மாவை சேனாதிராஜா: பேரினவாத மேலாதிக்கத்துக்கு எதிரான தமிழர் அரசியல் உரிமைப் போராட்டத்தின் ஐந்து தசாப்தங்களுக்கும் அதிகமான சின்னம்

டி.பி.எஸ். ஜெயராஜ்

‘ மாவை’ சேனாதிராஜா என்று பிரபலமாக அறியப்பட்ட முதுபெரும் தமிழ் அரசியல் தலைவர் சோமசுந்தரம் சேனாதிராஜா 2025 ஜனவரி 29 தனது இறுதிமூச்சை விட்டார். எண்பது வயதைக் கடந்த, ஆறு அடி உயரமான அவர் மாவிட்டபுரத்தில் உள்ள தனது வீட்டில் ஜனவரி 26 ஆம் திகதி குளியலறையில் வீழ்ந்து தலை அடிபட்டதை அடுத்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டதாக அங்கு கண்டறியப்பட்டதை அடுத்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்க மாற்றப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சுயநினைவு திரும்பாத நிலையில் மாவை சேனாதிராஜா புதன்கிழமை காலமானார். இறுதிச் சடங்குகள் பெப்ரவரி 2 ஆம் திகதி ஞாயிறன்று மாவிட்டபுரத்தில் இடம்பெற்றன.

இளம் அரசியல் கிளர்ச்சிவாதிகள் பொறுப்புமிக்க அரசியல் தலைவர்களாக வளர்ந்த உதாரணங்கள் வரலாற்றில் நிறைந்து கிடக்கின்றன. குதியாட்டம் போடுகின்ற ஆர்ப்பாட்டங்களிலும் அரசியல் இயக்கங்களிலும் ஈடுபட்ட இளைஞர்கள் வாழ்வின் பிற்பகுதியில் சட்டபூர்வமான அரசியல் முறைமையின் உறுதியான , பாரம்பரியத் தூண்களாக மாறுகிறார்கள். இதற்கு இலங்கையின் இனப்பிளவின் இருமருங்கிலும் நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. அந்த உதாரணங்களின் பட்டியலில் மாவை சேனாதிராஜாவும் அடங்குகிறார்.

மாவை சேனாதிராஜா கடந்த காலத்தில் ஒரு அரசியல் கைதியாக பல்வேறு சிறைகளில் தனது வாழ்வின் பல வருடங்களை கழித்த ஒரு இலங்கை தமிழ் அரசியல்வாதி. முன்னாள் அரசியல் கிளர்ச்சிவாதி தனது வாழ்வின் பிற்பகுதியில் இலங்கை தமிழர்களின் பிரதான அரசியல் கட்சியின் மதிப்புமிக்க தலைவராக வந்தார். இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் 25 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

‘ சேனாதி அண்ணன்’

மாவை சேனாதிராஜா பற்றிய இந்த கட்டுரையை ஒரு தனிப்பட்ட குறிப்புடன் தொடங்க விரும்புகிறேன். அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக ‘சேனாதி அண்ணனை ‘ நான் அறிவேன். கடந்த நூற்றாண்டின் எழுபதுகளின் முற்பகுதியில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் ஒரு கல்வி பொதுத்தராதர உயர்தர வகுப்பு மாணவனாக இருந்தபோது நான் அவரை அறிந்து கொண்டேன். அப்போது அவருடன் தனிப்பட்ட முறையில் பழகவில்லை.

சிறிமா பண்டாரநாயக்கவின் ஐக்கிய முன்னணி அரசாங்க காலத்தில் யாழ்ப்பாணத்தில் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் பெருமளவில் அமைதியின்மை நிலவிய நாட்கள் அவை. அந்த காலப்பகுதியில் பல ஹர்த்தால்கள், பகிஷ்கரிப்புகள், ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் , கறுப்புக்கொடிப் போராட்டங்கள் இடம்பெற்றன.

அவற்றில் முக்கியமான ஒரு இளம் செயற்பாட்டாளராக சேனாதிராஜா முன்னரங்கத்தில் நின்றார். ஆறு அடி உயரம்கொண்ட அவர் ஆஜானுபாகுவான தோற்றமுடையவர். தலைமுடியை நீழமாக வளர்த்திருந்த அவர் தலையைச் சுற்றி ஒரு மெல்லிய பட்டியைக் கட்டிய வண்ணம் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு வருவார்.

பிரதமர் சிறிமா பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கத்தினால் கைதுசெய்யப்பட்டு விசாரணையின்றி தடுத்துவைக்கப்பட்ட 42 இளைஞர்களில் மாவை சேனாதிராஜாவும் ஒருவர். வண்ணை ஆனந்தன் என்ற ஆனந்தவிநாயகம், காசி ஆனந்தன் என்ற காத்தமுத்து சிவானந்தன், மாவை சேனாதிராஜா என்ற சோமசுந்தரம் சேனாதிராஜா ஆகிய மூவரும் அன்று அரசியல் கைதிகளாக பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் மூவரும் அரசியல் விழிப்புணர்ச்சி கொண்ட தமிழ் மாணவர்கள், இளைஞர்கள் பலருக்கு உத்வேகத்தைக் கொடுத்த தமிழ் ஹீரோக்கள்.

பின்னரான வருடங்களில் நான் ஒரு பத்திரிகையாளனாக வந்த பிறகு தனிப்பட்ட முறையிலும் தொழில்சார் அடிப்படையிலும் தமிழ் அரசியலில் எழுந்து வந்து கொண்டிருந்த நட்சத்திரம் மாவை சேனாதிராஜாவுடன் பழகத் தொடங்கினேன். அவரை கொழும்பில் வைத்து 1977 ஆம் ஆண்டு முதலில் அறிமுகப்படுத்தியவர் எனது நெருங்கிய நண்பரும் ஒரு காலத்தில் அரசியல் செயற்பாட்டாளராக விளங்கியவருமான ‘மண்டூர்’ மகேந்திரன். நான் ஒரு இளம் நிருபராக 1977 ஆண்டில் வீரகேசரி பத்திரிகையில் இணைந்துகொண்டேன்.

அதற்கு பிறகு நான் மாவை சேனாதிராஜாவை யாழ்ப்பாணம், மன்னார், கொழும்பு, மட்டக்களப்பு, சென்னை மற்றும் ரொறண்டோ போன்று பல்வேறு இடங்களில் வெவ்வேறு தருணங்களில் சந்தித்திருக்கிறேன். காலப்போக்கில் ஒரு தமிழ் அரசியல் தலைவராக மாவை சேனாதிராஜாவின் படிமுறை வளர்ச்சியை நான் அவதானித்து வந்திருக்கிறேன். அது தவிர, சேனாதிராஜாவை போன்று எனது மனைவியும் மாவிட்டபுரத்தைச் சேர்ந்தவரே. அதனால், இத்தகைய பின்புலத்தில் உணர்வுமிகு சந்தர்ப்பத்தில் அவரைப் பற்றி எழுதுகிறேன்.

மாவிட்டபுரம் / மாவை

ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போன்று வடபகுதியில் வலிகாமம் வடக்கு பிரதேச சபை அல்லது தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவின் கீழ் வருகின்ற மாவிட்டபுரத்தைச் சேர்ந்தவர் மாவை சேனாதிராஜா. ஒப்பீட்டளவில் நீண்ட பெயர்களைக் கொண்ட தமிழ் இடங்களின் பெயர்களை பொதுவழக்கில் சுருக்கிக் கூறுவது தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் ஒரு போக்காக இருந்து வருகிறது.

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் கோவை என்று அழைக்கப்படுகிறது. தஞ்சாவூர் தஞ்சை என்றும் திருநெல்வேலி நெல்லை என்று சுருக்கமாக அமைக்கப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் கரவெட்டி, நீர்வேலி, கோப்பாய் பகுதிகள் முறையே கரவை,நீர்வை மற்றும் கோவை என்று அழைக்கப்படுகின்றன. அதேபோன்றே மாவிட்டபுரம் மாவை என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. சேனாதிராஜா மாவிட்டபுரத்தைச் சேர்ந்தவர் என்பதால் தனது பெயருக்கு முன்னால் மாவை என்ற விகுதியைச் சேர்த்துக் கொண்டார்.

பழைய தொகுதி அடிப்படையிலான தேர்தல் முறையில் மாவிட்டபுரம் காஙகேசன்துறை (கே.கே.எஸ்.) தொகுதிக்குள் வருகிறது. மாவிட்டபுரத்தின் மிகவும் பிரபலமான அடையாளமாக விளங்குவது மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலாகும்.

மாவைக்கந்தன் என்று அறியப்படும் கந்தசுவாமிக்கு அடுத்தாக அண்மைக்காலத்தில் மாவிட்டபுரத்தின் மிகவும் பிரபலமான பிரதிநிதியாக மாவை சேனாதிராஜா என்று அறியப்படும் சேனாதிராஜாவே விளங்கினார் என்லாம்.பலர் அவரை சாதாரணமாக சேனாதி, மாவை, மாவை அண்ணை என்று அழைத்தார்கள்.

சேனாதிராஜாவின் தந்தையார் சோமசுந்தரமும் தாயார் தையல்நாயகியும் பாரம்பரியமாக விவசாயத்தில் ஈடுபட்டுவந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஆனால், அவரின் தந்தை முன்னதாக இரண்டாவது உலகப்போர் வரை மலாயாவில் வர்த்தக நிறுவனம் ஒன்றில் ஒரு எழுதுவினைஞராக பணியாற்றினார். 1941 டிசம்பரில் ஜப்பான் ஆக்கிரமிப்பதற்கு சில மாதங்கள் முன்னதாக சோமசுந்தரம் மலாயாவில் இருந்து தப்பிவந்துவிட்டார்.

27அக்டோபர் 1942

இலங்கை திரும்பிய சோமசுந்தரம் விவசாய வியாபாரத்தில் ஈடுபட்டார். மாவிட்டபுரம் ஒரு காலத்தில் வெற்றிலைக்கு பெயர்போனது. சோமசுந்தரம் பெரியளவில் வெற்றிலையைப் பயிர்செய்து ஒரு வியாபாரியானார். சேனாதிராஜா நான்கு ஆண்களும் மூன்று பெண்களுமாக ஏழு பிள்ளைகளில் மூத்த பிள்ளையாக 1942 அக்டோபர் 27 ஆம் திகதி பிறந்தார்.

இளம் சேனாதி வீமன்காமம் மகாவித்தியாலயத்தில் எஸ்.எஸ். சி. வரை படித்தார். பிறகு அவர் எச்.எஸ். சி. வகுப்பில் படிப்பதற்கு காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரியில் இணைந்தார். எஸ்.எஸ்.சி.யும் எச்.எஸ்.சி.யும் முறையே இன்றைய க.பொ.த. சாதரணதரம் , உயர்தரத்துக்கு சமமானவை. வெற் றி லை வியாபாரத்தில் தந்தையாருக்கு உதவி செய்வதில் கூடுதல் நாட்டம் காட்டிய பிறகு இளைஞர்கள் ரசியல் செயற்பாடுகளிலும் சமூகசேவையிலும் தீவிரமாக ஈடுபடலானார்.

உள்ளக மாணவனாக பல்கலைக்கழகத்தில் பிரவேசிப்பதற்கு தவறிய சேனாதிராஜா கலைமாணி பட்டத்துக்காக (பி.ஏ.) ஒரு வெளிவாரி மாணவனாக தன்னை பேராதனை பல்கலைகழகத்தில் பதிவுசெய்துகொண்டு யாழ்ப்பாணத்தில் வகுப்புக்களை தொடர்ந்தார். அவர் இலங்கையில் ஒருபோதும் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்யவில்லை. ஒரு கட்டத்தில்இலங்கை சட்டக்கல்லூரி அனுமதி அவருக்கு கிடைத்த போதிலும், அரசியல் செயற்பாடுகளுக்காக கைதாகி தடுத்து வைக்கப்பட்டதால் வகுப்புகளுக்கு செல்லமுடியவில்லை.

1983 கறுப்பு ஜூலைக்கு பிறகு தனது குடும்பத்துடன் தமிழ்நாட்டில் ஒரு அரசியல் அகதியாக தங்கியிருந்த காலப் பகுதியிலேயே சேனாதிராஜாவினால் தனது மூன்றாம் நிலைக்கல்வியை நிறைவுசெய்யக் கூடியதாக இருந்தது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் தமிழ் கற்கை நெறிகளை கற்பதற்காக வெளிவாரி மாணவனாக சேனாதிராஜா இணைந்து கொண்டதாகவும் இடைக்கிடையான காலப்பகுதிகளில் கல்வியைத் தொடர்ந்து இறுதியில் பட்டதாரியாகியதாக அறிய
ப்படுகிறது.

வீமன்காமம் மகாவித்தியாலயத்தில் ஒரு பதினகவை வயது மாணவனாக படித்துக் கொண்டிருந்த வேளையிலேயே 1956 ஆம் ஆண்டில் மாவை சேனாதிராஜாவுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டது. புதிதாக தெரிவான எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க அரசாங்கம் தமிழை புறந்தள்ளி சிங்களத்தை மாத்திரம் அரசகரும மொழியாக்கி சட்டத்தை நிறைவேற்றியது.

பழைய பாராளுமன்றத்துக்கு எதிரே காலிமுகத்திடலில் எஸ.ஜே.வி. செல்வநாயகம் தலைமையிலான இலங்கை தமிழரசு கட்சி 1956 ஜூன் 5 சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டது. அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் வாகனங்களில் கூட்டி வரப்பட்ட குண்டர்கள் அமைதியாகப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சத்தியாக்கிரகிகள் மீது தாக்குதல்ளை நடத்திய அதேவேளை பொலிசார் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அரசரத்தினம் மாஸ்டர்

வீமன்காமம் மகாவித்தியாலயத்தின் ஒரு ஆசிரியரான அரசரத்தினம் மாஸ்டரும் காலிமுகத்திடல் சத்தியாக்கிரகத்தில் பங்கேற்றிருந்தார். கிழிந்த உடையுடனும் அடிக்காயங்களுடனும் வீடு வந்த அவர் கொழும்பில் நடந்ததை விபரமாகக் கூறினார். காலிமுகத்திடலில் இடம்பெற்ற அநீதி இளம் சேனாதியின் மனதில் ஒரு பொறியை மூட்டிவிட்டது.

தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வுகளினால் அந்தப் பொறி மேலும் தீப்பற்றிக்கொண்டது. தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட 1958 இனவன்செயலில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தெற்கில் இருந்து கப்பல்கள் மூலம் கொண்டுவரப்பட்டு திருகோணமலை, பருத்தித்துறை மற்றும் காங்கேசன்துறை துறைமுகங்களில் இறக்கப்பட்டார்கள். தங்கள் சொந்த மண்ணிலேயே அவர்கள் அகதிகளானார்கள். அவ்வாறு இடம்பெயர்ந்து வந்த மக்களின் தேவைகளைக் கவனித்த மாணவ தொணடர்களில் மாவை சேனாதிராஜாவும் ஒருவர்.அவர்களது வேதனைமிகுந்த அனுபவங்களின் சோகக்கதைகள் இளம் சேனாதிராஜாவை பாதித்தன.

1960 ஆம் ஆண்டில் மாச்சிலும் ஜூலையிலும் இரு தடவைகள் பாராளுமன்ற தேர்தல்கள் நடத்தப்பட்டன. ஒரு மாணவனாக இருந்தபோதிலும் கூட, சேனாதிராஜா காங்கேசன்துறை தொகுதியில் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் வெற்றியை உறுதிசெய்வதற்கு கடுமையாகப் பாடுபட்டார். இலங்கை தமிழரசு கட்சியின் ஒரு உறூப்பினராகவும் அவர் இணைந்துகொண்டார். அதேவேளை அந்த இரு தேர்தல்களிலும தமிழரசு கட்சி முறையே 15, 16 ஆசனங்களைக் மிகப்பெரிய பெரும்பான்மை வாக்குகளுடன் கைப்பற்றியது.

சத்தியாக்கிரக இயக்கம்

தமிழரசு கட்சி 1961 ஆம் ஆண்டில் முன்னெடுத்த சத்தியாக்கிரகப் போராட்டம் தமிழர்கள் அதிகப் பெரும்பான்மையினராக வாழும் யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட கச்சேரிகளில் சுமார் மூன்று மாதங்களாக சிவில் நிருவாகத்தை முடக்கியது.அன்று முல்லைத்தீவு, கிளிநொச்சி, அம்பாறை மாவடடங்கள் இருக்கவில்லை. சத்தியாக்கிரகத்தின் உச்சக்கட்டத்தில் தனியான தபால் சேவை ஆரப்பிக்கப்பட்டு முத்திரைகளும் தபால் அட்டைகளும விநியோகிக்கப்பட்டன.

அமைதிவழிப் போராட்டத்தை அடக்குவதற்கு இராணுவத்தை அனுப்பி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளில் இறங்கியது. அப்போது நடேஸ்வரா கல்லூரியின் மாணவனாக இருந்த சேனாதிராஜா வேறு பல மாணவர்களுடன் சேர்ந்து பாடசாலைக்கு போகாமல் ஊர்வலங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டார். சத்தியாக்கிரகிகளுக்கு உதவிகளைச் செய்த தொண்டர்களுடனும் அவர் இணைந்து கொண்டார்.

மாவையின் அரசியல்மயம்

இந்த அனுபவங்கள் எல்லாம் இறுதியில் மாவை சேனாதிராஜாவை அரசியல்மயப்படுத்தி விட்டன. காங்கேசன்துறை தொகுதியில் தமிழரசு கட்சியின் இளைஞர் அணியின் தலைவராக அவர் முதலில் தெரிவு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் தமிழரசு கட்சியின் இளைஞர் அணியின் இணைச் செயலாளராவும் வந்தார். பல்கலைக்கழகங்களில் அனுமதிபெறுவதற்கு சிங்கள மாணவர்களை விடவும் கூடுதல் புள்ளிகளைப் பெறவேண்டிய நிர்ப்பந்த நிலையை ஏற்படுத்திய அநியாயமான 1970 தரப்படுத்தல் முறை பொதுவில் தமிழ் இளைஞர்கள் மத்தியிலும் குறிப்பாக மாணவர்கள் மத்தியிலும் பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தியது

விரக்தியடைந்த இளைஞர்களினாலும் மாணவர்களினாலும் இரு புதிய தமிழ் அமைப்புக்கள் உருவாக்கப்பட்டன. ஒன்று தமிழ் மாணவர் பேரவை, மற்றையது தமிழ் இளைஞர் பேரவை. இளைஞர் பேரவையில் தீவிர செயற்பாட்டாளராக இருந்த மாவை சேனாதிராஜா அதன் தலைவராக பணியாற்றினார்.

இளைஞர் பேரவையின் தோற்றம் தமிழர் அரசியலில் ஒரு தீவிரவாத செல்வாக்கை கொண்டிருந்தது. ஆயுதப் போராட்டத்தின் மூலமாக தனித்தமிழ் அரசு ஒன்றை அமைக்கும் இலட்சியத்தை பிரசாரப்படுத்தும் இயக்கம் ஒன்று மறைமுகமாக முன்னெடுக்கப்பட்டது. 1971 ஜே.வி.பி. கிளர்ச்சியும் அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் பங்களாதேஷின் உருவாக்கமும் இந்த பிரிவினைவாதச் சிந்தனைகளுக்கு மேலும்
உத்வேகமளித்தன.

தமிழர்களுக்கு சொந்தமாக ஒரு நாடு தேவை என்று உணர்ந்தவர்களில் மாவை சேனாதிராஜா ஒருவர். 1965 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான பிரதமர் டட்லி சேனநாயக்கவின் அரசாங்கத்தில் தமிழரசு கட்சி இணைந்து கொண்டதை கடுமையாக விமர்சித்தவர்களிலும் ஒருவராக அவர் விளஙகினார். முன்னாள் ஊர்காவற்துறை பாராளுமன்ற உறுப்பினர் வி.நவரத்தினத்தின் ” தமிழர் சுயாட்சி ” கொள்கையினாலும் மாவை சேனாதிராஜா கவரப்பட்டார்.1970 பாராளுமன்ற தேர்தலின்போது அவர் தமிழரசு கட்சிக்கு விசுவாசமாகவே செயற்பட்டார்.ஆனால், அவரது அனுதாபம் தனித்தமிழ் அரசு ஒன்றை ஆதரித்தவர்களுடனேயே இருந்தது.

இளம் தலைவரான சேனாதிராஜா அந்த நாட்களில் தீவிரவாத சிந்தனைகொண்ட பரந்தளவிலான தமிழ் இளைஞர்களுடன் இணைந்து செயற்பட்டார். பின்னரான நாட்களில் அவர்களில் சிலர் ஆயுதமேந்திய தமிழ்த் தீவிரவாத இயக்கங்களின் உறுப்பினர்களாகவும் தலைலர்களாகவும் வந்தனர். முன்கூட்டியே கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படாமல் இருந்திருந்தால், தானும் நேரடியாக தமிழ்த் தீவிரவாத இயக்கங்களில் சம்பந்தப்பட்டு வன்முறைப் போராட்டத்தில் இறங்கியிருக்கக்கூடும் என்று ஒரு தடவை சேனாதிராஜா என்னிடம் கூறினார்.


சிறிமாவே பண்டாரநாயக்க அரசாங்கம்

தமிழர் விடுதலை கூட்டணி 1972 மே மாதம் அமைக்கப்பட்டபோது சேனாதிராஜா இளைஞர் பிரிவின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். அவர் விரைவாகவே சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தினால் கைதுசெய்யப்பட்டு விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டார். மூன்று வருடங்களுக்கு மேலாக விசாரணையின்றி சிறையில் இருந்த 42 தமிழ் இளைஞர்களில் ஙேனாதிராஜாவும் ஒருவர். அவர்கள் 1975 ஜனவரியில் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பா கொலைக்கு பிறகு 1975 ஜூலையில் மீண்டும் சிறைவைக்கப்பட்டனர். 1977 ஜூலை பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு சில மாதங்கள் முன்னதாக அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

சேனாதி அண்ணன் 2017 அக்டோபரில் தனது 75 வது பிறந்ததினத்தை கொண்டாடியபோது அவருடன் நீண்ட ஒரு சம்பாஷணையை நடத்தினேன். முன்கூட்டியே கைது செய்யப்படாமல் இருந்திருந்தால், எழுமதுகளின் முற்பகுதியில் தீவிரவாத இயக்கம் ஒன்றில் சம்பந்தப்பட்டிருக்கக் கூடிய பெருமளவு சாத்தியம் இருந்திருக்கும் என்று அப்போதுதான் அவர் சொனானர். ஆயுதமேந்திய தமிழ்த் தீவிரவாதம் அப்போது ஒரு கரு நிலையில் இருந்தது ” என்னை கைது செய்ததன் மூலம் சிறிமாவோ நல்லதொரு காரியத்தைச் செய்தார்” என்று சேனாதிராஜா அடக்கமாகச் சிரித்துக் கொண்டு சொன்னார்.


எட்டு சிறைகளில் ஏழு வருடங்கள்

அரசியல் வன்முறையில் சேனாதிராஜா தன்னை ஒருபோதும் ஈடுபடுத்திக் கொள்ளவில்லை என்றபோதிலும், அவர் கட்டங்கட்டமாக நீண்டகாலம் சிறைவாசத்தை அனுபவித்தார். மாவை வெவ்வேறு காலப் பகுதிகளில் மகசீன் சிறை, வெலிக்கடை சிறை, அநுராதபுரம், நீர்கொழும்பு, களுத்துறை, போகம்பர, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணக் கோட்டை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் இருந்த வெவ்வேறு காலப் பகுதிகளைக் கூட்டிப் பார்த்தால், அவர் எட்டுச் சிறைகளில் சுமார் ஏழு வருடங்கள் சிறைவாசத்தை அனுபவித்தார் என்று தெரிகிறது.

சிறையில் இருந்த காலப்பகுதிகளில் சேனாதிராஜா மோசமான சித்திரவதைக்கும் இடர்பாடுகளுக்கும் உள்ளாக்கப்பட்டார். தமிழ் இளைஞர் அமைப்புக்களில் அவர் நிருவாகப் பதவிகளை வகித்த காரணத்தால் அவரிடம் பெருமளவு தகவல்கள் இருக்கும் என்று விசாரணை செய்த அதிகாரிகள் உணர்ந்தார்கள். அதனால் அவரை விசாரணை செய்த வேளைகளில் அதிகாரிகள் மூன்றாந்தரமான வழிவகைகளைக் கடைப்பிடித்தார்கள். சேனாதிராஜா மிகவும் உயரமான, ஆஜானுபாகுவான தோற்றம் கொண்டவர். அவரை விசாரணை செய்த அதிகாரிகளில் உருவத்தில் குள்ளமான பலர் தங்களை விடவும் பெரிய மனிதன் ஒருவனை வேதனைக்கு உள்ளாக்குவதில் வக்கிரமாக மகிழ்ச்சியடைந்தார்கள்.

தடுப்புக்காவல் மற்றும் சித்திரவதைக்கு புறம்பாக சேனாதிராஜா பல கட்டங்களில் பணக் கஷ்டத்துக்கும் உள்ளானார். அன்றைய மெட்ட்ராஸில் ( இப்போது சென்னை) அவரும் குடும்பத்தவர்களும் அனுபவித்த கஷ்டங்களை தனிப்பட்ட ரீதியில் நான் கண்டேன். மெட்ராஸின் பாண்டி பசாரில் தணிகாசல முதலி தெருவில் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணிக்கு அலுவலகம் இருந்தது. சேனாதிராஜாவும் தனது குடும்பத்துடன் அங்கு தங்கியிருந்தார். அது மிகவும் நெருக்கடியான காலப்பகுதி. ஆனால், அந்த நாட்களில் சேனாதிராஜா தன்னந்தனியனாக அந்த அலுவலகத்தை இயங்கவைத்து தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் கொடியை பறக்கவிட்டார். வெளிநாடுகளில் இருந்த சேனாதிராஜாவின் உடன்பிறப்புகளிடம் இருந்து உதவி கிடைக்கத் தொடங்கவே நாளடைவில் நிவைரங்களில் முன்னேற்றம் ஏற்பட்டது.


தேர்தல் அரசியலில்

சேனாதிராஜா தேர்தல் அரசியலில் ஈடுபடத் தொடங்கிய பிறகு அவரின் வாழ்க்கை நிலைவரம் முன்னேற்றம் கண்டது. இளைஞர் அணியின் தலைவராகவும் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் அரசியற்குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றிய சேனாதிராஜா முதற்தடவையாக 1989 பெப்ரவரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். யாழ்ப்பாண மாவட்டத்தில் வெறுமனே 2820 வாக்குகளை மாத்திரம் பெற்ற அவரால் தெரிவாக முடியவில்லை.1994 பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட அவரால் அங்கும் தெரிவாக முடியவில்லை.

அந்த இரு பாராளுமன்ற தேர்தல்களிலும் வெற்றிபெற முடியவில்லை என்றபோதிலும், விடுதலை புலிகள் செய்த இரு கொலைகளின் விளைவாக தேசியப் பட்டியல் உறுப்பினராக சேனாதிராஜா பாராளுமன்றம் செல்லக்கூடியதாக இருந்தது. அப்பாபிள்ளைை அமிர்தலிங்கம் 1989 ஜூலையில் கொழும்பில் விடுதலை புலிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதனால் பாராளுமன்றத்தில் காலியான தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு சேனாதிராஜா நியமிக்கப்ட்டார். கலாநிதி நீலன் திருச்செல்வம் 1994 ஆம் ஆண்டில் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அவரையும் விடுதலை புலிகள் 1999 ஜூலையில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்திக் கொலை செய்தனர். மீண்டும் நீலனின் இடத்துக்கு சேனாதிராஜா தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்.

புதிய மிலேனியத்தில் தான் சேனாதிராஜாவினால் தேர்தலில் வெற்றி பெறக்கூடியதாக இருந்தது. 2000, 2001, 2004, 2010, 2015 தேர்தல்களில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் இருந்து அவர் பாராளுமன்றத்துக்கு தெரிவானார்.2000 ஆம் ஆண்டில் 10,965 விருப்பு வாக்குகளையும் 2001 ஆம் ஆண்டில் 33, 831 விருப்பு வாக்குகளையும் அவர் பெற்றார். அந்த தேர்தல்களில் சேனாதிராஜா தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் சூரியன் சின்த்தில் போட்டியிட்டார்.

2004 ஆம் ஆண்டில் இருந்து அவர் தேர்தல்களில் இலங்கை தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்தின் கீழ் போட்டியிட்டார். 2004, 2010, 2015 தேர்தல்களில் சேனாதிராஜா முறையே 38783, 20501 , 58782 விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவானார். யாழ்ப்பாணத்தில் மாவையின் தொடர்ச்சியான தேர்தல் வெற்றிகள் 2020 ஆண்டில் ஒரு முடிவுக்கு வந்தன. 20, 358 வாக்குகளைப் பெற்ற அவர் பாராளுமன்றத்துக்கு தெரிவாகவில்லை.2024 பாராளுமன்ற தேர்தலில் சேனாதிராஜா போட்டியிடவில்லை.

1949 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இலங்கை தமிழரசு கட்சி ஒரு அரசியல் கட்சியாக 1977 ஆம் ஆண்டுவரை அரசியலில் தீவிரமாக இயங்கியது. அந்த ஆண்டில் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் பிரதான அங்கத்துவக் கட்சியாக தமிழரசு கட்சி விளங்கியது. தேர்தல் செயற்பாடுகளைப் பொறுத்தவரை தமிழரசு கட்சி உறங்குநிலையில் இருந்தாலும் கூட, அது கட்சிப்பதிவை தொடர்ந்தும் வைத்திருந்தது. 2001 ஆம் ஆண்டில் புதிதாக அமைக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழர் ஐக்கிய விடுதலை கட்டணியின் சூரியன் சின்னத்தில் போட்டியிட்டது.

ஆனால், ஒரு சட்டத்தகராறு காரணமாக 2004 பாராளுமன்ற தேர்தலில் கூட்டமைப்பினால் சூரியன் சின்னத்தில் போட்டியிடக்கூடியதாக இருக்கவில்லை. அதனால் மீண்டும் தமிழரசு கட்சி கொண்டுவரப்பட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு வீட்டு சின்னத்தில் போட்டியிட்டது.


தமிழரசு கட்சிக்கு புத்துயிரளிப்பு

உறங்குநிலையில் இருந்த தமிழரசு கட்சிக்கு இவ்வாறாக மீணடும் புத்துயிரளிக்கப்பட்டது. இராஜவரோதயம் சம்பந்தன் தமிழரசு கட்சியின் தலைவராகவும் சோமசுந்தரம் சேனாதிராஜா பொதுச் செயலாளராகவும் வந்தனர்.. 2014 ஆம் ஆண்டில் சம்பந்தன் தலைவர் பதவியில் இருந்து இறங்கினார். சேனாதிராஜா தமிழரசு கட்சியின் தலைவரானார். பத்து வருடங்களாக 2024 ஆம் ஆண்டு வரை அவர் தலைவர் பதவியில் இருந்தார்.

சேனாதிராஜாவின் மனைவியின் பெயர் பவானி. தம்பதியருக்கு தாரகா என்ற மகளும் கலையமுதன், ஆராவமுதன் என்ற இரு மகன்மாரும் இருக்கிறார்கள். தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவர் அமிர்தலிங்கம் ” அமுதர் ” என்று அழைக்கப்பட்டதால், சேனாதிராஜா மகன்களுக்கு அமுதன் என்று பெயர்களைச் சூட்டினார். மகள் தாரகா இந்தியாவில் ஒரு மருத்துவர். இளையமகன் ஆராவமுதன் சிங்கப்பூரில் ஒரு பொறியியலாளர். இலங்கையில் இருக்கும் மூத்தமகன் கலையமுதன் அரசியலில் ஈடுபடுகிறார். வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் ஒரு உறுப்பினராக இருந்த அவர் முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் மகள் பிரவீனாவை திருமணம் செய்திருக்கிறார்.

இரு பாகங்கள்

தமிழர் அரசியலில் மாவை சேனாதிராஜாவின் வழித்தடத்தை இரு பாகங்களாகத் தொகுக்க முடியும். முதலாவது பாகம் அவரது வாழ்வின் முற்பகுதியை உள்ளடக்குகிறது. இளம் அரசியல் செயற்பாட்டாளரான சேனாதிராஜா பல போராட்டங்களில் பங்கேற்று, அரசியல் காரணங்களுக்காக சிறைசென்று கணிசமான தியாகங்களைச் செய்தவர். குறிப்பாக, இந்தியாவில் அஞ்ஞாதவாசத்தில் இருந்தபோது அவரது வாழ்க்கை பல வழிகளில் மிகப்பெரிய போராட்டமாக அமைந்தது. அதை நான் நேரடியாகக் கண்டேன்.

அவரது வாழ்வின் இரண்டாவது பாகம் வேறுபட்டது. இந்த பாகத்தில் வரும் சேனாதிராஜா பழைய இலட்சியவாதி அல்ல. இந்த சேனாதிராஜா உயர்நிலையில் இருப்பதற்கு திடசங்கற்பம் பூண்ட, திட்டமிட்டுச் செயற்படுகின்ற ஒரு சுயநல அரசியல்வாதி — தனது நலனக்ளை தக்கவைப்பதற்காக எதையும் செய்வதற்கு தயாராக இருக்கும் ஒருவர். அரசியல் பதவிக்க்காக சேனாதிராஜா பேராசையை வெளிக்காட்டினார். தேசியப் படடியல் பாராளுமன்ற உறுப்பினராக வருவதற்கும் கட்சியின் தலைமைத்துவத்தில் தொங்கிக் கொண்டிருப்பதற்கும் அவர் மேற்கொண்ட பிரயத்தனங்கள் பரிதாபகரமானவை.

தியாகங்கள் நிறைந்த போராட்டங்களைச் செய்த இளம் சேனாதிராஜாவை நினைவில் வைத்திருப்பவர்கள் அவரைக் கண்டனம் செய்யவோ அல்லது விமர்சனம் செய்யவோ தயங்குவார்கள். அவர் பிற்காலத்தில் சேனாதிராஜாவிடம் ஏற்பட்ட விரும்பத்தகாத மாற்றத்துக்கு மத்தியிலும், கடந்த காலத்தை நினைவில் வைத்து அவர்கள் அவர் மீது தொடர்ந்தும் அனுதாபம் காட்டினார்கள். சகித்துக்கொள்ள முடியாமல் போகும்வரை ” சேனாதி அண்ணை ” மீது அன்பு காட்டியரவர்களில் நானும் ஒருவன்.

அதனால், மாவை சேனாதிராஜாவின் சகித்துக்கொள்ள முடியாத சுயநலம் பற்றி கடுமையாக விமர்சிக்கும் கட்டுரை ஒன்றை கடந்த வருடம் நான் பெரும் தயக்கத்துடன் எழுதினேன். அதை எழுதுவதற்கு முன்னதாகவும் எழுதிய பின்னரும் தனிப்பட்ட முறையில் அவருடன் நான் தொடர்பு கொண்டேன். சரியானதைச் செய்ய வேண்டும் என்றும் அதை விரைவாகச் செய்யவேண்டும் என்றும் அவரை அப்போது நான் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டேன். தமிழரசு கட்சியின் தலைமைத்துவப் பதவிகளை அவர்
மனமுவந்து கைவிடவேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நான் எழுதினேன். அவரது பிரியாவிடை இனிப்பானதாக இருக்க வேணாடுமேயன்றி கசப்பானதாக இருக்கக்கடாது என்று என்று சுட்டிக்காட்டினேன்.


போராட்டத்தின் சின்னம்

ஆனால், அந்த வேண்டுகோளை அவர் கவனத்தில் எடுக்கவில்லை என்பது கவலைக்குரியது. குறிம்பாகச் சொல்வதானால் அவரின் வாழ்வின் கடைசி மாதங்கள் சந்தோசமானவை அல்ல. இப்போது அந்த சேனாதிராஜா எம்மத்தியில் இல்லை. அதைப் பற்றி மேலும் ஆராய நான் விரும்பவில்லை. தான் நம்பிக்கை கொண்ட இலட்சியத்துக்காக பல வருடங்கள் சிறையில் வாடி, பெருமளவு துன்பங்களை அனுபவித்த அந்த இளம் அரசியல் செயற்பாட்டாளரான சேனாதி அண்ணனை நினைவில் வைத்திருக்கவே நான் விரும்புகிறேன். பேரினவாத மேலாதிக்கத்துக்கு எதிரான ஐந்து தசாப்தங்களுக்கும் அதிகமான கால தமிழர் உரிமைமப் போராட்டத்தின் ஒரு சின்னமாக மாவை சேனாதிராஜாவை நினைவுகூருவோமாக.

D.B.S.Jeyaraj can be reached at dbsjeyaraj@yahoo.com

ஆங்கில மூலம்: டி. பி. எஸ். ஜெயராஜ் (Daily Mirror)

தமிழில்: வீரகத்தி தனபாலசிங்கம்

நன்றி: வீரகேசரி


************************************************************************************************