ஜே.வி.பி.யின் தாபகத் தலைவர் றோஹண விஜேவீர கொலையை அநுராவின் அரசாங்கம் விசாரணை செய்யுமா?

டி.பி.எஸ். ஜெயராஜ்

ஜனதா விமுக்தி பெரமுனவை ( ஜே.வி.பி.) பொறுத்தவரை, நவம்பர் 13 பெரும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தினமாகும். ஜே.வி.பி.யின் வசீகரமிக்க தாபகத் தலைவர் றோஹண விஜேவீர 1989 நவம்பர் 13 ஆம் திகதி தான் கொலை செய்யப்பட்டார். 1994 ஆம் ஆண்டில் இருந்து ஜே.வி.பி. விஜேவீரவையும் 1971 கிளர்ச்சியிலும் 1987 — 89 கிளர்ச்சியிலும் உயிரிழந்த ஆயிரக்கணக்கான அதன் உறுப்பினர்களையும் நினைவுகூருவதற்கு வருடாந்தம் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்துவருகிறது. தியாகிகளை நினைவு கூருவதற்கு வழமையாக நவம்பர் 13 ஆம் திகதி உரைகளினதும் கீதங்களினதும் ஒரு கலவையாக நடைபெறும் நிகழ்வு ” இல் மகா விரு சமாறுவ ” என்று அழைக்கப்படுகிறது.

இந்த வருடம் நவம்பர் 13 றோஹண விஜேவீர என்று அறியப்படும் பட்டபெந்தி டொன் ஜினதாச நந்தசிறி விஜேவீர 35 வது நினைவு தினமாகும். ஜே.வி.பி. நவம்பர் 15 ஆம் திகதி நினைவேந்தல் நிகழ்வை நடத்தியது. அதில் பங்குபற்றியவர்களில் ஜே.வி.பி.யின் தவைவர் ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவும் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவும் அடங்குவர். அது ஒரு உணர்வுபூர்வமான அமைதியான நிகழ்வாக இருந்தபோதிலும், ஒரு கொண்டாட்ட மகிழ்ச்சியும் காணப்பட்டது. ஏனென்றால் முதல் தடவையாக கட்சி ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கிறது.

நினைவு நிகழ்வில் ரில்வின் சில்வாவே நீண்ட நேரம் உரையாற்றினார். ” உயிர்த்தியாகம் செய்த ” தலைவர் றோஹண விஜேவீரவை புகழ்ந்துரைக்கும் பல குறிப்புக்களுடன் அவர் ஜேவி.பி.யின் தோற்றத்தையும் அதன் படிமுறையான வளர்ச்சியையும் சுருக்கமாக விளக்கினார். நசுக்கப்பட்ட இரண்டாவது ஜே.வி பி. கிளர்ச்சியின் சாம்பலில் இருந்து பீனிக்ஸ் பறவை போன்று கட்சி எழுந்ததை பற்றியும் அதற்கு பிறகு கட்சியின் வெற்றிகரமான அரசியல் மறுமலர்ச்சி பற்றியும் பேசிய ரில்வின் சில்வா ” காலத்துக்கு ஏற்ற முறையில் இசைவாக்கம் பெற்றது எமது கட்சி…. பிடிவாதமாக இருப்பவர்கள், மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் தப்பிப் பிழைப்பதில்லை ” என்று கூறினார்.

அண்மைக் காலமாக றோஹண விஜேவீரவினதும் ஜே.வி.பி. தோழர்களினதும் மறைவை இன்னொரு கட்சியும் நினைவுகூர்ந்து வருகிறது. ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்த அதிருப்தியாளர்கள் குழுவினரின் முன்னிலை சோசலிசக் கட்சியே அதுவாகும். நொயல் முதலிகே அல்லது குமார்/ குமார என்ற பிரேம்குமார் குணரத்தினத்தை பொதுச்செயலாளராகக் கொண்டு முன்னிலை சோசலிசக் கட்சி 2012 ஏப்பிலில் ஆரம்பிக்கப்பட்டது. ஒரு சமாந்தரமான ” இல் மகா விரு சமாறுவ ” நிகழ்வின் மூலமாக உயிரிழந்த தலைலர்களையும் தோழர்களையும் முன்னிலை சோசலிசக் கட்சி வருடாந்தம் நினைவுகூருகிறது.

குமார் குணரத்தினம்

முன்னிலை சோசலிசக் கட்சி அதன் நினைவு நிகழ்வை நவம்பர் 11 ஆம் திகதி நடத்தியது. அந்த நிகழ்வில் தனது உரையில் பொதுச் செயலாளர் குமார் குணரத்தினம் ஒரு உரத்த அழைப்பை விடுத்தார். தங்களது முன்னாள் தலைவர் றோஹண விஜேவீர உட்பட 1987 — 89 கிளர்ச்சியின்போது உயிரிழந்த ஜே.வி.பி. உறுப்பினர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்குமாறு குணரத்தினம் தனது முன்னாள் தோழர் ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்தார்.

பத்திரிகைகளில் வெளியான அவரின் உரையின் சில பகுதிகள் வருமாறு ;

” ஜே.வி.பி.யினதும் அதன் தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினதும் தலைவரான ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவின் அரசாங்கம் 1987 — 89 கிளர்ச்சியின்போது கொல்லப்பட்ட ஜே.வி.பி. உறுப்பினர்களின் மரணங்கள் குறித்து விசாரணை செய்ய வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொறுப்பைக் கொண்டிருக்கிறது.

” இன்றைய தினம் 35 வது ‘ இல் மகா விரு நினைவைக் குறித்து நிற்கிறது. நீதிக்காக குரலெழுப்பிய ஒரு முழு தலைமுறையுமே 1988 –89 காலப்பகுதியில் கொல்லப்பட்டது. தோழர்கள் றோஹண விஜேவீர மற்றும் உபதிஸ்ஸ கமநாயக்க உட்பட 60 ஆயிரத்துக்கும் அதிகமான தோழர்கள் உயிரிழந்தார்கள். இப்போது ஆட்சியதிகாரத்தில் இருக்கும் தேசிய மக்கள் சக்தியின் பிரதான அரசியல் கட்சியான ஜே.வி.பி.யின் இலட்சாயங்களுக்காகவே அவர்கள் சகலரும் போராடினார்கள். அதனால் 35 வது நினைவுதினம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது” என்று குணரத்தினம் கூறினார்.

1987 –89 கிளர்ச்சியை அன்றைய அரசாங்கம் ஒடுக்கியதை மனிதகுலத்துக்கு எதிரான குற்றச் செயலுடன் ஒப்பிட்ட குணரத்தினம் அதை உலக வரலாற்றில் இடம்பெற்றிருக்கக்கூடிய மிகவும் கொடிய இனப் படுகொலைளில் ஒன்று என்று வர்ணித்தார்.

” அன்று உயிர்த் தியாகங்களைச் செய்த சகலருக்குமான நீதிக்காக மக்கள் இன்னமும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஜே.வி.பி.யை அதிகாரத்துக்கு கொண்டு வருவதற்காக தங்களை அர்ப்பணித்த அதன் உறுப்பினர்களின் குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் அன்புக்குரிய உறவினர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்கள். அதனால் 1988 — 89 காலப்பகுதியில் நடந்தவற்றை விசாரணைசெய்து மனிதகுலத்துக்கு எதிரான அந்த குற்றங்களுக்கு காரணமான சகலரையும் பொறுப்புக்கூற வைப்பதில் முனனைய நிர்வாகங்களை விடவும் மிகப்பெரிய தார்மீகப் பொறுப்பும் அதிகாரமும் தேசிய மக்கள் சக்திக்கு இருக்கிறது. அந்த பொறுப்பை ஜனாதிபதி திசாநாயக்க ஏற்றுக்கொள்வார் என்று முன்னிலை சோசலிசக் கட்சியினராகிய நாம் நம்புகிறோம் ” என்று குணரத்தினம் கூறினார்.

இந்த பெரும்பணியில் அவசியமான எந்த ஆதரவையும் வழங்குவதற்கு முன்னிலை சோசலிசக் கட்சி தயாராக இருக்கிறது என்றும் அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.

ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்த ஒரு குழுவான குணரத்தினம் கட்சி அண்மையில் ஜனாதிபதி திசாநாயக்கவுக்கு அனுப்பிய மகஜர் ஒன்றில் இதே போன்ற அபிப்பிராயத்தை வெளிப்படுத்தியிருந்தது. 1988 — 89 காலப்பகுதியில் அரச அனுமதியுடன் இழைக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்செயல்கள் தொடர்பில் உடனடி விசாரணை ஒன்றை முன்னெடுக்குமாறு ஜனாதிபதியை கேட்டிருந்த அறிக்கை றோஹண விஜேவீர உட்பட தியாகிகளின் உயிர்களுக்கு நீதிசெய்யுமாறு வலியுறுத்தியது.

சோசலிச மாற்றத்துக்கான போராட்டத்தில் தங்களின் உயிர்களை இழந்த றோஹண விஜேவீரக்கும் ஏனைய தோழர்களுக்கு அஞ்சலி செலுத்திய முன்னிலை சோசலிசக் கட்சி அந்த காலப்பகுதியில் ” அரச பயங்கரவாதத்தின் ” ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஆட்கடத்தல்கள், சட்டவிரோத கொலைகள் மற்றும் ஆட்கள் வலிந்து காணாமல்போகச் செய்யப்பட்ட சம்பவங்களை சுட்டிக்காட்டியது. அந்த அட்டூழாயங்களின் பின்னணியில் இருந்த உண்மைகளை வெளிக்கொணர வேண்டியதன் முக்கியத்துவத்தை முன்னிலை சோசலிசக் கட்சி வலியுறுத்தியது.

ஜே.வி.பி.யின் தலைவர் தற்போது ஜனாதிபதியாக ஆட்சியதிகாரத்தில் இருக்கும் நிலையில், றோஹண விஜேவீரவினதும் ஏனையோரினதும் கொலைகளுக்கும் காணாமல்போன சம்பவங்களுக்கும் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொணருவதில் கவனத்தைக் குவிக்கும் விரிவான விசாரணை ஒன்றுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று முன்னிலை சோசலிசக் கட்சி வலியுறுத்தியது.

ஜே.வி.பி.யினர் மத்தியிலும் ஆதரவு

குறிப்பாக றோஹண விஜேவீர உட்பட உயர்மட்ட தலைவர்களினதும் பொதுவில் ஜே.வி.பி. தோழர்களினதும் மரணங்களன மற்றும் காணாமல்போன சம்பவங்கள் தொடர்பில் விரிவான விசாரணை ஒன்றை நடத்தவேண்டும் என்ற முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரத்தினத்தின் அழைப்புக்கு ஜே.வி.பி.யின் முன்னாள் மற்றும் தற்போதைய உறுப்பினர்கள் மத்தியில் ஆதரவு கிடைக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது. இரண்டாவது ஜே.வி.பி. கிளர்ச்சியை நசுக்குவதற்கு அன்றைய அரசாங்கம் மேற்கொண்ட கொடூரமான நடவடிக்கைகளில் இருந்து உயிர்தப்பிய அநுரா குமார திசாநாயக்க, ரில்வின் சில்வா மற்றும் விஜித ஹேரத் போன்ற சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் அது நிச்சயமாக ஏற்புடையதாக இருக்கும். மேலும், அந்த காலப்பகுதியில் இடம்பெற்ற பல அட்டூழியங்களுக்கு ஜே.வி.பி.யும் கூட பொறுப்பு என்ற போதிலும், அரச முகவர்களினால் இழைக்கப்பட்ட மனிதகுலத்துக்கு எதிரான படுபயங்கரமான அந்த குற்றச்செயல்களை நேரில் கண்ட எம்மைப் போனாறவர்களும் உண்மை கண்டறியப்படுவதை வாரும்புவார்கள்.

ஜே.வி.பி. இப்போது அதிகாரத்தில் இருப்பதால் கடந்தகால சம்பவங்களை விசாரணை செய்வதற்கு ஏற்புடைய பொறிமுறை ஒன்றை அமைக்க முடியும் என்ற குமார் குணரத்தினத்தின் வாதம் தர்க்கரீதியாக சரியானதேயாகும். மேலும், அவரைப் பொறுத்தவரை அதற்கு தனிப்பட்ட காரணம் ஒன்றும் இருக்கிறது. அந்த இருண்ட நாட்களில் ” காணாமல் போனதாக ” கூறப்பட்ட பல இளைஞர்களில் குமார் குணரத்தினத்தின் மூத்த சகோதரர் ரஞ்சிதன் குணரத்தினமும் ஒருவர்.

ரில்வின் சில்வா

உண்மை கண்டறியப்பட வேண்டும் என்ற ஜே.வி.பி.யின் கருத்துக் கோணத்தில் இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. ஜே வி. பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா ‘ தி இந்து ‘ பத்திரிகையின் கொழும்பு செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசனுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்று 16 நவம்பர் 2024 இதழில் வெளியாகியிருந்தது. அதில் அவர் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது ;

” கட்சியின் வரலாறு பின்புலத்துடன் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்று சில்வா வாதிடுகிறார். ” தவறான அபிப்பிராயம் ஒன்று நிலவுகிறது. ஏனென்றால் எமது வரலாறு எம்மை தோற்கடித்தவர்களினால் எழுதப்பட்டது. எமது பாதையை நாம் விரும்பித் தெரிந்தெடுக்கவில்லை. எங்கள் மீது அது திணிக்கப்பட்டது.” ஜே.வி.பி. மீதான கொடூரமான வன்முறைக் குற்றச்சாட்டுக்கள் பற்றி குறிப்பிட்ட சில்வா , ” அது எமது செயற்பாடு அல்ல, எமது எதிர்வினை. அரசு ஆயுதபலம் கொண்டு அடக்குமுறையை மேற்காண்டதால் நாமும் அதே பாணியில் பதிலளித்தோம்” என்று கூறினார்.

” எந்தவிதமான காரணமும் இல்லாமல் ஆயுதயேந்திய பயங்கரவாதிகள் என்று சிலரை வர்ணிக்காமல், கட்சியின் வரலாற்றை மாத்திரமல்ல, முழு நாட்டினதும் வரலாற்றையும் திருப்பி எழுதுவதற்கான வெளியை இலங்கையில் தற்போதைய அரசியல் தருணம் திறந்து விட்டிருக்கிறது என்பது சில்வாவின் அபிப்பிராயமாக இருக்கிறது. ” ஆனால், இந்த கதையை வார்த்தைகளால் அல்ல செயல்களின் மூலமாக கூறுவதற்ககே நாம் விரும்புகிறோம். தற்போதைய பின்புலம் அதைச் செய்வதற்கு எமக்கு வாய்ப்பு ஒன்றைத் தந்திருக்கிறது” என்று அவர் கூறினார்.


உண்மை எங்களை விடுதலை செய்யும்

ஜே.வி.பி.யின் கருத்துக் கோணத்தில் இருந்து வரலாறு திரும்பக் கூறப்படவேண்டும் என்பதில் ரில்வின் சில்வா உண்மையிலேயே அக்கறையாக இருக்கிறார் என்றால், ஜே.வி.பி.யின் உண்மையான கதை கூறப்பட வேண்டும் என்பதில் கட்சியின் பொதுச் செயலாளருக்கு உண்மையான அக்கறை இருக்குமானால், விஜேவீரவினதும் ஏனைய தோழர்களினதும் கொலைகள் தொடர்பில் தீவிரமான விசாரணை ஒன்று அவசியமாகும். அந்த விசாரணை ஜே.வி.பி.யின் குற்றங்களை மறைப்பதற்கு அல்லது அன்றைய அரசாங்கத்தை களங்கப்படுத்துவதற்கு முயற்சிக்காமல் உண்மையை வெளிப்படுத்துவதில் சுதந்திரமானத்கவும் நேர்மையானதாகவும் அமைய வேண்டும். உண்மையை நோக்கமாகக் கொண்டதாக மாத்திரம் அது இருக்கவேண்டும். ஏனென்றால், இறுதியில் உண்மை மாத்திரமே ” எம்மெல்லோரையும் விடுதலை செய்யும்.”

இத்தகைய பின்புலத்திலேயே இந்த கட்டுரை ஜே.வி.பி.யின் தாபக தலைவரின் கொலை குறித்து 35 வருடங்களுக்கு பிறகு முன்னைய எனது எழுத்துக்களில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்களின் உதவியுடன் கவனம் செலுத்துகிறது.

றோஹண விஜேவீர 35 வருடங்களுக்கு முன்னர் 1989 நவம்பர் 13 ஆம் திகதி கொல்லப்பட்டார். ஜனதா விமுக்தி பெரமுனவின் புரட்சிகர தலைவருக்கு அந்த வேளையில் 46 வயது. 1971 ஆம் ஆண்டிலும் 1987 — 89 காலப்பகுதியிலும் இரு ஆயுதக்கிளர்ச்சிகளின் சூத்திரதாரியான அவர் நவம்பர் 12 ஆம் திகதி கண்டி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டு வரப்பட்டார். விஜேவீரவின் கைது மற்றும் மரணத்துடன் ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சி படிப்படியாக தணிந்து முடிவுக்கு வந்தது.

சுமார் மூன்று வருடங்களாக நீடித்த அந்த கிளர்ச்சியின்போது ஜே.வி.பி. யினாலும் பொலிஸ், பாதுகாப்பு படைகள் மற்றும் பரா இராணுவ குழுக்களை உள்ளடக்கிய கிளர்ச்சி தடுப்பு படைகளினாலும் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த அட்டூழயங்கள் எல்லாம் கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருந்த அதேவேளை, ஜே.வி.பி.யின் உயர் புரட்சிகரத் தலைவர் நிமால் கித்சிறி அத்தநாயக்க என்ற பெயரில் ஒரு தோட்டத்துரையாக தன்னைக் காட்டிக் கொண்டு தனது குடும்பத்துடனும் இரு பணியாளர்களுடனும் கண்டியில் உலப்பனையில் வசதியான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார்.

உத்தியோகபூர்வமற்ற மரணதண்டனை

ஜே.வி.பி.யினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையின் கொடூரத்தையும் பொலிசார் மற்றும் பாதுகாப்பு படைகள் மத்தியில் ஜே வி.பி. தலைவர் மீது இருந்த சீற்றத்தையும் அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது றோஹண விஜேவீர ” உத்தியோகபூர்வமாக அனுமதியளிக்கப்பட்ட உத்தியோகபூர்வமற்ற மரணதண்டனை ” ( Officially sanctioned unofficial execution ) என்று சுற்றிவளைத்து பொருள் கூறப்பட்ட ஒரு நடவடிக்கையில் கொலை செய்யப்பட்டதாகவே பரவலாக நம்பப்பட்டது.

கொழும்பு புறநகர்ப் பகுதியில் ஜே.வி.பி.யின் இரகசிய அலுவலகமாக பயன்படுத்தப்பட்ட வீடொன்றுக்கு சில ஆவணங்களை தேடுவதற்காக விஜேவீரவும் ஜே.வி.பி.யின் இன்னொரு சிரேஷ்ட தலைவரான எச்.பி. ஹேரத்தும் கூட்டிச் செல்லப்பட்டார்கள் என்றும் சில ஆவணங்களை எடுப்பது போன்று பாசாங்கு செய்துகொண்டு விஜேவீரவை ஹேரத் துப்பாக்கியால் சுட்டதை அடுத்து அவர்கள் இருவரையும் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றுவிட்டு சடலங்களை தகனம் செய்துவிட்டார்கள் என்றும் அரசாங்க தரப்பில் உத்தியோகபூர்வ விளக்கம் தரப்பட்டது.

ஜே.வி.பி.யின் வன்செயல்களும் அவற்றுக்கு எதிரான அரசாங்கப் படைகளின் வன்செயல்களும் நிறைந்த சூழ்நிலையில் மிகவும் பயங்கரமான அனுபவங்களைச் சந்தித்த இலங்கை விஜேவீரவின் மரணச் செய்தியை அறிந்து பெரும் நிம்மதியடைந்தது. அன்று நிலவிய சூழ்நிலைகளின் கீழ் அரசாங்கத்தினால் கூறப்பட்ட உத்தியோகபூர்வ விளக்கத்தை நாடு ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் தனிப்பட்ட முறையில் அதை நம்பியவர்கள் மிகச்சிலரே. அத்தகைய சூழ்நிலைகளில் பெருமளவில் ஊகங்கள் கிளம்புவது வழமை. விஜேவீரவின் இறுதித் தருணங்கள் தொடர்பில் பலவிதமான கதைகள் உலவத் தொடங்கின.

கொழும்பு கோல்ஃவ் விளையாட்டு மைதான வளாகத்தில் ஓடுமாறு உத்தரவிடப்பட்ட பின்னர் விஜேவீர சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதே பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட விளக்கமாகும். ஜே.வி.பி.யின் கொடூரமான வன்முறைக்கு தனது குடும்ப உறுப்பினர்களை பலிகொடுத்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் சிரேஷ்ட இராணுவ அதிகாயாகள் பார்த்துக்கொண்டிருக்க விஜேவீரவை சுட்டதாக கூறப்பட்டது. பிறகு இரு சடலங்களும் இரவில் கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்பட்டன. தகனம் செய்யப்பட்ட நேரத்தில் விஜேவீர முழுமையாக இறக்கவில்லை என்ற கதையே அவரது இறுதித் தருணம் தொடர்பான விளக்கத்தின் கோரமான ஒரு திருப்பமாகும்.

சரத் முனசிங்கவின் விளக்கம்

விஜேவீரவின் இறுதிக் கட்டம் தொடர்பில் நேரில் கண்ட எவரினதும் உத்தியோகபூர்வ விளக்கம் எதுவும் கிடையாது. மரணத்துக்கு முன்னதாக றோஹண விஜேவீரவின் வாழ்வின் ஒரு சில மணித்தியாலங்கள் தொடர்பில் ஒரு நம்பத்தகுந்த ஒரு விளக்கம் இருக்கிறது. இதை மேஜர் ஜெனரல் சரத் முனசிங்க தனது ” ஒரு படைவீரரின் கதை ” ( A Soldier’s Story ) என்ற சுயசரிதை நூலில் கூறியிருக்கிறார். அது வருமாறு ;

” நாங்கள் ( லயனல் பலகல்லவும் சரத் முனசிங்கவும்) கூட்டு நடவடிக்கைகள் தலைமையக வளாகத்தை வந்தடைந்தபோது இரவு 11.30 மணி. விஜேவீர அமர்ந்திருந்த மகாநாட்டு மேசைக்கு நாம் அழைத்துச் செல்லப்பட்டோம். மேசையில் விஜேவீரவுக்கு நேர் எதிரே எனக்கு ஒரு ஆசனம் வழங்கப்பட்டது. அவருடன் கதைக்க ஆரம்பித்தேன். அவருடன் நீண்ட நேரம் பேசினேன்.

” நான் அவரிடம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்ட வேளைகளில் எல்லாம் அவர் சிங்களத்தில் பதிலளித்தார். எனக்கு ரஷ்ய மொழி தெரியுமா என்று கூட என்னிடம் அவர் கேட்டார். எனக்கு தெரியாது என்று நான் பதிலளித்தேன். தனது இரண்டாவது மொழி ரஷ்யமொழி என்று என்னிடம் விஜேவீர கூறினார். தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி எல்லாம் என்னிடம் அவர் கூறினார். முதலில் பண்டாரவளையிலும் பிறகு கண்டியில் உலப்பனையில் இருந்ததை பற்றி கூறினார். ஜே வி.பி.யின் நடவடிக்கைகள் குறித்து கதைப்பதற்கு அவர் தயக்கம காட்டினார்.

” நள்ளிரவு கடந்து சிறிது நேரத்தில் பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் ரஞ்சன் விஜேரத்ன உள்ளே வந்து மகாநாட்டு மேசையின் தலைமை ஆசனத்தில் அமர்ந்தார். ஜெனரல் விஜேரத்ன ஒரு சில கேள்விகளை கேட்டார். ஆனால் றோஹண விஜேவீர பதிலளிக்கவில்லை.

” நாம் எமது சப்பாஷணையை தொடர்ந்தோம். கதைத்துக் கொண்டிருந்த வேளையில் பல கோப்பைகள் வெறும் தேநீரை நாம் அருந்தினோம். வன்முறையை கைவிடுமாறு ஜே.வி.பி. உறுப்பினர்களுக்கு ஆலோசனை கூறும்படி விஜேவீரவிடம் நான் வேண்டுகோள் ஒன்றை விடுத்தேன். இணங்கவைத்த பிறகு அதற்கு அவர் சம்மதித்தார். அவர் கூறியவற்றை எம்மால் பதிவு செய்யக்கூடியதாக இருந்தது. அவரை கமராவில் படமும் எடுத்துக் கொண்டோம்.

” அப்போது ( 13 நவம்பர் 1989) அதிகாலை 3.45 மணி. விஜேவீரவை விசாரணை செய்வதை முடித்துக்கொண்டு அவரை மாடிப் படிகளினால் கீழே அழைத்துவருமாறு எனக்கு அறிவிக்கப்பட்டது. படிகளில் ஒன்றாக கீழே இறக்கிவந்து கொண்டிருந்தபோது இருவரும் நெருக்கமாக இருந்தோம். எனது கையைப் பிடித்துக்கொண்டு விஜேவீர, ” இறுதித் தருணத்திலாவது உங்களைச் சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி. நான் இனிமேல் உயிரோடு இல்லாமல் இருக்கலாம். தயவுசெய்து எனது செய்தியை எனது மனைவிக்கு தெரியப்படுத்துங்கள் ” என்று கூறினார். அவரது செய்தியில் ஐந்து முக்கிய விடயங்கள் இருந்தன. அவை எல்லாம் அவரது குடும்பத்துடன் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட விடயங்கள்.

” சிறிது நேரம் கழித்து விஜேவீரவின் கண்கள் கட்டப்பட்டன. பச்சைநிற பஜீரோ ஒன்றின் பின் ஆசனத்தில் அவர் ஏற்றப்பட்டார். அவருக்கு இரு மருங்கிலும் ஒவ்வொருவர் இருந்தனர். வாகனத்தின் பின்னால் வேறு ஆட்கள் இருந்தனர். பஜீரோ கிளம்பிச் சென்றது. கூட்டு நடவடிக்கை தலைமையக கட்டிடத்தின் பிரதான வாயிலில் நின்று கொண்டிருந்த கேணல் லயனல் பலகல்லவுடன் நான் இணைந்து கொண்டேன். நல்ல நித்திரை கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டு நாம் வீடு சென்றோம்.

” காலையில் விஜேவீரவின் போட்டோவை பிரதி எடுப்பதில் நான் ஈடுபட்டிருந்தேன். தாடி இல்லாமல் அவரை எவரும் அடையாளம் காணமாட்டார்கள். அதனால் விஜேவீரவின் மோட்டாவுக்கு தாடியைச் சேர்த்துக்கொள்வதற்கு நான உதவியை நாடவேண்டியிருந்தது. அது நன்றாக செய்யப்பட்டது. பிறகு பின்னேரம் கூட்டு நடவடிக்கை தலைமையகத்தில் ஒரு பத்திரிகையாளர்கள் மகாநாடு. அதில் அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன பத்திரிகையாளர்களுக்கு விளக்கமளித்தார்.

” விஜேவீரவும் ( இன்னொரு ஜே.வி.பி. தலைவரான எச்.பி. ஹேரத்தும் கொழும்புக்கு வெளியே ஜே.வி.பி. அதன் சேமிப்புக்களை மறைத்து வைத்திருந்த வீடு ஒன்றுக்கு கூட்டிச் செல்லப்பட்டனர். அங்கு தேடுதல் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் ஹேரத் பிஸ்டல் ஒன்றை எடுத்து விஜேவீரவை சுட்டுக்கொன்றார். அமைச்சர் மேலும் விபரங்களை பத்திரிகையாளர்களுக்கு கூறாக்கொண்டு போனார். விஜேவீரவின் கொலையை தொடர்ந்து ஜே.வி.பி.யின் வன்முறை படிப்படியாக இல்லாமற்போய் வடக்கையும் கிழக்கையும் தவிர நாட்டில் அமைதி ஏற்பட்டது.”

ஜெனரல் முனசிங்க எழுதியிக்கும் விபரங்கள் விஜேவீரவின் வாழ்வின் இறுதியந்த கட்டங்களை ஓரளவுக்கு எடுத்துரைக்கின்ற போதிலும், அவரது மரணம் தொடர்பான விபரங்களை தருவதில் அமைச்சர் விஜேரத்னவின் பத்திரிகையாளர்கள் மாகாநாட்டிலேயே தங்கியிருக்கிறது. விஜேவீர எவ்வாறு பிடிபட்டார் என்பது பற்றியும் சிறிதளவு தகவல்களே இருக்கின்றன. அதற்கு அவரை பிடிக்கும் நடவடிக்கைகளில் சரத் முனசிங்க நேரடியாக சம்பந்தப்படாமல் இருந்தது காரணமாக இருக்கலாம்.

விஜேவீர உலப்பனையில் கைது

றோஹண விஜேவீரவின் கைதுக்கு வழிவகுத்த சூழ்நிலைகள் குறித்து பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சி.ஏ. சந்திரபிரேமா ” ஸ்ரீலங்கா ; பயங்கரமான வருடங்கள் — ஜே.வி.பி.யின் 1987 — 1989 கிளர்ச்சி ” ( Sri Lanka ; The Years of Terror — The JVP insurrection ) என்ற தனது நூலில் சுருக்கமாக துல்லியமாக வரணித்திருக்கிறார். அதன் பொருத்தமான பகுதிகள் வருமாறு ;

” பியதாச ரணசிங்கவும் எச்.பி. ஹேரத்தும் கலஹாவில் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் இருவரும் றோஹண விஜேவீரவை அடிக்கடி சந்தித்த இரு ஜே.வி.பி. தலைவர்கள். குறுகிய விசாரணை ஒன்றுக்கு பிறகு விஜேவீர இருக்கும் இடத்தை ஹேரத் கூறினார். ஒரு சில மணித்தியாலங்கள் கழித்து விஜேவீர அத்தநாயக்க என்ற பெயரில் ஒரு தோட்டத்துரையாக உருமாறி கண்டி உலப்பனையில் வாழ்ந்துவந்த தோட்டப் பங்களாவில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.

” பிற்பகல் 2 மணியளவில் இராணுவ அதிகாரிகள் குழு வந்துசேர்ந்த வேளை விஜேவீர முகச்சவரம் செய்துகொண்டிருந்தார். இராணுவக் குழு ஒரு கேற்றின் மேலாக ஏறி வீட்டைச் சுற்றி வளைத்தது. விஜேவீர வெளியில் வந்து ” நான் அத்தநாயக்க. இங்கு வருவதற்கு உங்களுக்கு எந்த்உரிமையும் கிடையாது. நான் அமைதியை விரும்புகின்ற ஒரு மனிதன்” என்று கூறினார் .

” விஜேவீர துணிச்சலாக பேசியதனால் சற்று குழப்பமடைந்த கேணல் ஜனக்க பெரேரா தவறான இடத்துக்கு வந்துவிட்டோமோ என்று நினைத்தார். என்றாலும் தனது பிஸ்டலை எடுத்து அவர் ” அத்தநாயக்கவின் ” தலைக்கு நேரே பிடித்துக்கொண்டு ” நீங்கள் விஜேவீரவா? ” என்று கேட்டார். ஜனக்க பெரேரா தன்னைச் சுட்டுவிடக்கூடும் என்ற பயத்தில் ” அத்தநாயக்க ” தான் விஜேவீர என்பதை ஒத்துக்கொண்டு ” உங்களுடன் நான் வருகிறேன். ஆனால், எனது குடும்பத்துக்கு தீங்கு செய்யாதீர்கள்” என்று கூறினார். விஜேவீரவின் மனைவியை தவிர வீட்டில் இரு பணிப்பெண்களும் இருந்தனர். விஜேவீர வெளியே கூட்டிச் செல்லப்பட்டபோது சகல பெண்களும் புலம்பி அழுதனர்.”

இவ்வாறு கைது செய்யப்பட்ட விஜேவீர கொழும்புக்கு கொண்டு வரப்பட்டார். ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அவரின் மரணம் தொடர்பாக விசாரணை ஒன்றுக்கு உத்தரவிட்டு அவர் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது பற்றிய நம்பகமான விபரங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவருமா இல்லையா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

” இறந்தவர்கள் பற்றி எழுதுபவர்களில் இளவரசன் ” ( Prince of Obituarists) என்று அறிஞர் றெஜி சிறிவர்தனவினால் வர்ணிக்கப்பட்ட மிகவும் பிரபல்யமான பத்திரிகையாளர் அஜித் சமரநாயக்க 2004 ஆம் ஆண்டில் விஜேவீரவின் 15 வது நினைவு தினத்தில் எழுதிய ஞாயிறு கட்டுரையின் சில பந்திகளுடன் எனது கட்டுரையை முடிக்கிறேன்.

அஜித் சமரநாயக்க கட்டுரை

” தனது 46 வது வயதில் றோஹண விஜேவீர கொல்லப்பட்டபோது இலங்கையில் அவரைப் போன்று வேறு எந்த அரசியல் தலைவருமே கூர்மையானதும் முரண்பாடுகள் நிறைந்ததுமான கருத்துக்கள் தோன்றுவதற்கு காரணமாக இருந்ததில்லை. சுதந்திரத்துக்கு பின்னரான உயர்வர்க்க குழாத்தினர் அவர்கள் முதலாளித்துவ வாதிகளாக இருந்தாலென்ன, தாராளவாதிகளாக இருந்தாலென்ன, மார்க்சியவாதிகளாக இருந்தானெ்ன இது காறும் உள்ள சமூக அமைப்பை பேணிக்காப்பதற்கு கண்டிருந்த கருத்தொருமிப்பை விஜேவீர தனது நோக்கில் தலைகீழாக்க முயற்சித்தார்.

” வலதுசாரிகளுக்கும் மரபுவாத மார்க்சியர்களுக்கும் விஜேவீர ஒரு பிசாசின் அவதாரம். ஆனால் அவரைப் பின்பற்றுவோருக்கு அவர் ஒரு அரைக்கடவுள். அந்த பாத்திரத்தில் அவர் மிகவும் நன்றாகவே குதூகலித்தார். தாடியுடன் தொப்பியையும் அணிந்துகொண்டு அவர் நிகழ்த்திய ஆவேசப் பேச்சுக்கள் அந்தக் காலப்பகுதியின் அரசியல் நிலக்காட்சியின் பெரும் அங்கமாக விளங்கியது. வழங்குறைந்த இலங்கையின் அரசியல் அரங்கில் ( பொதுவில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்ற சிந்தனைகளுக்கு எதிராக வாதிடுகின்ற ) பிசாசின் வக்கில் தொடக்கம் ஜனாதிபதி வேட்பாளர் வரை சாத்தியமான சகல பாத்திரங்களையும் விஜேவீர ஏற்றிருந்தார்.

” விஜேவீரவை எதிர்ப்பவர்களின் கருத்துக் கோணத்தில் அவர் என். சண்முகதாசனின் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியை பிளவுபடுத்தி அதன் உறுப்பினர்களில் பலரை தன்னுடன் கூட்டிச் சென்று தனது சொந்தத்தில் படையொன்றை அமைத்து அதிகாரத்தைக் கைப்பற்ற (1971 கிளர்ச்சி ) முயற்சித்த ஒரு சந்தர்ப்பவாத துரோகி. அவரை பின்பற்றுபவர்களை பொறுத்தவரை, அவர் வறிய விவசாயிகளை குறிப்பாக சுதந்திரத்துக்கு பிறகு சமூக அமைப்பு முறையில் இருந்து புறக்கணிக்கப்பட்ட பின்தங்கிய பிரிவுகளை அணிதிரட்டிய ஒரு இலட்சியவாதி.

இதில் எந்த விளக்கம் பெருமளவுக்கு யதார்த்தத்துக்கு அண்மித்தானது?

” எந்தவொரு அரசியல் நடவடிக்கையிலும் சந்தர்ப்பவாதக் கூறு ஒன்று இருக்கவே செய்கிறது. அரசியல் என்பது சந்தர்ப்பவாதமும் இலட்சியவாதமும் கொண்ட ஒரு கலவையே. ஆனால், சுதந்திரத்துக்கு பின்னர் பாராளுமன்ற பாதையின் ஊடாக மாத்திரம் அதிகாரத்தை அடையும் மார்க்கத்தில் இடதுசாரிகளுக்கும் வலதுசாரிகளுக்கும் இடையில் காணப்பட்ட கருத்தொருமிப்புக் காப்பரணினால் பாதுகாக்கப்பட்ட இலங்கை அரசின் மீது மூன்று தசாப்தகால இடைவெளியில் இரு தடவைகள் தாக்குதலைத் தொடுத்த மிகவும் துணிச்சலான அரசியல்வாதி என்று விஜேவீரவை நிச்சயமாகக் கூறமுடியும்.”
_____________

D.B.S.Jeyaraj can be reached at dbsjeyaraj@yahoo.com

ஆங்கில மூலம்: டி. பி. எஸ். ஜெயராஜ் (Daily Financial Times)

தமிழில்: வீரகத்தி தனபாலசிங்கம்

நன்றி: வீரகேசரி

************************************************************************************************