ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரும் தமிழர் அரசியலின் எதிர்காலமும்

டி.பி.எஸ். ஜெயராஜ்

இம்மாதம் 24 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. ஒருவர் இறந்ததை அடுத்து இப்போது 38 பேர் களத்தில் நிற்கிறார்கள். அவர்களில் ஜனாதாபதி ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சி தலைவர் பிரேமதாசவுமே பிரதான வேட்பாளர்கள்.

ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச,பிரபல ஊடக நிறுவனங்களின் உரிமையாளரான திலித் ஜயவீர, பிலாட் மார்ஷல் சரத் பொன்சேகா, முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, மூத்த இடதுசாரி தலைவர் சிறிதுங்க ஜெயசூரிய, முன்னரங்க சோசலிஸ்ட் கட்சியின் செயற்பாட்டாளர் நுவான் போபகே மற்றும் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் ஆகியோர் ஏனைய குறிப்பிடத்தக்க வேட்பாளர்கள்.

முக்கியமான போட்டியாளர்களாக ஜனாதிபதி விக்கிரமசிங்கவும் பிரேமதாசவும் திசாநாயக்கவுமே இருக்கிறார்கள் என்பது வெளிப்படையானது. குறிப்பிடத்தக்க அளவுக்கு வாக்குகளைப் பெறக்கூடியவர்களாக நாமல் ராஜபக்சவையும் திலித் ஜயவீரவையும் எதிர்பார்க்கலாம்.

ஆனால், சில வேட்பாளர்கள் விசேட காரணங்களுக்காக தேர்தலில் போட்டியிடுகிறார்கள். வேறு சிலர் இரகசிய காரணங்களுக்காக ” போலி ” வேட்பாளர்களாக நிற்கிறார்கள். சிலர் விளம்பரம் தேடுபவர்கள். ஜனாதிபதி தேர்தலில் எந்த விதத்திலும் தங்களால் வெற்றபெறமுடியாது என்பது பல வேட்பாளர்களுக்கு மிகவும் நன்றாகத் தெரியும். இருந்தாலும் பிரத்தியேகமான நோக்கங்களுக்காக அல்லது ஏதோ ஒரு செய்தியைக் கூறுவதற்காக போட்டியிடுகிறார்கள்.

அத்தகையவர்களில் ஒருவரான அரியநேத்திரன் சங்கு சின்னத்தின் கீழ் ஒரு சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகின்றார். 69 வயதான முன்னாள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரான அவர் தமிழ் பொது ஜனாதிபதி வேட்பாளராக களத்தில் நிற்கிறார். சிவில் சமூக அமைப்புக்களையும் சில தமிழ் அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய குழு ஒன்று அவரை ஆதரிக்கிறது. அரியம் என்று பொதுவாக அழைக்கப்படும் அரியநேத்திரன் தமிழ் ஊடகங்களில் ‘ தமிழ் பொதுவேட்பாளர் ‘ என்று வர்ணிக்கப்படுகிறார்.

பெரிய சர்ச்சை

தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டிருப்பது பெரியதொரு சர்ச்சையை தோற்றுவித்திருக்கிறது. இலங்கை தமிழர்கள் நாட்டின் சனத்தொகையில் 11.1 சதவீதத்தினர் மாத்திரமே. தமிழ் வேட்பாளர் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு வாய்ப்பு கிடையாது என்பது வெளிப்படையானது. அதனால் தமிழ் பொதுவேட்பாளர் திட்டம் கேலிக்குரியது என்றும் அநாவசியமானது என்றும் பல தமிழர்கள் அபிப்பிராயத்தைக் கொண்டிருக்கிறார்கள். பொதுவேட்பாளர் திட்டத்தின் ஆதரவாளர்கள் தங்களது குறிக்கோள் தேர்தலில் வெற்றிபெறுவது அல்ல என்று கூறி அந்த அபிம்பிராயத்தை மறுதலிக்கிறார்கள். தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் தமிழ் பொதுவேட்பாளர் தீர்வு காணப்படாமல் இருக்கும் தமிழ் தேசியப்பிரச்சினையை தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் கவனத்துக்கு கொண்டுவருவார் என்று இந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் பிரதானமாக பொருளாதாரப் பிரச்சினைகள், ஊழல் மற்றும் முறைமை மாற்றம் மீதே கவனம் செலுத்தப்படுகிறது என்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இலங்கை்தமிழர்கள் சம்பந்தப்பட்ட பிரத்தியேகமான பிரச்சினைகள் அலட்சியம் செய்யப்படுகின்றன, முக்கியத்துவமற்றவையாக நோக்கப்படுகின்றன அல்லது கவனிக்காமல் விடப்படுகின்றன என்றும் அவர்கள் கூறுகிறார்கள். அதனால் தமிழ் மக்களின் மனக்குறைகள் இன்னமும் தீர்த்துவைக்கப்படவில்லை என்பதையும் அபிலாசைகளுக்கு இடமளிக்கப்படவில்லை என்பதை சம்பந்தப்பட்ட சகலருக்கும் தமிழ் நினைவுபடுத்துவார் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

கடந்த காலத்தில் ஜனாதிபதி தேர்தல்களில் சிங்கள வேட்பாளர்களுக்கே தமிழர்கள் வாக்களித்து வந்திருக்கிறார்கள் என்றும் அளிக்கப்பட்ட பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. அதனால் இந்த தடவை தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிப்பதன் மூலம் ஒரு செய்தியை கூறமுடியும் என்று வாதிடப்படுகிறது. தவிரவும், தமிழ் பொதுவேட்பாளர் ஒருவருக்கு வாக்குகளை திரட்டுவது தமிழர்கள் மத்தியில் ஒருமைப்பாட்டையும் ஐக்கியத்தையும் பெருமளவுக்கு மேம்படுத்த உதவும் என்பதுடன் தமிழர்கள் மேலும பிளவுபட்டுப்போவதை தடுக்கும் என்று கூறப்படுகிறது.

இதை ஒரு வகையான சர்வஜன வாக்கெடுப்பாக காண்பிக்கமுடியும் என்பது தமிழ் வேட்பாளர் திட்டத்தின் ஆதரவாளர்களில் சிலர் வலியுறுத்துகின்ற இன்னொரு கருத்து. தமிழ் பொது வேட்பாளருக்கு அளிக்கப்படும் வாக்குகளை சமஷ்டி அடிப்படையிலான இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணம் ஒன்றுக்கான தமிழ் தேசிய அபிலாசைக்கு ஆதரவானவை என்று வியாக்கியானப்படுத்த முடியும் என்பது ஒரு மிதவாதப் போக்கிலான கருத்தாக இருக்கிறது. அதேவேளை, அவருக்கு கிடைக்கின்ற வாக்குகள் சுயநிர்ணயம், தேசியம், தாயகம் என்ற மூன்று கோட்பாடுகளையும் மீள வலியுறுத்தும் எனபது தீவிரவாத போக்கிலான கருத்தாக இருக்கிறது.

தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவாக இல்லாதவர்கள் இந்த வாதங்களை மறுதலிக்கிறார்கள். வெற்றிபெறும் வாய்ப்பை அறவே கொண்டிராத ஒரு தமிழ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிப்பதை விடவும் வெற்றிபெறும் வாய்ப்பைக் கொண்ட பிரதான ‘ சிங்கள ‘ வேட்பாளர்களில் ஒருவருக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கக்கூடியது சாத்தியம் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அதனால் தமிழ் பொதுவேட்பாளர் திட்டம் பயனற்ற ஒரு செயற்பாடு என்று அவர்கள் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் 1952 ஆம் ஆண்டில் இருந்தே பாராளுமன்ற தேர்தல்களில் சமஷ்டிக் கோட்பாடுகளின் அடிப்படையிலான அதிகாரப்பகிர்வு ஏற்பாடு ஒன்றுக்கு ஆதரவாகவே தொடர்ச்சியாக வாக்களித்து வந்திருக்கிறார்கள் என்றும் அதனால் மீண்டும் அதை நிரூபிப்பதற்கு 2024 ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்தவேண்டியது தேவையில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

தற்போதைய ஜனாதிபதி தேர்தல் கடந்தகாலத் தேர்தல்களில் இருந்து வேறுபட்டது என்றும் தமிழ் பொதுவேட்பாளர் திட்டத்தை விமர்சிப்பவர்கள் கூறுகிறார்கள். மூன்று பிரதான வேட்பாளர்களும் பெருமளவு அதிகாரப் பகிர்வுக்கு அல்லது மேம்பட்ட அதிகாரப் பரவலாக்கத்துக்கு இணக்கத்தை தெரிவிக்கக்கூடிய தன்மையைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். பொதுவேட்பாளரை நிறுத்துவதற்கு பதிலாக அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியிடப்படும் வரை காத்திருந்து அவர்களுடன் அர்த்தபுஷ்டியான பேச்சுவார்த்தைகளை நடத்துவது குறித்து சிந்தித்திருந்தால் அது நல்லதாக இருந்திருக்கும்.

மேலும், தமிழ் பொதுவேட்பாளர் தனது அரசியல் கோரிக்கைகளை நியாயப்படுத்தி வலுவூட்டுவதற்கு வடக்கிலும் கிழக்கிலும் உள்ள வாக்குகளில் குறைந்தபட்சம் ஐம்பது சதவீதமானவற்றை பெறவேண்டும் என்றும் விமர்சகர்கள் கூறுகிறார்கள். தற்போதைய பின்புலத்தில் அது சாத்தியமாகும் என்று தோன்றவில்லை. அத்துடன் கிழக்கில் தமிழர்கள் தனியான பெரிய சமூகமாக மாத்திரமே இருக்கிறார்கள். முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் சேர்த்தால் தமிழர்கள் சிறுபான்மையினரே. அதனால் வாக்களிப்பு முடிவுகள் கிழக்கு மாகாணத்தில் ஒரு சிறுபானமையினர் என்பதை வெளிக்காட்டி வடக்கு — கிழக்கு இணைப்புக்கான நியாயத்தை மலினப்படுத்திவிடக் கூடும்.

‘ தமிழ் பொதுவேட்பாளர் ‘ என்ற விபரிப்பு செல்லுபடியற்றது என்றும் வாதிடப்படுகிறது.அரசியல் கட்சிகளையும் அமைப்புக்களையும் கொண்ட ஒரு குழு தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை பிரேரித்த போதிலும், அதை எதிர்க்கும் வேறு தமிழ் அரசியல் கட்சிகளும் குழுக்களும் இருக்கின்றன. சில தமிழ் கட்சிகள் குறிப்பிட்ட ஒரு ‘ சிங்கள ‘ வேட்பாளரை ஆதரிப்பதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டன. இத்தகைய சூழ்நிலைகளின் கீழ் சுயேச்சை தமிழ் வேட்பாளர் ‘ தமிழ் பொதுவேட்பாளர் ‘ என்ற பெயருக்கு உரித்துடையவரல்ல என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.


பின்னணியும் வரலாறும்

தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவாகவும் எதிராகவும் வாதங்கள் முன்வைக்கப்படுகின்ற இன்றைய பின்புலத்தில் இந்த கட்டுரை அந்த விடயத்தில் கவனத்தைச் செலுத்துகிறது இந்த தமிழ் வேட்பாளர் திட்டத்தின் விளைவுகளை முழுமையாக விளங்கிக் கொள்வதற்கு அதன் வரலாற்றையும் பின்புலத்தையும் ஓரளவுக்கு சுருக்கமாக ஆராய்வது அவசியமானதாகும்.

2009 மே மாதம் தமிழீழ விடுதலை புலிகளின் இராணுவத்தோல்வி தெற்காசியாவின் மிகவும் நீண்ட போரை முடிவுக்கு கொண்டுவந்தது. அது தமிழ் தேர்தல் அரசியலில் புதிய கட்டம் ஒன்றை திறந்துவிட்டது.2010 ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டபோது எதிர்க்கட்சிகள் அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக பொது எதிரணி வேட்பாளராக முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை களமிறக்கின.

அந்த நேரத்தில் இலங்கையின் வடக்கையும் கிழக்கையும் சேர்ந்த தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் பிரதான அரசியல் அணியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு விளங்கியது. அதில் இலங்கை தமிழரசு கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ ), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை இயக்கம் (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அங்கம் வகித்தன. தமிழ் தேசிய கூட்டயைப்பும் பொன்சேகாவை ஆதரித்தது.

சிவாஜிலிங்கம்

பொன்சேகாவை கூட்டமைப்பு ஆதரித்ததை ரெலோவின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் கடுமையாக எதிர்த்தார். போரின் இறுதிக்கட்டத்தில் தமழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு ராஜபக்சவும் பொன்சேகாவும் பொறுப்பு என்பதால் இருவரையுமே எதிர்க்க வேண்டும் என்ற அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தார்.

பொன்சேகாவை ஆதரிப்பதற்கு பதிலாக தமிழ்க்கட்சிகள் தனியான வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்று சிவாஜிலிங்கம் யோசனையை முன்வைத்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டம் சிவாஜியின் யோசனையை நிராகரித்தது. அதனால் தான்தோன்றித்தனமாக நடந்துகொள்ளும் சுபாவத்தைக் கொண்ட அவர் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி 2010 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார். தன்னை தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் என்று காட்சிப்படுத்திய அவர் ஒரு சிங்கள வேட்பாளருக்கு பதிலாக தனக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்தார். இதுவே பொதுத்தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் என்ற கோட்பாட்டின் தொடக்கமாகும். சிவாஜிலிங்கம் 9662 வாக்குகளை மாத்திரம் பெற்ற பரிதாபத்தைக் காணக்கூடியதாக இருந்தது.

2019 ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச போட்டியிட்டார். பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது கோட்டாபய செய்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மீது கவனத்தை ஈர்ப்பதற்காக தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்க வேண்டும் என்று சிவாஜிலிங்கம் மீண்டும் யோசனையை முன்வைத்தார். அந்த பொதுவேட்பாளர் திட்டத்துக்கு தமிழ் அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கு அவர் முயற்சித்தார். ஆனால் அதை எவரும் கவனத்தில் எடுக்கவில்லை. சளைக்காத சிவாஜிலிங்கம் மீண்டும் ஒரு தடவை ஜனாதிபதி தேர்தல் களத்தில் குதித்தார். சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட அவர் தமிழ் கட்சிகளினதும் தமிழ் மக்களினதும் ஆதரவை நாடினார். மீண்டும் படுதோல்வி கண்ட அவருக்கு 12, 256 வாக்குகள் மாத்திரமே கிடைத்தன.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் திட்டத்தினால் இலங்கை தமிழ் மக்கள் கவரப்படவில்லை என்பதை சிவாஜிலிங்கத்தின் இ்ரட்டைத் தோல்வி வெளிக்காட்டியது. அதனால் அந்த கோட்பாடு வரலாற்றின் குப்பைக் கூடைக்குள் போடப்படும் என்றே தோன்றியது. ஆனால் ஒரு மூத்த அரசியல் தலைவரின் முயற்சியின் விளைவாக புத்துயிர் பெற்றது.


சுரேஷ் பிரேமச்சந்திரன்

சுரேஷ் பிரேமச்சந்திரன்/ சுரேஷ் என்று அறியப்படும் கந்தையா பிரேமச்சந்திரன் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்எல்.எவ்.) செயலாளர் நாயகம் / தலைவர். அவர் முதலில் 1989 தொடக்கம் 19994 வரையும் பிறகு 2001 தொடக்கம் 2005 வரையும் பாராளுமன்ற உறூப்பினராக இருந்தார். பாராளுமன்றத்துக்கு தெரிவாவதற்கு தேவையான விருப்பு வாக்குகளைப் பெறத்தவறியதால் சுரேஷ் கடந்த ஒன்பது வருடங்களாக பாராளுமன்றத்துக்கு செல்லமுடியவில்லை. 2001 ஆம் ஆண்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தாபக கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எவ். 2016 ஆம் ஆண்டில் அதிலிருந்து வெளியேறியது.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் திட்டத்தை மீண்டும் ஒரு பெரியளவில் முன்னெடுத்தவர் சுரேஷ் பிரேமச்சந்திரனே. 2023 ஆம் ஆண்டின் பிறபகுதியில் இருந்தே அவர் அதைச் செய்யத் தொடங்கினார். சுரேஷ் பெரும் முயற்சி எடுத்தபோதிலும், செல்வாக்குமிக்க ஊடக உரிமையாளர் ஒருவர் சம்பந்தப்படும்வரை அந்த கோட்பாட்டுக்கு குறிப்பிடத்தக்க ஆதரவு கிடைக்கவில்லை. எஸ்.எஸ். குகநாதன் அல்லது குகன் என்று அறியப்படும் சபாபதி சுப்பையா குகநாதன் யாழ்நகரை தளமாகக் கொண்ட டான் ரி.வி. மற்றும் ஈழநாடு பத்திரிகையை நடத்தும் ஏ.எஸ். கே. குழுமத்தின் உரிமையாளராவார்.

பல தசாப்தகாலா அனுபவத்தைக் கொண்ட ஒரு நீண்டகால பத்திரிகையாளரான குகநாதன் இந்த வருட ஆரம்பத்தில் இருந்து தமிழ் பொதுவேட்பாளர் திட்டத்தை ஆதரிக்கத் தொடங்கினார். தமிழ் வேட்பாளர் கோட்பாட்டை மேம்படுத்தும் செய்திகளும் ஆசிரிய தலையங்கங்களும் கிரமமாகவும் திட்டமிட்ட முறையிலும் அவரது பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டன. இந்த கோட்பாட்டுக்கு ஆதரவாக தொலைக்காட்சியில் பல நேர்காணர்களும் விவாதங்களும் ஔிபரப்பாகின. மேலும் குகநாதன் அந்த திட்டத்துக்கு ஆதரவாக மக்களை அணிதிரட்டுவதற்காக பல்வேறு தமிழ் நகரங்களில் பல பொதுக் கூட்டங்களுக்கும் கலந்துரையாடல்களுக்கும் நிதியுதவியையும் செய்தார்.

நாளடைவில் பல்வேறு தமிழ்ப் பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதும் பல அரசியல் ஆய்வாளர்களும் தங்களது எழுத்துக்கள் மூலமும் தொலைக்காட்சி நேர்காணல்கள் மூலமும் தமிழ் பொதுவேட்பாளர் திட்டத்தை ஊக்குவிக்கத் தொடங்கினர். புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த சிலர் இந்த திட்டத்தை ஆதரிப்பதாகவும் அதற்காக பணத்தை வழங்குவதாகவும் வதந்திகளும் கிளம்பின. அதற்கு பிறகு யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் தொடர்ச்சியாகாபல கருத்தரங்குகளும் கலந்தாலோசனைகளும் ஏற்பாடு செய்யப்பட்டன. அவற்றில் பல சிவில் சமூக அமைப்புக்கள் பங்குபற்றின.


தமிழ் அரசியல் கட்சிகள்

இன்னொரு மட்டத்தில் தமிழ் அரசியல் கட்சிகளும் ஈடுபாடு காட்டத் தொடங்கின. முன்னர் கூறப்பட்டதைப் போன்று தமிழ் பொதுவேட்பாளர் திட்டத் தை மேம்படுத்துவதில் முன்னோடியாகச் செயற்பட்ட அரசியல் கட்சி ஈ.பி.ஆர்.எல்.எவ். தான். பிறகு ஏனைய கட்சிகளும் ஆர்வம் காட்டின. தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் நிலவிய உள்நெருக்கடி ரெலோவும் தமிழீழ மக்கள் விடுதலை கழகமும் (புளொட்) தனிவழி செல்வதற்கு வழிவகுத்தது. ஈ.பி.ஆர்.எல்.எவ்வுடன் சேர்ந்து இவ்விரு கட்சிகளும் வேறு இரு கட்சிகளும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை அமைத்தன. தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் தமிழரசு கட்சி தனிமைப்படுத்தப்பட்டது.

தமிழ் பொதுவேட்பாளர் திட்டத்துக்கு மேலும் தமிழ் கட்சிகளின் ஆதரவு கிடைத்தது. மொத்தமாக ஏழு அரசியல் கட்சிகள் அந்த திட்டத்தை ஆதரித்தன. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமீழீழ மக்கள் விடுதலை கழகம், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி மற்றும் தமிழ் தேசிய பசுமை இயக்கம் ஆகியவையே அந்த கட்சிகளாகும்.

மறுபுறத்தில் தமிழ் பொதுவேட்பாளர் திட்டத்தை ஒருங்கிணைந்து நடைமுறைப்படுத்துவதற்கு 81 தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள், வர்த்தகர் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. இது ‘தமிழ் தேசிய பொதுச்சபை’ என்று அழைக்கப்பட்டது. செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்கு இந்த பொதுச்சபை நிறைவேற்றுக்குழு ஒன்றையும் ஆலோசனைக்குழு ஒன்றையும் அமைத்தது.


பொதுக் கட்டமைப்பு

அதற்கு பிறகு தமிழ் மக்கள் பொதுச்சபையும் முன்னர் குறிப்பிடப்பட்ட ஏழு அரசியல் கட்சிகளும் தமிழ் பொதுவேட்பாளர் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு செயல்முறை ஏற்பாட்டுக்கு வந்தன. தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பு அமைக்கப்பட்டது. அந்த கட்டமைப்புக்கு 14 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு உயர்பீடம் இருக்கிறது. அதில் ஏழு பேர் சிவில் சமூகப் பிரதிநிதிகளாகவும் ஏழு பேரா அரசியல் கட்சிகளின் தலைவர்களாகவும் இருந்தனர்.

என்.ஸ்ரீகாந்தா, டி. சித்தார்த்தன், எஸ். பிரேமச்சந்திரன், எஸ். அடைக்கலநாதன், சி.வி. விக்னேஸ்வரன், ரி.வேந்தன் மற்றும் பி.ஐங்கரநேசன் ஆகியோரே அந்த அரசியல் தலைவர்களாவர். கே.ரி. கணேசலிங்கம், செல்வின் மரியாம்பிள்ளை, சி. யோதிலிங்கம், ஏ. யதீந்திரா, கே. நிலாந்தன், ரி. வசந்தராஜா மற்றும் ஆர். விக்னேஸ்வரன் ஆகியோரே சிவில் சமூகப் பிரதிநிதிகளாவர். உயர்பீடத்தின் பதினான்கு உறுப்பினர்களில் பத்துப்பேர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். ஏனைய நான்கு பேரும் வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

அரியம் என்ற அரியநேத்திரன்

அதற்கு பிறகு பொதுவேட்பாளர் ஒருவரை தெரிவுசெய்யும் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டன. ஆரம்பத்தில் ஒரு நூறு பேரின் பெயர்கள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டதாக தகவறிந்த வட்டாரங்கள் மூலம் தெரியவந்தது. இது பிறகு 46 பெயர்களைக் கொண்ட ஒரு நீண்ட பட்டியலாக மாறியது. அதற்கு பிறகு இது ஏழு பெயர்களைக் கொண்ட குறுகிய பட்டியலாக சுருங்கியது. இறுதியில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தமிழ் பொது வேட்பாளராக அரியம் என்ற பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவு செய்யப்பட்டார்.

பொதுவேட்பாளராக களமிறங்குவதற்கு முன்வருமாறு அணுகப்பட்டவர்களில் பலர் அதற்கு மறுத்த காரணத்தினால் தெரிவுச் செயன்முறை பெரும் சிக்கலானதாக இருந்ததாக தமிழ் சிவில் வட்டாரங்கள் மூலம் அறியவந்தது. வேறு சந்தர்ப்பங்களில் சிலரை பொதுவேட்பாளராக பரிசீலிப்பதற்கு சிவில் சமூகப் பிரதிநிதிகளிடம் இருந்து அல்லது அரசியல் கட்சிகளிடம் இருந்து ஆட்சேபனை வந்தது. தெரிவு செய்யப்படும் வேட்பாளர் அடுத்த இரு வருடங்களுக்கு எந்தவொரு தேர்தலிலும் போடடியிடக்கூடாது ; அவர் தான் போட்டியிடுகின்ற சின்னத்தை பிறகு பயன்படுத்தக்கூடாது என்ற நிபந்தனையும் பெரிய நெருக்குதலை ஏற்படுத்தியது. பெண் வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்வதற்கான முயற்சியும் வெற்றிபெறவில்லை.

வேட்பாளராக தெரிவு செய்யப்படுவதற்கு அரியநேத்திரனுக்கு அனுகூலமாக மூன்று முக்கிய காரணிகள் அமைந்தன. முதலாவது அவர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர். பெருமளவில் தமிழர்கள் மத்தியில் ஐக்கியத்தை ஊக்கப்படுவத்துவதற்கு வட மாகாணத்தைச் சேர்ந்த ஒரு வேட்பாளரை விடவும் கிழக்கு மாகாண வேட்பாளர் ஒருவரை களமிறக்கவேண்டியது முக்கியமானதாக இருந்தது. இரண்டாவது தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அரியநேத்திரன் உறுதியளித்திருக்கிறார். இனிமேல் எந்தொரு தேர்தலிலும் தான் வேட்பாளராக நிற்கப்போவதில்லை என்று அவர் கூறினார். மூன்றாவது அவர் ஒரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்பதால் ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு தகுதியைக் கொண்டவராக இருந்தார். தமிழ் அரசியல் கட்சிகள் அவற்றின் சின்னத்தின் கீழ் வேட்பாளர் ஒருவரை நியமிப்பநற்கு தயங்கியதால் புதியதொரு சின்னத்தின் கீழ் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் தேவைப்பட்டார்.

தமிழ் பொதுவேட்பாளர் போட்டியிடுவது வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் வாக்குகளைக் குறிவைக்கும் சிங்கள வேட்பாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது சாத்தியம். அவர்களுக்கு செல்லக்கூடிய வாக்குகள் இப்போது அரியநேத்திரனுக்கு போகலாம். ஜனாதிபதி விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சி தலைவர் பிரேமதாசவும் தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்புடன் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தைகளை நடத்தினர். புளொட்,ரெலோ மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகள் விக்கிரமசிங்கவைச் சந்தித்தனர். ரெலோவும் புளொட்டும் பிரேமதாசவுடன் பேச்சுவார்த்தை நடத்தின. தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்கியதற்கான காரணங்கள் இருவருக்கும் விரிவாக கூறப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் அம்பிளாந்துறையில் 1955 ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி பிறந்த அரயநேத்திரன் கொக்கட்டிச்சோலையில் அமைந்திருக்கும் மிகவும் பிரபல்யமான ‘ தான்தோன்றீஸ்வரர் ‘ சிவன் கோவிலின் மரபுவழியான அறங்காவலர்களாக இருந்துவரும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். அரியம் என்று பிரபல்யமாக அறியப்படும் அவர் ஆற்றல்மிகு எழுத்தாளரும் தமிழ்ப் பேச்சாளருமாவார். பல வருடங்களுக்கு முன்னர் கிழக்கில் விடுதலை புலிகளானால் வெளியிடப்பட்ட ‘ தமிழ் அலை ‘ பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் பணியாற்றினார். தற்போது கொழும்பில் இருந்து வெளியாகும் ‘ தமிழன் ‘ பத்திரிகையில் அரசியல் பத்தியொன்றை அரியம் எழுதிவருகிறார்.

அவர் 2004 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினராக பாராளுமன்றப் பிரவேசம் செய்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராகப் போட்டியிட்ட அவர் 35,337 வாக்குகளைப் பெற்றார். மட்டக்களப்பு உறுப்பினராக 2010 பாராளுமன்ற தேர்தலிலும் தெரிவான அவருக்கு16,504 வாக்குகள் கிடைத்தன. 2015 பாராளுமன்ற தேர்தலில் தெரிவாவதற்கு அவருக்கு போதுமான விருப்பு வாக்குகள் கிடைக்கவில்லை 2020 பாராளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. ஆனால் தொடர்ந்து அரசியலில் தீவிரமாக இயங்கிவரும்்அரியம் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழுவின் உறுப்பினராக இருந்துவருகிறார்.


தமிழரசு கட்சியின் சர்ச்சை

தமிழ் பொதுவேட்பாளர் தற்போது தனது கட்சிக்குள் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். சி.வி.கே. சிவஞானம்,எம்.ஏ. சுமந்திரன், சாணக்கியன் இராசமாணிக்கம் போன்றவர்கள் பொதுவேட்பாளர் திட்டத்தை எதிர்க்கின்ற அதேவேளை மாவை சேனாதிராஜா, ஜ. சிறீநேசன், சிவஞானம் சிறீதரன் போன்றோர் அதற்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

தமிழரசு கட்சி எந்த வேட்பாளரை ஆதரிக்கவேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதற்கு பிரதான வேட்பாளர்களுடன் பேச்ச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு கட்சியின் மத்திய செயற்குழு சுமந்திரனுக்கு அதிகாரமளித்தது. ரணில் விக்கிரமசிங்க,சஜித் பிரேமதாச, அநுரா குமார திசாநாயக்க போன்ற வேட்பாளர்களுடன் ஏன் நாமல் ராஜபக்சவுடனும் கூட அவர் பேச்சுவார்த்தைகளை நடத்திவந்தார். பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து அவர் கட்சிக்கு அறிவித்து வந்தார். பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆழமாக ஆராய்ந்து இறுதி முடிவு ஒன்று எடுக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்த ஜனாதிபதி தேர்தலில் ‘வெற்றிபெறுபவருடன்’ நிற்கவேணடும் என்று தமிழரசு கட்சி உறுதியாக இருந்தது.

கட்சி இறுதித் தீர்மானத்தை எடுத்திராத நிலையில் தமிழ் பொதுவேட்பாளராக போட்டியிடுவதற்கு அரியநேத்திரன் ஒருதலைப்பட்சமாக முடிவெடுத்தார். இது விடயத்தில் அவரை சிறீதரன் போன்றவர்கள் வெளிப்படையாக ஆதரித்தார்கள். இது தொடர்பாக அரியநேத்திரனிடம் இருந்து தமிழரசு கட்சி ஒரு விளக்கத்தைக் கோரியது. கட்சியின் கொள்கை வகுக்கும் மத்திய செயற்குழு உறுப்புரிமையில் இருந்து அவர் இடைநிறுத்தம் செய்யப்பட்டார். தமிழ் வேட்பாளர் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் உறுப்பினர்கள் ஈடுபடுக்கூடாது என்றும் கட்சி தடை பிறப்பித்தது. ஏற்கெனவே பிளவடைந்திருக்கும் தமிழரசு கட்சி இந்த விவகாரம் தொடர்பில் பாரிய பிளவை நோக்கிச் செல்கின்றது போன்று தெரிகிறது.

இறுதியாகக் கிடைத்த தகவல்களின்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் மூத்த துணைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் கூடிய தமிழரசு கட்டியின் மத்திய செயற்குழு ஏகமனதாக மூன்று தீர்மானங்களை எடுத்ததாக சுமந்திரன் செய்தியாளர்கள் மகாநாட்டில் அறிவித்தார்.

தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிப்பதில்லை ; அரியநேத்திரன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகவேண்டும் ; தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை தமிழரசு கட்சி ஆதரிக்கும் என்பவையே அந்த தீர்மானங்களாகும்.


சங்குக்கு வாக்கு
கள்

அதேவேளை, அரியநேத்திரன் தேர்தல் பிரசாரங்களில் தீவிரமாக இறங்கியிருக்கிறார். அவரது பிரசாரப் பயணம் யாழ்ப்பாணக்குடா நாட்டில் பொலிகண்டியில் ஆரம்பித்து அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. வடக்கு, கிழக்கில் சகல மாவட்டங்கள் ஊடாகவும் அவர் பயணம் செய்வார். அரியத்தின் பிரசாரத்தின் தொனிப்பொருள் ‘ நமக்காக நாம் ‘ என்பதாகும். தான் தமிழ்த் தேசியத்தின் ஒரு சின்னம் மாத்திரமே, ஒரு தலைவர் அல்ல என்று அவர் கூறுகிறார்.

அரியநேத்திரனின் அழைப்புக்கு வடக்கு,கிழக்கு தமிழ் மக்கள் எவ்வாறு செவிசாய்ப்பார்கள் என்பது செப்டெம்பர் 21 ஆம் திகதி தெரிந்துவிடும்.

தமிழ் பொதுவேட்பாளருக்கு தமிழ் மக்கள் அதிகளவில் வாக்களித்தால் தமிழ் அரசியல் செல்நெறியில் ஒரு தீவிரவாத திருப்பத்தை அது ஏற்படுத்திவிடக்கூடும். தமிழர்கள் அவருக்கு குறைந்தளவில் வாக்களித்தால் அது தமிழ்த் தேசியவாதக் கோட்பாட்டினை பலவீனமடையச் செய்துவிடலாம்.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமைந்தாலும் இறுதியில் தோல்வியடையப் போகிறவர்கள் தமிழ் மக்களே என்று தோன்றுகிறது.

D.B.S.Jeyaraj can be reached at dbsjeyaraj@yahoo.com

ஆங்கில மூலம்: டி. பி. எஸ். ஜெயராஜ் (Daily Mirror)

தமிழில்: வீரகத்தி தனபாலசிங்கம்

நன்றி: வீரகேசரி


*************************************************************