யாழ் தமிழ் தேசியவாதக் கோட்டைக்குள் பலமாக அடித்த “அநுர அலை”: ஆறு யாழ்ப்பாண ஆசனங்களில் மூன்றில் தேசிய மக்கள் சக்தி வெற்றி.

டி.பி.எஸ். ஜெயராஜ்

தேசிய மக்கள் சக்தி 2024 நவம்பர் 14 பாராளுமன்ற தேர்தலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. ஜனதா விமுக்தி பெரமுனவை (ஜே.வி.பி.) பிரதான அங்கத்துவக் கட்சியாகக்கொண்டு 21 அரசியல் கட்சிகள், குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்களை உளாளடக்கிய ஒரு கூட்டமைப்பே தேசிய மக்கள் சக்தியாகும். அது 6, 863,186 (61.6 சதவீதம் ) வாக்குகளைப் பெற்று 225 ஆசனங்களைக் கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் 159 ஆசனங்களைக் கைப்பறாறியிருக்கிறது. இவற்றில் 141 ஆசனங்கள் நேரடியாக மாவட்ட அடிப்படையில் பெறப்பட்டவையாக இருக்கின்ற அதேவேளை 18 ஆசனங்கள் தேசியப்பட்டியல் மூலம் கிடைத்தவை.

விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறை 46 வருடங்களுக்கு முன்னர் நடைமுறைக்கு வந்த பிறகு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை ஒரு அரசியல் கட்சியினால் பெறக்கூடியதாக இருந்தது இதுவே முதற்தடவையாகும். நாட்டின் 22 தேர்தல் மாவட்டங்களிலும் இருந்து தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருப்பது பெரும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அம்சமாகும். வடக்கில் பருத்தித்துறை தொடக்கம் தெற்கில் தேவேந்திரமுனை வரையும் மேற்கில் சிலாபம் தொடக்கம் கிழக்கில் மட்டக்களப்பு வரை இந்த 2024 தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப் பட்டிருக்கிறார்கள்.

தெரிவுசெய்யப்பட்ட 141 பாராளுமன்ற உறுப்பினர்களில் 11 பேர் தமிழர்கள், 7 பேர் முஸ்லிம்கள். 11 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில் 7 பேர் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்கள். அவர்களில் மூவர் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி நிருவாக மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இருந்து ” திசைகாட்டி ” சின்னத்தில் தெரிவானவர்கள் என்பது முக்கியமாக கவனிக்க வேண்டியதாகும்.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க 2024 செப்டெம்பர் 21 ஜனாதிபதி தேர்தலில் பதினான்கு மடங்கு பாய்ச்சலில் வெற்றி பெற்றார். 2019 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் வெறுமனே 418, 553 (3.16 சதவீதம் ) வாக்குகளை மாத்திரமே பெற்ற திசாநாயக்க 2024 ஜனாதிபதி தேர்தலில் 5,634, 915 ( 42.31 சதவீதம் ) வாக்குகளைப் பெறக்கூடியதாக இருந்தது. இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு அவர் பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை மிகவும் புகழ்மிக்கதொரு வெற்றிக்கு வழிநடத்தினார். 2020 பாராளுமன்ற தேர்தலில் 445, 958 ( 3.28 சதவீதம் ) வாக்குகளைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி இந்த தடவை அதன் வாக்குகளை பத்தொன்பது மடங்காக அதிகரித்தது. அதற்கு 6,863, 186 ( 61.6 சதவீதம் ) கிடைத்தது. திசாநாயக்கவின் ஜனாதிபதி தேர்தல் வெற்றியை விடவும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற தேர்தல் வெற்றி கூடுதல் பாய்ச்சலுடன் பிரமாண்டமானதாக இருந்தது.

தமிழ்,முஸ்லிம் வாக்குகள்

கணிசமான எண்ணிக்கையில் தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் வாக்குகளைக் கவருவதில் தேசிய மக்கள் சக்திக்கு இருந்த ஆற்றலே அதன் பாராளுமன்ற தேர்தல் வெற்றியின் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாகும். முன்னைய நாட்களில் தேசிய மக்கள் சக்தியின் பிரதான அங்கத்துவ கட்சியான ஜே.வி.பி. பிரதானமாக ஒரு சிங்களப் பெரும்பானமைக் கட்சியாகவே நோக்கப்பட்டது. சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ஜே.வி.பி.யில் உறுப்பினர்களாக இருந்திருக்கிறார்கள் என்றபோதிலும், சிறிய சனத்தொகையைக் கொண்ட அந்த சமூகங்கள் மத்தியில் இருந்து கணக்கில் பெரிதாக எடுக்க முடியாக அளவு வாக்குகளை மாத்திரமே அந்த கட்சி பெற்றது. ஒரு ” சிங்களக் கட்சியாகவே ” அது கருதப்பட்டது.

ஆனால், அந்த எண்ணம் 2024 பாராளுமன்ற தேர்தலில் ஒரு பண்பு சார்ந்த ( Qualitative change ) மாற்றத்துக்கு உள்ளாகியிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. முன்னர் கூறியதைப் போன்று தேசிய மக்கள் சக்தியினால் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் இருந்து போதுமானளவு வாக்குகளைப் பெற்று தமிழ்பேசும் மக்களைப் பெரும்பான்மையினராக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து பாராளுமன்ற ஆசனங்களைக் பெறக்கூடியதாக இருந்திருக்கிறது. யாழ்ப்பாண மாவட்டத்தின் மொத்தம் ஆறு ஆசனங்களில் மூன்று ஆசனங்களை வென்றெடுத்தமையே தேசிய மக்கள் சக்தியின் வெற்றியில் மிகவும் பாராட்டத்தக்க ஒரு செயற்பாடாகும். இது குறித்து பெரும்பாலான ஊடகங்கள் செய்திகளிலும் கட்டுரைகளிலும் சிறப்பாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக மாத்திரமல்ல, இனத்துவ உறவுகளில் ஒரு புதிய பாதை திறப்பாகவும் அமைகிறது.

யாழ்ப்பாணம் காலங்காலமாக இலங்கைத் தமிழர்களின் கலாசாரத் தலைநகரம் என்று கருதப்பட்டு வந்திருக்கிறது. யாழ்ப்பாணம் என்பது நகரத்தின், தேர்தல் தொகுதியின், நிருவாக மாவட்டத்தின், தேர்தல் மாவட்டத்தின் பெயராக இருக்கிறது. புவியியல் அடிப்படையில் ஆனையிறவின் ஊடாக பெருநிலப்பரப்புடன் இணைக்கப்படும் வடக்கு குடாநாட்டின் பெயராகவும் யாழ்ப்பாணம் இருக்கிறது.

தமிழ் அரசியல் கோட்டை

யாழ்ப்பாணம் அண்மைக்காலமாக இலங்கைத் தமிழர்களின் அரசியல் கோட்டையாக கருதப்பட்டு வந்திருக்கிறது. முன்னைய காலத்தில் யாழ்ம்பாணமே இலங்கைத் தமிழர்கள் செறிவாக வாழ்ந்த பிரதேசமாக இருந்திருக்கிறது. அவர்கள் யாழ்ப்பாணத் தமிழர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். தொகுதி அடிப்படையிலான பழைய தேர்தல் முறை நடைமுறையில் இருந்தபோது யாழ்ப்பாணந்தில் தனி உறுப்பினர்களைக் கொண்ட பதினொரு பாராளுமன்ற தொகுதிகள் இருந்தன. விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறை நடைமுறைக்கு வந்த பின்னரும் கூட அதே எண்ணிக்கையே தொடர்ந்தும் இருந்தது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய இரு நிருவாக மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இருந்து பதினொரு பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து தெரிவு செய்யப்பட்டு வந்தனர்.

ஏனைய மாவட்டங்களில் இருந்த தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏழுக்கும் பத்துக்கும் இடைப்பட்டதாகவே இருந்தது. அதனால் பதினொரு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட யாழ்ப்பாணமே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் அரைவாசிக்கும் அதிகமானவர்களை தன்னகத்தே கொண்டதாக விளங்கியது. அதன் விளைவாக அரசியல் ரீதியில் செல்வாக்குடையதாக யாழ்ப்பாண மாவட்டம் இருந்தது. பாரம்பரியமாக இலங்கை தமிழர்களின் அரசியல் தலைமைத்துவமும் யாழ்ப்பாணத்தில் இருந்தே வந்தது. அது இலங்கைத் தமிழ்த் தேசியவாதத்தின் அரசியல் கோட்டையாக விளங்கியது.

மக்கள் வெளியேற்றம்

விடுதலை புலிகளுக்கும் அரசாங்க படைகளுக்கும் இடையிலான சுமார் மூன்று தசாப்தகால போரின் விளைவாக பயங்கரமான துன்பங்களை அனுபவித்த மக்களில் பெரும் எண்ணிக்கையானவர்கள் வெளிநாடுக்கும் இலங்கையின் ஏனைய பாகங்களுக்கும் சென்றார்கள்..இந்த வெளியேற்றம் 2009 ஆம் ஆண்டில் போர் முடிவுக்கு வந்த பின்னரும் கூட தொடருகிறது. இவ்வாறாக மக்கள் வெளிநாடுகளுக்கும் உள்நாட்டிலும் பல பாகங்களுக்கும் சென்றதன் எதிர்மறையான விளைவுகளில் ஒன்று யாழ்ப்பாணத்தின் சனத்தொகையில் ஏற்பட்ட வீழ்ச்சியாகும்.

மக்களின் எண்ணிக்கை குறைவடைந்த நிலையில் , அரசியல் பிரதிநிதித்துவமும் அளவுசார்ந்து வீழ்ச்சியடையத் தொடங்கியது. சனத்தொகை வீழ்ச்சியின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக வீழ்ச்சியடைந்தது. ஒரு காலத்தில் பதினொரு பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்த யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது ஆறு உறுப்பினர்களே தெரிவு செய்யப்படுகிறார்கள்.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்

அவ்வாறு இருந்த போதிலும், யாழ்ப்பாணம் தமிழ்த் தேசியவாதத்தின் அரணாக தொடர்ந்தும் விளங்கியது. யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதானமாக தமிழர்களே வசித்துவருவதனால் அது தமிழர்களை மாத்திரமே் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்துவந்தது. மேலும், பிரிட்டனிடம் இருந்து இலங்கை / ஸ்ரீலங்கா சுதந்திரமடைந்த நாட்களில் இருந்து யாழ்ப்பாணம் சிங்களவர்களின் ஆதிக்கத்திலான தேசியக் கட்சிகளில் இருந்து அல்ல, தமிழ்க் கட்சிகளில் இருந்தே பொதுவில் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்தது. ஆனால், ஒரு சில விதிவிலக்குகளும் இருந்தன.

சேர் பொன்னம்பலம் இராமநாதனின் மருமகன் சுப்பையாபிள்ளை நடேசன் (நடேசபிள்ளை ) 1952 பாராளுமன்ற தேர்தலில் காங்கேசன்துறை தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பொன்னம்பலம் (பொன்) கந்தையா 1956 பாராளுமன்ற தேர்தலில் பருத்தித்துறை தொகுதியில் இருந்து தெரிவுசெய்யப்பட்டார்.

தியாகராஜா மகேஸ்வரன் 2000 & 2001 பாராளுமன்ற தேர்தல்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2008 ஆம் ஆண்டில் மகேஸ்வரனின் மரணத்துக்கு பிறகு அவரது மனைவி விஜயகலா மகேஸ்வரன் 2010 & 2915 பாராளுமன்ற தேர்தல்களில் யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்டு இரு தடவைகளும் வெற்றி பெற்றார். 2020 தேர்தலில் அவர் தோல்வி கண்டார். அந்த ஆண்டில் யாழ்ப்பாணத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட அங்கஜன் இராமநாதன் வெற்றி பெற்றார். அவரே மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளையும் பெற்றார்.

இவர்களுக்கு புறம்பாக, ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்(ஈ.பி.டி.பி.) டக்ளஸ் தேவானந்தா 1994 ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக சகல பாராளுமன்ற தேர்தல்களிலும் வெற்றி பெற்றுவந்தார். சிங்களவர்களின் ஆதிக்கத்திலான தேசியக் கட்சிகளுடன் ஈ.பி.டி.பி. அணி சேரந்திருந்தாலும், தேர்தல்களில் அதன் வீணைச் சின்னத்தின் கீழேயே போட்டியிட்டு வந்தது. இந்த வருட பாராளுமன்ற தேர்தலில் தேவானந்தா தோல்வியடைந்து விட்டார்.

எனவே. சிங்கள தலைவர்களின் தலைமையிலான தேசியக் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு சிலரினால் மாத்திரமே யிழ்ப்பாணத்தில் ஆசனங்களை வென்றெடுக்கக் கூடியதாக இருந்தது. தேசிய கட்சிகள் தமிழ்த் தேசியவாதத்தின் எதிரிகள் என்று வர்ணிக்கப்பட்டதே அதற்கு காரணமாகும். யாழ்ம்பாணம் தமிழ்த் தேசியவாதத்தின் கோட்டையாக கருதப்படுகிறது. அதனால், தமிழ்ப் பிராந்திய கட்சிகளில் இருந்து அல்லது தமிழினக் கட்சிகளில் இருந்து மாத்திரமே பாராளுமன்ற உறுப்பினர்களை அந்த பிராந்தியம் தெரிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோட்டைக்குள் ஊடுருவல்

இந்த நிலைவரம் அண்மைய பாராளுமன்ற தேர்தலினால் சடுதியாக மாற்றப்பட்டு விட்டது. யாழ்ப்பாண தமிழ்த் தேசியவாதக் கோட்டைக்குள் ஊடுருவல் இடம் பெற்றுவிட்டது. யாழ்ப்பாணத்தில் கூடுதல் எண்ணிக்கையான வாக்குகளை தேசிய மக்கள் சக்தி பெற்றது. அதனால் அது போனஸ் ஆசனம் ஒன்றுக்கும் உரித்துடையதாகியது. தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் மூன்று ஆசனங்களைக் கைப்பற்றியது. அதற்கு மாவட்டத்தில் 80, 830 வாக்குகள் ( 24.85 சதவீதம் ) கிடைத்தன.

இதில் குறிப்பிடத்தக்க சாதனை என்னவென்றால், செப்டெம்பர் 21 ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரா குமார திசாநாயக்கவுக்கு யாழ்ப்பாணத்தில் 27, 086 வாக்குகள் மாத்திரமே கிடைத்த அதேவேளை, இரு மாதங்களுக்குள்ளாக பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அதன் வாக்குகளை பெரும்பாலும் மூன்று மடங்காக அதிகரிக்கக்கூடியதாக இருந்ததேயாகும். இலங்கை தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் போன்ற தமிழ்த் தேசாயவாதக் கட்சிகளை விடவும் கூடுதலான வாக்குகளை தேசிய மக்கள் சக்தி பெற்றது. இந்த தமிழ்க் கட்சிகளினால் முறையே 63,327 (19.47 சதவீதம் ) , 22, 513 (6.92 சதவீதம் ), 27,986 ( 8.60 சதவீதம் ) வாக்குகளே கிடைத்தன.

மூன்று யாழ்ப்பாண உறுப்பினர்கள்

யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மூன்று தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறூப்பினர்களில் மிகவும் கூடுதலான வாக்குகளை பெற்றவர் கருணானந்தன் இளங்குமரன். அவருக்கு 32,102 விருப்பு வாக்குகள் கிடைத்தன. யாழ்ப்பாணம் மாநகரசபை பகுதிக்குள் வசிக்கும் இளங்குமரன் தென்மராட்சியின் உசன் கிராமத்தைச் சேர்ந்தவர். ஐந்து வருடங்களாக அவர் தேசிய மக்கள் சக்தியின் முழுநேரச் செயற்பாட்டாளராக இயங்கிவந்திருக்கிறார். அவரே யாழ்ப்பாணத்தில் திசைகாட்டி சி்ானத்தில் போட்டியிட்டவர்களில் முதன்மை வேட்பாளர்.

இரண்டாவதாக 20, 430 வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்டவர் மருத்துவரான சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா. அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 30 வருடங்களுக்கும் அதிகமான காலம் பணியாற்றி பிரதி பணிப்பாளராக அண்மையில் ஓய்வு பெற்றவர். இப்போது அவர் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் பணியாறறுகிறார்.

யாழ்ப்பாணத்தின் மூனாறாவது தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன். அவரா 17 ஆயிரம் விருப்பு வாக்குகளுடன் தெரிவு செயாயப்பட்டார்.. ரஜீவன் யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அண்மைக்காலம் வரை இலங்கை தமிழரசு கட்சியின் தீவிர ஆதரவாளராக இருந்துவந்த அவர் ஜனாதிபதி தேர்தலுக்கு சில மாதங்கள் முன்னதாக தேசிய மக்கள் சக்தியில் இணைந்து அநுரா குமார திசாநாயக்கவுக்காக பிரசாரம் செய்தார்.

இராமலிங்கம் சந்திரசேகர்

யாழ்ப்பாணத்தில் ஜே.வி.பி. / தேசிய மக்கள் சக்திக்கு பின்னால் இருப்பவர் இராமலிங்கம் சந்திரசேகரன். அவர் கட்சியின் வடக்கு மாவட்டத்துக்கான அமைப்பாளர். மலையகத்தைச் சேர்ந்த அவர் ஜே.வி.பி.யினதும் தேசிய மக்கள் சக்தியினதும் நிறைவேற்று குழுவின் உறூப்பினராக இருக்கிறார். முன்னரும் ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த சந்திரசேகன் இந்த தடவை தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டு அநுரா குமார திசாநாயக்கவின் அமைச்சரவையில் கடற்தொழில், நீரியல்வள அமைச்சராக பதவியேற்றிருக்கிறார்.

சந்திரசேகரன் ஜே.வி.பி.யின் அமைப்பாளராக யாழ்ப்பாணத்தில் பல வருடங்களாக செயற்பட்டு வந்திருக்கிறார். ஜே.வி.பி. யாழ்நகரில் இரு வீடுகளை வாடகைக்கு எடுத்து ஒன்றை கட்சியின் அலுவலகமாகவும் மற்றையதை கட்சியின் செயற்பாட்டாளர்களின் தங்குமிடமாகவும் பயன்படுத்துகிறது.

சந்திரசேகரன் தமிழ்ப் பத்திரிகைகள், தொலைக்காட்சி நிலையங்கள் மற்றும் யூரியூப் செய்தியாளர்களுடன் நெருக்கமான உறவை வளர்த்துக்கொண்டார். அவற்றின் பல நிகழ்ச்சிகளில் அவர் தோன்றியிருக்கிறார். விவசாயிகள், மீனவர்கள், மருத்துவ அதிகாரிகள், ஆசிரியர்கள் அலுவவகப் பணியாளயாளர்கள் என்று யாழ்ப்பாண மக்கள் மத்தியில் பல்வேறு பிரிவினர் மத்தியிலும் பிரசாரங்களைச் செய்து அவர்களை ஜே.வி.பி. அணிக்குள் அவர் சேர்த்துக்கொண்டார். யாழ்ப்பாணத்தில் ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்திக்கு பரந்தளவில் உறூப்பினர்களை சந்திரசேகரனால் சேர்த்துக் கொள்ளக்கூடியதாக இருந்தது முக்கியாமாக கவனிக்க வேண்டிய அம்சமாகும். இலட்சிய நோக்குடனான படித்த இளைஞர்களும் இந்த உறுப்பினர்களில் அடங்குவர்.

அநுரா குமார திசாநாயக்கவுடனும் பிமால் இரத்நாயக்க மற்றும் விஜித ஹேரத்துடனும் ஆலோசனை கலந்து சந்திரசேகரன் யாழ்ப்பாண மாவட்டத்துக்கான ஜே வி.பி.யின் வேட்பாளர்கள் பட்டியலை பூர்த்தி செய்தார். யாழ்ப்பாணத்தில் பல வாரங்களாக தங்கியிருந்து பிமால் இரத்நாயக்க சந்திரசேகரனுடன் சேர்ந்து ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தியின் பிரசார நடவடிக்கைகளை வழிகாட்டி ஒருங்கிணைத்தார்.

முன்னர் கூறப்பட்டதைப் போன்று அநுரா குமார திசாநாயக்க ஜனாதிபதி தேர்தலில் சுமார் 27,000 வாக்குகளை மாத்திரமே பெற்றார். இந்த எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்து பாராளுமன்ற தேர்தலில் 80 ஆயிரத்தை எட்டியது. இந்த வாக்குகள் எங்கிருந்து வந்தன? இலங்கை தமிளரசு கட்சி, தமிழ் காங்கிரஸ்,ரெலோ, ஈ.பி.டி.பி.,ஈ.பி.ஆர்.எல். எவ், புளொட் மற்றும ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி போன்ற அரசியல் கட்சகளின் வேட்பாளர்களினால் பெறப்பட்ட வாக்குகளில் ஏற்பட்ட வீழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது தேசிய மக்கள் சக்தியின் வாக்குகள் இந்த சகல கட்சிகளிடம் இருந்தும் புதிய வாக்காளர்களிடம் இருந்துமே வந்திருப்பதாக தோன்றுகிறது. பெண்கள், இளைஞர்களிடமிருந்தும் திரளான வாக்குகள் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்திருப்பதாக தோன்றுகிறது.


வாக்கு கணிப்பும் உறுப்பினர்களும்

யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் மெச்சத்தக்க செயற்பாடு பெருமளவுக்கு கவனத்தை ஈர்த்திருக்கின்ற போதிலும், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஏனைய மாவட்டங்களிலும் கூட அது நன்றாக செயற்பாட்டை வெளிக்காட்டியிருப்பதையும் கவனிக்கவேண்டும். வன்னி தேர்தல் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு 39,894 வாக்குகளுடன் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்திருக்கிறார்கள். திருகோணமலை மாவட்டத்தில் 87,031 வாக்குகளுடன் இரு உறுப்பினர்களும் மட்டக்களப்பு மாவட்டத்திலா 55,498 வாக்குகளுடன் ஒரு உறுப்பினரும் அம்பாறை / திகாமடுல்ல மாவட்டத்தில் 146,313 வாக்குகளுடன் நான்கு உறுப்பினர்களும் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்திருக்கிறார்கள்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் தேசிய மக்கள்சக்தியில் இருந்து எல்லாமாக 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகியிருக்கிறார்கள். இவர்களில் ஏழு பேர் தமிழர்கள், ஐந்து பேர் சிங்களவர்கள். வடக்கு, கிழக்கின் மாவட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தை தவிர ஏனைய சகல மாவட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தி முதலாவதாக வந்திருப்பது கவனிக்கத்தக்கது. மட்டக்களப்பில் தமிழரசு கட்சி முதலாவதாகவும் தேசிய மக்கள் சக்தி இரண்டாவதாகவும் வந்தன.

இரு மாகாணங்களிலும் இருந்தும் பாராளுமன்ற உறுப்பானர்களின் எண்ணிக்கை 28 ஆகும்( வஞக்கில் 12, கிழக்கில் 16). கட்சிவாரியாக பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ; தேசிய மக்கள் சக்தி — 12, தமிழரசு கட்சி — 7, ஐக்கிய மக்கள் சக்தி — 3, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் — 2, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் — 1, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி — 1, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் — 1, ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி — 1, சுயேச்சைக் குழு 17 — 1.

இன அடிப்டையில் பார்த்தால் 28 பாராளுமன்ற உறுப்பினர்களில் 17 பேர் தமிழர்கள், 6 முஸ்லிம்கள், 5 சிங்களவர்கள். இவர்களில் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த தமிழர்கள் ஏழு பேர்..சிங்களவர்கள் ஐவர்.

ஜனாதிபதி தேர்தல்

குறிப்பாக யாழ்ப்பாணத்திலும் பொதுவில் ஏனைய தமிழ்ப் பகுதிகளிலும் தேசிய மக்கள் சக்தியின் இந்த அரசியல் பாய்ச்சலில் முக்கியமாக அவதானிக்கக்கூடியதாக இருக்கும் சுவாரஸ்யமான அம்சம்
என்னவென்றால் தமிழ்த் தேசியவாத கட்சிகளிடமிருந்து வந்த மிகவும் கடுமையான தாக்குதல்களுக்கு மத்தியிலும் தேசிய மக்கள் சக்தியினால் இந்த வெற்றியைச் சாதிக்கக்கூடியதாக இருந்ததுதான். ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களின்போது தமிழ்ப் பகுதிகளில் அநுரா குமார திசாநாயக்க மீதோ அல்லது தேசிய மக்கள் சக்தி மீதோ பெரிதாக தாக்குதல் தொடுக்கப்படவில்லை. வடக்கு, கிழக்கில் அப்போது தமிழர்கள் மத்தியில் பிரதான பிரச்சி னை வேறுபட்டதாக இருந்ததே அதற்கு காரணமாகும்.

ஏழு தமிழ்க் கட்சிகளும் சுமார் 80 சிவில் சமூக அயைப்புக்களும் சேர்ந்து மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனை தமிழ்ப் பொதுவேட்பாளராக களத்தில் இறக்கின. அதை பிரதான தமிழ்க் கட்சியான தமிழரசு கட்சி கடுமையாக எதிர்த்தது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் அகில இலங்கை மக்கள் காஙகிரஸ் போன்ற ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து தமிழரசு கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்தது. ஈ.பி.டி.பி. மற்றும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் போன்ற மற்றைய தமிழ்க் கட்சிகள் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட அன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்தன. தமிழ் காங்கிரஸ் வழமை போன்று ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரித்தது.

அந்த சூழ்நிலைகளின் கீழ், தமிழ்ப் பகுதிகளில் ஜனாதிபதி தேர்தல் போட்டி பிரதானமாக சஜித் பிரேமதாசவுக்கும் அரியநேத்திரனுக்கும் இடையிலானதாகவே இருந்தது. அதனால் அநுரா பெரியளவில் தாக்குதலுக்கு உள்ளாகவில்லை. அது தவிர அநுரா வெற்றி பெறுவார் என்று வடக்கு, கிழக்கில் மிகவும் சிலரே நம்பினர். மூன்று சதவீத வாக்குகளில் இருந்து ஐம்பது சதவீத வாக்குகளை எட்டிப்பிடிப்பது சாத்தியமில்லை என்ற மனநிலையே அதற்கு காரணமாக இருந்தது.

இதெல்லாம் அநுரா குமார ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைந்த பிறகு மாறிவிட்டது. தமிழர்கள் மத்தியில் அவரைப் பற்றிய ஒரு நேர்மறையான பெரிய படிமம் ஏற்பட்டவிட்டது. இந்த போக்கு பாராளுமன்ற தேர்தலிலும் கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியதைக் காணக்கூடியதாக இருந்தது. பாராளுமன்ற தேர்தலில் வடக்கிலும் கிழக்கிலும் முக்கியமான ஒரு அரசியல் சக்தியாக தேசிய மக்கள் சக்தி இப்போது கருதப்பட்டது. யாழ்ப்பாணத்தில் ஒரு ஆசனத்தையும் வடக்கு,கிழக்கின் ஏனைய பகுதிகளில்்சில ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும் என்று ஊகிக்கப்பட்டது.

தேசிய மக்கள் சக்திக்கு எதிரான பிரசாரம்

பிரதான தமிழ்க்கட்சிகள் விரைவாகவே தேசிய மக்கள் சக்தியை கடுமையாகத் தாக்கி பிரசாரங்களை செய்யத் தொடங்கின. தேசிய மக்கள் சக்தியின் முன்னைய அவதாரமான ஜே.வி.பி.யின் கடந்தகாலம் நினைவு மீட்டப்பட்டது. சுனாமி நிவாரணக் கட்டமைப்பை தடுத்தது, வடக்கு — கிழக்கு இணைப்பை துண்டித்தது, இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கையையும் மாகாண சபைகளையும் எதிர்த்தது, அதிகாரப்பரவலாக்கத்துக்கு எதிராக மத்தியமய ஆட்சிமுறையில் நாட்டம் காட்டியது, பிரசாரங்களின் மூலமாக போர் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தது, ஆயுதப்படைகளுக்கு ஆட்களை திரட்டுவதை ஊக்குவித்தது, சமாதானப் பேச்சுவார்த்தைகளைை எதிர்த்தது போன்ற ஜே.வி.பி.யின் முன்னைய நடவடிக்கைகள் சுட்டிக்காட்டப்பட்டன.

ஜே.வி.பி.யும் அதன் நீட்சியான தேசிய மக்கள் சக்தியும் தமிழர்களுக்கு விரோதமானவை என்று வர்ணிக்கப்பட்டன. தேசிய மக்கள் சக்தியை ஆதரிக்கக்கூடாது என்று தமிழ் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தேசிய மக்கள் சக்திக்கு எதிரான பிரசாரங்கள் யாழ்ப்பாணத்தில் உச்சநிலைக்கு வந்தன. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் காங்கிரஸ் அரசியல் கூட்டங்கள் மற்றும் செய்தியாளர்கள் மகாநாடுகள் மூலமாக தேசிய மக்கள் சக்தியை கடுமையாக தாக்கியது. யாழ்ப்பாணத்தில் ஆறு பாராளுமன்ற ஆசனங்களே இருப்பதால் அவற்றுக்கு மிகவும் உக்கிரமான போட்டி நிலவியது. திசைகாட்டிக்கு அளிக்கப்படக்கூடிய வாக்குகள் தமிழ்த் தேசியவாத கட்சிகளின் வாக்குகளை ஊடறுத்து அவற்றின் வெற்றி வாய்ப்புக்களை குறைத்துவிடும் ன்று அஞ்சப்பட்டது. அதனாலேயே தேசிய மக்கள் சக்திக்கு எதிராக அந்தளவு தீவிர பிரசாரங்கள்.

அநுர அலை

தேசிய மக்கள் சக்தியின் கடந்த காலத்தைப் பற்றி விமர்சனங்கள் செய்யப்பட்டு அதை தமிழருக்கு விரோதமான கட்சி என்று காட்சிப்படுத்தப்பட்ட போதிலும் கூட அது தேர்தலில் நன்றாகவே அதன் செயற்பாட்டை வெளிக்காட்டியது. மேலும், யாழ்ப்பாணத்தில் மிகவும் கூடுதலான வாக்குகளைப் பெற்ற தனியான ஒரு கட்சியாக மேலெழுந்ததன் மூலம் தேசிய மக்கள் சக்தி ஒரு தடுமாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. தமிழ்த் தேசியவாத அரசியலின் கோட்டையான யாழ்ப்பாணத்தை அநுரா” அலை ” சூழ்ந்து கொண்டது. இது எவ்வாறு நடந்தது, அதற்கான காரணங்கள் எவை என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
____________

D.B.S.Jeyaraj can be reached at dbsjeyaraj@yahoo.com

ஆங்கில மூலம்: டி. பி. எஸ். ஜெயராஜ் (Daily Mirror)

தமிழில்: வீரகத்தி தனபாலசிங்கம்

நன்றி: வீரகேசரி

************************************************************************************************