2024 ஜனாதிபதி தேர்தலில் வெற்றியின் வாசனையை அநுர குமார திசாநாயக்க எவ்வாறு முகர்ந்து பிடித்தார்?

டி.பி.எஸ்.ஜெயராஜ்

அநுர குமார திசாநாயக்க ; இலங்கை வானில் ‘ இடதுசாரி ‘ நட்சத்திரம் – 5

ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) வுக்கும் அதன் தலைவர் அநுரா குமார திசாநாயக்கவுக்கும் 2019 நவம்பர் ஜனாதிபதி தேர்தலும் 2020 ஆகஸ்ட் பாராளுமன்ற தேர்தலும் பெரிய ஏமாற்றமாகப் போரவிட்டது. ஒரு தந்திரோபாய நகர்வாகவே ஜே.வி.பி. அந்த இரு தேர்தல்களிலும் திசைகாட்டி புதிய சின்னத்தின் கீழ் புதியதொரு அரசியல் முன்னணியின் அங்கமாக போட்டியிட்டது. அந்த கட்சி தேசிய மக்கள் சக்தி என்ற பரந்த ஒரு முன்னணியை அமைத்துக்கொண்டது. பெயரளவில் சமத்துவமான அமைப்புக்கள் மத்தியில் முதலாவதாக தோன்றினாலும், நடைமுறையில் தேசிய மக்கள் சக்தியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆதிக்கம் கொண்ட கட்சியாக அதுவே விளங்கியது.

ஒரேயொரு எளிமையான காரணத்துக்காகவே ஜே.வி.பி. தேசிய மக்கள் சக்தி என்ற ஆடையை அணிந்துகொண்டது. தேர்தல் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற அது விரும்பியது. ஆயுதப் போராட்டத்தின் மூலம் இலங்கை அரசைத் தூக்கியெறிய ஜே.வி.பி. இரு தடவைகள் முயற்சித்தது. இரு முயற்சிகளும் தோல்வியடைந்தன. நூற்றுக் கணக்கான அர்ப்பணிப்புச் சிந்தையுடைய செயற்பாட்டாளர்களை கொண்டிருந்த ஜே.வி.பி.யின் பொதுக் கூட்டங்களில் ஆயிரக்கணக்கில் மக்கள் கலந்துகொண்டாலும் கூட, குறிப்பிட்ட ஒரு எல்லைக்கு அப்பால் தங்களால் வாக்குகளைப் பெறமுடியாமல் இருக்கிறது என்பதைை செஞ்சட்டைத் தோழர்கள் கண்டுகொண்டார்கள். பாராளுமன்றத்தில் மூன்றாவது கட்சியாகவும் இலங்கை அரசியலில் நிலையான மூன்றாவது சக்தியாகவும் இருக்கவேண்டியதே ஜே.வி.பி.யின் விதியாகிப் போய்விட்டது போன்று தோன்றியது.

அதனால் ஜே.வி.பி. அதன் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி என்ற புதிய தோற்றத்தைக் காட்டிக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. உள்ளடக்கம் ஒன்று தான் ஆனால் வடிவத்தில் அது வேறுபட்டதாக தோன்றும். தேசிய மக்கள் சக்தி என்ற தோற்றமாற்றம் இரு காரணங்களுக்காக ஜே.வி.பி.க்கு தேவைப்பட்டது. முதலாவதாக, கடந்த காலத்தில் ஜே.வி.பி.யின் அட்டூழியங்களை அனுபவித்த பழைய தலைமுறையினர் அவற்றை மறந்து புதிய தேசிய மக்கள் சக்தியாக மறுசீரமைப்புக்குள்ளாகிவிட்டதாக அவர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் ஜே.வி.பி. விரும்பியது. இரண்டாவதாக, வன்முறைக் கடந்த காலத்தை மறந்து முற்போக்கான தேசிய மக்கள் சக்தியாக மாற்றம் பெற்றுவிட்டதை காட்டுவதன் மூலமாக இளந் தலைமுறையினரை கவருவதற்கு ஜே.வி.பி. விரும்பியது.

புதிய மொந்தையில் பழைய கள்ளு

ஜே.வி.பி. நம்பிக்கையுடன் செயற்பட்டபோதிலும், 2019 ஆம் ஆண்டிலும் 2020 ஆம் ஆண்டிலும் தேர்த்களில் மிகவும் குறைந்தளவு வாக்குகளையே தேசிய மக்கள் சக்தியினால் பெறக்கூடியதாக இருந்தது. பெயரளவில் புதிய தேசிய மக்கள் சக்தியாக தோன்றினாலும், அது பழைய ஜே.வி.பி.யே, அதாவது புதிய மொந்தையில் பழைய கள்ளு என்றே அதை மக்கள் நோக்கினார்கள் போன்று தோன்றியது. மேலும், புதிய அவதாரமான தேசிய மக்கள் சக்தியுடன் ஒப்பிடும்போது ஜே.வி.பி.யாக கூடுதல் வாக்குகளை பெற்றிருந்ததை தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டின.

உதாரணமாக, ஜே.வி.பி.யின் தாபகத்தலைவர் றோஹண விஜேவீர 1982 ஜனாதிபதி தேர்தலில் 273, 428 ( 4.18 சதவீதம் ) வாக்குகளைப் பெற்றார். அதேபோன்று நந்தன குணதிலக 1999 ஜனாதிபதி தேர்தலில் 344, 173 ( 4.08 சதவீதம் ) வாக்குகளை பெற்றார். இருவரும் அந்த தேர்தல்களில் மூன்றாவதாக வந்தனர். அநுரா குமார திசாநாயக்க 2019 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது 418, 553 (3.16 சதவீதம் ) வாக்குகளைப் பெற்றார். விஜேவீரவையும் குணதிலகவையும் விட அநுரா கூடுதலான வாக்குகளைப் பெற்றபோதிலும், சதவீதம் குறைவானதாகவே இருந்தது. பல வருடங்களாக இடம்பெற்ற சனத்தொகை அதிகரிப்பை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது மற்றைய இருவரையும் விட அநுரா கூடுதலான வாக்குகளைப் பெற்றதை விளங்கிக்கொள்ள முடியும். ஆனால் சதவீதம் தேசிய மக்கள் சக்தி என்ற வேடத்தில் ஜே.வீ.பி.க்கான மக்கள் ஆதரவில் ஒரு குறைவு ஏற்பட்டிருந்ததையே வெளிக்காட்டியது.

2020 பாராளுமன்ற தேர்தலில் அது மேலும் மோசமானதாக இருந்தது. தேசிய மக்கள் சக்தியினால் திசைகாட்டி சின்னத்தில் வெறுமனே 445,958 ( 3.84 சதவீதம் ) வாக்குகளை மாத்திரமே பெறக்கூடியதாக இருந்தது. இது 2015 ஆம் ஆண்டில் ஜே.வி.பி. பெற்ற 543,944 (4.87 சதவீதம்) வாக்குகளையும் விட குறைவானதாக இருந்தது. பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அரைலாசியாகக் குறைந்தது.

2015 ஆம் ஆண்டில் ஜே.வி.பி.யின் நான்கு உறுப்பினர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அதேவேளை, தேசியப்பட்டியல் மூலம் இரு ஆசனங்கள் கிடைத்தன. மொத்தம் ஆறு உறுப்பினர்கள் பாராளூமன்றம் வந்தார்கள். 2020 ஆம் ஆண்டில் இருவர் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அதேவேளை தேசியப்பட்டியல் மூலம் ஒரு ஆசனம் கிடைத்தது. கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட அநுரா 49,814 விருப்பு வாக்குகளை பெற்றார். 2015 ஆம் ஆண்டில் அநுராவுக்கு 65,066 விருப்பு வாக்குகள் கிடைத்த அதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட விஜித ஹேரத் 37, 008 விருப்பு வாக்குகளைப் பெற்றார். தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்டார்.

அநுராவுக்கு எதிரான உணர்வு

தேசிய மக்கள் சக்தியாக தேர்தல்களில் போட்டியிட்ட ஜே.வி.பி.யின் பரிசேதனை எதிர்பார்த்த பயனைத் தரவில்லை. என்னதான் தேர்தல் தந்திரோபாயங்களை வகுத்தாலும், ஜே.வி.பி.யினால் அதன் வாக்குப்பங்கை அதிகரிக்க முடியவில்லை என்று தோன்றியது. தேசிய மக்கள் சக்தியாக போட்டியிட்டதோ இல்லையோ ஜே.வி.பி.யினால் மூன்றாவது சக்தி என்ற அந்தஸ்தில் இருந்து மேம்பட முடியவில்லை என்று தோன்றியது. இந்த நிலைவரங்களின் விளைவாக ஜே.வி.பி. அணிகளுக்குள் அநுராவுக்கு எதிராக சிறிய ஒரு எதிர்ப்புணர்வு தோன்ற ஆரம்பித்தது.

தேசிய மக்கள் சக்தி தந்திரோபாயம் ஒரு தோல்வி என்று பொதுச் செயலாளர் தலைமையிலான செல்வாக்குமிக்க ஜே.வி.பி முக்கியஸ்தர்கள் குழுவொன்று உணர்ந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் மூலம் தெரியவந்தது. தேசிய மக்கள் சக்கதியுடன் பிணைந்திருக்காமல் ஜே வி.பி. அதன் முன்னைய அந்தஸ்துக்கு திரும்ப வேண்டும் அவர்கள் விரும்பினார்கள். தேசிய மக்கள் சக்தியை அமைக்கும் யோசனையை பெரும் எண்ணிக்கையானவர்கள் ஆதரித்த போதிலும், அந்த யோசனையின் உந்துசக்தியாக இருந்தவர் அநுராவே. அது ஜே.வி.பி.யின் ஒரு கூட்டுத் தீர்மானமாக இருந்தாலும், அதை செயல் முறையில் வழிநடத்தி சாத்தியமாக்கியதற்கு அநுராவே பெரிதும் பொறுப்பாக இருந்தார். அதனால், தேசிய மக்கள் சக்தி மீதான விமர்சனங்கள் மறைமுகமாக அநுராவை நோக்கியவையாகவே இருந்தன.

எதிர்ப்புக்கு மத்தியில் அநுரா பின்வாங்கவில்லை. தலைவர் என்ற வகையில் அதற்காக அவர் மெச்சப்பட வேண்டியவர். உட்கட்சி நெருக்குதலின் கீழ் தளர்ந்துபோவதற்கு பதிலாக அவர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்றார். தேசிய மக்கள் சக்தி அமைக்கப்பட்டு ஒருவருடமே கடந்திருக்கும் நிலையில், அந்த தந்திரோபாய மாற்றம் வெற்றியா தோல்வியா என்று தீர்ப்புக் கூறுவதற்கு மேலும் சில காலம் தேவை என்று அவர் சுட்டிக்காட்டினார். தேசிய மக்கள் சக்தியாக மேலும் கொஞ்சக்காலம் தொடர்ந்து பயணிப்போம் என்று அவர் வலியுறுத்தினார். தேசிய மக்கள் சக்தி கோட்பாட்டை எதிர்காலத்தில் பெரிய அளவில் ஆதரித்து ஊக்கமளிக்க வேண்டியிருக்கும் என்றும் என்றும் அநுரா கூறினார். அவரின் நிலைப்பாட்டுக்கே வெற்றி கிடைத்தது. தேசிய மக்கள் சக்தியாக தொடருவதற்கு ஜே.வி.பி. இறுதியில் தீர்மானித்தது.

ஒரு எதிர்க்கட்சி என்ற கருத்துக் கோணத்தில் இருந்து பார்த்தபோது அன்றைய நிலைவரம் மனச்சோர்வைத் தருவதாகவே இருந்தது. மிகப்பெரிய பெரும்பான்மையுடன் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தார். பாராளுமன்றத்தில் 146 ஆசனங்களை கைப்பற்றிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை கட்சி மாறுவதற்கு தூண்டியதன் மூலமாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொண்டது. பாராளுமன்றத்தில் அரசியலமைப்புக்கான 20 வது திருத்தத்தை நிறைவேற்றிக்கொண்ட ராஜபக்சாக்கள் 19 வது அரசியலமைப்புத் திருத்தத்தில் இருந்த பல நேர்மறையான அம்சங்களைை நீக்கினார்கள். ராஜபக்சாக்களும் அவர்களை அடிவருடிகளும் அட்டகாசமாக ஆட்சி செய்தார்கள்.

துடிப்பில்லாத எதிர்க்கட்சி

எதிர்க்கட்சி துடிப்பில்லாததாக இருந்ததால் ராஜபக்சாக்களுக்கு அது வசதியாகப் பே்ய்விட்டது. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி 2020 பாராளுமன்ற தேர்தலில் துடைத்தெறியப்பட்டது. அதில் இருந்து பிரிந்து வந்தவர்கள் சஜித் பிரேமதாச தலைமையின் கீழ் ஐக்கிய மக்கள் சக்தியை ( சமகி ஜன பலவேகய) அமைத்தார்கள். அதற்கு பாராளுமன்றத்தில் 54 ஆசனங்கள் கிடைத்தன. பிரேமதாச எதிர்க்கட்சி தலைவராக வந்தார். தமிழ், முஸ்லிம் கட்சிகள் அவற்றின் சமூகங்களை பாதித்த பிரச்சினைககளில் பிரதானமாக கவனத்தை செலுத்திய நிலையில் தேசிய கவனக்குவிப்பில் ஒரு வீழ்ச்சி காணப்பட்டது.

சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டார். தனது கட்சியின் ஏனைய உறூப்பினர்களுக்கு போதுமான நேரத்தை ஒதுக்காமல் அனேகமாக சகல விடயங்களிலும் அவரே பேசினார். அவரது உரைகளில் ஆழமோ தெளிவோ இருந்ததில்லை. தந்தையாரின் பேச்சுக்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. ரணசிங்க ஆற்றல்மிக்க ஒரு பேச்சாளர். தனது சிந்தனைகளை சபையோருக்கு உறுதியான முறையில் தெளிவாகச் சொல்வார். மறுபுறத்தில், அளவு கடந்த சொல் அலங்காரத்துடனான சஜித் பிரேமதாசவின் பேச்சு கேட்போரை கவருவதில்லை.

இத்தகைய சூழ்நிலையில், ஜே வி.பி./ தேசிய மககள் சக்தியின் அநுர, ஹரினி, விஜித மூவரும் பாராளுமன்றத்தில் தங்களது திறமையை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக அநுர குமார திசாநாயக்க ஒரு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் சிறப்பாகச் செயற்பட்டு அரசாங்கத்தின் தவறுகளையும் குறைபாடுகளையும் அம்பலப்படுத்தினார். நடப்பில் சஜித் பிரேமதாச எதிர்க்கட்சி தலைவராக இருந்திருக்கலாம், ஆனால் மெய்யான எதிர்க்கட்சி தலைவராக அநுராவே காணப்பட்டார். இதை ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களில் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார். முன்னணி எதிர்க்கட்சி சக்தியாக அநுர வருவதற்கு சஜித் இடமளித்துவிட்டார் என்று அவர் கூறினார்.

பசில் ராஜபக்ச முன்மாதிர

தேசிய மக்கள் சக்தி பசில் ராஜபக்சவின் வழமுறையை பின்பற்றத் தொடங்கியது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை தொடங்கியபோது பசில் பாராளுமன்றத்தின் மீதோ அல்லது மாகாணசபைகள் மீதோ கவனத்தைச் செலுத்தவில்லை. மாறாக, அவர் உள்ளூராட்சி சபைகளில் சமூகத்தின் அடிமட்டத்தில் கிளைகளை அமைத்தார். வேட்பாளர்களாக நியமிக்கப்படக்கூடியவர்களை தெரிவுசெய்து தங்களின் ” வாக்காளர் தொகுதிகளை ” வளர்த்துக் கொள்வதற்கு அவர்களுக்கு வழிகாட்டினார். தேர்தல் சட்டங்களில் செய்யப்பட்ட மாற்றம் வட்டாரங்களில் இருந்து நேரடியாக தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களுடன் மேலதிகமாக விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதற்கு வழிவகுத்தது. தனது வேட்பாளர்களைக் கொண்டு விசேடமாக வாக்காளர்களை இலக்குவைக்க பசிலினால் இயலுமாக இருந்தது.

இந்த அணுகுமுறையின் விளைவாக , புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பொதுஜன பெரமுனவினால் 2018 பெப்ரவரி உள்ளூராட்சி தேர்தல்களில் 5, 006, 837 (40.47 சதவீதம் ) வாக்குகளைப் பெறக்கூடியதாக இருந்தது. அதனால் வட்டார அடிப்படையில் 3,265 உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கும் விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் இன்னொரு 181 உறுப்பினர்களுக்கும் பொதுஜன பெரமுன உரித்துடையதாகியது. அந்த கட்சி அதன் தேர்தல் ஞானஸ்நானத்தில் நாடுபூராவும் 126 உள்ளூராட்சி சபைகளின் கடடுப்பாட்டை பெற்றது.

மறுபுறத்தில் ஜே.வி.பி. அந்த உள்ளூராட்சி தேய்தலில் 710, 932 (5.75 சதவீதம் ) வாக்குகளைப் பெற்றது. வட்டார அடிப்படையில் ஜே.வி.பி.யின் ஒரேயொரு உறுப்பினர் மாத்திரமே தெரிவாகக் கூடியதாக இருந்தது. விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் அந்த கட்சியின் 433 உறூப்பினர்கள் தெரிவாகினர். நாட்டின் எந்தப் பாகத்திலுமே தனியொரு உள்ளூராட்சி சபையின் கட்டுப்பாட்டைக் கூட ஜே.வி.பி.யினால் பெறமுடியவில்லை.

2018 உள்ளூராட்சி தேர்தல்களல் பொதுஜன பெரமுனவின் வெற்றி அநுராவுக்கு ஒரு உத்வேகமாக அமைந்தது. அடுத்த உள்ளூராட்சி தேர்தல்கள் 2022 ஆம் ஆண்டில் நடத்தப்பட வேண்டியவையாக இருந்தன.தேசிய மக்கள் சக்தி பொதுஜன பெரமுனவின் அணுகுமுறையைப் பின்பற்றுவதற்கு தீர்மானித்தது.பிரதேச மட்டத்தில் வட்டாரங்களை இலக்கு வைப்பதற்கு கட்சியின் கிளைகள் மீளக் கடடமைக்கப்பட்டன. வீடுவீடாக கவனம் செலுத்தப்பட்டது. ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தி செயற்பாட்டாளர்கள் திட்டமிட்ட முறையில் ஒவ்வொரு வீட்டுக்கு விஜயம் செய்து ஒவ்வொரு குடும்பத்தையும் அணுகினார்கள். அது ஒரு குறுகிய நோக்க அணுகுமுறை.

ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் மோட்டார் சைக்கிள்களிலும் ஸ்கூட்டர்களிலும் வீடுகளுக்கு சென்று வந்தார்கள். இது மறுபுறத்தில் இந்த இரு சக்கர வாகனங்களை வாங்குவதற்கு வெளிநாடொன்று நிதயுதவி செய்கிறது என்ற ஊகங்களுக்கு வழிவகுத்தது.

உள்ளூராட்சி தேர்தல்கள் ஒரு வருடம் தள்ளி 2023 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டன. முக்கியமான தினம் நெருங்கும்போது ஜே.வி.பி. சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் ஏழு மாகாணங்களில் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளிலும் தமிழ்பேசும் மக்கள் பெரும்பான்மையா வாழும் வடக்கிலும் கிழக்கிலும் குறிப்பிட்ட சில உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடுவதற்கு தயாராகவும் விருப்பம் கொண்டும் இருநதது.

அந்த நேரமளவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக ரணில் வி்க்கிரமசிங்க பதவிக்கு வந்தார். புதிய ஜனாதிபதி உள்ளூராட்சி தேர்தல்கள் நடத்தப்படுவதை தடு்க்க சகல விதமான தந்திரங்களையும் கையாண்டார்.

உள்ளூராட்சி தேர்தல்ளை நடத்துவதற்கு உத்தரவிடக்கோரி தேசிய மக்கள் சக்தி நீதிமன்றத்தை நாடியது. பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய, முன்னாள் பாராளுமன்ற உறூப்பினர் சுனில் ஹந்துனெத்தி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் கலாநிதி நிஹால் அபேசிங்க ஆகியோர் 2023 மார்ச் 14 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைமீறல் மனுவொன்றை தாக்கல் செய்தனர். சுதந்திரமானதும் நீதியானதுமான உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்ட்டது. இது அந்த நேரத்திலேயே தேர்தல் வெற்றியின் நறுமணத்தை தேசிய மக்கள் சக்தி முகரத் தொடங்கிவிட்டது எனபதைக் காட்டியது. ஆனால், திட்டமிட்டபடி உள்ளூராட்சி தேர்தல்களை நடத்தப்படவில்லை.

அறகலய அனுபவம்

அதேவேளை, நாடு முன்னென்றும் இல்லாத வகையில் அறகலய ( போராட்டம் ) அனுபவமொனறைச் சந்தித்தது.பொதுவில் அரசாங்கத்துக்கு எதிராகவும் குறிப்பாக ராஜபக்சாக்களுக்கு எதிராகவும் மக்கள் மத்தியில் ஏற்பட்ட சீற்றத்தை ஜே.வி.பி.யும் தனக்கு வாய்ப்பாக பயன்படுத்துவதில் நாட்டம் காட்டியது. சஜித்தையும் விட அநுரா காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கு கூடுதலான அளவுக்கு ஏற்புடையவராக இருந்தார். அநுரா காலிமுகத்திடலில் வரவேற்கப்பட்ட அதேவேளை சஜித் விரட்டியடிக்கப்பட்டார்.

ஆனால் அறகலயவை ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்து சென்ற முன்னரங்க சோசலிஸ்ட் கட்சி அதன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து தலைமைத்துவ பாத்திரத்தை வகித்தது. போரட்டத்தை பொறுத்தரை முன்னரங்க சோசலிஸ்ட் கட்சி ஜே.வி.பி.யை மேவிவிட்டது. இறுதியில் கோட்டாபய பதவி விலக ரணில் ஜனாதிபதியாக வந்தார்.

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது தனது கட்சிக்கு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களே இருந்தபோதிலும், அநுராவும் போட்டியிட்டார். அந்த போட்டியில் இருந்து பின்வாங்கிய சஜித், டலஸ் அழகப்பெருமவை ஆதரித்தார். அதன் மூலமாக மீண்டும சஜித் ஒரு பலவீனமான தலைவர் என்பது வெளிச்சத்துக்கு வந்தது.

ரணில் விக்கிரமசிங்க 134 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாக தெரிவானார். அநுராவுக்கு மூன்று வாக்குகள் மாத்திரமே கிடைத்த போதிலும், அரசியல் ரீதியில் அவர் சஜித்தை விடவும் கூடுதல் புள்ளிகளைத் தட்டிக்கொண்டார்.

அதன் மூலமாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் போது தான் ஒரு முக்கியமான வேட்பாளராக இருக்கப்போதை முன்னிலைப்படுத்திக் காட்டிக்கொண்டார். அதேவேளை சஜித் உறுதிப்பாடும் அரசியல் துணிச்சலும் இல்லாததன் விளைவாக ஒரு பலவீனமான — தடுமாறுகிற அரசியல்வாதியாக நோக்கப்பட்டார். 2024 ஜனாதிபதி தேர்தல் ஒரு மும்முனைப் போட்டியாக இருக்கப்போகிறது என்பது அப்போதே தெரிந்தது.

ஜனாதிபதியாக ரணில்

இலங்கை முன்னென்றும் இல்லாத வகையிலான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துக் கொண்டிருந்தபோது ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அந்நிய செலாவணி அருகிப்போயிருந்த நிலையில் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவியது. எங்கு பார்த்தாலும் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்துநின்றார்கள். ஆனால் விநியோகங்களன கிடைக்கவில்லை அல்லது போதுமானவையாக இருக்கவில்லை. மினசக்தி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடுகள் நாட்டை உண்மையில் முடங்கச் செய்திருந்தன. ரணிலிடம் என்னதான் குறைபாடுகள் இருந்தாலும் , அவர் நெருக்கடியான ஒரு நேரத்தில் ஜனாதிபதியாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதன் மூலம் தனது துணிச்சலையும் பற்றுறுதியையும் வெளிக்காட்டினார்.

மேலும், உருப்படியான முறையில் ஜனாதிபதியாக செயற்படுவதற்கு ராஜபக்சாக்களின் நல்லெண்ணத்திலும் பொதுஜன பெரமுனவின் ஆதரவிலும் தங்கியிருக்க வேண்டியிருந்ததால் விக்கிரமசிங்கவுக்கு இடையூறுகள் இருந்தன. அவரது ஐக்கிய தேசிய கட்சிக்கு பாராளுமன்றத்தில் ஒரேயொரு உறுப்பினர் மாத்திரமே இருந்த காரணத்தினால் ராஜபக்சாக்களின் தலைமையிலான ” தாமரை மொட்டு ” கட்சியின் உதவியுடன் கடமைகளை நிறைவேற்றுவதை தவிர விக்கிரமசிங்கவுக்கு வேறு தெரிவு இருக்கவில்லை. ஆனால் ரணில் அதை இலங்கையினதும் அதன் மக்களினதும் நீண்டகால நலன்களுக்காக பொறுத்துக்கொள்ள வேண்டிய ஒரு வசதியீனமாக கருதிச் செயற்பட்டார்.

பொருளாதாரப் பிரச்சினையை ஒரு தேசிய நெருக்கடியாக விக்கிரமசிங்க சரியான முறையில் அடையாளம் கண்டார். நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கு ஐக்கியப்பட்ட தேசிய முயற்சி ஒன்றுக்கு அழைப்பு விடுத்தார். தன்னுடன் இணைந்து செயற்பட முன்வருமாறு பாராளும்னறத்தில் அங்கம் வகித்த அரசியல் கட்சிகளை அவர் திரும்பத் திரும்ப அழைத்தார். சகல கட்சிகளையும் உள்ளடக்கிய ஒத்துழைப்புச் செயற்பாடு அவசியம் என்பதை அவர் உணர்ந்தார். ஆனால், அவர் இடையறாது விடுத்த அழைப்புக்கள் தொடர்ச்சியாக அலட்சியம் செய்ப்பட்டன.

முன்னேற்றத்துக்கான சந்தர்ப்பம்

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் அநுரா குமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் பொருளாதார நெருக்கடியில் தாங்கள் அரசியல் ரீதியில் முன்னேறுவதற்கான வாய்ப்பைக் கண்டார்கள். விக்கிரமசிங்கவுடன் ஒத்துழைப்பதற்கு பதிலாக அவர்கள் விலகி இருந்துகொண்டுஜைனாதிபதியையும் அவரது அரசாங்கத்தையும் விமர்சிப்பதிலேயே தீவிர நாட்டம் காட்டினர். பொருளாதார நெருக்கடியின் பாரதூரத்தன்மையை அவர்கள் குறைத்து மதிப்பிடவும் செய்தார்கள். நெருக்கடியின் தன்மையை ஜனாதிபதி மிகைப்படுத்துகின்றார் என்று கூறி அநுரா ஏளனமும் செய்தார். அநுராவைப் பொறுத்தவரை அது ஒரு பெரிய பிரச்சினையே அல்ல, ரணில் தான் அதை பெரிதுபடுத்திக் கொண்டிருக்கிறார் என்று கருதினார்.

விக்கிரமசிங்க அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியதையும் தேசிய மக்கள் சக்தி கண்டனம் செய்தது. இலங்கையில் இடதுசாரிகள் ” பிரெட்டன் வூட்ஸ் இரட்டை ” என்று அழைக்கப்டுகின்ற சர்வதேச நாணய திதியம் மற்றும் உலக வங்கி மீது வெறுப்புணர்வைக் கொண்ட வரலாற்றை உடையவை.இப்போது அந்த வெறுப்புக்கு ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தி புத்தூக்கம் கொடுத்தது.

சர்வதேச நாணய நிதியத்தின் விளைவாக மக்கள் குறிப்பாக சமூகத்தின் பின்தங்கிய பிரிவினர் இடர்பாடுகளை எதிர்நோக்கப் போகிறார்கள் என்று அவர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள். சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கு பதிலாக புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் இலங்கைச் சமூகத்திடம் இருந்து பெறக்கூடிய உதவிகளின் ஊடாக பொருளாதார பிரச்சினைக்கு தங்களால் தீர்வு காணமுடியும் என்று கூட ஜே.வி.பி.யின் பொருளாதார ‘ மந்திரவாதி ‘ சுனில் ஹந்துனெத்தி கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது.

ஐக்கிய மக்கள் சக்தியும் தேசிய மக்கள் சக்தியும் விக்கிரமசிங்க அரசாங்கத்துடன் ஒத்துழைக்கப் போவதில்லை என்பது விரைவாகவே தெளிவாகத் தெரிந்தது. ஒரு ஆரோக்கியமான விமர்சன ரீதியான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதற்கு பதிலாக எடுத்ததற்கெல்லாம் பிழை கண்டுபிடிக்கும் அணுகுமுறையை அவர்கள் கடைப்பிடித்தார்கள். அரசாங்கத்துக்கு எதிரான பிரசாரத்துக்கு மக்களின் ஒவ்வொரு பொருளாதார குறைபாடும் உச்சத்துக்கு பயன்படுத்தப்பட்டது. பொருட்கள் தாராளமாகக் கிடைப்பதை விக்கிரமசிங்கவினால் உறுதிப்படுத்தக் கூடியதாக இருந்தபோதிலும், அவற்றை பெரும்பாலான மககளினால் வாங்க முடியாமல் இருந்தமை கூர்மையானஒரு பிரச்சினையாக விளங்கியது. வாழ்க்கைச் செலவு உயர்ந்துகொண்டு போனது, ஆனால் சம்பளங்கள் அதிகரிக்கவில்லை. தனவந்தர்கள் மேலும் தனவந்தர்களாகிக் கொண்டுபோக வறியவர்கள் மேலும் வறியவர்களானார்கள். நடுத்தர வர்க்கம் தாழ்வுற்றது.

அறகலய பேராட்டம்

ராஜபக்சாக்களின் ஆட்சி தூக்கியெறியப்படுவதை துரிதப்படுத்தியதற்கு மேலதிகமாக அறகலய போராட்டம் பல விடயங்களை சாதித்தது. பொதுவில் மக்கள் சக்தியினதும் குறிப்பாக இளைஞர் சக்தியினதும் வெற்றியை அது நிரூபித்தது. குடும்ப அரசியல் அதிகாரம், நெரூங்கியவர்களுக்கு சலுகை செய்யும் போக்கு மற்றும் ஊழலுக்கு எதிரான உணர்வை அது அதிகரித்தது. முறைமையில் அல்லது தற்போதுள்ள ஒழுங்கில் மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும் என்ற வேட்கையுடைய ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை அறகலய வளர்த்து வளமாக்கியது.

மாறிவிட்ட சமநிலையை கணக்கில் எடுத்த தேசிய மக்கள் சக்தி ஒரு ஆய்வுச் செயன்முறையை ஆரம்பித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் மூலம் அறிய முடிந்தது. இதில் அநுரா குமார திசாநாயக்க முக்கியமான பாத்திரத்தை வகித்தார். ஜனாதிபதி பதவியை இலக்குவைத்து பெரியளவில் தயாராவதன் மூலமாக தங்களது அரசியல் மேம்பாட்டுக்கு மிகவும் சாதகமான நிலைவரம் ஒன்று இருப்பதை ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தி உணர்ந்தது. ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தனியாக போட்டியிட வேண்டும் என்பதில் மீண்டும் அநுரா உறுதியாக இருந்தார். ஜனாதிபதி வேட்பாளராக அவரே களமிறங்குவார் என்பது ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று.

அதற்கு பிறகு தேசிய மக்கள் சக்தி 2024 ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகத் தொடங்கியது. ஜனாதிபதி விக்கிரமசிங்க உரிய காலத்தில் தேர்தலை நடத்துவாரா என்ற ஒரு சந்தேகம் இருந்தது. அவ்வாறு அவர் நடத்த முன்வராத பட்சத்தில் ஜனாதிபதி தேர்தலை அல்லது பாராளுமன்ற தேர்தலை நடத்தக் கோரி நாடுதழுவிய பாரிய அரசியல் போராட்ட த்தை முன்னெடுப்பதற்கும் தேசிய மக்கள் சக்தி தயாராக இருந்தது. ஆனால், ரணில் தேர்தலை நடத்துவதற்கே எப்போதும் உத்தேசித்திருந்ததால் எந்தவொரு போராட்டத்துக்கும் தேவை இருக்கவில்லை. அவர் அவ்வாறே செய்தார்.

வெற்றியின் கதை

ஜனாதிபதி வேட்பாளராக அநுரா குமார திசாநாயக்கவுக்கு ஆதரவாக பிரசாரங்களை தேசிய மக்கள் சக்தி விடாமுயற்சியுடன் முன்னெடுத்தது. ஜனாதிபதி தேர்தல் போட்டியில் வெற்றியின் நறுமணத்தை முகரத்தொடங்கிய அநுரா இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக தன்னை காட்சிப்படுத்தினார். இந்த ‘ கனவு ‘ 2024 செப்டெம்பரில் நனவாகியது. ஜனாதிபதி தேர்தலில் அநுரவின் வெற்றியின் மருட்சியூட்டும் கதையை அடுத்தவாரம் விரிவாக எழுதுவேன்.அதுவே இந்த கட்டுரைத் தொடரின் இறுதிப் பாகமாகவும் அமையும்.
_______________

D.B.S.Jeyaraj can be reached at dbsjeyaraj@yahoo.com

ஆங்கில மூலம்: டி. பி. எஸ். ஜெயராஜ் (Daily Mirror)

தமிழில்: வீரகத்தி தனபாலசிங்கம்

நன்றி: வீரகேசரி

************************************************************************************************