தேர்தல் தோல்விக்கு பின் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் எதிர்கால செல்வழி

டி.பி.எஸ்.ஜெயராஜ்

(This is the Tamil Version of the English Article “Future Course of Defeated ITAK Leader “Maavai” Senathirajah by D.B.S. Jeyaraj in the “Daily Mirror” Of August 22nd 2020)

அண்மையில் முடிவடைந்த பாராளுமன்றத் தேர்தலில் பல மூத்த அரசியல்வாதிகள் தோல்வி கண்டிருக்கிறார்கள். அவர்களில் நன்கு பிரபலமான வடபகுதி தமிழ்த் தலைவர் சோமசுந்தரம் மாவை சேனாதிராஜாவும் ஒருவர். அவர் 2000ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக 20வருடங்கள் பாராளுமன்றத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்து வந்தார். வழமையாக நீண்ட கால அனுபவம் கொண்ட அரசியல் தலைவர் ஒருவர் தேர்தலில் தோல்வி கண்டபிறகு அரசியல் அமலி ஏற்படுகிறது. மாவை சேனாதிராஜாவை பொறுத்தவரையில், தேர்தலை அவர் எதிர்கொண்ட விதமும் தேர்தல் தோல்விக்கு பிறகு அவர் பிரதிபலிப்புகளை வெளிக்காட்டுகின்ற விதமும் அவர் தோல்வியை ஒரு பண்பு நயத்துடன் ஏற்றுக்கொள்வது சாத்தியமில்லை என்பதை வெளிக்காட்டுகின்றது. முற்றிலும் அதிருப்தியடைந்திருக்கும் சேனாதிராஜா சுயநல சக்திகளினால் தூண்டப்பட்டு மேற்கொள்ளக்கூடிய எதிர்கால நடவடிக்கைகள் நீண்டகால நோக்கில் தமிழரசுக் கட்சிக்கு பாதகமாக போய்விடலாம் என்று கட்சியின் நலன்விரும்பிகள் பலர் அஞ்சுகிறார்கள்.

மகன் கலையமுதன், தந்தை ‘மாவை’ சேனாதிராசா – அன்றும், இன்றும்

மாவை சேனாதிராஜா இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக இருக்கின்றார். மூன்று அரசியல் கட்சிகளின் கூட்டணியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான அங்கத்துவக் கட்சியாக தமிழரசுக் கட்சி விளங்குகிறது. தமிழீழ விடுதலை இயக்கமும்(ரெலோ) தமிழீழ மக்கள் விடுதலை கழகமும்(புளொட்) கூட்டமைப்பின் ஏனைய அங்கத்துவக் கட்சிகளாகும். தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தின் கீழ் தேர்தல்களில் போட்டியிடுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதித் தலைவராகவும் சேனாதிராஜா இருக்கின்றார். அவர் முதலில் 5வருடங்கள் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகவும் 20வருடங்கள் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வந்தார். உயர்ந்த தோற்றம் கொண்ட சேனாதிராஜா, 1942ஆம் ஆண்டில் பிறந்தவர். எதிர்வரும் ஒக்டோபர் 27 அவர் தனது 78ஆவது பிறந்ததினத்தை கொண்டாடுவார்.

இளமைத் துடிப்புடைய அரசியல் கிளர்ச்சியாளர்கள் பொறுப்பு வாய்ந்த அரசியல் தலைவர்களாக மாறிய நிகழ்வுகள் வரலாற்றில் நிறைந்து கிடக்கின்றன. கொந்தளிப்பான ஆர்ப்பாட்டங்களிலும் அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்ற கிளர்ச்சி உணர்வுகொண்ட இளைஞர்கள் அவர்களின் வாழ்நாளின் பிற்பகுதியில் சமநிலை உறுதியுடையவர்களாகவும் அரசியல் கட்டுமானத்தின் பாரம்பரிய தூண்களாகவும் படிமுறை வளர்ச்சி காண்கிறார்கள். இலங்கை அதன் இனப்பிளவின் இருமருங்கிலும் அத்தகைய பல உதாரணங்களை கொண்டிருக்கிறது. சேனாதிராஜா கடந்த காலத்தில் ஒரு அரசியல் கைதியாக 8வெவ்வேறு சிறைச்சாலைகளில் தனது வாழ்வின் 7வருடங்களை கழித்த ஓர் இலங்கை தமிழ் அரசியல்வாதி. முன்னாள் அரசியல் கிளர்ச்சிவாதியான அவர் இன்று இலங்கை தமிழர்களின் பிரதான அரசியல் கட்சியின் மதிப்புக்குரிய தலைவராக இருக்கிறார்.

சேனாதிராஜா வலிகாமம் வடக்கு பிரதேச சபை அல்லது தெல்லிப்பழை உதவி அரசாங்க அதிபர் பிரிவின் கீழ்வருகின்ற மாவிட்டபுரம் கிராமத்தில் பிறந்தவர். முன்னைய தொகுதி அடிப்படையிலான தேர்தல் முறையின் கீழ் மாவிட்டபுரம் காங்கேசன்துறை தொகுதிக்குள் அமைந்திருந்தது. மாவிட்டபுரத்தின் மிகவும் பிரபலமான அடையாளம் வரலாற்று பெருமைமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலாகும்.

மாவிட்டபுரம்/ மாவை

ஒப்பீட்டளவில் நீண்ட பெயர்களை கொண்ட இடங்களின் தமிழ்ப் பெயர்களை சுருக்கி பொதுப்பாவனையில் பயன்படுத்துகின்ற போக்கொன்று தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் இருக்கின்றது. தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் கோவை என்று அழைக்கப்படுகிறது. தஞ்சாவூர் தஞ்சை என்றும் திருநெல்வேலி நெல்லை என்றும் அழைக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் கரவெட்டி, நீர்வேலி மற்றும் ஊர்காவற்துறை ஆகிய ஊர்கள் முறையே கரவை, நீர்வை, காவலூர் என்று அழைக்கப்படுகிறது. அதேபோன்று மாவிட்டபுரம் சுருக்கமாக மாவை என்று அழைக்கப்படுகிறது. மாவிட்டபுரத்தை சேர்ந்தவர் என்பதால் சேனாதிராஜா தனது பெயருடன் முன்னிணைப்பாக மாவை என்ற சொல்லை சேர்த்துக் கொண்டார். அந்த கிராமத்தின் கந்தசுசாமி கடவுள் மாவை கந்தன் என்று அழைக்கப்படுவதை போன்று மாவை சேனாதிராஜாவும் மாவிட்டபுரத்தின் மிகவும் பிரபலமான பிரதிநிதியாகவும் விளங்குகிறார். பலர் அவரை எளிதாக சேனாதி, மாவை அல்லது மாவை அண்ணன் என்று அழைக்கிறார்கள்.

மாவை சேனாதிராஜாவை 40வருடங்களுக்கும் அதிகமாக நான் அறிவேன். கடந்த நூற்றாண்டில் 70களின் முற்பகுதியில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி பொது தராதர உயர்தர வகுப்பு மாணவனாக முதன்முதலாக அவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவருடன் நான் தனிப்பட்ட முறையில் தொடர்பு வைத்துக்கொள்ளவில்லை. சிறிமா பண்டாரநாயக்கவின் ஐக்கிய முன்னணி அரசாங்க காலத்தில் யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெருமளவு அமைதியின்மை ஏற்பட்ட நாட்கள் அவை. ஹர்த்தால்கள், பகிஷ்கரிப்புகள், ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள், மறியல் போராட்டங்கள், கறுப்புகொடி போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் என்று அந்தக் காலத்தில் பெருவாரியான அரசியல் போராட்டங்கள் நடைபெற்றன. அந்த போராட்டங்களில் முன்னணியிலிருந்து செயற்படும் இளைஞராக மாவை சேனாதிராஜா இருந்தார்.

அந்தக் காலகட்டத்தில் கைது செய்யப்பட்டு விசாரணை எதுவுமின்றி தடுத்துவைக்கப்பட்டிருந்த 42 இளைஞர் அணித் தலைவர்களில் சேனாதிராஜாவும் ஒருவர். வண்ணை ஆனந்தன் என்ற நமசிவாயம் ஆனந்த விநாயகம், காத்தமுத்து சிவானந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா என்ற சோமசுந்தரம் சேனாதிராஜா ஆகிய மூவரும் அரசியல் கைதியாக பல வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் மூவரும் அந்த நாட்களில் தமிழ் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற ‘தமிழ் அரசியல் நாயகர்களாக’ விளங்கினர்.

மண்டூர் மகேந்திரன்

அடுத்து வந்த வருடங்களில் நான் ஒரு பத்திரிகையாளராக வந்ததும் தமிழ் அரசியலில் பிரகாசிக்க தொடங்கியிருக்கும் ஒரு நட்சத்திரமாக இருந்த மாவை சேனாதிராஜாவை தனிப்பட்ட முறையிலும் தொழில்சார் அந்தஸ்திலும் பழகும் வாய்ப்பு கிடைத்தது. இவ்வருடம் காலமான எனது நெருங்கிய நண்பரும் முன்னாள் அரசியல் செயற்பாட்டாளருமான மண்டூர் மகேந்திரனே 1977ஆம் ஆண்டில் இளம் நிருபராக நான் வீரகேசரியில் இணைந்தபோது கொழும்பில் வைத்து மாவை சேனாதிராஜாவுக்கு முதன்முதலில் என்னை அறிமுகம் செய்துவைத்தார். அதற்கு பிறகு யாழ்ப்பாணம், மன்னார், கொழும்பு, மட்டக்களப்பு, சென்னை, டொரன்டோ போன்ற வேறுபட்ட இடங்களில் வேறுபட்ட நேரங்களில் அவரை சந்தித்திருக்கிறேன். ஒரு தமிழ் அரசியல் தலைவராக சேனாதிராஜா படிமுறை வளர்ச்சி கண்டதை நான் பல வருடங்களாக அவதானித்திருக்கிறேன். தவிரவும் சேனாதிராஜாவை போன்று எனது மனைவியும் மாவிட்டபுரத்தை சேர்ந்தவரே. அதனால் இத்தகைய பின்புலத்திலேயே 2020 பாராளுமன்றத் தேர்தலுக்கு பிறகு மாவையை பற்றியும் அவரது எதிர்கால பாதையை பற்றியும் நான் எழுதுகிறேன்.

2020 பாராளுமன்றத் தேர்தலின்போது பொதுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் குறிப்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சியும் உள்கட்சி பூசல்களினால் பாதிக்கப்பட்டிருந்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் நிலவிய உள்முரண்பாடு கூடுதல் விருப்பு வாக்குகளை பெறுவதற்கு ஒரே கட்சியின் பட்டியலில் இருக்கின்ற வேட்பாளர்களுக்கிடையிலான போட்டாப்போட்டியின் பின்புலத்திலேயே தோன்றியது. கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாண தேர்தல் மாவட்டம் 7பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்கின்றது. 2015 பொதுத்தேர்தலில் கூட்டமைப்பிலிருந்து 5பேர் தெரிவு செய்யப்பட்டனர். ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியிலிருந்து (ஈ.பி.டி.பி) ஒரு உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஒரு உறுப்பினரும் தெரிவு செய்யப்பட்டனர்.

2018 உள்ளுராட்சித் தேர்தல்களின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த வாக்குகளையும் 2015 பாராளுமன்றத் தேர்தலில் அதற்கு கிடைத்த வாக்குகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது காணப்பட்ட வீழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில், 2020 பாராளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்புக்கு 4ஆசனங்கள் மாத்திரமே யாழ்ப்பாண மாவட்டத்தில் கிடைக்கலாம் என்று அரசியல் அவதானிகள் அபிப்பிராயம் தெரிவித்தனர். இந்த எதிர்வு கூறல் சரியானதென்று நிரூபிக்கப்பட்டிருந்தால் 2015ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 5எம்.பி.க்களில் ஒருவர் மீண்டும் தெரிவுசெய்யப்படாமல் போயிருப்பார். 2015 தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 5கூட்டமைப்பு எம்.பி.க்கள் விருப்பு வாக்குகளின் ஒழுங்கில் எஸ்.சிறிதரன், எஸ்.சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன், த.சித்தார்த்தன், இ.சரவணபவன் ஆகியோரே ஆவர். இவர்களில் சித்தார்த்தன் புளொட்டை சேர்ந்தவராக இருந்த அதேவேளை ஏனைய 4பேரும் தமிழரசுக் கட்சியை சேர்ந்தவர்கள்.

தேர்தல் பிரசாரங்கள் தீவிரமடையத் தொடங்கியதும் தமிழரசுக் கட்சியை சேர்ந்த 4யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இரு முகாம்களாக பிளவுபட்டனர். ஒருபுறம் தமிழரசுக்கட்சியின் செயலாளர் சேனாதிராஜாவும் பத்திரிகை நிறுவன உரிமையாளர் சரவணபவனும் மறுபுறம் சிறிதரனும் சுமந்திரனும் அணிசேர்ந்து கொண்டனர். இருவரும் ஒரே கட்சியை சேர்ந்தபோதிலும் சரவணபவனின் பத்திரிகைகள் சுமந்திரனுக்கு எதிராக விஷமத்தனமான பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழரசுக் கட்சிக்குள் உள்ள பிரகிருதிகளினால் சுமந்திரன் விமர்சிக்கப்பட்டபோது அவரை பாதுகாத்து அவரின் எதிராளிகளை கண்டித்த கூட்டமைப்பின் ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனேயாவார். அதற்கு பிறகு சரவணபவனுக்கு சொந்தமான பத்திரிகைகளினால் சிறிதரனும் தாக்குதலுக்குள்ளாகினார்.

சரவணபவனின் ஊடகங்கள்

சுமந்திரனும் சிறிதரனும் முறையிட்டபோது கட்சித் தலைவரான மாவை சேனாதிராஜா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவை சேனாதிராஜாவும் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே போட்டியிட்டார். அவரை சரவணபவனின் பத்திரிகைகள் ஆதரித்தன. இருவருக்குமிடையே ஒரு கூட்டு ஏற்பட்டது. மறுபுறத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில் சுமந்திரனும் சிறிதரனும் கூட்டாக பிரசாரங்களில் ஈடுபட்டனர். முன்னுரிமை வாக்குகளுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்கட்சி போட்டாபோட்டி பிரதானமாக சுமந்திரன் – சிறிதரன் எதிர் சேனாதிராஜா – சரவணபவன் என்ற இரு இரட்டையர் அணிகளுக்கிடையிலானதாகவே இருந்தது.

முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது தமிழரசுக்கட்சியின் வீட்டுச் சின்னத்தின் கீழ் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் 7ஆசனங்களில் 3ஆசனங்களை பெற்றுக் கொண்டது. சிவஞானம் சிறிதரன் (35,884), மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன்(27,834) மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன்(23,840) ஆகியோரே விருப்பு வாக்குகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டவர்கள். திருமதி சசிகலா ரவிராஜ் (23,098) வாக்குகளை பெற்று நான்காவதாக வந்தார். சரவணபவனும் (20,392) சேனாதிராஜாவும் (20,388) ஐந்தாவதாகவும் ஆறாவதாகவும் வந்தார்கள். பிறகு ஊடகவியலாளர்களுடன் பேசிய சுமந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களில் தான் மூன்று தொகுதிகளில் முதலாவதாகவும் ஐந்து தொகுதிகளில் இரண்டாவதாகவும் மூன்று தொகுதிகளில் மூன்றாவதாகவும் வந்ததாக அறிவித்தார்.

இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய அம்சம் என்னவென்றால், சுமந்திரனும் சிறிதரனும் வெற்றிப் பெற்ற அதேவேளை, சேனாதிராஜாவும் சரவணபவனும் தோல்வி கண்டதாகும். எவ்வாறெனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டது. 2015 பெற்ற வாக்குகளுடன் ஒப்பிடும்போது இத்தடவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகள் மூன்றில் ஒரு பங்குக்கும் கூடுதலாக குறைவடைந்திருந்தன. 2015இல் கூட்டமைப்பு பெற்ற 515,963(4.62சதவீதம்) வாக்குகளிலிருந்து இப்போது 327,168(2.82சதவீதம்) வாக்குகளாக வீழ்ச்சி கண்டது. கூட்டமைப்பின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் 16இலிருந்து 10ஆக குறைந்தன. இவர்களில் 9பேர் தெரிவு செய்யப்பட்ட அதேவேளை, ஒருவர் தேசியப் பட்டியல் ஆசனத்துக்காக நியமிக்கப்பட்டவராவார். வடக்கில் கூட்டமைப்புக்கு 6ஆசனங்களும் கிழக்கில் 3ஆசனங்களும் கிடைத்தன. யாழ்ப்பாண மாவட்டத்திலும் வன்னி மாவட்டத்திலும் முறையே மூன்று எம்.பி.க்களாக 6எம்.பி.க்கள் தெரிவாகினர். மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட்டமைப்புக்கு இரு ஆசனங்களும் திருகோணமலையில் ஒரு ஆசனமும் கிடைத்தது. அம்பாறையில் / திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஒரு தமிழ் எம்.பி.யும் தெரிவு செய்யப்படவில்லை. கடந்த பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த எம்.பி.க்களில் 7எம்.பி.க்கள் தோல்வி கண்டனர். அவர்களில் முக்கியமானவர்களில் தமிழரசுக் கட்சியின் மாவை சேனாதிராஜாவும் ஒருவர்.

சிறிதரனும் சுமந்திரனும் தோல்விகண்ட தமிழரசுக் கட்சியின் தலைவரை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அவர்கள் மாவிட்டபுரத்தில் இருக்கும் அவரது வாசஸ்தலத்துக்கு தங்களது வாகனங்களில் சென்றனர். சேனாதிராஜாவுக்கு தங்களது கவலையை தெரிவித்த இருவரும் சரவணபவனுடனான கூட்டின் விளைவாகவே அவர் தோல்வியடைய வேண்டி வந்தது என்பதையும் அவர்கள் சொல்லி வைத்தனர். சுமந்திரனை தோற்கடிக்குமாறு சரவணபவனின் பத்திரிகைகள் வெளிப்படையாகவே மக்களை கேட்டபோது கட்சியின் தலைவர் அதை தடுக்கவில்லை என்று இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் குறை கூறினர். மேலும், சிறிதரனுக்கும் சுமந்திரனுக்கும் வாக்களிக்க வேண்டாம் என்று மக்களை வலியுறுத்தும் பெருந்தொகையான பிரசுரங்கள் அச்சிடப்பட்டு சரவணபவனின் கையாட்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்களினால் பரவலாக விநியோகிக்கப்பட்டது. செல்வாக்கு மிக்க தமிழ்க் கட்சியின் வேட்பாளர் ஒருவர் தனது சக வேட்பாளர்களுக்கு எதிராக வேலை செய்ததும் கட்சித் தலைவர் அதை தடுக்காததும் கட்சியை முழுவதுமாக பெரும் பாதிப்புக்குள்ளாக்கிவிட்டது என்று இந்த இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் சேனாதிராஜாவிடம் சுட்டிக் காட்டினர்.

சேனாதிராஜா கலையமுதன்

இந்த சம்பாசணைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், சிறிதரனின் சாரதி உள்ளே ஓடிவந்து சேனாதிராஜாவின் மகன் கலையமுதனும் அவரது நண்பர்களும் இரு பாராளுமன்ற உறுப்பினர்களது வாகனங்கள் அந்த வளாகத்துக்கு உள்ளே நிறுத்திவைக்கப்படக் கூடாது என்று கூறினர். அதனால் இரு சாரதிகளும் வாகனங்களை வெளியே கொண்டு சென்று நிறுத்தி வைத்தனர். இதைக் கேள்விப்பட்டதும் சேனாதிராஜா மகனை கண்டித்ததுடன் வீட்டு வளாகத்துக்குள் திருப்பி கொண்டுவந்து வாகனங்களை நிறுத்திவைக்க அனுமதிக்குமாறு சத்தமிட்டார். சிறிதரனின் வாகனம் உள்ளே கொண்டுவரப்பட்டது. ஆனால் சுமந்திரனின் சாரதி வாகனத்தை உள்ளே கொண்டு வருவதற்கு விரும்பவில்லை. அவர் கலையமுதனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ‘உங்களது அற்பத்தனமான நடத்தையின் காரணமாகவே உங்களது தந்தை தோல்வி கண்டார்’ என்று கலையமுதனுக்கு கூறினார்.

சேனாதிராஜாவின் மகனுக்கும் இரு எம்.பி.க்களினதும் சாரதிகளுக்கும் இடையில் நடந்த சம்பவம் கட்சித் தலைவருக்கும் அவர்களுக்கும் இடையிலான உறவுகள் சீர்கேடடைந்ததை துல்லியமாக வெளிக்காட்டின. சேனாதிராஜாவின் மகன் கலையமுதன் தகுதிவாய்ந்த பொறியியலாளர். அவர் பிரிட்டனில் வேலை செய்து கொண்டிருந்தார். அவர் சொந்த நாட்டுக்கு திரும்பி வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு தெரிவாகியதன் மூலம் அரசியலிலும் பிரவேசித்தார். கலையமுதன் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டத்தின் இளைஞர் அணியின் பொதுச் செயலாளராகவும் இருக்கிறார். கலையமுதனின் பிரவேசத்துக்கு பிறகுதான் சேனாதிராஜாவுக்கும் சுமந்திரனுக்குமான உறவுகளில் கசப்பு ஏற்பட ஆரம்பித்தது. கலையமுதன்தான் முதலில் சரவணபவனுடன் கூட்டுசேர்ந்த பிறகு தனது தந்தையாருக்கும் சரவணபவனுக்கும் இடையில் தோழமையை ஏற்படுத்தினார்.

தனக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கலையமுதனும் தமிழரசுக் கட்சியின் பொருளாளர் கனகசபாபதியும் யாழ்ப்பாண மக்களுக்கு கூறியதை நிரூபிக்கும் ஒளி-ஒலிப்பதிவு சான்றுகள் தன்னிடம் இருப்பதாக சுமந்திரன் பகிரங்கமாக கூறியதும் இங்கு கவனிக்கத்தக்கது. யாழ்ப்பாண மத்திய கல்லூரி வளாகத்துக்குள் இருந்த பிரதான வாக்கு எண்ணிக்கை நிலையத்தில் இடம்பெற்ற கும்பல் வன்முறை பற்றி கடந்தவாரம் நான் எழுதியிருந்தேன். இந்த கும்பல்களை தூண்டிவிடுவதில் கலையமுதனும் சம்பந்தப்பட்டிருந்தார். ஆனால் வளாகத்துக்குள் அத்துமீறி பிரவேசிக்க முற்பட்ட கும்பல்களிலிருந்து தன்னை தூரவிலக்கி கொண்டார். அந்த வாக்கு எண்ணிக்கை நிலையத்தில் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அந்த வன்முறையை அடக்க பொலிஸ் கலகமடக்கும் படையையும் விசேட அதிரடிப்படையையும் வரவழைத்தார். அந்த கும்பல் வன்முறைக்கு பொறுப்பாக முன்னிலையில் இருந்து செயற்பட்ட பேர்வழிகள் விசேட அதிரடிப்படையினரால் கட்டுப்படுத்தப்பட்ட அதேவேளை, தடியடி பிரயோகத்தினால் கும்பல்கள் சிதறி ஓடின.

இந்த அமளியில் சேனாதிராஜாவின் மகனும் காயமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அவர் விசேட அதிரடிப்படையினால் தாக்கப்பட்டதாக யாழ்ப்பாணத்திலுள்ள மனிதவுரிமை அலுவலகத்தில் அவரின் நண்பரான உள்ளுராட்சி மன்ற உறுப்பினரான நாவலன் என்பவர் முறைப்பாடு ஒன்றை செய்தார். நேரடியாக தான் முறையிடுவதை தவிர்த்த கலையமுதன் நாவலனை தூண்டி அவ்வாறு செய்தார் என்று நம்பப்படுகிறது.

விஷமத்தனம்

தமிழ் ஊடகங்களிலுள்ள சில விஷமத்தனமான பேர்வழிகள் தமிழரசுக் கட்சித் தலைவருக்கும் இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் பிளவு மேலும் ஆளமாவதற்கு உதவினார்கள். தமிழரசுக் கட்சியின் தலைமையில் மாற்றம் தேவைப்படுகின்றதா என்று பத்திரிகையாளர் மாநாடொன்றில் சிறிதரனிடம் கேட்கப்பட்டபோது அது அவசியமானதல்ல என்று அவர் பதிலளித்தார். நீங்கள் தமிழரசுக் கட்சியின் தலைவராக விரும்புகிறீர்களா? என்று சிறிதரனிடம் கேட்கப்பட்டபோது கட்சி ஐக்கியப்பட்டு அந்த பதவியை எனக்கு தந்தால் ஏற்றுக்கொள்ளத் தயார் என்று பதிலளித்தார். அவரின் இந்த பதில் தவறான முறையில் தமிழ்ப் பத்திரிகைகளில் பிரசுரமாகின. தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக வரவிரும்புவதற்கு சிறிதரன் விரும்புகிறார் என்று அந்த பத்திரிகைகளின் செய்திகளில் கூறப்பட்டிருந்தது.

வேறொரு பத்திரிகையாளர் சந்திப்பில் சுமந்திரனிடம் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் அவசியமா? என்று கேட்கப்பட்டது. அவரின் பதில் எதிர்மறையானதாகவே இருந்தது. ஆனால், தேர்தல் முடிவுகள் குறித்து ஆராய்ந்து பின்னடைவுகளுக்கான காரணங்களை இனங்காண வேண்டியதேவை கட்சிக்கு இருக்கிறது என்று கூறினார். தமிழரசுக் கட்சியின் தலைவர் சேனாதிராஜா யாழ்ப்பாணத்திலும் பொதுச்செயலாளர் துரைராஜசிங்கம் மட்டக்களப்பிலும் படுமோசமாக தோல்வியடைந்திருக்கிறார்கள் என்று சுமந்திரன் சுட்டிக் காட்டினார். அடுத்து அவரிடம் தமிழரசுக் கட்சியின் தலைவராக சிறிதரன் நியமிக்கப்படுவதை ஆதரிப்பீர்களா? என்று கேட்கப்பட்டது. சிறிதரனை தலைவராக்கும் விருப்பம் கட்சிக்கு இருந்தால் அதனுடன் ஒத்துப்போக தானும் தயார் என்று அவதானமாக பதிலளித்தார். மீண்டும் தமிழ் ஊடகங்கள் அதை தவறான செய்தியாகவே வெளியிட்டன. சிறிதரன் தமிழரசுக் கட்சியின் தலைவராக்கப்படுவதை சுமந்திரன் விரும்புகிறார் என்று பத்திரிகைகள் கூறின.

இந்த பத்திரிகையாளர் மாநாடு பற்றிய செய்திகளை பத்திரிகைகள் வெளியிட்ட விதம் சேனாதிராஜாவுக்கும் சுமந்திரன் – சிறிதரன் இரட்டையருக்கிடையில் பிளவை மேலும் அகலமாக்க மாத்திரமே உதவியது. இரண்டு வெற்றிப்பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களும் தோல்விகண்ட சேனாதிராஜாவை பதம் பார்க்க நாட்டம் கொண்டிருக்கிறார்கள் என்றவாறு ஒரு அபிப்பிராயத்தை சமூக ஊடகங்கள் பரப்பின. பிறகு தேசியப்பட்டியல் எம்.பி விவகாரம் வந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 9ஆசனங்களுக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. கூட்டமைப்பு மொத்தமாக பெற்ற வாக்குகளின் விளைவாக ஒரு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரை நியமிப்பதற்கு அதற்கு வாய்ப்பு கிட்டியது. முன்னதாக கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் சம்பந்தன் தான் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்றும் தேசியப் பட்டியல் ஊடாக நியமிக்கப்படுவதையே விரும்புவதாகவும் கூறியிருந்தார். மிகவும் வயது முதிர்ந்தவரான திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் தேர்தல் பிரசாரங்களின் போது ஏற்படக்கூடிய அலைச்சலையும் கஷ்டங்களையும் தன்னால் தாங்கிக் கொள்ள முடியாது என்று கூறினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மற்றவர்கள் திகைப்படைந்தார்கள். அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டத்தில் சம்பந்தனை தவிர வேறு எவரும் வெற்றிபெற முடியாது என்று அவர்கள் உணர்ந்தனர்.

அதையடுத்து சம்பந்தன் தனது நிலைப்பாட்டை தளர்த்தி தேர்தலில் போட்டியிட முன்வந்தார். ஆனால், ஒரு நிபந்தனையை விதித்தார். தன்னுடன் சேர்ந்து கூட்டமைப்பின் வேட்பாளராக போட்டியிடவிருக்கும் கதிரவேலு சண்முகம் குகதாசன் தேசியப்பட்டியலூடாக நியமிக்கப்பட வேண்டும் என்று சம்பந்தன் விரும்பினார். நீண்டகாலமாக கனடாவில் வசித்துவந்த குகதாசன் இலங்கைக்கு நிரந்தரமாக திரும்பி தனது கனேடிய குடியுரிமையை கைவிட்டார். திருகோணமலையில் திரியாய் பகுதியை சேர்ந்தவரான குகதாசன் சம்பந்தனுக்கு பெரும் உதவியாக இருந்ததுடன் கட்சிக் கிளைகளை மீளவும் ஒழுங்கமைத்தார். கூட்டமைப்பின் வேட்பாளர் நியமனக்குழுவும் தேர்தலுக்கு பிறகு குகதாசனை பாராளுமன்ற உறுப்பினராக நியமிப்பதற்கு இணங்கிக் கொண்டது.

அம்பாறை மாவட்டம்

இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்தை மட்டுமே பெற்றிருந்த நிலையில் அதற்கு குகதாசனே நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், திடீர் சிக்கல் ஏற்பட்டது. அம்பாறை / திகாமடுல்ல தேர்தல் மாவட்டம் தமிழ் எம்.பி. ஒருவரை தெரிவு செய்ய தவறிவிட்டது. அந்த மாவட்டத்தில் 19சதவீதத்தினராக தமிழர்கள் இன ரீதியான சனத்தொகையில் மூன்றாவதாக வருகின்றனர். மேலும், பெரும்பாலான தமிழ்ப் பகுதிகள் அபிவிருத்தி குன்றியவையாக இருக்கின்றன. அதனால் தமிழ் மக்களின் நலன்களை கவனிப்பதற்கு ஒரு எம்.பி. அவசியமானது.

இதேவேளை, தேசியப்பட்டியல் ஆசனத்துக்கான எம்.பி.யை விரைவாக தெரிவு செய்து நியமிக்குமாறு தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கே.துரைராஜசிங்கத்தை தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டது. இதையடுத்து சம்பந்தனின் வாசஸ்தலத்தில் அவசரமாக கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டது. துரைராஜசிங்கம், சுமந்திரன், குகதாசன் ஆகியோர் பங்கேற்றனர். முறைப்படி தனக்கே உரித்தாகியிருக்க வேண்டிய தேசியப் பட்டியல் ஆசனத்தை விட்டுக்கொடுக்க பெருந்தன்மையுடன் குகதாசன் இணங்கினார். தமிழரசுக் கட்சியை சேர்ந்த தேர்தலில் தோல்விகண்ட வேட்பாளரான தவராசா கலையரசனை தேசியப் பட்டியல் எம்.பி.யாக நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. கலையரசன் தமிழரசுக் கட்சியின் ஒரு தீவிர செயற்பாட்டாளர். நாவிதன்வெளி பிரதேச சபையின் தலைவராக இருந்தார். எனவே திகாமடுல்ல மாவட்டத்துக்கு ஒரு தமிழ் எம்.பி.யை வழங்குவதற்காக கலையரசன் நியமிக்கப்பட்டார். அந்த நியமனம் தொடர்பான ஆவணங்களை தயாரித்து அனுப்பும் பணியை துரைராஜசிங்கம் செய்தார். வர்த்தமானியில் கலையரசன் பாராளுமன்ற உறுப்பினராக அறிவிக்கப்பட்டார்.

ஆனால், தமிழரசுக் கட்சித் தலைவர் சேனாதிராஜாவுக்கு வேறு சிந்தனை இருந்தது. கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட கிளையினால் அவசர அவசரமாக கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டு தேர்தலில் தோல்விகண்ட தலைவர் மாவை சேனாதிராஜாவை தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்க வலியுறுத்தும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. சேனாதிராஜாவின் வலது கரமாகவும் இடது கரமாகவும் கருதப்படுகின்ற வடமாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானமும் கட்சியின் யாழ்ப்பாண கிளையின் தலைவர் கனகசபாபதியும் மாவை சேனாதிராஜாவை நியமிக்க கோரும் தங்களது தீர்மானத்துடன் திருகோணமலைக்கு சென்றனர். தன்னை நியமிக்குமாறு சம்பந்தனையும் துரைராஜசிங்கத்தையும் வலியுறுத்தி சேனாதிராஜா தொலைபேசியில் பேசினார். பாராளுமன்ற உறுப்பினராவதற்கு தான் விரும்பவில்லை என்றும் ஆனால், தான் எம்.பி.யாவதை விரும்புகின்ற கட்சியின் உறுப்பினர்களின் விருப்பத்துக்கு தலைபணிய வேண்டியிருப்பதாகவும் சேனாதிராஜா கூறினார். அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விரும்புகிறார் என்பது தெரிய வருகிறது. ஆனால், அவரின் முயற்சிகள் பயனளிக்கவில்லை.

நாலு கட்சி கூட்டணி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2015ஆம் ஆண்டில் ஒரு நான்கு கட்சி கூட்டணியாக இருந்தது. அந்தத் தேர்தலில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் (ஈ.பி.ஆர்.எல்.எப்.) கூட்டமைப்பின் ஒரு அங்கமாக இருந்தது. 2015 பொதுத்தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் பாராளுமன்றத்துக்கு தெரிவாகவில்லை. கூட்டமைப்புக்கு அப்போது கிடைத்த இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்களில் ஒன்றுக்கு தன்னை நியமிக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், அது தமிழரசுக் கட்சி, ரெலோ மற்றும் புளொட் தலைவர்களினால் நிராகரிக்கப்பட்டது. தோற்கடிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றத்துக்கு நியமிப்பதென்பது விரும்பத்தகாத ஒரு நடைமுறை என்று அவர்கள் அபிப்பிராயம் தெரிவித்தனர். மேலும் கட்சித் தலைவர்கள் நியமன எம்.பி.க்களாக வராமல் இருப்பதன் மூலமாக ஒரு முன்மாதிரியாக நடக்க வேண்டும் என்று கருதப்பட்டது. இறுதியில் அவரது கட்சி கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது.

இந்த சூழ்நிலைகளின் கீழ் தோற்கடிக்கப்பட்ட தமிழரசுக் கட்சித் தலைவர் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்க முடியாது. தவிரவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் ஆதரவை பெருமளவில் இழந்தநிலையில், 25வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்து சலுகைகளையும் வரப்பிரசாதங்களையும் அனுபவித்த வடமாகாணத்தை சேர்ந்த ஒருவருக்கு அனுகூலமான முறையில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒருவர் பாராளுமன்றத்துக்கு நியமிக்கப்படக்கூடிய வாய்ப்பை இல்லாமல் செய்யும் நடவடிக்கை அரசியல் தற்கொலைக்கு சமமானதாக இருந்திருக்கும்.

பாராளுமன்ற உறுப்பினர் பதவி சேனாதிராஜாவுக்கு மறுக்கப்பட்ட நிலையில், கடுமையாக ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றார். ஆகஸ்ட் 15ஆம் திகதி சம்பந்தனின் திருகோணமலை வாசஸ்தலத்தில் 9உறுப்பினர்களை கொண்ட அரசியல் குழு கூடியபோது தமிழரசுக் கட்சியின் தலைவர் இந்தப் பிரச்சினையை கிளப்பினார். ஆனால், பாராளுமன்ற உறுப்பினர் நியமிப்பதில் சரியான நடைமுறையை கடைபிடிக்கவில்லை என்பதற்காக கட்சியின் பொதுச் செயலாளர் துரைராஜசிங்கத்தை அவர் திட்டித் தீர்க்க தொடங்கினார். இந்த விவகாரம் மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு தீர்மானத்தை எடுத்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார். கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளான ரெலோவுடனும் புளொட்டுடனும் கலந்தாலோசனை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறினார். ஆனால், தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவில் பெரும்பான்மையானவர்கள் சேனாதிராஜாவை ஆதரிக்கவில்லை. தேசியப் பட்டியல் நியமனப் பிரச்சினை வவுனியாவில் ஆகஸ்ட் 29ஆம் திகதி கூடவிருக்கும் மத்திய செயற்குழுவில் ஆராய்வுக்கு எடுக்கப்படும் என்று கட்சியின் தலைவர் கூறினார்.

கூட்டமைப்பின் ஏனைய அங்கத்துவக் கட்சிகளும் இந்த பிரச்சினையில் சேனாதிராஜா சார்பில் முண்டியடித்துக் கொண்டு தலையிட்டார்கள். கொழும்பில் ஆகஸ்ட் 22ஆம் திகதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூடும்போது எம்.பி. நியமனம் தொடர்பான பிரச்சினையை கிளப்பப்போவதாக ரெலோ தலைவர் அடைக்கலநாதனும் புளொட் தலைவர் சித்தார்த்தனும் ஊடகங்களுக்கு கூறினார்கள். கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து சம்பந்தனையும் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியிலிருந்து சுமந்திரனையும் நீக்குவதற்கான கோரிக்கையையும் புளொட்டும் ரெலோவும் முன்வைக்கும் என்றும் கூடவே செய்திகள் தெரிவித்தன. சேனாதிராஜாவும் அந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவிருந்தார்.

கட்சிக்குள் தனது எதிரிகள் என்று தான் நினைக்கின்றவர்கள் மீது தாக்குதல் தொடுக்க தமிழரசுக் கட்சியின் தலைவர் சேனாதிராஜா உறுதி பூண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. சரவணபவன், சி.வி.கே.சிவஞானம் போன்றவர்களினாலும் மகன் கலையமுதனினாலும் இந்த பாதையில் சேனாதிராஜா ஊக்குவிக்கப்படக்கூடியது பெரிதும் சாத்தியம். அதேவேளை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவனுக்கு எதிராகவும் யாழ்ப்பாண மத்திய கல்லூரி வளாகத்தில் காடைத்தனத்தில் ஈடுபட்ட தமிழரசுக் கட்சியின் வேறு உறுப்பினர்களுக்கும் எதிராக தமிழரசுக் கட்சியின் தலைவரை கொண்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வைக்கும் தங்களது முயற்சிகளை சுமந்திரன் – சிறிதரன் இரட்டையர் தொடர்ந்து முயற்சிகளில் விடாபிடியாக ஈடுபடுவது சாத்தியம். கும்பலின் வன்செயல் பற்றிய சான்றுடனான இறுவட்டு ஒன்றை சேனாதிராஜாவுக்கு சிறிதரன் கையளித்திருந்தார். தனக்கு எதிரான சரவணபவனின் நடவடிக்கையின் விபரங்களுடன் கூடிய எழுத்துமூல முறைப்பாடொன்றையும் கொடுத்த சிறிதரன் அவரை தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். சுமந்திரனும், வன்னி மாவட்ட வேட்பாளர் டாக்டர் பி.சத்தியலிங்கம் போன்ற வேறுபலரும் சரவணபவனை கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவளிப்பது சாத்தியம். சத்தியலிங்கமும் சரவணபவனின் பத்திரிகைகளினால் தாக்கப்பட்டிருந்தார். அவரும் சிறிதரன் போன்று முறைப்பாட்டை கையளித்து அவரை வெளியேற்ற வேண்டும் என்று கோருவார்.

அனல் பறப்பது நிச்சயம்

ஆகஸ்ட் 29 வவுனியாவில் நடைபெறவிருக்கும் 52உறுப்பினர்களை கொண்ட மத்திய செயற்குழுவின் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கத்துக்கும் ஏனையவர்களுக்கும் எதிராக சேனாதிராஜா குற்றச்சாட்டுகளை சுமத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்தகைய ஒரு சூழ்நிலையில் சிறிதரன் மற்றும் சுமந்திரன் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தரப்பு நிலைப்பாடுகளை சான்றுகளுடன் முன்வைப்பதும் சாத்தியம். அவ்வாறு நடந்த கூட்டத்தில் அனல் பறப்பது சாத்தியமானால் தமிழரசுக் கட்சியின் தலைவர் அசௌகரியமான நிலைக்கு தள்ளப்படுவார்.

மாவை சேனாதிராஜா மிகுந்த பொறுப்புணர்வுடன் செயற்படுவார் என்றும் அவசரமாக தவறுகளை திருத்திக் கொள்ளக்கூடிய அணுகுமுறையை கடைபிடிப்பார் என்றும் அவரின் நீண்ட காலமாக தெரிந்தவர் என்ற முறையிலும் இலங்கை தமிழ் மக்களின் நலன்களை மனதில் கொண்ட ஒருவன் என்ற வகையிலும் நான் பெரிதும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன். அதேபோன்று சுமந்திரன் சிறிதரன் போன்றவர்களும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற பிரதான அரசியல் இயக்கமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரதூரமான பேரிடருக்கு உள்ளாவதை தடுப்பதற்கு மிகுந்த கட்டுப்பாட்டுடனும் விவேகத்துடனும் செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆங்கில மூலம் : டெய்லி மிரர்
தமிழ் மொழி பெயர்ப்பு – வீ. தனபாலசிங்கம்
நன்றி – வீரகேசரி