ஜே.வி.பி . இயக்கத்தில் அநுர குமார திசாநாயக்கவின் வளர்ச்சியும் இலங்கை அரசியலில் துரித எழுச்சியும்


டி.பி.எஸ். ஜெயராஜ்

அநுர குமார திசாநாயக்க ; இலங்கை வானில் ‘ இடதுசாரி ‘ நட்சத்திரம் -2

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவின் பரபரப்பான நிகழ்வுகள் பலப்பல நிறைந்த ஆரம்ப வாழ்க்கையைப் பற்றி இந்த கட்டுரைத் தொடரின் முதல் பாகத்தில் கடந்தவாரம் எழுதியிருந்தேன். இந்த இரண்டாவது பாகத்தில் ஜனதா விமுக்தி பெரமுனவுக்குள் (ஜே.வி.பி.) ஒரு அரசியல் தலைவராக அவரின் படிப்படியான சீரான வளர்ச்சி குறித்து பாராப்போம்.

கடந்த வாரத்தைய பத்தியில் குறறிப்பிட்டதைப் போன்று ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சி ரணசிங்க பிரேமதாச அரசாங்கத்தினால் ஈவிரக்கமற்ற முறையில் நசுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள் அல்லது காணாமற்போகச் செய்யப்பட்டார்கள். மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் பாதுகாப்புக்காக நாட்டை விட்டு தப்பியோடினார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் கைதாகி கொலை செய்யப்படக்கூடிய ஆபத்தில் இருந்து தப்பிய அதேவேளை தங்களது அடையாளங்களை மாற்றி வேவ்வேறு பகுதிகளில் வாழ்ந்தார்கள். இலங்கையில் தொடர்ந்தும் தங்கியிருந்து கைதுசெய்யப்படுவதில் இருந்து தப்பி தலைமுறைவு வாழ்க்கைக்கு சென்றவர்களில் அநுராவும் ஒருவர்.

ஜே.வி.பி.யின் தாபகத் தலைவர் விஜேவீர, இரண்டாவது தலைவர் சமான் பியசிறி பெர்னாண்டோ, மூன்றாவது தலைவர் லலித் விஜேரத்ன ஆகியோர் 1989 — 90 காலப்பகுதியில் அரசினால் கொலை செய்யப்பட்ட ஜே.வி.பி.யின் 14 உயர்மட்டத் தலைவர்களில் அடங்குவர். சிறி ஐயா என்ற சோமவன்ச அமரசிங்க மாத்திரமே உயிர்தப்பி வாழ்ந்த ஒரேயொரு உயர்மட்டத் தலைவரும் அரசியல் குழு வின் உறுப்பினருமாவார். அவர் பிறகு ஜே.வி.பி.யின் நான்காவது தலைவராக வந்தார். 1990 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு தப்பியோடிய சோமவன்ச அங்கிருந்து தாய்லாந்துக்கு சென்றார். அந்த நாட்டில் இருந்து இத்தாலிக்கு மாறிய அவர் பிரான்ஸில் அரசியல் தஞ்சம் கோரினார்.

சோமவன்ச அமரசிங்க

பல்வேறு ஐரோப்பிய நாடுகளிடையே மாறிமாறி பயணம் செய்த சோமவன்ச அமரசிங்க புலம்பெயர் சிங்கள சமூகத்தவர்கள் மத்தியில் ஜே.வி.பி.யின் கிளைகளை அமைத்தார். அங்கிருந்து அவர் இலங்கையில் இயங்காமல் இருந்த உறுப்பினர்களுடன் தொடர்புகொண்டு அனேகமாக அழிந்துபோயிருந்த ஜே.வி.பிக்கு புத்துயிர் கொடுக்கும் ஔிவுமறைவான செயற்பாடுகளை தொடங்கினார். அவர் பிரான்ஸில் இருந்தும் ஐக்கிய இராச்சியத்தில் இருந்தும் இங்குள்ள நடவடிக்இரகசிய உறுப்பினர்களுடன் தொடர்புகொண்டு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தார். அதேவேளை, பாதுகாப்பு நிலைவரமும் தளரத் தொடக்கியது. தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த உறுப்பினர்கள் படிப்படியாக விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் ஜே.வி.பி. மீதான தடை தொடர்ந்தும் நடைமுறையில் இருந்தது.

1993 மே மாதம் பிரேமதாசவின் மரணத்துக்கு பிறகு ஜே.வி.பி.யை பொறுத்தவரை வசதியாக அமையக் கூடியதாக அரசியல் காலநிலை மாறியது. 1994 ஆம் ஆண்டில் சோமவன்ச அமரசிங்க இலங்கை திரும்பி அமைதியான முறையில் ஜே.வி.பி.யை மீள ஒழுங்கமைக்கத் தொடங்கினார். பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டபோது ஜே.வி.பி. தொடர்ந்தும் தடைசெய்யப்பட்ட இயக்கமாகவே இருந்தது.
அதனால் சோமவன்ச ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி என்ற ஒரு அமைப்பை ஆரம்பித்தார். அந்த அமைப்பு அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மாத்திரம் போட்டியிட்டு 15, 309 வாக்குகளைப் பெற்றது. ஜனித் விபுலகுண பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டார். ஆனால், அவர் உடனடியாகவே பதவியில் இருந்து விலகவே நிஹால் கலப்பதி அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினராக வந்தார்.

1994 ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி. சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு ஆதரவாக வேலை செய்தது. அவர் ஜனாதிபதியாக வந்ததும் ஜே.வி.பி. மீதான தடையை நீக்கினார். அதையடுத்து ஜே.விபி. அரசியல் செயற்பாடுகளை மீண்டும் பகிரங்கமாக முன்னெடுக்கத் தொடங்கியது. சோமவன்ச அமரசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் ஜே.வி.பி. 1995 ஆம் ஆண்டில் அதன் தேசிய மகாநாட்டை தங்காலையில் நடத்தியது.

களனி பல்கலைக்கழகம்

அதேவேளை, அநுரா தனது மூன்றாம் நிலைக்கல்வியை மீண்டும் தொடங்கினார். 1992 ஆம் ஆண்டில் களனி பல்கலைக்கழகத்தில் மாணவனாக இணைந்த அவர் தனது பல்கைலைக்கழக நாட்களில் மிகவும் அமைவடக்கமாக இருந்தார் என்றபோதிலும், மாணவர்கள் சங்க நடவடிக்கைகளில் பங்கேற்றார். ரியூட்ரிகளில் கற்பிப்பதிலும் அவர் ஈடுபட்டார்.

சோமவன்சவுடனும் தொடர்பில் இருந்த அநுரா அவரிடமிருந்து அந்தரங்க தகவல்களை ஏனைய ஜே.வி.பி. உறுப்பினர்களுக்கு தெரிவித்துவந்தார். தனது கல்வியை நிறைவு செய்துகொண்ட அநுரா 1995 ஆம் ஆண்டில் மௌதீக விஞ்ஞானத்தில் பட்டத்தைப் பெற்றார். முழு நேர வேலைவாய்ப்பு ஒன்றைத் தேடிக்கொள்வதற்கு பதிலாக அவர் முழுநேர அரசியலுக்கு திரும்பினார்.

முன்னர் கூறியதைப் போன்று சோமவன்ச இலங்கைக்கு திரும்பி ஜே.வி.பி.க்கு புத்துயிர் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அநுராவை விரும்பிய சோமவன்ச அவரின் விவேகம், ஆற்றல் மற்றும் கொள்கை உறுதிப்பாட்டினால் பெரும் கவரப்பட்டார். அநுராவை அவர் தனது அரவணைப்பில் எடுத்துக்கொண்டார்.

அநுராவின் துரித எழுச்சி

தங்காலை தேசிய மகாநாட்டுக்கு பிறகு ஜே.வி.பி.யின் ஆதரவுடனான சோசலிச மாணவர்கள் சங்கம் மீள ஒழுஙகமைக்கப்பட்டது. அதன் தேசிய அயைப்பாளராக அநுரா நியமிக்கப்பட்டார். அதன் பிறகு ஜே.வி.பி.யின் படிநிலைகளுக்குள் அவர் துரிதமாக உயர்வடைந்தார். 1996 ஆம் ஆண்டில் ஜே.வி.பி.யின் மத்திய குழுவின் உறுப்பினராக வந்த அவர் இரு வருடங்களில் 1998 ஆம் ஆண்டில் சகல வல்லமையும் பொருந்திய ஜே.வி.பி. அரசியற்குழுவுக்கு நியமிக்கப்பட்டார்.

ஜே.வி.பி.யின் மூன்றாவது கட்டம்

1971 ஆம் ஆண்டில் ஜே.வி.பி. முன்னெடுத்த ஆயுதக் கிளர்ச்சி ஒரு சோசலிசப் புரட்சியை நோக்கமாகக் கொண்டது.1987 — 90 காப்பகுதியில் அதன் இரண்டாவது ஆயுதக் கிளர்ச்சி ” இந்திய ஆக்கிரமிப்புக்கு ” எதிரான தேசபக்த எதிர்ப்பை நோக்கமாகக் கொண்டது. அதற்கு பிறகு இப்போது அதன் மூனாறாவது கட்டம். அந்த கட்டத்தில் ஜே.வி.பி. காயப்பட்டு உருக்குலைந்த ஒரு அமைப்பாக இருந்தது.

அரசினால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து மக்கள் கவலையுடன் மக்கள் கிலி கொண்டிருந்த போதிலும் கூட, ஜே.வி.பி. செய்த அட்டூழியங்கள் பற்றியும் அச்சமடைந்தவர்களாகவே இருந்தனர். ஜே.வி.பி.யின் பயங்கரம் தலைவிரித்தாடிய காலம் மக்கள் மனதைவிட்டு அகலாமல் அப்படியே இருந்தது. அதனால் ஜே.வி.பி. அதன் மீள் எழுச்சியை முன்னெடு்பதற்கு புதிய ஒரு அரங்கு தேவைப்பட்டது.

இலங்கைப்படைகள் தமிழீழ விடுதலை புலிகளுடன் போரில் ஈடுபட்டிருந்தன. சோமவன்ச தலைமையிலான ஜே.வி.பி. இலங்கைத் தேசியவாதம் மற்றும் நாட்டுப்பிரிவினைக்கு எதிர்ப்பு என்ற போர்வையில் ஒரு சிங்கள பேரினவாதப் போக்கை கடைப்பிடித்தது. போரை ஆதரித்த ஜே.வி.பி. அதற்கு பல்வேறு வழிகளிலும் உதவியாகச் செயற்பட்டது. ஆயுதப்படைகளுக்கு ஆட்திரட்டல்களைச் செய்வதற்கான பிரசாரங்களை அது தீவிரமாக முன்னெடுத்தது. படைவீரர்களுக்கு மனத்தைரியத்தை ஊக்குவிப்பதற்காக போரின் முன்னரங்கப் பகுதிகளுக்கு ஜே.வி.பி. யின் தலைவர்கள் விஜயம் செய்தார்கள்.

தேர்தல்களில் போட்டி

எதிர்மறையான அரச எதிர்ப்பு படிமத்தில் இருந்து ஒரு நேர்மறையான அரச ஆதரவு படிமத்துக்கு தன்னை மாற்றிக்கொள்ளும் ஒரு முயற்சியில் ஜே.வி.பி. ஒரு புத்தமைவாக்கத்துக்கு உள்ளாகிக் கொண்டிருந்த வேளையில் அது கிரமமாக தேர்தல்களில் போட்டியிடத் தொடங்கியது. இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கைக்கும் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்துக்கும் எதிரானதாக இருந்தபோதிலும், ஜே.வி.பி. மாகாணசபை தேர்தல்களில் போட்டியிடுவதற்கு எதிரானதாக இருக்கவில்லை. மாநகர சபைகள், நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகளுக்கான தேர்தல்களிலும் அது போடாடியிட்டது. தேர்தல்களில் போட்டியிட்டதன் மூலம் ஜே.வி.பி. அதன் ஆதரவுத்தளத்தை விரிவாக்கிக் கொண்டது. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களாக வந்ததன் மூலம் ஜே.வி.பி.யின் முக்கியஸ்தர்கள் ஒரு அங்கீகாரத்தைப் பெறக்கூடியதாக இருந்தது.

பாராளுமன்ற தேர்தல்கள்

அதற்கு பிறகு அவர்கள் பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிடுவதில் நாட்டம் காட்டினார்கள். 2000 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஜே.வி.பி. 518, 774 வாக்குகளைப் பெற்றது. இரு நியமன உறுப்பினர்கள் உட்பட பத்து உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகினர். 2001 பாராளுமன்ற தேர்தலில் ஜே.வி.பி. க்கு 815, 353 வாக்குகள் கிடைத்தன. பாராளுமன்றத்துக்கு சென்ற 16 உறுப்பினர்களில் 13 பேர் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள். மூவர் தேசியப்பட்டியல் மூலம் நியமிக்கப்பட்டவர்கள்.

ஏற்கெனவே கூறப்பட்டதைப் போன்று அநுரா இப்போது ஜே.வி.பி.யின் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பினர். சோசலிச மாணவர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளரான அவர் கட்சியின் மத்திய குழு மற்றும் அரசியற்குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். மாணவர்கள் சங்கத்தின் அமைப்பாளர் என்ற வகையில் அவர் மிகுந்த செல்வாக்குடையவராக விளங்கினார். ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்வதில் ஜே.வி.பி.யின் முக்கியமான ஆதரவுச் சக்தியாக மாணவர்கள் விளங்கினர். அநுராவின் வழிகாடடலில் ஜே.வி.பி. ஆதரவு மாணவர்கள் சங்கம் கணிசமானளவுக்கு விரிவடைந்து பெரும்பாலான பல்கலைக்கழகங்களிலும் உயர்கல்வி நிறுவனங்களிலும் தன்னை நிறுவிக் கொண்டது.

எனவே ஜே.வி.பி. தேர்தல்களில் போட்டியிட்டபோது அநுரா வுக்கு தேசியப்பட்டியலில் இடம் வழங்கப்பட்டது. ஒரு மாவட்த்துக்கான வேட்பாளராக மட்டுப்பட்டு நிற்காமல் நாட்டின் சகல பாகங்களிலும் அவர் பிரசாரங்களில் ஈடுபடுவதற்கு வசதியாகவே அவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டது.மிகுந்த ஆற்றல்மிக்க ஒரு பேச்சாளராக வெளிக்கிளம்பிய அநுரா கற்பனாவாத வெற்று ஆரவார உரைகளை நிகழ்த்தியவர் அல்ல. கூறவேண்டிய விடயத்தை நேரடியாகவே கூறி நியாயத்தை மக்களுக்கு விளங்கவைப்பதில் மிகுந்த ஆற்றலை அவர் வெளிப்படுத்தினார். சில சந்தர்ப்பங்களில் அவர் உணர்ச்சிமயப்பட்டவராகவும் பேசுவார்.

தேசிய பட்டியல் எம்.பி.

2000 ஆம் ஆண்டில் தேசியப்பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்ட அநுரா முதற்தடவையாக பாராளுமன்ற பிரவேசம் செய்தார். இரண்டாவது தடவையும் அவர் தேசியப்பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மிகவும் விரைவாகவே அவர் தன்னை பாராளுமன்றத்தில் ஆளுமைத்திறன் கொண்ட பேச்சாளராகவும் ஆற்றல் மிகு விவாதியாகவும் நிரூபித்தார்.

2001 ஆம் ஆண்டில் சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தமோதிலும், அவரது கட்சியான பொதுஜன முன்னணி பாராளுமன்ற தேர்தலில் இரண்டாவதாகவே வந்தது. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி 4,086,026 வாக்குகளைப் பெற்று 109 ஆசனங்களைக் கைப்பற்றியது. சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான பொதுஜன முன்னணி 3,330, 815 வாக்குகளுடன் 77 ஆசனங்களைப் பெற்றது. ஜே.வி.பி. 815, 353 வாக்குகளைப் பெற்று 16 ஆசனங்களை தனவசமாக்கியது. பொதுஜன முன்னணியினதும் ஜே.வி.பி.யினதும் வாக்குகளை ஒன்றாகச் சேர்த்தால் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி இரண்டாவது இடத்துக்கே தளளப்பட்டிருக்கும் என்பது வெளிப்படையானது.


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஜே.வி.பி.

இந்த கணிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர 2004 பாராளுமன்ற தேர்தலில் ஜே.வி.பி.யுடன் கூட்டணி ஒன்றை அமைத்தார்.கொழும்பில் இருந்த வெளிநாட்டு தூதுவர் ஒருவரும் இந்த கூட்டணி உருவாவதற்கு அனுசரணையாகச் செயற்பட்டார். அதையடுத்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒரு அங்கமாக ஜே.வி.பி. 2004 பொதுத்தேர்தலில் போட்டியிட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 4,223, 970 வாக்குகளுடன் பாராளுமன்றத்தில் 105 ஆசனங்களைக் கைப்பற்றியது. 3, 504, 200 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய தேசிய முன்னணி 82 ஆசனங்களை தனதாக்கிக்கொண்டது.

2004 பொதுத்தேர்தலில் ஜே.வி.பி. பாராட்டத்தக்க ஒரு வெற்றியைப் பெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்கள் பட்டியல்களின் அங்கமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜே.வி.பி.யின் மூன்று வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தங்களது வேட்பாளர்களுக்கு உச்சபட்ச எண்ணிக்கையில் விருப்பு வாக்குகள் கிடைப்பதற்கு ஜே.வி.பி.யினர் கடுமையாகப் பாடுபட்டனர். அதன் விளைவாக அந்த கட்சிக்கு பாராளுமன்றத்தில் 39 ஆசனங்கள் கிடைத்தன.

அமைச்சராக அநுர

அநுரா குமார திசாநாயக்கவுக்கு 2004 ஆம் ஆண்டு ஒரு மைல்கல்லாக அமைந்தது.2004 ஏப்ரில் தேர்தல் அவரது தேர்தல் ஞானஸ்நானமாக விளங்கியது. குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்கள் பட்டியலில் போட்டியிட்ட அவர் 153, 868 விருப்பு வாக்குகள் பெற்றுத் தெரிவானார். ஜனாதிபதி திருமதி குமாரதுங்க அமைச்சரவையை அமைத்தபோது ஜே.வி.பி.க்கு நான்கு அமைச்சுக்கள் ஒதுக்கப்பட்டன. அநுரா விவசாய, கால்நடை வளர்ப்பு, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

காலநடை வளர்ப்பும் விவசாயமும் அநுராவின் இதயத்துக்கு நெருக்கமான துறைகள் என்பதால் அந்த அமைச்சைப் பெற்றதில் அவர் பெரும் மகிழ்ச்சியடைந்தார். மிகவும் திறமையாக தனது கடமைகளைச் செய்த அவர் நாட்டின் விவசாயத்துறைக்கும் கால்நடை வளர்ப்பு துறைக்கும் புத்துயிர் அளிக்கப் பாடுபட்டார். ஆனால், நிகழ்வுப் போக்குகள் துரதிர்ஷ்டவசமாக வேறுபட்ட ஒரு திருப்பத்தை எடுத்தன. அநுராவின் அமைச்சர் பொறுப்புக் கடமைகள் திடீரென்று ஒரு முடிவுக்கு வந்தன. அவரும் ஏனைய ஜே.வி.பி. சகாக்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர்முன்னணி அரசாங்கத்தில் வகித்த பதவிகளைத் துறந்தனர். ஜே.வி.பி.யின் 39 பாராளுமன்ற உறுப்பினர்களும அரசாங்கத்தில் இருந்து வெளியேறினர்.

2004 சுனாமி

நடந்தது இதுதான். 2004 டிசம்பரில் சுனாமி இயற்கை அனர்த்தத்தின் வடிவில் நாடு பயங்கரமான பேரிடரை அனுபவித்தது. பெருமளவில் மரணங்கள், அழிவுகள், இடம்பெயர்வுகள் இடம்பெற்றன. விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பிராந்தியங்களின் பரந்தளவு கரையோரப் பகுதிகளும் சுனாமியால் பாதிக்கப்பட்டன. அதேபோன்று வடக்கு, கிழக்கின் வேறு கரையோரப்பகுதிகளும் பாதிப்புக்குள்ளாகின. சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களினதும் பகுதிகளினதும் புனர்வாழ்வுக்கும் புனரமைப்புக்கும் 300 கோடி அமெரிக்க டொலர்களை ஒதுக்குவதற்கு சர்வதேச உதவி வழங்குநர்கள் தயாராயிருந்தனர். பாதிக்கப்பட்ட தமிழ்பேசும் பிராந்தியங்களுக்கும் உதவுவதற்கு பணம் ஒப்புரவான முறையில் செலவிடப்படவேண்டும் என்பது கடுமையான ஒரு நிபந்தனையாக முன்வைக்கப்பட்டது.

ஜனாதிபதி திருமதி குமாரதுங்க நோர்வேயின் அனுசரணை ஊடாக விடுதலை புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தார். வழமைக்கு மாறான விடுதலை புலிகளுடன் கூட்டுக் கட்டமைப்பு ஒன்று அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டது. சுனாமிக்கு பின்னரான செயற்பாட்டு முகாமைத்துவ கட்டமைப்பு [Post — Tsunami Operational Management Structure (P — TOMS) ] என்று அது அழைக்கப்பட்டது. வெளிநாட்டு உதவியின் ஊடாக பெறப்படும் நிதி விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பாதிக்கப்பட்ட தமிழ்பேசும் பகுதிகளுக்கும் ஒப்புரவான முறையில் விநியோகிக்கப்படுவதற்கு வசதியாகவே அந்த கட்டமைப்பு நிறுவப்பட்டது. அது அரசாங்கத்தினதும் விடுதலை புலிகளினதும் ஒரு கூட்டுப் பொறிமுறையாகும்.

ஜே.வி.பி. எதிர்ப்பு

ஆனால், சோமவன்ச அமரசிங்க தலைமையிலான ஜே.வி.பி. அந்த சுனாமி உதவிக் கட்டமைப்பை கடுமையாக எதிர்த்தது. ஜே.வி.பி. அதன் சொந்த கடந்த காலத்தை மறந்து விடுதலை புலிகளை பயங்கரவாத இயக்கம் என்று வர்ணித்ததுடன் அந்த கட்டமைப்பு அந்த இயக்கத்தை அரசாங்கத்துக்கு நிகரானதாக நோக்குவதாக கண்டனம் செய்தது. முன்னதாக விடுதலை புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான போர் நிறுத்தத்தையும் ஒஸ்லோ அனுசரணையுடனான பேச்சுவார்த்தைகளையும்ஜே.வி.பி. எதிர்த்தது. அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2002 ஆம் ஆண்டில் சமாதான முயற்சிகளை முன்னெடுத்தபோது விடுதலை புலிகளுடனான பேச்சுவார்த்தைகளுக்கு எதிராக ஜே வி.பி. பெரிய ஆர்ப்பாட்ட இயக்கங்களை ஏற்பாடு செய்தது.

சுனாமி உதவிக் கட்டமைப்பு நடைமுறைக்கு வந்தபோது திருமதி குமாரதுங்க அரசாங்கம் அதைக் கைவிடவேண்டும் என்று கோரிக்கை விடுத்த ஜே.வி.பி. 2005 ஜூன் 15 ஆம் திகதியை காலக் கெடுவாகவும் விதித்தது. அதற்கு ஜனாதிபதி திருமதி குமாரதுங்க மறுத்தபோது 2005 ஜூன் 16 ஜே.வி.பி. அரசாங்கத்தில் இருந்து வெளியேறியது. அநுரா குமார திசாநாயக்க உட்பட நான்கு அமைச்சர்களும் தங்களது பதவிகளில் இருந்து விலகினர். ” எமது பணிகளை பூர்த்திசெய்ய முடியாத நிலையில் ஆழ்ந்த கவலையுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து வெளியேறுவதை நாம் அறிவிக்கிறோம் ” என்று செய்தியாளர்கள் மகாநாட்டில் ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க கூறினார்.

அடிப்படை உரிமை மீறல் மனு

அதற்கு பிறகு ஜே.வி.பி.யின் 39 பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட சுனாமி உதவிக் கட்டமைப்பு உடன்படிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைமீறல் மனுவொன்றை தாக்கல் செய்தனர். அந்த கட்டமைப்புக்கு எதிராக இடைக்காலத்தடை ஒன்று விதிக்கப்பட வேண்டும் என்ற தங்களது கோரிக்கைக்கு அநுரா குமார திசாநாயக்க உட்பட ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர்கள் மனுவில் ஐந்து காரணங்களைக் குறிப்பிட்டிருந்தனர்.

மனுவை விசாரணை செய்த அன்றைய பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தலைமையிலான மூன்று நீதியரசர்களைக் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு சுனாமி உதவிக் கட்டமைப்பு உடன்படிக்கையின் முக்கியமான செயற்பாட்டுப் பிரிவுகளுக்கு எதிராக இடைக்காலத்தடை உத்தரவைப் பிறப்பித்தது.2005 நவம்பரில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்ததால் சுனாமி உதவிக் கட்டமைப்பு செயற்பட முடியாமல் போய்விட்டது.

உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத்தடை உத்தரவை வரவேற்ற ஜே.வி.பி.யினர் கூட்டுக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதை தாங்களே தடுத்து நிறுத்தியதாக கூறினர். ஜே.வி.பி.யின் அன்றைய பிரசாரச் செயலாளர் விமல் வீரவன்ச ” பஸ்ஸுக்கு சக்கரங்கள் இல்லை ” என்று கூறி அவலத்தில் மகிழ்ச்சி கண்டார்.

மகிந்தவுக்கு ஆதரவு

அதையடுத்து ஜே.வி.பி. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தது. ஆனால், மகிந்த ராஜபக்சவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொண்ட ஜே.வி.பி. 2005 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் அவரை ஆதரித்தது. அவர் வெற்றி பெறுவதற்கு ஜே.வி.பி. பெரிதும் உதவியது. 19 வருடங்கள் கழித்து இப்போது ஜே.வி.பி. தானாகவே ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறது.

குறுகிய ஒரு காலப்பகுதியில் (2004 –05) அமைச்சரவை அமைச்சராக இருந்த அநுரா குமார திசாநாயக்க இப்போது இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி. ஜே.வி.பி.க்குள்ளும் பரந்தளவில் நாட்டிற்குள்ளும் அநுராவின் அரசியல் உயர்வை பற்றிய கதையை இந்த கட்டுரையின் மூன்றாவது பாகத்தில் பார்ப்போம்.

D.B.S.Jeyaraj can be reached at dbsjeyaraj@yahoo.com

ஆங்கில மூலம்: டி. பி. எஸ். ஜெயராஜ் (Daily Mirror)

தமிழில்: வீரகத்தி தனபாலசிங்கம்

நன்றி: வீரகேசரி

*************************************************************