கடந்தகால ஜனாதிபதி தேர்தல்களில் தமிழர்களும் முஸ்லிம்களும் வாக்களித்த போக்குகள்

டி.பி.எஸ். ஜெயராஜ்

2024 ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 17 ஆம் திகதிக்கும் அக்டோபர் 16 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட ஒரு திகதியால் நடத்தப்படும் என்று இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு கடந்தவாரம் அறிவித்தது. ஏற்கெனவே தெரிந்த விடயத்தையே தேர்தல்கள் ஆணைக்குழு திரும்பக் கூறியிருக்கிறது. பிரத்தியேகமான திகதி ஒன்று அறிவிக்கப்படவில்லை என்றபோதிலும், தேர்தல் செப்டெம்பர் பிற்பகுதியில் அல்லது அக்டோபர் முற்பகுதியில் நடத்தப்படக்கூடிய சாத்தியம் இருக்கிறது.

கடந்த காலத்தைப் போன்று ஜனாதிபதி பதவிக்கு பலர் போட்டியிடுவார்கள். சிலர் தேர்தலில் போட்டியிடும் தமது விருப்பத்தை வெளிப்படையாகக் கூறியிருக்கின்ற அதேவேளை, போட்டியிடக்கூடிய மற்றையவர்களின் பெயர்கள் ஊடகங்களில் வெளியாகின்றன. ஆனால், வெற்றி வாய்ப்பைக் கொண்ட பிரதான போட்டியாளர்களாக மூவர் மாத்திரமே இருக்கின்றனர். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி. ) / தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமாரதிசாநாயக்கவுமே அவர்கள்.

முக்கோணப் போட்டி

பல ஆய்வாளர்களின் அபிப்பிராயத்தின் படி பார்த்தால் இந்த முக்கோணப் போட்டி மிகவும் நெருக்கமான ஒன்றாக இருக்கும் போல தெரிகிறது. தற்போதைய நிலைவரத்தின்படி மூன்று பிரதான வேடட்பாளர்களுமே சிங்கள வாக்குகளை தங்கள் மத்தியில் சமமான அளவில் கூறுபோடக் கூடும் என்று ஊகிக்கப்படுகிறது. இந்த ஊகம் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி தேர்தல் இன்னமும் அறிவிக்கப்படாத தற்போதைய நிலைவரத்தை அடிப்படையாகக் கொண்டது. பிரசாரங்கள் முன்னெடுக்கப்படும் போது தேர்தலின் இயக்க ஆற்றல் மாறுபடும் என்பதுடன் கணிப்பீடுகளும் வேறுபடலாம்.

போட்டி நெருக்கமானதாக இருக்கும் என்ற மதிப்பீட்டின் அடிப்படையில் நோக்கும்போது முதலாவது சுற்று வாக்கு எண்ணிக்கையில் எந்தவொரு வேட்பாளருமே 50 சதவீத வாக்குகளைப் பெறமுடியாத அளவுக்கு சிங்கள வாக்குகள் பிரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் சிங்கள மக்களே எண்ணிக்கையில் மிகவும் பெரிய பெரும்பான்மைச் சமூகமாக விளங்குகிறார்கள். இறுதியாக (2012 ) மேற்கொள்ளப்பட்ட குடிசன மதிப்பீட்டின்படி இலங்கை சனத்தொகையில் 74.9 சதவீதமானவர்களாக சிங்களவர்கள் இருக்கிறார்கள்.

இந்த பின்புலத்தில், எண்ணிக்கையில் குறைந்தவர்களான சிறுபான்மைச் சமூகங்களின் வாக்குகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இரண்டாவது பெரிய இனத்தவர்களாக இலங்கைத் தமிழர்கள் விளங்குகிறார்கள். 2012 குடிசன மதிப்பீட்டின்படி அவர்கள் சனத்தொகையில் 11.1 சதவீதத்தினராக இருக்கிறார்கள். மூன்றாவது பெரிய இனத்தவர்களாக சனத்தொகையில் 9.3 சதவீதத்தினரான முஸ்லிம்கள் அல்லது சோனகர்கள் விளங்குகிறார்கள். மலையகள் தமிழர்கள் என்று கூறப்படுகின்ற இந்திய வம்சாவளி தமிழர்கள் சனத்தொகையில் 4.1 சதவீதத்தினராக இருக்கிறார்கள்.


மூன்று இனக்குழுமங்கள்

மூன்று சிறுபான்மை இனத்தவர்களும் ஒட்டுமொத்தமாக சனத்தொகையில் 25.5 சதவீதத்தினராக இருக்கிறார்கள். முழு இலங்கையிலும் இவர்கள் எண்ணிக்கையில் குறைவான சமூகத்தவர்களாக இருக்கின்ற போதிலும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சகல மாவட்டங்களிலும் எண்ணிக்கையில் பெரும்பான்மையினராக விளங்குகிறார்கள். தலைநகர் கொழும்பிலும் நுவரேலியா மாவட்டத்திலும் எண்ணிக்கையில் பெரும்பான்மையினராக இவர்கள் இருக்கிறார்கள். இந்த மூன்று இனத்துவக் குழுக்களும் கொழும்பு,கம்பஹா, கேகாலை,இரத்தினபுரி, கண்டி,மாத்தளை, பதுளை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் சனத்தொகையில் குறிப்பிடத்தக்க அங்கமாக அமைந்திருக்கிறார்கள்.

அதனால் இந்த பின்புலத்தில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மைச் சமூக வாக்காளர் வகிக்கக்கூடிய பாத்திரம் குறித்து இந்த கட்டுரை கவனத்தைச் செலுத்துகிறது. சிங்கள வாக்குகள் மூன்றாக பிளவுபடுகின்ற ஒரு சூழ்நிலையில் தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் வாக்குக்குகள் மொத்தமாக அளிக்கப்படுமேயானால் 2024 ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறக்கூடியவரை தீர்மானிக்கலாம்.

ஜனாதிபதியை தெரிவுசெய்வதில் சிறுபான்மைச் சமூகங்களின் வாக்குகள் முக்கியத்தவம் வாய்ந்த ஒரு பாத்திரத்தை வகிக்கமுடியும் என்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஜூனியஸ் றிச்சர்ட் ஜெயவர்தன் அறிமுகப்படுத்தியபோது பேராசிரியர் ஏ.ஜே. வில்சன் உட்பட பல்வேறு அரசியல் விஞ்ஞானிகள் கூறினார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

1982, 1988, 1994 ஆண்டுகளில் நடைபெற்ற முதல் மூன்று ஜனாதிபதி தேர்தல்களிலும் வெற்றபெற்றவர்கள் சிங்களவர்கள் மத்தியில் இருந்தும் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் மத்தியில் இருந்தும் பெரும்பாலான வாக்குகளைப் பெற்றார்கள். ஜே.ஆர். ஜெயவர்தனவுக்கும் ரணசிங்க பிரேமதாசவுக்கும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் சிங்களவர்களினதும் சிங்களவர்கள் அல்லாதவர்களினதும் பெரும்பானமையான வாக்குகளைப் பெற்றார்கள். 1982 ஜனாதிபதி தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் குமார் பொன்னம்பலம் போட்டியிடடார் என்றபோதிலும் சிங்களவர்களினதும் சிங்களவர்கள் அல்லாதவர்களினதும் வாக்களிப்பு போக்கு ஒரே மாதிரியாக இருந்தது. குமார் பொன்னம்பலத்துக்கு சுமார் 170,000 வாக்குகளே கிடைத்தன.

ரணில் விக்கிரமசிங்க

ஆனால், சிங்களவர்களும் சிங்களவர்கள் அல்லாதவர்களும் ஒரே மாதிரியாக வாக்களிக்கும் போக்கு பின்னரான வருடங்களில் பெரும்பாலும் வீழ்ச்சியடையத் தொடங்கியது.

1999 ஜனாதிபதி தேர்தலில் அன்றைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை விடவும் ஐக்கிய தேசிய கட்சியின் ரணில் விக்கிரமசிங்க தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் ஆதரவைக் கூடுதலாகப் பெற்றார். விக்கிரமசிங்கவை விடவும் சிங்களவர்களின் கூடுதலான வாக்குகளைப் பெற்ற சந்திரிகா குமாரதுங்க அந்த தேர்தலில் வெற்றி பெற்றார்.

1999 தேர்தலில் ரணிலே வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர் சிறுபான்மைச் சமூகத்தவர்களின் வாங்குகளை பருமளவில் பெறுவார் என்றும் சிங்களவர்களின் வாக்குகளைப் பொறுத்தவரையிலும் கூட அவர் சந்திரிகா குமாரதுங்கவையும் விட கூடுதலாகப் பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பிரசாரக் கூட்டத்தில் சந்திரிகா குமாரதுங்கவை கொலை செய்வதற்கு விடுதலை புலிகள் ஒரு தற்காலைக் குண்டுதாரியை அனுப்பினார்கள். அந்த குண்டுதாரி குண்டை வெடிக்கவைத்து தன்னுயிரை மாய்த்துக் கொண்ட்ர். ஆனால் சந்திரிகா குமாரதுங்க காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். அவர் ஒரு கண்ணை இழந்தார். அனுதாப அலை விக்கிரமசிங்கவை தோற்கடிப்பதற்கு குமாரதுங்கவுக்கு உதவியது.

2005 ஜனாதிபதி தேர்தல் மகிந்த ராஜபக்சவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான போட்டியாக அமைந்தது. ரணிலை விடவும் மகிந்த ராஜபக்ச சிங்கள வாக்ககளை கூடுதலாகப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் அமோகமான ஆதரவு ரணிலுக்கு இருந்ததால் அவரே வெற்றிபெறுவார் என்று நம்பப்பட்டது. விடுதலை புலிகள் தமிழ்ப்பகுதிகளில் தேர்தல் பகிஷ்கரிப்பை திணித்தார்கள். அதன் விளைவாக தனக்கு கிடைக்கக்கூடிய கணிசமானளவு தமிழர் வாக்குகளை ரணில் பெறமுடியாமல் போய்விட்டது. சிறிய பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் மகிந்த ராஜபக்ச அந்த தேர்தலில் வெற்றி பெற்றார்.

போரின் முடிவுக்கு பிறகு 2010 ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச பெருவெற்றி பெற்றார். போர் வெற்றியின் பெருமிதம் காரணமாக அவருக்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு இருந்ததால் எதிரணியின் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்ட முனானாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை அவர் தோற்கடித்தார்.

ஆனால் தமிழர்களும் முஸ்லிம்களில் பெருமளவில் பொன்சேகாவுக்கே வாக்களித்தனர்.

2015 ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளரான மைத்திரபாலாசிறிசேனவிடம் மகிந்த ராஜபக்ச தோல்விகண்டார். மீண்டும் பெரும்பான்மையான சிங்கள வாக்குகள் மகிந்த ராஜபக்சவுக்கே கிடைத்தது. ஆனால் தமிழர்களும் முஸ்லிம்களும் பெருமளவில் சிறிசேனவுக்கே வாக்களித்தனர். தனது பிரதம போட்டியாளரை விடவும் குறைந்தளவு சிங்கள வாக்குகளைப் பெறும் ஒரு வேட்பாளர் சிங்களவர்கள் அல்லாதவர்களின் பெரும்பான்மையான வாக்ககளைப் பெறக்கூடியதாக இருக்குமானால் அவரால் லெறாறிபெறமுடியும் என்பது கணித அடிப்படையில் வெளிக்காட்டப்பட்டது.


பெரும்பான்மை எதிர் சிறுபான்மை

2019 ஜனாதிபதி தேர்தல் இதை மறுதலையாக்கியது. அந்த தேர்தலில் இனங்கள் மத்தியிலான துருவமயம் அதன் உச்சமட்டத்தில் இருந்தது.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ச தீவிர சிங்கள தேசியவாத கொள்கையை முன்வைத்துப் போட்டியிட்டார். சிங்கள வாக்களர்களில் மாத்திரமே தான் தங்கியிருந்தார் என்பதை தனது பிரசார இயக்கத்தின் மூலமாக கோட்டா வெளிப்படையாக காடடிக்கொண்டார். அவருக்கு 69 இலட்சம் வாக்குகள் கிடைத்தன.

அவரது பிரதான போட்டியாளரான சஜித் பிரேமதாசவுக்கு இனத்துவ சிறுபான்மைச் சமூகங்களிடமிருந்து பரந்தளவு ஆதரவு கிடைத்தது. ஆனால் அவரால் வெற்றிபெற முடியவில்லை. கவலை தரக்கூடிய வகையில் ” பெரும்பான்மை எதிர் சிறுபான்மை ” என்ற ஒரு முன்னுதாரணம் வகுக்கப்பட்டது.

கடந்தகால ஜனாதிபதி தேர்தல்களில் மக்கள் வாக்களித்த முறையில் இருந்த வித்தியாசம் வெளிப்படையாகத் தெரிந்தது. முதல் மூன்று ஜனாதிபதி தேர்தல்களிலும் பெரும்பான்மையான சிங்கள வாக்காளர்களும் சிங்களவர்கள் அல்லாத வாக்காளர்களும் வெற்றி பெற்றவர்களுக்ககே வாக்களித்திருந்தார்கள். அடுத்து வந்த தேர்தல்களில் பெரும்பான்மை — சிறுபான்மை பிளவு ஒன்று காணப்பட்டது. வெற்றிபெற்ற வேட்பாளர் சிங்களவர்களின் பருமளவு வாக்குகளைப் பெற்ற அதேவேளை தோல்வியடைந்த வேட்பாளர் தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் பருமளவு வாக்குகளைப் பெற்றார். இதில் ஒரு விதிவிலக்கு 2015 தேர்தலில் சிறிசேன பெற்ற வெற்றி. அவருக்கு பெரும்பான்மை இனத்தவர்களின் குறைந்தளவு வாக்குகளும் சிறுபான்மை இனத்தவர்களின் பெருமளவு வாக்குகளும் கிடைத்தன.

அண்மைய ஜனாதிபதி தேர்தலின் வாக்களிப்பு போக்குகளில் குறிப்பாக அவதானிக்கக்கூடிய வேறு இரு காரணிகளும் இருக்கின்றன.

முதலாவது, பொதுவில் சிறுபான்மைச் சமூகங்களும் குறிப்பாக இலங்கைத் தமிழர்களும் ஜனாதிபதி தேர்தல்களில் ராஜபக்சாக்களை எதிர்த்தார்கள். போரை வென்ற ஜனாதிபதி மகிந்தவை விடவும் போரை வென்ற இராணுவத்தளபதி ஜெனரல் பொனசேகாவுக்கு பெருமளவில் தமிழர்கள் வாக்களித்த 2010 ஜனாதிபதி தேர்தலில் இதைப் பிரகாசமாகக் காணக்கூடியதாக இருந்தது. இது 1982 ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளரான ஹெக்டர் கொப்பேகடுவுக்கு எதிராக மலையகத் தமிழர்கள் காட்டிய வெறுப்புக்கு ஒப்பானதாக இருந்தது.

மக்கள் ஆதரவு

இரண்டாவது காரணி ஐக்கிய தேசிய கட்சியின் தலைலர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் வாக்காளர்கள் மத்தியிலும் முஸ்லிம் வாக்காளர்கள் மத்தியிலும் கொணடிருக்கும் பெரும் ஆதரவாகும்.1999 தேர்தலிலும் 2005 தேர்தலிலும் சந்திரிகாவை அல்லது மகிந்தவை விடவும் ரணிலுக்கு சிறுபானமைச் சமூகங்கள் மத்தியில் கூடுதலான ஆதரவு இருந்தது. 2010 , 2015 , 2019 ஜனாதிபதி தேர்தல்களில் மகிந்தவையும் கோட்டாபயவையும் விட சரத் பொன்சேகா, சிறிசேன, சஜித் ஆகியோர் கூடுதலான தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் வாக்குகளைப் பெற்றனர். இந்த மூன்று வேட்பாளர்களுக்காக தமிழர்கள் மத்தியிலும் முஸ்லிம்கள் மத்தியிலும் ரணில் பிரசாரங்களைச் செய்தார்.

2019 ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்காக வடக்கு,கிழக்கில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரசாரங்களை ரணில் முன்னெடுத்தார். ஏனென்றால் தெற்கில் தனக்காக ரணில் பிரசாரம் செய்வதை சஜித் விரும்பவில்லை. சஜித் பெருமளவு தமிழ்,முஸ்லிம் வாக்குகளைப் பெற்ற அதேவேளை ஏனைய ஏழு மாகாணங்களிலும் உள்ள சிஙகள வாக்காளர்கள் மத்தியில் பெரிதாக ஆதரவைப் பெற அவரால் முடியவில்லை. 2019 தேர்தலில் தமிழ், முஸ்லிம் வாக்ககளை சஜித்துக்கு பெற்றுக் கொடுத்ததில்
ரணிலின் பங்கு குறிப்பிடத்தக்கது.

விக்கிரமசிங்கவுக்கு தமிழர்கள் மத்தியில் ஆதரவு இருந்தபோதிலும், 1999, 2005 ஜனாதிபதி தேர்தல்களில் ஜனாதிபதியாக வருவதற்கு அவர் மேற்கொண்ட இரு நேரடி முயற்சிகளையும் தோல்வியடையச் செய்தது விடுதலை புலிகள் என்பது ஒரு முரண்நிலையாகும். 1999 ஆம் ஆண்டில் சந்திரிகாவை கொலை செய்வதற்கு விடுதலை புலிகள் மேற்கொண்ட முயற்சி அவருக்கு சார்பாக அனுதாப அலையை தோற்றுவித்ததால் ரணிலின் வாய்ப்பு பாழாய்ப்போனது.

2005 ஆம் ஆண்டில் தமிழர்கள் ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்கவேண்டும் என்று விடுதலை புலிகளும் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பும் கூட்டாக அறிவித்தனர். பலவந்தமாக மக்களை அச்சுறுத்தி அவர்கள் வாக்களிப்பதை விடுதலை புலிகள் தடுத்தனர். அதன் விளைவாக தனக்கு கிடைக்கக்கூடியதாக இருந்த தமிழ் வாக்குகளை ரணிலால் பெறமுடியவில்லை. மகிந்தவிடம் தோற்றார்.

2020 பெரிய குழப்பம்

பல தசாப்தங்களாக தமிழர்கள் மத்தியிலும் முஸ்லிம்கள் மத்தியிலும் பெரிய ஆதரவை ரணில் தக்கவைத்திருந்த போதிலும் 2020 ஆம் ஆண்டில் பெரிய குழப்பம் ஏற்பட்டது. பொதுவில் ஐக்கிய தேசிய கட்சியும் குறிப்பாக ரணிலும் பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வியடைய வேண்டியேற்பட்டது. ஐக்கிய தேசிய கட்சி அதன் வரலாற்றில் பாராளுமன்றத்தில் ஒரு ஆசனத்தைக் கூட கைப்பற்ற முடியாமல் போனது. தேசியப் பட்டியல் மூலமாக ஒரு ஆசனம் மாத்திரம் கிடைத்தது.

2015 பாராளுமன்ற தேர்தலில் ஐந்து இலட்சம் விருப்பு வாக்குகளைப் பெற்ற ரணிலினால் 2020 தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் வெற்றிபெற முடியாமல் போய்விட்டது. ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து சஜித் பிரேமதாச தலைமையில் பிரிந்துசென்ற அணியினருக்கே பெருமளவு தமிழ்,முஸ்லிம் வாக்குகள் கிடைத்தன.

உண்மையில் 2020 ஆண்டில் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் தமிழர்களும் முஸ்லிம்களுமேயாவர்.

ரணிலினால் மீண்டும் ஆதரவை பெறமுடியுமா

2020 ஆம் ஆண்டில் ஐகிக்ய மக்கள் சக்தியிடம் ஐக்கிய தேசிய கட்சி இழந்த தமிழ், முஸ்லிம் வாக்ககளை ரணிலினால் மீளப்பெறக்கூடியதாக இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. 2024 ஜனாதிபதி தேர்தலில் தனது வெற்றிக்கு உதவுவதற்கு தமிழ்க் கட்சிகளினதும் முஸ்லிம் கட்சிகளினதும் ஆதரவை ரணிலினால் மீண்டும் பெறமுடியுமா? அவர்கள் 2020 ஆம் ஆண்டில் செய்ததைப் போன்று சஜித் பிரேமதாசவுக்கே வாக்களிப்பார்களா அல்லது மாறிவிட்ட சூழ்நிலைகளில் ரணிலுடன் மீள அணி
சேர்ந்துகொள்வார்களா?

இலங்கை தமிழர்கள்,முஸ்லிம்கள், மலையக தமிழர்கள் என்று அழைக்கப்படுகின்ற இந்திய வம்சாவளி தமிழர்கள் என்ற மூன்று இனத்துவக் குழுக்களையும் அடிப்படையாகக் கொண்டு நிலைவரத்தை மதிப்பீடு செய்யவேண்டிய தேவை இருக்கிறது. அத்துடன் ராஜபக்சாக்களுடன் ரணில் தற்போது கொணடிருக்கும் அரசியல் உறவு அவருக்கான சிறுபான்மை கட்சிகளின் ஆதரவை எவ்வாறு பாதிக்கும்? இந்த விடயம் அடுத்த கட்டுரையில் ஆராயப்படும்

ஆங்கில மூலம்: டி. பி. எஸ். ஜெயராஜ் (Daily Mirror)

தமிழில்: வீரகத்தி தனபாலசிங்கம்

நன்றி: வீரகேசரி

*****************************************************************