டி.பி.எஸ். ஜெயராஜ்
ரணில் விக்கிரமசிங்க 2022 மே 12 ஆம் திகதி அன்றைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் பிரதமராக நியமிக்கப்பட்டார். அப்போது இலங்கை படுமோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்தது.’ அறகலய போராட்டம் தீவிரமடைந்து கொண்டிருந்தது. புதிய பிரதமர் 2022 மே 16 ஆம் திகதி நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றினார். அந்த உரையில் விக்கிரமசிங்க ஜேர்மன் நாடகாசிரியர் பேரொல்ற் பிறெற்றின் ‘ கோகேசியன் ஷோக் சேர்க்கிள் ‘ ( Caucasian Chalk Circle) என்ற நாடகம் பற்றி குறிப்பிட்டார்.
” நான் ஆபத்தான் ஒரு சவாலை ஏற்கிறேன். கோகேசியன் ஷோக் சேர்க்கிள் நாடகத்தில் குரூஷா என்ற இளம் பெண் ஒரு குழந்தையைச் சுமந்துகொண்டு பழுதடைந்த கயிற்றுப் பாலத்தைக் கடந்தாள். அந்த குழந்தை அவளுடையதும் அல்ல. நான் பொறுப்பேற்றபது அதைவிடவும் சிக்கலான ஒரு பணி. பாறையின் செங்குத்தான பக்கம் மிகவும் ஆழமானது. அடிப்பகுதியைக் காணமுடியாது. பாலம் மெல்லிய கண்ணாடியினால் அமைக்கப்பட்டது. அதில் கைப்பிடிக் கிராதியும் கிடையாது. அகற்றப்படமுடியாத கூர்மையான ஆணிகள் பொருத்தப்பட்ட சப்பாத்துக்களை நான் அணிந்திருக்கிறேன். குழந்தையை தூக்கிக்கொண்டு அடுத்த கரையில் சேர்க்கவேண்டியதே எனது பணி. எமது நாட்டுக்காக இந்த சவாலை நான் ஏற்கிறேன். தனிப்பட்ட ஒருவரை, ஒரு குடும்பத்தை அல்லது ஒரு கட்சியை பாதுகாப்பது அல்ல எனது இலக்கு. இந்த நாட்டின் சகல மக்களையும் எமது இளம் சந்ததியின் எதிர்காலத்தையும் பாதுகாப்பதே எனது குறிக்கோள்” என்று விக்கிரமசிங்க கூறினார்.
பிரதமராக விக்கிரமசிங்க கொந்தளிக்கும் கடலின் ஊடாக கப்பலை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டுசெல்ல முயற்சித்துக் கொண்டிருந்தபோது ” கோட்டா வீட்டுக்கு போ ” போராட்டம் தீவிரமடைந்தது. அதையடுத்து நாட்டை விட்டு தப்பியோடிய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச வெளிநாட்டில் இருந்துகொண்டு பதவியை துறந்தார்.
ரணில் பதில் ஜனாதிபதியாக பதவியேற்றார். 2022 ஜூலை 20 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர்கள் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவுசெய்தனர்.225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 134 பேர் அவரை ஆதரித்து வாக்களித்தனர்.ஜூலை 21 அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.
சட்டத்தையும் ஒழுங்கையும் மீண்டும் நிலைநாட்டிய புதிய ஜனாதிபதி குழப்பகரமான நிலைவரத்தை முடிவுக்கு கொண்டுவந்தார். அதற்கு பிறகு சில அமைச்சர்களினதும் இராஜாங்க அமைச்சர்களினதும் ஆதரவுடன் ஜனாதிபதி விக்கிரமசிங்க இலங்கை மத்திய வங்கியுடன் சேர்ந்து பொருளாதார நிலைவரத்தைக் கையாளத் தொடங்கினார். கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டது. எதிரணி அரசியல்வாதிகளும் புத்திஜீவிகளில் சில பிரிவினரும் ஊடகங்களும் இதை ஏற்றுக்கொள்ளத் தவறின. அவர்கள் விக்கிரமசிங்கவை தொடர்ந்து விமர்சித்துக் கொண்டேயிருந்தனர். ஆனால், விமர்சனங்களை பொருட்படுத்தாமல் அவர் தனது நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடு்த்தார்.
விக்கிரமசிங்க பொறுப்பேற்றபோது இலங்கை வங்குரோத்து அடைந்த ஒரு நாடாக இருந்தது. பொருளாதாரச் சிக்கலில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதே ரணிலின் பணியாக இருந்தது. நாடடின் பொருளாதார சுபிட்சத்துக்கான அடித்தளத்தைப் போடுவதே ரணிலின் நோக்காக இருந்தது.
முக்கியமான தினம்
2024 ஜூன் 26 இலங்கைக்கு முக்கியமான ஒரு தினமாக அமைந்தது. அன்றைய தினம் உத்தியோகபூர்வ கடன்வழங்கும் நாடுகளுடன் பாரிஸ் நகரில் உடன்படிக்கை ஒன்று கைச்சாத்தானது. ஏககாலத்தில் பெய்ஜிங்கில் இன்னொரு உடன்படிக்கை சீன எக்சிம் வங்கியுடன் கைச்சாத்திடப்பட்டது. இந்த உடன்படிக்கைகள் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளின் முடிவைக் குறித்தது. இலங்கை ‘ தற்காலிகமாக ‘ ஆபத்தில் இருந்து தப்பியிருக்கிறது.
மகிழ்ச்சியில் திளைத்த ஜனாதிபதி விக்கிரமசிங்க ஜூன் 26 நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றின் மூலமாக நற்செய்தியை அறிவித்தார். அந்த உரையில் அவர் மீண்டும் பிறெற்றின் ‘ கோகேசியன் ஷோக் சேர்க்கிள் ‘ பற்றி குறிப்பிட்டார்.
” இரு வருடங்களுக்கு முன்னர் நாட்டுக்கான பொறுப்பை நாம் ஏற்றுக்கொண்டபோது, எமக்கு முன்னால் சவால்மிக்க ஒரு பாதை இருப்பதை நான் அழுத்தமாகக் கூறினேன். கோகேசியன் ஷோக் சேர்க்கிள் உதாரணத்தை க் கூறி அடிப்பகுதி தெரியாத ஆபத்தான கயிற்றுப் பாலத்தை நாம் கடக்கவேண்டும் என்று விளக்கமளித்தேன். இந்த சூழ்நிலைக்கு மத்தியிலும், எந்தவித முன்னிபந்தனையும் இன்றி சவாலை நான் ஏற்றுக்கொண்டேன். பொருளாதார அதலபாதாளத்தில் இருந்து எமது நாட்யைும் அதன் மக்களையும் பாதுகாப்பதில் எனது ஆற்றலில் நான் நம்பிக்கை வைத்தேன்.
” அன்றைய தினம் நான் ஒரு உறுதிமொழியை வழங்கினேன். ஆபத்தான கடலின் ஊடாக இலங்கை மாதா என்ற குழந்தையை பாதுகாப்பாக நான் கரைக்கு கொண்டுவந்து சேர்த்திருக்கிறேன். அதற்கு பிறகு என்ன நடந்தது? பெருமளவுக்கு கோகேசியன் ஷோக் சேர்க்கிள் கதையில் வருவதைப் போன்று நெருக்கடியான நேரத்தில் குழந்தையை பாதுகாப்பதற்கு தயங்கிவர்கள், ஆதரவு தருவதற்கு மறுத்தவர்கள், இப்போது குழந்தைக்கு உரிமைகோருவதில் ஆரவாரம் காட்டுகிறார்கள். இடர்மிகுந்த கயிற்றுப் பாலத்தை நாம் கடப்பதற்கு முன்னதாகவே கூட, குழந்தையைப் பறிப்பதற்கு சகல திசைகளிலும் இருந்து இழுபறிப்படுகிறார்கள்.
” இருந்தாலும் கூட, கோகேசியன் ஷோக் சேர்க்கிளில் இருந்து நாம் அறிந்து கொண்டதைப் போன்று குழந்தைக்கு உரிமை கோருவதற்கு அதன் உண்மையான தாயாரே அருகதை உடையவர். நாடகத்தில் வரும் குரூஷா என்ற பெண்ணின் வார்த்தைகளில் கூறுவதானால் ” பொருட்களை நன்றாகப் பேணியவர்களுக்கே அவை சொந்தம். தொடர்வண்டிகள் அவற்றை நன்றாக ஓட்டிச் சென்றவர்களுக்கே சொந்தம்.”
ஷோக் சேர்க்கிள் குரூஷா
இந்த சந்தர்ப்பத்தில் நான் ஒரு தனிப்பட்ட குறிப்பைக் கூறவிரும்புகிறேன். இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுங்கும் பணியில் தான் எதிர்நோக்கும் சவாலை ஷோக் சேர்க்கிளின் குரூஷா ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு ஆபத்துமிகுந்த கயிற்றுப் பாலத்தை கடந்து சென்றதுடன் விக்கிரமசிங்காஒப்பிடு செய்தது எனக்கு உணர்ச்சிபூர்வமாக ஏறனபுடைய ஒன்றாாக இருக்கிறது. அதனால் தான் 2022 மேயில் 2024 ஜூனிலும் அவர் குரூஷா பற்றி கூறியவை குறித்து இங்கு கவனத்தை செலுத்துகிறேன்.
விக்கிரமசிங்க பிரதமராக வந்தபோது நான் 2022 மே 21 டெயிலி மிறறில் ஒரு கட்டுரையை எழுதினேன். அது குறித்து எனக்கு கிடைத்த கடிதங்களில் ஒன்று புகழ்பெற்ற எழுத்தாளர் பேராசிரியர் ஜஸ்மின் குணரத்னவிடம் இருந்து வந்தது.
அன்புடன் ஜெயராஜுக்கு,
உங்களின் கட்டுரைகளை பல வருடங்களாக வாசித்த பிறகு இதை எழுதுகிறேன். எமது அரசியல் நிலைவரங்கள் குறித்து நேர்மையான, நுண்ணோக்குடைய ஒரு அவதானியாக நீங்கள் இருப்பது குறித்த எனது திருப்தியை தெரிவிக்க இதை எழுதுகிறேன்.
” இன்று நீங்கள் டெயிலி மிறறில் எழுதிய கட்டுரை முன்மாதிரியானது. என்னதான் நடந்திருந்தாலும், குரூஷா ஆற்றைக் கடந்து குழந்தையை ஒருபோதும் கொண்டுபோகாமல் இருக்கலாம். ஆனால் குறைந்தபட்சம் அவளது முயற்சியாவது பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. நலமாகவும் பாதுகாப்பாகவும் இருங்கள். உங்கள் எழுத்துக்களை வாசிக்காமல் எங்களால் இருக்கமுடியாது” என்று ஜஸ்மின் குணரத்ன கடிதத்தில் எழுதியிருந்தார்.
குணரத்னவின் அந்த பதில் குரூஷாவின் உதாரணத்தைக் கூறி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்துக்கள் அவர் மீது நேர்மறையான ஒரு தாக்கத்தை ஏறனபடுத்தியிருந்தது என்பதை வெளிக்காட்டியது. இவ்வருடம் பெப்ரவரி மாதம் குணரத்ன காலமானார். இன்று அவர் உயிருடன் இருந்திருந்தால் குழந்தையுடன் பாதுகாப்பாக குரூஷா ஆற்றைக் கடந்தது குறித்து மகிழ்ச்சி யடைந்திருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.
உரத்த அழைப்பு
முக்கியமான இலக்கை அடைந்திருப்பது குறித்து இயல்பாகவே மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்திருக்கும் ஜனாதிபதி விக்கிரமசிங்க தன்னைக் குறைகூறுபவர்களையும் அரசியல் போட்டியாளர்களையும் தாக்குவதற்கு நாட்டு மககளுக்கான தனது விசேட உரையைப் பயன் படுத்திக்கொண்டார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக ரணில் இன்னமும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என்றபோதிலும், மக்களிடம் மறைமுகமாக ஆதரவு கோரி உரத்த அழைப்பு ஒன்றை விடுத்தார்.
” தற்போதைய பின்புலத்தில் நான் முக்கியமான கேள்வியை கேட்கிறேன். பிரச்சினையை தொடக்கத்தில் இருந்தே புரிந்துகொண்டு நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளையும் பயன்களையும் தந்த என்னுடன் முன்னோக்கி பயணம் செய்யப்போகிறீர்களா ? அல்லது பிரச்சினைகளை இன்னமும் விளங்கிக்கொள்ளாமல் இருளில் தடுமாறிக்கொண்டிருப்போருடன் சேர்ந்து நிற்கப்போகிறீர்களா?
” உங்களுக்கும் தேசத்துக்குமான பிரகாசமான ஒரு எதிர்காலத்துக்காக தற்போதைய பாதையிலேயே தொடர்ந்து பயணம் செய்யப்பே்கிறீர்களா? அல்லது வேறுபட்டாஒரு பாதையைத் தெரிவுசெய்யப் போகிறிர்களா? தற்போதைய பாதையில் இருந்து விலகி தவறான ஒரு பாதையை தெரிவுசெய்வதில் உள்ள ஆபத்துக்களை நாம் எல்லோரும் அறிவோம். எனவே சரியான தீர்மானத்தை எடுங்கள். அந்த தெரிவைச் செய்வதற்கு உங்களுக்கு முழு உரிமையும் சுதந்திரமும் இருக்கிறது.” என்று ஜனாதிபதி தனதுரையில் கூறினார்.
சுயாதீனமான வேட்பாளர்
ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக தெரிவாவதற்காக கட்சிசார்பற்ற ஒரு பொதுவேட்பாளராகவே தேர்தலில் போட்டியிடுவார் என்று எனது முன்னைய பல கட்டுரைகளில் கூறியிருக்கிறேன். உணாமையில் அவர் அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய குழுவொன்று, வேறு கட்சிகளின் அதிருப்தியாளர்கள், தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் இயக்கங்களின் ஆதரவுடனான ஒரு சுயாதீனமான வேட்பாளராகவே இருப்பார். இந்த கூட்டணியின் ( அல்லது கூட்ட்ணிகளின் ) ஆதரவு இருந்தாலும் அவற்றின் ஒரு வேட்பாளராக அன்றி சுயாதீனமான வேட்பாளராகவே விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவார்.
கடந்த மாத ஆரம்பத்தில் விக்கிரமசிங்க கொழும்பு பிளவர் வீதியில் சுயாதீனமான தேர்தல் அலுவலகம் ஒன்றை திறந்தார். இந்த அலவலகம் அவரது தேர்தல் பிரசாரத்தை ஒருங்ககிணைத்து மேற்பார்வை செய்யும். இதற்கு மேலதிகமாக வேறு தேர்தல் அலுவலகங்கள் கட்டமைப்பு திறக்கப்பட்டு அவற்றுக்கு பிரத்தியேகமான பணிகள் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த அரசியல் மற்றும் பிரசார மூலோபாய நிபுணர்களுக்கான அலுவலகமும் ஒன்று. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக இம்மாதம் ரணில் அறிவிக்கும்போது அவருக்கு ஆதரவான பிரசாரங்கள் முழுவீச்சில் முன்னெடுக்கப்படும்.
இது விடயத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை வெளிக்காட்டும் அறிகுறி ஒன்றை கடந்தவாரம் காணக்கூடியதாக இருந்தது. நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஜூன் 26 உரையாற்றுவதற்கு முன்னதாக இலங்கை மக்கள் ஒரு மறைபுதிரான சுவரொட்டிகளை கண்டார்கள். ” *ஆறஞ்சிய சுபாய்*” ( *இதோ* *ஒரு* *நற்செய்தி* ) என்று சுவரொட்டிகளில் எழுதப்பட்டிருந்தது. அதனால் ஏற்பட்ட பரபரப்பு ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பொருளாதார முனையில் நற்செய்தியை வெளிப்படுத்தியதை அடுத்து முடிவுக்கு வந்தது.
கடன் மறுசீரமைப்பை பொறுத்தவரை, நல்லுணர்வு நிலை காணப்பட்டாலும் கூட, பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு வெளியில் வரவில்லை என்பது முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியதாகும். வழங்கப்பட்டிருப்பது ஒரு ஓய்வு அல்லது கால அவகாசமேயாகும். வெளிநாட்டு கடன்களை மீளச்செலுத்துவது நான்கு வருடங்களுக்கு
பின்போடப்பட்டிருக்கிறது. அதற்கு பிறகு ஒரு 15 வருட காலத்துக்கு ( திருப்பிக்கொடுக்கவேண்டிய முதலில் ஏழு சதவீத குறைப்புடன் ) குறைந்த வட்டிவீதத்தில் கடன்களை திருப்பிச் செலுத்தவேண்டும். இந்த உடன்படிக்கைகள் பாரிஸ் கழக நாடுகளுடனும் சீனாவின் எக்சிம் வங்கியுடனும் செய்யப்பட்டிருக்கின்றன. மேலும், அரசின் சர்வதேச பிணைமுறிகளை வைத்திருக்கும் வர்த்திருப்பவர்கள் மற்றும் சீன அபிவிருத்தி வங்கி உட்பட வர்த்தக கடன்வழங்குநர்களுடன் இலங்கை உடன்படிக்கைகளை நிறைவுசெய்ய வேண்டியிருக்கிறது. இது விடயத்தில் திருப்பிக்கொடுக்கவேண்டிய முதலில் 30 சதவீத குறைப்பு செய்யப்படும் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இவை எல்லாவற்றையும் அடிப்படையாகக்கொண்டு நோக்கும் போது இலங்கை பொருளாதார ரீதியில் உறுதிப்பாடான ஒரு நிலைக்கு வருவதற்கு மிகவும் நீண்டதூரம் பயணம் செய்யவேண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளமுடியும். பொருளாதாரத்தை சரியான தடத்தில் வைப்பதற்கு ரணிலும் அவரின் அமைச்சர்களும் அதிகாராகளும் கால அவகாசத்தைப் பெற்றிருக்கிறார்கள். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு இணங்கிச் செயற்படுகின்ற அதேவேளை மக்கள் மீது அளவுக்கு அதிகமாகச் சுமையை ஏற்றாததன் மூலம் இதைச் சாதிக்கக்கூடியதாக இருந்தது. செய்யவேண்டியது என்னவென்றால் கிடைத்திருக்கும் கால அவகாசத்தை பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு பயன்படுத்துவதேயாகும். அதற்கு நேர்மைவாய்ந்த விவேகமான அரசியல் தலைமைத்துவம் தேவை. இதற்கு பொருத்தமானவர் யார்?
இது விடயத்தில் ரணில் விக்கிரமசிங்கவே முனைப்பாக தெரிகிறார். தற்போது முன்னரங்கத்தில் நிற்கும் இலங்கை அரசியல்வாதிகள் மத்தியில் விக்கிரமசிங்க மாத்திரமே இந்த சவாலுக்கு முகங்கொடுப்பதற்கான ஆற்றலைக் கொண்டவராக தோன்றுகிறார். எஞ்சிய குள்ளர்கள் மத்தியில் ரணிலே உயர்ந்த மனிதனாக நிற்கிறார். அவருக்கு சார்பாக இரு அம்சங்கள் இருக்கின்றன.
முதலாவதாக, ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால் செய்யப்போகின்ற விடயங்களை கூறவேண்டிய நிலையில் ரணில் இல்லை. சவாலை எதிர்கொள்வதற்கு அவர் ஏற்கெனவே ஆட்சிப்பொறுப்பை ஏற்று அதிகாரத்தில் இருக்கின்றார். நாடு பெரும் குழப்பநிலையில் இருந்தபோது தலைமைத்துவப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அவர் ஓரளவுக்கு நிலைவரத்தை மேம்படுத்தி தனது திறமையை காட்டியிருக்கிறார்.
கோட்டாபய காலத்தில் காணப்பட்ட நீண்ட வரிசைகளையும் தட்டுப்பாடுகளையும் நாடு எளிதில் மறந்துவிடமுடியாது. அதனால் பொருளாதார மீட்சிப்பாதையில் நாடு தொடர்ந்து சென்றுகொண்டிருக்கும் நிலையில் அதிகாரத்தில் இருப்பதற்கு சிறந்த ஆள் ரணிலேயாவார். இது விடயத்தில் சஜித் பிரேமதாச, அநுரா குமார திசாநாயக்க போன்ற ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு மேலாக ரணல் ஒரு அனுகூலத்தைக் கொண்டிருக்கிறார்.
இரண்டாவதாக, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக்கூடியவர்களில் எவருமே இந்த பொருளாதாரச் சவாலுக்கு உருப்படியான முறையில் முகங்கொடு்ப்பதற்கான தங்களின் ஆற்றலை வெளிக்காட்டவில்லை. பிரேமதாசவும் திசாநாயக்கவும் நிறையவே பேசுகிறார்கள், ஆனால் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு விக்கிரமசிங்கவினால் பின்பற்றப்படுகின்ற பாதைக்கு எந்தவொரு சிறந்த மாற்று யோசனையையும் அவர்கள் முன்வைக்கவில்லை. வகுப்பறை விவாதத்தில் பாடசாலை மாணவர்கள் கூடுதல் புள்ளிகளைப் பெறுவதற்கு முயற்சிப்பதைப் போன்று அவர்கள் அரசாங்கம் செய்பவற்றில் பிழை கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
வென்டி வற்மோர் அகாடமி உச்சரிப்பு முறையுடன் கூடிய சஜித் பிரேமதாசவின் சொல்வளமும் அநுரா குமாரவின் போலி இடதுசாரி ஆரவாரப் பேச்சுக்களும் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. அவர்கள் இருவரும் செயல்வீரர்களாக அன்றி வெறும் வாய்ச் சவடால்காரர்களாகவே நோக்கப்படுகிறார்கள். சஜித்தை கயாதாசா என்றும் அநுரா குமாரவை கயாநாயக்கா என்றும் நையாண்டியாகப் பேசப்படுகிறது. ஒரு தொன் பேச்சை விடவும் ஒரு அவுன்ஸ் செயல் சிறப்பானது என்று கூறப்படுவதுண்டு. வாய்ச்சவடால் சஜித்துடனும் அநுரா குமாரவுடனும் ஒப்பிடும்போது ரணில் ஒரு செயல் வீரராக நோக்கப்படுகிறார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் அரசியல் கட்சிகள் மத்தியிலான ஒரு போட்டியாக அல்லாமல் ஆளுமைகளுக்கு இடையிலான மோதலாகவே இருக்கப்போகிறது என்று இந்த பத்தியில் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டது. விக்கிரமசிங்க தொடர் தோல்வியாளர் என்றும் மிஸ்டர் பீன் என்றும் அவரது எதிராகளால் கேலி செய்யப்பட்ட ஒரு காலம் இருந்தது. தற்போது நிலைவரம் வேறுபட்டதாக இருக்கிறது. விக்கிரமசிங்க ஒரு வெற்றியாளராக கருதப்படுகின்றார். ஏனென்றால் தனது பெறுமதியை அவர் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.
அதன் காரணத்தினால்தான் விக்கிரமசிங்கவின் ஆதரவாளர்கள் தங்களது பிரசார நடவடிக்கைகளில் அவரையே பிரதானமாக முன்னிலைப்படுத்திக்்காட்டுகிறார்கள். நற்செய்திப் பிரசாரத்தை தொடர்ந்து ” *மே* *வெலாவட்ட* *ரணில்* *தமாய்* ” ( *தற்போதைய* *தருணத்தில்* *ரணில்தான்* *சரியான* *ஆள்* ) என்ற பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது. இலங்கைக்கான பொருளாதார மறுமலர்ச்சி திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க ரணிலுக்கு மேலும் ஒரு ஐந்து வருடங்களைக் கொடுக்கவேண்டியது அவசியம் என்ற அடிப்படையில் ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் முன்னெடுக்கப்படக்கூடிய சாத்தியமே இருக்கிறது.
பொருளாதார நிவாரணம்
ரணிலைப் பொறுத்தவரை நிலைமை அனுகூலமானதாக இருக்கின்றபோதிலும், அவர் எச்சரிக்கையுடன் செயற்படவேண்டிய தேவையும் இருக்கிறது. பொருளாதார நெருக்கடியில் உள்ள தளர்வும் அதன் நேய்மறையான முக்கியத்துவமும் ஒரு குறிப்பிட்ட வகையான மக்கள் பிரிவினரை மாத்திரமே திருப்திப்படுத்த முடியும்.கஷ்டப்படுகின்ற அதிகப் பெரும்பான்மையான மக்களுக்கு தேவைப்படுவது பொருளாதார நிவாரணமேயாகும்.
கொவிட் – 19 பெருந்தொற்றும் ராஜபக்ச ஆட்சி கடைப்பிடித்த ‘வியத்மகா ‘ வின் தூண்டுதலுடனான பொருளாதாரக் கொள்கைகளும் 70 சதவீதமான மக்களை வறியவர்களாக்கிவிட்டது .
பாரிஸில் இருந்தும் பெய்ஜிங்கில் இருந்தும் வந்த *நற்செய்தி* தங்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தாத பட்சத்தில் அதில் எந்த அர்த்தமும் இல்லை. சமூகத்தின் பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கு சில பொருளாதார ஆதரவை வழங்குவதற்கு தற்போது சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. தற்போது இந்த பிரிவினரே இனம்,மதம் சாதி கடந்து இலங்கையில் பெரும்பான்மையினராக விளங்குகிறார்கள். இறுதியில் ரணிலின் தேர்தல் வெற்றி இந்த வறுமைப்பட்ட பெரும்பான்மையினரிலேயே தங்கியிருக்கிறது. அவர்கள் பொருளாதார நற்செய்தியை நம்பக்கூடியதாக இருக்கவேண்டும்.
அதனால் உண்மையிலேயே நற்செய்தி ஒன்று இருக்கிறது என்றும் மேலும் ஒரு பதவிக் காலத்துக்கு விக்கிரமசிங்கவை அதிகாரத்தில் இருக்கச்செய்தால் மேலும் நற்செய்திகள் வரும் என்றும் இந்த மக்கள் பிரிவினரை நம்பச்செய்வதே அவரும் அவரது ஆதரவாளர்களுக்கும் முன்னால் உள்ள சவாலாகும்.2022 நிலைவரத்துடன் ஒப்பிடும்போது 2024 நிலைவரம் மேம்பட்டிருக்கிறது என்று மக்கள் உணரவேண்டும். விக்கிரமசிங்க அதிகாரத்தில் இருந்தால் தங்களது வாழ்க்கை நிலைமை மேம்படும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்தவேண்டும்.
சுருக்கமாகச் சொல்லப்போனால், அர்த்தபுஷ்டியான நடவடிக்கைகள் மூலமாக ரணில் விக்கிரமசிங்க மக்களின் மனங்களை வெல்லவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக 2024 ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அவர் மிகுந்த அக்கறையுடனான பிரசார இயக்கத்தை முன்னெடுக்கவேண்டும்.
ஆங்கில மூலம்: டி. பி. எஸ். ஜெயராஜ் (Daily Mirror)
தமிழில்: வீரகத்தி தனபாலசிங்கம்
நன்றி: வீரகேசரி
**************************************************************