இரண்டு நோக்கங்களுக்காக வடக்கு, கிழக்கில் அரைநாள் ஹர்த்தால் நடத்திய தமிழரசு கட்சி : முதலாவது முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினரின் தாக்குதலில் குடிமகன் ஒருவர் கொல்லப்பட்டது; இரண்டாவது வடக்கு, கிழக்கில் குடிமக்கள் மத்தியில் பெருமளவு இராணுவத்தினர் இருப்பதனால் ஏற்படுகின்ற பிரச்சினைகளை கவனத்துக்கு கொண்டுவருவது.

டி.பி.எஸ். ஜெயராஜ்

” ஹர்த்தால் “என்பது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்தியா, இலங்கை மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் அரசியல் உரையாடல்களில் பிரவேசித்த ஒரு சொல். இந்த குஜராத்திச் சொல் இருபதாம் நூற்றாண்டில் இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது மகாத்மா காந்தியினால் பிரபல்யப்படுத்தப்பட்டது. வேலைத்தலங்கள், கடைகள், பாடசாலைகள், போக்குவரத்துச் சேவைகள் மற்றும் நீதிமன்றங்களை முற்றாக மூடுவதையே ஹர்த்தால் என்ற ஹர்த்தால் குறித்து நிற்கிறது.

காந்தி தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கான அதன் போராட்டத்தில் அடிக்கடி சிவில் ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுத்தது. மகாத்மா குஜராத்தி என்பதால் வேலைநிறுத்தங்கள் மற்றும் கடையடைப்புக்களுக்கு வழிவகுத்த மக்கள் போராட்டங்களை வர்ணிப்பதற்கு ஹர்த்தால் என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.

மலையகப் பகுதிகளில் இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்திய அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்களினாலேயே இலங்கைக்கு ஹர்த்தால் என்ற சொல் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. வேலைநிறுத்தப் போராட்டங்களுடன் சேர்ந்து ‘ ஹர்த்தால் ‘ கடையடைப்பும் அடிக்கடி இடம்பெற்றது.

சுதந்திரத்துக்கு பின்னரான காலப்பகுதியில் சிங்களவர்களின் ஆதிக்கத்திலான அரசை அரசியல் ரீதியில் இலங்கைத் தமிழர்கள் எதிர்க்கத் தொடங்கியபோது இலங்கை தமிழரசு கட்சியினால் பல்வேறு ஹர்த்தால்கள் நடத்தப்பட்டன. தமிழ்ப் போராளி இயக்கங்களும் கடந்த காலத்தில் ஹர்த்தால்களை அனுஷ்டித்தன.

ஆனால், 1953 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துக்கு எதிராக வேலை நிறுத்தத்துடன் கூடிய மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட வேளையிலேயே ஹர்த்தால் என்ற சொல் பிரபலமானதாக வந்தது. பிரதமர் டட்லி சேனநாயக்க தலைமையிலான அன்றைய ஐக்கிய தேசிய கட்சி அரிசி மானியத்தை அகற்றியதை அடுத்து அரிசியின் விலை 180 சதவீதத்தால் அதிகரித்தது. வேறு பொரூட்களின் விலைகளும் அதிகரித்தன. 1953 ஆகஸ்ட் 12 ஹர்த்தாலுக்கான அறைகூவல் லங்கா சமசமாஜ கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிகர லங்கா சமசமாஜ கட்சி மற்றும் தமிழரசு கட்சியினால் விடுக்கப்பட்டது. ஹர்த்தால் போராட்டத்தின்போது பொலிசாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பத்துப் பேர் கொல்லப்பட்டனர். இறுதியில் டட்லி சேனநாயக்க பதவியில் இருந்து விலகினார். சேர் ஜோன் கொத்தலாவல புதிய பிரதமராகப் பதவிக்கு வந்தார்.

தமிழரசு கட்சி

ஆகஸ்ட் 18 திங்கட்கிழமை தமிழரசு கட்சி ஹர்த்தால் ஒன்றை நடத்தியபோது ஹர்த்தால் என்ற சொல் செய்திகளில் பெருமளவுக்கு முக்கியத்துவம் பெற்றது. தமிழரசு கட்சி இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பிரதான அரசியல் கட்சி. வடக்கு, கிழக்கில் சகல மாவட்டங்களிலும் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அந்த கட்சி பாராளுமன்றத்தில் மூனாறாவது பெரிய கட்சியாகவும் விளங்குகிறது. இரு மாகாணஙாகளிலும் 35 உள்ளூராட்சி சபைகளின் நிருவாகங்களும் தமிழரசு கட்சியின் கட்டுபாட்டில் உள்ளன.

இரண்டு காரணங்களுக்காக தமிழரசு கட்சி வடக்கு, கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினரின் தாக்குதலில் குடிமகன் ஒருவர் கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சம்பவத்தை கண்டனம் செய்வது முதலாவது காரணம். வடக்கு, கிழக்கில் குடிமக்கள் மத்தியில் பெருமளவு இராணுவத்தினர் இருப்பதனால் ஏற்படுகின்ற பிரச்சினைகளை கவனத்துக்கு கொண்டுவந்து இரு மாகாணங்களிலும் இராணுவத்தின் பலத்தை குறைக்க வேண்டும் என்று கோருவது இரண்டாவது காரணம்.

முதலில் ஆகஸ்ட் 15 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த ஹர்த்தால் பிறகு ஆகஸ்ட் 18 ஆம் திகதிக்கு பின்போடப்பட்டது. முழுநாளும் அனுஷ்டிப்பது என்றிருந்த ஹர்த்தால் அரைநாளாக குறைக்கப்பட்டது. தமிழரசு கட்சி தனியாகவே ஹர்த்தாலுக்கு அழைப்பை விடுத்திருந்த போதிலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழீழ விடுதலை இயக்கம் ( ரெலோ) மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி போன்ற மற்றைய பல அரசியல் கட்சிகளும் அதற்கு ஆதரவளித்தன.

” போர் முடிவுக்கு வந்து 16 வருடங்களுக்கு பின்னரும் தொடருகின்ற இராணுவமயத்துக்கு எதிராக இலங்கையில் தமிழ்பேசும் மக்கள் அதிகப் பெரும்பான்மையினராக வாழும் வடக்கு, கிழக்கில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 18, 2025) அடையாளபூர்வமான ஹர்த்தால் ஒன்று அனுஷ்டிக்கப்பட்டது. இரு மாகாணங்களிலும் பல வர்த்தக நிறுவனங்கள் காலை வேளையில் மூடப்பட்டுக்கிடந்தன ” என்று இந்திய ஆங்கிலத் தினசரி ‘தி இந்து ‘வின் கொழும்பு செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசன் தனது செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானமும் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரனும் ஹர்த்தால் ஒட்டு மொத்தத்தில் வெற்றிகரமானதாக அமைந்ததாக யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்கள் மகாநாட்டில் அறிவித்தனர். வடக்கு, கிழக்கில் சகல தமிழ்ப் பகுதிகளிலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. சில பகுதிகளில் ஹர்த்தால் அழைப்புக்கு பெருமளவில் வரவேற்பு இருந்த அதேவேளை, மற்றைய பகுதிகளில் ஒப்பீட்டளவில் ஒத்துழைப்பு குறைவானதாகவே இருந்தது.

வெவ்வேறு பகுதிகளில் கலப்பான வரவேற்பு இருந்த போதிலும், ஹர்த்தால் ஒட்டு மொத்தத்தில் வெற்றிகரமானதாக அயைந்ததாக தமிழரசு கட்சியின் இரு தலைவர்களும் கூறினர். முல்லைத்தீவு மாவட்டத்தில் ஹர்த்தால் முற்றுமுழுதாக வெற்றியாக அமைந்ததாக இருவரும் குறிப்பிட்டனர். வடக்கில் குறிப்பாக, மன்னார், வவுனியா, யாழ்ப்பாணத்தில் உள்ள முஸ்லிம் வர்த்தகர்கள் ஹர்த்தாலுக்கு முழு அளவில் ஒத்துழைத்ததற்காக தமிழரசு கட்சி பாராட்டைத் தெரிவித்தது. தமிழ்க் கலாசார தலைநகர் என்று கருதப்படும் யாழ்நகரில் ஹர்த்தால் தோல்வியடைந்தது குறித்து இருவரும் கவலை வெளியிட்டனர்.

இந்த கட்டுயைாளர் மட்டக்களப்பு மாவட்ட தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்துடன் தொடர்புகொண்டு ஹர்த்தால் பற்றி கேட்டபோது விளைவுகள் குறித்து கேட்டபோது அவர் முழுமையான திருப்தியடைந்திருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. கிழக்கின் தமிழ்ப்பகுதிகளில் ஹர்த்தால் 80 சதவீதம் வெற்றிகரமானதாக அமைந்ததாகவும் முஸ்லிம் பகுதிகள் சிலவற்றில் முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகள் மூடப்பட்டிருந்தபோதிலும், அங்கு ஹர்த்தால் வெற்றிகரமானதாக அமையவில்லை என்றும் சாணக்கியன் சொன்னார். தமிழரசு கட்சி மாத்திரமே தனியாக ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், 80 சதவீதமான கடைகளை மூடவைத்தது ஒரு தனிக்கட்சி என்ற வகையில் பெரியதொரு சாதனையே என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆளும் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஹர்த்தாலை கடுமையாக எதிர்த்தது. ஹர்த்தால் பெருந்தோல்வியாக அமைந்ததாக கருதி அரசாங்கம் குதூகலித்தது. தமிழரசு கட்சி அழைப்பு விடுத்த ஹர்த்தால் தோல்வி கண்டதாக பாராளுமன்றத்தில் கூறிய கம்பஹா மாவட்ட உறுப்பினரும் பிரதி தொழிலமைச்சருமான மகிந்த ஜெயசிங்க ஒத்துழைக்காமல் விட்டதற்காக வடக்கு, கிழக்கு மக்களைப் பெரிதும் பாராட்டினார். ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஹர்த்தால் ஒரு தோல்வி என்று வர்ணித்தனர். பொதுவில் தமிழரசு கட்சிக்கு குறிப்பாக சுமந்திரனுக்கும் எதிரான தமிழ் அரசியல்வாதிகளும் ஊடக நிறுவனங்களும் ஹர்த்தாலை தோல்வி என்று கேலி செய்தனர்.

இத்தகயை பின்புலத்தில், இந்த கட்டுரை ஹர்த்தாலுக்கான காரணங்கள் மற்றும் பின்னணியையும் அவற்றுடன் தொடர்புடைய விபரங்களையும் ஆழமாக ஆராய்கிறது.

இரண்டு நோக்கங்களுக்காக வடக்கு, கிழக்கில் அரைநாள் ஹர்த்தால் நடத்திய தமிழரசு கட்சி : முதலாவது முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினரின் தாக்குதலில் குடிமகன் ஒருவர் கொல்லப்பட்டது; இரண்டாவது வடக்கு, கிழக்கில் குடிமக்கள் மத்தியில் பெருமளவு இராணுவத்தினர் இருப்பதனால் ஏற்படுகின்ற பிரச்சினைகளை கவனத்துக்கு கொண்டுவருவது.

முத்து ஐயன் கட்டு குளம்

முத்தையன்கட்டு குளம் என்பது முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரிவில் உள்ள ஒரு விவசாயப் பகுதியாகும். கொழும்பில் இருந்து சுமார் 333கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள முத்தையன் கட்டுக்கு மாங்குளம் — முல்லைத்தீவு ஏ – 34 நெடுஞ்சாலையில் ஒட்டுசுட்டானில் இருந்து வீதிவழியாகச் செல்லமுடியும். ஒட்டுசுட்டானில் இருந்து வடமேற்கே சுமார் ஆறு கிலோமீட்டய்கள் தொலைவில் இருக்கிறது முத்தையன்கட்டு. சோழ மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் கொண்ட காரணமாகவே முத்தையன் கட்டு என்ற பெயர் வந்தது. சோழர்களின் ஆட்சியின் கீழ் முத்துராயன் என்று அழைக்கப்பட்ட முத்தரைய்யர் சாதியைச் சேர்ந்த உயர்குடிமகன் ஒருவரினால் 20 மைல் நீளமான பேராறுக்கு குறுக்கே ” அடுக்குகள் அணைக்கட்டு ” கட்டப்பட்டது. அந்த அணைக்கட்டு 220 அடி நீளத்தையும் 18 அடி அகலத்தையும் 15 அடி உயரத்தையும் கொண்டது.

சுற்றிவர இருக்கும் பகுதி முன்னர் மண்மலை என்று அழைக்கப்படடது. முத்துராயன் பேராறுக்கு குறுக்கே அணையைக் கட்டி குளத்தை உருவாக்கியதற்கு பிறகு முத்துராயர்கட்டு குளம் என்று மாறியது. காலப் போக்கில் அது முத்தையன்கட்டு குளம் என்று மாறியது. அண்மைக் காலத்தில் முத்தையன்கட்டு ( முத்து ஐயன் கட்டு ) என்ற இடத்தின் பெயரை மாற்றியமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு அந்த புராதன குளம் புனரமைப்புச் செய்யப்பட்டு விஸ்தரிக்கப்பட்டது. நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் பொறுப்பேற்கப்பட்ட திட்டம் 1959 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்ட்டு 7 – 8 ஆண்டுகளில் பூர்த்தி செய்யப்பட்டது.

தற்போது நீர்த்தேக்கப் பகுதி 66 சதுர மைல்களைக் கொண்டதாக இருக்கின்ற அதேவேளை குளத்தின் நீர்க் கொள்திறம் 41, 000 கன அடியாகவும் நீர்பபரவல் பகுதி 3,100 ஏக்கர்களாகவும் இருக்கிறது. முத்தையன் கட்டு குளத்தின் அணையின் நீளம் 5,850 அடியாகவும் (1,783 மீடடர்கள் ) உயரம் 27 அடியாகவும் (8 மீட்டர்கள்) இருக்கிறது. 6,100 ஏக்கர்களுக்கு பிரதானமாக நெற்செய்கைக்கும் உப உணவுப் பயிர்ச் செய்கைக்கும் குளம் நீர்பாய்ச்சுகிறது. நீர் பாய்ச்சக்கூடிய நிலங்கள் கால்வாய் முறையின் கீழ் இடது அணை, வலது அணை என்று சமமமான அளவில் பிரிக்கப்படுகின்றன.

முத்தையன்கட்டு குளம் அடிப்படையில் ஒரு விவசாயக் கிராமமாகும். அங்குள்ள பெருமளவு மக்கள் நெற் செய்கையிலும் உப உணவுப் பயிர்ச் செய்கையிலும் ஈடுபடுகின்றனர். மாட்டுப்பண்ணை, கோழிப்பண்ணைகளையும் அந்த மக்கள் வைத்திருக்கிறார்கள். மரம் தறிப்பு மற்றும் முத்தையன்கட்டு குள வாவியில் மீன்பிடியிலும் மக்கள் ஈடுபடுகிறார்கள்.

63 வது படைப்பிரிவின் முகாம்.

2009 மே மாதத்தில் விடுதலை புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து வடக்கு, கிழக்கில் பரவலாக்கப்பட்ட பெருமளவிலான இராணுவப் பிரசன்னம் முத்தையன்கட்டு குளத்திலும் இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்படுவதற்கு வழிவகுத்தது. 63 வது படைப்பிரிவு அங்கு நிலை வைக்கப்பட்டது.

இராணுவம் — குடிமக்கள் தொடர்பு

காலப்போக்கில் இராணுவத்தினரில் சில பிரிவினருக்கும் அந்த பகுதி மக்களில் ஒரு பிரிவினருக்கும் இடையில் ஒருவகையான தொடர்பு வளர ஆரம்பித்தது. இந்த நிலைவரம் முத்தையன்கட்டு மற்றும் 63 வது படைப்பிரிவு முகாமுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கவில்லை. வடக்கு, கிழக்கில் குடிமக்கள் வாழும் பகுதிகளுக்கு மத்தியில் இராணுவ முகாம்கள் அமைந்திருக்கும் பெரும் எண்ணிக்கையான கிராமங்களிலும் இராணுவத்துக்கும் மக்களுக்கும் இடையில் தொடர்பு வளர்ந்திருக்கிறது. அரசின் ” கண்ணும் காதுமாகச் ” செயற்படுவதற்கு புனர்வாழ்வுக்கு உள்ளான முன்னாள் விடுதலை புலிகள் உறுப்பினர்களில் 3500 பேருக்கு மாதாந்தம் 30, 000 ரூபா வழங்கும் இலங்கை இராணுவப் புலனாய்வுத் திட்டத்தின் மூலமாக இந்த தொடர்பு மேலும் பலப்படுத்தப்பட்டது.

முத்தையன்கட்டு குளத்தைப் பொறுத்தவரை, கிராம இளைஞர்கள் சிலருக்கும் முகாமில் உள்ள இராணுவத்தினரில் இரு பிரிவினருக்கும் இடையில் சட்ட விரோதமான வர்த்தக உறவுமுறை ஒன்றும் இருக்கிறது. பண்டமாற்று முறையின் அடிப்படையில் ( முகாம்களுக்கு ஒதுக்கப்படுகின்ற பங்கீடுகளில் இருந்து திருடப்படுகின்ற ) உணவு வகைகளை படையினர் கொடுப்பார்கள். கைவிடப்படுகின்ற உடைகள் மற்றும் பழைய இருப்பு பொருட்களும் கட கொடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. படையினர் சில நேரங்களில் மான்கள், காட்டுப் பன்றிகளை சட்டவிரோதமாக வேட்டையாடி இறைச்சியை கிராமத்து இளைஞர்களுக்கு விற்பனை செய்வார்கள்.

அதற்கு பிரதியுபகாரமாக இளைஞர்கள் கள்ளு, கசிப்பு மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களை படையினருக்கு கொடுபாபார்கள். மதுவகைகளுக்கும் போதைப் பொருட்களுக்குமாக படையினர் சில நேரங்களில் உடனடியாகவே பணத்தை கொடுப்பார்கள். இந்த கொடுக்கல் வாங்கல்கள் சில சந்தர்ப்பங்களில் குளறுபடிக்கு உள்ளாகி இரு தரப்பினருக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றியதும் உண்டு. இந்த கொடுக்கல் வாங்கல்கள் சட்ட விரோதமானவை. ஆனால், இந்த ” உத்தியோகபூர்வமற்ற ” நடவடிக்கைகளை இராணுவ உயரதிகாரிகள் கண்டும் காணாமல் விட்டு விடுவதாக சந்தேகிக்கப்படுகிறது.

அதேவேளை, வடக்கு, கிழக்கில் அண்மைக் காலமாக இராணுவம் ஆரவாரமின்றி முன்னெடுத்துவரும் மீள்கட்டமைப்பு திட்டத்தின் பகுதியாக சிறிய முகாம்கள் கலைக்கப்பட்டு படையினர் வேறு இடங்களுக்கு மாற்றப்படுகிறார்கள். முத்தையன்கட்டு முகாமையும் வேறு இடத்துக்கு மாற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது. அங்கிருந்த படையினரின் எண்ணிக்கை 250 இல் இருந்து 25 ஆகக் குறைந்துவிட்டது.

எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ்

முத்தையன்கட்டு குளம் கிராமத்தில் வசிக்கும் இளம் நபர் ஒருவருக்கு இராணுவ முகாமில் அவருடன் தொடர்புடைய ஒருவரிடமிருந்து 2025 ஆகஸ்ட் 6 ஆம் திகதி தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. மறுநாள் ஆகஸ்டட் 7 ஆம் திகதி இன்னொரு படைவீரரிடம் இருந்தும் ஒரு செய்தி அவருக்கு வந்தது. அந்த இளம் நபரின் பெயர் எதிர்வீரசிங்கம் கபில்ராஜ் ( வயது 35 ). அவர் யாழ்ப்பாணக் குடாநாட்டைச் சேர்நதவர், ஆனால் இப்போது முத்தையன்கட்டு குளத்தில் குடியேறிவிட்டார். அவருக்கு 17 வயதான மனைவியும் ஒரு குழந்தையும் இருக்கிறார்கள். கபில்ராஜின் மூத்த சகோதரி அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் யாழ்ப்பாணத்தில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் சார்பில் பிரதேசசபை ஒன்றின் உறுப்பினராக தெரிவானார்.

இராணுவம் இடம் மாறுகின்றது என்றும் பெருமளவு கூரைத் தகரங்கள் முகாமில் இருப்பதாகவும் கபில்ராஜுடன் தொடர்புடைய படைவீரர்கள் அவருக்கு தெரிவித்ததாக கூறப்பட்டது. குறிப்பிட்ட அளவு மதுபானத்துடனும் தூளுடனும் வந்து அந்த கூரைத் தகரங்களை எடுத்துச் செல்லுமாறும் அவரிடம் கேட்கப்பட்டது. கபில்ராஜ் தனது உதவிக்கு நான்கு நண்பர்களை அழைத்துக் கொண்டு 2025 ஆகஸ்ட் 7 ஆம் திகதி இரவு முகாமுக்கு சென்றார். முகாமின் பின்புறத்தின் ஊடாகவே அவர்கள் பிரவேசித்தனர்.

அதற்கு பிறகு என்ன நடந்தது என்பது தெளிவில்லை. குழப்பமாக இருக்கிறது. முகாமுக்குள் ஏதோ அமளிதுமளி. முகாமுக்கு வந்து கூரைத் தகரங்களை எடுத்துச் செல்லுமாறு ” அழைப்பு ” விடுத்த படைவீரர்கள் அந்த நேரத்தில் அங்கு இருக்கவில்லை. பதிலாக, வேறு படைவீரர்களே காணப்பட்டனர். அவர்கள் இந்த இளைஞர்களை இரகசியமாக முகாமுக்குள் நுழைந்த திருடர்கள் என்று நினைத்து தாக்கத் தொடங்கிவிட்டார்கள் என்று ஒரு பக்கத் தகவல் கூறுகிறது. இன்னொரு பககத் தகவல் படைவீரர்கள் கேட்டிருந்த அளவு மதுபானத்தையும் தூளையும் இளைஞர்கள் கொண்டுசெல்லவில்லை என்ற காரணத்தால் அவர்களுக்கும் படையினருக்கும் இடையில் தகராறு மூண்டதாக கூறுகிறது. கபில்ராஜ் இன்னொரு படைவீரரிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு அவருக்கு உறுதியளித்த பொருட்களை கொடுக்காமல் ஏமாற்றியதாகவும் அந்த படைவீரர் இவரைக் கண்டதும் வேறு இரு படைவீரர்களுடன் சேர்ந்து ஐவர் மீதும் தாக்குதல் நடத்தியதாகவும் மூன்றாம் பக்கத் தகவல் கூறுகிறது.

தாக்குதலும் தப்பியோடலும்

படைவீரர்களின் தாக்குதலையடுத்து ஐந்து இளைஞர்களில் மூவர் ஓடிச்சென்று முத்தையன்கட்டு குளத்திற்குள் பாய்ந்து நீந்தி தப்பிச் சென்றதாகவும் ஒரு இளைஞன் தனது தோழர்கள் தாக்கப்படுவதை கைத்தொலைபேசியில் பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு தாக்குதலை பதிவுசெய்த தொலைபேசியை அந்த இளைஞன் பற்றைக்குள் எறிந்துவிட்டு குளத்தில் குதித்து நீந்திச் சென்றதாகவும் கூறப்படுகிறது. தொலைபேசி பற்றைக்குள் இருந்து மீட்கப்பட்டு தாக்குதல் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவின.

ஐந்து இளைஞர்களில் மூவர் தப்பிச்சென்று கிராமத்துக்கு திரும்பி வந்த நிலையில், முத்தையன்கட்டு குளம் கிராமம் பூராவும் சம்பவம் குறித்த செய்தி பரவத் தொடங்கியது. இராணுவத்தின் காவலில் இருந்த இரு இளைஞர்களின பாதுகாப்பும் பத்திரமும் குறித்து கவலை வெளியிடப்பட்டது. ஆத்திரமடைந்த கிராமத்தவர்கள் இராணுவ முகாமின் முன்பாக கூடி ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கினர். சிறிது நேரத்தில் இன்னொரு இளைஞரை படையினர் விடுவித்தனர். அவர் தாக்குதல் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், எதிர்மன்னசிங்கம் கபில்ராஜை இன்னமும் காணவில்லை. தங்களுக்கு அவரைப் பற்றி எதுவும் தெரியாது என்று முகாமில் இருந்த படைவீரர்கள் கூறினர். கபில்யாஜின் பாதுகாப்பு குறித்து மக்கள் தொடர்ந்தும் பிரச்சினை கிளப்பிக் கொண்டிருந்தனர். முத்தையன்கட்டுக் குளம் வாவியில் ஆகஸ்ட் 9 ஆம் திகதி கபில்ராஜின் சடலம் மிதந்து கொண்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து நிலைவரம் மோசமாகியது. ஒட்டுசுட்டானில் இருந்து பொலிசார் வந்து சேர்ந்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன்

நீதி வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பெருமளவில் மக்கள் கூடிவிட்டனர். முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்தவரான வன்னி மாவட்ட தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துரைராஜா ரவிகரன் சம்பவ இடத்துக்கு வந்து ஆத்திரமுற்றுக் காணப்பட்ட கிராமத்தவர்களை அமைதிப்படுத்தினார். கபில்ராஜின் மரணம் குறித்து விசாரணை பொலிசார் நடத்தி அதற்கு பொறுப்பானவர்களை கைதுசெய்யாவிட்டால் மக்களை அழைத்துவந்து ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக ரவிகரன் எச்சரிக்கை செய்தார்.

கபில்ராஜின் சடலம் வாவியில் மிதந்தது குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. படைவீரர்களினால் தாக்கப்படுவதை தவிர்ப்பதற்காக வாவிக்குள் பாய்ந்த அவர் நீச்சல் தெரியாத காரணத்தால் மூழ்கிப்போனார் என்பது ஒரு கருத்து. இராணுவக் காவலில் இருந்த வேளையில் இறந்தாகக் கூறப்படும் அவரின் சடலத்தை படைவீரர்கள் வாவியில் விசியிருக்கிறார்கள் என்பது இன்னொரு கருத்து. அவரது மரணம் குறித்து பகிரங்கத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும் நிலையில் உடலின் முக்கிய பாகங்கள் மரணத்துக்கான காரணத்தை உறுதிசெய்வதற்கு மருத்துவ பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. தீவிர விசாரணையை நடத்துவதற்காக கொழும்பில் இருந்து முத்தையன்கட்டுக்கு விசேட பொலிஸ் குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

விளக்கமறியலில் நான்கு படைவீரர்கள்

இராணுவ பொலிஸ் அதிகாரிகளுடன் சேர்ந்து செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் ஆரம்பத்தில் மூன்று படைவீரர்களை கைது செய்தனர். அவர்களில் இருவர் கபில்ராஜை முகாமுக்கு வரச் சொன்னவர்கள். மூன்றாமவர் தாக்குதல் நடத்திய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர். அதைத் தொடர்ந்து நான்காவது படைவீரர் ஒருவரும் கைதானார். முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 19 ஆம் திகதி ஆஜர் செயயப்பட்ட நால்வரும் ஆகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சடடத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் முல்லைத்தீவைச் சேர்ந்த சட்டத்தரணிகளுடன் சேர்ந்து நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அதேவேளை, சம்பவத்தின் விளைவான தாக்கம் ஆரம்பத்தில் அதிர்ச்சி தருவதாக இருந்தது. போர் முடிவுக்கு வந்து பதினாறு வருடங்கள் கடந்துவிட்ட பின்னரும் கூட இராணுவத்தினர் நடத்தியதாக கூறப்படும் தாக்குதலில் தமிழ் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். படைவீரர்களே கபில்ராஜையும் மற்றைய நால்வரையும் முகாமுக்கு அழைத்திருந்தாக கூறப்படுகிறது. உண்மையில் நடந்தவற்றைப் பற்றிய முழுவிபரங்களும் கிடைக்கவில்லை என்ற போதிலும், சமாதான காலத்திலும் கூட இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாக கூறப்படும் தமிழ் இளைஞர் ஒருவரின் சடலம் முத்தையன்கட்டு வாவியில் மிதந்து கொண்டிருக்கக் கண்டுபிடிக்கப்பட்டது மக்களுக்கு கவலையையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இத்தகையதொரு சூழ்நிலையிலேயே, நடவடிக்கையில் இறங்குவதற்கு தமிழரசு கட்சி.தீர்மானித்தது. இணையத்தின் ஊடாக நிலைவரத்தை ஆராய்ந்த 12 உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் அரசியல் குழு ஹர்த்தால் ஒன்றை நடத்துவது என்று ஏகமனதாக தீர்மானத்துக்கு வந்தது. ஹர்த்தாலுக்கு இரு நோக்கங்கள் இருந்தன. உடனடியாக கபில்ராஜின் மரணத்துக்கு நீதி கோருவது ஒரு நோக்கம். நீண்டகால அடிப்படையில் வடக்கு, கிழக்கில் போர் முடிவுக்கு வந்து 16 வருடங்களுக்கு பின்னரும் பெரியளவில் தொடரும் இராணுவப் பிரசன்னம் மீது கவனத்தை ஈர்ப்பது மற்றைய நோக்கம்.

ஜனாதிபதிக்கு தமிழரசு கட்சி கடிதம்

2025 ஆகஸட் 10 ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவுக்கு கூட்டாக கடிதம் ஒன்றை அனுப்பிய தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானமும் பொதுச் செயலாளர் எம்.ஏ சுமந்திரனும் சம்பவம் குறித்தும் ஹர்த்தால் ஒன்றை நடத்துவதற்கான நோக்கத்தையும் அவருக்கு அறிவித்தனர். அந்த கடிதத்தில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது ;

” முத்தையன்கட்டு வாவியில் நேற்றையதினம் காலையில் 32 வயதான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் என்பவரின் சடலம் கணடுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உங்கள் கவனத்துக்கு கொண்டுவருகின்றோம்.
2025 ஆகஸ்ட் 7 ஆம் திகதி இலங்கை இராணவத்தின் 63 வது படைப்பிரிவின் முகாமுக்கு வருமாறு கேட்கப்பட்ட ஐந்து பேர் படைவீரர்களினால் கடுமையாக தாக்கப்பட்டதாக இப்போது தெரியவந்திருக்கிறது.

” அந்த ஐவரில் ஒருவரான கபில்ராஜ் காணாமல்போய் பிறகு அவரது சடலம் வாவியில் மிதந்துகொண்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பில் சில படைவீரர்கள் கைது செய்யப்பட்டதாக எமக்கு தெரியவந்திருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக தடங்கலற்ற முழுமையான விசாரணை இடம்பெற்று குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவதற்காக மாத்திரமல்ல, வடக்கிலும் கிழக்கிலும் மட்டுமீறிய இராணுவப் பிரசன்னம் மற்றும் அடக்குமுறை நடவடிக்கைகள் குறித்து உங்கள் கவனத்துக்கு கொண்டுவருவதற்காகவும் இந்த கடிதத்தை எழுதுகிறோம்.

” மட்டுமீறிய இராணுவப் பிரசன்னத்தை அகற்றுவதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறும் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலான நீதிச் செயன்முறை தலையீடின்றி இடம்பெறுவதை உறுதிசெய்யுமாறும் உங்களை வலியுறுத்துகிறோம்.

” இன்று வரை தொடருகின்ற இராணுவத்தின் கொடுமைக்கு எதிராக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் முழுவதும் 2025 ஆகஸ்ட் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஹர்த்தால் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம்.”

நல்லூர் திருவிழா

தொடக்கத்தில் ஆகஸ்ட் 15 வெள்ளிக்கிழமை முழுநாள் ஹர்த்தாலை நடத்துவதற்கே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இரு தடங்கல்கள் ஏற்பட்டன. முதலாவது, நல்லூர் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. கார்த்திகைத் திருவிழா தினமான வெள்ளிக்கிழமை மாலை வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான் தேரில் வலம்வர இருந்தார்.

மடு உற்சவம்

இரண்டாவது, ஆகஸ்ட் 15 மன்னார் மடுவில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தின் வருடாந்த உற்சவ தினமாகும். அன்றைய தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உற்சவத்தில் கலந்துகொள்ள விருந்தனர்.

18 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

இந்த காரணங்களினால் உத்தேச ஹர்த்தால் ஆகஸ்ட் 18 திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் தடங்கல் ஏற்பட்டது.நல்லூர் கோவிலின் 25 நாள் திருவிழா தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆகஸ்ட் 18 ஆம் திகதி மாலையில் வேல்விமானத் திருவிழா நடைபெறவிருந்தது. இந்த திருவிழாவில் முருகப்பெருமான் தங்கரதத்தில் வீதிவலம் வருவது வழக்கம். இதற்கு மேலதிகமாக ஒரு முழுநாள் ஹர்த்தாலை நடத்துவது குறித்து பல வர்த்தக சங்கங்கள் விசனம் தெரிவித்தன. தினக்கூலி தொழிலாளர்களிடமிருந்தும் ஆட்சேபம் வந்தது.

காலை தொடக்கம் நண்பகல் வரை

அதனால் ஒரு இணக்கப்பாடு எடடப்பட்டது. ஹர்த்தாலை அனுஷ்டிக்கும் நேரம் அரைவாசியாக குறைக்கப்பட்டது. காலை முதல் மாலை வரை என்பதற்கு பதிலாக காலை முதல் நண்பகல் வரை என்று தீர்மானிக்கப்பட்டது. முழுநாள் என்பதில் இருந்து ஹர்த்தால் நேரம் அரைவாசியாக குறைக்கப்பட்டதனால் வர்த்தகர்கள் கடைகளையும் நிறுவனங்களையும் காலை வேளையில் மூடுவது வசதியாக இருந்தது.

வெவ்வேறு பகுதிகளில் கலப்பான — சமனற்ற வரவேற்பு இருந்த போதிலும், ஒட்டு மொத்தத்தில் ஹர்த்தால் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியது. பக்கச்சார்பற்ற அவதானிகள் பலர் ஹர்த்தால் நியாயமானளவு வெற்றியாக அமைந்ததாக கூறினர். மலையக தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் வெளிக்காட்டியது ஹர்த்தாலின் முக்கியமான ஒரு அம்சமாகும்.

D.B.S.Jeyaraj can be reached at dbsjeyaraj@yahoo.com

ஆங்கில மூலம்: டி. பி. எஸ். ஜெயராஜ் (Daily Financial Times)

தமிழில்: வீரகத்தி தனபாலசிங்கம்

நன்றி: வீரகேசரி

************************************************************************************************