டி.பி.எஸ். ஜெயராஜ்
தமிழ் திரைப்படங்களை பார்த்து வளர்ந்த இந்த கட்டுரையாளரைப் போன்ற தமிழ்ச்சினிமா ரசிகர்களுக்கு தென்னிந்தியாவின் பழம்பெரும் நடிகை பி.சரோஜாதேவியின் மரணம் பெரும் கவலையைத் தந்தது. 2025 ஜூலை 14 ஆம் காலையில் திகதி தனது தினசரி 30 நிமிட பூஜை வழிபாட்டைச் செய்து முடித்துவிட்டு சோபாவில் இருந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த வேளையில் திடீரென்று ஒரு முனகலுடன் மயங்கி விழுந்த அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது அவர் மரணமடைந்து விட்டதாக அங்கு அறிவிக்கப்பட்டது. அவருக்கு 87 வயது.
எனது சிறுவயதில் இருந்தே நான் தமிழ்த் திரையுலகின் நடிகைகள் மத்தியில் சரோஜாதேவியின் ஒரு பெரிய ரசிகன். ஐந்து தசாப்தங்களுக்கும் அதிகமான கால திரையுலக வாழ்வைக் கொண்ட அவர் 209 படங்களில் நடித்திருக்கிறார். இவற்றில் 161 படங்களில் அவர் கதாநாயகியாக அல்லது முன்னணி பாத்திரங்களில் நடித்திருக்கிறார். மற்றைய படங்களில் அவர் துணைப் பாத்திரங்களில் அல்லது குணசித்திர பாத்திரங்களில் நடித்தார். திரையுலக வாழ்வின் ஆரம்பக் கட்டங்களில் சரோஜாதேவி நாட்டியக்காரியாகவும் தோன்றினார்.
அந்த நாட்களில் ஒரு திரைப்படம் இடைவிடாமல் தொடர்ச்சியாக திரையிடப்படுகின்ற வாரங்களின் எண்ணிக்கையை பொறுத்தே அதன் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. சரோஜாதேவி கதாநாயகியாக நடித்தவற்றில் 103 படங்கள் நூறுக்கும் அதிகமான நாட்கள் ஓடின. சில படங்கள் 25 வாரங்களுக்கும் அதிகமாக தொடர்ச்சியாக ஓடி வெள்ளி விழாவை கண்டன. அவரின் ஒருசில படங்கள் 50 வாரங்களுக்கும் அதிகமாகவும் ஓடின.
சிவாஜி கணேசன், எம்.ஜி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்.) மற்றும் ஜெமினி கணேசன் ஆகிய மூவரும் 20 ஆம் நூற்றாண்டின் ஐம்பதுகள் தொடக்கி எழுபதுகள் வரை தமிழ் திரையுலகில் ஆதிக்கம் செலுத்தினர். ‘ கொலிவூட் ‘ என்று என்று அழைக்கப்பட்ட தமிழ்நாட்டு திரையுலகில் அவர்கள் கோலோச்சினர்.
தமிழ்ச் சினிமாவின் ‘மூவேந்தர்’
சேர, சோழ, பாண்டியர்கள் தமிழர் வரலாற்றில் மூன்று அரச வம்சங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். மூவேந்தர்கள் என்று அவர்கள் அழைக்கப்பட்டனர். சிவாஜி, எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன் மூவரும் தமிழ்ச் சினிமாவின் மூவேந்தர் என்று குறிப்பிடப்பட்டனர். பானுமதி, அஞ்சலிதேவி, பத்மினி, சாவித்திரி, தேவிகா, ஜமுனா, சௌகார் ஜானகி, கே.ஆர். விஜயா, ஜெயலலிதா மற்றும் வாணிஸ்ரீ போன்ற பல நடிகைகள் அந்த மூவேந்தருடன் திரைப்படங்களில் கதாநாயகிகளாக நடித்தனர்.
ஆனால், சரோஜாதேவி மாத்திரமே மூவருடனும் அனேகமாக சமமான எண்ணிக்கை படங்களில் சோடி சேர்ந்து நடித்தார். அவர் எம்.ஜி.ஆருடன் 26 படங்களிலும் சிவாஜியுடன் 22 படங்களிலும் ஜெமினியுடன் 17 படக்களிலும் நடித்தார். மேலும் அவர் அந்த மூவேந்தரின் சமகாலத்தவரான எஸ்.எஸ் இராஜேந்திரனுடனும் பல படங்களில் நடித்தார். இந்த பின்புலத்தில், கடந்த நூற்றாண்டின் அறுபதுகளின் முற்பகுதியிலும் நடுப்பகுதியிலும் தமிழ்ச் சினிமாவின் முடிசூடா மகாராணியாக சரோஜாதேவி விளங்கினார் என்று கூறமுடியும்.
இலங்கையின் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் சரோஜாதேவி. பெருமளவுக்கு பிரபலமானவராக விளங்கினார். தமிழ், முஸ்லிம் சினிமா ரசிகர்களுக்கு அப்பால் அவருக்கு பல சிங்கள ரசிகர்களும் கூட (குறிப்பாக பெண்கள்) இருந்தார்கள். எம்.ஜி.ஆருடன் சேர்ந்து சரோஜாதேவி 1965 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்தபோது இது பரவலாக தெரியவந்தது. அவர்கள் இருவரும் சென்ற இடங்களில் எல்லாம் இரசிகர்கள் மொய்த்துக் கொண்டார்கள். இரசிகர்களை கவர்ந்த பிரதான காந்தமாக எம்.ஜி.ஆரே விளங்கினார் என்பது உண்மை. ஆனால், சரோஜாதேவியும் தானாக பெருமளவுக்கு மக்கள் கூட்டத்தைக் கவர்ந்தார். இந்த ரசிகர்களை தமிழ்ப் பத்திரிகைகள் பேட்டி கண்டபோது சரோஜாதேவியைச் சூழ்ந்து கொண்டவர்களில் பலர் சிங்களவர்கள் என்பது தெரியவந்தது.
பெங்களூர்/ பெங்களூரு
இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தபோது அன்று பெங்களூர் என்று அறியப்பட்ட இன்றைய பெங்களூருவில் சரோஜாதேவி 1938 ஜனவரி 7 ஆம் திகதி பிறந்தார். பிரிட்டிஷ் இந்தியாவின் பெங்களூரில் வசித்த போதிலும், அவரது குடும்பம் அடிப்படையில் மைசூர் மகாராஜாவின் முன்னைய சமஸ்தானத்தின் சன்னப்பட்டின பிரிவில் தசவார என்ற இடத்தைச் சேர்ந்ததேயாகும்.
அவரது தந்தையார் பைரப்பா ஒரு பொலிஸ் அதிகாரி. தாயார் ருத்ரம்மா குடும்பத் தலைவி. ஐந்து பெண் பிள்ளைகளில் சரோஜாதேவி நான்காவது பிள்ளை. அவருக்கு வைக்கப்பட்ட பெயர் ராதா தேவி. திரைப்படங்களில் நடிக்கத் தொடக்கியதும் சரோஜாதேவி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அவரது மூன்று மூத்த சகோதரிகளுக்கும் சரஸ்வதி தேவி, பாமா தேவி, சீதா தேவி என்று பெயர் வைக்கப்பட்டது.இளைய சகோதரியின பெயர் வசந்தா தேவி.
பெங்களூரில் பிறந்த சரோஜாதேவி தன்னை பெங்களூரு வாசியாக கருதினார். சிறுவயதில் இருந்தே பெங்களூருவின் மல்லேஸ்வரம் பகுதியில் அவர் வசித்தார். திரையுலகில் அவரது பெயர் பி.சரோஜாதேவி என்று வந்தபோது அது தந்தையார் பைரப்பாவின் பெயரைக் குறிக்கிறது என்று பலரும் நினைத்தனர். ஆனால், தனது பெயருக்கு முன்னால் உள்ள ‘பி’ முதல் எழுத்து பெங்களூர் அல்லது பெங்களூருவை குறிப்பதாக பல சந்தர்ப்பங்களில் சரோஜாதேவி கூறியிருந்தார்.
பெங்களூரில் சம்றைப்பேட்டையில் சென். தெரேசா மகளிர் உயர் பாடசாலையில் சரோஜாதேவி.தனது ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலைக் கல்வியைப் பெற்றார். ஒரு மருத்துவராக அல்லது பாடசாலை ஆசிரியையாக வருவதே அவரின் அபிலாசையாக இருந்தது. ஆனால், விதி வேறுவிதமாக அமைந்து விட்டது. நல்ல பாடகியும் நாட்டியக்காரியுமான சரோஜா பாடசாலை கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பாடகரும் நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான கொன்னப்ப பாகவதரின் கவனத்தை அவர் பெற்றுவிட்டார். சரோஜாதேவியின் பெற்றோரிடம் தொடர்பு கொள்ளப்பட்டு, பாகவதர் உங்கள் மகள் தன்னுடன் திரைப்படமொன்றில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறார் என்று கூறப்பட்டது.
” மகாகவி காளிதாச “
பைரப்பாவும் ருத்ரம்மாவும் இணக்கம் தெரிவித்ததையடுத்து சரோஜாதேவி ‘ மகாகவி காளிதாச’ என்ற கன்னடப் படத்தில் கொன்னப்ப பாகவதருக்கு சோடியாக நடித்தார். அது 1955 ஆம் ஆண்டில் வெளியானது. கே. ஆர். சீத்தாராம சாஸ்திரி இயக்கிய காவியக் கவிஞர் காளிதாஸை பற்றிய அந்த படத்தில் கொன்னப்ப பாகவதர் காளிதாஸாக நடித்தார். 17 வயதான சரோஜாதேவி வித்யதாராவாக நடித்தார். அந்த படம் தேசிய விருது பெற்றது.
‘ மகாகவி காளிதாச ‘ படத்தில் நடித்து திரையுலகில் வெற்றிகரமான பிரவேசத்தை செய்த சரோஜாதேவிக்கு மேலும் பல கன்னடப் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. இதையடுத்து இல்லறமே நல்லறம், தங்கமலை இரகசியம் மற்றும் பார்த்திபன் கனவு போன்ற தமிழ்ப் படங்களில் சிறிய பாத்திரங்களில் நடிப்பதற்கு அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன.
“நாடோடி.மன்னன்”
நாடோடி மன்னன் படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க எம்.ஜி. ஆர்.சரோஜாதேவிக்கு வாய்ப்பைக் கொடுத்ததன் மூலமாக தமிழ்த் திரையுலகில் அவருக்கு முக்கியமான ஒரு இடம் கிடைத்தது. அந்த படம் 1952 ஆம் ஆண்டில் வெளியான, ஸ்ருவார்ட் கிராங்கெர் நடித்த ‘பிறிசனர் ஒஃவ் சென்டா’ (Prisoner of Zenda ) என்ற ஆங்கிலப் படத்தின் தமிழ்த் தழுவலாகும். நாடோடி மன்னனில் இரட்டை வேடங்களில் நடித்த எம்.ஜி.ஆரே அதை தயாரித்து இயக்கினார். நாடோடி வீராங்கன் என்பது அவரின் ஒரு வேடம். மன்னன் மார்த்தாண்டன் என்பது அடுத்த வேடம். மன்னன் மார்த்தாண்டனின் ஜோடி மனோகரியாக எம்.என். ராஜம் நடித்த அதேவேளை, மூத்த நடிகை பானுமதியும் புதுமுகம் சரோஜாதேவியும் நாடோடி வீராங்கனில் காதல் கொண்டவர்களாக நடித்தனர்.
220 நிமிட நேர படமான நாடோடி மன்னனின் முதல் அரைப்பகுதி கறுப்பு, வெள்ளையிலும் இரண்டாவது அரைப்பகுதி கேவா வர்ணத்திலும் படமாக்கப்பட்டன. படத்தின் கதையின் பிரகாரம் முதல் அரைப்பகுதியின் காட்சிகள் இரத்தினபுரி என்ற நாட்டிலும் பின் அரைப்பகுதியின் காட்சிகள் கன்னித்தீவு என்ற பெயர் கொண்ட தீவிலும் இடம் பெறுகின்றன. மதனாவாக நடித்த பானுமதி முதல் அரைப்பகுதியின் முடிவில் இறந்து விடுகிறார். இரண்டாவது பகுதியில் ரத்னா என்ற பாத்திரத்தில் சரோஜாதேவி பிரவேசம் செய்கிறார்.
சரோஜாதேவி தமிழில் சரளமாக பேசமுடியாதவராக இருந்ததால், அவருக்கான வசனங்கள் சுலபமாக உச்சரிக்கக் கூடியவையாக எளிதாக்கப்பட்டன. ” மானைத்தேடி ” என்ற பாடலில் அவர் நாட்டியமாடி நடித்தார். ” கண்ணில் வந்து மின்னல்” என்ற பாடல் எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் இணைந்து பாடுவதாக அமைந்தது. சரோஜாதேவிக்காக இந்த இரு பாடல்களையும் பாடகி ஜிக்கி பாடினார்.
நாடோடி மன்னன் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது. எம்.ஜி.ஆரின் செல்வாக்கையும் மதிப்பையும் உயர்த்திய அதேவேளை நாடோடி மன்னனின் வர்த்தக ரீதியான வெற்றி சரோஜாதேவிக்கு பட வாய்ப்புகள் குவிவதற்கு வழிவகுத்தது. அன்று 30 நாட்களில் 35 படங்களில் நடிப்பதற்கான ஒப்பந்தங்களை அவர் செய்துகொண்டதாக கூறப்பட்டது.
சரோஜாதேவி முன்னணிப் பாத்திரத்தில் நடித்த முதல் தமிழ்ப் படம் நடோடிமன்னனே என்று நம்பப்பட்டது. ஆனால், அது தவறு. அவர் கதாநாயகியாக நடித்த முதல் படம் செங்கோட்டைச்சிங்கம். தேவர் பிலிம்ஸின் உரிமையாளரான சின்னப்பா தேவர் தயாரித்த அந்த படத்தில் உதயகுமாருடன் ஜோடியாக சரோஜாதேவி நடித்தார். அது 1958 ஜூலை 11 வெளியானது. நாடோடி மன்னன் ஆறு வாரங்கள் கழித்து 1958 ஆகஸ்ட் 22 வெளியானது.
எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின்னரான வருடங்களில் சரோஜாதேவி எம்.ஜி.ஆர். தனது படங்களில் கதாநாயகியாக நடிக்க வைத்ததன் மூலம் தனது வாழ்வில் வகித்த முக்கிய பாத்திரத்தை மதித்து அங்கீகரித்தார். கண்கண்ட தெய்வம் என்று எம்.ஜி.ஆரை அவர் குறிப்பிடுவார். நாடோடி மன்னனுக்கு பிறகு 1961 மார்ச்சில் வெளியான திருடாதே படத்தில் எம்ஜி.ஆருக்கு ஜோடியாக சரோஜாதேவி நடித்தார். அதைத் தொடர்ந்து 1961 நவம்பரில் வெளியான தாய் சொல்லைத் தட்டாதே என்ற படத்தில் எம். ஜி.ஆருடன் அவர் நடித்தார்.
அதற்கு பிறகு அடுத்துவந்த வருடங்களில் எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் சேர்ந்து நடித்த பல படங்கள் வெளியாகின. அனேகமாக அவை எல்லாமே வசூலில் சாதனை படைத்தன. எங்க வீட்டு பிள்ளை, படகோட்டி, அன்பே வா, பெரிய இடத்துப் பெண், பணக்காரக் குடும்பம், கலங்கரை விளக்கம் மற்றும் பணத்தோட்டம் போன்ற படங்கள் பெரு வெற்றி.பெற்றன. 1967 ஆண்டில் வெளியான அரசகட்டளையே அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த கடைசிப் படமாகும்.
எம்.ஜி. ஆர்.தொட்டு நடிக்காத கொள்கை
முன்னைய படங்களில் எம்.ஜி. ஆர். தனது கதாநாயகிகளை தொட்டு நடிக்காத ஒரு கொள்கையை கடைப்பிடித்தார். திரையில் காதல் காட்சிகளில் கூட அவர் கதாநாயகிகளை ஒருபோதும் தொடமாட்டார். சரோஜாதேவி அது எல்லாவற்றையும் மாற்றினார். எம்.ஜி.ஆர். கதாநாயகிகளை தொட்டு நடிப்பதை சரோஜாதேவியில் இருந்தே ஆரம்பித்தார். அவர்கள் இருவருக்கும் இடையிலான திரை நெருக்கம் ரசிகர்களை கிறங்க வைத்தது. சரோஜாதேவியில் தொடங்கிய பிறகு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, மஞ்சுளா, லதா போன்ற தனது ஏனைய காதாநாயகிகளுடன் மிகவும் நெருக்கமாக நடித்தார்.
சிவாஜி கணேசன்
1959 அக்டோபர் 31 வெளியான பாகப்பிரிவினை சிவாஜி கணேசனுடன் சரோஜாதேவி சோடி சேர்ந்து நடித்த முதல் திரைப்படமாகும். முன்னதாக சபாஷ் மீனா படத்தில் அவர் சிவாஜியுடன் நடித்திருந்தார். ஆனால், அது ஒரு கதாநாயகி பாத்திரம் அல்ல. சிறந்த நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவுடன் கூட சரோஜாதேவி சோடி சேர்ந்து நடித்தார். தங்கமலை இரகசியம் படத்திலும் அவர் சிவாஜியுடன் சிறிய பாத்திரம் ஒன்றில் நடித்தார். பிரபலமான இயக்குநர் பீம்சிங் இயக்கிய பாகப்பிரிவினையே வசூலில் சாதனை படைத்த படமாக அமைந்தது. பொன்னி என்ற பெயரில் சிவாஜியின் காதலியாகவும் மனைவியாகவும் சரோஜாதேவி நடித்த அந்த படத்தில் ” தாளையாம் பூமுடிச்சு” என்ற காதல்பாட்டும் ” தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்” என்ற தனிப்பாடலும் இடம்பெற்றன.
அதற்கு பிறகு சிவாஜியும் சரோஜாதேவியும் சேர்ந்து நடித்த பல படங்கள் வெளிவந்தன. அவற்றில் பாலும் பழமும், விடிவெள்ளி, இருவர் உள்ளம், பார்த்தால் பசிதீரும், ஆலயமணி, புதியபறவை, தேனும்பாலும், என் தம்பி போன்றவை குறிப்பிடத்தக்கவை. அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த கடைசிப்படம் ‘ வன்ஸ் மோர் ‘ என்பதாகும். அது 1997 ஆம் ஆண்டில் வெளிவந்தது.
ஜெமினி கணேசன்
மூவேந்தரில் மூன்றாமவரான ஜெமினி கணேசனுடன் சரோஜாதேவி தலைசிறந்த இயக்குநரான சி.வி. ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளிவந்த கல்யாணப்பரிசு படத்திலேயே முதன்முதலாக கதாநாயகியாக நடித்தார். முன்னதாக திருமணம் போன்ற படங்களில் ஜெமினியுடன் அவர் சிறிய பாத்திரங்களில் நடித்திருந்தார். 1959 ஏப்ரில் 9 வெளியான கல்யாணப்பரிசு ஒரு முன்னோடியான வெற்றிப்படமாக அமைந்தது. அது சரோஜாதேவியை சிறந்த ஒரு நடிகையாக நிலை நிறுத்தியது. அதை தொடர்ந்து ஜெமினியுடன் அவர் 1959 ஆகஸ்ட் 28 வெளியான வாழவைத்த தெய்வம் என்ற இன்னொரு படத்திலும் நடித்தார்.
பிறகு மேலும் பல படங்களில் ஜெமினியுடன் சரோஜாதேவி சோடிசேர்ந்து நடித்தார். அவற்றில் கைராசி, ஆடிப்பெருக்கு, வாழ்க்கை வாழ்வதற்கே, எல்லோரும் இந்நாட்டு மன்னர், பனித்திரை, பணமா பாசமா, தாமரை நெஞ்சம், குலவிளக்கு மற்றும் ஐந்து இலட்சம் போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை. இறுதியாக அவர்கள் இருவரும் 1989 ஆம் ஆண்டில் வெளியான பொன்மனச்செல்வன் என்ற படத்தில் ஒன்றாக நடித்தனர்.
வசந்தி, சாந்தி, மீனா
சரோஜாதேவி கதாநாயகியாக நடித்த சகல படங்களுக்குள்ளும் மூன்று படங்களில் அவரின் பாத்திரங்கள் என்றென்றைக்கும் மறக்கமுடியாதவையாக அமைந்தன. கல்யாணப்பரிசு படத்தில் வசந்தி, பாலும் பழமும் படத்தில் சாந்தி, ஆலயமணி படத்தில் மீனா ஆகியவையே அந்த பாத்திரங்கள். இந்த பெயர்களை இந்தியா, இலங்கை மற்றும் மலேசியாவில் பலரும் புதிதாக பிறந்த தங்கள் குழந்தைகளுக்கு சூட்டியதாக அந்த நேரத்தில் பத்திரிகை கட்டுரைகளில் பதிவாகியிருக்கிறது.
சரோஜாதேவி கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர் தனியொரு மொழியில் அதிகமாக நடித்தவை என்றால் அது தமிழ்ப் படங்களேயாகும். இரண்டாவதாக, மூன்றாவதாக, நான்காவதாக அவர் அதிகமாக நடித்தவை முறையே கன்னடம், தெலுங்கு , இந்தி மொழிகளிலான படங்களாகும். ஒரு கட்டத்தில் அவர் தினமும் மூன்று நேர அட்டவணைகளில் நடிக்க வேண்டிய அளவுக்கு படவாய்ப்புகள் குவிந்தன. காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 1 மணிவரை, பிற்பகல் 2 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை, இரவு 9 மணி தொடக்கம் அதிகாலை 1 மணிவரை என்று அந்த அட்டவணைகள் இருந்தன. ‘பெண் என்றால் பெண்’ தமிழில் அவரது நூறாவது படம். தமிழில் கடைசியாக 2009 ஆம் ஆண்டில் வெளியான ஆதவன் என்ற படத்தில் அவர் நடித்தார். அதில் நடிகர் சூர்யாவின் பாட்டி வேடத்தை ஏற்றிருந்தார்.
மலையாளத்தில் ஒரு படமும் இல்லை
சரோஜாதேவி தமிழ், கன்னடம் , தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்தார். தமிழ்ப் படங்களில் சிவாஜி, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெமினி கணேசனுடன் சோடியாக நடித்தார். கன்னடப் படங்களில் ராஜ்குமார், உதயகுமார்,கல்யாண குமார் ஆகியோருடனும் தெலுங்கு படங்களில் நாகேஸ்வரராவ், ராமராவ், காந்தராவ் ஆகியோருடனும் இந்திப் படங்களில் திலிப் குமார், ராஜேந்திர குமார், ஷம்மி கபூர் மற்றும் சுனில் தத் ஆகியோருடனும் அவர் நடித்தார். ஆனால், மலையாளப் படங்களில் அவர் ஒருபோதும் நடித்ததில்லை. ஏன்?
அதற்கு காரணம் தாயார் ருத்ரம்மாதான். சரோஜாதேவியின் திரையுலக வாழ்க்கை விரிவடையத் தொடங்கியதும் மலையாளப் பட இயக்குநர்களிடமிருந்து அவருக்கு சில அழைப்புகள் வந்தன. ஆனால், படங்களில் ” முண்டு ” என்ற கேரளாவின் பாரம்பரிய உடையை அணிய வேண்டியிருக்கும் என்று அவரிடம் கூறப்பட்டது. முண்டு என்பது உடலின் கீழ்பாகத்தை மறைக்க இடுப்பைச் சுற்றியும் மேல் பாகத்தை மறைக்க மேல் முண்டு என்பதையும் கொண்ட ஒரு ஆடையாகும். அந்தக் காலத்து மலையாளத் திரைப்பட தயாரிப்பாளர்கள் திரையில் சரோஜாதேவி முண்டுவை மாத்திரம் அணியவேண்டும் என்று விரும்பினார்கள்.
ருத்தரம்மா அதை அனுமதிக்கவில்லை. தனது மகள் அவ்வாறு படங்களில் நடிக்கக்கூடாது என்று தடுத்த அவர் மலையாளப் படங்களில் ஒருபோதும் நடிக்கக் கூடாது என்ற உறுதிமொழியையும் வாங்கிக்கொண்டார். தனது இறுதி மூச்சு வரை அந்த உறுதிமொழியை சரோஜாதேவி காப்பாற்றினார்.
கையில்லாத மேற்சட்டையை அல்லது நீச்சலுடையை அணிந்து ஒருபோதும் நடிக்கக்கூடாது என்ற வேறு இரு நிபந்தனைகளையும் ருத்ரம்மா மகளுக்கு விதித்தார். மகள் தாயாரின் கட்டளைக்கு அடிபணிந்தார். சரோஜாதேவி எப்போதுமே திரையில் சாறி, சல்வார் காமிஸ் அல்லது சுரிதாரையே அணிந்தார்.
அலங்காரத்தின் சின்னம்
இந்த தடைகள் எல்லாம் இருந்தபோதிலும், சரோஜாதேவி அவரது காலத்துப் பெண்களினால் அலங்காரச் சின்னமாக (Fashion Icon ) கருதப்பட்டார். இரட்டைப்பின்னல் மற்றும் கொண்டைகள் உட்பட அவரது சிகையலங்காரம், காதணிகள், கழுத்து அட்டியல் மற்றும் கைவளையல்கள் உட்பட அவரது ஆபரணங்கள், அவரது சாறிகள், சுரிதார்களை கடந்துபோன ஒரு காலத்துப் பெண்கள் பின்பற்றி தங்களை் ஒப்பனை செய்தார்கள்.
சரோஜாதேவித்தமிழ்
தமிழ்ப் படங்களில் சரோஜாதேவியின் இன்னொரு தனித்துவமான அம்சம் அவரது குரலும் உச்சரிப்பும். கீச்சென்ற குரல் அவருக்கு. அவர் பேசுகின்ற பாணி மிகவும் கலகலப்பானதாகவும் சுண்டியிழுப்பது போன்றும் இருக்கும். குழந்தைகள் போன்ற அவரது தமிழ் உச்சரிப்பு துடுக்கானதாக இருக்கும். எம்.ஜி. ஆருடன் அவர் நடத்தபோது இது குறித்து குறைகூறப்பட்டது. ஆனால், எம்.ஜி.ஆரோ, சரோஜாதேவித்தமிழ் என்று ஒரு புதிய பாணியை அவர் வகுக்கப்போகிறார் என்று கூறி குறைசொன்னவர்களின் வாயை மூடினார்.
கன்டத்துப் பைங்கிளி
எம்.ஜி.ஆரின் வார்த்தைகள் தீர்க்கதரிசனமானவை. சரோஜாதேவி திரையில் பேசிய தமிழை தமிழ் ரசிகர்கள் ரசித்து மகிழ்ந்தார்கள். கன்னடத்துப் பைங்கிளி என்று அவர்கள் அவருக்கு பட்டம் சூட்டுகின்ற அளவுக்கு அந்த ரசனை இருந்தது.
அபிநய சரஸ்வதி
கதைசொல்லும் அவரது கண்கள் இன்னொரு சிறப்பு. ஒரு வார்த்தை கூட பேசாமல் சரோஜாதேவி தனது கண்களின் மூலமாக வெவ்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடியவர். இதுவும் ரசிகர்களினால் பெரிதும் வரவேற்கப்பட்டது. அபிநய சரஸ்வதி என்று 1965 ஆம் ஆண்டில் அவர் கௌரவிக்கப்படடார். மைசூர் மாநில அரசாங்கத்தினால் ( இன்றைய கர்நாடகா ) அந்த பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது.
கஜ காமினி நடை
கீச்சென்ற உச்சரிப்புடன் கூடிய சரோஜாதேவியின் குரலுக்கு புறம்பாக திரையில் அவர் நடந்து செல்கின்ற முறையும் மிகவும் கவர்ச்சியாக இருக்கும். அவர் நடக்கும்போது கமராக்கள் வேண்டுமென்றே அவரது பின்பக்கம் நோக்கி திரும்பும்.இத்தகைய கவர்ந்திழுக்கும் நடையை வட இந்திய இலக்கியமான வாத்சாயனரின் காமசூத்திரம் ‘ பெண் யானையின் நடை’ (கஜ காமினி நடை ) என்று வர்ணிக்கிறது. காமசூத்திரம் பெண் யானையின் கம்பீரமான நடைகுறித்து பல வர்ணனைகளைச் செய்திருக்கிறது.
புகழ்பெற்ற ஓவியர் எம்.எவ். ஹுசெய்ன் கஜ காமினியினால் பெரிதும் கவரப்பட்டு அழகிய நடிகையான மாதுரி தீக்சித்தை வைத்து கஜ காமினி என்று ஒரு திரைப்படத்தை தயாரித்தார். இடுப்பை அசைப்பது போன்ற கஜ காமினியின் அசைவுகள் ஒரு எளிலான நடன வடிவமாக கருதப்படுகிறது.
அண்மைக்காலத்தில், சஞ்சய் லீலா பான்சாலியின் பிரபலமான “ஹீரமண்டி” ( The Diamond Bazaar ) என்ற தொலைக்காட்சி தொடரில் நடிகை அதித்தி ராவ் ஹைதாரி சில நடனக் காட்சிகளில் கஜ காமினியை வெளிக் கொணர்ந்ததை காணக்கூடியதாக இருந்தது. முகால் – ஈ – அசாம் என்ற திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் மதுபாலாவும் பஜிரோ மஸ்தானி என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் தீபிகா படுகோனேயும் கஜ காமினியின் நடனச் சாயல்களை காண்பித்தார்கள்.
தென்னிந்திய நடிகைகளில் திரையில் கஜ காமினியின் நடையைக் காண்பித்தவர் சரோஜாதேவி மாத்திரமே என்று கூறப்பட்டது. அதனால், அவர் கன்னடத்துப் பைங்கிளியாக இனிமையாக கொஞ்சும் மொழியில் பேசிய தென்னிந்திய நடிகை மாத்திரமல்ல, படங்களில் கவர்ந்திழுக்கும் கஜ காமினியின் நடையையையும் நடந்து காட்டியவராகவும் மிளிர்ந்தார்.
பி.சுசீலா
சரோஜாதேவி தமிழ்ப்படங்களில் நடிக்கத்தொடங்கிய போது திரையில் அவருக்கு ஜிக்கி, பி.லீலா மற்றும் பி.சுசீலா போன்றவர்கள் பின்னணி பாடகிகளாக இருந்தார்கள். ஆனால், பிறகு சரோஜாதேவிக்கு பெருமளவு தமிழ்ப் படங்களில் சுசீலாவே பின்னணிப் பாடகியாக விளங்கினார். தனிப்பாடல்கள், காதல் பாடல்கள், நடனப் பாடல்கள் என்று சரோஜாதேவிக்கு சுசீலா பின்னணிக் குரல்கொடுத்த படங்கள் ஏராளம்.
அவற்றில் உன்னைக்கண்டு நான் வாட, பால்வண்ணம் பருவம் கண்டு, கொடியசைந்ததும் பாட்டு வந்ததா, ஆலையமணியின் ஓசையை, காதல் சிறகினில், நான் பேச நினைப்பதெலாலாம், என்னை யாரென்று, அன்புள்ள அத்தான் வணக்கம், அன்றுவந்ததும் இதே நிலா, தொட்டால் பூமலரும், பொன்னெழில் பூத்த, சங்கே முழங்கு, குமரிப்பெண்ணின் உள்ளத்திலே, சிட்டக்குருவி முத்தம் கொடுத்து, குமரிப் பெண்ணின் உள்ளத்திலே, லவ் பேட்ஸ் லவ் பேட்ஸ் என்று நினைவைவிட்டு அகலாத பாடல்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
வொக்கலிக்கா
கன்னட மொழி பேசுபவர்களை அதிகப் பெரும்பானமையாகக் கொண்ட கர்நாடகா மாநிலம் முன்னர் மைசூர் என்றே அழைக்கப்பட்டது. அது கர்நாடகா என்று 1973 ஆம் ஆண்டிலேயே பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கர்நாடகாவின் அரசியல் லிங்காயத், வொக்காலிகா என்ற இரு சாதிக் குழுக்களை மையமாகக் கொண்டதாகும். சரோஜாதேவி வொக்காலிகா சாதியைச் சேர்ந்தவர். அவரை அந்த சமுகத்தினர் தங்களது ஒரு சின்னமாக கருதுகிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் வெளிப்படையான ஒரு ஆதரவாளரான சரோஜாதேவி முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் ஒரு பெரிய அபிமானி. காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநில தேர்தல்களில் போட்டியிட வேண்டும் என்று சரோஜாதேவியிடம் தேவராஜ் அர்ஸ், குண்டுராவ் மற்றும் எஸ். எம். கிருஷ்ணா போன்ற முன்னாள் கர்நாடகா முதலமைச்சர்கள் பல தடவைகள் வேண்டுகோள் விடுத்தார்கள். லோக்சபா தேர்தலில் மண்டியா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிட முன்வருமாறு அவரிடம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கூட கேட்டார். அந்த அழைப்புக்களை எல்லாம் அவர் கண்ணியமான முறையில் மறுத்துவிட்டார்.
விருதுகளும் பாராட்டுகளும்
விருதுகளும் பாராட்டுகளும் சரோஜாதேவிக்கு வந்து குவிந்தன. அவற்றில் பிரதானமானவை இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகள், தமிழ்நாடு அரசாங்கத்தின் கலைமாமணி விருது, இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் பிலிம்பெயர் சஞ்சிகையின் வாழ்நாள் சாதனையாளர் விருது ஆகியவையாகும். 2006 ஆம் ஆண்டில் பெங்களூர் பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ கலாநிதி பட்டத்தையும் வழங்கக் கௌரவித்தது.
சரோஜாதேவி 1967 ஆம் ஆண்டில் ஸ்ரீ ஹர்ஷா என்ற பொறியியலாளரை திருமணம் செய்தார். திருமணத்துக்கு பின்னரும் திரைப்படங்களில் மீண்டும் நடிக்குமாறு கணவர் சரோஜாதேவியை உற்சாகப்படுத்தினார். அவரின் விருப்பத்தின் பிரகாரம் சரோஜாதேவி மீண்டும் நடித்தார்.
திரையுலக வாழ்வில் அவரது இரண்டாவது கட்டம் மிகவும் பயனுடையதாக இருந்தது. திருமணத்துக்கு பிறகு பல படங்களில் அவர் நடித்தார். அவற்றில் பெருமளவானவை கன்னடப்படங்கள். ஆனால், பணமா பாசமா, தேனும் பாலும், தாமரை நெஞ்சம் மற்றும் குலவிளக்கு போன்ற படங்கள் திருமணத்துக்கு பின்னரான அவரது படங்களில் மிகவும் சிறந்தவையாக அமைந்தன.
தம்பதியர் முதலில் சரோஜாதேவியின் சகோதரியின் மகள் புவனேஸ்வரியை தத்தெடுத்தனர். அந்த பிள்ளை மிகவும் இளவயதிலேயே இறந்துவிட்டது. அதற்கு பிறகு ஒரு ஆண் பிள்ளையையும் ஒரு பெண் பிள்ளையையும் அவர்கள் தத்தெடுத்து கௌதம் இராமச்சந்திரன் என்றும் இந்திரா என்றும் பெயர் சூட்டினர். ஸ்ரீஹர்ஷா 1986 ஆம் ஆண்டில் மரணமடைந்தார். சரோஜாதேவி.மறுமணம் செய்துகொள்ளவில்லை.
2025 ஜூலை 14 ஆம் திகதி சரோஜாதேவி மரணமடைந்தார். பரந்தளவில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பொதுவில் இந்தியாவினதும் குறிப்பாக கர்நாடகா மாநிலத்தினதும் விக்கிரகமாக அவர் கருதப்பட்டார். ஜூலை 14 மாலையும் ஜூலை 15 காலையும் சரோஜாதேவியின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக பெங்களூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. ஜூலை 15, செவ்வார்க்கிழமை மாலையில் பெங்களூர் தெற்கு மாவட்டமான சன்னப்பட்டினவில் உள்ள அவரது சொந்த கிராமமான தசாவாரவுக்கு பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டது.
வொக்காலிகா சம்பிரதாயங்களின் பிரகாரம் இறுதிச்சடங்குகள் நடைபெற்ற பிறகு அரச மரியாதையுடன் பூதவூடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கர்நாடகா மாநிலத்தின் துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமாரும் இறுதிச்சடங்குகளில் கலந்துகொண்டார். திரையில் தனது உன்னதமான நடிப்பின் மூலமாக கோடிக்கணக்கான ரசிகங்களை வசீகரித்த அழகும் திறமையும் கொண்ட ஒரு திரை நட்சத்திரத்தின் வாழ்வு இவ்வாறாக முடிவுக்கு வந்தது.
D.B.S.Jeyaraj can be reached at dbsjeyaraj@yahoo.com
ஆங்கில மூலம்: டி. பி. எஸ். ஜெயராஜ் (Daily Financial Times)
தமிழில்: வீரகத்தி தனபாலசிங்கம்
நன்றி: வீரகேசரி
******************************************************************************

