டி.பி.எஸ். ஜெயராஜ்
சரத் பொன்சேகா என்று பொதுவாக அறியப்படும் கார்திஹேவா சரத் சந்திரபால் பொன்சேகா மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கப்போவதாக அறிவித்திருக்கிறார். இலங்கையின் ஒரேயெரு பீல்ட் மார்ஷலான முன்னாள் இராணுவத் தளபதி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஒரு போட்டியாளராக இருப்பேன் என்று ‘எக்ஸ் ‘ (ருவிற்றர்) சமூக ஊடகத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார்.
அவரின் முறைப்படியான அறிவிப்பு வருமாறு ; ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடப்போவதை இலங்கை மக்களுக்கு அறிவிக்க விரும்புகிறேன். எம்மை வங்குரோத்து நிலைக்கு கொண்டவந்த திறமையற்ற ஒரு அரசியல் குழுவினால் 76 வருடங்களாக நாம் ஆட்சி செய்யப்பட்டிருக்கிறோம். இலங்கை வளர்ச்சியடைய வேண்டுமானால் ஊழலை நசுக்கவேண்டியது அவசியமாகும். வருமானப் பெருக்கத்தை மேம்படுத்த எமது வளங்களை நாம் முறையாகப் பயன்படுத்தவேண்டியது அவசியமாகும். இதுை இலங்கையின் 2024 ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிடப்போவது தொடர்பிலான உத்தியோகபூர்வமானதும் முறைப்படியானதுமான எனது அறிவிப்பாகும். இலங்கையை முன்னோக்கி வழிநடத்திச்செல்ல என்னுடன் இணையுமாறு சகல இலங்கையர்களையும் அழைக்கிறேன்.”
பீல்ட் மார்ஷல் பொன்சேகாவின் இந்த பிரகடனம் பழைய நினைவுகளை எமக்கு கொண்டுவருகிறது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் 2010 ஆம் ஆண்டில் வரலாறு படைத்தார். அவ்வாறு செய்த முதன் முதலான இலங்கை இராணுவத்தளபதி அவரே. ஆனால், நிறைவேற்று அதிகாரியாக வந்த முதல் இராணுவ அதிகாரி என்ற கௌரவம் சரத் பொன்சேகாவின் நண்பனாக இருந்து பிறகு எதிரியாக மாறிய கோட்டாபய ராஜபக்சவுக்கே கிடைத்தது. அவர் 2019 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
சரத் பொன்சேகாவின் ஜனாதிபதி தேர்தல் எவ்வாறு முன்னெடுக்கப்படப் போகிறது என்பதை ஆராய்வதற்கோ அல்லது மதிப்பிடுவதற்கோ இது பொருத்தமான நேரம் அல்ல. முன்னாள் இராணுவத்தளபதி தனது மனதை மாற்றி போட்டியில் இருந்து விலகுவதற்கான வாய்ப்பை நிராகரிப்பதற்கும் இல்லை. இத்தகைய பின்புலத்தில், முன்னதாக 2010 ஜனாதிபதி தேர்தலில் பொன்சேகாவை போட்டியிடவைத்த சூழ்நிலைகளை நினைவுமீட்டிப் பார்ப்பது பொருத்தமானதாக இருக்கும்.
மகிந்த ராஜபக்ச
மகிந்த ராஜபக்ச 2005 நவம்பர் 18 ஆம் திகதி நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார். விடுதலை புலிகள் வலுக்கட்டாயமாக திணித்த பகிஷ்கரிப்பு ஒன்றின் மூலமாகவே அவர் தெரிவான போதிலும், மெதமுலானவுக்கும் வல்வெட்டித்துறைக்கும் இடையே மோதல் ஏற்படப் போகின்றது என்பது விரைவாகவே வெளிப்படையாக தெரியவந்தது.
ஜனாதிபதியாக பதவியேற்ற தொடக்கத்தில் மகிந்த ராஜபக்ச விடுதலை புலிகளுடன் உக்கிரமான போர் மூளும் என்ற எதிர்பார்ப்பில் இரு முக்கியமான நியமனங்களைச் செய்தார். முதலில் அவர் தனது இளைய சகோதரர் கோட்டாபய ராஜபக்சவை பாதுகாப்பு செயலாளராக நியமித்தார் ; அடுத்து சரத் பொன்சேகாவை இராணுவத் தளபதியாக நியமித்து அவரின் பதவிக்காலத்தையும் நீடித்தார்.
கோட்டாபயவின் வேண்டுகோளின் பேரிலேயே சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக்கப்பட்டார்.
2005 டிசம்பர் 6 ஆம் திகதி 55 வயதை அடையவிருந்த அவர் இராணுவ சேவையில் இருந்து ஓய்வுபெறத் திட்டமிட்டிருந்தார். அந்த காலகடாடத்தில் இராணுவத்துக்கு தலைமை தாங்குவதற்கு சிறந்த படையதிகாரி பொன்சேகாவே என்ற காரணத்தால் அவரை இராணுவத்தளபதியாக நியமிப்பதற்கு தனது சகோதரரரை கோட்டாபய இணங்கவைத்தார்.
அந்த நேரத்தில் இராணுவத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சாந்த கொட்டேகொட பிறேசில் நாட்டு்க்கான இலங்கைத் தூதராக அனுப்பப்பட்டார். இராணுவத்தளபதியாக பொன்சேகாவின் பதவி ஒவ்வொரு வருடமும் டிசம்பரில் நீடிக்கப்பட்டது.
துணிச்சலும் அர்ப்பணிப்பும் முரட்டுப்பிடிவாதமும் கொண்ட ஒரு படைவீரராக பொன்சேகா விளங்கியபோதிலும், இடக்குமுடக்கான கட்டுப்படுத்தமுடியாத பேர்வழி என்று எதிர்மறையான ஒரு பெயரை எடுத்தவர். இந்த சுபாவம் கடந்த காலத்தில் அவரது பதவியுயர்வு வாய்ப்புக்களைப் பாதித்தது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இராணுவத்தளபதியாக பொன்சேகாவை நியமிப்பதற்கு தயங்கியதாகவும் ஆனால் கோட்டாபய தனது சகோதரரை மிகவும் கஷ்டப்பட்டு இணங்கவைத்ததாகவும்்அந்த நேரத்தில் செய்திகள் வெளியாகின. தன்னால் சரத்தை ‘ கையாளமுடியும் ‘ என்று கோட்டாபய வழங்கிய உத்தரவாதத்தை
மகிந்த நம்பினார்.
இவ்வாறுதான் பொன்சேகா இராணுவத் தளபதியாக வந்தார். முதல் வருடத்துக்கு பிறகு பொன்சேகாவை இராணுவ சேவையில் இருந்து ஓய்வுபெறுவதற்கு அனுமதிக்க மகிந்த விரும்பினார். ஆனால், மீண்டும் கோட்டாபய தலையிட்டு தனது சகோதரரின் கையைக் கட்டிப்போடடார். ஆரம்பக் கட்டங்களில் சரத்துடன் ஒரு செயற்பாட்டு உறவுமுறையை கோட்டாபய வளர்த்துக்கொண்டு போர் முனையில் இராணுவ நடவடிக்கைகை தீவிரப்படுத்தக் கூடியதாக இருந்தது. ஆரம்பத்தில் இருவருக்கும் இடையில் பெருமளவுக்கு தோழமை உணர்வு இருந்தது.
சரத்தும் கோட்டாவும்
சரத்தையும் கோட்டாவையும் பொறுத்தவரை, பல விடயங்களில் பொதுவான தன்மை இருக்கிறது. இருவரும் ஆனந்தா கல்லூரி மாணவர்கள். அனேகமாக ஒரே வயதுடையவர்கள். சரத் மூன்றாவது ஆட்திரட்டலில் இராணுவத்தில் சேர்ந்த அதேவேளை கோட்டா நான்காவது ஆட்திரட்டலில் சேர்ந்துகொண்டார்.1987 ஆண்டில் வடமராட்சி போன்ற முக்கிய போர்முனைகளில் ஒன்றாக பணியாற்றினார்கள். 1990 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணக் கோட்டைக்குள் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றுவதற்கு முன்னெடுக்கப்பட்ட ” நள்ளிரவு கடுகதி ” ( Midnight Express ) நடவடிக்கையில் இருவரும் பங்குபற்றினர்.சரத் ஒரு கேணலாக இருந்தார். இராணுவத்தில் இருந்து விலகியபோது கோட்டா லெப்டினன்ட் கேணலாக இருந்தார்.
போர் முன்னேறிக்கொண்டிருந்தது. விடுதலை புலிகள் மெதுமெதுவாக விரட்டியடிக்கப்படுவதையும் ஆயுதப்படைகள் முன்னேறிக்கொண்டிருந்ததையும் நாடும் உலகமும் கண்டன. சரத் — கோட்டா சமநிலை விரிசலுக்குள்ளாகத் தொடங்கியது. அதற்கான பெருமளவு குற்றப்பொறுப்பு சரத்துக்கே உரியது என்று பாதுகாப்புத்துறையின் உள்வீட்டுத் தகவல்கள் மூலம் அந்த நேரத்தில் அறியக்கூடியதாக இருந்தது.
மகிந்தவும் கோட்டாவும் சரத்தை எளிதில் உணர்ச்சிவசப்பட்டு ஆத்திரத்தை வெளிப்படுத்தும் ஒருவராகவே பார்த்தனர். சரத் பொன்சேகாவைப் பொறுத்தவரை, அடிக்கடி பிரச்சினையைக் கொடுக்கும் ஒரு பேர்வழியாகவே நடந்துகொண்டார். அடங்காத பிள்ளையை சமாளித்து பொறுமையுடன் நடக்கும் ஒரு தாய் போன்றே கோட்டா செயற்படவேண்டியிருந்தது.
அச்சவுணர்வும் வன்மமும்
சரத் பொன்சேகாவின் மனப்பான்மை விரும்பத்தக்கதாக இல்லாவிடடாலும் போர் நடவடிக்கைகளுக்கு அவர் மிகவும் முக்கியமானவர் என்று கருதப்பட்டதால் பொறுத்துக் கொள்ளப்பட்டார். பெருமளவுக்கு நகைப்புக்குள்ளாக்கப்பட்ட அவர் போர் முடிவுக்கு வந்தபோது தனது எல்லைகளை மீறிச் செயற்படும் ஒருவராக கருதப்பட்டார். ராஜபக்சாக்கள் அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். ஒருபுறத்தில் அச்சவுணர்வினாலும் மறுபுறத்தில் வன்மத்தினாலும் நிலைவரம் மேலும் சிக்கலானது.
போர்முனையில் சண்டைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுக்கொண்டிருந்தபோது போரை வெற்றிகரமாக நடத்தியதில் தனது வல்லமையையும் சாமர்த்தியத்தையும் பற்றி சரத் பொன்சேகா பெருமை பேசிக்கொண்டிருந்தார். அவர் தன்னை ஒரு நவீன துட்டகெமுனுவாகப் பார்த்தார்.யானை மீது ஏறியிருக்கும் கெமுனு முன்பாக எல்லாளன் முளந்தாளிட்டு நிற்பதாக ஒரு ஓவியத்தையும் கூட ஒரு கட்டத்தில் பொன்சேகா கீறிவித்தார். அதைப் பார்த்த வெளிநாட்டு பத்திரிகையாளர் ஒருவர் கெமுனுவின் முகம் சரத்தின் முகத்தை ஒத்திருக்கிறது என்று கூறினார்.
பொன்சேகா தொடர்ந்து தனது ‘ ருஹுணு ‘ மூரசைக் கொட்டிக் கொண்டிருந்நபோது ராஜபக்சாக்கள் சினமடைந்தார்கள். ஆனால், போர் இலக்கு எட்டப்படும்வரை அவரை அவர்கள் பொறுத்துக் கொண்டார்கள். போரின் விளைவாக பொன்சேகா மக்கள் செல்வாக்கைப் பெறுவதற்கும் அனுமதிக்கப்பட்டார். போரின் கட்டங்கட்டமான வெறிகளின் புகழில் மகிந்த ராஜபக்ச திளைத்துக்கொண்டிருந்தார் என்ற போதிலும், வெற்றியை நோக்கி மகிந்தவும் சரத்தும் ஒன்றாக அணிவகுத்துச் செல்வதைக் காண்பிக்கும் சில சுவரொட்டிகளையும் காணக்கூடியதாக இருந்தது.
மக்கள் மத்தியில் சரத்துக்கு அதிகரிக்கும் செல்வாக்கு குறித்து மகிந்தவுக்கு பாதுகாப்பின்மை உணர்வு அதிகரிக்கத் தொடங்கியது. ஆனால் விவகாரங்கள் கட்டுப்பாட்டை மீறிப்போகாமல் சகோதரர் கோட்டாபய பார்த்துக்கொள்வார் என்று மகிந்த நம்பினார். மறுபுறத்தில், போர் வெற்றிகளின் மூலமான செல்வாக்கை ஜனாதிபதியுடனும் அரசாங்கத்துடனும் தான் ” பகிர்ந்து ” கொள்ள வேண்டியிருக்கிறதே என்று பொன்சேகா சினமடையத் தொடங்கினார்.
சரத் பொன்சேகாவின் புகழ்பாடும் பல கட்டுரைகள் பல பத்திரிகைகளில் வெளியாகத் தொடங்கின. போர் வெற்றிக் கொண்டாட்டங்களில் சரத்தின் வீரசாகசங்களும் இராணுவத் திறமைகளும் போற்றிப் புகழப்பட்டன. ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டிகளில் பொன்சேகா தனது பெருமைகளை பெரிதாகப் பேசினார். அவருக்கு நெருக்கமான ஊடகவியலாளர்களும் பெருமளவு முக்கியத்துவத்தை அவருக்கு கொடுத்தனர். ஜனாதிபதியும் பாதுகாப்பு செயலாளரும் மறைக்கப்படுவது போன்று தோன்றியது.
அரசியல் பாத்திரம்
சரத் பொன்சேகாவின் நோக்கிலும் ஒரு மாற்றம் ஏற்படுவதை உணர்க்கூடியதாக இருந்தது. மக்களிடம் இருந்து வந்த புகழாரங்கள் அவரைப் பாதித்தன. அரசியலை வெறுத்தொதுக்கி அரசியல்வாதிகளைக் கேலிசெய்யும் ஒருவர் என்ற நிலையில் இருந்து தனக்கு எதிர்காலத்தில் ஒரு அரசியல் பாத்திரம் இருக்கிறது என்று அறிகுறி காட்டும் ஒரு இராணுவத் தளபதியாக அவர் மாறினார். விடுதலை புலிகளை தோற்கடித்தவராக தன்னைப் பற்றி பேசத்தொடங்கிய பொன்சேகா தனது நண்பர்களிடமும் பழக்கமானவர்களிடமும் ” நான் ஏன் அடுத்த ஜனாதிபதியாக முடியாது ? ” என்று கிண்டலாகக் கேட்கத் தொடங்கினார்.
அவரிடம் அவதானிக்கப்பட்ட இந்த மனோபாவ மாற்றம் ராஜபக்ச சகோதரர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டதும் அவர்கள் உஷாரடைந்தார்கள். ஜனாதிபதி மகிந்தவின் அரசியல் வாய்ப்புக்களுக்கு உண்மையானதோ அல்லது கற்பனையானதோ ஒரு ஏற்படுவதாக உணரப்பட்டது.
குறைந்த பட்சம் மூன்று தனித்தனியான புலனாய்வு அறிக்கைகள் உத்தியோகபூர்வமாகவும் உத்தியோகப்பற்றற்ற முறையிலும் கோரப்பட்டன. பொன்சேகா அரசியல் அபிலாசையை வளர்த்துவருகிறார் என்பதும் மக்கள் மத்தியில் மகிந்த ராஜபக்சவுக்கு இணையான செல்வாக்கு இருக்கிறது என்பதுமே அந்த மூன்று அறிக்கைகளினதும் சாராம்சமாகும்.
உணரப்பட்ட அச்சுறுத்தல்
சரத் பொன்சேகாவிடமிருந்து அச்சுறுத்தல் ஒன்று தோன்றுகிறது என்பதை ராஜபக்ச சகோதரர்கள் உணர்ந்துகொண்டார்கள். ஒருபுறத்தில் மகிந்த தனது அரசியல் தலைமைத்துவத்தை அபகரிக்கக்கூடிய ஒருவராக பொன்சேகாவைப் பார்த்த அதேவேளை, மறுபுறத்தில் கோட்டாபய போரின்போது பாதுகாப்பு செயலாளராக தான் வகித்த முக்கியமான பாத்திரத்தை மறுதலிப்பதற்கு பொன்சேகா முதிர்ச்சியற்ற முறையில் செய்த முயற்சிகளினால் சினங்கொண்டார்.
கடந்த காலத்தில் பொன்சேகாவை சீராட்டி அவரது போக்குகளையும் குறைபாடுகளையும் சகித்துக்கொண்ட ராஜபக்ச ஆட்சி இதற்குப் பிறகும் அவ்வாறு செய்யத் தயாராயிருக்கவில்லை. அதையடுத்து எந்த படைத்தளபதியும் அனுமதியோ அல்லது கண்காணிப்போ இல்லாமல் ஊடகங்களுக்கு பேட்டிகளை வழங்கக்கூடாது என்று பாதுகாப்பு செயலாளர் கோட்டாவிடமிருந்து உத்தரவொன்று வந்தது.இதுை பொன்சேகா ஊடகங்கள் மீது கொண்டிருந்த ஏகபோகத்தை கட்டுப்படுத்தியது.
ஹொண்டூராஸ் சதி
அதேவேளை, மத்திய அமெரிக்க நாடான ஹொண்டூராஸில் அந்த நேரத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளும் இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தின. அந்த நாட்டு ஜனாதிபதி மனுவேல் செலாயா ஒரு சுற்றிவளைப்பு வழி மூலமாக தனது பதவிக்காலத்தை நீடிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு திட்டமிட்டார். சர்வஜன வாக்கெடுப்பு யோசனையை நீதிமன்றம் நிராகரித்தது. ஆனால், நீதிமன்றத்தின் தீர்மானத்தை அலட்சியம் செய்து செலாயா சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு வாக்குச்சீட்டுக்களை விநியோகிக்கத் தொடங்குமாறு இராணுவத்துக்கு உத்தரவிட்டார்.
ஆனால் அவ்வாறு செய்வதற்கு இராணுவத்தளபதி ஜெனரல் றோமியோ வாஸ்குவெஸ் வெலஸ்குவெஸ் மறுத்தார். அவரை பதவிநீக்கிய செலாயா தனது திட்டத்தை முன்னெடுத்தார். வெலஸ்குவெஸ் இராணுவச் சதிப்புரட்சி ஒன்றை நடத்தி செலாயாவைக் கைதுசெய்து அயல்நாடான கோஸ்டாரிக்காவுக்கு நாடுகடத்தினார். ஹொண்டூராஸ் சதிப்புரட்சி இலங்கையில் அதிகாரத்தில் இருந்தவர்கள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஹொண்டூராஸ் நிகழ்வுகளுக்கு கொழும்பில் பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுத்துச் செய்திகளை வெளியிட்டன.
அந்த சதிப்புரட்சிக்கு பிறகு நேசநாடொன்று இலங்கையிலும் கூட இராணுவச் சதிப்புரட்சி சாத்தியம் எச்சரிக்கைத் தகவலை அனுப்பியது. இன்னொரு நாட்டின் உதவியுடன் இலங்கை இராணுவத்தளபதி சதிப்புரட்சியை முன்னெடுக்கக்கூடும் என்று அந்த நேசநாடு கூறிவைத்தது. அந்த இரு நாடுகளும் பரம எதிரிகள். ஆனால் இலங்கைக்கு நேசமானவை.
படையதிகாரிகளின் பிரதானி
அத்தகைய ஒரு சூழ்நிலையில் ராஜபக்ச அரசாங்கம் நடவடிக்கையில் இறங்கியது. பொன்சேகா அவசரமாக அழைக்கப்பட்டு இராணுவத்தளபதி பதவியில் இருந்து இறங்கி படையதிகாரிகளின் பிரதானி பதவியை ( Chief of Defence Staff ) பொறுப்பேற்பதற்கு மூன்று நாள் அவகாசம் கொடு்க்கப்பட்டது. தயக்கத்துடன் பொன்சேகா இராணுவத் தளபதி பதவியைத் துறந்து பிரதானி பதவியை ஏற்றுக் கொண்டார்.
அதற்கு பிறகு திட்டமிட்ட முறையில் தனக்கு எதிராக கீழறுப்பு வேலைகள் இடம்பெறுவதை பொன்சேகா கண்டுகொண்டார். அரச ஊடகங்களிலும் தனியார் ஊடகங்களிலும் அவர் இருட்டடிப்புச் செய்யப்பட்டார். இன்னொரு திருப்பமாக அமைச்சரவை அமைச்சர்களும் அமைச்சரவையில் இல்லாத அமைச்சர்களும் பொன்சேகாவை தாக்கிப்பேசத் தொடங்கினார்கள். அரசியல் அபிலாசையைக் கொண்டிருப்பதாக அவர் மீது மறைமுகமாக விமர்சனம் செய்யப்பட்டது. சதிமுயற்சி ஒன்றுக்கு திட்டமிடப்படுகிறது என்ற பீதியும் தொடர்ந்து நிலவியது. ஒரு பத்திரிகையாளரைத் தூதுவராகக்கொண்டு எதிரணிக் கட்சிகளுடன் பொன்சேகா பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதாகவும் சந்தேகிக்கப்பட்டது.
ராஜபக்சாக்களுக்கும் பொன்சேகாவுக்கும் இடையிலான பிளவு வெளியில் நன்றாகத் தெரியத்தொடங்கியது. 2009 அக்டோபரில் அவர் தனது கிறீன்கார்ட்டை புதுப்பிப்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றார். அமெரிக்க தாயகப் பாதுகாப்பு திணைக்களத்துடன் சந்திப்பொன்றை தான் நடத்தக்கூடிய சாத்தியம் இருப்பதாக பொன்சேகா கொழும்புக்கு அறிவித்தார். இதையடுத்து தோன்றிய பதற்றம் அப்போதைய வெளியுறவு அமைச்சர் றோஹித்த போகொல்லாகம செய்தியாளர்கள் மகாநாடொன்றை அவசரமாகக் கூட்டி அதை ஆட்சேபிக்கும் நிலையை ஏற்படுத்தியது. இது ராஜபக்சாக்களுக்கும் அவர்களின் முன்னாள் இராணுவத்தளபதிக்கும் இடையிலான உறவுகள் முறிவடைந்துவிட்டன என்பதை தெளிவாக வெளிக்காட்டியது.
ஜனாதிபதி தேர்தல்
பொன்சேகா நாடுதிருப்பிய பிறகு பொன்சேகா இராணுவத்தில் இருந்து விரைவில் ஓய்வு பெறப்போகிறார் என்றும் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுமானால் மகிந்த ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிடுவதன் மூலம் அவர் அரசியலில் பிரவேசிக்கப்போகிறார் என்றும் ஊகங்கள் அதிகரித்தன.
2009 நவம்பர் 6 ஆம் திகதி சரத் பொன்சேகா ரணில் விக்கிரமசிங்க, ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் மற்றும் மங்கள சமரவீர ஆகியோரைச் சந்தித்தார். இந்த எதிரணித் தலைவர்கள் பொன்சேகாவை ஆதரிப்பதற்கு அப்போது தீர்மானித்ததாக நம்பப்பட்டது. ஆனால் அவர்களில் எவரும் அதை வெளிப்படையாக உறுதிப்படுத்தவோ அல்லது நிராகரிக்கவோ இல்லை.
2009 நவம்பர் 11 ஆம் திகதி புதன்கிழமை அன்றைய முப்படைகளின் பிரதான தளபதி தனது முன்னாள் இராணுவத் தளபதியை தனியாகச் சந்தித்தார். நம்பிக்கையும் நல்லெண்ணமும் அருகிப்போய்விட்டதன் விளைவாக தான் பதவியில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்படுவதாக அந்த சந்திப்பில் பொனசேகா மனந்திறந்து கூறினார்.பதவி விலகல் கடிதம் சமர்ப்பிக்கப்பட்டால் அது உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி ராஜபக்ச பொன்சேகாவுக்கு பதிலளித்தார். 2009 டிசம்பர் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரக்கூடியதாக பொன்சேகா தனது பதவிவிலகல் கடிதத்தை அன்றைய ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவிடம் நவம்பர் 12 ஆம்்திகதி வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு கையளித்தார்.
பொன்சேகா பதவி விலகல் கடிதத்தை கையளிக்கும் பட்சத்தில் அதை உடனடியாகவே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று மகிந்த ராஜபக்ச தெட்டத்தெளிவான அறிவுறுத்தலை பிறப்பித்திருந்ததால் தனது பதவி விலகலுக்கான 17 காரணங்களை விளக்கி அவர் எழுதிய மூன்று பக்கக் கடிதம் உடனடியாகவே ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அதற்கு பிறகு ஜனாதிபதி தேர்தல் வந்தது. ஐக்கிய தேசிய கட்சி, ஜனதா விமுக்தி பெரமுன, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ( மங்கள ) ஆகியவற்றின் பொதுவேட்பாளராக பொன்சேகா களமிறங்கினார். முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனுடன் பொன்சேகா புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றிலும் கைச்சாத்திட்டார்.
2010 ஜனாதிபதி தேர்தல் ஜனவரி 26 ஆம் திகதி நடைபெற்றது. போட்டி போரை வென்ற ஆட்சியாளருக்கும் அவரின் போர்வெற்றி இராணுவத்தளபதிக்கும் இடையிலானதாக இருந்தது. அது இரண்டாவது உலகப் போருக்கு பிறகு வின்ஸரன் சேர்ச்சிலை எதிர்த்து பேர்னாட் மொண்ட் கொமரி போட்டியிடுவதை அல்லது பங்களாதேஷ் போருக்கு பிறகு இந்திரா காந்தியை எதிர்த்து சாம் மனெக்சா போட்டியிடுவதையும் போன்றதாக இருந்தது.
மிகவும் நெருக்கமான போட்டியில் மகிந்தவை சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் பொன்சேகா தோற்கடிப்பார் என்று ஊகங்கள் பெருமளவில் இருந்தன. ஆனால் 6,015, 933 வாக்குகளைப் ( 57.88 சதவீதம் ) பெற்று மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றார். சரத் பொன்சேகாவுக்கு 4, 173, 185 வாக்குகள் ( 40. 15 சதவீதம் ) கிடைத்தன. சிறுபான்மைச் சமூகங்களின் வாக்குகளில் பெரும்பகுதியை பொன்சேகா பெற்ற அதேவேளை பெரும்பான்மைச் சமூகத்தின் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்ற மகிந்த ராஜபக்சவுக்கே வெற்றிகிடைத்தது.
அந்த ஜனாதிபதி தேர்தல் ராஜபக்சாக்களுக்கும் பொன்சேகாவுக்கும் இடையில் ஒரு நீண்டகாலமாக நிலவிய மனக்கசப்பின் விளைவாதாகும். அந்த மனக்கசப்பு போரின்போது கட்டுப்படுத்தப்பட்டு சமாளிக்கப்பட்டது என்றபோதிலும் போர் வெற்றிக்கு பிறகு அது வெளிப்படையாக வெடித்தது. ஒரு அர்த்தத்தில் இரு தரப்புகளுக்கும் இடையிலான பிணக்கு போர் வெற்றிக்கு பெருமளவு உரிமையை யார் கோருவது என்பதை அடிப்படையாகக் கொண்டதேயாகும்.
ஆளுமை மோதல்
முக்கியமாக ராஜபக்சாக்களுக்கும் பொன்சேகாவுக்கும் இடையிலான தகராறு கோட்பாடோ அல்லது கொள்கையோ இல்லாத ஒரு ஆளுமை மோதலேயாகும். பயம், பொறாமை, கொதித்துக் கொண்டிருந்த உணர்வுகள், பொறாமை வன்மம் மற்றும் வடுப்பட்ட பெருமை ஆகியவை நிலைவரத்தை பாரதூரமானதாக்கின. உணரப்பட்ட அரசியல் சவாலை முறியடிப்பதற்கு ஒருதரப்பு மேற்கொண்ட முயற்சிகளும் அவற்றுக்கு எதிராக மறுதரப்பு மேற்கொண்ட நடவடிக்கைகளும் கொந்தளிப்பான நிலையை ஏற்படுத்தின.
தோற்கடிக்கப்பட்ட பொன்சேகா கைதுசெய்யப்பட்டு நீதியையும் நேர்மையையும் மீறி ராஜபக்சாக்களினால் சிறையிலடைக்கப்பட்டார். விடுதலையான பிறகு அவர் பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் வந்தார். பீல்ட் மார்ஷலாகவும் அவர் பதவியுயர்த்தப்பட்டார். தற்போது அவர் ஐக்கய மக்கள் சக்தியின் சார்பிலான கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்திருப்பதன் மூலம் மீண்டும் அவர் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
D.B.S.Jeyaraj can be reached at dbsjeyaraj@yahoo.com
ஆங்கில மூலம்: டி. பி. எஸ். ஜெயராஜ் (Daily Mirror)
தமிழில்: வீரகத்தி தனபாலசிங்கம்
நன்றி: வீரகேசரி
*************************************************************