டி.பி.எஸ். ஜெயராஜ்
ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவின் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவியில் இப்போது ஒரு வருடத்தை நெருங்குகிறது. ஜே.வி.பி. — தேசிய மக்கள் சக்தியின் 159 பாராளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளூராட்சி தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி பெற்ற வெற்றிகளையும் அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது விரைவாக அவர்களின் அரசாங்கத்தை பதவியில் இருந்து அகற்றுவதற்கு அண்மைய எதிர்காலத்தில் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.
இருந்தாலும், பல எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் வேறு விதமாக நினைக்கிறார்கள் போன்று தெரிகிறது. இந்த எதிர்பார்ப்புகள் இரு சாத்தியப்பாடுகளில் தங்கியிருக்கின்றன. நாளடைவில் பொருளாதாரம் சீர்குலைந்து எரிபொருள், மின்சாரம், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவு வகைகளுக்கு தட்டுப்பாடும் மக்களினால் அவற்றை கொள்வனவு செய்வது கட்டுப்படியாகாத நிலை ஏற்பட்டு நெருக்கடி நிலைவரமும் தோன்றும் என்று சிலர் எதிர்பார்க்கிறார்கள். அநுரவின் அரசாங்கத்தைக் கவிழ்த்துவிடக்கூடிய ” அறகலய ” போன்ற கொந்தளிப்பான நிலைவரம் ஏற்படும் என்பது இவர்களின் நம்பிக்கை.
ஆளும் கட்சிக்குள் உட்பிளவுகள் ஏற்படும் என்பது இன்னொரு வகையான சிந்தனை. கடும்போக்குடைய பழைய ஜே.வி.பி. தலைவர்களுக்கும் புதிய சீர்திருத்தவாத தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.தேசிய மக்கள் சக்தயின் பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் ஜே.வி.பி.யின் மேலாதிக்கத்தை எதிர்த்து பிரிந்து போவார்கள் என்பது விருப்பமான ஒரு நம்பிக்கை. மேலும், ஜே.வி.பி.யின் உயர்மட்ட தலைவர்கள் சிலருக்கிடயிலான தனிப்பட்ட போட்டி மனப்பான்மையும் கூட கட்சியின் பிளவுக்கு வழிவகுக்கலாம் என்பது எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்பு.
இது தொடர்பில் வதந்திகள் வேகமாகப் பரவிவருகின்றன. இரு சிரேஷ்ட அமைச்சர்கள் பிரதமர் பதவியில் கண் வைத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. அதனால், பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக பனிப்போர் ஒன்று மூண்டிருக்கிறது. வதந்திகளைப் பரப்புபவர்கள் கூறுகின்றவற்றின் பிரகாரம் பார்த்தால் ஜனாதிபதி அநுரவின் ஆதரவும் ஒருமைப்பாடும் இல்லாமல் இருந்திருந்தால், தனக்கு எதிராக அணிதிரண்ட உட்சக்திகளினால் ஹரிணி பதவிவிலக நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கக்கூடும்.
அரசாங்கத்தின் உயர் மட்டத்திற்குள் மூண்டிருப்பதாக கூறப்படுகின்ற மெய்யான அல்லது கற்பனையான அதிகாரப் போட்டியை ஆராய்வது இந்த பத்தியின் நோக்கமல்ல. ஆனால், பிரதமர் ஹரிணி அமரசூரிய, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க ஆகியோரை மையப்படுத்திய நிகழ்வுகளின் விசித்திரமான திருப்பம் ஒன்று குறித்து பத்தி கவனம் செலுத்துகிறது. அவர்கள் மூவருக்கும் இடையிலான கருத்துப் பரிமாற்றங்கள் பல சதிக்கோட்பாடுகளை மூளவைத்த ஒரு சர்ச்சையை தோற்றுவித்திருக்கின்றன. அத்துடன் அரசாங்கத்துக்குள் பாரதூரமான கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருக்கிறது என்ற அபிப்பிராயத்தையும் அது பலப்படுத்தியிருக்கிறது.
டி.வி. சானக்க
பாராளுமன்ற உறுப்பினர் சானக்க எழுப்பிய கெடுதியான நோக்கமற்றதாக தோன்றிய ஒரு கேள்வியை அடுத்தே சர்ச்சை தொடங்கியது. ஒரு செய்மதி திட்டம் தொடர்பாக முதலீட்டுச் சபைக்கும் சுப்றீம்சற் ( SupremeSAT ) பிறைவேட் லிமிட்டெட்டுக்கும் இடையில் 2012 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கை பற்றியதே அந்த கேள்வி. முதலீட்டுச் சபை நிதியமைச்சின் அதிகாரத்தின் கீழ் வருகின்ற போதிலும், நிதியமைச்சருக்கு பதிலாக பிரதமர் ஹரிணியிடமே அந்த கேள்வி கேட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிரதமர் பதவிக்கு மேலதிகமாக ஹரிணி கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகவும் இருக்கிறார். ஜனாதிபதி அநுரவே நிதியமைச்சர்.
ஆகஸ்ட் 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பிரதமர் ஹரிணி, சானக்கவுக்கு உத்தியோகபூர்வமாக பதிலளித்தார். முதலீட்டுச் சபையின் அதிகாரிகளினால் வழங்கப்பட்ட தரவுகளையே தான் வாசிப்பதாக தொடக்கத்தில் அவர் கூறினார். பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் பிரகாரம் அவரின் பதிலின் சாராம்சம் வருமாறு ;
சுப்றீம்சற் — முதலீட்டுச் சபை
” முதலீட்டுச் சபையுடன் 2012 மே 23 ஆம் திகதி உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொண்ட சுப்றீம்சற் 2012 — 2014 காலப்பகுதியில் செய்மதிக்காக 12. 1 மில்லியன் ரூபாவை முதலீடு செய்தது. முதலீட்டுச் சபை சட்டத்தின் 17 வது பிரிவின் கீழ் உள்நாட்டுச் சந்தையை இலக்காகக் கொண்ட ஒரு திட்டமாக அந்த முதலீடு வகைப்படுத்தப்பட்டது.
” 1828 மில்லியன் ரூபா முதலீட்டுடன் கண்டி கைத்தொழில் பூங்காவில் செய்மதி முறைமை ஒன்றை நிறுவிச் செயற்படுத்துவதே திடடத்தின் குறிக்கோள். உள்நாட்டுப் பாவனையாளர்களுக்கு தொலைத்தொடர்பு மற்றும் ஔிபரப்பு சேவைகளை வழங்குவதே அதன் நோக்கம். வர்த்தக செயற்பாடுகள் 2015 ஆகஸ்ட் 27 ஆம் திகதி தொடக்கின. இந்த திட்டத்துக்காக இலங்கை அரசாங்கம் எந்த பணத்தையும் முதலீடு செய்யவில்லை. எனவே இலங்கை அரசுக்கு எந்தவிதமான நிதி இழப்பும் ஏற்படவில்லை.”
கடந்த வருடங்களில் சுப்றீம்சற்றினால் ஈட்டப்பட்ட வருமானம் பற்றி முதலீட்டுச் சபையின் தரவுகளின் அடிப்படையில் விபரங்களையும் பிரதமர் சபையில் முன்வைத்தார். அவை வருமாறு ;
2016 ; 19, 617 மில்லியன் ரூபா,
2017 ; 28, 133 மில்லியன் ரூபா,
2018 ; 29, 106 மில்லியன் ரூபா,
2019 ; 34, 169 மில்லியன் ரூபா,
2020 ; 40, 960 மில்லியன் ரூபா,
2021 ; 62, 544 மில்லியன் ரூபா,
2022 ; 87, 789 மில்லியன் ரூபா,
2023 முதல் அரைப்பகுதி ; 39,590 மில்லியன் ரூபா.
முதலீட்டுச் சபையின் தரவுகளின் அடிப்படையில் பிரதமரினால் முன்வைக்கப்பட்ட விபரங்களின் பிரகாரம் ஏழரை வருடங்களில் சுப்றீம்சற் திட்டம் 343. 9 பில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டிக் கொடுத்திருக்கிறது. அதன் அர்த்தம் வருடாந்த சராசரி வருமானம் 40 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமானதாகும்.
‘சிச்சீ’ யின் ரொக்கெட்
இலங்கையில் முதலீட்டாளர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட முக்கியமான குற்றச்சாட்டுக்கள் என்று வர்ணிக்கப்பட்டவற்றில் ஒன்று குறித்து விளக்கம் அளித்தமைக்காக பிரதமர் ஹரிணிக்கு பாராளுமன்ற உறுப்பினர் சானக்க நன்றி கூறியதாக ‘ நியூஸ்வயர்’ செய்தி தெரிவித்தது. ” சிச்சியின் ரொக்கெட் ” என்றே இந்த திட்டம் பொதுவில் குறிப்பிடப்பட்டது. இலங்கையில் சுப்றீம்சற் என்பதை விடவும் சிச்சியின் ரொக்கெட் என்று கூறினால்தான் நன்கு தெரியும். இதில் 300 மில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்பட்டது என்பதும் பிறகு திட்டமே காணாமல் போய்விட்டது என்பதுமே குற்றச்சாட்டு. ஆனால், இப்போது பிரதமர் அந்த திட்டத்தில் ஒரு இலங்கை ரூபா கூட முதலீடு செய்யப்படவில்லை என்றும் திட்டத்தினால் வருடாந்தம் கணிசமான வருமானம் பெறப்பட்டிருக்கிறது. அதில் வெளிநாட்டு முதலீடே செய்யப்பட்டது என்றும் தெளிவு படுத்தியிருக்கிறார்” என்று சானக்க கூறினார்.
சுப்றீம்சற் என்பது முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மகன்களுக்கான தனிப்பட்ட திட்டம் என்று தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பற்றி குறிப்பிட்ட சானக்க, பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி முன்வைக்கப்பட்ட அந்த குற்றசாசாட்டுக்கள் பிரதமரினால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறதா என்று கேள்வியும் எழுப்பினார்.
முதலீட்டுச் சபையின் தரவுகள்
முற்றிலும் முதலீட்டுச் சபையின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டே தனது அறிக்கை அமைந்திருந்ததாக பிரதமர் ஹரிணி தனது பதிலில் கூறியிருந்தார்.” அந்த திட்டம் பெரியதா அல்லது சிறியதா என்று தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்வில்லை. இந்த விடயம் வெவ்வேறு காரணங்களுக்காக பொதுவெளியில் பேசப்பட்டது. அது தொடர்பாக மேலதிக கேள்விகள் இருந்தால், அதற்கு தனியாக பதிலளிக்க என்னால் முடியும். ஆனால், நான் கூறுவது உத்தியோகபூர்வ அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட உள்ளது உள்ளவாறான தகவலாகும். அது நல்லதா அல்லது கெட்டதா என்பது பொதுமக்களினால் தீர்மானிக்கப்படும்” என்று அவர் கூறினார்.
மூன்றாவது மகன் ரோஹித
பிரதமரின் பதிலின் முழுமையான தாக்கமும் விளைவுகளும் அவரின் பதிலுக்கு சானக்க தெரிவித்த நன்றிக்கு பிறகு அமிழ்ந்துபோகத் தொடங்கியது. சுப்றீம்சற் திட்டத்துக்கு பிரதமர் நற்சான்றைக் கொடுத்திருக்கிறார் என்றும் திட்டம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ‘ சிச்சி ‘ என்று அறியப்பட்ட மூன்றாவது மகன் ரோஹித ராஜபக்ச எந்த தவறும் செய்யவில்லை என்று அவரை குற்றச்சாட்டில் இருந்து விடுவித்திருக்கிறார் என்றும் தோன்றியது.
மகிந்த ராஜபக்ச மீது அவரின் எதிரிகள் ஊழல், குடும்ப அரசியல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முனவைத்து வந்திருக்கிறார்கள். சுப்றீம்சற் அவற்றில் ஒன்று. அந்த திட்டத்தில் ‘ சிச்சி’ க்கு சம்பந்தம் இருந்தது என்று பல வருடங்களாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
சுப்றீம்சற் திட்டம் இலங்கையில் முதலீட்டுச் சபையில் 2012 மே 23 ஆம் திகதி பதிவு செய்யப்பட்டது. 1,828 பில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. திட்டத்தின் உடமை சுப்றீம் குளோபல் ஹோல்டிங்ஸுக்கும் (80 சதவீதம் ) சுப்றீம் எஸ்.எல். இன்வெஸ்ற்மென்றுக்கும் (20 சதவீதம்) உரியது. ஜயா சுதிர், அல்பேர்ட்டோ டி சைமன் என்ற வேறு இருவருடன் சேர்ந்து சுப்றீம் குளோபல் ஹோல்டிங்ஸை சொந்தமாகக் கொண்ட ஆர்.எம். மணிவண்ணன் என்பவரே சுப்றீம்சற் திட்டத்தை பின்னாலிருந்து இயக்குபவர்.
சுப்றீம்சற்றின் பிரதம தொழில்நுட்ப பணிப்பாளராக ரோஹித ‘ சிச்சி ‘ ராஜபக்சவை மணிவண்ணன் நியமித்தார். ரோஹித ராஜபக்சவுக்கு சொந்தமானது என்று கூறப்பட்ட ஒரு கம்பனியான டைசர் இன்டர்நாசனலின் ஊடாக சுப்றீம்சற்றில் அவருக்கு பங்குகள் கொடுக்கப்பட்டன. இலங்கைச் செய்மதி ஒன்றை விண்ணுக்கு ஏவுவதை நோக்கமாகக் கொண்ட அந்த திட்டம் ரோஹிதவின் மூளையில் உதித்தது என்று ஊடகச் செய்திகள் கூறின.
அந்த செய்திகள் தவறானவை. சுப்றீம்சற் –1 தனியான இலங்கை விணகலம் அல்ல. சைனாசற் – 12 திட்டத்திடமிருந்து அது குத்தகைக்கு எடுக்கப்பட்டது. அது பிறகு பெயர் மாற்றம் செய்யப்பட்டு சுப்ரீம்சற் — 1 என்று சந்தைப்படுத்தப்பட்டது. இருந்தாலும் பிரபலமாக அது ‘ சிச்சியின் ரொக்கெட் ‘ என்றே அழைக்கப்பட்டது.
இதற்கு காரணம் ரோஹித ராஜபக்சவுக்கு விண்வெளி வீரராக வரவேண்டும் என்றிருந்த ஆசையயாகும்.மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வர்கள் நாமல், யோஷித்த போலன்றி, மூன்றாவது மகன் வேறுபட்ட விருப்பங்களையும் இயல்புகடந்த பண்புகளையும் கூட கொண்டவர். தனது ஒன்பது வருடகால காதலியை திருமணம் செய்வதற்கான விருப்பத்தை தெரிவிப்பதற்கு அவர் தங்காலையில் இருந்து தான்சானியாவுக்கு சென்றார். ஆபிரிக்காவின் மிகவும் உயர்ந்த மலையான கிளிமஞ்சதாரோவின் உச்சிக்கு காதலி தட்யானா லீயுடன் சேர்ந்து ஏறிய ரோஹித் அங்கு வைத்து முழந்தாளிட்டு தனது திருமண விருப்பத்தை வெளிப்படுத்தினார். அந்த நிகழ்வை பதிவு செய்வதற்கு சகோதரர் நாமலும் அங்கு பிரசன்னமாகியிருந்தார்.
ஊழல், அதிகார துஷ்பிரயோகம்
இந்த ஆரவாரங்கள், விளம்பரங்கள் எல்லாம் இருந்தபோதிலும், ‘ சிச்சியின் ரொக்கெட்’ என்று அழைக்கப்பட்ட சுப்றீம்சற் பற்றி பிறகு எந்த கதையையும் காணோம். அது நகைச்சுவைக்குரிய விடயமாகிவிட்டது. ஆனால், மகிந்த ராஜபக்சவை தாக்குவதற்கான இன்னொரு ‘ பொல்லாக’ அதை எதிர்க்கட்சிகள் பயன்படுத்தின. தனது இளைய மகனின் விசித்திரமான தூண்டுதல்களையும் கற்பனாவாத விருப்பங்களையும் நிறைவேற்றுவதற்கு அவர் கோடிக்கணக்கில் டொலர்களை விரயம் செய்கிறார் என்று குற்றஞ்சாட்டப்பட்டது. ஊழல், அதிகார துஷ்பிரயோகம், குடும்பத்வர்களுக்கு சலுகை என்று அது மும்முனைக் குற்றச்சாட்டாக இருந்தது. ‘ சிச்சியின் ரொக்கெட்டை ‘ காரணம் காட்டி ராஜபக்சாக்களை கர்ணகடூரமாகத் தாக்குதவதில் ஜே.வி.பி. முன்னரங்கத்தில் நின்றது. ரொக்கெட் பிரச்சினை தொடர்பாக ராஜபக்ச ஆட்சிகளை தாக்குவதன் முலம் ஜே.வி.பி. ஒரு தசாப்தத்துக்கும் மேலாக அரசியல் பிரசாரத்தில் பயனடைந்தது.
ராஜபக்ச குடும்பத்துக்கு எதிராக ஒரு தசாப்தத்துக்கும் மேலாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை சரிசெய்தமைக்காக பிரதமருக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர நன்றி தெரிவித்தார். ஆகஸ்ட் 7 ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர்கள் மகாநாட்டில் வைத்து இந்த நன்றியை அவர் தெரிவித்ததாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.
ராஜபக்சவின் ஒரு மகனுக்காக ரொக்கெட் ஒன்றை விண்ணில் செலுத்துவதற்காக 323 மில்லியன் டொலர்கள் ( சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கை முதல் தவணையில் பெற்ற கடனுதவிக்கு சமமான தொகை ) செலவிட்டப்பட்டதாகவும் பிறகு அந்த ரொக்கெட்டை ஒருபோதும் காணவில்லை என்றும் கடந்த தேர்தல் பிரசாரங்களின்போது கூறப்பட்டது என்று தெரிவித்த வக்கும்புர, அந்த ரொக்கெட் திட்டத்துக்கு அரசாங்கப் பணத்தில் ஒரு சதமேனும் செலவிடப்படவில்லை என்றும் இன்னொரு கம்பனியே அதற்கு நிதி வழங்கியது என்றும் பிரதமர் மிகவும் தெளிவாக பாராளுமன்றத்தில் விளக்கமளித்தார் என்றும் குறிப்பிட்டார்.
அந்தரங்கமான நோக்கத்துடன் கேட்கப்பட்டதாக தோன்றிய கேள்விக்கு பிரதமர் அளித்த பதில் ராஜபக்சாக்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு விதிவசமான — மோசமான பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. பிரதமரின் பதிலின் பிரகாரம், ‘ சிச்சியின் ரொக்கெட் ‘ திட்டத்தில் அரசாங்கம் ஒரு சதத்தையேனும் முதலீடு செய்யவில்லை என்பதுடன் அந்த திட்டம் 39 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானத்தை சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது. தந்தை மகிந்தவும் மகன் யோஹிதவும ஒரேயடியாக ‘ பாவத்தில்’ இருந்து விடுவிக்கப்பட்டனர் . நிச்சயமாக மெதமுலானவில் பெரும் கொண்டாட்டமாகத் தான் இருந்திருக்கும். சானக்க மீது புகழ்மழை பொழிந்திருக்கும்.
திசைகாட்டி முகாம்
இதற்கு மாறாக, திசைகாட்டி முகாமில் உற்சாகம் குறைந்த நிலை காணப்பட்டது. திசைகாட்டி திசையை இழந்துவிட்டது போன்று தோன்றியது. சிச்சி ரொக்கெட் விவகாரம் பாரிய ஊழல்மோசடி என்று பல வருடங்களாக ஜே.வி.பி. பிரசாரம் செய்துவந்த நிலையில் இப்போது பிரதமர் ஹரிணி அதற்கு மாறாக கூறியிருக்கின்றார். ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பைத்தியக்காரத்தனமானதாக தோன்றியதுடன் போலிப் பிரசாரங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாக வேண்டிய நிலையில் இருந்தது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முற்றிலும் கலக்கத்துக்கு உள்ளானது. ஜே.வி.பி.யின் தலைமையகத்திலும் வேறு இடங்களிலும் உயர்மட்டத் தலைவர்கள் பல்வேறு சந்திப்புக்களை நடத்தியதாக நம்பகமாகத் தெரியவந்தது. ஹரிணி பெருந்தவறைச் செய்துவிட்டார் என்பது விரைவாகவே வெளிப்படையாக தெரிந்தது. நிதியமைச்சரை நோக்கி கேட்கப்பட வேண்டிய கேள்வி தன்னிடம் கேட்கப்பட்டதில் ஒரு உள்நோக்கம் இருந்தது என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை.
சிச்சி ரொக்கெட் விவகாரம் ராஜபக்சாக்களுக்கு பல வருடங்களாக ஒரு அசௌகரியமாக இருந்து வந்தது. பல வருடங்களாக அந்த விவகாரத்துடன் அவர்களை தொடர்புபடுத்தி பேசப்படாமல் இருந்துவந்த நிலையில், ராஜபக்ச விசுவாசிகளில் ஒருவரான டி.வி. சானக்க பாராளுமன்றத்தில் அதைப்பற்றி சங்கடமான ஒரு கேள்வியைக் கிளப்பினார். மறக்கப்பட்டுவிட்ட ஒரு விவகாரத்தை இப்போது ஏன் மீண்டும் திறக்க வேண்டும்? குறிப்பாக, பிரதமரும் பொதுவில் அரசாங்கமும் வசமாக மாட்டுப்படவேண்டியேற்பட்டுவிட்டது.
பிரச்சினையை சரியான முறையில் மதிப்பிடத் தெரியாத நிலையில், கலாநிதி ஹரிணி அமரசூரிய முதலீட்டுச் சபையினால் வழங்கப்பட்ட தரவுகளை எந்த வகையிலும் பரிசீலித்துப் பார்க்காமல் ஏற்றுக்கொண்டுவிட்டார். மேலும், முதலீட்டுச் சபையின் தரவுகளில் மில்லியன் என்று குறிப்பிடப்பட்டிருந்ததை பில்லியன் என்று வேறு வாசித்தார். மில்லியன் என்று இருக்க வேண்டிய இடத்தில் பில்லியன் என்றும் பில்லியன் என்று இருக்க வேண்டிய இடத்தில் மில்லியன் என்றும் அவர் வாசித்தார். வாசிக்கும்போது தொகை விபரங்களில் ஏதோ தவறு நடந்துவிட்டது என்பதை புரிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு கூர்மதியுயைவராக அவர் இருக்கவில்லை. அது அவர் ஆராயாமல் செய்த பெருந்தவறு.
இவற்றுக்கு அப்பால், பிரதமரின் அலுவலகம், நிதியமைச்சு மற்றும் முதலீட்டுச் சபை ஆகியவற்றில் உள்ள அதிகாரிகளில் சிலரின் விசுவாசம், நேர்மை மற்றும் செயற்திறன் தொடர்பாக பாரதூரமான கேள்விகள் எழுகின்றன. குறிப்பிட்ட இந்த குறிப்பிட்ட கேள்வியைப் பொறுத்தவரை, பிரதமரின் செயலாளர் அது குறித்து நிதியமைச்சின் செயலாளரிடம் பேசியிருக்க வேண்டியதும் நிதியமைச்சின் செயலாளர் அதை முதலீட்டுச் சபைக்கு பாரப்படுத்த வேண்டியதுமே வழமையான நடைமுறையாகும். கோரப்பட்ட தகவல்களை முதலீட்டுச் சபை நிதியமைச்சுக்கு வழங்கியிருக்க வேண்டும். அதற்கு பிறகு நிதியமைச்சின் உயரதிகாரி ஒருவர் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்புவதற்கு முன்னதாக அந்த தரவுகளை சரிபார்த்திருக்க வேண்டும். இறுதியாக, பிரதமரிடம் கையளிப்பதற்கு முன்னதாக அவரின் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் மீண்டும் தரவுகளை சரிபார்த்திருக்க வேண்டும்.
இந்த நடைமுறையை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது பிரதமருக்கு எவ்வாறு தவறான தரவுகள் கொடுக்கப்பட்டது என்பதில் உண்மையில் ஒரு ” மர்மம் ” இருக்கிறது. அவர் தானாகவே தரவுகளை சரிபார்க்காமல் தனிப்பட்ட முறையில் கவனக்குறைவைாக நடந்துகொண்டாரா? அல்லது அவர் சந்தேகிக்கமாடடார் என்ற நம்பிக்கையில் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கிறாரா? அரசியல் சதி ஒன்று இடம்பெற்றிருக்கக்கூடிய சாத்தியமும் இருக்கலாம்.
இன்று அரச அதிகாரிகளில் உயர்மட்டங்களில் இருப்பவர்களில் கணிசமான எண்ணிக்கையானவர்கள் ராஜபக்சாக்களினால் நியமிக்கப்பட்ட விசுவாசிகள். அவர்களது நம்பகத்தன்மை இன்னமும் சந்தேகிக்கப்படுகிறது. கோட்டாபய ராஜபக்ச அரசாங்க காலத்தில் நியமிக்கப்பட்ட முதலீட்டுச் சபையின் ஒரு அதிகாரியே பிரதமரை வேண்டுமென்றே தவறாக வழிநடத்தியதற்கு பொறுப்பு என்று வதந்தி நிலவுகிறது. தற்போதைய சூழ்நிலையின் கீழ் உண்மையைக் கண்டறிய முழுமையான தீவிரமான விசாரணை ஒன்று அவசியமாகிறது.
ஹரிணியின் பின்னால் அணிதிரளல்
அதேவேளை, சேதம் ஏற்படுத்தப்பட்டு விட்டது. அதனால், சேதத்தின் விளைவான பாதிப்பை தணிக்க வேண்டியது அவசியமாகியது. தவறை உணர்ந்துகொண்ட ஹரிணி பதவியில் இருந்து விலக முன்வந்ததாகவும் ஆனால், அது நிராகரிக்கப்பட்டதாகவும் நம்பகமாக தெரிய வருகிறது. ஒரு அரிதான ஒருமைப்பாட்டு வெளிப்பாடாக ஜே.வி.பி.யினதும் தேசிய மக்கள் சக்தியினதும் உயர்மட்டத் தலைவர்கள் ஒன்றிணைந்து ஹரிணியின் பின்னால் அணிதிரண்டனர். ஜனாதிபதி அநுர, ஜே.வி.பி. பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, அமைச்சர்கள் பிமால் இரத்நாயக்க, விஜித ஹேரத் ஆகியோர் ஹரியை உறுதியாக ஆதரித்து நின்றனர்.
பிரதமர் பாராளுமன்றத்தில் கூறியவற்றை வாபஸ் வாங்கி ஒரு அறிக்கையை வெளியிட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அந்த அறிக்கை முனானதாக அவர் கூறியவற்றுக்கு முரண்பட்டதாக அமையும் என்கிற அதேவேளை, சரியான தகவலைச் சொல்வதாகவும் இருக்க வேண்டும். சேதத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவையை விளங்கி ஏற்றுக்கொண்ட ஹரிணி , தனக்கு ஏற்படக்கூடிய அசௌகரியத்தை மனதிற்கொண்டு தானாகவே சபையில் அறிக்கையை வெளியிடத் தயங்கினார். அவரது அந்த நிலைப்பாட்டை ஜே.வி.பி.யின் முக்கிய தலைவர்கள் விளங்கி ஏற்றுக்கொண்டனர்.
அதனால், பிரதமரின் சார்பில் சபை முதல்வரான பிமால் இரத்நாயக்க அறிக்கையை சபையில் வாசிப்பதே அடுத்த நடவடிக்கையாக இருக்க முடியும். ஆனால், அதில் ஒரு சிக்கல். ஹரிணிக்கும் பிமாலுக்கும் இடையால் ” போட்டி ” நிலவுவதாக ஊடகங்களில் பெருமளவில் ஊகங்கள் வெளியானதால், பிமால் அந்த அறிக்கையை வாசிக்கத் தயக்கினார். ஹரிணிக்கு முதுகில் குத்திய ஒருவராக தான் காண்பிக்கப்படுவதை பிமால் விரும்பவில்லை. அவரது அந்த நிலைப்பாடும் விளங்கி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
வசந்த சமரசிங்க
பிரச்சினை ‘ ரில்வின் ஐயா’ என்று அறியப்படட ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவினால் தீர்த்து வைக்கப்பட்டது. பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்ததை வாபஸ் வாங்கும் அறிக்கையை வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க வாசிக்க வேண்டும் என்று சில்வா யோசனை கூறினார். உணர்ச்சி கொந்தளிக்கப் பேசுகின்ற வசந்த சண்டைக்குணமுள்ள ஒரு ஆளுமை. ஹரிணியோ அல்லது பிமாலோ அல்ல வசந்தவே பாராளுமன்றத்தில் அறிக்கையை வெளியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
ஹரிணி அல்லது பிமால் அறிக்கையை வெளியிடுவதாக இருந்தால், அது அரசாங்கத்தின் நிலைப்பாடாக அமைந்து விடும். முதலீட்டுச் சபையின் உத்தியோகபூர்வ விபரங்களை அடிப்படையாக கொண்டதாக ஹரிணியின் அறிக்கை அமைந்திருந்ததே இங்கு பிரச்சினையாகும். முன்னைய விபரங்களை மறுதலிக்கும் வகையிலான முதலீட்டுச் சபையின் வேறு எந்த உத்தியோகபூர்வ விபரங்கள் கிடையாது. அதனால், பிரதமரோ அல்லது சபை முதல்வரோ எவ்வாறு முன்னைய விபரங்களை மறுதலித்து எந்த அடிப்படையில் அறிக்கையை வெளியிட முடியும்? இந்த இடத்தில் தான் வசந்த பொருத்தமானவராக தென்பட்டார். அவரது வழக்கத்துக்கு மாறான அறிக்கை அரசாங்கத்தின் ஒரு உத்தியோகபூர்வ அறிக்கையாக இருக்கவில்லை. இருந்தாலும், தான் தோன்றித்தனமான பாணியில் அமைந்த அவரது அறிக்கை சேதத்தை கட்டுப்படுத்துவதற்கான பயனுடைய கருவியாகியது.
வசந்த சமரசிங்க ஆகஸ்ட் 7 ஆம் திகதி பாராளுமன்றத்தில் அறிக்கையை வெளியிட்டார். பிரதமர் முன்கூட்டியே தெரிவித்த தகவல்களுடன் பல விடயங்களில் வசந்த முரண்பட்டார். ஆனால், முதலீட்டுச் சபையினால் பிரதமர் தவறாக வழிநடத்தப்பட்டதாக அவர் கூறியதாக பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் மூலமாக அறியக்கூடியதாக இருந்தது. பிரதமருக்கு தவறான தகவல்களை வழங்கியதாக முதலீட்டுச் சபையை அவர் குற்றஞ்சாட்டினார். செய்மதி திட்டத்தினால் ஈட்டப்பட்ட வருமானம் 343.9 மில்லியன் ரூபாவே தவிர, 343.9 பில்லியன் ரூபா அல்ல என்று வசந்த கூறினார்.” எமது கண்டு பிடிப்புகளின் பிரகாரம் சுப்றீம்சற்றினால் இவ்வளவு வருடங்களாக ஈட்டப்பட்ட மொத்த வருமானம் 343 மில்லியன் ரூபா மாத்திரமே. முதலீட்டுச் சபை அறிவித்ததைப் போன்று பில்லியன்கள் ரூபா அல்ல” என்று அவர் கூறினார்.
உண்மையான விபரங்கள் பிரதமர் கூறியவற்றின் ஒரு சிறுபகுதியே என்று வசந்த பாராளுமன்றத்தில் கூறியதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. உண்மையான விபரங்கள் வருமாறு ;
2015 — 2016 ; 19.167 மில்லியன் ரூபா
2016 — 2017 ; 28,133 மில்லியன் ரூபா
2017 — 2018 ; 29.1 மில்லியன் ரூபா
2018 — 2019 — 34.1 மில்லியன் ரூபா
2019 — 2020 ; 42.9 மில்லியன் ரூபா
2020 — 2021– 62 மில்லியன் ரூபா
2021– 2022 ; 87 மில்லியன் ரூபா
2023 முதல் அரைப்பகுதி — 39.5 மில்லியன் ரூபா.
மொத்த தொகை 342 மில்லியன் ரூபாவே தவிர, 343.9 பில்லியன் ரூபா அல்ல. தசமப் புள்ளிகளை காற்புள்ளிகள் என்று தவறாக வாசித்ததன் விளைவாகவே வருமானம் பல நூறு கோடிகளாக காண்பிக்கப்பட்டது.
கம்பனியின் பொதுவான செயற்பாடுகள் தெடர்பிலான வருமானம் என்று குறிப்பிடப்பட்ட விபரங்கள் நேரடியாக செய்மதியுடன தொடர்புடையவையல்ல. அதன் விபரங்கள் இன்னமும் கண்டுபிடிக்க முடியாதவையாகவே இருக்கின்றன என்று தெளிவுபடுத்திய சமரசிங்க, அறிவிக்கப்பட்ட 320 மில்லியன் ரூபா செலவு, சீன வங்கியிடம் இருந்து பெறப்பட்டிருக்கக்கூடிய கடன்கள், 2012 தொடக்கம் 2015 வரை கம்பனியின் கணக்கில் இருந்து காணாமல் போன செய்மதியின் சொத்துக்களில் 12 பில்லியன் ரூபா உட்பட திட்டத்தின் நிதி தொடர்பாக புதிய கேள்விகளை கிளப்பினார். ” இந்த தரவுகள் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படுவதற்கு முன்னதாக உகந்த முறையில் சரிபார்க்கப்பட்டிருக்க வேண்டும். தகவல்களை தொகுத்த அதிகாரிகளிலேயே தவறு இருக்கிறது” என்று அவர் கூறினார்.
” 12 பில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், யார் அந்த நிதியை வழங்கினார் அல்லது அந்த நிதி எங்கே போனது என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை. இந்த பணம் பயன்படுத்தப்பட்டிருந்தால், அது கம்பனியின் கணக்குகளில் பிரதிபலிக்க வேண்டும். ஆனால், கணக்குகளில் அதைக் காணவில்லை.ஏன்? ” என்று கேள்வியெழுப்பிய சமரசிங்க, செய்மதி திடடத்தில் 320 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாக ( இதில் ஒருபகுதி சீன வங்கியிடமிருந்து பெற்ற கடன் ) கூறப்பட்டிருக்கிறது. அது இப்போது ஆராயப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
செய்மதி சீனாவில் இருந்து 2012 நவம்பரில் விண்வெளிக்கு அனுப்பப்பட்டதாக கூறப்பட்ட அதேவேளை, விண்வெளியிலோ அல்லது எந்தவொரு சர்வதேச செய்மதிப் பதிவுகளிலோ அதன் தடயத்தைக் காணவில்லை. செய்மதி எங்கே? அது இலங்கைக்கு சொந்தமானதாக இருந்தால், ஏன் அதை
தேடிக்கண்டுபிடிக்க முடியாது? என்றும் சமரசிங்க கேள்வி எழுப்பினார்.
முதல் நாள் பிரதமரின் அறிக்கையின் மூலமாக ஏற்பட்ட அரசியல் சேதத்தை மறுநாள் சமரசிங்க ” சீர்செய்துவிட்டார்.” பிரதமர் வெளியிட்ட விபரங்கள் முதலீட்டுச் சபையினால் வழங்கப்பட்டவை. ஆனால், சமரசிங்கவின் அறிக்கை குறிப்பிட்ட எந்வொரு மூலத்தையும் அடிப்படையாகக் கொண்டதாக இருக்கவில்லை. அவர் கம்பனியின் கணக்குகளையும் இணையத்தின் மூலமான தகவல்களையுமே அவர் குறிப்பிட்டார்.
முதலீட்டுச் சபையினால் வழங்கப்பட்ட தவறான தகவல்களையே பிரதமர் ஹரிணி வாசித்தார் என்று வசந்த சமரசிங்க அளித்த விளக்கத்துக்கு பதிலளித்த டி.வி. சானக்க மிகவும் பொருத்தமான கேள்வியொன்றை கேட்டார் — ” தனக்கு கொடுக்கப்படுகின்றது எதுவோ அதையே வெறுமனே கிளிப்பிள்ளை போன்று பிரதமர் கூறுகிறார் என்று சமரசிங்க நினைக்கிறாரா?”
எண்ணமும் யதார்த்தமும்
பிரதமர் ஹரிணியும் அமைச்சர் வசந்தவும் பாராளுமன்றத்தில் வெளியிட்ட முரண்பாடான அறிக்கைகள் ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆழமான பிளவுக்கு உள்ளாகியிருக்கிறது என்றும் அமைச்சர் பகிரங்கமாகவே பிரதமருடன் முரண்படுகிறார் என்று ஒரு எண்ணத்தை தோற்றுவித்திருக்கிறது. அமைசாசரவையின் கூட்டுப் பொறுப்புக் கோட்பாடு குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், அரசாங்கம் ஐக்கியமாகச் செயற்படுகின்றது என்பதே யதார்த்தமாகும். சமரசிங்க தனது அறிக்கையை பிரதமர் உட்பட தனது அமைச்சரவை சகாக்களின் அங்கீகாரத்துடனும் ஒப்புதலுடனுமே பாராளுமன்றத்தில் வெளியிடடார்.
அரசாங்க ஐக்கியம்
அரசாங்கத்திற்குள்ளும் கட்சி அணிகளுக்குள்ளும் நெருடல்கள் இருக்கின்ற அதேவேளை, சுப்றீம்சற் சம்பவம் உண்மையில் அரசாங்கத்திற்குள் ஒருமைப்பாட்டை ( குறைந்தபட்சம் தற்போதைக்காவது) மேம்படுத்தியிருக்கிறது என்றுதான் கூற வேண்டும். ஹரிணி தொடர்பில் என்னதான் உணர்வுகள் இருந்தாலும், அவரை இந்தக் கட்டத்தில் ஆபத்தான சூழ்நிலைக்குள் தள்ளுவது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு கட்டுப்படியாகாது. உண்மையில் ஜனாதிபதி அநுரவும் பிரதமர் ஹரிணியும் கட்சிக்கும் அரசாங்கத்துக்கும் மிகுந்த பெறுமதியுடையவர்கள். ஜனாதிபதியும் பிரதமரும் பெரும் ” சொத்துக்கள் ” என்று பிமால் இரத்நாயக்கவே ஊடகங்களிடம் கூறினார் என்பது கவனிக்கத்தக்கது
தவிரவும், ஹரிணியைக் கைவிடுவதற்கு ஜே.வி.பி.யின் உயர்மட்டத்தில் இருக்கின்ற சிலர் விரும்புவதாக இருந்தாலும் கூட, அதைச் செய்வதற்கு இதுவல்ல நேரம். அரசாங்கம் உறுதியாக ஐக்கியப்பட்ட ஒழுங்காக செயற்படுகின்றது என்று காண்பிக்க வேண்டிய நேரம் இது. ஆகையால், இந்த இக்கட்டான தருணத்தில் ஜனாதிபதியும் கட்சியும் அரசாங்கமும் ஹரிணிக்கு முழுமையான ஆதரவாக நிற்கிறார்கள். நிலைவரத்தை தவறாகப் புரிந்துகொண்டு எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் கொண்டுவந்தால், அது முழுமையாகத் தோற்கடிக்கப்படும். ஹரிணிக்கு ஏற்பட்ட சங்கடத்தை பாரதூரமான ஒரு பிரச்சினையாகக் காண்பிப்பதற்கு எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன என்றாலும் கூட, உண்மையில் அது ” தேநீர்க் கோப்பைக்குள் புயல் ” போன்றதேயாகும்.
மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினதும் ராஜபக்சாக்களின் தற்போதைய வெற்றி தற்காலிகமானதும் எதிர்மறையான விளைவுகளைக் கொண்டு வரக்கூடியதுமாகும். டி.வி. சானக்க எழுப்பிய கேள்வி முழுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். முதலீட்டுச் சபை அதிகாரிகள் தவறான தகவல்களை பிரதமருமருக்கு ஏன், எவ்வாறு வழங்கினார்கள் என்பதை தெளிவாக அறிந்துகொள்ள வேண்டியது முக்கியமானதாகும். சுயநல அக்கறை கொண்ட தரப்புகளினால் அவர்கள் தூண்டப்பட்டார்களா?”
ஹரிணியின் அறிக்கையை அடுத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முகாமினால் வெளிக்காட்டப்பட்ட உற்சாகமான மனநிலை வசந்தவின் அறிக்கையை அடுத்து காணாமல்போய்விட்டது. ஹரிணியின் இடறல் சிச்சியின் ரொக்கெட் தொடர்பான ஆரம்பக் குற்றச்சாட்டுக்களை மறுதலித்துவிடவோ அல்லது செல்லுபடியற்றதாக்கிவிடவோ இல்லை என்பதே உண்மையாகும். இன்னொரு முக்கியமான விடயத்தையும் கவனிக்க வேண்டும். சுப்றீம்சற் திட்டம் உண்மையிலேயே நேர்மையானதாக இருந்திருந்தால் அல்லது கோடிக்கணக்கில் வருமானத்தை கொண்டு வந்திருந்தால் ராஜபக்சாக்களும் அவர்களுக்கு விசுவாசமான அரசியல்வாதிகளும் ஹரிணி அதைப்பற்றி கூறுவதற்கு முன்னதாக ஏன் ஒரு வார்த்தையேனும் பேசவில்லை. விபரங்களை வெளியிடுவதன் மூலமாக தங்களை விமர்சிப்பவர்களை ராஜபக்சாக்களின் விசுவாசிகள் தலைகுனிய வைத்திருக்க முடியுமல்லவா?
தீவிர விசாரணை
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இப்போது சுப்றீம்சற் விவகாரம் தொடர்பில் முழுமையான தீவிர விசாரணை ஒன்றை முன்னெடு்க்க வேண்டும் . குறிப்பாக , ரோஹதவும் மணிவண்ணனும் வகித்த பாத்திரங்கள் குறித்து அந்த விசாரணையில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். ஆரம்பத்தில் செய்யப்பட்டதாக கூறப்படும் 12 பில்லியன் ரூபா முதலீட்டின் அடிமூலத்தை கண்டறிய வேண்டும். இதுவரையில் ஈட்டப்பட்டதாக கூறப்படும் வருமானத்துக்கு வரி செலுத்தப்பட்டதா இல்லையா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
ஜனாதிபதி அநுரவின் அரசாங்கம் இப்போது இரண்டு தீவிர விசாரணைகளை நடத்த வேண்டியது அவசியமாகிறது. பிரதமரை தவறாக வழிநடத்தியதாக கூறப்படும் முதலீட்டுச் சபையின் அதிகாரிகளை கண்டறிய உடனடியாக விசாரணையை ஆரம்பிக்க வேண்டும். அடுத்ததாக நீண்டகால அடிப்படையில் சுப்றீம்சற் விவகாரத்தையும் சிச்சியின் ரொக்கெட் விவகாரத்தையும் முழுமையாக ஆராய்வதற்கு விசாரணையை முன்னெடுக்க வேண்டும்.
__________________
D.B.S.Jeyaraj can be reached at dbsjeyaraj@yahoo.com
ஆங்கில மூலம்: டி. பி. எஸ். ஜெயராஜ் (Daily Financial Times)
தமிழில்: வீரகத்தி தனபாலசிங்கம்
நன்றி: வீரகேசரி
************************************************************************************************