3 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக பதினான்கு மடங்கு பாய்ச்சலில் அநுர குமார திசாநாயக்க எவ்வாறு ஜனாதிபதி பதவியை வென்றெடுத்தார்?

டி.பி.எஸ். ஜெயராஜ்

அநுர குமார திசாநாயக்க ; இலங்கை வானில் ‘ இடதுசாரி ‘ நட்சத்திரம் – 6

ஜனதா விமுக்தி பெரமுனவினதும் ( ஜே.வி.பி.) தேசிய மக்கள் சக்தியினதும் தலைவர் அநுரா குமார திசாநாயக்க 2019 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் திசைகாட்டி சின்னத்தில் போட்டியிட்டார். வெறுமனே 418, 553 ( 3.16 சதவீதம் ) வாக்குகளைப் பெற்று மிகவும் அவர் பின்தங்கிய ஒரு மூன்றாவது இடத்துக்கு வந்தார். மோசமான தோல்வியைக் கண்டு அவர் துவண்டு போகவில்லை. தனது படிமத்தை புதுப்பித்துக்கொண்டு தனது கட்சியின் அரசியல் அணுகுமுறையை முற்றிலும் வேறுபட்டதாக மாற்றிக்கொண்டார்.

அதன் மூலமாக ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மககள் சக்தியில் அவரால் மெச்சத்தக்க ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது. 2024 செப்டெம்பர் 21 ஜனாதிபதி தேர்தலில் அநுரா குமார திசாநாயக்க முதலாவதாக வந்தார். அரசியல் ரீதியில் அது ஒரு பிரமாண்டமான பாய்ச்சல். அவர் முதலாவது சுற்று வாக்கு எண்ணிக்கையில் 5, 634, 915 ( 42.31 சதவீதம் ) வாக்குகளையும் இரண்டாவது சுற்று எண்ணிக்கையில் 5, 740, 179 ( 55.89 சதவீதம் ) வாக்குகளையும் பெற்றார். அது உண்மையில் பிரபல்யமான ஒரு வெற்றியேயாகும்.

அரசியலில் அநுரா குமார திசாநாயக்கவின் கவனத்தை ஈர்க்கும் இந்த குறிப்பிடத்தக்க எழுச்சியை பல பாகங்கள் கொண்ட இந்த கட்டுரையில் ஏற்கெனவே விரிவாக எழுதியிருக்கிறேன். அவை றோஹண விஜேவீரவுக்கு பிறகு ஜே.வி.பி.யின் மறுபிறப்பும் வளர்ச்சியும், அந்த கட்சியின் அணிகளுக்கும் அநுராவின் சீரான வளர்ச்சி மற்றும் பரந்த சமூகத்தில் இருந்து விலகிநின்ற ஒரு கட்சி என்ற நிலையில் இருந்து பெருமளவுக்கு சமூகத்தில் பல தரப்புகளையும் அரவணைக்கின்ற ஒரு அரசியல் இயக்கமாக ஜே.வி.பி.யின் உருநிலை மாற்றம் ஆகியவற்றை பற்றியவையாக அமைந்தன. இந்த இறுதிப் பாகத்தில் 2024 ஜனாதிபதி தேர்தலில் அவர் திசைகாட்டி சின்னத்தில் போட்டியிட்டு எவ்வாறு வெற்றி பெற்றார் என்பதை விளக்குகிறது.

அநுராவின் வாக்குகள் 3 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக அதிகரிக்கக்கூடியதாக எவ்வாறு அவர் பிரமாண்டமான பாய்ச்சலைச் செய்தார்? 2019 ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச பெற்ற வாக்குகளில் சுமார் 80 சதவீதமானவை இந்த தடவை அநுராவுக்கு கிடைத்தன என்று பூர்வாங்க ஆய்வு ஒன்று காட்டுகிறது. கோட்டாபயவின் 69 இலட்சம் வாக்குகளில் சுமார் 15 சதவீதமானவை ரணில் விக்கிரமசிங்கவுக்கு சென்ற அதேவேளை எஞ்சியவை நாமல் ராஜபக்சவுக்கும் திலித் ஜெயவீரவுக்கும் இடையில் பகிரப்பட்டன. வெளிப்படையாக தெரியாவிட்டாலும் கூட தேர்தலில் கோட்டாபயவின் வாக்குகளை பிரதானமாக அநுரா இலக்குவைத்து பிரசாரம் செய்தார் என்று தோன்றுகிறது.

அநுரா குமார திசாநாயக்கவின் எஞ்சிய வாக்குகள் இரு பிரிவினரிடம் இருந்து கிடைத்தன. இளைஞர்களின் குறிப்பாக முதற் தடவை வாக்காளர்களின் வாக்குகளில் பெரும்பான்மையானவை அவருக்கு கிடைத்தன போன்று தெரிகிறது. மற்றைய பிரிவினர் தமிழ், முஸ்லிம் வாக்காளர்கள். வடக்கு, கிழக்கிலும் மலையகத்திலும் உள்ள மாவட்டங்களில் அநுராவை விடவும் சஜித் பிரேமதாசவும் ரணில் விக்கிரமசிங்கவும் பெருமளவுக்கு கூடுதலான வாக்குகளை பெற்றிருந்தாலும் கூட, சிறுபான்மை இனத்தவர்கள் பெரும்பான்மையினராக வாழும் அந்த மாவட்டங்களில் அநுராவும் ( 2019 தேர்தலையும் 2024 தேர்தலையும் ஒப்பிடும்போது ) தனது வாக்குகளை கணிசமானளவுக்கு அதிகரித்திருக்கிறார்.


தேர்தல் தந்திரோபாயம்

அநுரா குமார திசாநாயக்கவின் தேர்தல் வெற்றி பிரதானமாக இலங்கையில் தோன்றிய பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து அறகலய (போராட்டம்) என்று வர்ணிக்கப்பட்ட மக்கள் கிளர்ச்சியின்போது அவர் கடைப்பிடித்த தந்திரோபாயத்தின் விளைவானது. முன்னென்றுமில்லாத வகையிலான பொருளாதார நெருக்கடியை நாடு எதிர்நோக்கியபோது ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

கூட்டு முயற்சி ஒன்றின் ஊடாக பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்வதற்கு தேசிய நலன்களை மனதிற்கொண்டு ஒத்துழைக்க முன்வருமாறு ஜனாதிபதி விக்கிரமசிங்க எதிரணியினருக்குை தொடர்ச்சியாக அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தபோது தேசிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஒரு சதுரங்க சூழ்நிலையை எதிர்நோக்கின. அத்தகைய ஒரு அழைப்பை நிராகரித்து ஒத்துழைப்பு கொடுக்காத ஒரு பகைமையான அணுகுமுறையை மக்கள் ஏற்றுக்கொள்ளாமல் விட்டிருக்கக்கூடும். நெருக்கடியான ஒரு சூழ்நிலையில் நாட்டு நலன்களுக்கு மேலாக கட்சி நலன்களுக்கு முன்னுரிமை கொடுப்பதற்காக அவர்களை மக்கள் கண்டித்திருக்கவும் கூடும்.

ஐக்கிய மக்கள் சக்தியும் ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தியும் பொருளாதார நெருக்கடியின் பாரதூரத்தன்மையை குறைத்து மதிப்பிட்டதன் மூலம் இந்த சிக்கலான சூழ்நிலையை கடந்துபோயின. விக்கிரமசிங்கவை ராஜபக்சாக்களின் ஒரு பொம்மை என்று அவர்கள் குற்றஞ்சாட்டத் தொடங்கினார்கள். அவர்கள் நிலைவரத்தின் முக்கியத்துவத்தை மறந்து அதை கேலி செய்தார்கள். பொருளாதாரச் சவாலை எதிர்கொள்வதற்கு ஒத்துழைக்க வேண்டிய தேவையை உணராமல் பிரதான எதிர்க்கட்சிகள் பிரச்சினையை செய்ததாகக் கூறப்படும் கொள்ளை, ஊழல் மோசடிக்ளைக் கையாளும் விவகாரமாக திசைதிருப்ப முயன்றன. ராஜபக்சாக்களுக்கு முண்டுகொடுத்து மெதமுலான குடும்பத்தை தண்டனையில் இருந்து பாதுகாக்கும் வேலையில் மாத்திரம் விக்கிரமசிங்க ஈடுபட்டுகிறார் என்று மாத்திரம் குற்றஞ்சாட்டி அவர்கள் அவருக்கு ஆதரவளிக்க மறுத்தார்கள். விக்கிரமசிங்க பிரதானமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதுடன் பாராளுமன்றத்தில் சட்டங்களை நிறைவேற்றுவதற்கு அவர்களிலேயே தங்கியிருக்க வேண்டியிருந்ததால் அந்த சூழ்நிலை எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டு மேலும் வலுப்பெறுவதற்கு வாய்ப்பாகப் போனது.

சஜித் பிரேமதாச செய்த பாரதூரமான அரசியல் தவறு எதிர்க்கட்சி தலைவரையும் விட தன்னை முக்கியமானவராக காட்டிக்கொள்வதற்கு அநுரா குமார திசாநாயக்கவுக்கு வாய்ப்பைக் கொடுத்தது. ராஜபக்சாக்கள் தலைமையிலான பொதுஜன பெரமுன ஊழல்தனமானது என்பதால் ஒதுக்கப்பட வேண்டியது என்ற நிலைப்பாட்டை எடுத்த ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தி அது விடயத்தில் மிகவும் உறுதியாக இருந்தது. பொதுஜன பெரமுனவுடனோ அல்லது அதில் இருந்து வெளியேறி தங்களை சுயாதீனமான குழுவினர் என்று அறிவித்த பாராளுமன்ற உறுப்பினர்களுடனோ சேர்ந்து செயற்பட அவர்கள் மறுத்தார்கள். டலஸ் அழகப்பெருமா தலைமையிலான ஒரு குழுவினர் தேசிய மக்கள் சக்தியில் இணைந்துகொள்ள விரும்பியபோது அநுரா திசைகாட்டியின் கதவுகளை அவர்களுக்கு முகத்தில் அடித்தாற்போன்று மூடினார்.

மறுபுறத்தில் சஜித் பொதுஜன பெரமுனவில் இருந்து வெளியேறியவர்களை தனது அணியில் அரவணைத்துக் கொண்டார். பொதுஜன பெரமுனவின் ” சுயாதீனமான குழுவில் ” இருந்த பலர் ரணிலை ஆதரித்தார்கள். எனவே பொதுஜன பெரமுனவில் இருந்து வெளியேறியவர்களை தனது பக்கம் சேர்த்துக்கொள்வதில் சஜித் முனைப்புக் காட்டினார். பொதுஜன பெரமுனவின் முன்னாள் தவிசாளரான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் பிரேமதாசவின் நெருங்கிய ஆலோசகராக மாறிறார். அழகப்பெருமா உட்பட தாமரை மொட்டு கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் பலர் படிப்படியாக சஜித்துடன் அணிசேர்ந்தார்கள்.

பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை ஐக்கிய மக்கள் சக்தியும் கவர்ந்திழுக்கிறது என்று காட்டும் விருப்பத்தில், ஊழல்தனமானது என்று கூறப்படும் ராஜபக்சாக்களின் கட்சியின் அங்கமாக அண்மைக்காலம் வரை இருந்தவர்களை சஜித் ஏற்றுக்கொண்டார். பாவம் செய்தவர்கள் தொலைபேசி முகாமில் இணைந்துகொள்வதன் மூலமாக மன்னிப்பைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது போன்று காரியங்கள் நடந்தன.

அரசியல் அனுகூலத்துக்காக செய்த காரியங்கள் பிரேமதாசவின் அரசியல் படிமத்தை பாதித்தன. இதற்கு மாறாக அநுராவின் மதிப்பு கணிசமானளவுக்கு உயர்ந்தது. ஊழல்தனமான ஒரு கட்சியில் இருந்து வருகின்ற அரசியல் துரோகிகளை அரவணைக்காத கொள்கை கோட்பாட்டில் உறுதிகொண்ட ஒரு அணியாக ஜே.வி.பி. / தேசிய மக்கள் சக்தி நோக்கப்பட்டது. ஜே.வி.பி.யின் பாராளுமன்றப் பலம் மூன்றாகவே தொடர்ந்து இருந்த அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருந்தது. பாராளுமன்றத்துக்கு வெளியில் ஜே.வி.பி.யின் மக்கள் ஆதரவு உயர்ந்தது. அதுவே முக்கியமானது.

மெய்யான ஊழல் எதிர்ப்பு

சமரசத்துக்கு இடமில்லாத தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு திசைகாட்டி மாத்திரமே ஊழலை உண்மையாக எதிர்க்கிறது ; ராஜபக்சாக்களையும் அவர்களது பரிவாரங்களையும் நீதியின் முன்னிறுத்துவதில் உறுதியுடன் இருக்கிறது என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் வலுப்படுத்தியது. ஊழலை ஒழித்துக்கட்டி, நாட்டை பாழ்படுத்திய ஊழல் சக்திகளை நீதியின் முன்னிறுத்தும் இலட்சியத்துக்கு தன்னை அர்ப்பணித்த ஒரே நபராக திசாநாயக்க முன்னிலைப்படுத்தப்பட்டார்.

ஊழலுக்கு எதிரான ஜே.வி.பி.யின் பற்றார்வமிக்க இயக்கத்தை பெரும் எண்ணிக்கையான மக்கள் ஆர்வத்துடன் ஆதரித்தார்கள். பெரும்பாலும் வாழ்வின் சகல அம்சக்களிலுமே வியாபித்திருந்த ஊழல் மீது சீற்றம் கொண்டிருந்த மககள் அதற்கு முடிவைக்கட்ட வேண்டும் அல்லது குறைந்தபட்சம் கட்டுப்படுத்தப்படவாவது வேண்டும் என்று விரும்பினார்கள்.ஆனால் அதற்கு உள்ளார்ந்த ஒரு காரணமும் கூட இருந்தது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி அடிப்படையில் பல தசாப்த கால தவறான பொருளாதார முகாமைத்துவத்தின் விளைவாகும். கேம்பிரிட்ஜில் கல்விகற்ற இடதுசாரிப் போக்குடைய – ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த ஒரு பொருளாதார நிபுணரின் வார்த்தைகளில் கூறுவதானால் ” இலங்கை மரங்களை நாட்டாமலேயே பழங்களைச் சாப்பிட்டு வந்திருக்கிறது.” ராஜபக்ச ஆட்சி நெருக்கடியை மேலும் மோசமாக்கி தவிர்க்கமுடியாத இக்கட்டான நிலையை துரிதப்படுத்த உதவியது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே பொருளாதார மீட்சிக்கான பாதையில் நாட்டை வழிநடத்தினார். உண்மையான நிலைவரத்தை வெளிப்படையாக கூறி நேர்மையாக நடந்துகொள்வதே அவரின் அணுகுமுறையாக இருந்தது. சரவதேச நாணய நிதியத்துடன் ஏற்பாடொன்றுக்கு செல்வதை தவிர வேறு தெரிவு இல்லை என்று ரணில் கூறினார். பொருளாதாரத்தை மீட்டெடுத்து எதிர்காலச் சுபீட்சத்துக்கு வழிவகுப்பதற்கு தற்போதைக்கு மக்கள் கஷ்டங்களை அனுபவித்து தியாகத்தைச் செய்தேயாக வேண்டும் என்று அவர் கூறினார். சுருக்கமாகச் சொல்வதானால் நெருக்கடிக்கு மக்களும் பொறுப்பு என்று நேரடியாக குற்றஞ்சாட்டப்பட்டதுடன் பொறுப்புடனும் விவேகத்துடனும் நடந்துகொள்ளுமாறும் கேட்கப்பட்டனர்.

ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தி விக்கிரமசிங்க அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதற்கு பதிலாக அவரையும் அரசாங்கத்தையும் விமர்சித்துக்கொண்டு நெருக்கடியில் இருந்து விலகிநிற்கவே விரும்பியது. ஜே.வி.பி. பொருளாதார நெருக்கடியின் பாரதூரத்தன்மையை குறைத்து மதிப்பிட்டது. நெருக்கடியின் பரிமாணம் குறித்து ஜனாதிபதி ரணில் அரசியல் காரணங்களுக்காக மிகைப்படுத்திக் கூறுகிறார் என்று அநுரா குமார கேலியும் செய்தார்.

பொருளாதார நெருக்கடிக்கு பொதுவில் ஊழல்தனமான அரசியல்வாதிகளையும் உயர்மட்ட அதிகாரிகளையும் குறிப்பாக ராஜபக்சாக்களையும் அவர்களுடன் தொடர்புடையவர்களையும் குற்றஞ்சாட்டுவதே அநுராவினதும் ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தியினதும் தந்திரோபாயமாக இருந்தது.பொருளாதாரச் சகதிக்குள் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு மக்கள் மீது சுமையை ஏற்றவேண்டியதில்லை என்பதே அவர்களின் கருத்தாக இருந்தது. செய்யவேண்டியதெல்லாம் போக்கிரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து பல வருடங்களாக திட்டமிட்டமுறையில் கொள்ளையிடப்பட்ட பணத்தை மீட்டெடுக்க வேண்டியதேயாகும். ஊழலை ஒழித்துக்கட்டி குற்றவாளிகளை தண்டித்தால் எல்லாம் சரியாகிவிடும். மக்கள் எந்த வகையிலும் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டிய தேவையில்லை என்பதே அவர்களது நிலைப்பாடாக இருநதது.

ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டை மக்கள் வரவேற்றார்கள். அநுரா குமார திசாநாயக்க சாதுரியமான தனது பேச்சாற்றலைப் பயன்படுத்தி அந்த செய்தியை நாடு பூராவும் எடுத்துச் சென்றார். குற்றவாளிகளை தண்டித்து ஊழல் முடிவுக்கு வந்தால் சகல பொருளாதாரப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்று மக்களுக்கு சொல்லப்பட்டது.நாட்டை மலினப்படுத்தியது ஊழலே. அதை சரியான முறையில் கையாண்டால் எல்லாமே சரியாகி விடும் என்று அவர் கூறினார்.

இந்த கருத்தை மக்களுக்கு ஏற்புடையதாக்குவதில் அநுராவினால் பெருமளவுக்கு வெற்றிபெறக்கூடியதாக இருந்தது. ஏனென்றால் நெருக்கடிக்கு தாங்கள் எந்த வகையிலும் பொறுப்பு இல்லை என்று மக்கள் உணரச் செய்யப்பட்டார்கள். ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அநுரா ஜனாதிபதியாக வரவேண்டும் என்று அவர்கள் நம்பினார்கள்.

சர்வதேச நாணய நிதியம்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியதற்காகவும் விக்கிரமசிங்க அரசாங்கத்தை தேசிய மக்கள் சக்தி கடுமையாக விமர்சித்தது. ” பிறெட்டன் வூட்ஸ் இரணைகள் ” என்று அறியப்படும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி தொடர்பில் ஒரு எதிர்மறையான நிலைப்பாட்டைக் கொண்ட வரலாறு இலங்கை இடதுசாரிகளுக்கு இருக்கிறது. அந்த பகைமைக்கு ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தி புத்துயிர் கொடுத்தது. மக்கள் குறிப்பாக சமூகத்தின் பின்தங்கிய பிரிவினர் அனுபவிக்கும் இடர்பாடுகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளே காரணம் என்று அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் சர்வதேச நாணய நிதியத்துடன் மீள் பேச்சுவார்த்தையை நடத்தி சிறந்த ஒரு இணக்கப்பாட்டை காணப்போவதாக அநுரா உறுதியளித்தார். சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கு பதிலாக புலம்பெயர் இலங்கைச் சமூகத்திடமிருந்து பெறக்கூடிய நன்கொடைகளின் மூலமாக பொருளாதார நெருக்கடிக்கு தீர்வைக் காணப்போவதாகக் கூட ஜே.வி.பி.யின் பொருளாதார மதியூகி சுனில் ஹந்துனெத்தி கூறியதை காணக்கூடியதாக இருந்தது.

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை தொடர்பில் உண்மையான நிலையை மீண்டும் ஒரு தடவை ஜனாதிபதி ரணில் விக்காரமசிங்க எடுத்துக் கூறினார். அதன் அளவுகோல்கள் மாற்றப்படமுடியாதவை, ஆனால் ஒரு சில விடயங்களில் சிறியளவிலான திருத்தக்களைச் செய்வது சாத்தியம் என்று அவர் குறிப்பிட்டார். ரணில் கூறிய உண்மை அவநம்பிக்கையுடனேயே நோக்கப்பட்டது. அநுரா கூறிய உண்மைக்கு புறம்பான விடயங்கள் நம்பப்பட்டன. இருந்தாலும், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கப்பெறுவதை விக்கிரமசிங்க உறுதிப்படுத்தினார். ஆனால், அவ்வாறு பெறக்கூடியதாக இருந்த பொருட்களை வாங்குவது பெரும்பாலான மக்களுக்கு (70 சதவீதமானோர்) கட்டுப்படியாகவில்லை.

வாழ்க்கைச் செலவு அதிகரித்துக்கொண்டே போனது. ஆனால் சம்பளங்ஙள் உயரவில்லை. தனவந்தர்கள் மேலும் தனவந்தர்களாகிய அதேவேளை வறியவர்கள் மேலும் வறியவர்களாகிக் கொண்டே போனார்கள். மத்தியதர வர்க்கம் இல்லாமலே போனது. இத்தகைய ஒரு சூழ்நிலையில் அநுரா குமாரவின் வெற்று வாக்குறுதிகளினால் மக்கள் கவரப்பட்டார்கள். அவர் மக்களினால் தெரிவு செய்யப்படும் வாய்ப்புகள் அதிகரித்தன


விவசாயப் பகுதிகள்

இலங்கையின் கிராமிப் பிராந்தியங்களில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதில் ஜே.வி.பி.யினர் கடந்த காலத்தில் எதிர்நோக்கிய வரலாற்று சிக்கல் அவர்களுக்கு பெரிய தடையாக இருந்தது. நகர்ப் பகுதிகளிலும் ஓரளவு நகர்ப்பகுதிகளிலும் ஜே.வி.பி. பலம் பொருந்தியதாக இருந்தது. முன்னைய தேர்தல்களில் ஜே.வி.பி. பெற்ற வாக்குகள் கிராமப் பகுதிகளில் குறிப்பாக விவசாயப் பெருநிலப்பகுதிகளில் அதன் ஆதரவுத்தளம் ஒப்பீட்டளவில் பலவீனமாக இருந்தததை வெளிக்காட்டியது.

மேலும், கடந்த காலத்தில் ஜே.வி.பி.க்கு கொவிகம சாதியினர் மத்தியில் இருந்த உறுப்பினர்களின் சதவீதத்தை விடவும் மற்றைய சாதிகளைச் சேர்ந்த உறுப்பினர்களின் சதவீதம் உயர்ந்ததாக இருந்தது. அநுரா குமார, விஜித ஹேரத் போன்றவர்கள் கொவிகம சாதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்களது ” கே ” பெயர்களாக முதியான்சலாகே என்பதைக் கொண்டவர்கள்.


பசளைப் பிரச்சினை

விவசாயப் பகுதிகளில் கட்சியைப் பலப்படுத்துவதில் ஜே.வி.பி. எதிர்நோக்கிய பிரச்சினை எதிர்பாராத ஒரு வழியில் தீர்த்துவைக்கப்பட்டது. நிகழ்வுகளின் விசித்திரமான ஒரு திருப்பத்தில் பசளை விவகாரத்தை கையாண்ட முறை காரணமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜே.வி.பி.க்கு உதவினார். வியத்மகா, எலிய என்ற அமைப்புக்களைச் சேர்ந்த தனது ஆலோசகர்களின் கதையைக் கேட்டு கோட்டாபய பசளை இறக்குமதியை தடைசெய்து அதன் மூலமாக விவசாயிகளுக்கும் நெற்செய்கையாளர்களுக்கும் பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தினார். கிராமப் பகுதிகளை குறிப்பாக விவசாயப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் முன்னென்றும் இல்லாத வகையிலான ஒரு நெருக்கடியை எதிர்நோக்கினார்கள். பலர் வறுமைக்குள் தள்ளப்பட்டார்கள்.

தங்களுக்கு ஒரு வழி திறப்பதைக் கண்ட ஜே.வி.பி. யினர் சூழ்நிலையை மிகவும் சாதுரியமாக கையாண்டார்கள். கிராமப்பகுதிகளில் தங்களது செயற்பாடுகளை விரிவுபடுத்திய அவர்கள் விவசாயப் பகுதிகளில் தொடர்ச்சியாக பல ஆர்ப்பாடாடங்களை ஏற்பாடு செய்தார்கள். விவசாயத்தை பாரம்பரிய தொழிலாகக் கொண்ட இந்த பகுதிமக்கள் முன்னதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவாளர்களாக இருந்து பிறகு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின ஆதரவாளர்களாக மாறியவர்கள். அவர்கள் அடிப்படையில் ராஜபக்சாக்களின் வாக்கு வங்கிக்கு உரியவர்கள். அவர்கள் இப்போது ராஜபக்சாக்கள் மீது ஆத்திரமடைவதற்கு வெளிப்படையான காரணங்கள் இருந்தன.

மக்களின் இந்த ஆத்திரத்தை தங்களுக்கு அனுகூலமாகப் பயன்படுத்திக்கொண்ட ஜே.வி.பி.யினர் கிராமப் பகுதிகளில் மக்களை அணிதிரட்டினர். சமகால யதார்த்த நிலைக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்த மக்கள் மத்தியில் கடந்த கால அரசியல் முக்கியத்துவமில்லாத ஒரு நினைவாக மங்கிப்போனது. நந்தசேன கோட்டாபய ராஜபக்சவின் நடவடிக்கைகள் காரணமாக இலங்கையின் கிராமப்பகுதிகளை திசாநாயக்க முதியான்சலாகே அநுரா குமார திசாநாயக்க வெற்றிகொண்டார். ஜனாதிபதி தேர்தலில் அநுரா குமாரவின் பிரசாரங்களில் சியாம் நிக்காயவைச் சேர்ந்த இளம் பிக்குகள் தீவிரமாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். அந்தளவுக்கு அவர் கிராமப்பகுதிகளில் பேராதரவைக் கொண்டவராக விளங்கினார்.

அறகலய அதிர்ஷ்டம்

பசளை இல்லாமல் தவித்த விவசாயிகளின் கவலைகளை அனுகூலமாகப் பயன்படுத்தி அரசியல் விளைச்சல் ஒன்றை அநுரா குமார திசாநாயக்க அறுவடை அதேவேளை கொழும்பு காலிமுகத்திடல் மேலாக வீசிய போராடடக் காற்று இன்னொரு அரசியல் அதிர்ஷ்டத்தை கொண்டுவந்தது.

” ராஜபக்சாக்கள் அதிகாரத்தில் இருந்து விரட்டப்படுவதை துரிதப்படுத்தியதற்கு மேலதிகமாக அறகலய ( போராட்டம் ) வேறு பல விடயங்களையும் சாதித்தது. பொதுவில் மக்களினதும் குறிப்பாக இளைஞர்களினதும் சக்தியை அது நிரூபித்தது. குடும்ப அலசியலுக்கும் ஊழலுக்கும் எதிரான உணர்வை அது ஊக்குவித்தது. முறைமை மாற்றத்தை அல்லது தற்போதைய சமூக ஒழுக்கில் ஒரு மாற்றத்தை நாடிநிற்கும் புதிய ஒரு அரசியல் கலாசாரத்தை அது வளர்த்து ஊக்கப்படுத்தியது” என்று இந்த கட்டுரைத் தொடரின் முன்னைய ஒரு பாகத்தில் நான் எழுதியிருந்தேன்.

மாறிவிட்ட சூழ்நிலைையை அநுரா குமார ஜே.வி.பி.க்கு ஆதரவான கல்விமான்கள், ஆய்வாளர்கள் மற்றும் கருத்துருவாக்க்கிகளின் உதவியுடன் அறிவுக்கூர்மையான ஆய்வுக்கு உட்படுத்தினார். பொதுவில் மக்களும் குறிப்பாக இளைஞர்களும் மாற்றம் ஒன்றை நாடிநிற்கிறார்கள் என்பதை அவர் தெளிவாகப் புரிந்துகொண்டார். சிலர் அதை முறைமை மாற்றம் (System Change ) என்று அழைத்தனர். இந்த மாற்றம் எவ்வாறானதாக இருக்கும் என்பதைப் பற்றி தெளிவான அல்லது நிச்சயமான விளக்கம் எவருக்கும் இருக்கவில்லை. ஜனாதிபதி பதவி தொடக்கம் பாராளுமன்றம் வரை அதிகாரத்தில் இருப்பவர்களை மாற்றுவதே அந்த மாற்றம் என்று அநுரா குமார தலைமையிலான ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தி வரையறுத்தது.

மாற்றத்துக்கான அவா

எனவே தேசிய மக்கள் சக்தி முழுவீச்சிலான அணுகுமுறையொன்றை தொடங்கியது. ஒரு புறத்தில் அது மாற்றத்துக்கான அவாவை பரந்தளவில் ஊக்கப்படுத்திய அதேவேளை, மறுபுறத்தில் அந்த அவா அரசியல் மாற்றத்துக்கான ஓரு கோரிக்கைக்குள் உள்வாங்கப்பட்டது. மாற்றத்துக்கான அதன் சினானமாக திசைகாட்டியை ஜே வி.பி./ தேசிய மக்கள் சக்தி பயன்படுத்தியது. மாற்றத்துக்கான கட்டியம் கூறும் கருவியாக திசைகாட்டியை பிரசாரப்படுத்தும் எண்ணற்ற காணொளிகள் சிங்களத்திலும் தமிழிலும் சமூக ஊடகங்களிலும் யூரியூப்பிலும் வெளியிடப்பட்டன.

இந்த செயற்பாடுகளில் இரு உணர்ச்சிகள் முன்னரங்கத்துக்கு வந்தன.ஒன்று வசதிபடைத்த வர்க்கத்துக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் எதிரான கோபமும் வெறுப்பும். மற்றையது பின்தங்கிய, வலுவற்ற மக்கள் சமூகத்தின் மீதான அனுதாபமும் ஆதரவும். ஜனாதிபதி தேர்தல் இருப்போர்க்கும் இல்லாதோருக்கும் இடையிலான பிரகடனப்படுத்தப்படாத போராக மாறப் போகின்றது என்பது தெளிவாகத் தெரிந்தது.சாமானிய குடிமகனுக்கான வெற்றியே குறிக்கோளாக இருந்தது. அநுரா குமார திசாநாயக்க மாற்றத்துக்காக குரல்கொடுப்பவராகவும் மாற்றத்தின் கருவியாகவும் காட்சிப்படுத்தப்பட்டார். அதற்கு கச்சிதமாக அவர் பொருந்தினார்.

கடுமையாக உழைப்பாளிக்கான ஒரு நல்ல தோற்றமும் மக்களைக் கவரும் மனப்போக்கும் சிறந்த பேச்சாற்றலுக்கான இயல்திறனும் கொண்டவராக அவர் விளங்கினார். உடரட்ட, ரஜரட்ட, ருஹுணு என்றாலென்ன அல்லது வடக்கு, கிழக்கு என்றாலென்ன வேறுபட்ட சனக்கூட்டத்துடன் உடனடியாகவே ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தவல்ல ஒரு நயநுட்ப ஆற்றல் அவரிடம் இருந்தது. எளிமையாக ஆனால் ஒரு சுவைநயத்துடன் பாரம்பரிய பாணியில் அவர் உரையாற்றினார். பேசும்போது கேள்வியை எழுப்பிவிட்டு பிறகு தானே அதற்கு பதிலளிக்கும் வழக்கத்தை அவர் கொண்டிருக்கிறார்.

மக்கள் பிரிவுகளினால் எதிர்நோக்கப்படும் குறிப்பிட்ட பிரச்சினைகள் குறித்தும் அவர்களின் வேதனைகள் மற்றும் அபிலாசைகள் குறித்தும் பேசும்போது அவரிடம் அனுதாபமும் உணர்வும் இருக்கும். அவரது தொனியில் உண்மையான அக்கறையும் நம்பத்தகுநிலையும் கலந்திருக்கும். எனது சிங்கள அறிவு போதுமானல்ல, ஆனால், அவர் சொல்வதை என்னால் விளங்கிக் கொள்ளமுடியும். அவரது உரைகள் எனது மனதைக் கவர்ந்தன.

மூன்று பிரதான காரணிகள்

அதனால் அநுரா குமார திசாநாயக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல. அவரது வெற்றிக்கு மூன்று காரணிகள் அடிப்படையாக இருந்தன.

1) பொதுக் கூட்டங்களிலும் பேரணிகளிலும் பாரியளவில் மக்களை அணிதிரட்டுதல்,

2) குடும்பங்களை திட்டமிட்ட முறையில் இலக்கு வைத்து வீடுவீடாக பரத்தளவில் மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்கள்,

3) சமூக ஊடகங்களிலும் யூரியூப்பிலும் இடையறாத தீவிர பிரசாரம்.

இவ்வாறாகத்தான் அநுரா குமார திசாநாயக்க இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக வந்தார். மனித மனங்களில் நம்பிக்கைகள் ஊற்றெடுப்பது சாசுவதமானது. அதனால், அநுரா குமார திசாநாயக்க தனது தேர்தல் பிரசாரங்களின்போது உறுதியளித்த மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று நம்புவோமாக! (முற்றும்)

_______________
D.B.S.Jeyaraj can be reached at dbsjeyaraj@yahoo.com

ஆங்கில மூலம்: டி. பி. எஸ். ஜெயராஜ் (Daily Mirror)

தமிழில்: வீரகத்தி தனபாலசிங்கம்

நன்றி: வீரகேசரி

************************************************************************************************