டி.பி.எஸ். ஜெயராஜ்
முன்னாள் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2025 ஆகஸ்ட் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கை பொலிஸின் குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தினால் (சி.ஐ.டி.) கைது செய்யப்பட்டார். அதை அடுத்து அவர் கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டதை தொடர்ந்து 2025 ஆகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்கப்பட்டார். கடந்த காலத்தில் ஆறு தடவைகள் பிரதமராக பதவி வகித்த 76 வயதான விக்கிரமசிங்க இலங்கையின் வரலாற்றில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முதலாவது முன்னாள் ஜனாதிபதியாவார்.
மகசீன் சிறைச்சாலைக்கு கூட்டிச் செல்லப்பட்ட பிறகு முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலை மோசமடைந்தது. அங்கிருந்து வெலிக்கடைச் சிசை்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர் பிறகு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இரத்தக் குழாய்களில் மூன்று அடைப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும் இருதய தசைகள் அழுகல், நீரிழிவு மற்றும் சுவாசப்பையில் தொற்றுநோயினால் பீடிக்கப்பட்டிருபாத்கவும் கண்டறியப்பட்டது. இந்த நோய் நிலைமைகள் அவரின் வெளித் தோற்றத்தில் தெரிவதில்லை. அவர் இருதய நோயினால் கடந்த ஏழு வருடங்களாக பாதிக்கப்பட்டிருநதார்.
கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவரது வழக்கு 2025 ஆகஸ்ட் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது உடல்நிலை காரணமாக விக்கிரமசிங்கவினால் நீதிமன்றத்துக்கு வரமுடியாமல் போய்விட்டது. தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் படுக்கையில் இருந்த வண்ணமே இணையத்தின் ஊடாக தனது பிரசன்னத்தை அவர் பதிவு செய்தார்.
முன்னாள் சட்டமா அதிபரும் அமைச்சருமான திலக் மாரப்பன மற்றும் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜா பிரேமரத்ன தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவொன்று ரணிலின் சார்பில் ஆஜராகி அவரது உடல்நிலையை காரணமாகக்கொண்டு பிணையில் விடுதலை செய்யுமாறு கோரியது. அவரின் நிலைமை தொடர்பான விரிவான மருத்துவ அறிக்கைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
விக்கிரமசிங்கவுக்கு பிணை வழங்குவதை சட்டமா அதிபர் திணைக்களம் கடுமையாக எதிர்த்தது. ” சந்தேகநபர் மீது ” பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது என்றும் அதனால் பிரத்தியேகமான சூழ்நிலைகளை தவிர மற்றும்படி அவரை பிணையில் விடுதலை செய்யமுடியாது என்றும மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீபா பீரிஸ் நீதிமன்றத்தில் வலியுறுத்திக் கூறினார்.
இரு தரப்புகளினதும் வாதங்களை கேட்டதுடன் மருத்துவ அறிக்கைகளையும் பரிசீலனை செய்த பிறகு கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நிலுப்புலி லங்காபுர விக்கிரமசிங்கவை தலா ஐம்பது இலட்சம் ரூபா மூன்று ஆளுறுதிப் பிணையில் விடுதலை செய்தார். வழக்கு விசாரணை 2025 அக்டோபர் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிணை வழங்கப்பட்டதை விக்கிரமசிங்கவின் நலன்விரும்பிகளும் ஆதரவாளர்களும் குதூகலத்துடன் வரவேற்றனர்.
முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான விக்கிரமசிங்க மீதான விசாரணை, அவரின் கைது, விளக்கமறியல் மற்றும் பிணையில் விடுதலை சர்ச்சைக்குரிய வகையில் பரபரப்பை ஏற்படுத்தின. அரச தலைவராக பதவியில் இருந்தபோது 2023 செப்டெம்பரில் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள வொல்வெர்ஹம்டன் பல்கலைக்கழகத்துக்கு செய்த விஜயம் பற்றி அவரிடமிருந்து வாக்குமூலம் ஒன்றை பதிவுசெய்வதற்காக ஆகஸ்ட் 19 ஆம் திகதி சிஜ.டி.யினால் முன்னதாக அழைக்கப்பட்டிருந்தார். தனது மனைவிக்கு கௌரவப் பேராசிரியை பட்டம் வழங்கப்பட்ட வைபவத்தில் பங்கேற்தற்காக அவருடன் கூடவே முன்னாள் ஜனாதிபதி அந்தப் பல்கலைக்கழகத்துக்கு சென்றார்.
வொல்வெர்ஹம்டன் அழைப்பிதழ்
வொல்வெர்ஹம்டன் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரினால் அளிக்கப்பட்ட பட்டமளிப்புக் கொண்டாட்ட மதிய விருந்துபசாரத்தில் பங்கேற்குமாறு அன்றைய ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கும் முதற்பெண்மணி பேராசிரியை மைத்ரி விக்கிரமசிங்கவுக்கும் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அழைப்பிதழ் லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் ஊடாகவே அனுப்பப்பட்டிருந்தது. அது பிறகு வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பப்பட்டு இறுதியில் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி செயலகத்திடம் கையளிக்கப்பட்டது. 2023 செப்டெம்பர் முதலாம் திகதியிடப்பட்ட உத்தியோபூர்வ கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது ;
அன்புடன் திரு. விக்கிரமசிங்கவுக்கும் பேராசிரியை விக்கிரமசிங்கவுக்கும் ,
” வொல்வெர்ஹம்டன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் சுவராஜ் போல் பிரபுவின் சார்பில் ஆளுநர் சபையும் கல்வியாளர் சபையும் 2023 செப்டெம்பர் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை எமது வொல்வெர்ஹம்டன் வளாகத்தில் இடம்பெறவிருக்கும் விசேட பட்டமளிப்பு மதிய விருந்துபசாரத்தில் இணைந்து கொள்ளுமாறு உங்களை அழைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
” பேராசிரியை விக்கிரமசிங்கவுக்கு கௌரவப் பேராசிரியை பட்டமளிக்கப்படுவதன் நிமித்தமான கொண்டாட்டங்களின் ஒரு அங்கமே இந்த மதிய விருந்துபசாரம். பட்டமளிப்பு வைபவத்துடன் கூடியதாகவே அதுவும் இடம்பெறும். பட்டமளிப்பு வைபவம் வொர்வெர்ஹம்டனில் 14.30 மணிக்கு ஆரம்பமாகும். 12.00 மணிக்கு ஆரம்பமாகும் பட்டமளிப்பு மதிய விருந்துபசாரத்தில் எம்முடன் இணைந்து கொள்வீர்களானால், நாம் மகிழ்ச்சியடைவோம்.
” இந்த கொண்டாட்ட தினத்தக்காக போல் பிரபுவுடன் உங்களால் இணைந்துகொள்ள முடியுமாக இருந்தால் மின்னஞ்சல் அல்லது தயவுசெய்து தொலைபேசி மூலமாக பழைய மாணவரகள் மற்றும் அபிவிருத்தி சக்கத்தின் தலைவர் ரெறி கிப்சனடன் தொடர்புகொள்ளுமாறு கேட்கப்படுகிறீர்கள். கொண்டாடடங்களின் ஒரு அங்கமான இந்த விசேட மதிய விருந்தில் உங்களால் எங்களுடன் இணைந்துகொள்ள முடியும் என்று நம்புகிறோம்.
இப்படிக்கு,
பேராசிரியர் ஜோன் றாவ்ரெறி,
துணைவேந்தர், வொல்வெர்ஹம்டன் பல்கலைக்கழகம்.
குற்றச்சாட்டு
அந்த மதிய விருந்துபசாரத்தில் பங்கேற்றது குறித்து விக்கிரமசிங்கவிடம் பல மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டு அவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்படடது. எந்த தவறையும் தான் செய்யவில்லை என்று நிராகரித்த அவர் வெளிநாட்டுப் பயணம் ஒன்றுக்கு அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றசாசாட்டு பற்றி விரிவான பதில்களை வழங்கினார். அதற்கு பிறகு அரச நிதியை தவறாக பயன்படுத்தியதன் மூலமாக தனது அதிகாரங்களை அவர் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு அடுத்த விசாரணை தினமான ஆகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். பொதுச்சொத்து சட்டத்தின் 5 (1) பிரிவு மற்றும் தண்டனைச் சட்டக்கோவையின் 386 & 388 பிரிவுகளின் கீழ் விக்கிரமசிங்க மீது குற்றம் சுமத்தப்படடிருக்கிறது. அவர் கையாடியதாக கூறப்படும் தொகைா 16, 644, 652, 21 ரூபா அல்லது 16.6 மில்லியன் ரூபாவுக்கும் சற்று அதிகமானதாகும்.
நீதிமன்ற வளாகத்தில் இருந்து சிறைச்சாலை வாகனத்தில் ( Black Maria ) விளக்கமறியல் சிறைக்கு கூட்டிச் செல்லப்படுவதற்கு முன்னதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் விக்கிரமசிங்க , ” நான் நாட்டுக்காகவே எப்போதும் பாடுபட்டிருக்கிறேன். நான் தனிப்பட்ட பயன் எதையும் பெற்றுக் கொண்டதில்லை. தற்போதைய நிருவாகத்தின் உண்மையான முகம் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது ” என்று கூறினார்.” கைது செய்யப்படுவதற்கு முனானதாக இதையே ரணில் விக்கிரமசிங்க எம்மிடம் கூறினார். இதை பதிவுசெய்து ஊடகங்களுக்கு வெளியிடுமாறு அவர் எம்மிடம் கேட்டுக்கொண்டார்” என்று ஐக்கிய தேசிய கட்சியின் உதவி தலைவரான அகில விராஜ் காரியவாசம் ஊடகங்களுக்கு கூறினார்.
ஆகஸ்ட் 22 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்ட பிறகு மகசீன் சிறைச்சாலையில் விக்கிரமசிங்கவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இரத்தத்தில் சீனியன் அளவும் இரத்த அழுத்தமும் ஒரு நிலையற்ற மட்டங்களில் இருந்ததை கண்டுபிடித்து அவரை வெலிக்கடை சிறைச்சாலையின் வைத்தியசாலைக்கு மாறாறினர். அவரது உடல்நிலையை கருத்திற்கொண்டு வீட்டில் இருந்து கொண்டுவரப்படும் உணவை உண்பதற்கு அனுமதிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் ஆகஸ்ட் 23 ஆம் திகதி தனித்தனியாக சிறைச்சாலைக்கு வந்து விக்கிரமசிங்கவை பார்வையிட்டனர்.
மகிந்த ராஜபக்ச
விக்கிரமசிங்கவை சந்தித்த பிறகு ஊடகவியலாளர்களுடன் பேசிய மகிந்த ராஜபக்ச கைதுசெய்யப்பட்டதால் அவர் நிலைகுலைந்து போகவில்லை என்று கூறினார்.” அரசியலில் நாம் சில சந்தர்ப்பங்களில் இத்தகைய சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது” என்றும் அவர் சொன்னார். விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டதை கண்டனம் செய்த மகிந்த அதை ஒரு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று வர்ணித்தார்.
சிறிய சம்பவங்களுக்காக அரசியல் தலைவர்களை , விசேடமாக முன்னாள் ஜனாதிபதிகளை சிறையிலடைப்பது அநீதியானது என்று மகிந்த கூறினார். ” இது சரியானதல்ல. நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதிகளை சிறையிலடைப்பது தவறானது. தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அரசியல் பழிவாங்கலே தவிர இது வேறு ஒன்றும் இல்லை” என்று கூறிய அவர் அரசாங்கத்தை நோக்கி கேள்வியெழுப்பி மக்களின் அபிப்பிராயத்தை பிரதிபலிக்குமாறு ஊடகங்களைக் கேட்டுக்கொண்டார்.
சஜித் பிரேமதாச
வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் விக்கிரமசிங்கவை பார்வையிட்ட பிறகு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் ஊடகவியலாளர்களைச் சந்தித்தார். சட்டத்தின் ஆட்சியை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகளில் மூன்றாம் தரப்பு ஒன்று தலையீடு செய்திருக்கிறது என்று பிரேமதாச கூறினார். மேலும் பேசிய அவர், ” முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான இந்த வழக்கில் நீதித்துறை எவ்வாறு நடந்து கொள்ளப்போகிறது என்று மூன்றாம் தரப்பு ஒன்று எதிர்வு கூறியிருக்கிறது. சட்டத்தின் ஆட்சி எவ்வாறு அமைய வேண்டும் என்று அரசியலமைப்பு தெளிவாகக் கூறும்போது இத்தகைய விடயங்கள் எவ்வாறு இடம்பெற முடியும்? ” என்று கேள்வியெழுப்பினார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் உயர்மட்டத் தலைவர்களுக்கு நெருக்கமானவர் என்று கருதப்படும் “சுதா ” என்று பிரபலமாக அறியப்படும் யூரியூப் ஊடகவியலாளர் சுதந்த திலகசிறியைப் பற்றியே பிரேமதாச அவ்வாறு குறிப்பிட்டார்
முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்க வெள்ளிக்கிழமை (22) சி.ஐ.டி.யில் ஆஜராகி வாக்குமூலத்தை கொடுப்பாரேயானால், அதிகாரிகள் அவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டியது ” கட்டாயமாகும்” என்றும் 14 நாட்களுக்கு அவர் விளக்கமறியலில் வைக்கப்படுவார் என்றும் திலகசிறி சமூக ஊடகத்தில் செய்திருந்த அண்மைய பதிவு ஒன்றில் கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அவ்வாறு நடைபெறவில்லையானால், யூரியூப் நிகழ்ச்சிகளை ஔிபரப்புவதை தான் நிறுத்திவிடுவதாகவும் திலகசிறி மேலும் கூறியிருந்தார்.
அலி சப்ரி
திலகசிறியின அறிவிப்புக்களை கடுமையாக கண்டனம் செய்த முன்னாள் வெளியுறவு அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தனது முகநூல் பதிவு ஒன்றில் திலகசிறியின் எதிர்வுகூறல் ” ஆழமான கவலைக்குரியது” என்றும் ஆபத்தான அரசியல் கராசாரம் ஒன்றின் அறிகுறியாக இருப்தாகவும் குறிப்பிட்டார்.
” அத்தகைய நடவடிக்கைகள் எமது நிறுவனங்களையும் எமது எதிர்காலத்தையும் மலினப்படுத்திவிடக் கூடிய பழிவாங்கும் வகையிலான- நாசகாரத்தனமான குழப்பம் தரும் அரசியல் போக்கு ஒன்றை பிரதிபலிக்கின்றன. இந்த வெறுப்புணர்வும் பழிதீர்க்கும் போக்கும் முடிவுக்கு வரவேண்டும். அரசியல் நியாயமும் உறுதிப்பாடும் பல தடவைகள் நாட்டைப் பாதுகாத்தவர்கள் மீதான நன்றியணர்வும் நாடடுக்கு தேவைப்படுகிறது ” என்று சப்ரி கூறினார்.
ரணிலின் உடல்நிலை
அதேவேளை, பின்னேரம் ரணிலின் இரத்தத்தில் சீனியின் மட்டத்திலும் இரத்த அழுத்தத்திலும் கடுமையான அதிகரிப்பு காணப்பட்டது. விசேட வைத்திய நிபுணர்களின் கவனிப்பு தேவை என்று சிறைச்சாலை வைத்தியசாலை மருத்துவர்கள் சிபாரிசு செய்தனர். அதையடுத்து முன்னாள் ஜனாதிபதி கொழும்பு தேசிய வைத்திரசாலைக்கு மாற்றப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பிறகு விக்கிரமசிங்க உடலில் நீர்ச்சத்துக் குறைபாட்டின் விளைவான சிக்கல்கள் காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் கூறின.
தேசிய வைத்தியசாலையில் முன்னாள் ஜனாதிபதியை ஐந்து விசேட மருத்துவ நிபுணர்கள் பரிசோதித்தனர். அவருக்கு இரத்தக் குழாய்களில் மூன்று இடங்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பதாகவும் இதயத்தசை அழுகல், நீரிழிவு மற்றும் சுவாசப்பை தொற்று நோய்களினால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கண்டறியப்பட்டது. இந்த நோய்களின் விளைவான பாதிப்பு வெளியில் தெரியாது. ஏழு வருடங்களாக விக்கிரமசிங்க இருதய நோய்களினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
அர — ஜசீரா ரி.வி.
முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக எந்த அடிப்படையில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கின்றன என்ற முக்கியமான ஒரு கேள்வி எழுகிறது. அந்த விவகாரத்தை ஆராய்வதற்கு முன்னதாக 2025 மார்ச் முற்பகுதியில் இடம்பெற்ற சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை மீட்டுப்பார்க்க வேண்டியது முக்கியமானதாகும். அல் – ஜசீரா தொலைக்காட்சியின் “ஹெட் ரு ஹெட் ” ( Head to Head ) நிகழ்ச்சியில் பிரிட்டிஷ் ஊடகவியலாளர் மெஹ்டி ஹசன், ரணில் விக்கிரமசிங்கவை பேட்டி கண்டார்.அந்த நிகழ்ச்சியில் விக்கிரமசிங்க உண்மையில் பழிப்புக்கு ஆளானர். அது ஒரு பேட்டி என்பதிலும் பார்க்க எரிச்சலூட்டும் வகையிலான நீண்ட விசாரணை போன்றே அமைந்திருந்தது.
ஹசன் எழுப்பிய கேள்விகளில் ஒன்று அபகீர்த்திமிக்க பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை பற்றியது. அத்தகைய அறிக்கை ஒன்றே இல்லை முதலில் நிராகரித்ததன் மூலம் என்று நிராகரித்ததன் மூலம் விக்கிரமசிங்க விடயங்களை குளறுபடிக்கு உள்ளாக்கிவிட்டார். அறிக்கையின பிரதி ஒன்று காண்பிக்கப்பட்டபோது அத்தகைய அறிக்கை ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று அறிவு தளர்ந்தவர் போன்று மிகவும் அருவருக்கத்தக்க முறையில் பதிலளித்தார். ஆனால், உண்மையில் அந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி இலங்கையில் சர்ச்சை ஒன்றை தோற்றுவித்தது. றோஹண விஜேவீர தலைமையிலான ஜே.வி.பி. 1987 — 1990 காலப்பகுதியில் அரசுக்கு எதிராக அதன் இரண்டாவது ஆயுதக் கிளர்ச்சியை நடத்தியது.தேசப்பிரேமி ஜனதா வியாபாரய என்ற பெயரின் கீழ் இயங்கிய ஜே.வி.பி. பயங்கரமான வனமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது. ஜனாதிபதி பிரேமதாசவின் அன்றைய ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் அந்த கிளர்ச்சியை கொடூரமான முறையில் நசுக்கியது. ஜே.வி.பி.யுடன் சேர்ந்திருந்த அல்லது சேர்ந்திருந்ததாக சந்தேகிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள் அல்லது காணாமலாக்கப்பட்டார்கள். மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் சிறையிலடைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளானார்கள்.
பட்டலந்த
அரசினால் அமைக்கப்பட்ட சித்திரவதையுடன் கூடிய தடுப்புக்காவல் நிலையங்களில் ஒன்றான பட்டலந்த முகாம் பாரதூரமான பழிக்குள்ளானது.இந்த தடுப்புக்காவல் முகாம் கம்பஹா மாவட்டத்தில் பியகம தேர்தல் தொகுதியின் பட்டலந்த பகுதியில் இருந்த அரச உரக்கூட்டுத்தாபனத்தின் வீடமைப்புத் தொகுதியில் அமைந்திருந்தது. ரணில் விக்கிரமசிங்க 1977 பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் அந்த தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார். முகாமை அமைப்பதற்கு பட்டலந்த வீடமைப்பு தொகுதியில் கட்டிடங்களை பெறவதில் ரணிலும் பங்காற்றினார் என்று கூறப்பட்டது.
ஆனால், அந்த தடுப்பு முகாமில் நடந்த சம்பவங்களில் விக்கிரமசிங்கவுக்கு எந்த ஈடுபாடும் இருக்கவில்லை. சித்திரவதை மற்றும் உத்தியோகபூர்வமற்ற மரணதண்டனைக்கான கொடிய கூடாரமாக பட்டலந்த முகாம் பயங்கரமான பெயரைப் பெற்றது. சித்திரவதைகளில் விக்கிரமசிங்கவுக்கு நேரடியான தொடர்பு இருந்தாக காண்பிக்க அவரின் அரசியல் எதிரிகள் முயற்சித்தார்கள். சிலர் அவரை ” பட்டலந்த கசாப்புக்கடைக்காரன் ” என்றும் வர்ணித்தனர்.
சந்திரிகா நியமித்த ஆணைக்குழு
சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க 1994 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக பதவிக்கு வந்தபோது அவர் பல விசாரணை ஆணைக்குழுக்களை நியமித்தார். பட்டலந்த தடுப்புக்காவல் முகாம் தொடர்பான ஆணைக்குழு அவற்றில் ஒன்று. தனது பிரதான அரசியல் எதிரியான விக்கிரமசிங்கவை ‘ மடக்குவதற்கே ‘ பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவை ஜனாதிபதி குமாரதுங்க நியமித்ததாக அப்போது பரவலாக ஊகிக்கப்பட்டது. ஆனால், பட்டலந்தவில் இடம்பெற்ற சித்திரவதை நடவடிக்கைகளுடன் விக்கிரமசிங்கவுக்கு தொடர்பு இருந்ததாக குற்றஞ்சாட்டக்கூடியதாக எந்தவிதமான சான்றையும் ஆணைக்குழுவினால் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆனால், அது விக்கிரமசிங்கவின் அரசியல் எதிராளிகள் பட்டலந்த பூச்சாண்டியை அவருக்கு எதிராக அவ்வப்போது கிளப்புவதை தடுக்கவில்லை. அதனால், அல் – ஜசீரா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பட்டலந்த பற்றி பேசப்பட்டதையும் ரணில் அதற்கு தந்திரமாக பதிலளித்து தப்பித்துக்கொள்வதற்கு முயற்சித்ததாக தெரிந்ததையும் அடுத்து மீண்டும் சர்ச்சை கிளம்பியது.
பட்டலந்த கொடூரத்தினால் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டவர்கள் ஜே.வி.பி.யின் உறுப்பானர்களும் ஆதரவாளர்களாகவுமே இருந்தனர். அந்த கொடூரங்களைச் செய்ததாக கூறப்படுபவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு ஜே.வி.பி. முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்து சென்ற குழுவான முன்னரங்க சோசலிஸ்ட் கட்சி பிரச்சினையைக் கிளப்பி பட்டலந்த தொடர்பாகவும் விக்கிரமசிங்கவுக்கு எதிராகவும் ஜே.வி.பி. அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் துணிச்சல் கொள்ளுமா என்று கேள்வியெழுப்பியது. விக்கிரமசிங்கவுக்கு எதிராக விரைவில் வழக்கு தொடரப்படும் என்று அமைச்சர் பிமால் இரத்நாயக்க அறிவித்தார். வேறு பல ஜே.வி.பி. முக்கியஸ்தர்களும் கடந்த காலத்தில் அவர் கூறப்படும் குற்றங்களுக்காக விக்கிரமசிங்க விரைவில் தண்டிக்கப்படுவார் என்று அச்சுறுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டனர்.
எதிர்மறையான விளைவு
பட்டலந்த விவகாரத்தை மீண்டும் கிளப்புவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முயற்சித்தது. ஜே.வி.பி.யின் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் தலைமைத்துவத்துக்கு பெருமளவு நெருக்குதலை கொடுத்தனர். பட்டலந்த தொடர்பாக விக்கிரமசிங்கவை தண்டிக்க முடியும் என்று ஜே வி.பி.க்குள் உள்ள சில வட்டாரங்கள் நம்பிக்கையைக் கூட கொண்டிருந்தனர். பாராளுமன்றத்தில் பட்டலந்த தொடர்பாக விவாதம் ஒன்றும் நடைபெற்றது. 35 வருடங்களுக்கு பிறகு பட்டலந்த விவகாரத்தை கிளப்ப முயற்சிப்பது எதிர்மறையான விளைவுகளையே கொண்டுவரும் விரைவாகவே தெரிய வந்துவிட்டது. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஆயுதக்கிளர்ச்சிக் காலத்தில் ஜே.வி.பி. செய்த அட்டூழியங்கள் பற்றி பேசத் தொடங்கி விட்டன.
ஜே.வி.பி. உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் இலங்கை அரசின் அமைப்புக்களினால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட னர் என்ற போதிலும், ஜே.வி.பி.யின் கரங்களும் ஒன்றும் தூய்மையானவை அல்ல. 1987 ஆம் ஆண்டு தொடக்கம் 1990 ஆண்டு வரையான மூன்று வருடங்களில் 487 அரசாங்க ஊழியர்கள், 342 பொலிஸ்காரர்கள், 209 பாதுகாப்பு படை வீரர்கள், 16 அரசியல் தலைவர்கள் மற்றும் 4,945 குடிமக்கள் ஜே.வி.பி.யினால் கொல்லப்பட்டனர். இந்த எண்ணிக்கையில் 30 பௌத்த பிக்குமார், இரு கத்தோலிக்க மதகுருமார், 52 பாடசாலை அதிபர்கள், நான்கு மருத்துவர்கள், 18 பெருந்தோட்ட அத்தியட்சகர்கள் மற்றும் 27 தொழிற்சங்கவாதிகளும் அடங்குவர்.மேலும் 93 பொலிஸ்காரர்களினதும் 69 படைவீரர்களின் குடும்பங்களின் உறுப்பினர்களும் ஜே.வி.பி.யினால் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர்.
தூய்மையான கரங்கள்
” தூய்மையான நீதியை நாடுதல்” என்ற முதுமொழியின் ஞானத்தை ஜே.வி.பி.யின் மூத்த தலைவர்கள் விளங்கிக் கொண்டனர். பட்டலந்த பயங்கரங்ளை அம்பலப்படுத்த முயற்சிகளை எடுக்கும்போது அத்தகைய கொடூரத்துக்கு வழிவகுத்த காரணிகள் மீதும் கவனம் செலுத்தப்படும். ஜே.வி.பி.யின் கடந்த கால அட்டூழியங்கள் பற்றிய நினைவுகள் மீட்கப்படும். கடந்த கால எதிர்மறையான அம்சங்களை மறந்து மக்கள் நேர்மறையான எதிர்காலத்தை நோக்குவதற்காக ஜே.வி.பி.யினர் தேசிய மக்கள் சக்தி என்ற போர்வையை பயன்படுத்தினர். பட்டலந்த விவகாரத்தை மீண்டும் கிளப்பினால் இப்போது மக்கள் ” பழைய ” ஜே.வி.பி. யையும் அதன் வன்முறை வரலாற்றையும் நினைத்துப்பார்க்கக் கூடிய ஆபத்து ஏற்படும்.
வர்க்க எதிரி
அதனால் பட்டலந்த பூச்சாண்டியை கிளப்பி விக்கிரமசிங்கவை தண்டிக்கும் திட்டம் கைவிடப்பட்டது. ஆனால், மிகப்பெரிய ” வர்க்க எதிரியான ” ரணில் விக்கிரமசிங்க மீதான வெறுப்பும் பகைமையும் சில செஞ்சட்டைத் தோழர்களினை மனங்களில் தொடர்ந்து குடிகொண்டிருந்தன. ஜே.வி.பி.யினர் பல வருடங்களாக ரணிலை ” கெடுதியான உயர் வர்க்கத்தவனாக ” உருவகப்படுத்தி வந்திருக்கிறார்கள். ஆட்சியதிகாரத்துக்கு வந்த பிறகு ஜே.வி.பி.யினர் தங்களது அரசியல் எதிரிகளுக்கு பாடம் புகட்ட விரும்பினால் வேறு மார்க்கங்களை பரிசீலிப்பதற்கான சாத்தியம் இருக்கிறது.
விசாரணை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாட்டு விஜயம் ஒன்று குறித்து விசேட விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக சிஜ.டி.2025 ஜூன் பிற்பகுதியில் கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு அறிவித்தது. அந்த வெளிநாட்டு விஜயத்துக்கு அரசாங்கப் பணம் சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தப்பட்டதா என்பதை உறுதி செய்வதே நோக்கம். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற உள்ளக விசாரணை ஒன்றுக்கு பிறகு 2025 மே 23 ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் செய்யப்பட்ட உத்தியோகபூர்வமான ஒரு முறைப்பாட்டை அடுத்தே சி.ஐ.டி. விசாரணையை தொடங்கியது.
பி. – அறிக்கை
விசாரணையில் ஏற்பட்ட முன்னேற்றங்களின் விபரங்கள் அடங்கிய பி.- அறிக்கை ஒன்றை சி.ஐ.டி. அதிகாரிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2023 செப்டெம்பரில் திகதிகளில் லண்டனுக்கு மேற்கொண்ட தனிப்பட்ட விஜயத்துக்கான செலவினங்களுக்கு அரசாங்க நிதியைப் பயனபடுத்திவிட்டு பிறகு அதை உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக மூடிமறைத்து விட்டதாக பி. – அறிக்கையில் கூறப்பட்டது. வொல்வெர்ஹ்டன் பல்கலைக்கழகத்தில் தனது மனைவி பங்கேற்கும் பி.எச்டி. பட்டமளிப்பு வைபவத்தில் கலந்துகொள்வதற்கே 2023 செப்டெம்பர் 22 – 23 விக்கிரமசிங்க பிரிட்டனுக்கு பயணம் செய்தார் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
விக்கிரமசிங்கவின் ஐக்கிய இராச்சிய விஜயம் உத்தியோகபூர்வமானதல்ல என்று பி.- அறிக்கை கூறுகிறது. அந்த விஜயம் விக்கிரமசிங்கவின் கியூபாவுக்கும் அமெரிக்காவுக்குமான உத்தியோகபூர்வ விஜயங்களின் ஒரு பகுதியாக சேர்த்துக் கொள்ளப்பட்டது. தனிப்பட்ட நிகழ்வு ஒன்றுக்காக மாத்திரமே அவர் லண்டனுக்கு சென்றிருந்தார். ஆனால், அதிகாரிகளும் பாதுகாப்பு பிரிவினரும் அடங்கிய குழு ஒன்றும் அவருடன் பிரிட்டனுக்கு சென்றது.
சி.ஐ.டி.
விக்கிரமசிங்கவுடன் லண்டனுக்கு கூடச்சென்ற அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் அடங்கிய குழுவுக்கான செலவினம் 16.6 மில்லியன் ரூபா என்ற அடிப்படையிலேயே சி.ஐ.டி. டி.யின் விசாரணை அமைந்திருந்தது. அந்த தொகை விமானப் பயணச்சீட்டு, தங்குமிட வசதி மற்றும் தொடர்புடைய செலவினங்களுக்கானதே. விக்கிரமசிங்கவின் 2023 வெளிநாட்டு பயணங்களின் லண்டன் தரிப்பு இலங்கை மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி தனிப்பட்ட தேவைக்காக செய்யப்பட்டதாகும் என்பதே சி.ஐ.டி.யின் அபிப்பிராயம். தனிப்பட்ட விஜயத்துக்கு உத்தியோகபூர்வ செலவினத்தை பயன்படுத்துவது தனிப்பட்ட நன்மைக்காக ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்வதற்கும் ஊழல் மற்றும் அரசாங்க வளங்கள் துஷ்பிரயோகங்களுடன் தொடர்புடைய சட்டங்களை மீறுவதற்கும் சமமானதாகும் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமான் எக்கநாயக்க மற்றும் விக்கிரமசிங்கவின் அந்தரங்கச் செயலாளர் சந்ரா பெரேரா ஆகியோரையும் சி.ஐ.டி. ஆகஸ்ட் முற்பகுதியில் விசிரணைக்கு உட்படுத்தியது. இருவரும் 2023 ஐக்கிய இராச்சிய விஜயத்துக்கான ஏற்பாடுகளைச் செய்ததில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள். அந்த விஜயத்துக்கான செலவினங்கள் பற்றிய இருவரின் வாக்கு மூலங்களும் பதிவு செய்ப்பட்டன.
இதைத் தொடர்ந்து விசாரணைக்கு வருமாறு விக்கிரமசிங்கவை சி.ஐ.டி. ஆகஸ்ட் 19 ஆம் திகதி அழைத்தது. சர்ச்சைக்குரிய வெளிநாட்டு விஜயம் குறித்து தனது வாக்குமூலத்தை வழங்குவதற்காக கொழும்பில் உள்ள சி.ஐ.டி. தலைமையகத்துக்கு முன்னாள் ஜனாதிபதி ஆகஸ்ட் 22 சென்றார். வாக்குமுலம் பதிவுசெய்யப்பட்ட பிறகு கைது செய்யப்படக்கூடிய சாத்தியம் இருக்கிறது என்று விக்கிரமசிங்கவுக்கு அவரது சட்டத்தரணிகள் ஆலோசனை கூறியிருந்தனர். பல மணித்தியாலங்கள் விசாரணைக்கு பிறகு பின்னேரம் அவர் கைதுசெய்யப்படடார்.
கோட்டை மாஜிஸதிரேட் நீதிமன்றம்
அடுத்து சிறைச்சாலை வாகனத்தில் கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு கூட்டிச்செல்லப்பட்ட விக்கிரமசிங்கவுக்கு எதிராக அங்கு தண்டனைச் சட்டக்கோவையின் பிரிவுகள் 386 & 388 கீழ் முறைப்படி குற்றம் சுமத்தப்பட்டது. விக்கிரமசிங்கவினால் செய்ததாகக் கூறப்படும் குற்றங்களின் வரலாறு மற்றும் விபரங்களை விளக்கும் முதலாவது தகவல் 30 பக்கச்களைக் கொண்ட அறிக்கையை ( First Information Report) வழக்குத்தொடுநர் தரப்பு வாசித்தது. விசாரணைகளின்போது சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்ட சாத்தியமான 38 சாட்சிகளினதும் பெயர்ப்பட்டியலை சட்டமா அதிபர் திணைக்களம் வழங்கியது. அந்த பட்டியலில் விக்கிரமசிங்கவுடன் ஐக்கிய இராச்சியத்துக்கு சென்றவர்கள் மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் கடந்த கால, நிகழ்கால அதிகாரிகளின் பெயர்களும் அடங்கியிருந்தன.
அதைத் தொடர்ந்து விக்கிரமசிங்கவுக்காக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜா பிரேமரத்ன தனது வாதங்களை நீதிமன்றத்தில் முன்வைத்தார். விக்கிரமசிங்கவுக்கு பிணை வழங்குமாறு கோரிய பிரேமரத்ன, ” 76 வயதான சந்தேகநபர் ஏழு வருடங்களாக இருதய நோயினாலும் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயினாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவரது மனைவி புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவர்களுக்கு பிள்ளைகள் இல்லை. ஒருவரில் மற்றவர் முற்றிலும் தங்கியிருக்கிறார்கள்” என்று கூறினார். வழக்குத் தொடுநர்தரப்பு பிணை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
அதேவேளை, விக்கிரமசிங்கவுக்கு அனுதாபத்தையும்் ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்துவதற்காக வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான அரசியல்வாதிகளும் பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த மக்களும் நீதிமன்ற வளாகத்தில் கூடிவிடடார்கள்.
மாஜிஸ்திரேட் நிலுப்புலி லங்காபுர அறிவித்த 30 நிமிடநேர இடைவேளையின் விளைவாக விக்கிரமசிங்கவின் பிணை மனு மீதான விசாரணை எதிர்பார்த்ததை விடவும் அதிகமான நேரம் தாமதமாகியது. அத்துடன் 30 நிமிட நேர மின்தடையும் ஏற்பட்டது. இரவு ஏழு மணிக்கு முன்னதாக நீதிமன்றம் மீண்டும் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட தோதிலும், மாஜிஸ்திரேட் இரவு 8.30 மணிக்கே திரும்பி தனது ஆசனத்துக்கு வந்த காரணத்தால் இரு மணித்தியாலங்கள் தாமதம் ஏற்பட்டது. இறுதியில் விக்கிரமசிங்கவுக்கு பிணை மறுக்கப்பட்டு அவர் ஆகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மகசீன் சிறைச்சாலைக்கு கூட்டிச் செல்லப்பட்ட பிறகு அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து முதலில் வெலிக்கடைச் சிறைச்சாலை வைத்தியசாலைக்கும் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டார். தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
ஆனந்த விஜேபால
விக்கிரமசிங்கவின் கைது பற்றிய செய்தி தெரியவந்த பிறகு பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளின் பிரகாரம் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்று கூறினார். ” எமது அரசாங்கம் தவறு செய்தவர்களை அவர்கள் வகித்திருக்கக்கூடிய பதவி அந்தஸ்துகளைப் பொருட்படுத்தாமல் நீதியின் முன் நிறுத்துவதாக உறுதியளித்திருக்கிறது” என்று அவர் சொன்னார்.
தண்டனை விலக்கு முரண்நிலை
இவ்வாறுதான் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் முதற்தடைவையாக கைதுசெய்யப்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிறகு பிணையில் விடுதலை செய்யப்பட்டார். ஜே.ஆர்..ஜெயவர்தன நாட்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்தியபோது ஜனாதிபதி செய்த செயலுக்காக அல்லது செய்யத்தவறிய செயலுக்காக அரசியலமைப்பு ரீதியான தண்டனை விலக்கைக் (Constitutional Immunity ) கொண்டிருந்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் கொண்டுவந்த அரசியலமைப்புக்கான 19 வது திருத்தச்சட்டமே ஜனாதிபதிக்குரிய தண்டனை விலக்கை கட்டுப்படுத்தியது.
அந்த அரசாங்கத்தில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவே 19வது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டு வரப்படுவதற்கு பிரதானமாக பொறுப்பாக இருந்தார். அவ்வாறு கட்டுப்படுத்தப்பட்ட தண்டனை விலக்கின் விளைவாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட முதலாவது ஜனாதிபதியாக இன்று விளங்கவேண்டிய கதி விக்கிரமசிங்கவுக்கே வந்திருப்பது உண்மையில் ஒரு முரண்நகையாகும்.
கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நிலுப்புலி லங்காபுர 2025 ஆகஸ்ட் 26 ஆம் திகதி மூன்று ஆளுறுதிப் பிணையில் ( தலா ஐம்பது இலட்சம் ரூபா) முன்னாள் ஜனாதிபதியை விடுதலை செய்தார். வழக்கு விசாரணை 2025 அக்டோபர் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
D.B.S.Jeyaraj can be reached at dbsjeyaraj@yahoo.com
ஆங்கில மூலம்: டி. பி. எஸ். ஜெயராஜ் (Daily Mirror)
தமிழில்: வீரகத்தி தனபாலசிங்கம்
*******************************************************************************

