அநுர குமார திசாநாயக்கவும் தேசிய மக்கள் சக்தியின் உருவாக்கமும்

டி.பி.எஸ். ஜெயராஜ்

அநுர குமார திசாநாயக்க ; இலங்கை வானில் ‘ இடதுசாரி ‘ நட்சத்திரம் – 4

இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்வை பற்றிய எனது கட்டுரைத் தொடரின் நான்காவது பாகம் இதுவாகும். முதலாவது பாகத்தில் நிகழவுகள் நிறைந்த அவரது ஆரம்ப வாழ்க்கையையும் இரண்டாவது பாகத்தில் ஜனதா விமுக்தி பெரமுன( ஜே வி.பி.) வுக்குள் அவரின் படிப்படியான சீரான வளர்ச்சி பற்றியும் மூன்றாவது பாகத்தில் ஜே.வி.பி.யின் தலைமைத்துவத்துக்கு அவரின் உயர்வு பற்றியும் எழுதியிருந்தேன்.

இந்த நான்காவது பாகத்தில் திசாநாயக்கவின் தலைமையில் ஜே.வி.பி. எவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தலையைத்துவ கட்சியாக மாற்றம் பெற்றது என்பதை விளக்குகிறேன்.

அநுரா குமார திசாநாயக்கவின் வாழ்வில் 2014 பெப்ரவரி 2 ஆம் திகதி ஒரு முக்கியமான தினமாகும். அந்த தினத்தில்தான் ஜே.வி.பி.யின் 17 வது தேசிய மகாநாடு நடைபெற்றது. கட்சியின் தலைமைத்துவத்தில் ஏற்பட்ட மாற்றமே அந்த மகாநாட்டின் சிறப்பாக அமைந்தது. 24 வருடங்களாக ஜே.வி.பி.யின் தலைவராக இருந்து வந்த சோமவன்ச அமரசிங்க பதவியில் இருந்து இறங்கினார். அநுரா அல்லது ஏ.கே.டி. என்று பிரபலமாக அறியப்பட்ட அநுர குமார திசாநாயக்க ஜே.வி.பி.யின் புதிய தலைவராக வந்தார்.

சோமவன்ச தலைவர் பதவியில் இருந்து ஓய்வுபெறப் போகின்றார் என்பது மகாநாட்டுக்கு முன்னதாகவே பொதுவாக தெரிய வந்தது. எதிர்காலத் தலைவர் யார் என்பதே தெரியாமல் இருந்தது. புதிய தலைவராக வரக்கூடியவர்கள் என்று கே.டி.லால்காந்த, ரில்வின் சில்வா, விஜித ஹேரத், சுனில் ஹந்துன்னெத்தி, பிமால் இரத்நாயக்க மற்றும் அநுரா குமார திசாநாயக்க ஆகியோரின் பெயர்கள் பரவலாக அடிபட்டன.இவர்களில் ரில்வின் சில்வாவே பெரும்பாலும் புதிய தலைவராக தெரிவாவார் என்று நம்பப்பட்டது.

ஜே.வி.பி.யின் தலைவர் என்ற வகையில் தனது ஓய்வை அறிவித்த சோமவன்ச அமரசிங்க புதிய தலைவராக அநுரா குமார திசாநாயக்கவின் பெயரை முன்மொழிந்தார். ரில்வின் சில்வாவே அவரை வழிமொழிந்தார். பிரேரணை ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது. ரில்வின் சில்வாவும் விஜித ஹேரத்தும் முறையே பொதுச் செயலாளராகவும் பிரசாரச் செயலாளராகவும் மீண்டும் தெரிவு செய்யப்பட்டனர். தேசிய அயைப்பாளராக பிமால் இரத்நாயக்க தெரிவான அதேவேளை ஓய்வை அறிவித்த தலைவர் சோமவன்ச அமரசிங்க சர்வதேச விவகார செயலாளராக நியமிக்கப்பட்டார்.

தலைமைத்துவ மாற்றம் முரண்பாடு எதுவும் இல்லாததாக சுமுகமாக இடம்பெற்றதே முக்கியமாக குறிப்பிடத்தக்க அம்சமாக இருந்தது. இலங்கையில் பெரும்பாலான கட்சிகளில் நிலவும் உட்பூசலையும் குழுவாதத்தையும் அங்கு காணமுடியவில்லை. பல வருடங்களாக ஜே.வி.பி.யின் பெரும்பாலான உறுப்பினர்களின் நேசத்துக்குரியவராக அநுரா விளங்கி வந்ததால் எல்லோருக்கும் ஏற்புடையவராக இருந்தார். 2008 ஆம் ஆண்டில் விமல் வீரவன்ச குழுவினரதும் 2012 ஆம் ஆண்டில் குமார் குணரத்தினம் குழுவினரதும் பிளவுகளை அடுத்து கட்சி ஓரளவுக்கு பலவீனப்பட்டு உறுப்பினர்கள் மத்தியில் உறுதி குன்றிப் போயிருந்தது. புதிய ஒரு தலைவரின் கீழ் புதிய ஒரு செல்நெறி ஜே.வி.பி.க்கு அவசியமாக தேவைப்பட்டது. அநுரா குமார திசாநாயக்க அதற்கு மிகவும் பொருத்தமானவராக தெரிந்தார்.

இரு முக்கியமான தேர்தல்கள்

தலைமைத்துவப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் அநுரா குமார திசாநாயக்க 2015 ஆம் ஆண்டில் இரு முக்கியமான தேர்தல்களுக்கு முகங்கொடுத்தார். ஒன்று 2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தல் .மற்றையது 2015 ஆகஸ்ட் பாராளுமன்ற தேர்தல். அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் முட்டை அப்ப இரவு விருந்தில் பங்கேற்ற பிறகு அங்கிருந்து வெளியேறிய அன்றைய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திராபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடாடார்.

2010 ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா போட்டியிட்டார். அவர் தோல்லியடைந்தார். மற்றைய எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து ஜே.வி.பி. பொன்சேகாவுக்கு ஆதரவாக தீவிரமாக பிரசாரம் செய்தது. 2010 பாராளுமன்ற தேர்தலில் ஜே வி.பி. சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணியின் அங்கமாக போட்டியிட்டது. அந்த கூட்டணிக்கு கிடைத்த ஏழு ஆசனங்களில் நான்கு ஆசனங்களை ஜே.வி.பி. பெற்றுக் கொண்டது. அநுரா தேசிய பட்டியல் மூலமாகவே பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

2015 ஆண்டில் ஜே.வி.பி.யின் புதிய தலைவர் அநுரா ஜனாதிபதி தேர்தலில் வேறுபட்ட ஒரு அணுகுமுறையைக் கடைப்பிடித்தார். 2010 ஆண்டில் செயதததைப் போன்று கூட்டு எதிரணியின் தேர்தல் பிரசாரங்களில் ஜே வி.பி. இணைந்து கொள்ளவில்லை. அதேவேளை, மூன்றாவது பதவிக் காலத்துக்கு ஜனாதிபதியாக வருவதற்கான மகிந்த ராஜபக்சவின் முயற்சியை ஜே வி.பி. மிகவும் உறுதியாக எதிர்த்தது. எதி்க்கட்சிகளின் பொது வேட்பாளரான சிறிசேனவை நேரடியாக ஆதரிக்காத அதேவேளை ராஜபக்சவுக்கு எதிராக தீவிரமான ஒரு பிரசாரத்தை தனியாக முன்னெடுத்ததன் மூலமாக ஜே.வி.பி. முறைமுகமான ஆதரவை வழங்கியது. ஜே.வி.பி. நடத்திய கூட்டங்களில் பேச்சாளர்கள் ராஜபக்சவை மிகவும் கடுமையாக தாக்கினார்கள். சிறிசேனவுக்கு வாக்களிக்குமாறு மக்களை ஜே.வி.பி. கேட்கவில்லை.ஆனால் ராஜபக்சவுக்கு எதிராக வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டது. அந்த ஜனாதிபதி தேர்தலில் சிறிசேன வெற்றி பெற்றார்.

2015 ஆகஸ்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது ஜே.வி.பி. 2010 ஆண்டில் கடைப்பிடித்த நிலைப்பாட்டில் இருந்து மீண்டும் விலகியது. எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஒன்றில் இணைந்து கொள்வதற்கு பதிலாக தனியாகப் போட்டியிட்டது. 2000 ஆண்டிலும் 2001 ஆம் ஆண்டிலும் பாராளுமன்ற தேர்தல்களில் தனியாகப் போட்டியிட்ட கடந்த காலத்துக்கு ஜே.வி.பி. திரும்பியது. 2004 ஆம் ஆண்டிலும் 2010 ஆண்டிலும் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்களிலேயே கூட்டணி ஒன்றின் அங்கமாக ஜே வி.பி. போட்டியிட்டது.

2015 பாராளுமன்ற தேர்தலே அநுராவின் தலைமையின் கீழ் ஜே.வி.பி. முகங்கொடுத்த முதல் பாராளுமன்ற தேர்தலாகும். சகல தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிட்ட ஜே.வி.பி.543, 944 வாக்குகளை ( 4.8 சதவீதம் ) வாக்குகளைப் பெற்றது. அதற்கு கிடைத்த ஆறு ஆசனங்களில் நான்கு ஆசனங்கள் மக்கள் தெரிவுசெய்தவை, மற்றைய இரண்டும் தேசியப்பட்டியல் ஆசனங்கள். கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட அநுரா 65,966 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்தார்.

ஐக்கிய அரசாங்கம்

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஜே.வி.பி.யும் எதிர்க்கட்சி வரிசையிலேயே இருந்தது. நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர் என்ற வகையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாப்பில் இருந்த ஏற்பாடு ஒன்று காரணமாக மைத்திரிபால சிறிசேன அந்த கட்சியின் தலைவராக வரக்கூடியதாக இருந்தது.ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி சிறிசேன தலைமையிலான சுதந்திர கட்சியுடன் உடன்படிக்கை ஒன்றுக்கு வந்து விக்கிரமசிங்கவை பிரதமராகக் கொண்ட ” ஐக்கிய அரசாங்கம் ” (Unity Government ) ஒன்று அமைக்கப்பட்டது. சுதந்திர கட்சி பெயரளவில் அரசாங்கத்தில் பங்காளியாக இருந்தாலும், மகிந்த ராஜபக்சவுக்கு விசுவாசமான ஐம்பதுக்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு எதிர்க்கட்சியாகவே இயங்கினார்கள். ஆனால் அவர்களை அன்றைய சபாநாயகர் கரு ஜெயசூரிய உத்தியோகபூர்வமாக எதிர்க்கட்சியாக அங்கீகரிக்கவில்லை.

அதனால் ஒரு விசித்திரமான திருப்பமாக தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஜே.வி.பி.யுமே பிரதான எதிர்க்கட்சிகளாக கருதப்பட்டன. கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக வந்தார். ஜே.வி.பி.யின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக நியமிக்கப்பட்டார். இந்த வழமைக்கு மாறான நிலைவரம் ரணிலை பதவி நீக்கிவிட்டு அவரின் இடத்துக்கு பிரதமராக மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி சிறிசேன நியமித்த 2018 அக்டோபர் 26 பாராளுமன்ற சதிமுயற்சிக்கு பிறகு மாறியது. ஆனால் இந்த நாடகபாணியிலான அரசியல் நிகழ்வு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து முடிவுக்கு வந்தது. அதற்கு பிறகு சம்பந்தனின் எதிர்க்கட்சி தலைவர் பதவியும் திசாநாயக்கவின் எதிர்க்கட்சி பிரதம கொறடா பதவியும் இல்லாமல் போனது.

சிறிசேன — விக்கிரமசிக்க நிருவாகத்தின் காலத்தில் இரு முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன.ஒன்று, புதிய அரசியலமைப்பை வரைவதற்காக அரசியலமைப்பு சபை ஒன்று ( Constitutional Assembly ) அமைக்கப்பட்டது. அதன் நடவடிக்கைகளில் ஜே.வி.பி. பங்கேற்று இடைக்கால அறிக்கை ஒன்றை தயாரிப்பதில் முழுமையாக ஒத்துழைத்தது. இந்த செயற்பாடுகளின்போது அநுரா தலைமையின் கீழ் ஜே.வி.பி. அதிகாரப்பரவலாக்கம் மற்றும் மாகாணசபைகள் தொடர்பிலான அதன் முன்னைய நிலைப்பாட்டை தளர்த்திக்கொண்டது என்பது கவனிக்கத்தக்கது. இப்போது ஜே.வி.பி. அதன் ஆட்சியில் அந்த முன்னைய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை தொடர்ந்து முன்னெடுப்பதாக கூறியிருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்க ஒரு விடயமாகும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தோற்றமும் 2018 உள்ளூராட்சி தேர்தல்களில் அதன் மகத்தான வெற்றியுமே இரண்டாவது முக்கிய நிகழ்வாகும். மகிந்தவும் அவரது விசுவாசிகளும் சுதந்திர கட்சியிலேயே தொடர்ந்து இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் சூழ்நிலையில் பசில் ராஜபக்ச தாமரை மொட்டு சின்னத்துடன் புதிய கட்சியை ( 2016 டிசம்பர் ) அமைத்தார். 2018 உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிட்ட பொதுஜன பெரமுன 4,941, 952 (44.65 சதவீதம் ) வாக்குகளை பெற்றது. 231 உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றிய பொதுஜன பெரமுனவில் இருந்து 3369 உறுப்பினர்கள் தெரிவாகினர்.ஐக்கிய தேசிய கட்சியையும் சுதந்திர கட்சியையும் புதிய கட்சி தோற்கடித்ததை அடுத்து நாட்டின் அரசியல் அதிகாரச் சமநிலை மாறிவிட்டது என்பது வெளிப்படையானது.

ஜே.வி.பி.யை பொறுத்தவரை, அந்த உள்ளூராட்சி தேர்தல்களில் குறிப்பிடத்தக்க அளவுக்கு செயற்பாட்டை வெளிக்காட்ட முடியவில்லை. 693, 875 (6.27 சதவீதம் ) வாக்குகளை பெற்ற ஜே.வி.பி. யின் 431 உறுப்பினர்கள் பல்வேறு உள்ளூராட்சி சபைகளுக்கும் தெரிவானார்கள். ஒரு உள்ளூராட்சி சபையை தானும் அதனால் கைப்பற்ற முடியவில்லை.

ஜே.வி.பி.க்குள் சுயபரிசோதனை

2015 பாராளுமன்ற தேர்தலிலும் 2018 உள்ளூராட்சி தேர்தல்களிலும் ஜே.வி.பி.யின் செயற்பாடுகள் ஒப்பீட்டளவில் மிகவும் பலவீனமானதாக இருந்ததால் கட்சிக்குள் ஒரு சுயபரிசோதனை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது.ஜே.வி.பி.யின் கூட்டங்களிலும் பேரணிகளிலும் மக்கள் பெருமளவில் கலந்துகொண்டார்கள். மக்கள் கூட்டம் மிகுந்த ஆதரவானதாகவும் காணப்பட்டது. என்றாலும் வாக்களிப்பு நேரத்தில் ஜே.வி.பி. மூன்றாவது இடத்துக்கே வந்தது. இறுதியில் அது ஒரு விளிம்புநிலைக் கட்சியாகி இலங்கை அரசியலில் மூன்றாவது சக்தி என்று ஊடகங்களினால் வர்ணிக்கப்படுவதனால் ஆறுதலடையவேண்டியதைப் போன்று இருந்தது.

2015 , 2018 தேர்தல்களில் பலவீனமான செயன்பாட்டையடுத்து ஜே.வி.பி.யும் அதன் தலைவர் அநுரா குமார திசாநாயக்கவும் பெருமளவில் சுயபரிசோதனையில் ஈடுபட்டனர். ஜே.வி.பி. தலைவர்கள் குறிப்பாக திசாநாயக்க ஏனைய கட்சிகளைச் சேர்ந்த குறிப்பிட்ட சில அரசியல்வாதிகள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் புலம்பெயர் சமூகத்தில் உள்ள ஆதரவாளர்களுடன் கட்சியின் எதிர்காலம் குறித்து ஆராய்ந்தனர்.

முதலில் 1971 ஆம் ஆண்டிலும் பிறகு 1988 — 90 காலப்பகுதியிலும் முன்னெடுத்த ஆயுதக்கிளர்ச்சியின் பயங்கரமான அனுபவங்களுக்கு பிறகு புரட்சிகர வன்முறையில் நம்பிக்கை கொண்டதாகவோ அல்லது அந்த பாதையைப் பின்பற்றுவதில் ஆர்வம் கொண்டதாகவோ ஜே.வி.பி. இப்போது இல்லை. அது துப்பாக்கி குண்டை கைவிட்டு வாக்குச்சீட்டைக் கையில் எடுத்தது. சட்டபூர்வமான ஜனநாயக வழிமுறைகளின் ஊடாக அரசியல் அதிகாரத்தைப் பெறுவதையே ஜே.வி.பி. விரும்பியது. வாக்குகள் மூலமான வெற்றியிலேயே அது நாட்டம் காட்டியது. ஆனால், இலங்கை மக்கள் அந்த கட்சிக்கு பெருமளவில் திரண்டு வாக்களிக்கப் போவதில்லை. இரு பிரதான அரசியல் கட்சிகளுக்கும் அடுத்ததாக எப்போதுமே ஒரு மூன்றாவது இடத்தில் இருந்து கொண்டு மூன்றாவது அரசியல் சக்தி என்று அடையாளப்படுத்தப்படுவதே ஜே.வி.பி.யின் விதியாகிப் போனதா? இந்த நிலைவரத்தை எவ்வாறு மாற்றியமைக்க முடியும்?

முற்போக்கு கட்சியொன்றின் தலைமையிலான கட்டணியில் ஜே.வி.பி. ஒரு அங்கமாக வேண்டும் என்று பலரும் யோசனை கூறினர். இடதுசாரிப் போக்குடைய கட்சிகளை உள்ளடக்கிய ஐக்கிய முன்னணி ஒன்றை ஜே.வி.பி. அமைக்க வேண்டும் என்று வேறு சிலர் யோசனை கூறினார். ஆனால், அந்த யோசனைகளை ஜே.வி.பி.யில் உள்ள பலர் விரும்பவில்லை. அவர்களில் அநுரா குமார திசாநாயக்க முக்கியமானவர். ஜே.வி.பி. மற்றைய கட்சிகளுடன் கூட்டணியையோ அல்லது ஐக்கிய முன்னணியையோ அவர் விரும்பவில்லை. ஜே.வி.பி. பிரதான பாத்திரத்தை வகிக்கவேண்டுமே தவிர் கீழ்நிலைப்பட்ட பாத்திரத்தை வகிப்பதை திசாநாயக்க விரும்பவில்லை.

வெளிச்சக்திகளுடனான நீண்ட கலந்தாலோசனைகள் மற்றும் உட்கட்சி பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு பரந்தளவிலான ஒரு கூட்டணியை அல்லது முன்னணியை அமைப்பது என்று ஜே.வி.பி. தீர்மானித்தது. அத்தகைய கூட்டணியிலோ, முன் ணியிலோ ஜே.வி.பி. தனிமேம்பாடுடையதாகவும் மைய அதிகாரத்தைக் கொண்டதாகவும் இருக்கவேண்டும் என்பதே அவர்களது நிலைப்பாடு. புதிய கட்டமைப்பில் சமத்துவமான பங்காளிகள் மத்தியில் முதலாவதாக தாங்கள் இருக்கவேண்டும் என்பதே அவர்களின் வெளிப்படையான விரும்பம். ஜே.வி.பி. அதன் அரசியல் கோட்பாட்டுக்கு விசுவாசமானதாக இருக்கும் அதேவேளை மையக் கொள்கையிலும் உறுதியானதாக இருக்கும். புதிய மொந்தையில் பழைய கள்ளு என்பதே அதன் அர்த்தம்.

ஜாதிக ஜன பலவேகய

அவ்வாறாக ஜாதிக ஜன பலவேகய ( தேசிய மக்கள் சக்தி ) பிறந்தது. 1919 ஜூலை 19 ஆம் திகதி அரசியல் செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கவாதிகள், கலைஞர்கள், துறைசார் நிபுணர்கள் மற்றும் கல்விமான்கள் என்று நூற்றுக்கணக்கானவர்கள் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் கூடினார்கள். அநுரா குமார திசாநாயக்க பிரேரணையை முன்மொழிந்தார். அதை ரில்வின் சில்வா வழிமொழிந்ததை தொடர்ந்து தேசிய மக்கள் முறைப்படி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

அநுரா குமார திசாநாயக்கவே தேசிய மக்கள் சக்தியின் தலைவராகவும் தெரிவானார். அதன் பொதுச் செயலாளர் கலாநிதி நிஹால் அபேசிங்க. கலாநாதி ஹரிணி அமரசூரியவும் லால் விஜேநாயக்கவும் பிரதிச் செயலாளர்கள். பொருளாளர் எறங்க குணசேகர.

அரசியல் கட்சிகள், இளைஞர் அமைப்புகள், மகளிர் குழுக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் உட்பட பல்வகைப்பட்ட 21 குழுக்களை உள்ளடக்கிய செயலூக்கமிக்க ஒரு அரசியல் இயக்கமே தேசிய மக்கள் சக்தியாகும். 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி முற்போக்கான ஒரு இலங்கையை உருவாக்கும் பொதுவான நோக்கு ஒன்றைக் கொண்டது.

ஊழலற்ற, சேவை நோக்கம்கொண்ட, பொறுப்புக்கூறும் கடப்பாடுடைய ஔிவுமறைவற்ற அரசியல் கலாசாரத்தை வளர்ப்பதையும் நேர்மையான செல்வவளப் பகிர்வுக்கான பொருளாதார ஜனநாயகத்தை மேம்படுத்துவதையும் சகல சமூகங்களையும் அரவணைக்கும் ஒரு ஜனநாயக இலங்கை அடையாளத்துக்காக குரல் கொடுப்பதையும் தழுவியதே எமது மையக் குறிக்கோள்கள்.

எமது வழிகாட்டில் குழு தொடக்கம் மாவட்ட நிறைவேற்றுக் குழுக்கள் வரை எமது அமைப்புமுறைக் கட்டமைப்பு சகல மட்டங்களிலும் மக்கள் குரல்களை வலுவூட்டி தேசத்தில் நேர்மறையான மாற்றத்துக்கான ஒரு சக்தியாக தேசிய மக்கள் சக்தியை கட்டிவளர்க்கும் என்று தேசிய மக்கள் சக்தியைப் பற்றி அதன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் விபரிக்கப்பட்டிருக்கிறது.

தேசிய மக்கள் சக்தியின் தீர்மானங்களை எடுக்கும் பிரதம அமைப்பு தேசிய நிறைவேற்றுக்குழுவேயாகும். ஐம்பதுக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட அந்த தேசிய நிறைவேற்றுக்குழுவின் தலைவரும் அநுரா குமார திசாநாயக்கவே.

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் ஞானஸ்நானம்

ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அதன் தேர்தல் ஞானஸ்நானத்தை 2019 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் பெற்றுக் கொண்டது. முதல் தடவையாக அநுரா குமார திசாநாயக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார். தேசிய மக்கள் சக்தியின் சின்னம் திசைகாட்டி கருவி. அதன் வேட்பாளருக்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் ஐக்கிய இடதுசாரி முனானணியும் ஆதரித்தன. தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் அசல் ஜே.வி.பி. கூட்டங்களைப் போன்றே இருந்தன. அநுராவை பார்க்கவும் அவரின் பேச்சைக் கேட்கவும் மக்கள் பெருமளவில் கூடினார்கள். என்றாலும் தேர்தல் முடிவுகள் பெரும் ஏமாற்றத்தையே தந்தன. வெறுமனே 418, 563 வாக்குகளை ( 3.15 சதவீதம் ) பெற்று அநுரா மூன்றாவதாக வந்தார்.

பத்து மாதங்கள் கழித்து 2020 பாராளுமன்ற தேர்தல் வந்தது. தேசிய மக்கள் சக்தி சகல மாவட்டங்களிலும் போட்டியிட்டது. அந்த தேர்தல் முடிவுகளும் அதற்கு பெரும் பாதிப்பாகப் போய்விட்டது. திசைகாட்டியினால் 445, 958 வாக்குகளை ( 3.84 சதவீதம்) வாக்குகளையே பெறக்கூடியதாக இருந்தது. இது 2015 பாராளுமன்ற தேர்தலில் ஜே.வி.பி. பெற்ற 543, 944 வாக்குகளையும் ( 4.84 சதவீதம் ) விட குறைவானதாகும்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அரைவாசியானது. 2015 ஆம் ஆண்டில் ஜே.வி.பி.க்கு ஆறு ஆசனங்கள் கிடைத்தன. அதில் நான்கு ஆசனங்கள் மக்களால் தெரிலானவை. மற்றைய இரண்டும் தேசியப்பட்டியல் ஆசனங்கள். 2020 ஆம் ஆண்டில் தேசிய மக்கள் சக்திக்கு மூன்று ஆசனங்கள் மாத்திரமே கிடைத்தன. இரு ஆசனங்கள் மக்களால் தெரிவானவை. மற்றையது தேசியப்பட்டியல் ஆசனம். கொழும்பு மாவட்டத்தில் அநுரா குமார திசாநாயக்கவுக்கு 49,814 விருப்பு வாக்குகள் கிடைத்தன. (2015 ஆம் ஆண்டில் அவருக்கு 65, 066 விருப்பு வாக்குகள் கிடைத்தன.) கம்பஹாவில் வெற்றிபெற்ற விஜித ஹேரத்துக்கு 37, 008 விருப்பு வாக்குகள் கிடைத்தன. தேசியப்பட்டியல் ஆசனத்துக்கு கலாநிதி ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்டார்.

மூன்றாவது அரசியல் சக்தி அந்தஸ்து

2019 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளும் 2020 பாராளுமன்ற தேர்தல் முடிவுகளும் தேசிய மக்கள் சக்தியாக தேர்தல்களில் போட்டியிடுவதன் மூலமான சிறப்பான செயற்பாட்டை வெளிக்காட்டுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் எதிர்பார்த்த பயன்களை தரவில்லை என்பதை வெளிக்காட்டின. எத்தகைய தேர்தல் தந்திரோபயத்தை கடைப்பிடித்தாலும், ஜே.வி.பி.யினால் அதன் வாக்கு வங்கியை அதிகரிக்க முடியவில்லை என்று தோன்றியது. ஜே.வி.பி. தேசிய மக்கள் சக்தியாக போட்டியிட்டால் என்ன, போட்டியிடாவிட்டால் என்ன அதனால் மூன்றாவது அரசியல் சக்தி என்ற அந்தஸ்தை ஒருபோதும் கடந்து செல்லமுடியாது என்று தோன்றியது.

அநுரா குமார திசாநாயக்கவின் தலைமைத்துவத்துக்கு அது உண்மையில் ஒரு சோதனைக்காலம். பாதகமான நெருக்குதல்களின் கீழ் வேறு ஆள் என்றால் தளர்ந்துபோயிருப்பார். ஆனால், நுவரவேவ வாவியின் முழுத் தூரத்தையும் நீந்திக்கடந்து திரும்பி வரக்கூடிய ஆற்றல் கொண்ட ரஜரட்டை பொடியன் மிகுந்த நெஞ்சுரம் கொண்டவன். நீரோட்டத்துக்கு எதிராக நீந்துவதற்கு அநுரா தயாரானார். அவர் ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அணுகுமுறையை மாற்றியமைத்ததுடன் தனது அரசியல் படிமத்தையும் மீள மெருகேற்றினார்.

வரலாறு படைப்பு

இந்த மாற்றங்கள் மக்களின் மனநிலையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தன. இது இலங்கையின் ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது இடதுசாரி அரசியல்வாதி என்று அநுரா குமார திசாநாயக்க வரலாறு படைப்பதற்கு வழிவகுத்தது. இந்த வெற்றிக் கதையை ஐந்தாவது பாகத்தில் பார்ப்போம்.

__
D.B.S.Jeyaraj can be reached at dbsjeyaraj@yahoo.com

ஆங்கில மூலம்: டி. பி. எஸ். ஜெயராஜ் (Daily Mirror)

தமிழில்: வீரகத்தி தனபாலசிங்கம்

நன்றி: வீரகேசரி

************************************************************************************************