த சிக்கலான நிலைவரத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியும் தேசிய மக்கள் சக்தியும் கடந்துசென்றன. ராஜமக்சாக்களின் கைப்பொம்மை என்று விக்கிரமசிங்கவை அவை குற்றஞ்சாட்டின. பொருளாதாரச் சவாலை சமாளிக்க வேண்டிய தேவைக்கு பதிலாக, பிரதான எதிர்க்கட்சிகள் ராஜபக்சாக்கள் செய்ததாகக் கூறப்படும் கொள்ளை மற்றும் ஊழலை கையாளும் ஒன்றாக பிரச்சினையை ஓரங்கட்டினர்.
விக்கிரமசிங்க ராஜபக்சாக்களுக்கு முண்டுகொடுப்பதாகவும் தண்டனையில் இருந்து மெதமுலான குடும்பத்தை பாதுகாப்பதாகவும் காரணம் கூறி எதிர்க்கட்சிகள் அவருக்கு ஆதரவு வழங்க மறுத்தன. விக்கிரமசிங்க பிரதானமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களினாலேயே ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டவர் என்பதையும் பாராளுமன்றத்தில் சட்டங்களை நிறைவேற்றுவதற்கு அவர்களிலேயே தங்கியிருந்தார் என்பதும் எதிச்க்கட்சிகளின் இந்த நிலைப்பாட்டை வலுப்படுத்தியது.
சஜித்தின் பெரும் தவறு
சஜித் பிரேமதாச செய்த அரசியல் பெருந்தவறு அவரை விடவும் மேம்பட்ட நிலைக்கு திசநாயக்க வருவதற்கு வழிவகுத்தது. ராஜபக்சாக்கள் தலைமையிலான பொதுஜன பெரமுன ஊழல்தனமானது என்றும் அது ஒதுக்கப்பட வேண்டியது என்று எடுத்த நிலைப்பாட்டில் ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தி உறுதியாக நின்றது. பொதுஜன பெரமுவுடனோ அல்லது அதில் இருந்து வெளியேறி தங்களை சுயாதீனமானவர்கள் என்று அறிவித்த பாராளுமன்ற உறுப்பினர்களுடனோ சேர்ந்துகொள்வதற்கு தேசிய மக்கள் சக்தி மறுத்தது.டல்லஸ் அழகப்பெரும
தலைமையிலான ஒரு குழுவினர் தேசிய மக்கள் சக்தியில் இணைவதற்கு விரும்பியபோது அவர்களின் முகங்களில் அறைந்தாற்போல் திசநாயக்க திசைகாட்டியின் கதவை அடித்து மூடினார்.
மறுபுறத்தில் சஜித் பொதுஜன பெரமுனவில் இருந்து வெளியேறி வந்தவர்களை தனது ஐக்கிய மக்கள் சக்திக்குள் இணைத்துக் கொண்டார். அதேவேளை பொதுஜன பெரமுனவின் பல ‘ சுயாதீனங்கள் ‘ ரணிலை ஆதரித்தன. அதனால், பொதுஜன பெரமுனவில் இருந்து வெளியேறியவர்களை அரவணைத்து அவர்கள் தன்னுடனும்் இணைவதாக சஜித் காட்டிக்கொண்டார். பொதுஜன பெரமுனவின் முன்னாள் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் , பிரேமதாசவின் நெருங்கிய ஒரு ஆலோசகராக மாறினார். அழகப்பெரும உட்பட அந்த கட்சியின் பல முன்னாள் உறுப்பினர்கள் படிப்படியாக சஜித்துடன் அணிசேர்ந்து கொண்டார்கள்.
பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை தனது ஐக்கிய மக்கள் சக்தி கவருகின்றது என்பதைக் காண்பிக்கும் விருப்பத்தில் சஜித் அண்மைக்காலம் வரை ராஜபக்சாக்களின் தலைமையிலான ஊழல் கட்சியின் அங்கமாக இருந்தவர்களை ஏற்றுக் கொண்டார். தொலைபேசி முகாமில் இணைந்துகொள்வதன் மூலம் தங்களுக்கு பாவமன்னிப்பு கிடைக்கும் என்று ஊழல்தனமான பாவிகள் நினைத்துக்கொண்டார்கள் போலும்.
அரசியல் அனுகூலத்துக்காக செய்த காரியங்கள் பிரேமதாசவின் அரசியல் பிம்பத்தை பாதித்தன. இதற்கு மாறாக திசநாயக்கவின் செல்வாக்கு உயர்ந்துகொண்டு போனது. ஊழல்தனமான கட்சி ஒன்றில் இருந்து வருகின்ற வருகின்ற அரசியல் துரோகிகளை அரவணைக்காத கேட்பாட்டு உறுதிப்பாடு கொண்ட ஒரு கட்சியாக ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தி நோக்கப்பட்டது. ஜே.வி.பி.யின் பாராளுமன்றப் பலம் தொடர்ந்தும் மூன்றாக இருந்த அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு போனது. பாராளுமன்றத்துக்கு வெளியில் ஜே.வி.பி.யின் ஆதரவு அதிகரித்தது. அதுவே உண்மையில் தேவையானதாக இருந்தது.
ஊழல் எதிர்ப்பு
தேசிய மக்கள் சக்தியின் விட்டுக்கொடுக்காத நிலைப்பாடு திசைகாட்டி மாத்திரமே உண்மையில் ஊழலுக்கு எதிரானது, சாஜபக்சாக்களையும் அவர்களது ஏவலாட்களையும் சடடத்தின் முன் நிறுத்துவதில் உறுதியான அக்கறை கொண்டது என்ற நம்பிக்கையை வலுப்படுத்தியது. திசநாயக்க மாத்திரமே ஊழலை ஒழிக்கும் இலட்சியத்துக்கும் நாட்டைப் பாழ்படுத்திய ஊழல் சக்திகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் தன்னை அர்ப்பணித்த ஒருவராக முன்னிலைப்படுத்தப்பட்டார்.
ஜே.வி.பி.மிகுந்த ஆர்வத்துடன் முன்னெடுத்த ஊழல் எதிர்ப்பு பிரசாரம் பெருமளவு மக்களினால் அக்கறையுடன் நோக்கப்பட்டது. அனேகமாக வாழ்வின் சகல அம்சங்களிலும் வியாபித்துநிற்கும் ஊழல் குறித்து கடுமையான ஆத்திரமடைந்த மக்கள் அதற்கு முடிவு கட்ட வேண்டும் அல்லது குறைந்தபட்சம் அதை கட்டுப்படுத்த வேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால், உள்ளார்ந்த காரணம் ஒன்றும் கூட இருந்தது.
அடிப்படையில் இலங்கையின் பொருளாதார நெருக்கடி பல தசாப்தகால தவறான பொருளாதார முகாமைத்துவத்தின் விளைவானதாகும். கேம்பிரிட்ஜில் கல்விகற்ற பொருளியல் நிபுணரான ஜோன் றொபின்சனின் வார்த்தைகளில் சொல்வதானால், ” மரங்களை நாட்டாமலேயே இலங்கை பழங்களை சாப்பிட்டு வந்திருக்கிறது.” ராஜபக்ச ஆட்சி நெருக்கடியை மேலும் மோசமாக்கி தவிர்க்க முடியாத நெருக்கடியை விரைவுபடுத்த உதவியது.
பொருளாதார மீட்சிக்கான பாதையில் நாட்டை ரணில் விக்கிரமசிங்கவே வழிநடத்தினார். மக்களுடன் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்வதே அவரின் அணுகுமுறையாக இருந்தது. சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை முன்னெடுப்பதை தவிர வேறு தெரிவு இல்லை என்று கூறிய அவர் பொருளாதார மீட்சிக்கும் எதிர்காலத்தில் சுபிட்சத்துக்கும் வழிவகுக்க வேண்டுமானால் தற்போது மக்கள் கஷ்டங்களை அனுபவித்து தியாகங்களை செய்ய வேண்டும் என்று வெளிப்படையாகவே பேசினார். சுருக்கமாகச் சொல்வதானால், நெருக்கடிக்கு மறைமுகமாக மக்கள் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது. விவேகத்துடனும் பொறுப்புணர்வுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்று மக்களிடம் கேட்கப்பட்டது.
திசநாயக்க தலைமையிலான ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடனும் அவரது அரசாங்கத்துடனும் ஒத்துழைப்பதற்கு பதிலாக ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தி இதில் இருந்து விலகியிருந்து அவரை விமர்சித்துக் கொண்டிருந்தது. பொயுளாதார நெருக்கடியின் பாரதூரத்தன்மையை ஜே.வி.பி. குறைத்து மதிப்பிட்டது. அரசியல் காரணங்களுக்காக விக்கிரமசிங்க நெருக்கடியை பூதாகாரமாகக் காண்பிக்கிறார் என்று கூறி திசநாயக்க ரணிலை கேலி செய்தார்.
நெருக்கடிக்கு காரணமானவர்கள் என்று பொதுவில் ஊழல்தனமான அரசியல்வாதிகளையும் அதாராரிகளையும் குறிப்பாக ராஜபக்சாக்களையும் அவர்களுடன் தொடர்புடையவர்களையும் குற்றஞ்சாட்டும் தந்திரோபாயத்தை ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தி கடைப்பிடித்தது. நாடு வீழ்ந்திருக்கும் பொருளாதார சகதியில் இருந்து அதை மீட்டெடுப்பதற்கு மககள் மீது சுமையை ஏற்ற வேண்டிய தேவை இல்லை. போக்கிரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து அவர்கள் பல வருடங்களாக திட்டமிட்ட முறையில் கொள்ளையடித்த பணத்தை மீட்பது மாத்திரமே செய்ய வேண்டியதாகும். ஊழலை ஒழித்துக்கட்டி குற்றவாளிகளை தண்டித்தால் எல்லாம் சரியாகப் போய்விடும். மக்கள் எந்த வகையிலும் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிய தேயைில்லை என்பதே ஜே வி.பி./ தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடாகும்.
அவர்களது அந்த நிலைப்ப்டை மக்கள் வரவேற்றார்கள். திசநாயக்க தனது திறமையான பேச்சாற்றல் மூலமாக அந்த செய்தியை நாடு பூராவும் எடுத்துச் சென்றார். குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு ஊழல் முடிவுக்கு கொண்டுவரப்படும் போது சகல பொருளாதாரத் தொல்லைகளும் தீர்ந்துவிடும் என்று மக்களுக்கு கூறப்பட்டது. ஊழல்தான் நாட்டை மலினப்படுத்தியது. அதைக் கையாண்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறப்பட்டது.
இந்த கருத்தை ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களாக மக்களை மாற்றுவதில் திசநாயக்க பெருமளவுக்கு வெற்றி கண்டார். ஏனென்றால் நெருக்கடிக்க தாங்கள் பொறுப்பு அல்ல் என்று அந்த கருத்து மக்களை உணரவைத்தது. அவர்களது ஆத்திரம் ஊழல் சக்திகளுக்கு எதிராக திருப்பப்பட்டது. ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றால் திசநாயக்க ஜனாதிபதியாக வரவேண்டும் என்று அவர்கள் நம்பினார்கள்.
சர்வதேச நாணய நிதியம்
சரவதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியதற்காக விக்கிரமசிங்கவை ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தி மிகவும் கடுமையாக கண்டனம் செய்தது. இலங்கையில் இடதுசாரிகள் “பிறெட்டன் வூட்ஸ் இரணைகள் ” என்று அறிப்படும் உலகவங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் மீது பகைமையைக் கொண்ட வரலாறு ஒன்று இருக்கிறது. அந்த பகைமையை ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தி அந்த பகைமைக்கு புத்துயிர் கொடுத்தது.சர்வதேச நாணய நிதியத்தின் விளைவாக மக்கள் குறிப்பாக சமூகத்தின் நலிவுற்ற பிரிவினர் அனுபவிக்கும் இடர்பாடுகளை அது சுட்டிக்காட்டியது.
ஜனாதிபதியாக தான் தெரிவு செய்யப்பட்டால் சிறந்த ஒரு உடன்படிக்கையை செய்துகொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் மீள் பேச்சுவார்த்தையை நடத்தப்போவதாக திசநாயக்க உறுதியளித்தார். சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கு பதிலாக புலம்பெயய்ந்து வாழும் இலங்கையர்களின் நன்கொடைகள் மூலமாக பொருளாதார நெருக்கடிக்கு தீர்வைக் காணப்போவதாகக் கூட ஜே.வி.பி.யின் பொருளாதார மதியூகி சுனில் ஹந்துநெற்றி கூறியதையும் காணக்கூடியதாக இருந்தது.
எர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை தொடர்பான உண்மையான நிலைவரத்ததை மீண்டும் ஒரு தடவை ரணில் விக்கிரமசிங்க விளக்கிக் கூறினார். அளவுகோல் மாற்றப்படமுடியாதது ஆனால் சில விடயங்களில் சிறிய மாற்ங்களைச் செய்வது சாத்தியம் என்று அவர் சொன்னார். ரணில் கூறிய உண்மைகளை மக்கள் நம்பவில்லை. மாறாக திசநாயக்க கூறிய உண்மைக்குப் புறம்பான விடயஙாகளை அவர்கள் நம்பினார்கள்.
அத்தியாவசிய பொருட்களை விக்கிரமசிங்க கிடைக்கச் செய்தபோதிலும், அவற்றை பெரும்பான்மையான மக்களினால் ( சுமார் 70 சதவீதத்தினர் ) கொள்வனவு செய்வது கடடுப்படியாகாமல் இருந்தது. வாழ்க்கைச் செலவு உயர்ந்து கொண்டுபோன அதேவேளை, வேதனங்கள் அதிகரிக்கவில்லை. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக வந்த அதேவேளை, வறியவர்கள் மேலும் வறியவர்களானார்கள். நடுத்தர வர்க்கம் என்பது பெரும்பாலும் இல்லாமலே போய்விட்டது எனலாம். அத்தகைய ஒரு சூழ்நிலையில் திசநாயக்க கூறிய நடக்க வாய்ப்பில்லாத ஆனால் கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் மக்களுக்கு பெருளவுக்கு கவர்ச்சியானவையாக இருந்தன. அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகரித்தன. இறுதியில் திசநாயக்க வெற்றியை ருசித்து ஜனாதிபதியாக தெரிவானார்.
தேர்தல் பிரசாரங்களின்போது ரணிலையும் அவரது பொருளாதாரக் கொள்கைகளையும் விமர்சித்த புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி பதவியேற்ற பிறகு மறுதலையாக திம்பினார் . பொருளாதாரத்தை பொறுத்தவரை, திசநாயக்கவும் அவரது அரசாங்கமும் ரணிலின் கொள்கைகளை மிகுந்த நம்பிக்கையுடன் பின்பற்றி வருகிறார்கள். தேசிய மக்கள் சக்தி தேர்தல் பிரசாரங்களின்போது சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை கடுமையாக தாக்கியது. ஆனால், தற்போது திசநாயக்கவின் அரசாங்கம் அந்த உடன்படிக்கையை பின்பற்றுவதில் பெருமையடைகிறது.
ரணில் சென்ற பாதை
றோஹண விஜேவீரவின் நாட்களில் ஜே.வி.பி.யின் சிவப்புச்சட்டைத் தோழர்கள், ” நாம் செல்லும் பாதை எது? சேகுவேரா சென்ற பாதை ” என்று ஊர்வலங்களில் சுலோகத்தை எழுப்பினர். இன்று ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அத்தகைய ஊர்வலம் ஒன்றை நடத்துவதானால், அவர்கள் எழுப்பவேண்டிய சுலோகம் ,” நாம் செல்லும் பாதை எது? ரணில் விக்கிரமசிங்க சென்ற பாதை அது .”
>D.B.S.Jeyaraj can be reached at dbsjeyaraj@yahoo.com
ஆங்கில மூலம்: டி. பி. எஸ். ஜெயராஜ் (Daily Mirror)
தமிழில்: வீரகத்தி தனபாலசிங்கம்
நன்றி: வீரகேசரி
*******************************************************************************

