டி.பி.எஸ். ஜெயராஜ்
1988 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட மாகாணசபைகள் முறை, பல வருடங்களாக வெவ்வேறு மாகாண சபைகளுக்கு மக்களால் தெரிவுசெயயப்பட்ட பல முதலமைச்சர்களை கண்டுவந்திருக்கிறது. ஒவ்வொரு மாகாணத்துக்கும் தனியொரு முதலமைச்சர் என்பதே நியமமாக இருந்த போதிலும், கடந்த காலத்தில் ஒரு குறிப்பிடத்தக்க விதிவிலக்கும் இருந்தது.
தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு 1988 நவம்பரில் தேர்தல் நடத்தப்பட்டது. வடக்கு — கிழக்கு மாகாணசபை என்று அன்று அழைக்கப்பட்ட சபையின் முதலாவது முதலமைச்சராக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைச் சேர்ந்த அண்ணாமலை வரதராஜப் பெருமாள் தெரிவு செய்யப்பட்டார்.
பெருமாள் அல்லது வரதர் என்று பொதுவாக அறியப்பட்ட வரதராஜப் பெருமாள் 1988 டிசம்பர் 10 ஆம் திகதி முதல் 1990 மார்ச் முதலாம் திகதி வரை வடக்கு — கிழக்கு முதலமைச்சராக பதவி வகித்தார். புதிதாக அமைக்கப்பட்ட வடக்கு — கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சராக அன்று பெருமாள் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு துணிச்சலுடன் முன்வந்தது உண்மையில் பாராட்டத்தக்கது. சர்ச்சைக்குரியதாக இருந்த போதிலும், அந்த நேரத்தில் அவர் வெளிக்காட்டிய தலைமைத்துவப் பண்புகள் மெச்சத்தக்கவை. மிகவும் நெருக்கடியான சூழ்நிலைகளின் கீழ் அவர் துணிச்சலுடன் முன்வந்து வடக்கு — கிழக்கு மாகாணத்தின் முன்னோடி முதலமைச்சராக வரவில்லை என்றால், 1987 ஜூலை இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கையின் நேர்மறையான சகல பயன்களும் இலங்கை தமிழர்களுக்கு கிடைக்காமல் போயிருக்கக்கூடும்.
1988 டிசம்பர் தொடக்கம் 1990 மார்ச் வரை பெருமாளின் முதலமைச்சர் பதவிக்காலம் நெருக்கடிகள் நிறைந்ததாகவே இருந்தது. ஒரு புறத்தில், தமிழரின் இலட்சியத்துக்கு ஒரு துரோகியாக அவரைக் கருதிய தமிழீழ விடுதலை புலிகள் இலக்கு வைக்கத் தொடங்கினர். தமிழர்களின் அன்றாடப் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு வடக்கு — கிழக்கு மாகாணசபை எடுத்த சகல முயற்சிகளையும் விடுதலை புலிகள் குழப்பியடித்தனர்.
மறுபுறத்தில், அன்றைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச உட்பட சிங்களக் கடும் போக்காளர்கள் பெருமாளை இந்தியாவின் கைப்பொம்மை என்று வர்ணித்தனர். பெருமாள் மீதும் வடக்கு — கிழக்கு மாகாணசபை மீதும் தென்னிலங்கை அரசியல் நிறுவனமும் உயர்மட்ட அதிகாரிகளும் கடுமையான பகைமையுணர்வைக் கொண்டிருந்தனர். மாகாணசபை முறையின் கீழ் பயனுறுதியுடைய அதிகாரப் பரவலாக்கத்தை சாதிப்பதற்கான சகல முயற்சிகளும் தடுக்கப்பட்டன.
இருதலைக் கொள்ளி எறும்பாக என்ன செய்வதென்று தெரியாமல் பெருமாள் செயற்பட முடியாத நிலை தோன்றியது. மேலும், இந்திய அமைதிகாக்கும் படைக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் தொடர்ந்துகொண்டிருந்த இராணுவ மோதலின் விளைவாக வடக்கு — கிழக்கு மாகாண மக்கள் பெரும் இடர்பாடுகளை அனுபவித்தனர். விடுதலை புலிகளுடன் உடன்பாடொன்றுக்கு வந்த ஜனாதிபதி பிரேமதாச இந்திய அமைதிகாக்கும் படை வெளியேறவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததை அடுத்து நெருக்கடி ஒரு உச்சநிலைக்கு வந்தது. இறுதி முயற்சியாக பெருமாள் விடுதலை புலிகளை எதிர்த்து நிற்பதற்காக தமிழ் தேசிய இராணுவம் என்றும் அறியப்பட்ட சிவில் தொண்டர்கள் படைக்கு ஆட்திரட்டல் செய்தார். அதேவேளை, இந்தியப் படைகள் கட்டங்கட்டமாக வெளியேறத் தொடங்கின. அதனால் பெருமாளின் முயற்சி பயனற்றதாகிப் போனது.
முற்றுகை நிலைக்குள்ளான பெருமாள் இறுதியில் 1990 மார்ச்சில் இந்திய விமானத்தில் திருகோணமலையை விட்டுக் கிளம்பினார். அவ்வாறு வெளியேறுவதற்கு முன்னதாக, அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக குறிப்பிட்ட சில நிமந்தனைகளை கொழும்பு ஒரு வருட காலத்திற்குள் நிறைவேற்றாவிட்டால் தமிழீழத்தை ஒருதலைப்பட்சமாக பிரகடனம் செய்யும் ‘ நோக்கத்தைக் ‘ தெரிவிக்கும் தீர்மானம் ஒன்றை வடக்கு — கிழக்கு மாகாணசபையை நிறைவேற்றச் செய்து பெருமாள் ஒரு ‘ குண்டைப் ‘ போட்டார். அந்த தீர்மானத்தை பிரேமதாச வடக்கு — கிழக்கு சபை ‘ ஒருதலைப்பட்சமாக தமிழீழத்தைப் பிரகடனம் ‘ செய்ததாக வர்ணித்து அந்த சபையை கலைப்பதற்கு ஒரு சாட்டாக பயன்படுத்தினார். இதை விடுதலை புலாகளின் வேண்டுகோளின் பேரிலேயே செய்தார்.
வடக்கு — கிழக்கு இணைப்பு
வடக்கு — கிழக்கு மாகாணசபை செயலிழந்த போதிலும், குறிப்பாக இரு மாகாணங்களும் இணைக்கப்பட்ட பிறகு அந்த சபையின் கீழ் அமைக்கப்பட்ட நிருவாக கட்டமைப்புகள் தொடர்ந்து செயற்பட்டன. பிரரேமதாசவும் அவருக்கு பின்னர் பதவிக்கு வந்த ஜனாதிபதிகளும் வடக்கு — கிழக்கு இணைப்பை வருடாந்தம் தொடர்ந்து நீடித்துவந்தனர். இணைந்த இரு மாகாணங்களும் நடைமுறையில் ஆளுநரினால் ‘ ஆட்சி செய்யப்பட்டன.
வடக்கு — கிழக்கு இணைப்புக்கான காரண நியாயப்பாடு முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும் முன்னாள் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவும் 1987 ஜூலை 29 ஆம் திகதி கொழும்பில் கைசாசாத்திட்ட இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. ” வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இலங்கையின் தமிழ்பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடங்களாக இருந்துவருகின்றன. இந்த பிராந்தியத்தில் தமிழ்பேசும் மக்கள் ஏனைய இனக் குழுக்களுடன் சேர்ந்து இதுவரை வாழ்ந்து வருகிறார்கள் ” என்று உடன்படிக்கையின் 1.4 பந்தி கூறுகிறது.
இலங்கை ஜனாதிபதி ஜெயவர்தனவினால் 1988 செப்டெம்பர் 2 ஆம் திகதியும் 3 ஆம் திகதியும் இரு பிரகடனங்கள் வெளியிடப்பட்டன. 1988 செப்டெம்பர் 9 ஆம் திகதி வர்த்தமானியில் பிரசுரமான அந்த பிரகடனங்கள் இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒரு நிருவாக அலகாக மக்களினால் தெரிவு செய்யப்பட்ட மாகாணசபையினால் நிருவகிக்கப்படுவதற்கு வகை செய்தன. ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போன்று அடுத்தடுத்து பதவிக்கு வந்த ஜனாதிபதிகள் வருடாந்த அடிப்படையில் இந்த ஏற்பாடுகளை நீடித்து வந்தனர்.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு
ஆனால், 1988 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு “செல்லுபடியற்றது” என்று இலங்கை உயர்நதிமன்றம் 2006 அக்டோபர் 16 ஆம் தீர்ப்பளித்தது. ஜனதா விமுக்தி பெரமுனவினால் ( ஜே.வி.பி. ) தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைமீறல் மனுவொன்றை அடுத்தே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
அன்றைய பிரதம நீதியரசர் சரத் என். சில்வா, நீதியரசர்கள் நிஹால் ஜெயசிங்க, என்.கே. உடலாகம, நிமால் காமினி அமரதுங்க மற்றும் ரூபா பெர்னாண்டோ ஆகிய ஐவரைக் கொண்ட அமர்வினால் வழங்கப்பட்ட 23 பக்கங்களைக் கொண்ட அந்த தீர்ப்பு முன்னாள் ஜனாதிபதி ஜெயவர்தனவினால் அவசரகால ஒழுங்கு விதிகளின் கீழேயே இரு மாகாணங்களும் இணைக்கப்பட்டதாக குறிப்பிட்டது.இணைப்பு ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்ட அதிகாரங்களின் வரம்பை மீறியதாக இருப்பதாகவும் அத்தகைய விடயதானத்தை தீர்மானிப்பதற்கு பாராளுமன்றம் மாத்திரமே தகுதி வாய்ந்தது என்றும் உயர்நீதிமன்றம் அபிப்பிராயம் தெரிவித்தது.
தேர்தல்கள்
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் விளைவாக, வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கிழக்கு மாகாணசபைக்கு 2008 ஆம் ஆண்டிலும் 2012 ஆம் ஆண்டிலும் தனியாக தேர்தல்கள் நடத்தப்பட்டன. சிவநேசதுரை சந்திரகாந்தன் 2008 மே தொடக்கம் 2012 செப்டெம்பர் வரை கிழக்கு முதலமைச்சராக பதவி வகித்தார். நஜீப் அப்துல் மஜீத் 2012 செப்டெம்பர் தொடக்கம் 2015 பெப்ரவரி வரையும் செய்னுலாப்தீன் நசீர் அஹமட் 2015 பெப்ரவரி தொடக்கம் 2017 செப்டெம்பர் வரையும் கிழக்கின் முதலமைச்சர் பதவியை வகித்தனர்.
வடமாகாண சபைக்கான தேர்தல் 2013 செப்டெம்பரில் நடத்தப்பட்டது. 2013 அக்டோபரில் முதலமைச்சராக பதவியேற்ற முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் 2018 அக்டோபர் வரை பதவியில் இருந்தார். கிழக்கு மாகாணை சபைக்கு 2017 ஆம் ஆண்டில் இருந்தும் வடமாகாண சபைக்கு 2018 ஆம் ஆண்டில் இருந்தும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. மாகாணசபை முறையின் எதிர்காலம் உண்மையில் பெரிய ஒரு கேள்விக் குறியாக இருக்கிறது.
வடக்கு மாகாண சபையினதும் கிழக்கு மாகாண சபையினதும் இந்த குறுகிய வரலாற்றின் பின்புலத்தில் நோக்கும்போது அண்ணாமலை வரதராஜப் பெருமாள் இணைந்த வடக்கு — கிழக்கு மாகாணத்தின் முதலும் கடைசியுமான ஒரேயொரு முதலமைச்சர் என்ற தனிச்சிறப்புக்கு உரியவராகிறார். எதிர்காலத்தில் வடக்கு — கிழக்கு இணைப்பு இடம்பெறக்கூடியது பெரிதும் சாத்தியமில்லை. அதனால் பெருமாள் வடக்கு — கிழக்கு மாகாணத்தின் முதலும் கடைசியுமான ஒரேயொரு முதலமைச்சர் என்று வரலாற்றில் இடம் பெறுவார்.
அரசியல் போராட்டம்
யாழ்ப்பாணத்தில் கொட்டடியை சொந்த இடமாகக் கொண்ட அண்ணாமலை வரதராஜப் பெருமாள் இலங்கையில் தமிழர்களின் அரசியல் போராட்டத்தினால் தோற்றுவிக்கப்பட்ட இன்னொரு முக்கியமான ஆளுமையாகும். நமசிவாய வித்தியாலயத்தில் மாணவனாக இந்து நாட்கள் தொடக்கம் தீவிரமான ஒரு அரசியல் செயற்பாட்டாளரான பெருமாள் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கத்தினால் 20 ஆம் நூற்றாண்டின் எழுபதுகளில் விசாரணை எதுவுமின்றி பல வருடங்களாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த 42 தமிழ் இளைஞர்களில் ஒருவராவார்.
அந்த நாட்களில் வரதன் என்று பெருமாள் தமிழ் இளைஞர் பேரவை என்று அழைக்கப்பட்ட தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் இளைஞர் முன்னணியின் தாபக உறுப்பினர்களில் ஒருவராவார். கூட்டணியின் தரைமைத்துவத்தின் மேலாதிக்க கட்டுப்பாட்டை ஆட்சேபித்து இளைஞர் முன்னணியில் இருந்து ஒரு குழுவினர் பிரிந்து சென்றனர். தமிழீழ விடுதலை அமைப்பு என்று தங்களை அழைத்துக்கொண்ட இந்த குழுவின் வரதனும் ஒருவர். பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் ( Palestine Liberation Organization – PLO ) பெயரை ஒத்ததாக இவர்கள் தங்களின் அமைப்புக்கு தமிழீழ விடுதலை அமைப்பு ( TamilEalam Liberation Organization – TLO ) என்று பெயரை வைத்துக் கொண்டனர். புலோலி வங்கிக் கொள்ளை மூலமாக பிரபலமடைந்த இந்த அமைப்பு சில வருடங்களில் செயலிழந்து போனது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகம்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் படித்து பொருளாதாரத்தில் பி.ஏ. சிறப்பு பட்டதாரியாக வந்த வரதராஜப் பெருமாள் திருநெல்வேலி வளாகத்தில் பொருளாதார விரிவுரையாளராக பணியாற்றினார். அந்த நேரத்தில் தோன்றிக் கொண்டிருந்த பல்வேறு வகைப்பட்ட தீவிரவாத இயக்கங்களுடன் சுமுகமான உறவை அவர் பேணினார். ஆனால், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்எல்.எவ்.) ஒரு அணியாக இயங்கிக் கொண்டிருந்த இடதுசாரிப் போக்குடைய ஈழ மாணவர்கள் பொது ஒன்றியத்தின் ( General Union of Ealam Students — GUES ) அனுதாபியாகவே அவர் இருந்தார் . கடந்த நூற்றாண்டின் எண்பதுகளின் முற்பகுதியில் மட்டக்களப்பின் சத்துருக்கொண்டானில் கூட்டம் ஒன்றில் உரையாற்றியமைக்காக கைது செய்யப்பட்ட வரதன் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.
1983 கறுப்பு ஜூலையில் வெலிக்கடைச் சிறைக்குள் இரு தடவைகள் இடம்பெற்ற தமிழ் அரசியல் கைதிகள் படுகொலைகளில் உயிர் தப்பியவர்களில் பெருமாளும் ஒருவர். மட்டக்களப்பு சிறைக்கு மாற்றப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளில் பெருாபாலானவர்கள் 1983 செப்டெம்பரில் சிறையில் இருந்து தப்பிச் சென்றனர். அங்கிருந்து இந்தியாவுக்கு தப்பிச் சென்ற பெருமாள் சென்னையில் ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்கத்தின் அரசியல் நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொணடார். ஒரு கட்டத்தில் அந்த இயக்கத்தின் பேச்சாளராகவும் இருந்த அவர் 1985 ஆம் ஆண்டில் பூட்டான் தலைநகர் திம்புவில் கொழும்பு அரசாங்கத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் தமிழ் குழுக்களில் ஈ.பி.ஆர்.எல்.எவ். வின் சார்பில் கலந்து கொண்டவர்களில் பெருமாளும் ஒருவர்.
இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கை
1987 ஜூலை 29 இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கையை ஏற்றுக்கொண்ட ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆயுதங்களுக்கு பிரியாவிடை கொடுத்துவிட்டு ஜனநாயக நீரோட்டத்தில் பிரவேசம் செய்தது. 1988 ஆம் ஆண்டில் மாகாணசபைகள் அமைக்கப்பட்டபோது இணைந்த வடக்கு — கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு பிரதான தமிழ் அரசியல் கட்சியான தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி மறுத்துவிட்டது. வேறு சில போராளிக் குழுக்களும் போட்டியிடுவதற்கு முன்வராத நிலையில், வடக்கு — கிழக்கு மாகாணசபை தோல்வியடையப்போகும் ஒரு திட்டம் போன்று தோன்றியது
வடக்கு — கிழக்கு தேர்தல்
ஆனால், ஆபத்துக்கள் இருந்த போதிலும், ஈ.பி.ஆர்.எல்.எவ்.வும் புதிதாக அமைக்கப்பட்ட ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியும் ( ஈ.என்.டி.எல்.எவ்.) வடக்கு — கிழக்கு தேர்தலில் போட்டியிட முன்வந்தன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தில் போட்டியிட்டது. ஐக்கிய தேசிய கட்சி அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் போட்டியிட்டது.
வடக்கு — கிழக்கு மாகாண சபைக்கான முதலாவதும் கடைசியுமான ஒரேயொரு தேர்தல் குறைபாடுகள் நிறைந்த சூழ்நிலைகளில் நடத்தப்பட்டது. 71 ஆசனங்களில் ஈ.பி.ஆர்.எல்.எவ். 41 ஆசனங்களை கைப்பற்றியது. முஸ்லிம் காங்கிரஸுக்கு 17 ஆசனங்களும் ஈ.என்.டி.எல்.எவ்.வுக்கு 12 ஆசனங்களும் கிடைத்த அதேவேளை, ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரேயொரு ஆசனம் மாத்திரமே கிடைத்தது. இணைந்த வடக்கு — கிழக்கு மாகாண சபையின் முதலாவது முதலமைச்சராக அண்ணாமலை வரதராஜப் பெருமாள் பதவியேற்றார். இரு தமிழர்கள், ஒரு முஸ்லிம் மற்றும் ஒரு சிங்களவரை அமைச்சர்களாகக் கொண்ட நிருவாகம் ஒன்றை அவர் அமைத்தார். ஆட்சிமுறையின் பீடமாக திருகோணமலை அமைந்தது.
புனிதமற்ற கூட்டு
நிலைவரங்கள் சுமுகமானவையாக இருக்கவில்லை ஏற்கெனவே குறிப்பிடப்பட்டதை போன்று ஒரு புறத்தில் பிரேமதாச அரசாங்கத்திடமிருந்தும் மறுபுறத்தில் விடுதலை புலிகளிடமிருந்தும் பெருமாள் நெருக்குதல்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருநதது. இறுதியாக, இலங்கையில் இருந்து இந்திய அமைதிகாக்கும் படையை வெளியேற்றுவதற்காக விடுதலை புலிகள் கொழும்பு அரசாங்கத்துடன் புனிதமற்ற கூட்டு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டனர். இந்தியப் படைகள் வெளியேறிய நிலையில், ஈ.பி.ஆர்.எல்.எவ்.வும் ஈ.என்.டி.எல்.எவ்.வும் மிகுந்த ஆபத்துக்களை எதிர்நோக்க வேண்டிய நிலைக்கு உள்ளாகின. அரசாங்கப் படைகளின் உதவியடனும் ஒத்தாசையுடனும் விடுதலை புலிகள் ஈ.பி.ஆர்.எல் எவ். உறுப்பினர்களை படுகொலை செய்யத் தொடங்கினர்.
இத்தகைய சூழ்நிலைகளின் கீழ்தான் முதலமைச்சர் பெருமாள் சர்ச்சைக்குரிய தீர்மானத்தை வடக்கு — கிழக்கு — கிழக்கு மாகாண சபையைக் கொண்டு நிறைவேற்றினார். விடுதலை புலிகளினால் கொல்லப்படுவதில் இருந்து தப்புவதற்காக பெருமளவு ஈ.பி.ஆர்.எல்.எவ். உறுப்பினர்கள் இந்தியாவுக்குச் சென்றனர்.
விடுதலை புலிகளின் இலக்கு
அந்த நேரத்தில் விடுதலை புலிகளின் முதல் இலக்காக வரதராஜப் பெருமாள் இருந்தார். பெருமாளும் அவரது மனைவி மற்றும் மூன்று புதல்விகளும் இந்தியாவினால் மொரீசியஸ் நாட்டுக்கு கூட்டிச்செல்லப்பட்டனர். அதற்கு பிறகு பெருமாளும் குடும்பமும் இந்தியாவின் லக்சதீவுகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதை தொடர்ந்து அவர்கள் இந்தியாவில் மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான், புதுடில்லி மற்றும் தமிழ்நாடு என்று பல மாநிலங்களில் மாறிமாறி வசித்தனர்.
இந்த காலகட்டத்தில் பெருமாளை ஒழித்துக்கட்டுவதற்கான பணி ஒப்படைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர்கள் பலர் இந்தியாவில் வெவ்வேறு நேரங்களில் கைதுசெய்யப்பட்டனர். 1990 ஜூன் முற்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எவ்.வின் செயலாளர் நாயகம் பத்மநாபாவும் இயக்கத்தின் 12 உறுப்பினர்களும் சென்னையில் விடுதலை புலிகளினால் படுகொலை செய்யப்பட்டனர். 2009 மே மாதம் விடுதலை புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட பிறகு பெருமாளுக்கும் அவரது குடும்பத்துக்கும் ஆபத்து படிப்படியாக குறையத் தொடங்கி இறுதியில் இல்லாமலே போனது.
இந்தியாவில் ” அஞ்ஞாதவாசம் ” செய்த காலப்பகுதியில் பெருமாள் இந்திய பல்கலைக்கழகங்களில் இருந்து பொருளாதாரத்தில் முதுமாணிப் பட்டத்தையும் சட்டத்துறையில் எல்.எல்.பி. பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.
ஈ.பி.ஆர்.எல்.எவ். பிளவு
அதேவேளை, பெருமாளின் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எவ். இரண்டாகப் பிளவுபட்டது. ஒரு பிரிவுக்கு சுரேஷ் பிரேமச்சந்திரனும் மறு பிரிவுக்கு பெயரளவில் பெருமாளும் தலைமை தாங்கினர். ஆனால், நடைமுறையில் றொபேர்ட் என்ற சுபத்திரனும் சுகு என்ற சிறீதரனும் ” நாபா ” பிரிவுக்கு தலைமை தாங்கினர். அண்மைக் காலங்களில் அந்த கட்சி தமிழ் சமூக ஜனந யக கட்சி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதில் பெருமாள் எந்த பதவியையும் வகிக்கவில்லை, வெறுமனே ஒரு அரசியல் ஆலோசகராக செயற்படுகிறார்.
இலங்கைப் பிரஜை
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் நகரில் தற்போது பெருமாள் வசித்துவருகிறார். அண்மைய நாட்களாக தமிழ் ஊடகங்களில் பெருமாள் பற்றிய செய்திகள் பெருமளவில் வரத்தொடக்கியிருக்கின்றன. அவர் கடந்த காலத்தில் இலங்கைக்கு அடிக்கடி விஜயங்களைச் செய்து நீண்டநாட்கள் தங்கியும் இருந்திருக்கிறார். இலங்கையில் அவர் நீண்டகாலமாக இல்லாவிட்டாலும் கூட , உண்மையில் அவர் இலங்கைப் பிரஜையே. இவ்வருடம் ஜூலை மாதம் இறுதியாக இலங்கை வந்த பெருமாள் பதினொரு நாட்கள் மாத்திரமே தங்கியிருந்தார்.
பெருமாளின் நோக்கம்
என்றாலும், மிகவும் நல்ல ஒரு காரணத்துக்காக தமிழ் ஊடகங்களில் பெருமாள் முக்கியத்துவம் பெற்றதை காணக்கூடியதாக இருந்தது. இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாகாண சபைகளை பாதுகாத்து புத்துயிர் கொடுக்க வேண்டிய தேவை குறித்து தமிழ் அரசியல் கட்சிகள், அறிவுஜீவிகள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் மத்தியில் கருத்தொருமிப்பு ஒன்றைக் கட்டியெழுப்பும் பணியில் வரதராஜப் பெருமாள் ஈடுபட்டிருக்கிறார்.
பல்வேறு அரசியல் தலைவர்கள், கல்விமான்கள் மற்றும் கருத்துருவாக்கிகளுடன் நேரடியாகவும் தொலைபேசி மூலம்கவும் அவர் பேசினார்.இந்த சந்திப்புகளுக்கு தமிழ் ஊடகங்கள் பெரும் முக்கியத்துவம் கொடுத்தன. பெருமாளின் முயற்சிகள் குறத்து பல அரசியல் பத்தி எழுத்தாளர்கள் கருத்துக்களை எழுதியிருக்கிறார்கள்.
இந்த பத்தி எழுத்தாளரும் கூட பெருமாள் இந்தியாவுக்கு திரும்பிய பிறகு அவருடன் தொடர்புகொண்டு பேசானார். மூன்றரை மணித்தியாலங்களாக நீடித்த அந்த சம்பாஷணையில் நாம் பலதும் பத்தும் பேசினோம். நான் ‘ வரதர் ‘ என்று தான் அவரை அழைப்பது வழக்கம். இலங்கையில் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடும் எந்த நோக்கமும் தனக்கு கிடையாது என்பதை எமது சம்பாஷணையின் ஆரம்பத்திலேயே அவர் தெளிவாகக் கூறிவிட்டார். இலங்கையில் மாகாணசபை முறையை பாதுகாத்துப் பேணுவதற்கு மக்கள் இயக்கம் ஒன்றை கட்டியெழுப்ப உதவுவதே தனது ஒரே குறிக்கோள் என்று அவர் திட்டவட்டமாக கூறினார். ” அரசியலமைப்பு மற்றும் சட்ட ஏற்பாடுகளை முழுமையாகவும் உகந்த முறையிலும் ” நடைமுறைப்படுத்துவதன் மூலமாக மாகாண சபைகளை பலப்படுத்துவது மாத்திரமே தற்போதைய அரசியல் சூழ்நிலையில் அதிகாரப் பகிர்வை நோக்கிய நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கையாக இருக்க முடியும் என்று பெருமாள் உறுதியாக நம்புகிறார்.
சுரேஷ் பிரேமச்சந்திரன்
தனது முன்னாள் சகாவும் ஈ.பி.ஆர்.எல்.எவ்.வின் செயலாளர் நாயகமுமான சுரேஷ் என்ற கந்தையா பிரேமச்சந்திரனை சந்தித்துப் பேசியதாக பெருமாள் என்னிடம் கூறினார். அந்த சந்திப்புக்கு பிறகு சுரேஷ் வெளியிட்ட ஊடக அறிக்கையொன்றில், ” தற்போதைய அரசாங்கம் உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதில் மாத்திரமே கவனத்தைக் குவித்திருக்கிறது. சர்ச்சைகளை தவிர்த்துக் கொள்வதில் அது கவனமாக்இருக்கிறது. அதிகாரப்பகிர்வில் அதற்கு அக்கறையில்லை. தமிழ்க்கட்சிகள் வலுவான முறையில் நெருக்குதலைக் கொடுக்காவிட்டால் மாகாணசபைகள் கானல்நீராகவே தொடர்ந்து இருக்கும். பதின்மூன்றாவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டியது முக்கியமானதாகும். அப்போதுதான் வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் தங்களது விவகாரங்களில் குறைந்த பட்சமேனும் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கவும் அரசினால் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க்கவும் கூடியதாக இருக்கும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஆட்சிமுறையில் தமிழர்கள் அர்த்தமுடைய வகையில் ஈடுபடுவதற்கு தற்போது இருக்கின்ற ஒரே சாதனம் 13 வது திருத்தத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களே என்பதை பிரேமச்சந்திரன் ஏற்றுக்கொண்டிருப்பதை ஊடக செய்திகள் மூலம் அறியக்கூடியதாக இருக்கறது. ” இறுதி அரசியல் தீர்வு ஒன்று காணப்படுவரை, தற்போது கையில் இருப்பதை நாம் நிச்சயம் பயன்படுத்த வேண்டும் ” என்று அவர் கூறியதாக செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி.) பொதுச்செயலாளர் டக்ளஸ் தேவானந்தா, சமத்துவக் கட்சியின் தலைவர் முருகேசு சந்திரகுமார் ஆகியோரைச் சந்தித்துப் பேசியதாகவும் பெருமாள் கூறினார். தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட் ) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ( தலைலர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருடன் தொலைபேசியில் பேசாயதாகவும் பெருமாள் சொன்னார்.சில கல்விமான்கள், கருத்துருவாக்கிகள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களை சந்தித்ததாக கூறிய அவர் சந்திக்க விரும்பியவர்களில் சுமந்திரனை மாத்திரமே தன்னால் சந்திக்க முடியாமல் போய்விட்டதாக தெரிவித்தார். பெருமாள் இலங்கையில் இருந்த நேரத்தில் தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் ஐரோப்பா சென்றிருந்தார்.
செப்டெம்பரில் மீண்டும் வருகை
ஜூலையில் இலங்கைக்கு தான் செய்த விஜயம் மிகவும் குறுகியதாக இருந்ததாகவும் செப்டெம்பரில் திரும்பவும் வந்து நீண்டநாட்களுக்கு இலங்கையில் தங்கியிருக்கப் போவதாகவும் பெருமாள் கூறினார். மேலும் பல தமிழ்த் தலைவர்களைச் சந்தித்து பயனுறுதியுடைய பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு அவர் திட்டமிட்டிருக்கிறார். முன்னணி கல்விமானகள், துறைசார் நிபுணர்கள், கருத்துருவாக்கிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை சந்திக்கவும் அவர் எதிர்பார்த்திருக்கிறார். மாகாணசபைகள் தொடர்பிலான அரசியலமைப்பு மற்றும் சட்ட ஏற்பாடுகளை முழுமையாகவும் உகந்த முறையிலும் நடைமுறைப்படுத்துவதை ஆதரிப்பதற்கு மக்கள் இயக்கம் ஒன்றை கட்டியெழுப்புவதே பெருமாளின் நோக்கமாகும்.
மக்கள் இயக்கம்
அத்தகைய ஒரு மக்கள் இயக்கத்தின் மைய சக்தி வடக்கு, கிழக்கு தமிழர்களாக இருந்தாலும் கூட, சாத்தியமான அளவுக்கு பரவலாக்குவதற்கு பெருமாள் உத்தேசித்திருக்கிறார். பெருமளவு அதிகாரப் பரவலாக்கல் வடக்கு, கிழக்கில் வாழும் முஸ்லிம்களுக்கும் சமமான அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் கூறுகிறார். மேலும், மலையக தமிழ் மக்களுக்கும் சிங்களவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஏழு மாகாணங்களிலும் பல்வேறு பாகங்களில் செறிந்து வாழ்கின்ற தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் அதிகாரப்பரவலாக்கம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பயனுடயை வகையில் பிரயோகிக்கப்படக் கூடியதாகும்.
அது சிங்கள மக்களுக்கும் கூட முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்று பெருமாள் கூறுகிறார். பிராந்தியங்களுக்கு அதிகாரங்களை பகிரவேண்டும் என்ற கோரிக்கை பிரதானமாக இலங்கை தமிழர்களினால் முன்வைக்கப்பட்ட காரணத்தினால், இந்த விவகாரத்தை பல சிங்களவர்கள் தவறுதலாக இனப் பிரச்சினையுடன் சம்பந்தப்பட்டதாக நோக்கினார்கள். ஆனால் , அது சரியானது அல்ல. பொருளாதார ரீதியில் நோக்கும்போது மேல் மாகாணத்துக்கும் ஏனைய மாகாணங்களுக்கும் இடையில் பெருமளவில் ஏற்றத்தாழ்வு காணப்படுகிறது. அத்துடன் பிராந்தியங்கள் மத்தியிலான சமத்துவமற்ற அபிவிருத்தி தொடர்பான பிரச்சினையையும் பெருமளவிலான அதிகாரப் பரவலாக்கலின் மூலமாக தீர்க்க முடியும்.
அதனால், அடுத்த தடவை செப்டெம்பரில் இலங்கை வந்து நீண்ட நாட்கள் தங்கியிருக்கும் போது முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலும் மலையக தமிழ்ச் சமூகத்தின் மத்தியிலும் இருக்கின்ற அரசியல் தலைவர்கள், அறிவுஜீவிகள் மற்றும் கருத்துருவாக்கிகளை சந்தித்துப் பேசவிருப்பதாக பெருமாள் கூறுகிறார். சிங்கள மக்கள் மத்தியில் உள்ள முற்போக்கு சக்திகளுக்கு மேலதிகமாக அரசாங்கத்தையும் எதிர்க் கட்சிகளையும் சேர்ந்த சிங்கள அரசியல் தலைவர்களையும் பெருமாள் சந்திக்க திட்டமிட்டிருக்கிறார்.
மாகாண சபைகள் முறைக்கு புத்துயிரளித்து செயற்பட வைப்பது இலங்கைக்கு மிகவும் அவசியமானதாகும் என்று வலியுறுத்திக் கூறிய பெருமாள் பொருளாதார மேம்பாடே உடனடியாக தேவைப்படுவதாகும் என்று குறிப்பிடடார். நல்லிணக்கம், இனங்களுக்கு இடையிலான சுமுக உறவு மற்றும் சமத்துவம் இல்லாமல் பொருளாதார மீளெழுச்சி சாத்தியமேயில்லை. அதனால், உச்சபட்ச அதிகாரப் பரவலாக்கம் அவசியமாகிறது. தற்போது அதை மாகாண சபைகள் முறை என்ற சாதனம் ஊடாகவே சாதிக்க முடியும்.
மேலும், மாகாணங்களுக்கு அதிகாரங்களை பரவலாக்குவதன் மூலமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியிடம் குவிந்திருக்கின்ற மட்டுமீறிய அதிகாரங்களையும் ஓரவுக்கு கட்டுப்படுத்த முடியும்.
தனது விரிவான திட்டங்கள் குறித்து பேசிய பெருமாள் அரசியலில் மீண்டும் பிரவேசிக்கும் எண்ணம் தனக்கு கிடையாது என்று திட்டவட்டமாக கூறினார். மாகாணசபைகள் முறையை பாதுகாப்பதில் சகல அரசியல் கட்சிகளினதும் தலைவர்களினதும் ஆதரவைத் திரட்டுவதற்கு அவர் விரும்புவதே அதற்கு காரணமாகும். ஏகமனதான ஆதரவைப் பெறுவதென்பது சாத்தியமற்ற கனவு என்பதை தெரிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு பெருமாள் யதார்த்தபூர்வான சிந்தனையைக் கொண்டிருக்கிறார். ஆனால், சாத்தியமானளவுக்கு பரந்த ஆதரவைப் பெறுவதற்கு அவர் விரும்புகிறார். தான் அரசியலில் பிரவேசிப்பதற்காக இதைச் செய்வதாக ஏற்படக்கூடிய எண்ணம் தனது முயற்சிகளுக்கு இடையூறாக அமைந்துவிடக்கூடாது என்பதில் அவர் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கிறார்.
சுவாரஸ்யமான சம்பாஷணை
வடக்கு — கிழக்கு மாகாணசபையின் முதலும் கடைசியுமான முதலமைச்சருடன் மாகாணசபைகள் முறைக்கு புத்துயிரளித்து மேம்படுத்தும் அவரது திட்டங்கள் குறித்து பேசியது மிகவும் சுவாரஸ்யமானதாகவும் பெருமளவு தகவல்களைப் பெறுவதற்கு பயனுடையதாகவும் இருந்தது. மீண்டும் செப்டெம்பரில் இலங்கைக்கு வந்து அவர் முன்னெடுக்கப் போகும் செயற்பாடுகள் எனது சிந்தனைக்கு தீனியைப் போட்டிருக்கின்றன. ஆனால், தற்போதைய தருணத்தில் அவை குறித்து எழுதுவதை நான் தவிர்க்கிறேன். செப்டெம்பரில் அவர் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கும்போது அவை குறித்து நான் எழுதுவேன். வரதராஜப் பெருமாளின் மிகுந்த பெறுமதியான பணி வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்!
D.B.S.Jeyaraj can be reached at dbsjeyaraj@yahoo.com
ஆங்கில மூலம்: டி. பி. எஸ். ஜெயராஜ் (Daily Financial Times)
தமிழில்: வீரகத்தி தனபாலசிங்கம்
நன்றி: வீரகேசரி
************************************************************************************************

