தமிழரசு கட்சி மட்டக்களப்பில் பெற்ற பெருவெற்றியும் யாழ்ப்பாணத்தில் அடைந்த படுதோல்வியும்

டி.பி.எஸ். ஜெயராஜ்

” மட்டக்களப்பை மாத்திரமே என்னால் கைப்பற்ற முடியாமல் போய்விட்டது.”
பாராளுமன்றத்தில் நவம்பர் 21 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராஜபுத்திரன் இராசமாணிக்கத்தை புன்முறுவலுடன் வரவேற்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கூறிய வார்த்தைகள் இவை.

பத்தாவது பாராளுமன்றத்தின் அங்குரார்ப்பணக் கூட்டத்தின்போது பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஒன்றறக்கலந்து ஜனாதிபதி அன்னியோன்யமாக உரையாடினார். நவம்பர் 14 பாராளுமன்ற தேர்தலைப் பற்றியே சாணக்கியனிடம் அவர் அவ்வாறு மறைபொருளாக கூறினார். மட்டக்களப்பை தவிர இலங்கையின் சகல தேர்தல் மாவட்டங்களிலும் அநுர குமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி. / தேசிய மக்கள் சக்தி முதலாவதாக வந்தது. அந்த கிழக்கு மாவட்டத்தை இலங்கை தமிழரசு கட்சி கைப்பற்றியது. மட்டக்களப்பின் ஐந்து பாராளுமன்ற ஆசனங்களில் மூன்று அந்த கட்சிக்கு கிடைத்தது. தேசிய மக்கள் சக்தியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தலா ஒவ்வொரு ஆசனத்தைப் பெற்றுக்கொண்டன.

கிழக்கில் தமிழரசு கட்சி பெற்ற வெற்றிக்கு பிரதான காரணகர்த்தா சாணக்கியன் என்று பிரபல்யமாக அறியப்படும் இராசமாணிக்கமே ஆவார். அவரே மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசு கட்சியின் தேர்தல் பிரசாரங்களை திட்டமிட்டு வழிநடத்தினார். சில தினங்களுக்கு பிறகு பாராளுமன்றத்தில் உரையாற்றிய சாணக்கியன் நாடுபூராவும் மக்கள் வாக்களித்த முறைக்கு புறம்பாக வாக்களித்தமைக்காக மட்டக்களப்பு மக்களை பாராட்டினார். சிறியதாக இருந்தாலும் கூட, தமிழரசு கட்சியின் எதிரலை நாட்டின் ஏனைய பகுதிகள் அனுபவித்த தேசிய மக்கள் சக்திச் சுனாமிக்கு பெருமளவுக்கு நிகரானது என்று சாணக்கியன் கூறினார்.

மட்டக்களப்பில் தமிழரசு கட்சியின் வெற்றியின் தாக்கம் அந்த மாவட்டத்தின் எல்லைகளுக்கு அப்பாலும் கடந்து சென்றது. தமிழர்களை அதிகப்பெரும்பானமையாகக் கொண்ட வடமாகாணத்தில் தமிழரசு கட்சியின் தேர்தல் செயற்பாடு நன்றாக அமையவில்லை. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தமிழரசு கட்சி ஒரேயொரு ஆசனத்தையே பெறக்கூடியதாக இருந்தது. அது கூட கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து சிவஞானம் சிறீதரன் பெற்ற பெருமளவு விருப்பு வாக்குகள் காரணமாகவே சாத்தியமானது. கிளிநொச்சியை கடந்த பதினைந்து வருடங்களாக தனது செல்வாக்கு வலயமாக பேணிக்காத்து வருகிறார்.

தமிழரசு கட்சியின் வேறு எந்த வேட்பாளரினாலுமே பாராளுமன்றத்துக்கு தெரிவாவதற்கு போதுமான விருப்பு வாக்குகளைப் பெறமுடியாமல் போய்விட்டது. தமிழரசு கட்சியின் அச்சாணியாக விளங்கிய நாடு நன்கறிந்த பேச்சாளர் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரனால் வெற்றி பெறமுடியவில்லை. மாறாக யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் முதலாவதாக வந்த தேசிய மக்கள் சக்தி ஆறு ஆசனங்களில் மூன்று ஆசனங்களை வென்றெடுத்தது. தெரிவு செய்யப்பட்ட மூவருமே முதற்தடவையாக பாராளுமன்றத்தில் போட்டியிட்டவர்கள்.

அடுத்த மாவட்டமான வன்னியிலும் அதே நிலைதான். வடக்கின் பிரதான நிலப்பரப்பில் முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் மாவட்டம் ஆறு பாராளுமன்ற ஆசனங்களைக் கொண்டது. இந்த தேர்தலில் தமிழரசு கட்சிக்கு அங்கு ஒரேயொரு ஆசனம் மாத்திரமே கிடைத்தது. அந்த மாவட்டத்திலும் தேசிய மக்கள் சக்தி முதலாவதாக வந்து இரு ஆசனங்களை தனதாக்கிக் கொண்டது. தெரிவு செய்யப்பட்ட இரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் புதியவர்கள். இவவாறாக, பிரதான தமிழ்த் தேசியவாதக் கட்சி தமிழர்களைப் பெரும்பானமையாகக் கொண்ட வடமாகாணத்தில் உள்ள 12 ஆசனங்களில் இரண்டு ஆசனங்களை மாத்திரமே பெற்றது. வடமாகாணத்தில் முதலாவதாக வந்த தேசிய மக்கள் சக்தி 12 ஆசனங்களில் ஐந்து ஆசனங்களைக் கைப்பற்றியது.


கிழக்கு மாகாணம்

கிழக்கு மாகாணத்தில் தமிழரசு கட்சி வெற்றி பெறாமல் இருந்திருந்தால் வடக்கில் அடைந்த படுதோல்வி கட்சியின் தேர்தல் வாய்ப்புக்களை பெருமளவுக்கு குன்றச் செய்திருக்கும். மட்டக்களப்பில் மூன்று ஆசனங்களை கைப்பற்றிய தமிழரசு கட்சி திருகோணமலை மற்றும் அம்பாறை/ திகாமடுல்ல மாவட்டங்களில் ஒவ்வொரு ஆசனத்தைப் பெற்றுக்கொண்டது. இவ்வாறாக கிழக்கு மாகாணத்தில் தமிழரசு கட்சிக்கு மொத்தம் ஐந்து ஆசனங்கள் கிடைத்தன. மறுபுறத்தில், கிழக்கில் தேசிய மக்கள் சக்தியில் இருந்து இரு தமிழ் உறுப்பினர்களே தெரிவாகினர். எல்லாமாக அந்த மாகாணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள். அவர்களில் ஐவர் சிங்களவர்கள்.இருவர் தமிழர்கள்.

கிழக்கில் ஐந்து ஆசனங்களைப் பெற்றதால் தமிழரசு கட்சியில் இருந்து தெரிவான மொத்த பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏழாக உயரக்கூடியதாக இருந்தது. ஒரு தேசிய பட்டியல் ஆசனமும் தமிழரசு கட்சிக்கு கிடைத்தது. அதன் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை எட்டாகியது. இதன் விளைவாக பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்திக்கு அடுத்ததாக மூன்றாவது பெரிய கட்சியாக விளங்குகிறது.

கூறுகளாகப் பிரிதல்

2024 பாராளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தபோது தமிளர்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தின் எதிர்காலம் குறித்து இலங்கை தமிழ் அரசியல் சமுதாயத்தில் நிலைவரங்களை ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கும் பிரிவினர் மத்தியில் பெருமளவு கவலை காணப்பட்டது. வடக்கில் 12 ஆசனங்களுக்கும் கிழக்கில் 16 ஆசனங்களுக்கும் பெருவாரியான தமிழ்க் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் போட்டியிட்டதால் தமிழர்களின் வாக்குகள் பெருமளவுக்கு கூறுபடுவதற்கான ஆபத்து தெரிந்தது. இரு மாகாணங்களிலும் உள்ள வாக்காளர்களின் தொகை 14 –16 தமிழ் உறுப்பினர்கள் மாத்திரமே தெரிவு செய்யப்படக்கூடியதாக இருக்கும் என்பதைக் காட்டியது. அதனால் எதிர்பார்க்கப்பட்ட வாக்குகள் சிதறல் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை கடுமையான அளவுக்கு குறைத்திருக்கக் கூடும்.

மேலும் முக்கியமாக பல்வேறு பல்வேறு கட்சிகள், குழுக்களுக்கிடையில் ஆசனங்கள் சிதறுப்பட்டு ஒவ்வொரு கட்சியும் ஒன்று அல்லது இரண்டு ஆசனங்களைப் பெறக்கூடிய ஆபத்தும் இருந்தது. இதுவே எந்தவொரு தமிழ்த் தேசியக்கட்சியோ அல்லது கூட்டணியோ ஒரு கணிசமானளவவுக்கு திரளான ஆசனங்களைப் பெறமுடியாமல் போனதற்கான காரணமாக இருந்திருக்கிறது.

திரளான உறுப்பினர்கள்

வடக்கிலும் கிழக்கிலும் தமிழ்த் தேசியவாத கட்சி ஒன்றினால் அல்லது கூட்டணியினால் பெரும்படியான எண்ணிக்கை ஆசனங்கள் கைப்பற்றப்படுவது தமிழ் அரசியலில் அடிக்கடி காணப்படக்கூடிய ஒரு அம்சமாக இருந்து வந்துள்ளது. கடந்த காலத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் தமிழ் காங்கிரஸ், தமிழரசு கட்சி, தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அவ்வாறு செய்திருக்கின்றன. கணிசமான ஒரு குழுமமாக பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் இருந்தது மேம்பட்ட நியாயப்பாட்டையும் பெரிய செல்வாக்கையும் கொடுத்தது.

2004 ஆம் ஆண்டில் தமிழரசு, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(ஈ.பி.ஆர்.எல். எவ்.), தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் 22 ஆசனங்களைக் கொண்டிருந்தது. 2020 ஆம் ஆண்டில் தமிழரசு கட்சி, ரெலோ, தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட் ) ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் பத்து ஆசனங்களை மாத்திரமே பெற்றது. பிறகு தமிழரசு கட்சிக்கு எதிராக கங்கணம் கட்டிக்கொண்டு ரெலோவும் புளொட்டும் விலகிச் சென்றதை அடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு பிளவடைந்தது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டபோது அந்த பத்து ஆசனங்களில் ஆறு ஆசனங்கள் மாத்திரம் தமிழரசு கட்சியிடம் இருந்தன. ரெலோவுக்கு மூன்று ஆசனங்களும் புளொட்டுக்கு ஒரு ஆசனமும் இருந்தது.

1949 டிசம்பரில் தொடங்கப்பட்ட தமிழரசு கட்சி இலங்கையில் பிரதான தமிழ்த் தேசியவாத கட்சியாக கருதப்படுகிறது. பரபரப்பானதும் பயனுடையதுமான அதன் வரலாற்றுக்கு புறம்பாக, அண்மைக் காலத்தில் தமிழரசு கட்சி வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களை பெரும்பான்மையினராகக் கொண்ட சகல தேர்தல் மாவட்டங்களிலும் துடிப்புடன் செயற்படுகின்ற கிளைகளைக் கொண்ட ஒரேயொரு தமிழ்க் கட்சியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. மேலும், 2020 தேர்தலில் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் ( யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை/ திகாமடுல்ல) பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவான ஒரேயொரு தமிழ்க் கட்சியாகவும் தமிழரசு கட்சியே விளங்கியது.

தமிழரசுக்கு எதிரான பிரசாரம்

இத்தகைய சூழ்நிலைகளின் கீழ், 2024 தேர்தலில் பெரும் எண்ணிக்கையான ஆசனங்களை தமிழரசு கட்சியினால் கைப்பற்றக்கூடியதாக இருக்குமா என்ற பெரும் கவலை காணப்பட்டது. கட்சிக்குள் நிலவிய விரும்பத்தகாத ஒரு பூசல் அந்த கவலையை மேலும் அதிகரித்தது. போட்டி தமிழ்க்கட்சிகள், புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள சக்திகள், தமிழ் ஊடகங்களில் ( அச்சு ஊடகங்களும் இலத்திரனியல் ஊடகங்களும் ) சில பிரிவுகளும் சமூக ஊடகங்களும் சேர்ந்து தமிழரசு கட்சிக்கு எதிரான தீவிர பிரசாரத்தை முன்னெடுத்தன. தமிழரசு கட்சியை மலினப்படுத்துவதற்கான இந்த முயற்சிகளுக்கு கட்சிக்குள் இருந்த சில துரோகிகளின் செயற்பாடுகளும் உதவின. அவர்களில் சிலர் போட்டிக் கட்சிகளில் இணைந்துகொண்டார்கள். வேறு சிலர் சுயேச்சைக் குழுக்களை அமைத்தார்கள். தமிழரசு கட்சிக்குள் ஒரு பிரிவினரின் நயவஞ்சகத்தனமான சதிச்செயல்கள் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தின.

மூன்றாவது பெரிய கட்சி

இத்தகைய பின்புலத்திலேயே தமிழரசு கட்சி எட்டு ஆசனங்களை வென்று வடக்கிலும் கிழக்கிலும் உள்ள ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் பிரதிநிதித்துவத்துடன் பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக வந்தது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் பிரதான அரசியல் என்று தமிழரசு தன்னை மீண்டும் நிரூபித்தது. எவ்வாறிருந்தாலும், வடக்கில் அதன் தேர்தல் செயற்பாடு ஏமாற்றம் தருவதாகவும் கிழக்கில் பாராட்டக்கூடியதாகவும் இருந்தது. இந்த நிலைமை எவ்வாறு ஏற்பட்டது?

திருகோணமலை மாவடடம்

பல்லின மக்கள் வாழ்கின்ற திருகோணமலை மாவட்டத்தை முதலில் பார்ப்போம். இந்த கிழக்கு மாவட்டத்தில் முஸ்லிம்கள் 40 சதவீதமாகவும் 32 சதவீதமாகவும் 26 சதவீதமாகவும் வாழ்கிறார்கள் இலங்கையில் மாவட்ட அடிப்படையிலான விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட வேளையில் இருந்து திருகோணமலை மாவட்டம் போனஸ் ஆசனம் உட்பட நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்து வருகிறது. 1989, 2000, 2004 ஆம் ஆண்டுகளை தவிர, திருகோணமலை மாவட்டம் தனியொரு தமிழ் உறூப்பினரை பாராளுமன்றத்துக்கு தெரவு செய்து வந்திருக்கிறது. 1989 , 2004 ஆண்டுகளில் அந்த மாவட்டம் இரு தமிழ் உறுப்பினர்களை தெரிவு செய்தது.2000 ஆம் ஆண்டில் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரும் தெரிவாகவில்லை.

முதுபெரும் தமிழ் அரசியல் தலைவர் இராஜவரேதயம் சம்பந்தன் திருகோணமலை மாவட்டத்தை பல தசாப்தங்களாக பிரதிநிதித்துவம் செய்துவந்தார். வயது முதிர்ந்து நோய்வாய்ப்பட்ட நிலையில் அவர் சில மாதங்களுக்கு முன்னர் காலமானார். பாராளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தபோது திருகோணமலை மாவட்டத்தின் தமிழ்ப் பிரதிநிதித்துவம் தொடர்பான விவகாரம் பிரச்சினைக்குரியதாக மாறியது. 2020 பாராளுமன்ற தேர்தலில் 21, 442 விருப்பு வாக்குகளை மாத்திரமே பெற்ற சம்பந்தன் ஒருவாறாக பாராளுமன்றத்துக்கு தெரிவாகக் கூடியதாக இருந்தது.

சம்பந்தனின் மரணத்துக்கு பிறகு பாராளுமன்றத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவர் கதிரவேலு சண்முகம் குகதாசன் நிரப்பினார். 2020 தேர்தலில் போட்டியிட்ட குகதாசன் 15, 770 விருப்பு வாக்குகளைப் பெற்று சம்பந்தனுக்கு அடுத்ததாக இரணடாவதாக வந்தார். அந்த தேர்தலில் தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்தின் கீழ் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராக சம்பந்தன் போட்டியிட்டார். அப்போது கூட்டமைப்பு தமிழரசு ட்சி, ரெலோ, புளொட் ஆகிய கட்சிகளைை உள்ளடக்கியதாக இருந்தது. இப்போது கூட்டமைப்பு பிவுபட்டு தமிழரசு கட்சி தனியாகப் போனது. 2020 ஆம் ஆண்டில் சம்பந்தன் பெற்ற வாக்குகள் வீழ்ச்சி கண்டிருந்ததை அடிப்படையாகக் கொண்டு நோக்கியபோது ஒப்பீடடளவில் ” புதியவரான ” குகதாசனை பிரதான வேட்பாளராகக் கொண்டு தமிழரசு கட்சி தனியாகப் போட்டியிட்டால் அவரால் போதுமான வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது.

சம்பந்தனின் மூத்த மகன் சஞ்சீவனுக்கும் குகதாசனுக்கும் இடையிலான ” பனிப்போரும்” விவகாரத்தை மேலும் சிக்கலாக்கியது. திருகோணமலையில் சம்பந்தனின் இறுதிச்சடங்கில் கூட அந்த கசப்புணர்வைக் காணக்கூடியதாக இருந்தது. சம்பந்தனின் குடும்பம் குகதாசனை முகம் சுளித்தே வரவேற்றது. சம்பந்தனின் இறுதி நாட்களில் அவருக்கும் குகதாசனுக்கும் இடையிலான உறவுகளும் கூட சீர்குலைந்திருந்தன. இத்தகைய சூழ்நிலைகளின் விளைவாக குகதாசனை எதிர்த்த சம்பந்தனின் விசுவாசிகள் தேர்தல் நேரத்தில் தமிழரசு கட்சியில் இருந்து தங்களை தூரவிலக்கிக் கொண்டனர்.

தமிழ் வாக்குகள் சிதறுப்படுவது இன்னொரு பிரச்சினை. புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ்., தமிழ் தேசியக்கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகிய ஐந்து தமிழ் கட்சிகள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்ற பெயரில் சங்கு சின்னத்தில் போட்டியிட்டன. தமிழ் காங்கிரஸ், ஈ.பி.டி.பி. மற்றும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் போன்ற கட்சிகளும் களத்தில் இறங்கியிருந்த நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான தமிழ் வாக்குகள் இந்த கட்சிகள் மத்தியில் சிதறுப்படுவதற்கான சாத்தியம் பலமானதாக இருந்தது. இதன் விளைவாக திருகோணமலையில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் இல்லாமல் போயிருக்கும்.

ஆயர் நொயல் இம்மானுவேல்

இந்த சிக்கலான நிலைவரத்துக்கு திருகோணமலையின் றோமன் கத்தோலிக்க ஆயர் அதிவண. கிறிஸ்ரியன் நொயல் இம்மானுவேலின் நல்லெண்ணத் தலையீட்டின் மூலமாக தீர்வு காணப்பட்டது. திருகோணமலை மண்ணின் மைந்தனான ஆயர் இம்மானுவேல் ஆயர் இல்லத்தில் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களின் தொடர்ச்சியான பல பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்தார். மாவட்டத்தில் இருந்து ஒரு தமிழ் உறுப்பினர் பாராளுமன்றத்துக்கு தெரிவாக வேண்டுமானால், ஐக்கியமாகச் செயற்படவேண்டியதன் அவசியத்தை அரசியல்வாதிகளுக்கு உணர்த்தி அவர்களை ஆயர் வழிக்குக் கொண்டுவந்தார்.

இந்த முயற்சிகளின் விளைவாக தமிழரசு கட்சிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இடையே ஒரு கூட்டு ஏற்பட்டது. கூடடணியின் வேட்பாளர்கள் தமிழரசு கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டனர். குகதாசன், கே. ஜீவரூபன், கே. கோகுலராஜ் மற்றும் கே. சுந்தரலிங்கம் ஆகியோர் தமிழரசு கட்சியின் சார்பிலான வேட்பாளர்களாகவும் ரி.துஷ்யந்தன் ( ரெலோ), ஏ. ஜதீந்திரா (புளொட் ) மற்றும் கே. தேவகடாட்சம் ( தமிழ் தேசிய கட்சி ) ஆகியோர் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பிலான வேட்பாளர்களாகவும் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டனர். கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தில் சில மாதங்கள் மாத்திரம் உறுப்பினராக இருந்த குகதாசன் தலைமை வேட்பாளர்

தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது குகதாசன் வெற்றி பெறாமல் போகக்கூடும் என்று பெருமளவில் ஊகங்கள் கிளம்பின. ரெலோவின் வேட்பாளரான திரகரத்தினம் துஷ்யந்தனும் தமிழரசு கட்சியின் வேட்பாளரான கந்தசாமி ஜீவரூபனுமே வெற்றிபெறக்கூடிய வாய்ப்பைக் கொண்டவர்கள் என்று பேசப்பட்டது. சட்டத்தரணியான துஷ்யந்தன் திருக்கோணேஸ்வரம் கோவிலின் தர்மகர்த்தா சபையின் தலைவர். ஜீவரூபன் ஒரு பிரபல்யமான பாடசாலை அதிபர்.

சண்குகம் குகதாசன்

ஆனால்,இறுதியில் 22, 779 விருப்பு வாக்குகளைப் பெற்று சண்முகம் குகதாசனே வெற்றி பெற்றார். இது சம்பந்தன் 2020 தேர்தலில் பெற்ற வாக்குகளை விடவும் அதிகமானதாகும் துஷ்யந்தனும் ஜீவரூபனும் இரண்டாவதாகவும் மூன்றாவதாகவும் முறையே 9, 473 விருப்பு வாக்குகளையும் 8, 352 விருப்பு வாக்குகளையும் பெற்றனர்.

2024 தேர்தலில் திருகோணமலை மாவட்டம் இன்னொரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. தேசிய மக்கள் சக்தியின் அருண் ஹேமச்சந்திர 38, 368 விருப்பு வாக்குகளைப் பெற்றார். தமிழ் வாக்குகளுக்கு புறம்பாக சிங்களவர்களினதும் முஸ்லிம்களினதும் வாக்குகளையும் பெற்ற ஹேமச்சந்திர வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். கண்டி திருத்துவக் கல்லூரியின் பழையாமாணவரான அவர் தமிழ், சிங்களம் , ஆங்கிலம் மூன்று மொழிகளிலும் கைதேர்ந்தவர்.

அம்பாறை / திகாமடுல்ல

திருகோணமலை மாவட்டத்தில் காணப்பட்ட தமிழரசு கட்சி — ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஐக்கியம் அம்பாறை / திகாமடுல்ல மாவட்டத்தில் இடறுப்பட்டுவிட்டது. பல்லின மாவட்டமான அம்பாறையில் முஸ்லிம்கள் 43 சதவீதமாகவும் சிங்களவர்கள் 38 சதவீதமாகவும் தமிழர்கள் 17 சதவீதமாகவும் வாழ்கிறார்கள்.அந்த மாவட்டம் ஏழு உறுப்பினர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்புகிறது. கடந்த கால வாக்களிப்பு பாங்கின் பிரகாரம் அம்பாறை தனியொரு உறுப்பினரையே தெரிவு செய்து வந்திருக்கிறது. ஆனால், 1994, 2020 தேர்தல்களில் தமிழர் எவரும் பாராளுமன்றத்துக்கு தெரிவாகவில்லை.

2020 தேர்தலில் விடுதலை புலிகளின் முன்னாள் கிழக்கு தளபதி கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் வேட்பாளர்கள் குழுவொன்றை அம்பாறை மாவட்டத்தில் களத்தில் இறக்கினார். கப்பல் சின்னத்தில் அகில இலங்கை தமிழர் மகாசபையின் வேட்பாளர்களாக அவர்கள் போட்டியிட்டார்கள். அதன் விளைவாக தமிழ் வாக்குகள் ஒரு பெரியளவில் பிளவடைந்தன. மாவட்டத்தில் தமிழர்கள் வெறுமனே 17 சதவீதத்தினராக மாத்திரமே இருப்பதால் பாராளுமன்றத்துக்கு ஒரு உறுப்பினரை தெரிவு செய்வதற்கு தனியொரு தமிழ்க்கட்சிக்கு தமிழர்கள் அமோகமாக வாக்களிக்க வேண்டியது அவசியமாக இருந்தது.

ஆனால், கருணாவின் கட்சி பெருமளவில் வாக்குகளை எடுத்ததால், தமிழரசு கட்சி பெற்ற பாரம்பரியமான தமிழ் வாக்குகள் குறைந்து விட்டன. அதன் விளைவாக தமிழ் உறுப்பினர் எவரும் தெரிவாகவில்லை.அதனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸை சேர்ந்த நான்கு முஸ்லிம் உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகினர்.

தமிழரசு கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் கிடைத்திருக்காவிட்டால் பாராளுமன்றத்தில் அம்பாறை மாவட்டத்துக்கு தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் போயிருக்கும். யாழ்ப்பாண மாவட்டத்தில் தோல்வியடைந்த தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தேசியப்பட்டியல் உறுப்பினர் நியமனத்தை பெறுவதற்கு அப்போது முயற்சித்தபோதிலும், கட்சியின் மும்மூர்த்திகளாக விளங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுவின் தலைவர் சம்பந்தனும் பேச்சாளர் சுமந்திரனும் முன்னாள் பொதுச் செயலாளர் கே. துரைராஜசிங்கமும் அதை முறியடித்து விட்டனர். ஒரு தேர்தல் சதி முயற்சி, அம்பாறை மாவட்டத்தில் தோல்விகண்ட தமிழரசு கட்சியின் வேட்பாளர் அந்த மாவட்டத்தில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக தேசியப்பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

2020 ஆம் ஆண்டின் அனுபவத்தின் அடிப்படையில் நோக்கியபோது 2024 தேர்தலில் அம்பாறையில் தமிழ் வேட்பாளர்களை களமிறக்குவது என்பது ஒரு உணர்ச்சிபூர்வமான விவகாரமாக மாறிவிட்டது. பாராளுமன்றத்துக்கு ஒரு உறுப்பினரை தெரிவு செய்வதற்கு பல தமிழ்க் கட்சிகளின் ஆதரவுடன் ஒரு ஐக்கிய வேட்பாளரை நிறுத்தவேண்டியது மிகவும் அவசியமானதாகியது. திருகோணமலையில் தமிழரசு கட்சியும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் ஒன்றாகப் போட்டியிட்டதால் அதே போன்று அம்பாறையிலும் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. திருகோணமலையில் வேட்பாளர்கள் பட்டியல் தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்தின் கீழ் களமிறக்கப்பட்டிருந்ததால், அம்பாறையில் பொதுவேட்பாளர் தங்களது சங்கு சின்னத்தின் கீழ் போட்டியிடவேண்டும என்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கோரியது.

தமிழரசு கட்சி அதற்கு இணங்க மறுத்துவிட்டது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு வீட்டு சின்னத்தின் கீழேயே போட்டியிட வேண்டும் என்று பிரதான தமிழ்க் கட்சியான தமிழரசு கட்சி விரும்பியது. அதற்கு இணங்க மறுத்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அப்பட்டமான சுயநலத்துடன் தமிழரசு கட்சி செயற்படுவதாக குற்றஞ்சாட்டி பிரசாரம் செய்தது. தமிழரசு கட்சியின் நிலைப்பாடு காரணமாக அம்பாறை மாவட்டத்தில் தமிழர் ஒருவர் பாராளுமன்றத்துக்கு தெரிவாகாமல் போகக்கூடும் என்று தமிழ் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நெருக்குதல்களுக்கு மத்தியிலும் தமிழரசு கட்சி விட்டுக் கொடுக்கவில்லை. அதனால் திருகோணமலை மாவட்டத்தை போலன்றி அம்பாறையில் தமிழரசு கட்சியும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் எதிரெதிராகப் போட்டியிட்டன.


கவிந்திரன் கோடீஸ்வரன்

தேர்தல் நடைபெற்றபோது அம்பாறையில் தமிழர் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படமாட்டார் என்றே பலரும் நினைத்தனர். மேலும் தமிழரசு கட்சியை விடவும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கூடுதலான வாக்குகளை பெறும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த ஊகங்களை எல்லாம் பொய்யாக்கி அம்பாறை மாவட்டத் தமிழர்கள் தங்களது விவேகத்தை நிரூபித்தனர். அம்பாறையில் தமிழர்களின் பெருமளவு வாக்குகள் ( 33, 532 வாக்குகள் ) தமிழரசு கட்சிக்கே கிடைத்தன. கவீந்திரன் கோடீஸ்வரன் 11, 962 விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவானார்.

திருக்கோல் பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரன் அம்பாறை மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாவார். பாரம்பரியமாக தமிழரசு கட்சிக்கு ஆதரவான ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றபோதிலும், றொபின் என்று அறியப்பட்ட கோடீஸ்வரன் 2015 பாராளுமன்ற தேர்தலில் ரெலோவின் வேட்பாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டார். சில வருடங்களுக்கு பிறகு அவர் தமிழரசு கட்சிக்கே திரும்பிவந்துவிட்டார். அந்த மாவட்டத்தில் இருந்து 2020 தேர்தலில் தமிழர் எவரும் பாராளுமன்றத்துக்கு தெரிவாகவில்லை.

கிழக்கு வெற்றியும் வடக்கு தோல்வியும்

திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் இருந்து ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரை பெறக்கூடிய வல்லமையே தமிழரசு கட்சிக்கு இருக்கிறது. அந்தப்்பணி 2024 தேர்தலில் நிறைவேற்றப்பட்டது. மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்சி பெருவெற்றி பெற்று மூன்று ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்டது. ஆனால், யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் கதை வேறுபட்டதாக இருந்தது.கிழக்கு வெற்றியின பிரகாசம் வடக்கு தோல்வியை கணிசமானளவுக்கு மங்கச் செய்துவிட்டது. இது ஏன், எவ்வாறு நடந்தது என்பதை எதிர்வரும் கட்டுரை ஒன்றில் ஆராய்வோம்.

D.B.S.Jeyaraj can be reached at dbsjeyaraj@yahoo.com

ஆங்கில மூலம்: டி. பி. எஸ். ஜெயராஜ் (Daily Mirror)

தமிழில்: வீரகத்தி தனபாலசிங்கம்

நன்றி: வீரகேசரி

************************************************************************************************