டி பி.எஸ். ஜெயராஜ்
அநுர குமார திசாநாயக்க ; இலங்கை வானில் ‘ இடதுசாரி ‘ நட்சத்திரம் -3
அது 1969 ஆம் ஆண்டு. 31 வயதான தாய் தனது ஆறு மாத ஆண் குழந்தையின் ஜாதகத்தை எழுதுவிப்பதற்காக பிரபலமான ஒரு சோதிடரின் சேவையை நாடினார். முன்னைய வருடத்தில் குழந்தை பிறந்த நேரத்தில் இருந்த கிரக நகர்வுகளின் அடிப்படையில் சில கணிப்பீடுகளைச் செய்த சோதிடர் தாயாரை பெரு வியப்புடன் பார்த்து ” உங்கள் மகனுக்கு அவனது விதியில் ஒரு இராஜயோகம் இருக்கிறது. அவன் ஆளப்பிறந்தவன். அவன் ஒரு நாள் இந்த நாட்டை ஆட்சி.செய்வான்” என்று கூறினார். தாயாருக்கு மகிழ்ச்சிதான் ஆனால் ஆச்சரியம். அவர் குறைந்த வருமானத்தைக் கொண்ட ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ‘ எவ்வாறு எனது மகன் ஆட்சியாளராவான்? அவருக்கு ஆச்சரியம்.
அந்த குழந்தை வளர்ந்து பையனாகி 12 வது பிறந்த தினத்தைக் கொண்டாடியபோது தாயார் ஒரு புதிய பிரச்சினையை எதிர்நோக்கினார். அவரது மகன் பௌத்த பிக்குவாக வரவேண்டும் அந்த கிராமத்தின் விகாராதிபதி விரும்பினார். அந்த பையனின் நல்லொழுக்கம், விவேகம் மற்றும் நடத்தையினால் அந்த விகாராதிபதி பெரிதும் கவரப்பட்டார். ஆனால் நீண்ட யோசனைக்கு பிறகு பெற்றோர் மறுத்து விட்டார்கள். அந்த முடிவை எடுக்கும்போது தாயார் சோதிடர் கூறிய இராஜயோகத்தைப் பற்றியே முக்கியமாக நினைத்தார்.
55 வருடங்கள் கழித்து சோதிடர் கூறியது உண்மையாகியது. அந்த பையன் பெரிய ஆளாக வளர்ந்து இறுதியில் நாட்டின் பிரதம ஆட்சியாளராக வந்துவிட்டான். அது வேறு யாருமல்ல, 2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுரா குமார திசாநாயக்கவே. நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அவர் தெரிவு செய்யப்பட்ட நாள் முதல் அநுராதபுரம் மாவட்டத்தின் தம்புத்தேகமவில் உள்ள திருத்தியமைக்கப்பட்ட அவரது எளிமையான வீட்டுக்கு பத்திரிகையாளர்கள், யூரியூபர்கள் உட்பட பெருவாரியான வெளியாட்கள் வருகை தந்த வண்ணம் இருக்கிறார்கள்.
புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அந்த வீட்டில் தங்கியிருப்பதில்லை என்ற போதிலும், இப்போது அவரின் தாயார் சீலாவதியும் மூத்த சகோதரி சிறியலதாவும் குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களும் அதில் வசிக்கிறார்கள். முன்கூட்டியே அறிவிக்காமல் வருகை தருவோரை மிகவும் நேச உணர்வுடன் விருந்தோம்புகிறார்கள். 86 வயதான தாயாரை ஊடகவியராளர்கள் அடிக்கடி பேட்டி காண்கிறார்கள். அவரும் தனது மகனின் இளமைக்காலத்தைப் பற்றி பேசுவதில் பெருமையடைகிறார். இந்த பேட்டிகளிலேயே தாயார் மகனின் இராஜயோகம் பற்றியும் அவனை பிக்குவாக்க விரும்பிய பௌத்த விகாராதிபதி பற்றியும் விபரங்களை கூறினார்.
இரு வாரங்களுக்கு முன்னர் வெளியான ” அநுரா குமார திசாநாயக்க ; இலங்கை வானில் இடதுசாரி நட்சத்திரம் ” என்ற தலைப்பில் அமைந்த இந்த கட்டுரைத் தொடரின் முதல் பாகத்தில் நான் அநுராவின் இளமைக்காலத்தை பற்றி எழுதியிருந்தேன். அதில் நான் அவருக்கு வாசிப்பிலும் நீச்சலிலும் இருந்த பேரார்வத்தைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன். சீலாவதி அம்மையாரும் கூட தான் வழங்கிய பேட்டிகளில் அவற்றைப் பற்றி கூடுதல் விபரங்களை கூறினார். அநுரா தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள ‘ நாராச்சியாவ ‘ குளத்தில் தான் நீச்சல் பழகினார். நீந்துவதில் எப்போதும் அவருக்கு ஆர்வம். தனது மகன் தீவிரமான ஒரு வாசகன் என்றும் சாப்பிடும்போது கூட ஒரு புத்தகத்தையோ அல்லது பத்திரிகையையோ வாசித்துக் கொண்டிருப்பார் என்றும் தாயார் கூறினார். வாசிப்பதற்கு அநுரா விரும்பித் தெரிவுசெய்தது வீட்டு வளவில் வளர்ந்திருந்த தேமா( அரலிய ) மரத்தையேயாகும். அந்த மரத்தின் ஒரு கிளையில் அமர்ந்திருந்து புத்தகக்களை அவர் வாசிப்பார். படிப்பதற்கு அவரை தான் ஒருபோதும் நிர்ப்பந்திக்க வேண்டியிருந்ததில்லை என்று தாயார் கூறுகிறார்.
ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சிக் காலகட்டத்தில் தாங்கள் எதிர்நோக்கிய தொல்லைகள் பற்றியும் அநுராவின் தாயார் பேசினார். அநுராவின் ஒன்றுவிட்ட சகோதரன் எவ்வாறு சித்திரவதைக்குள்ளாகி கொலைசெய்யப்பட்டார் என்பதையும் நீண்டகாலமாக அநுரா கைதாகாமல் எவ்வாறு தப்பிவாழ்ந்தார் என்பதையும் சீலாவதி விபரித்தார். தந்தையார் ரண்பண்டா திசாநாயக்க மரணமடைந்தபோது இறுதிச்சடங்கிற்காக அநுரா வீட்டுக்கு வருவார் என்று எதிர்பார்த்த பாதுகாப்பு அதிகாரிகள் அருகாமையில் உள்ள பகுதிகளில் காத்திருந்தார்கள். அவ்வாறு தனக்குஒரு வலை விரிக்கப்படும் என்பதை எதிர்பார்த்த அநுரா அங்கு வரவில்லை. சொந்த தந்தையாரின் இறுதிச்சசடங்குகளில் கூட அவரால் பங்கேற்க முடியாமல் போய்விட்டது என்று சீலாவதி கவலையுடன் கூறினார்.
அநுரா குமார திசாநாயக்கவை பற்றி இந்த கட்டுரையை நான் எழுதத் தொடங்கியபோது இரு பாகங்களுடன் மாத்திரம் நிறைவு செய்து கொள்வதற்கே உத்தேசித்திருந்தேன். ஆனால், கட்டுரை வாசகர்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. கட்டுரையின் வீச்செல்லையை விரிவுபடுத்தி எழுதுமாறு பல வேண்டுகோள்கள் வந்தன. அதனால் அநுரா மீதான கவனக்குவிப்பு மேலும் தொடருகிறது.
இரு வாரங்களுக்கு முன்னர் வெளியான இந்த கட்டுரையின் முதலாவது பாகத்தில் நிகழ்வுகள் பல நிறைந்த அநுராவின் ஆரம்பகால வாழ்க்கையை ஓரளவு விபரங்களுடன் எழுதினேன். கடந்த வாரம் வெளியான இரண்டாம் பாகத்தில் ஜனதா விமுக்தி பெரமுன(ஜே.வி.பி.) வுக்குள் ஒரு அரசியல் தலைவராக அவரது சீரான வளர்ச்சி எவ்வாறு அமைந்தது என்பதை ஓரளவு விரிவாக எழுதினேன். இந்த மூன்றாவது பாகத்தில் ஜே.வி.பி. யின் தலைவராக அவர் அடைந்த உயர்வு பற்றி விபரிக்கவிருக்கிறேன்.
சோமவன்ச அமரசிங்க
முன்னர் குறிப்பிடப்பட்டதை போன்று, ஜே.வி.பி. 1965 இல் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து 1989 வரை 23 வருடங்களாக வசீகரமான அதன் தாபகர் றோஹண விஜேவீரவினாலேயே தலைமைதாங்கப்பட்டு வந்தது. முதலாவது ஜே.வி.பி. தலைவர் விஜேவீர, இரணடாவது தலைவர் சமான் பியசிறி பெர்னாண்டோ, மூன்றாவது தலைவர் லலித் விஜேரத்ன– இவர்கள் மூவரும் 1989 — 1990 காலப்பகுதியில் அரசினால் கொல்லப்பட்ட 14 ஜே.வி.பி. தலைவர்களில் அடங்குவர்.உயிர் தப்பியிருந்த ஒரே சிரேஷ்ட தலைவர் சிறி ஐயா என்ற சோமவன்ச அமரசிங்க மாத்திரமே. அவர் 1990 ஜனவரியில் ஜே.வி.பி.யின் நான்காவது தலைவராக வந்தார்.
சோமவன்ச அமரசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் ஜே.வி.பி.க்கு அதன் மீளெழுச்சிக்காக புதியதொரு கொள்கை தேவைப்பட்டது. இலங்கைப் படைகள் தமிழீழ விடுதலை புலிகளுடன் போரில் ஈடுபட்டிருந்தனர். இலங்கைத் தேசப்பற்று மற்றும் நாட்டுப் பிரவினைக்கு எதிர்ப்பு என்ற போர்வையில் ஜே.வி.பி. சோமவன்சவின் தலைமையின் கீழ் சிங்களப் பேரினவாத போக்கு ஒன்றைக் கடைப்பிடித்தது. விடுதலை புலிகளுக்கு எதிரான போரை ஆதரித்த பல்வேறு வழிகளில் போர் முயற்சிகளுக்கு முழுமையாக உறுதுணையாக இருந்தது.
சோமவன்ச அமரசிங்கவின் கீழ் ஜே.வி.பி. எந்த வகையான சமாதான முன்முயற்சியையும் முற்றுழுழுதாக எதிர்க்கின்ற ஒரு போர்விரும்பி அமைப்பாக விளங்கியது. விடுதலை புலிகளுடனான சமாதான முயற்சிகள் தொடர்பில் ஜே.வி.பி. மிகவும் முறைப்பான ஒரு கடும் நிலைப்பாட்டை எடுத்தது. ஜனாதிபதி திருமதி குமாரதுங்கவின் சமாதான முயற்சிகளை அது எதிர்த்தது. அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் 2022 ஆம் ஆண்டில் விடுதலை புலிகளுடன் சமாதான முயற்சி ஒன்றில் பிரவேசித்தபோது ஜே.வி.பி. அதை எதிர்த்தது. சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு எதிராக அது பல ஆர்ப்பாட்டங்களையும் பொதுக் கூட்டங்களையும் நடத்தியது. நோர்வே வகித்த அனுசரணையாளர் பாத்திரத்தையும் அது கடுமையாக எதிர்த்தது. ஒஸ்லோ அதன் மத்தியஸ்த முயற்சிகளை நிறுத்தவேண்டும் என்று ஜே.வி.பி. தொடய்ச்சியாக கோரிக்கை விடுத்தது.
இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையின் அடிப்படையிலான தீர்வொனறைக் காண்பது தொடர்பில் ஆராய்வதற்கு அரசாங்கத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் காணப்பட்ட ஒஸ்லோ உடன்படிக்கையை ஜே.வி.பி. கண்டனம் செய்தது. ஒரு இடைக்கால ஏற்பாடாக உள்ளக சுயாட்சி அதிகார சபையை (Internal Self – Governing Authority ) அமைப்பதற்கான யோசனையை விடுதலை புலிகள் முன்வைத்த போது ஜே.வி.பி. அதற்கு எதிராக சுவரொட்டி இயக்கம் ஒன்றை முன்னெடுத்தது.
2004 ஆம் ஆண்டில் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் தேர்தலில் தோற்கடிக்கப்படுவதை உறுதிசெய்வதன் மூலமாக சமாதான முயற்சிகளை குழப்பியடிப்பதற்கு ஜே.வி.பி. உறுதிபூண்டது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் அணி சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டது. விக்கிரமசிங்க தோற்கடிக்கப்பட்டார். அந்த தேர்தலில் ஜே.வி.பி.க்கு பாராளுமன்றத்தில் 39 ஆசனங்கள் கிடைத்தன. அநுரா குமார திசாநாயக்க உட்பட ஜே.வி.பி.யின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி திருமதி குமாரதுங்கவின் அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். அநுரா விவசாயம், கால்நடை வளர்ப்பு,காணி, நீர்ப்பாசன அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
சுனாமி உதவிக் கட்டமைப்பு
ஆனால், சுனாமியினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வாழும் கரையோரப் பகுதிகளுக்கு வெளிநாட்டு நிதியைப் பகிர்ந்தளிப்பதற்காக மரபுக்கு மாறான கட்டமைப்பு ஒன்றை நிறுவுவதற்கான யோசனையை ஜனாதிபதி திருமதி குமாரதுங்க முன்வைத்தபோது ஜே.வி.பி.யின் அமைச்சர்கள் பதவி விலகியதுடன் அதன் 39 பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறினர். அந்த உத்தேச கட்டமைப்பு சுனாமிக்கு பின்னரான செயற்பாட்டு முகாமைத்துவ கட்டமைப்பு [ Post – Tsunami Operational Management Structure (P – TOMS )] என்று அழைக்கப்பட்டது. அது அரசாங்கத்திற்கும் விடுதலை புலிகளுக்கும் இடையிலான ஒரு கூட்டுப் பொறி முறையாகும்.
அந்த சுனாமி உதவிக் கட்டமைப்பை ஜே வி.பி. கடுமையாக எதிர்த்தது. அநுரா உட்பட ஜே.வி.பி.யின் 39 பாராளுமன்ற உறூப்பினர்களும் அதற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரணை செய்த அன்றைய பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தலைமையிலான உயர்நீதிமன்ற அமர்வு சுனாமி உதவிக் கட்டமைப்புக்கான உடன்படிக்கையின் முக்கியமான செயற்பாட்டு பிரிவுகளை கட்டுப்படுத்தி இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. அதையடுத்து அந்த கட்டமைப்பை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இடைக்காலத் தடையுத்தரவை வரவேற்ற ஜே.வி.பி. கூட்டுப் பொறிமுறை நடைமுறைப்படுத்தப்படுவதை வெற்றிகரமாக தடுத்துவிட்டதாக கூறியது. சுனாமி உதவிக் கட்டமைப்பு தொடர்பான ஜே.வி.பி.யின் கதையை கடந்தவாரம் வெளியான இந்த கட்டுரையான இரண்டாம் பாகத்தில் காலவரிசைப்படி விபரித்திருந்தேன்.
வடக்கு — கிழக்கு இணைப்பு
ஜே.வி.பி. அதன் இந்த நடவடிக்கைகளை எல்லாம் பிரிவினைவாதத்தையும் பயங்கரவாதத்தையும் எதிர்ப்பது என்ற அடிப்படையில் நியாயப்படுத்திய அதேவேளை, இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கையின் ஏற்பாடுகளின் பிரகாரம் செய்ப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தற்காலிக இணைப்பு மீதான விரோதத்தையும் பெரியளவில் வெளிக்காட்டியது.
” வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணமும் இலங்கையின் தமிழ்பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடங்களாக இருந்து வந்திருக்கின்றன. இந்த பிராந்தியத்தில் இதுவரைகாலமும் அவர்கள் ஏனைய இனக்குழுக்களுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்” என்று சமாதான உடன்படிக்கையின் 1.4 பந்த கூறுகிறது. இணைப்பை தொடரவேண்டுமானால் ஒரு வருடத்துக்கு பிறகு கிழக்கு மாகாணத்தில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்ட முறையில் இரு மாகாணங்களும் தற்காலிகமாக இணைக்கப்பட்டன. போர் முடிவின்றித் தொடர்ந்த காரணத்தினால் சர்வஜன வாக்கெடுப்பை அரசாங்கங்கள் தொடர்ச்சியாக ஒத்திவைத்துவந்தன.
வடக்கு — கிழக்கு இணைப்புக்கு எதிராக ஜே.வி.பி. ஒரு கடும்போக்கை கடைப்பிடித்தது. ஒரு அரசியல் கட்சி என்ற வகையில் இணைப்புக்கு வெளிப்படையாக எதிர்ப்பைக் காட்டியதற்கு புறம்பாக ஜே.வி.பி. எதிர்ப்பை தீவிரப்படுத்துவதற்காக வேறு அமைப்புக்களையும் உருவாக்கியது. பரந்தளவில் கருத்தரங்குகளும் பொதுக்கூட்டங்களும் நடத்தப்பட்டன. ஆயிரக்கணக்கில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதுடன் இலட்சக்கணக்கான துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
வடக்கு — கிழக்கு இணைப்புக்கு எதிரான நீணடதொரு பிரசார இயக்கத்துக்கு பிறகு ஜே.வி.பி. 2006 ஆம் ஆண்டில் நீதிமன்றத்தையும் நாடியது. வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணமும் இணைக்கப்பட்டு ஒரு தனியான தமிழ்பேசும் மாகாணம் உருவாக்கப்பட்டதை ஆட்சேபித்து ஜே.வி.பி. இலங்கை உயர்நீதிமன்றத்தில் மூன்று அடிப்படை உரிமைமீறல் மனுக்களை தாக்கல் செய்தது. அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான வசந்த பியதிஸ்ஸ, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த விஜேசேகர, சம்மாந்துறையைச் சேர்ந்த ஒரு அரசாங்க சேவையாளரான ஏ.எஸ்.எம். புஹாரி ஆகியோரே மனுதாரர்கள்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களை மக்களினால் தெரிவு செய்யப்படும் ஒரு சபையினால் நிருவகிக்கப்படும் ஒரு நிருவாக அலகாக்குவதற்காகவும் அதற்காக அந்த மாகாணங்களை இணைப்பதற்காகவும் முனானாள் ஜனாதிபதி ஜே.ஆ்.ஜெயவர்தனாவினால் 1988 செப்டெம்பர் 2 ஆம் திகதியும் 8 ஆம் திகதியும் செய்யப்பட்ட பிரகடனங்களை செல்லுபடியற்றவை என்று அறிவிக்குமாறு உயர்நீதிமன்றத்தை ஜே.டி.பி.யின் மனுதாரர்கள் கோரினர்.
பிரதம நீதியரசர் சரத் என். சில்வா, நீதியரசர்கள் நிஹால் ஜயசிங்க, என்.கே. உடலாகம, நிமால் காமினி அமரதுங்க, ரூபா பெர்னாண்டோ ஆகிய ஐவரைக் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு செல்லுபடியற்றது என்று தீர்ப்பளித்தது. 23 பக்கங்களைக் கொண்ட அந்த தீர்ப்பில் அவர்கள் 1987 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க மாகாணசபைகள் சட்டத்தின பிரிவு 31 (1) (பி ) யில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிமந்தனைகளில் எந்த ஒன்றுமே நிறைவேற்றப்படாத போதிலும், அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழ் இரு மாகாணங்களையும் இணைத்தார் என்று கூறியிருந்தனர். மோதல் நிறுத்தம் செய்யப்படவேண்டும் என்பதும் சகல தீவிரவாத குழுக்களும் ஆயுதங்களைக் கையளிக்கவேண்டும் என்பதுமே அந்த இரு நிபந்தனைகளுமாகும். இணைப்பு என்பது ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை விட மிகையானதாகும் என்று உயர்நீதிமன்றம் கூறியது.
எனவே தமிழர்கள் சம்பந்தப்பட்ட சில விவகாரங்களில் ஜே.வி.பி. கடந்த காலத்தில் மிகுந்த கடும்போக்கை கடைப்பிடித்தது என்பதை காணக்கூடியதாக இருந்தது. தங்களது இந்த போக்கு சாதாரண தமிழர்களுக்கு எதிரானது அல்ல, விடுதலை புலிகளின் பயங்கரவாதத்துக்கு பிரிவினைவாதத்துக்கும் எதிரானது என்று ஜே.வி.பி. நியாயம் கற்பித்தது.தேசத்தின் சுயாதிபத்தியத்தைப் பாதுகாத்து தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தாங்கள் கடமைப் பட்டிருந்ததாகவும் அவர்கள் கூறானர். ஆனால், மெய்யாகவே தமிழர்களுக்கு விரோதமானது என்று அழைக்கப்படக்கூடிய கொள்கை ஒன்றை ஜே.வி.பி. கடந்த காலத்தில் கடைப்பிடித்தது என்பது மறுதலிக்க முடியாத — கேள்விக்கு இடமின்றிய உண்மையாகும்.
இந்த விவகாரங்களில் எல்லாம் அநுரா குமார திசாநாயக்க வகித்த பங்கு என்ன என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. ஜே.வி.பி. அந்த நேரத்தில் தன்னை ஒரு மார்க்சிஸ்ட் என்று பிரகடனப்படுத்திக் கொண்ட அதேவேளை பெருமளவுக்கு சிங்கள கடும்போக்காளராகவும் இருந்த சோமவன்ச அமரசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் இருந்தது. இந்த விவகாரங்களில் அவருக்கு ஒரு இடதுசாரி என்பதைவிடவும் கூடுதலான அளவுக்கு தீவிரமான சிங்கள தேசியவாதியாக இருந்த விமல் வீரவன்ச நன்றாக உதவினார். அந்த நாட்களில் இந்த விவகாரங்களில் அநுராவின் பெயர் பெரிதாக அடிபடவில்லை. உட்கட்சி விவாதங்களில் இந்த நடவடிக்கைகளை அவர் எதிர்த்துப் பேசினாரா என்பது தெரியவில்லை. ஆனால் சுனாமி உதவிக்கட்டமைப்புக்கு எதிரான வழக்கில் அவரும் ஒரு மனுதாரர் என்பது உண்மை. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பை எதிர்பதிலும் அவர் கட்சியின் கொள்கையை பின்பற்றினார்.
ஜே.வி.பி.யின் கடந்த காலமும் நிகழ்காலமும்
ஜே.வி.பி.யின் இந்த சர்ச்சைக்குரிய கடந்த காலம் அதன் தலைமையிலான தற்போதைய தேசிய மக்கள் சக்தியிடமிருந்து கணிசமானளவுக்கு வேறுபடுகிறது. நாளடைவில் ஜே.வி.பி. தன்னை மாற்றியமைத்துக் கொண்டிருக்க்கூடியது சாத்தியமே. தேசிய மக்கள் சக்தி என்பது ஜே.வி.பி.யின் மாற்றியமைத்து மெருகூட்டப்பட்ட ஒரு வடிவமே. அநுரா குமார திசாநாயக்க ஒரு கெட்டியான கோட்பாட்டுப் பிடிவாதமுடையவராக அன்றி நெகிழ்வுத்தன்மையுடன் நடைமுறைச் சாத்தியமான கொள்கைகளை கடைப்பிடிக்கும் ஒருவராக கருதப்படுகிறார். அவரின் போக்கின் பிரகாரம் கட்சியும் அதன் கொள்கைகளை மாற்றியமைத்திருக்கக்கூடியது சாத்தியமே. கடந்த காலத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு ஜே.வி.பி.யை கண்டனம் செய்வது நியாயமற்றது.
தற்போது அநுரா குமார திசாநாயக்க இலங்கை மக்களின் குறிப்பாக இளைய தலைமுறையினரின் அன்புக்குரியவராக விளங்குகிறார். ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி மக்கள் மத்தியில் பெருமளவு செல்வாக்கைக் கொண்டதாக இருக்கிறது. இத்தகைய பின்புலத்தில், ஜே.வி.பி.யின் கடந்தகால நெறிகெட்ட அம்சங்கள் அலட்சியப்படுத்தப்பட வோ, கண்டும் காணமால் விடப்படவோ அல்லது பேசாமல் தவிர்க்கப்படவோ கூடியவை அல்ல. புதிய ஜே.வி.பி.யையும் அதன் தலைவர் அநுராவையும் ஏற்றுக்கொண்டு வரவேற்கின்ற அதேவேளை, அண்மைய கடந்த காலத்தை நாம் மறந்துவிடவும் கூடாது. வரலாற்றில் இருந்து படிப்பினைகளைப் பெற்றுக் கொள்ளாதவர்கள் எதிர்காலத்தில் எதிர்மறையான விளைவுகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படலாம். அதன் காரணத்தினால் தான் இந்த பத்திகளில் ஜே.வி.பி.யின் கடந்த காலத்துக்கு பெருமளவு இடம் ஒதுக்கப்பட்டது.
விமல் வீரவன்சவின் பிளவு
சோமவன்ச அமரசிங்கவின் தலைமையின் கீழான ஜே வி.பி. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நேச அணியாக விளங்கிய அதேவேளை எதிரணியிலேயே தொடர்ந்தும் இருந்தது. ஆனால், ஜே.வி.பி.யில் ஒரு பிளவு ஏற்பட்டது. அதையடுத்து அந்த கட்சிக்கும் மகிந்த அரசாங்கத்துக்கும் இடையிலான உறவுகள் கசப்படையும் நிலை ஏற்பட்டது. ஜே.வி.பி.யின் பிரபலமான பிரசாரச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச 2008 மார்ச்சில் கட்சியின் தலைமைத்துவத்துடன் முரண்பட்டுக் கொண்டார். ஊழல் உட்பட பல்வேறு குற்றச் செயல்களில் அவர் ஈடுபட்டதாகக் கூறி ஜே.வி.பி.யின் நிறைவேற்றுக்குழு வீரவன்சவை இடைநிறுத்தியது. தனது விசுவாசிகள் சிலருடன் ஜே.வி.பி.யில் இருந்து வெளியேறிய வீரவன்ச 2006 மே 14 ஆம் திகதி தேசிய சுதந்திர முன்னணி என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார். அந்த வருடம் டிசம்பரில் புதிய கட்சி அரசாங்கத்தில் இணைந்துகொண்டதை அடுத்து வீரவன்ச ஒரு அமைச்சரவை அமைச்சரானா்.
பிளவுக்கு காரணமாக இருந்தவர்கள் என்று மகிந்தவையும் அவரின் சகோதரர் பசிலையும் சந்தேகித்த ஜே.வி.பி. அவர்கள் மீது கடும் ஆத்திரமடைந்தது. ” தற்போதைய அரசியல் சூழ்நிலையில் புதிய அரசியல் கட்சிக்கான எந்த ஒரு தேவையும் இல்லை ” என்று அநுரா குமார திசாநாயக்க கூறியதாக ஊடகங்கள் அந்த நேரத்தில் செய்தி வெளியிட்டன.
பொன்சேகாவுக்கு ஆதரவு
விடுதலை புலிகளுடனான போர் 2009 மே நடுப்பகுதியில் முடிவுக்கு வந்ததற்கு பிறகு இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கும் ஆளும் ராஜபக்சாக்களுக்கும் இடையில் வேறுபாடுகள் தோன்றத் தொடங்கின. இறுதியில் பொனசேகா 2010 ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளராக மகிந்த ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிட்டார். ராஜபக்சவுக்கு எதிராக பொன்சேவை ஆதரித்து ஜே.வி.பி. தீவிரமாக பிரசாரம் செய்தது. ஆனால், பொன்சேகா தோல்வியடைந்தார்.
2010 பாராளுமன்ற தேர்தலில் ஜே.வி.பி. சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணியின் அங்கமாக போட்டியிட்டது. அந்த கூட்டணிக்கு பாராளுமன்றத்தில் ஏழு ஆசனங்கள் கிடைத்தன. ஜே.வி.பி. நான்கு ஆசனங்களை பெற்றது. அநுரா தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 2004 பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அங்கமாக 39 ஆசனங்களைக் கைப்பற்றிய ஜே.வி.பி. 2010 ஆம் ஆண்டில் நான்கு ஆசனங்களுக்கு வீழ்ச்சி கண்டது. ஒரு விசித்திரமான திருப்பமாக, வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி அந்த தேர்தலில் ஜே.வி.பி.யை விடவும் கூடுதல் ஆசனங்களைக் கைப்பற்றியது.
குமார் குணரத்தினம்
2012 ஆம் ஆண்டில் ஜே.வி.பி.யில் இன்னொரு பிளவு ஏற்பட்டது. சோமவன்ச அமரசிங்கவின் தலைமைத்துவம் பாணி குறித்து ஜே.வி.பி. செயற்பாட்டாளர்களில் ஒரு குழுவினர் மத்தியில் பெருமளவு வெறுப்புணர்வு காணப்பட்டது. ஜே.வி.பி. அதன் புரட்சிகர குணாம்சத்தை இழந்து பாரம்பரியமான பூர்ஷுவா ( முதலாளித்துவ ) கட்சி ஒன்றின் குணாதிசயங்களைப் பெறத்தொடங்குவதாக அவர்கள் உணர்ந்தார்கள். அந்த அதிருப்தியாளர்கள் குழுவுக்கு நொயல் முதலிகே என்ற பெயரில் அவுஸ்திரேலியாவில் இருந்த குமார் என்ற பிரேம்குமார் குணரத்தினம் தலைமை தாங்கினார். இந்த அரசியல் முரண்பாடுகள் ஜே.வி.பி. தலைவர் சோமவன்சவுக்கும் பிரேம்குமாருக்கும் இடையில் கடுமையான மோதல்களுக்கு வழிவகுத்தது. இந்த உட்கட்சிச் சண்டையில் அநுரா குமார சோமவன்சவை ஆதரித்தார். தீவிரவாதப் போக்குடையவர்கள் கட்சியில் இருந்து வெளியேறி புதிய கட்சி ஒன்றை அமைத்தார்கள்.
புதிய முன்னரங்க சோசலிஸ்ட் கட்சியை ( Frontline Socialist Party ) ஆரம்பித்து வைப்பதற்காக நொயல் முதலிகே என்ற குணரத்தினம் அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை திரும்பினார். அரசாங்கத்தின் ஏஜண்டுகளனால் கடத்தப்பட்ட அவர் “காணாமல்” போனார். ஆனால் ஜே.வி.பி.யிற்குள் குமார் குணரத்தினம் என்ற பெயர் கொண்ட ஒரு நபர் கிடையாது என்று அநுரா குமார கூறினார். அவ்வாறு கூறியது அவருக்கு என்றென்றைக்குமே அவப்பெயர். அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரின் முயற்சியின் விளைவாக இறுதியில் குமார் விடுதலை செய்யப்பட்டார். முன்னரங்க சோசலிஸ்ட் கட்சி 2008 ஏப்ரிலில் தொடங்கப்பட்டது. ஜே.வி.பி.யின் பெண்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர் அணிகளைச் சேர்ந்த கணிசமான எண்ணிக்கையினர் வெளியேறி புதிய கட்சியில் இணைந்தனர். பெருமளவு உறுப்பினர்கள் முன்னரங்க சோசலிஸ்ட் கட்சியில் சேர்ந்ததால் சிறிது காலம் ஜே.வி.பி.யின் ஊடகப்பிரிவு மூடப்பட்டிருந்தது.
புத்தம் புதிய தலைவர்
வீரவன்ச தலைமையிலான பிளவு பல சிங்கள தேசியவாதிகளையும் குணரத்தினத்தின் தலைமையிலான பிளவு பல புரட்சிகர சோசலிஸ்டுகளையும் ஜே.வி.பி.யிடமிருந்து எடுத்துச் சென்றுவிட்டன. ஜே.வி.பி.யிஎஞ்சிவிடப்பட்டவர்கள் சிங்கள தேசியவாதத்துக்கும புரட்சிகர சோசலிசத்துக்கும் இடையிலான ” மிதவாதிகளாகவே ” இருந்தார்கள். ஜே.வி.பி. அதன் ஊக்கத்தையும் உயிர்த்துடிப்பையும் இழக்கத்தொடங்கி அதன் முன்னைய வடிவத்தின் ஒரு கேலிச்சித்திரமாக மாறிக்கொண்டுவந்தது. ஒரு அரசியல் சக்தியாக பிழைத்திருக்கவேண்டும் என்றால் புதிய தலைவர் ஒருவரின் கீழ் ஜே.வி.பி.க்கு புதியதொரு செல்நெறி தேவைப்படுகிறது என்பது பெருமளவுக்கு தெளிவாகத் தெரியத் தொடங்கியது.
தான் பதவியில் இருந்து இறங்கவேண்டிய தேவையை புரிந்துகொண்ட மூத்த தலைவர் சோமவன்ச அமரசிங்க விரைலில் ஓய்வுபெறப்போவதாக சூசகமாக அறிவிக்கத் தொடங்கினார். அவருக்கு பிறகு தலைவர் யார் என்பதே கேள்வி. கே.டி.லால்காந்த, ரில்வின் சில்வா, விஜித ஹேரத், சுனில் ஹந்துனெத்தி, பிமால் இரத்நாயக்க , அநுரா குமார திசாநாயக்க என்று அடுத்து தலைவராக வரக்கூடிய பலர் இருந்தார்கள். இவர்களில் பொதுச் செயலாளரான ரில்வின் சில்வாவே புதியதலைவராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஜே.வி.பி.யின் 17 வது தேசிய மகாநாடு 2014 பெப்ரவரி 2 ஆம் திகதி நடைபெற்றது. தலைவர் பதவியில் இருந்து இறங்கிய சோமவன்ச அமரசிங்க தன்னை பதிலீடு செய்வதற்கு அநுரா குமார திசாநாயக்கவை பிரேரித்தார். அது ஏகமனதாக மகாநாட்டில் அங்கீகரிக்கப்பட்டது. அநுரா குமாரவின் ஆற்றல்களை நன்றாக புரிந்துகொண்ட சோமவன்ச தனக்கு பிறகு தலைவராக்குவதற்காக அவரை வளர்த்துவந்தார்.
ஜே.வி.பி.யின் வரலாற்று பயணம்
பத்து வருடங்களுக்கு முன்னர் 2014 ஆம் ஆண்டில் அநுரா குமார திசாநாயக்க ஜே.வி.பி.யின் ஐந்தாவது தலைவராக வந்தார். அவரின் தலைமைத்துவத்தின் கீழ் ஜே.வி.பி. முன்னெடுத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணம் இலங்கையின் ஜனாதிபதியாக அநுரா குமார தெரிவாகுவதற்கு வழிவகுத்தது. இது ஏன், எவ்வாறு நடந்தது என்பதை இந்த கட்டுரையின் நான்காவது பாகத்தில் பார்ப்போம்.
D.B.S.Jeyaraj can be reached at dbsjeyaraj@yahoo.com
ஆங்கில மூலம்: டி. பி. எஸ். ஜெயராஜ் (Daily Mirror)
தமிழில்: வீரகத்தி தனபாலசிங்கம்
நன்றி: வீரகேசரி
************************************************************************************************