டி.பி.எஸ். ஜெயராஜ்
மாவை சேனாதிராஜா என்று அறியப்பட்ட யாழ்ப்பாண மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான சோமசுந்தரம் சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் 2025 ஜனவரி 29 ஆம் திகதி காலமானார். மூத்த தமிழ் அரசியல் தலைவரின் இறுதிச்சடங்குகள் 2025 பெப்ரவரி 2 ஆம் திகதி மாவிட்டபுரத்தில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்றன. அதே தினம் மாவிட்டபுரம் தச்சன்காடு இந்து மயானத்தில் அவரது பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
பல்வேறு அரசியல் கட்சிகளையும் குழுக்களையும் சேர்ந்த பெருமளவு அரசியல்வாதிகளும் பெருந்திரளான மறைந்த தலைவருக்கு தங்களது இறுதி மரியாதைகளைச் செலுத்தி இறுதிச் சடங்குகளில் கலந்துகொண்டனர். அனுதாபச் செய்திகளும் குவிந்தன. இறுதிச் சடங்குகளுக்கு முன்னரான நாட்களில் அமரரின் வீட்டுக்கு வந்து இறுதி மரியாதை செலுத்தியவர்களில் ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச ஆகியோரும் அடங்குவர்.
பெப்ரவரி 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறுதிச்சடங்குகளில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பிரதநிதிகளும் அஞ்சலி உரைகளை நிகழ்த்தினர். அவர்களில் தமிழ் முற்போக்கு கூட்டமைப்பின் தலைலர் மனோ கணேசன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட் ) தலைவர் தருமலிங்கம் சித்தார்த்தன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சார்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன ஆகியோரும் அவர்களில் அடங்குவர்.
1942 அக்டோபர் 27 ஆம் திகதி பிறந்த மாவை சேனாதிராஜா பதினெட்டு வயது மாணவனாக 1960 ஆம் ஆண்டில் தமிழரசு கட்சியின் உறுப்பினராக சேர்ந்தார். தமிழரசு கட்சியின் இளைஞர் அணியின் தலைவராக, பொதுச் செயலாளராக அவர் வெவ்வேறு காலகட்டங்களில் அவர் பணியாற்றினார். ஒரு இளம் அரசியல் செயற்பாட்டளராக சேனாதிராஜா அமைதிவழிப் போராட்டங்கள் பலவற்றில் பங்கேற்றதுடன் எட்டு சிறைகளில் சுமார் ஏழு வருடகாலம் சிறைவாசம் அனுபவித்தார். அவர் 25 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
தமிழரசு கட்சியின் தாபகத் தலைவர் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகத்தின் காலந்தொட்டு கட்சியில் தீவிரமாக இயங்கிய முக்கியஸ்தர்களில் கடைசி ஆள் மாவை சேனாதிராஜா. சுமார் 65 வருட காலமாக தமிழரசு கட்சிக்காக தன்னை அர்ப்பணித்த ஒரு முக்கியமான தலைவர் அவர். ஆனால், யாழ்நகரில் மார்ட்டின் வீதியில் அமைந்திருக்கும் தமிழரசு கட்சியின் தலைமையகத்தில் மக்கள் அஞ்சலிக்காக அவரின் பூதவுடல் வைக்கப்படவில்லை. மேலும் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம், பதில் செயலாளர் வைத்தியக்கலாநிதி பி.சத்தியலிங்கம், கட்சியின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன், நிருவாகச் செயலாளர் சேவியர் குலநாயகம் உட்பட கட்சியின் பெரும் எண்ணிக்கையான முன்னரங்கத் தலைவர்கள் ஞாயிறன்று இறுதிச்சடங்குகளில் பங்கேற்கவில்லை.
கறுப்புச்சட்டை கும்பல் தொந்தரவு
கறுப்புச்சட்டை அணிந்த கும்பல் தொந்தரவு மற்றும் அச்சுறுத்தல் நடவடிக்கைகளே தமிழரசு கட்சியின் பல தவைர்களும் முக்கியஸ்தர்களும் இறுதிச்சடங்குகளில் கலந்துகொள்ளாமல் இருந்ததற்கான முக்கிய காரணமாகும். மரணவீட்டுக்கு வந்தவர்கள் சிலரையும் மாவை சேனாதிராஜாவுக்கு இறுதி மரியாதை செலுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறிய சிலரையும் மதுபோதையில் இருந்த கறுப்புச்சட்டைக் கும்பல் ஒன்று இடைமறித்து அச்சுறுத்திக் கொண்டிருந்தது. சில கைகலப்புகளும் இடம்பெற்றன. ஞாயிற்றுக்கிழமை இறுதிச் சடங்குகளுக்கு முன்னதாக வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையுமே இவ்வாறாக அடாத்தான செயல்கள் இடம்பெற்றன.
இந்த நிலைவரம் காரணமாகவே தமிழரசு கட்சியின் பல தலைவர்களும் மூத்த முக்கியஸ்தர்களும் இறுதிச்சடங்கில் பங்கேற்பதை தவிர்த்தனர்.
அவர்கள் பெருமளவில் ஆதரவாளர்களை திரட்டிக்கொண்டு வந்து இந்த கறுப்புச்சட்டை கும்பலை சுலபமாக எதிர்கொண்டிருக்க முடியும். அவ்வாறு செய்தால் வன்முறை மோதல்களில் அது முடிந்திருக்கும்.
மறைந்த தலைவரின் இறுதிச்சடங்குகளின் புனிதத்தை களங்கப்படுத்துவதாக அமைந்துவிடும் என்பதால் தமிழரசு கட்சியின் மூத்தவர்கள் அவ்வாறு செய்யவில்லை. மாவை சோதிராஜாவின் நினைவுக்கும் அது பெரிய நிந்தனையாகப் போயிருக்கும்.
அது தவிரவும், தூய்மையான ஒரு இறுதிச்சடங்கை குழப்பியடிக்கக்கூடிய எந்தவொரு செயலிலும் பண்பான ஒரு மனிதன் ஈடுபடமாட்டான்.
அதன் விளைவாக பல தசாப்தங்களாக மாவையுடன் சேர்ந்து செயற்பட்டவர்களும் அவருக்கு பல வழாகளில் உதவியவர்களும் இறுதிச்சடங்குகளில் பங்கேற்றவில்லை. மாதிரி எடுத்துக்காட்டாக கூறுவதென்றால், தமிழரசு கட்சியின் நிருவாகச் செயலாளர் சேவியர் குலநாயகத்துக்கும் சேனாதிராஜாவுக்கும் இடையிலான உறவுமுறை தனித்துவமானது. அவர் இறுதிச்சடங்குகளில் பங்கேற்றவில்லை
எனவே தமிழரசு கட்சியின் மூத்தவர்களும் முக்கிய தலைவர்களும் இறுதிச்சடங்குகளால் இருந்து விலகியிருந்தார்கள். சிவஞானம், சத்தியலிங்கம், சுமந்திரன் போன்ற சிலர் ஏற்கனவே சேனாதிராஜாவின் வீட்டுக்குச் சென்று குடும்பத்தவர்களுக்கு ஆறுதல் கூறினர். அவர்களை மாவையின் மனைவி பவானி, மகள் தாரகா மற்றும் மகன்கள் கலையமுதன், ஆராவமுதன் ஆகியோர் மிகுந்த மதிப்புடன் வரவேற்றனர்.
இன்னொரு வெறுக்கத்தக்க சம்பவமும் இறுதிச் சடங்குகளின்போது இடம்பெற்றது. பதினெட்டு பேரின் படங்கள் பொறிக்கப்பட்ட பல பதாதைகள் மரணவீட்டுக்கு அண்மையான பகுதிகளில் தொங்க விடப்பட்டிருந்தன.அந்த பதினெட்டு பேருமே சேனாதிராஜாவின் மரணத்துக்கு பொறுப்பு என்ற வாசகம் பதாதைகளில் எழுதப்பட்டிருந்தது. அவர்கள் இறுதிச் சடங்குகளில் பங்கேற்கக்கூடாது என்று எச்சரிக்கையும் செய்யப்பட்டிருந்தது.
இறுதிச்சடங்குகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சுகிர்தன் அந்த பதாதைகளில் பலவற்றை அகற்றி விட்டார். என்றாலும், தெல்லிப்பழை சந்தியிலும் தச்சன்காடு மயானத்திலும் இரு்பதாதைகள் தொடர்ந்து தொங்கிய வண்ணம் காணப்பட்டன.
மத்திய செயற்குழு
யார் இந்த பதினெட்டுப் பேரும்? மாவை சேனாதிராஜாவின் மரணத்துக்கு அவர்களே பொறுப்பு என்று ஏன் குற்றச்சாட்டப்படுகிறது? தமிழரசு கட்சியின் முன்னணி நிருவாகிகளின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ப்பட்ட திட்டமிட்ட சதிவேலையின் ஒரு அங்கமே ஈந்த பதாதைகள் தொங்கவிடப்பட்ட செயலாகும். நேர்மையற்ற முறையில் குற்றஞ்சாட்டப்படும் பதினெட்டுப் பேரும் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழுவின் உறுப்பினர்கள். இதுதான் நடந்தது.
மாவை சேனாதிராஜா தனது வாழ்வின் இறுதி நாட்களில் மிகவும் குழப்பத்துக்கு உள்ளான ஒரு மனிதராக காணப்பட்டார். தமிழரசு கட்சிககுள் வெளிச்சக்திகளின் உதவியையுடனும் ஒத்தாசையுடனும் செயற்படும் ஒரு குழுவினர் கட்சியின் ஒரு பிரிவினரை மலினப்படுத்தும் ஒரு முயற்சியில் சேனாதிராஜாவை தங்களுக்கு அனுகூலமாக பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு சில நாட்கள் முன்னதாக தமிழரசு கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிப்பைச் செய்வதற்கு அவர் இணங்கவைக்கப்பட்டார். அதற்கு பிறகு சிலஞானம் சிறீதரனைத் தவிர, பெரும்பாலான தமிழரசு கட்சியின் வேட்பாளர்களிடமிருந்து சேனாதிராஜா தூரவிலகியே இருந்தார். தமிழரசு கட்சியில் இருந்து பிரிந்து மாம்பழம் சின்னத்தில் சுயேச்சைக் குழுவாக போட்டியிட்ட ஒரு பிரிவினருக்கு ஆதரவாக அவர் இருந்தார் என்று கருதப்பட்டது.
சேனாதிராஜாவின் நடத்தை தமிழரசு கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அவரின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்டு அடுத்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். அதனால் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்று கேட்டு கட்சியின் பதில் செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கம் சேனாதிராஜாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதற்கு பதில் இல்லை.
அதையடுத்து மத்திய செயற்குழுவின் பதினெட்டு உறுப்பினர்கள் சேனாதிராஜாவின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்காள்ள வேண்டும் என்று வலியுறுத்தி சத்தியலிங்கத்துக்கு கடிதமொன்றை அனுப்பினர். வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன் தலைமையிலான ஒரு தூதுக்குழுவினர் சோதிராஜாவை சந்தித்து கௌரவமான முறையில் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்று விடுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
அதற்கு பிறகு சேனாதிராஜாவின் மகன் கலையமுதன் தந்தையாரின சார்பில் கட்சியுடன் தொடர்பு கொண்டு பேசினார். தந்தையார் கண்ணியமானதும் கௌரவமானதுமான முறையில் வெளியேறுவதற்கு ஒரு ஏற்பாடு வேண்டும் என்று அவர் விரும்பினார். அதற்கு இணங்கப்பட்டது. சேனாதிராஜா தானாகவே தமிழரசு கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். மூத்த துணைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தமிழரசு கட்சியின் பதில் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். சேனாதிராஜா 12 உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் குழுவின் தலைவராக்கப்பட்டார். “பெருந்தலைவர்” என்ற அந்தஸ்தை அவருக்கு கொடுப்பதற்கும் ஏற்பாடு ஒன்று இருந்தது. தமிழரசு கட்சியின் யாப்பில் அவ்வாறு செயவதற்கான ஏற்பாடு எதுவும் கிடையாது என்ற அடிப்படையில் சிவஞானம் சிறீதரன் அந்த யோசனையை நிராகரிந்தார்.
துரதிர்ஷ்டவசமாக, ஜனவரி 26 ஆம் திகதி மாவிட்டபுரத்தில் உள்ள தனது வீட்டில் குளியலறையில் வீழ்ந்ததையடுத்து சேனாதிராஜாவுக்கு தலையில் அடிபட்டு மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டது. முதலில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் பிறகு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சுயநினைவு திரும்பாத நிலையில் சேனாதிராஜா ஜனவரி 29 ஆம் திகதி காலமானார்.
முறைகேடான பிரசாரம்
மாவை வீட்டில் வீழ்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் முறைகேடான பிரசாரம் ஒன்று (Dirty campaign) முன்னெடுக்கப்படுவதற்கு வழிவகுத்தது. மத்திய செயற்குழுவின் பதினெட்டு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதமும் அதன் விளைவுகளும் சேனாதிராஜாவை மோசமாக பாதித்துவிட்டன என்று கூறப்பட்டது. இந்த கடிதம் ஏற்படுத்திய தாக்கமே சேனாதிராஜா குளியலறையில் சறுக்கி வீழ்வதற்கு காரணமாக அமைந்தது என்று உறுதியான எந்த சான்றும் இல்லாமல் கூறப்பட்டது.
அவ்வாறாக மாவையின் மரணத்துக்கு அந்த பதினெட்டு பேருமே காரணம் என்று குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த விசமத்தனமான பிரசாரம் சமூக ஊடகங்கள் மற்றும் யூரியூப் ஊடாக முன்னெடுக்கப்பட்டது.
மரணச்சடங்கு நேரத்திலும் இந்த பிரசாரம் தொடர்ந்தது. மாவை சேனாதிராஜாவின் வீட்டில் இருந்துை150 — 200 மீற்றர்கள் தொவைில் உள்ள ஒரு வீட்டில் இளைஞர்கள் குழு ஒன்று தங்கவைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் கறுப்பு நீளக்காற்சட்டை, கறுப்பு ரீ சேர்ட், சேர்ட் அணிந்திருந்தனர்.
” வெளியாரான ” இந்த கறுப்புச்சட்டை கும்பலுக்கு தமிழரசு கட்சியின் சில அரசியல்வாதிகளின் அனுசரணை இருந்தது. அவர்களில் சிலர் கிளிநொச்சியையும் மட்டக்களப்பையும் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டனர்.
இந்த கறுப்புச்சட்டை கும்பலின் உறுப்பினர்கள் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களை வெருட்டி அச்சுறுத்தினர். சிலர் இறுதிச்சடங்கிற்கு வந்தவேளையிலும் வேறு சிலர் சேனாதிராஜாவுக்கு இறுதி அஞ்சலியைச் செலுத்திவிட்டு வெளியேறிக் கொண்டிருந்த வேளையிலும் இடைமறிக்கப்பட்டனர்.
தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மகன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கறுப்புச்சட்டை கும்பலுக்கு உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டிருந்ததாக சந்தேகிக்கப்பட்டது. அவ்வாறு உத்தரவு வந்ததும் கும்பலைச் சேர்ந்தவர் தங்களது ” இலக்கு ” மீது பாய்வார்கள்.
இறுதிச் சடங்கிற்கு வந்தவர்களிடம் அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக கூறிய கும்பல் அவரகளை அவமதித்தது. சில சந்தர்ப்பங்களில் கைகலப்புகளும் மூண்டன.கறுப்புச்சட்டை கும்பலில் பலர் மதுபோதையில் இருந்ததாக தோன்றியது.
இந்த கும்பலினால் இலக்கு வைக்கப்பட்டவர்களில் பலர் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்களாக இருந்தனர். மாவை சேனாதிராஜாவின் மரணத்துக்கு காரணமாக இருந்ததால் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக அவர்களிடம் கூறப்பட்டது. மரணவீட்டில் நின்ற முக்கியமான பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மத்திய செயற்குழு உறுப்பினர் ஒருவரை ” வரவேற்ற” வேளையில் ” இதோ பதினெட்டில் இ்ன்னொன்று ” என்று கூறினார். ஆனால், மத்திய செயற்குழுவின் உறுப்பினராக இல்லாதவர்கள் சிலரும் இலக்குவைக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றன.
இவ்வாறாக அச்சுறுத்தல் முயற்சிகளுக்கு ஆளானவர்களில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் தமிழரசு கட்சியின் இணைப் பொருளாளருமான கமலேஸ்வரன், திருகோணமலை நகரசபையின் முன்னாள் தலைலர் ” சுப்ரா ” செல்வராஜா, மட்டக்களப்பு மாநகரசபை முன்னாள் மேயர் சரவணபவான், தமிழரசு கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் கிருஷ்ணபிள்ளை சேயோன், மத்திய செயற்குழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோரும் அடங்குவர்.
சுமந்திரனும் சாணக்கியனும்
கறுப்புச்சட்டைக் கும்பலின் பிரதான இலக்குகளாக முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மதியாபரணன் ஆபிரகாம் சுமந்திரனும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சாணக்கியன் இராசமாணிக்கமும் இருந்தனர். ஆனால், சாணக்கியன் தற்போது துருக்கியில் இருக்கிறார் . மாவை காலமானபோது அவர் இலங்கையில் இருக்கவில்லை.
சுமந்திரனைப் பொறுத்தவரை, அவரும் மனைவி சாவித்திரியும் கொழும்பில் இருந்து இரவு காரில் பயணம் செய்து சனிக்கிழமை அதிகாலை வேளையில் யாழ்ப்பாணத்தை அடைந்தனர்.
யாழ்ப்பாணத்தை சென்றடைந்ததும் காலை ஏழு மணிக்கு தம்பதியர் மாவிட்டபுரத்துக்கு சென்றனர். அவர்களை சேனாதிராஜாவின் மனைவி பவானியும் பிள்ளைகளும் அன்புடன் வரவேற்றனர். அங்கு வைத்து சுமந்திரன் மாவை பற்றி யூரியூப் அலைவரிசை ஒன்றுக்கு பேட்டியும் வழங்கினார். இரவுபூராவும் மது அருந்திவிட்டு கறுப்புச்சட்டைக் கும்பல் அந்த நேரத்தில் நித்திரையில் ஆழ்ந்து விட்டதாக நம்பகமாக தெரியவந்தது. சுமந்திரனை அவர்கள் தவறவிட்டுவிட்டார்கள்.
பதினெட்டுப் பேரின் படங்களைக் கொண்ட பதாதைகளை தொங்கவிடும் வேலையை இரு வேறுபட்ட குழுக்கள் செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது. சேனாதிராஜாவின் வீட்டுக்கு நெருக்கமாக உள்ள பகுதிகளில் பதாதைகளை கறுப்புச் சட்டைக் குழு தொங்கவிட்டது.
தெல்லிப்பழை சந்தி, தச்சன்காடு மயானம் போன்ற வேறு பகுதிகளில் பதாதைகளை தொங்கவிடும் வேலையை தமிழரசு கட்சியின் எதிரியாக விளங்கும் தமிழ்க்கட்சி ஒன்றின் செயற்பாட்டாளர்கள் செய்ததாக கூறப்பட்டது. தமிழரசு கட்சியின் பிளவுகளை இந்த சந்தர்ப்பத்தில் அந்த தமிழ்க்கட்சி தனக்கு அனுகூலமாகப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.
சேனாதிராஜா போன்ற விசுவாசமான தமிழரசு கட்சியின் ஒரு தலைவரின் பூதவுடல் மக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்காக கட்சியின் அலுவலகத்தில் வைக்காதமை உண்மையில் வருந்தத்தக்கது. சேனாதிராஜாவின் பூதவுடல் வைத்தியசாலை அதிகாரிகளினால் தமிழரசு கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழு தலைவருமான சிவஞானம் சிறீதரனிடமே கையளிக்கப்பட்டது.
கட்சி உறுப்பினர்கள் முதலில் பூதவுடலை யாழ்நகரில் மார்ட்டின் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு எடுத்துச் செல்ல விரும்பிய போதிலும், அதற்கு பதிலாக சிறீதரன் அதை மாவிட்டபுரத்துக்கு கொண்டுசென்றார். அதையடுத்து கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானமம் கட்சி அலுவலகத்துக்கு பூதவுடலை எடுத்துச் செல்ல அனுமதிககுமாறு சேனாதிராஜாவின் குடும்பத்தவர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், பூதவுடலை தங்களது வீட்டில் இருந்து எடுத்துச் செலாவதற்கு குடு்பத்தவர்கள் அனுமதிக்கவில்லை.
இறுதிச்சடங்குகளுக்கு பொறுப்பாக சிறீதரன்
இறுதிச்சடங்குகளுக்கு பொறுப்பாக நின்று சிறீதரனே செயற்ட்டார். மரணவீட்டிலேயே தங்கியிருந்த அவர் ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க உட்பட அதிமுக்கிய பிரமுகர்களையும் முக்கியஸ்தர்களையும் வரவேற்றதுடன் இரங்கலுரைகள் நிகழ்த்தப்பட்ட நிகழ்வுக்கும் தலைமை தாங்கினார்.
சில பேச்சாளர்கள் ஆட்களை தாக்கிப்பேசி விமர்சனம் செய்து வெளிப்படையாக அரசியல் உரைகளை நிகழ்த்தியமை விரும்பத்தகாத ஒரு அம்சமாக இருந்தது. மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசன், யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர் மாணிக்கவாசகம் இளம்பிறையன் மற்றும் நன்றியுரை நிகழ்த்திய சேனாதிராஜாவின் இளைய சகோதரர் சோமசுந்தரம் தங்கராஜா ஆகியோர் அவ்வாறு அவ்வாறு வெளிப்படையாக அரசியல் பேசியவர்களில் முக்கியமானவர்கள். மற்றவர்களின் மனதைப் புண்படுத்தும் வகையிலான அத்தகைய உரைகளை தடுக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ சிறீதரனுக்கு சிறீதரனால் இயலாமல் போனது குறித்து பெருமளவு விமர்சனங்கள் வந்தன.
மரணச்சடங்கொன்றில் குறைந்தபட்சம் தற்காலிகமாகவேனும் கடந்த காலத்தை மறந்து செயற்படுவது தமிழர் கலாசாரத்தின் ஒரு வழமையான நடைமுறையாகும்.பாரம்பரியமான எதிரிகளும் பகையாளிகளும் இறுதிச்சடங்குகளுக்கு வந்தால் அவர்களையும் கூட மரியாதையுடன் வரவேற்பதுண்டு. உணர்ச்சிபூர்வமான இறுதிச்சடங்குகள் நல்லிணக்கத்துக்கு வாய்ப்புக்களை வழங்கும் நிகழ்வுகளாக அமைவதுண்டு.
தவறவிடப்பட்ட வாய்ப்பு
இத்தகைய பின்புலத்திலே, கட்சிக்குள் இருக்கும் வேறுபாடுகளை தணிப்பதற்கும் ஐக்கியத்தை ஊக்குவிப்பதற்கும் மாவை சேனாதிராஜாவின் இறுதிச்சடங்குகளை பயன்படுத்தியிருக்க முடியும். இறுதிச் சடங்குகளுக்கு பொறுப்பாக செயற்பட்ட சிறீதரனிடம் தொலைநோக்கோ நோக்கோ அல்லது அரசியல் ஞானமோ இல்லாததன் விளைவாக அத்தகைய ஒரு சந்தர்ப்பம் தவறவிடப்பட்டிருக்கிறது என்றே தோன்றுகிறது.
தமிழரசு கட்சியின் முக்கியமான ஒரு பிரிவினர் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பதை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் விளைவாக கட்சிக்குள் நிலவும் பிளவுகள் மேலும் தீவிரமடையும் ஒரு கட்டத்துக்கு செல்லக்கூடிய நிலை தோன்றலாம். கறுப்புச்சட்டை அணிந்த கும்பலின் குதியாட்டங்களினால் மாவை சேனாதிராஜாவின் இறுதிச்சடங்குகள் களங்கப்படுத்தப்பட்டது உண்மையில் கவலைக்குரியதாகும். அச்சுறுத்தும் நடவடிக்கைகள் மூலமாக இறுதிச் சடங்குகளில் தமிழரசு கட்சியின் தலைவர்கள் பங்கேற்பதை தடுத்துவிட்டு பிறகு அவர்கள் மாவை சேனாதிராஜாவுக்கு தங்களது இறுதி மரியாதையை செலுத்த வரவில்லை என்று அவர்களை கண்டனம் செய்து கெடுநோக்குடனான பிரசாரம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.
இறுதில் பாதிப்பு தமிழரசு கட்சிக்கே
சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரையும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளுமாறும் தனது கணவரின் இறுதிச்சடங்குகளில் கலந்துகொள்வதில் இருந்து எவரையும் தடுக்கவேண்டாம் என்றும் சேனாதிராஜாவின் மனைவி பவானி கெஞ்சிக்கேட்டார் என்பது கவனிக்கத்தக்கது. ஆனால், அந்த நல்லறிவுடனான வேண்டுகோள் குறுகிய நோக்குடனான அரசியலில் ஈடுபட்ட அற்பத்தனமான பேர்வழிகளின் காதுகளில் விழவில்லை. அவர்களுக்கு இருந்தது மாவை மீதான மரியாதையோ அன்போ அல்ல, போட்டியாளர்கள் என்று அவர்கள் கருதியவர்களை மலினப்படுத்த வேண்டும் என்று தன்னகம்பாவ உணர்வேயாகும். ஒரு தலைவனின் இறுதிச் சடங்குகளிலாவது நயநாகரிகத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் சிந்தாக்கவில்லை. இதனால் இறுதியில் பாதிப்பு தமிழரசு கட்சிக்கேயாகும்.
D.B.S.Jeyaraj can be reached at dbsjeyaraj@yahoo.com
ஆங்கில மூலம்: டி. பி. எஸ். ஜெயராஜ் (Daily Financial Times)
தமிழில்: வீரகத்தி தனபாலசிங்கம்
நன்றி: வீரகேசரி
************************************************************************************************