சதாசிவம்பிள்ளை கிருஷ்ணகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட விடுதலை புலிகளின் அன்றைய யாழ்ப்பாண மாவட்ட தளபதி ‘ கேணல் ‘ கிட்டுவின் வாழ்வும் காலமும்

டி.பி.எஸ். ஜெயராஜ்

இலங்கை ஆயுதப்படைகளுக்கும் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்துக்கும் இடையிலான 33 வருடகாலப் போர் இப்போதெல்லாம் நினைவில் இருந்து மெதுவாக அருகிக் கொண்டு போகிறது. விடுதலை புலிகள் இயக்கம் 1976 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் திகதி முறைப்படி ஆரம்பிக்கப்பட்டது. மூன்று தசாப்தகால போருக்கு பிறகு விடுதலை புலிகள் முல்லைத்தீவின் நந்திக்கடல் ஏரியில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி தங்களது தோல்வியைச் சந்தித்தார்கள். வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான அந்த இயக்கத்தினால் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட போர் சுதந்திரத்தின் பின்னரான இலங்கையின் வரலாற்றில் முக்கியமான ஒரு பாகமாகும்.

ஒரு கெரில்லாப் போராட்ட இயக்கம் என்ற நிலையில் இருந்து மரபுரீதியான போரில் ஈடுபடும் இரு படையணியாக விடுதலை புலிகளின் உருநிலைமாற்றம் நீண்டகாலப் போரில் முக்கியமான ஒரு திருப்பு முனையாகும். 1985 ஆம் ஆண்டில்தான் விடுதலை புலிகள் யாழ்ப்பாணக் குடாநாட்டின் கணிசமான பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார்கள். இலங்கை பொலிசார் கடமையில் ஈடுபடுவதை நிறுத்திக்கொண்டார்கள். இராணுவம் பெரும்பாலும் முகாம்களுக்குள் அடங்கிக் கிடந்தது. படையினர் இடைக்கிடை வெளியில் வந்து சிறிய மோதல்களில் ஈடுபட்டுவிட்டு முகாம்களுக்கு திரும்பிச் சென்றுவிடுவார்கள்.

இராணுவத்தினதும் பொலிசாரினதும் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், குடாநாட்டின் பெரும்பகுதி ஆயுதமேந்திய தமிழ்க் குழுக்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. விரைவாகவே மற்றைய குழுக்களுடனான மோதல்களுக்கு பிறகு விடுதலை புலிகள் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக மாறினார்கள். அவர்கள் மெய்நடப்பில் ஒரு நிருவாகத்தை நிறுவ ஆரம்பித்தார்கள். விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் மீது அரசு ஷெல் வீச்சுக்களையும் விமானக் குண்டுத் தாக்குதல்களையும் நடந்த நிர்ப்பந்திக்கப்பட்டது. ” ஒபறேசன் லிபறேசன் ” இராணுவ நடவடிக்கைக்கு பின்னர் மாத்திரமே யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமராட்சி பிராந்தியத்தின் பகுதிகளை இராணுவத்தினரால் மீளக்கைப்பற்றக்கூடியதாக இருந்தது.

சதாசிவம்பிள்ளை கிருஷ்ணகுமார்

வடக்கில் ஒரு கெரில்லா இயக்கம் என்ற நிலையில் இருந்து மரபுரீதியான போரில் ஈடுபடும் படையணியாக விடுதலை புலிகளின் உருநிலை மாற்றத்துக்கு அந்த இயக்கத்தின் அன்றைய யாழ்ப்பாண தளபதியான ” கேணல்” கிட்டுவே பிரதானமாக பொறுப்பாவார். சதாசிவம்பிள்ளை கிருஷ்ணகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட கிட்டு விடுதலை புலிகளின் யாழ்ப்பாண மாவட்ட தளபதியாக 1985 பெப்ரவரி தொடக்கம் 1987 மே வரை செயற்பட்டார். வல்வெட்டித்துறை மண்ணின் திடகாத்திரமான மைந்தன் 1987 மார்ச் 30 ஆம் திகதி அவரைக் கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி ஒன்றின்போது குண்டுவெடிப்பில் ஒரு காலை இழந்தார்.

இந்திய இராணுவத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் போர் மூண்டபோது கிட்டு இன்று சென்னை என்று அறியப்படும் மெட்ராஸில் இருநதார். இந்திய அதிகாரிகளினால் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். பிறகு கிட்டு ஐரோபாபாவுக்கு சென்று ஐக்கிய இராச்சியத்தில் லண்டனில் விடுதலை புலிகளின் சர்வதேச செயலகத்தை அமைத்தார். விடுதலை புலிகளின் கப்பல் ஒன்றில் கிட்டு இலங்கைக்கு திரும்பிக்கொண்டிருந்த வேளையில் இந்திய கடற்படை அதைச் சுற்றிவளைத்தது. இந்திய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதை தவிர்ப்பதற்காக கிட்டுவும் விடுதலை புலிகள் இயக்கத்தின் வேறு எட்டு உறுப்பினர்களும் 1993 ஜனவரி 16 ஆம் திகதி தற்கொலை செய்து கொண்டனர்.

ஒரு பத்திரிகையாளன் என்ற வகையில் துறைசார் முறையில் நான் மிகவும் நெருக்கமாக ஊடாட்டங்களைச் செய்த விடுதலை புலிகளின் உயர்மட்டத் தலைவர்களில் கிட்டுவும் ஒருவர். உண்மையில், ஒரு ஆங்கில பிரசுரத்துக்காக முதன்முதலாக அவரைப் பேட்டி கண்டது நானே. அந்த பேட்டி இந்திய செய்திச் சஞ்சிகையான ” புரொண்ட்லைனில் ” 1986 நவம்பரில் வெளியாகியது. கிட்டுவின் மரணத்துக்கு பிறகு அவரைப் பற்றி நான் கனடாவின் ரொறன்ரோவில் வெளியிட்ட தமிழ் வாரச்சஞ்சிகையில் தொடர்ச்சியாக கட்டுரைகளை எழுதினேன்.” ஒரு வட மறவனின் வீர காதை ” என்பதே அந்த கட்டுரைத் தொடரின் தலைப்பாகும்

கிட்டு என்ற கிருஷ்ணகுமார் உயிருடன் இருந்திருந்தால், ஜனவரி 2 ஆம் திகதி தனது 65 வது பிறந்த தினத்தைக் கொண்டாடியிருப்பார். இந்த பின்புலத்திலேயே இந்த கட்டுரை அவர் மீது கவனத்தை திருப்புகிறது.

த சற்றர்டே றிவியூ

காமினி நவரத்னவை ஆசிரியராகக்கொண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து அன்று வெளியான ஆங்கில வாரப் பத்திரிகையான ” த சற்றர்டே றிவியூ ” வில் பிரதி ஆசிரியராக யாழ்பாணத்தில் சில மாதங்கள் பணியாற்றிய வேளையிலேயே நான் கிட்டுவை முதன்முதலாக நேரடியாகச் சந்தித்தேன். அது 1986 ஆம் ஆண்டு. அப்போது விடுதலை புலிகளின் யாழ்ப்பாண மாவட்ட தளபதி என்ற வகையில் சர்வ வல்லமையும் கொண்ட ஒருவராக கிட்டு விளங்கினார். விக்டர் (மன்னார்), அருணா (மட்டக்களப்பு ), டேவிட் ( அம்பாறை ), சந்தோசம் ( திருகோணமலை ), மற்றும் மாத்தயா ( வன்னி) ஆகியோரே அன்று விடுதலை புலிகளின் ஏனைய தளபதிகள். மாத்தயாவின் கீழ் இருந்த வன்னி கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா என்று உப பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தன. அவற்றின் தளபதிகளாக முறையே சுசீலன், பசீலன், ஜெயம் ஆகியோர் செயற்பட்டனர்.

அப்போது விடுதலை புலிகளின் ஏனைய தளபதிகளைப் பற்றி பொது மக்களுக்கு பெரிதாக தெரியாது. அந்த மாவட்டங்களில் பொலிசாரும் அரசாங்க படைகளும் செயற்பட்டுக் கொண்டிருந்ததால் விடுதலை புலிகள் மிகவும் எச்சரிக்கையுடன் ஔிவுமறைவாகவே இயங்க வேண்டியிருந்தது. ஊடகத் தொடர்புகளையும் பெறக்கூடியதாக இருக்கவில்லை. ஆனால், யாழ்ப்பாணத்தில் நிலைமை வேறுபட்டதாக இருந்தது. அது கிட்டத்தட்ட ” அரைவாசி விடுதலை செய்யப்பட்ட ” ஒரு அரசு போன்று இருந்தது. புலிகளின் தளபதி கிட்டு சுதந்திரமாக நடமாடியதுடன் அவரால் யாழ்ப்பாணத்தில் இயங்கிய் பத்திரிகைகளுடனும் மேற்குலக ஊடகங்களுடனும் தொடர்புகளை வைத்துக் கொள்ளக்கூடியதாக இருந்தது. அதனால், விடுதலை புலிகளின் வேறு எந்த பிராந்திய தளபதியையும் விட கிட்டு ஊடகங்களில் பெரும் முக்கியத்துவத்தைப் பெற்றார். யாழ்ப்பாணத்தில் விடுதலை புலிகளின் பேச்சாளராக இருந்த ரஹீம் என்ற சிறீகுமாருக்கும் ஊடக முக்கியத்துவம் கிடைத்தது.

விஜய குமாரதுங்க

மேலும், பிரபலமான சிங்களத் திரைப்பட நடிகரும் அரசியல் தலைவருமான விஜய குமாரதுங்க 1986 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்துக்கு சென்றபோது கிட்டுவுக்கும் ரஹீமுக்கும் மிகவும் பெருமளவுக்கு அனுகூலமான பிரசித்தம் கிடைத்தது. ஸ்ரீலங்கா மகாஜன கட்சியின் தலைவரான குமாரதுங்க வுடன் ஒஸீ அபேகுணசேகரவும் பீலிக்ஸ் பெரேராவும் யாழ்ப்பாணம் சென்றிருந்தனர். அவர்கள் விடுதலை புலிகளினால் நன்றாக வரவேற்கப்பட்டனர். கிட்டுவுடன் பேச்சுவார்த்தைகளையும் நடத்தினர். விஜயவின் யாழ்ப்பாண விஜயம் மற்றும் கிட்டுவுடனான அவரது சந்திப்பு தொடர்பான வீடியோ தெற்கில் பெருமளவில் பரவியது. இன்றைய வார்த்தைப் பிரயோகத்தில் கூறுவதானால் அந்த வீடியோ ‘ வைறலானது’ (Viral). தெற்கில் இருந்தவர்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அம்சங்களில் ஒன்று கிட்டுவின் தோற்றமாகும்.

விடுதலை புலிகளின் தளபதியாக கிட்டு பற்றிய அச்சந்தரும் மதிப்பீடு அவரை அரக்கனைப் போன்ற ஒருவராக பலரையும் நோக்கவைத்தது. ஆனால், அந்த தோற்றத்துக்கு முற்றிலும் வேறுபட்டமுறையில் அவர் நிஜவாழ்க்கையில் காணப்பட்டார். குள்ளமான , தலை வழுக்கை விழுந்த, மூக்குக் கண்ணாடி அணிந்த தோற்றமுடைய கிட்டு மிகவும் பழகுவதற்கு இனிய நடத்தையைக் கொண்டவராக இருந்தார்.பொதுவில் அவர் மென்மையாகவே பேசுவார். ஒரு பயங்கரமான கெரில்லா போராளி என்பதை விடவும் அவரைப் பார்த்தால் ஒரு வங்கி எழுதுவினைஞரைப் போன்று அல்லது ஆரம்ப பாடசாலை ஆசிரியரைப் போன்றே அவரது தோற்றம் அமைந்திருந்தது. கடந்தகால சம்பவம் ஒன்று இதை பிரகாசமான வெளிக்காட்டியது.


அப்பாவித்தனமான தோற்றம்

யாழ்ப்பாணத்தில் ஆயுதப்படைகள் சுதந்திரமாக நடமாடித்திரிந்த காலப்பகுதியில் 1984 ஆம் ஆண்டில் ஒரு தடவை மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களை இராணுவத்தினர் சந்தேகத்தில் இடைமறித்தனர். அதை ஓட்டிவந்தவர் விடுதலை புலிகளின் ஆதரவாளரான ஒரு ஆசிரியர். மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்தில் தலைவழுக்கை விழுந்த — கண்ணாடி அணிந்த “அப்பாவி” ஒருவர் இருந்தார். அவர்ாவேறு யாருமல்ல கிட்டுதான். பயங்கரமானவராக தோன்றிய ஆசிரியரை தங்களது வாகனத்தில் ஏற்றிய இராணுவத்தினர் மற்றவர் விடுதலை புலிகளின் யாழ்ப்பாணத் தளபதி என்பதை தெரியாமல் அவரை தங்களது வாகனத்தை தொடர்ந்து பின்னால் மோட்டார் சைக்கிளில் வருமாறு பணித்தனர். ஒரு கட்டத்தில் கிட்டு ஒரு ஒழுங்கைக்குள் மோட்டார் சைக்கிளை திருப்பி விரைவாகச் செலுத்திச் சென்று பாதுகாப்பாக தப்பி விட்டார். படையினரால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆசிரியரை விசாரணை செய்த பிறகுதான் தங்களிடம் வசமாக சிக்கியபோதிலும் தப்பிச்சென்றது யார் என்பது படையினருக்கு தெரியவந்தது.

இருபதாம் நூற்றாண்டின் 80 கள் விடுதலை புலாகளின் மகிழ்ச்சியான காலப்பகுதி. அவர்கள் மக்களி உண்மையான ஆதரவை பேராதரவைக் கொண்டிருந்ததுடன் பெரும் செல்வாக்குடையவர்களாகவும் விளங்கினர். யாழ்ப்பாணத்தில் தேடுதல்கள், சுற்றிவளைப்புகள், கைதுகள் மற்றும் தடுப்புக்காவல் பயம் எதுவுமின்றி யாழ்பாணத்தில் மக்கள் சுதந்திரமாக நடமாடக்கூடியதாக இருந்ததே அதற்கு காரணமாகும். படையினரை முகாம்களில் இருந்து வெளியே வரமுடியாமல் விடுதலை புலிகள் தடுத்திருப்பதன் விளைவே அந்த ” ஒடுக்குமுறையில் இருந்து கிடைத்த விடுதலையும் சுதந்திரமும்.” விடுதலை புலிகள் இயக்கத்தின் போராளிகள் ” ஹீரோக்களாக ” நோக்கப்பட்டனர். அழகான தோற்றமுடைய போராளிகளுக்கு யாழ்ப்பாண பாடசாலை மாணவிகள் மத்தியில் ரசிகர்களும் இருந்தார்கள்.

விடுதலை புலிகளின் யாழ்ப்பாணத் தளபதி கிட்டு அச்சங்கலந்த மதிப்புணர்வுடன் நோக்கப்பட்டார். யாழ்ப்பாணத்தில் பலரின் அன்புக்குரியவராகவும் விளங்கிய அவர் பேரளவு செல்லாக்குடையவராக விளங்கினார்.

செல்லப்பிராணி குரங்கு பெல்

” பெல் ” என்று பெயர்சூட்டப்பட்ட குரங்கு ஒன்றை செல்லப்பிராணியாக கிட்டு வைத்திருந்தார். அவர் ஒரு பிக்கப் வாகனத்தில் யாழ்ப்பாண வீதிகளில் பயணம் செய்யதபோது குரங்கு அவரது தோளில் ஏறியிருக்கும். கிட்டு பெரும்பாலும் சேர்ட் அணியாமல் இருப்பார். இராணுவம் வெளியில் வரும்போது வீதிகளில் காவல்நிலைகளில் இருக்கும் போராளிகள் விடுதலை புலிகளின் தலைமைத்துவத்துக்கு வோக்கி டோக்கி மூலம் தகவல் அனுப்பி உஷார்ப்படுத்துவார்கள். உடனே சம்பந்தப்பட்ட இடத்துக்கு விரைந்து அனுப்பப்படும் போராளிகள் இராணுவத்துடன் சமர்செய்து அவர்களை மீண்டும் முகாம்களுக்கு அனுப்புவார்கள்.

இவ்வாறாக படையினருடன் மோதிய போராளிகளுக்கு பல சந்தர்ப்பங்களில் தலைமைதாங்கி கிட்டு முன்னணியில் நின்று சண்டையிட்டார். யாழ்ப்பாணத்தில் இருந்த நாட்களில் இதை நான் பல தடவைகள் நேரடியாகவே கண்டேன். சமர்களத்துக்கு கிட்டு விரைந்துவந்த காட்சியை கண்ட சாதாரண மக்களின் பிரதிபலிப்பையும் நான் கண்டேன். இராணுவம் முன்னேறிவருவதற்கு கிட்டுவும் அவரது போராளிகளும் அனுமதிக்க மாட்டார்கள் என்று மக்கள் ஒரு பாதுகாப்பு நம்பிக்கை உணர்வைக் கொண்டிருந்தார்கள். சரியோ தவறோ அன்று விடுதலை புலிகளை தமிழ் மக்கள் தஙகளது பாதுகாவலர்களாக பார்த்தார்கள். நாளடைவில் விடுதலை புலிகள் மிகவும் பலம் பொருந்தியவர்களாக பெரிய இயக்கமாகியபோது அந்த நிலைவரம் மாறத் தொடங்கியது. ஆனால், அது வேறு கதை.


கடும்போக்குச் செயற்பாடு

கெடுதியில்லாத — அன்பிணக்கமான தோற்றத்தை உடையவராக இருந்தபோதிலும் கிட்டு உண்மையில் மிகவும் கடுமையான ஒரு பேர்வழி. அவசியம் என்று நினைத்த சந்தர்ப்பங்களில் எல்லாம் கடுமையான ஒரு ஆளாக தன்னால் செயற்படமுடியும் என்பதை அவர் பல தடவைகள் வெளிக்காட்டினார். கிட்டுவின் கீழ்தான் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற சகபாடி தீவிரவாத இயக்கங்கள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு அவை பலவீனப்படுத்தப்பட்டன. ரெலோ தலைவர் சிறீசபாரத்தினம் உட்பட பலர் கொல்லப்பட்டனர்.. சிறீயை கிட்டுவே தன்கையால் சுட்டுக் கொன்றார். புளொட் இயக்கமும் யாழ்ப்பாணத்தில் அதன் செயற்பாடுகளை கைவிடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் பெருமதிப்புக்குரியவராக விளங்கிய சென்.ஜோன்ஸ் கல்லூரி அதிபர் சீ.ஈ. ஆனந்தராஜா உட்பட பல குடிமக்களும் கொல்லப்பட்டனர். சகோதரத்துவ இயக்கங்கள் மீதான தாக்குதல்கள், குடிமக்கள் படுகொலை மற்றும் பல எதேச்சாதிகாரத்தனமான அடாவடி நடவடிக்கைகளுக்கு மத்தியிலும், யாழ்ப்பாண சனத்தொகையில் கணிசமான ஒரு பிரிவினர் மத்தியில் கிட்டு செல்வாக்குடையவராகவும் பொதுவில் விரும்பப்படுபவராகவும் விளங்கினார் என்பது கசப்பான உண்மையாகும்.

கொலை முயற்சி ஒன்றில் கிட்டு காயமடைந்து ஆபத்தான நிலையில் இருந்தபோது பலர் அதிர்ச்சியும் கவலையுமடைந்தார்கள். தமிழ்ப் புலிகள் (Tamil Tigers), இலங்கையின் கொடூரமான உள்நாட்டுப்போரில் ஒரு சிறுவர் போராளியா எனது கதை ( My story as a child soldier ) என்று நூல்களை எழுதிய நிரோமி டி சொய்சா, கிட்டு மீதான தாக்குதலைப்்பற்றி கேள்விப்பட்டபோது பாடசாலையில் தனது சக மாணவிகள் மத்தியில் நிலவிய சோகத்தைப் பற்றி எழுதியிருக்கிறார்.

குமார் அச்சகம்

கிட்டு என்ற கிருஷ்ணகுமார் வல்வெட்டித்துறையைச் சேரந்த சதாசிவம்பிள்ளை — இராஜலக்சுமி தம்பதியரின் இளைய பிள்ளையாவார். அவருக்கு ஒரு சகோதரரும் இரு சகோதரிகளும் இருந்தார்கள். தந்தையார் சதாசிவம்பிள்ளை குமார் அச்சகம் என்ற பெயரில் சிறிய அச்சகம் ஒன்றின் உரிமையாளர். சிறுவர் பராயத்தில் மகன் கிருஷ்ணகுமார் குமார் என்றே அழைக்கப்பட்டார். அதனால் அச்சகத்துக்கு குமார் அச்சகம் என்று பெயர் வைக்கப்பட்டது. ஊடகங்களில் தந்தையார் பெரும்பாலும் சதாசிவம் என்றே குறிப்பிடப்பட்டார். ஆனால் அது தவறு. அவரின் முழுப்பெயர் சதாசிவம்பிள்ளை. தந்தையாரின் மறைவுக்கு பிறகு அச்சகத்தை கிட்டுவின் சகோதரர் காந்திதாசன் நிருவகித்துவந்தார். காந்தி தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்துவருகிறார்.

கிட்டுவின் தாயார் குடும்பத்தலைவி. ஆனால், அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவர் பருத்தித்துறை தொகுதியின் இலங்கை தமிழரசு கட்சியினதும் பிறகு தமிழர் ஐக்கிய விடுதலை கூடடணியினதும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கே. துரைரத்தினத்தின் நெருங்கிய ஆதரவாளர். யாழ்ப்பாணம் கச்சேரிக்கு முன்னால் 1961 ஆம் ஆண்டில் தமிழரசு கட்சி நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டத்தில் இராஜலக்சுமி தீவிரமாகப் பங்கேற்றார். தத்தித்தத்தி நடந்த குழந்தை கிருஷனணகுமாரையும் அவர் தன்னுடன் யாழ்ப்பாண சத்தியாக்கிரகத்துக்கு கூட்டிச்சென்றார். பிற்காலத்தில் வல்வெட்டுத்துறை வாசிகள் அவரை ” கிட்டம்மா ” என்றே அழைத்தார்கள்.

கிருஷ்ணகுமார் பருத்தித்துறை வேலாயுதம் மகாவித்தியாலயத்திலும் பருத்தித்துறை சிதம்பரா கல்லூரியிலும் கல்வி கற்றார். நெல்லியடியில் இருந்த தனியார் கல்வி நிறுவனமான ‘சயன்ஸ் சென்டரிலும் அவர் ரியூசன் படித்தார். நெல்லியடியில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றே கிட்டுவை விடுதலை புலிகள் இயக்கத்தில் இணைவதற்கு தூண்டியது என்று அவரது முன்னாள் வகுப்புத்தோழர்கள் கூறுவார்கள்.

நன்கு அறியப்பட்டதை போன்று வல்வெட்டித்துறை தமிழ்த் தீவிரவாதத்தின் பாலர் பாடசாலையாக கருதப்படுகிறது. விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட பெரும் எண்ணிக்கையான தமிழ்த் தீவிரவாதிகள் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்களே. கள்ளக்கடத்தல் நடவடிக்கைகளை தடுப்பதற்கென்று கூறிக்கொண்டு இராணுவமுகாம் அமைக்கப்பட்ட 1953 ஆம் ஆண்டில் இருந்து அந்த நகரம் ” இராணுவ ஆக்கிரமிப்பின் ” கீழேயே இருந்து வந்தது. வல்வெடடித்துறையில் நீண்டகால இராணுவப் பிரசன்னமும் அதன் விளைவாக இராணுவத்தினருக்கும் நகரவாசிகளுக்கும் இடையில் தோன்றிய முரண்பாடும் பல வல்வெட்டித்துறை இளைஞர்கள் தீவிரவாதமயப்படுவதற்கு பிரதான காரணியாக இருந்தது.

பொலிஸ் அட்டூழியம்

இந்த தீவிரவாதமயப் போக்கிற்கு வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவரான கிட்டுவும் விதிவிலக்கானவராக இருக்கவில்லை. அது தவிர அவரது தாயாரும் ஆர்வமிக்க தமிழ்த் தேசியவாதியாக இருந்தார். ஆனால், நெல்லியடியில் பொலிசாரின் கொடூரத்தனச் சம்பவம் ஒன்றே கிட்டுவின் வாழ்வில் தீர்க்கமான தருணமாக அமைந்தது. வறிய தமிழ் சிறுவன் ஒருவன் பேக்கரி ஒன்றில் இருந்து ஒரு பாணைத் திருடிவிட்டான். இரு சிங்களப் பொலிசார் அந்த ” கள்வனை ” பொதுமக்கள் முன்னிலையில் கொடூரமாகத் தாக்கினர். கிருஷ்ணகுமார் பொலிசாருக்கு அண்மையாகச் சென்று தாக்குதலைத் தடுக்க முயற்சித்தார். ஆனால் அவரை அவ்வாறு செயாயவிடாமல் நண்பர்கள் தடுத்து விட்டனர்.

கிருஷ்ணகுமார் அந்த சம்பவத்தை நினைத்து ஆத்திரமடைந்தவராகவே இருந்தார். பிறகு அவர் எதிர்த்துப் போராடுவதற்காக விடுதலை புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார்.” காக்கியின்” அடக்குமுறையை எதிர்ப்பதற்கு அதுவே வழியாக அவருக்கு தெரிந்தது. விடுதலை புலிகள் இயக்கம் அப்போது சுமார் 40 — 50 உறுப்பினர்களுடனும் உதவியாளர்களுடனும் ஒரு தொடக்க நிலையில் இருந்தது. உமாமகேஸ்வரன் — பிரபாகரன் பிளவு அப்போது இடம் பெற்றிருக்கவில்லை.

விடுதலை புலிகள் இயக்கத்தில் கிருஷ்ணகுமார் இணைய விரும்பிய செய்தி அவர் சார்பில் பிரபாகரனுக்கு தெரியப்படுத்தப்பட்டது. சில வாரங்களுக்கு பிறகு கோயில் ஒனாறின் வீதியில் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. நீண்ட நேரம் சம்பாஷணை நடந்தது. கிருஷ்ணகுமாரின் குடும்பத்தை பிரபாகரன் அறிவார் என்பதுடன் தூரத்து உறவினரும் கூட.. மேலும் சில இரகசிய சந்திப்புக்கள் தொடர்ந்தன. இறுதியில் திருப்தியடைந்த பிரபாகரன் கிருஷ்ணகுமாரை விடுதலை புலிகள் இயக்கத்தின் ஒரு உதவியாளராகச் சேர்த்துக்கொண்டார். 1978 ஆம் ஆண்டில் இது நடந்தது.

வெங்கட்– வெங்கிட்டு — கிட்டு

18 வயதான கிருஷ்ணகுமாருக்கு வெங்கட் என்ற இயக்கப்பெயர் கொடுக்கப்பட்டது. இது சம்பாஷணைகளில் வெங்கிட்டுவாக மாறியது. பிறகு வெங்கிட்டு சுருங்கி கிட்டுவாகிப் போனது. அதற்கு பிறகு விடுதலை புலிகளில் அவர் இருந்த எஞ்சியகாலம் முழுவதும் கிருஷ்ணகுமார் கிட்டுவாகவே அறியப்பட்டார். வருடங்கள் செல்ல அவர் தலைமைத்துவ நிலையை அடைந்ததும் அன்பும் மதிப்பும் காரணமாக ” கிட்டர் ” என்று அழைக்கப்படலானார். கிட்டு கிட்டுமாமா என்றும கிட்டு அண்ணர் என்றும் அழைக்கப்பட்டார்.

கிட்டு உதவியாளராக விடுதலை புலிகள் இயக்கத்தில் இணைந்த பிறகு வல்வெட்டித்துறையில் உள்ள தனது வீட்டிலேயே இருந்தார். சுவையாகச் சமையல் செய்வதற்கு பேர்போன அவரது தாயாரின் உணவு வகைகளை நன்றாக அனுபவித்துச் சுவைத்தார். ஆனால், அவருக்கு விடுதலை புலிகளுடன் ஏற்பட்ட தொடர்பை பாதுகாப்பு அதிகாரிகள் மோப்பம் பிடித்துவிட்டார்கள். ஒருநாள் மதியநேரம் கிட்டு தனது உள்ளங்கியுடன் குளித்துக் கொண்டிருந்தபோது பாதுகாப்பு படைகள் அவரது வீட்டைச் சுற்றி வளைத்தார்கள். உள்ளங்கியுடனேயே ஓடி அவர் தப்பிவிட்டார். ஒரு நண்பரிடம் இருந்து ஒரு சேர்ட்டையும் சாரத்தையும் வாங்கி அணிந்துகொண்டு கிட்டு வன்னியில் விடுதலை புலிகளினால் நடத்தப்பட்ட பண்ணைக்கு சென்றார்.

அந்த பண்ணையில் தங்கியிருந்து கிட்டு ஆயுதப் பயிற்சியைப் பெற்றார். கிட்டு மீது தனிப்பட்ட அக்கறை எடுத்துக்கொண்ட பிரபாகரன் அவரது ஆயுதப்பயிற்சியை தானே மேற்பார்வை செய்ததாக கூறப்படுகிறது. அதற்கு பிறகு கிட்டு முழுநிறைவான விடுதலை புலிகள் இயக்க உறுப்பினராக்கப்பட்டார். ஒரு குறுகிய காலம் கிட்டு மட்டக்களப்பின் படுவான்கரை பகுதியில் இயங்கினார். இயக்கம் உமாமகேஸ்வரன் பிரிவு என்றும் பிரபாகரன் பிரிவு என்றும் பிளவடைந்தபோது கிட்டு பிரபாகரனையே ஆதரித்தார். இறுதிவரை அவர் பிரபாகரனுக்கு விசுவாசியாகவே இருந்தார்.

பிறகு யாழ்ப்பாணத்துக்கு நகர்ந்த கிட்டு சீலன் என்றும் ஆசீர் என்றும் அறியப்பட்ட சார்ள்ஸ் அந்தனியின் தலைமையின் கீழ் செயற்பட்டார். 1982 ஆம் ஆண்டில் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் மீது விடுதலை புலிகள் நடத்திய தாக்குதல் உட்பட பல தாக்குதல் நடவடிக்கைகளில் கிட்டு பங்கேற்றார்.


உமையாள்புரம் தாக்குதல்

ஆனால், 1983 ஏப்ரிலில்தான் கிடடு சமரக்களத்தில் தனது இராணுவ ஆற்றலை வெளிப்படுத்தினார். பரந்தனுக்கு அண்மையாக உமையாள்புரத்தில் இராணுவ வாகனத் தொடரணி ஒன்றை மறைந்திருந்து தாக்குவதற்கு விடுதலை புலிகள் திட்டமிட்டு அந்த வாகனங்கள் வரும்வரை காத்திருந்தனர். ஆனால் ஏதோ தவறு நடந்து முன்கூட்டியே புதைத்து வைக்கப்பட்ட கண்ணிவெடிகள் வெடிக்கவில்லை. அப்போது இராணுவ வாகனங்களுக்கு முன்னால் நின்று கிட்டு தனது ஜி 3 ரைபிளினால் சரமாரியாகச் சுட்டார். சாரதி காயமடையவே இராணுவ வாகனம் புரண்டது. கிட்டுவின் திறமைக்கும் துணிச்சலுக்கும் பெரும் பாராட்டுக் கிடைத்தது. அந்த சம்பவத்தை அடுத்து அவர் ஒரு பிரதி தளபதியாக்கப்பட்டார்.

1983 மே மாதம் உள்ளூராட்சி தேர்தல்கள் நடைபெற்றபோது அதை தமிழ் மக்கள் பகிஷ்கரிக்கவேண்டும் என்று விடுதலை புலிகள் அழைப்பு விடுத்தனர். கந்தர்மடத்தில் ஒரு வாக்களிப்பு நிலையத்தை தாக்கிய விடுதலை புலிகள் அங்கு கடமையில் இருந்த படைவீரர் ஒருவரைக் கொன்றனர். 1983 ஜூலையில் திருநெல்வேலியில் இராணுவ ரோந்து வாகனங்கள் மீது விடுதலை புலிகள் நடத்திய கெரில்லாத் தாக்குதலில் 13 படைவீரர்கள் கொல்லப்பட்டனர். அந்த இரு தாக்குதல்களிலும் கிட்டு துடிப்புடன் பங்கேற்றார். திருநெல்வேலி தாக்குதல் நாடுபூராவும் தமிழர்களுக்கு எதிரான இனவன்செயலை மூளூவைத்தது. அந்த வன்செயல் ” கறுப்பு ஜூலை ” என்று வர்ணிக்கப்படுகிறது.

உத்தரப் பிரதேசத்தில் பயிற்சி

1983 ஜூலைக்கு பிறகு தமிழ்த் தேசிய அரசியல் பாரிய மாறுதலுக்கு உள்ளானது. இந்தியா இலங்கை விவகாரங்களில் பெரியளவில் தலையிட்டது. இந்திய மண்ணில் தமிழ்ப் போராளிகளுக்கு ஆயுதப்பயிற்சிகள் வழங்கப்பட்டன. விடுதலை புலிகளின் முதலாவது அணியினருக்கு வடஇந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் பயிற்சியளிக்கப்பட்டது. அந்த அணியினருக்கு பொன்னம்மான் என்று அறியப்பட்ட யோகரத்தினம் குகன் பொறுப்பாக இருந்தார். கிட்டு அவருக்கு அடுத்ததாக பொறுப்பில் இருந்தார்.

பண்டிதர் என்ற ரவீந்தின்

1984 ஆம் ஆண்டில் விடுதலை புலிகளின் கட்டளை தலைமைத்துவம் மீண்டும் மறுசீரமைக்கப்பட்டது. இலங்கையில் விடுதலை புலிகளின் முழுமையான தளபதியாக பண்டிதர் என்ற ரவீந்திரன் நியமிக்கப்பட்டார். பண்டிதர் யாழ்ப்பாணத்தில் இருந்து செயற்பட்டார். பண்டிதரின் கழ் யாழ்ப்பாணத்தில் விடுதலை புலிகளின் இராணுவப்பிரிவின் தளபதியாக கிட்டு இயங்கினார். பண்டிதரின் கீழ் யாழ்ப்பாணத்தில் அரசியல் பிரிவின் தலைவராக திலீபன் என்ற இராசையா பார்த்திபன் செயற்பட்டார்.

பண்டிதர் என்ற ரவீந்திரன் 1985 ஜனவரியில் அச்சுவேலியில் ஆயுதப் படைகளினால் கொல்லப்பட்டார். அதையடுத்து கிட்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் விடுதலை புலிகளின் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார். இப்போது அவர் இராணுவத் தளபதியாக யாழ்ப்பாணம் முழுவதற்கும் பொறுப்பாக இருந்தார். கிட்டுவின் தலைமைத்துவத்தின் கீழ் விடுதலை புலிகள் யாழ்ப்பாணப் பிராந்தியத்தை தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். இது ஏன், எவ்வாறு நடந்தது என்பதை இந்த கட்டுரையின் இரண்டாம் பாகத்தில் விரிவாகப் பார்ப்போம்.

D.B.S.Jeyaraj can be reached at dbsjeyaraj@yahoo.com

ஆங்கில மூலம்: டி. பி. எஸ். ஜெயராஜ் (Daily Mirror)

தமிழில்: வீரகத்தி தனபாலசிங்கம்

நன்றி: வீரகேசரி

************************************************************************************************