இலங்கை தமிழர் அரசியலின் சமகால வரலாற்றில் தீர்க்கமான நிகழ்வுகள் நிறைந்த காலகட்டத்தை உள்ளடக்கிய இராஜவரோதயம் சம்பந்தனின் அரசியல் பயணம்


டி.பி.எஸ். ஜெயராஜ்

முதுபெரும் தமிழ் அரசியல் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் இறுதிச் சடங்குகள் திருகோணமலையில் 2024 ஜூலை 7 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. 32 வருடங்களாக திருகோணமலையின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த தலைவருக்கு பெருந்திரளான மக்கள் பிரியாவிடை கொடுத்தனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் திருகோணமலைக்கு சென்று இறுதிசடங்குகளில் கலந்துகொண்டார். முன்னதாக கொழும்பு பொரளை றேமண்ட் மலர்ச்சாலையில் சம்பந்தனின் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தபோது ஜனாதிபதி தனது மனைவி மைத்ரி விக்கிரமசிங்க சகிதம் சென்று தனது இறுதி மரியாதையைச் செலுத்தினார்.

இராஜவரோதயம் சம்பந்தனின் மறைவு ‘ ஒரு யுகத்தின் முடிவு ‘ என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது அனுதாபச் செய்தியில் வர்ணித்திருந்தார். ஏழு தசாப்தங்களுக்கும் அதிகமான கால நீட்சியைக்கொண்ட சம்பந்தனின் அரசியல் பயணம் இலங்கை தமிழர்களின் சமகால அரசியல் வரலாற்றில் தீர்க்கமான நிகழ்வுகள் நிறைந்த ஒரு காலகட்டத்தை தழுவியதாக அமைந்தது. கடந்தவாரம் வெளியான இந்த கட்டுரையின் முதற்பகுதி அவரின் அரசியல் பயணத்தின் முதல் கட்டங்களை சுருக்கமாக கூறியது.இரண்டாவதும் இறுதியுமான இந்த பகுதி அவரின் பிற்கால அரசியல் பயணத்தை எடுத்தியம்புகிறது.

ஏற்கெனவே குறிப்பிடப்பட்டதைப் போன்று தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் மதிப்புக்குரிய தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகமே 1977 பொதுத் தேர்தலில் சம்பந்தன் திருகோணமலை தொகுதியில் போட்டியிடவேண்டும் என்று விரும்பினார். தேர்தலுக்கு சில மாதங்கள் முன்னதாக சம்பந்தனுடனும் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்துடனும் நடத்திய ஒரு சந்திப்பில் செல்வநாயகம் திருகோணமலைக்கான இந்த ஏற்பாட்டை பூர்த்தி செய்தார். அவர் 1977 ஏப்ரிலில் காலமானார். 1977 ஜூலைக்கான பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது அமிர்தலிங்கமே தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார்.


தங்கத்துரை

நியமனப்பத்திரம் தாக்கலுக்கான தினம் நெருங்கிக்கொண்டிருந்த வேளையில் சம்பந்தனின் வேட்பாளர் நியமனம் தொடர்பில் இரு பிரச்சினைகள் கிளம்பின. முன்னர் திருகோணமலை மாவட்டம் திருகோணமலை, மூதூர் என்று இரு தேர்தல் தொகுதிகளைக் கொண்டதாக இருந்தது. தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட திருகோணமலை ஒரு உறுப்பினர் தொகுதியாக இருந்த அதேவேளை முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட மூதூர் இரட்டை அங்கத்தவர் தொகுதியாக இருந்தது. அந்த தொகுதியில் இருந்து ஒரு முஸ்லிமும் ஒரு தமிழரும் பாராளுமன்றத்துக்கு தெரிவாகினர். 1970 மே பொதுத்தேர்தலில் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினராக இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் பி.நேமிநாதன் தெரிவானார். மூதூர் தொகுதியில் இருந்து முதலாவது உறுப்பினராக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த ஏ.எல். அப்துல் மஜீதும் இரண்டாவது உறுப்பினராக தமிழரசு கட்சியைச் சேர்ந்த அ. தங்கத்துரையும் தெரிவாகினர்.

1976 ஆம் ஆண்டில் புதிய அரசியல் அணியான தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் பிரதம அங்கத்துவக் கட்சியாக தமிழரசு கட்சி விளங்கியது. திருகோணமலை மாவட்டம் 1977 பொதுத்தேர்தலுக்காக திருகோணமலை மாவட்டம் திருகோணமலை, மூதூர், சேருவில என்று மூன்று தொகுதிகளாக மீள் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு பிரிக்கப்பட்டது. சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்வதற்காகவே சேருவில தொகுதி உருவாக்கப்பட்டது. திருகோணமலை தொகுதியும் மூதூர் தொகுதியும் தமிழர்களையும் முஸ்லிம்களையும் பெரும்பான்மைாகக் கொண்டவை. மூதூர் அதற்கு பிறகு இரட்டை அங்கத்தவர் தொகுதியாக இல்லை. அவ்வாறாக திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இரண்டில் இருந்து ஒன்றாகக் குறைக்கப்பட்டது. அப்போதைய மூதூர் இரண்டாவது உறுப்பினர் தங்கத்துரை போட்டியிடுவதற்கு தொகுதி இருக்கவில்லை.

அத்தகைய ஒரு சூழ்நிலையில் தங்கத்துரையின் ஆதரவாளர்கள் திருகோணமலை தொகுதிக்கான தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் வேட்பாளராக அவரை நியமிக்கவேண்டும் என்று விரும்பினர். திருகோணமலையில் உள்ள தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் ஆதரவாளர்களும் தங்கத்துரையை விரும்பினர். இதன் விளைவாக சம்பந்தன் வேட்பாளராக நியமாக்கப்படுவதை கூட்டணியின் சில பிரிவினர் ஆட்சேபிக்கும் நிலை உருவானது. தங்கத்துரைக்கு ஆதரவாக பல ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றன. ஆனால் அமிர்தலிங்கம் உறுதியாக இருந்தார். தங்கத்துரையின் ஆதரவாளர்களின் கடுமையான விமர்சனத்தை எதிர்நோக்கிய போதிலும் காலஞ்சென்ற தலைவர் செல்வநாயகத்துக்கு வழங்கிய உறுதிமொழியை காப்பாற்றுவதில் அமிர்தலிங்கம் உறுதியாக இருந்தார்.


நவரத்தினராஜா

திருகோணமலை வேட்பாளராக சம்பந்தன் நியமிக்கப்பட்டார். அவரைப் பொறுத்தவரை உட்கட்சி பிரச்சினை முடிவுக்கு வந்தபோதிலும் வெளியில் இருந்து இன்னொரு பிரச்சினையை எதிர்நோக்கினார். திருகோணமலை தொகுதி 1977 ஆம் ஆண்டில் ஏறத்தாழ 56 சதவீத தமிழர்களையும் 23 சதவீத சிங்களவர்களையும் 18 சதவீத முஸ்லிம்களையும் கொண்டதாக இருந்தது. ஐக்கிய தேசிய கட்சி நன்கு பிரபல்யமான சட்டத்தரணி வீ.ஆர். நவரத்தினராஜாவை அதன் வேட்பாளராக களமிறக்கியது. ஐ.தே க வின் முக்கியஸ்தரும் கல்குடா பாராளுமன்ற உறுப்பினருமான கே.டபிள்யூ. தேவநாயகத்தின் நெருங்கிய உறவினரான நவரத்தினராஜாவுக்கு திருகோணமலையில் தமிழர்கள் மத்தியிலும் சிங்களவர்கள் மத்தியிலும் கணிசமான ஆதரவு இருந்தது.

மூன்றாவது தமிழ் வேட்பாளர் ஒருவர் களமிறங்கும் சாத்தியம் இல்லையானால் நவரத்தினராஜாவை தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் வேட்பாளர் வெற்றிகொள்வதை உறுதிப்படுத்த தமிழ்த்தேசியவாத வாக்கு வங்கி போதுமானதாக இருந்திருக்கும். செல்லையா கோடீஸ்வரன் தமிழர் அரசியலில் மிகவும் பிரபல்யமான ஒரு பிரமுகர். எழுதுவனைஞர் சேவையின் ஒரு உறுப்பினராக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கொன்றில் தனிச்சிங்களச் சட்டத்தின் சட்டபூர்வத்தன்மையை சவாலுக்கு உட்படுத்தியவர் கோடீஸ்வரன். பிறிவி கவுன்சில் வரை சென்று அந்த வழக்கில் தனக்கு சாதகமான தீர்ப்பை அவர் பெற்றார்.

அரசாங்க சேவையில் இருந்து முன்கூட்டியே ஓய்வுபெற்ற கோடீஸ்வரன் பிறகு ஒரு சட்டத்தரணியாக வந்து திருகோணமலையில் சட்டத்தொழிலில் ஈடுபட்டார். அவர் முன்னாள் ஊர்காவற்றுறை பாராளுமன்ற உறுப்பினர் வி. நவரத்தினம் தாபித்த தமிழர் சுயாட்சி கழகத்தின் ஒரு தீவிரமான உறுப்பினர். அவரும் 1977 பொதுத் தேர்தலில் திருகோணமலையில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடத் திட்டமிட்டிருந்தார். சம்பந்தன், கோடீஸ்வரன், நவரத்தினராஜா ஆகியோருக்கு இடையில் மும்முனைப் போட்டி ஏற்பட்டிருந்தால் தமிழ்த்தேசியவாத வாக்குகள் சம்பந்தனுக்கும் கோடீஸ்வரனுக்கும் இடையே பிளவடைந்திருக்கும். இது ஐ.தே.க.வின் வேட்பாளர் நவரத்தினராஜாவின் வெற்றியில் முடிவடைந்திருக்கவும் கூடும்.

ஆனால், தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதற்கு கோடீஸ்வரனை இணங்கவைக்க சம்பந்தன் திருக்கோணேஸ்வரம் கோவில் பரிபாலனக்குழு உறுப்பினர்கள் உட்பட திருகோணமலையின் தமிழ்ச் சமூகத்தில் உள்ள முக்கியஸ்தர்களின் உதவியை நாடினார். அவரின் முயற்சி வெற்றிகரமானதாக அமைந்தது. தமிழர்களின் ஐக்கியத்தின் நலன்களுக்காக கோடீஸ்வரன் தேர்தலில் போட்டியிடவில்லை. தேர்தலில் சம்பந்தன் தனது நெருங்கிய போட்டியாளரான நவரத்தினராஜாவை 3321 பெரும்பான்மை வாக்குகளினால் தோற்கடித்தார். சம்பந்தனுக்கு 15,144 வாக்குகளும் நவரத்தினராஜாவுக்கு 11,823 வாக்குகளுமஎ கிடைத்தன.

சட்டத்துறையில் இருந்து அரசியலுக்கு

ஏற்கெனவே கூறப்பட்டதைப் போன்று, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது சம்பந்தன் வெற்றிகரமான ஒரு சட்டத்தரணியாக பெரும் பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தார். தனது தேர்தல் நேரத்தில் சுமார் 700 வழக்குகளைக் கையாண்டு கொண்டிருந்ததாக ஒரு நேர்காணலில் சம்பந்தனே கூறினார். பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானதும் அவர் தனது சட்டத்துறை வாழ்வை முடித்துக்கொண்டார். தனது வழக்குகளையும் கட்சிக்காரர்களையும் அவர் தனது சகோதரருக்கும் மற்றைய சட்டத்தரணிகளுக்கும் கையளித்தார். அதற்கு பிறகு சம்பந்தன் முழுநேர அரசியல்வாதியாக மாறினார்.

தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி 1977 பொதுத் தேர்தலில் 18 ஆசனங்களை கைப்பற்றியது. அமிர்தலிங்கம பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவரானார். மூத்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு புறம்பாக மூன்று ‘ புதியவர்கள்’ தங்களது பாராளுமன்ற செயற்பாடுகள் மூலமாக சகாக்களினதும் மக்களினதும் ஊடகங்களினதும் கவனத்தை பெரிதாக ஈர்த்தனர். மன்னார் பாராளுமன்ற உறுப்பினர் சூசைதாசன், யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் ஆகியோரே அவர்கள்.

மாவட்ட அபிவிருத்திச்சபை தேர்தல்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான தேர்தல்கள் 1981 ஜூனில் நடைபெற்றன. மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தல்களை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பகிஷ்கரித்ததை அடுத்து சிங்களவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டங்களில் பெரு வெற்றியைப் பெறுவது ஐ.தே க.வுக்கு மிகவும் சுலபமானதாக இருந்தது. தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி அமோக ஆதரவைக் கொண்டிருந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களின் மாவட்டங்களில் நிலைவரம் வித்தியாசமானதாக இருந்தது. அந்த மாவட்டங்களில் ஐ.தே.க. தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியை எதிர்த்துப் போட்டியிட்டது. அம்பாறை மாவட்டத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் சிங்களவர்களும் முஸ்லிம்களும் சேர்ந்து தமிழர்களை விடவும் எண்ணிக்கையில் அதிகமானவர்களாக இருந்ததால் அவற்றில் வெற்றிபெற முடியும் என்று ஐ தே.க. நம்பிக்கை கொண்டிருந்தது.

ஐக்கிய தேசிய கட்சி அம்பாறை மாவட்டத்தில் வெற்றிபெற்றது. ஆனால் திருகோணமலை மாவட்டத்தில் அது தோற்கடிக்கப்பட்டது. முன்னாள் மூதூர் பாராளுமன்ற உறுப்பினர் தங்கத்துரையை திருகோணமலை மாவட்டத்தில் பிரதம வேட்பாளராக தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி களமிறக்கியது. கடந்த காலத்தின் பழைய கசப்பான நினைவுகளை புறமொதுக்கிவிட்டு சம்பந்தன் தனது கட்சிக்காக தீவிரமாகப் பிரசாரம் செய்தார். மேலும் மூதூரின் முன்னாள் சுதந்திர கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஅப்துல் மஜீது கிண்ணியாவில் உள்ள தனது முஸ்லிம் ஆதரவாளர்களை தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணிக்கு வாக்களிக்கச் செய்து தங்கத்துரைக்கு உதவினார். திருகோணமலை மாவட்ட அபிவிருத்திச்சபை தலைவராக தங்கத்துரை தெரிவானார்.

1982 அக்டோபர் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன மீண்டும் தெரிவாவதற்காக போட்டியிட்டார். சுதந்திர கட்சியின் வேட்பாளர் ஹெக்டர் கொப்பேகடுவ. கலாநிதி கொல்வின் ஆர் த சில்வா(லங்கா சமசமாஜ கட்சி), றோஹண விஜேவீர ( ஜனதா விமுக்தி பெரமுன ), குமார் பொன்னம்பலம் ( அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ), வாசுதேவ நாணயக்கார ( நவசமசமாஜ கட்சி ) ஆகியோர் ஏனைய வேட்பாளர்கள். ஜனாதிபதி தேர்தலில் நடுநிலையாக இருக்கப்போவதாக தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி உத்தியோகபூர்வமாக அறிவித்தது. ஆனால், சூசைதாசனும் சம்பந்தனும் ஜெயவர்தனவை அந்தரங்கமாக ஆதரித்த அதேவேளை தர்மலிங்கம், யோகேஸ்வரன் மற்றும் ஆலாலசுந்தரம் ஆகியோர் மறைமுகமாக கொப்பேகடுவவை ஆதரித்தனர். நன்கு தெரிந்தது போன்றே ஜெயவர்தன வெற்றி பெற்றார்.


கறுப்பு ஜூலை

அந்த வெற்றிக்கு பிறகு பல மாதங்கள் கழித்து ‘கறுப்பு ஜூலை’ வெடித்தது. ஐ.தே க.வின் முக்கியமான அமைச்சர்களின் ஆதரவுடன் தமிழர்களுக்கு எதிராக இலங்கை பூராவும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. பெரும் எண்ணிக்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். காயமடைந்தார்கள். அவர்களது சொத்துக்கள் சூறையாடப்பட்டு நிர்மூலஞ்செய்யப்பட்டன. ஆயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்தனர். பல தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கினர்.

வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட பிறகு ஐ. தே.க. அரசாங்கம் அரசியலமைப்புக்கான ஆறாவது திருத்தத்தை நிறைவேற்றியது. பிரிவினை கோருவதை தடைசெய்த அந்த திருத்தம் பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பதற்கு தகுதிபெற சகல உறுப்பினர்களும் பிரிவினைக்கு எதிராக சத்தியப்பிரமாணம் செய்யவேண்டும் என்பதை கட்டாயமாக்கியது. ஒரு உறுதியான கொள்கை நிலைப்பாட்டை எடுத்த தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி ஆறாவது திருத்தத்தில் குறித்துரைக்கப்பட்டவாறு சத்தியப்பிரமாணம் செய்து மறுத்தது. விடுமுறை அனுமதி பெறாமல் மூன்று மாதங்கள் சபைக்கு சமுகமளிக்கத் தவறியதால் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆசனங்களை இழந்தனர். முதலில் தனது ஆசனத்தை 1983 செப்டெம்பரில் இழந்த கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன்.

கூட்டணியின் மூம்மூர்த்திகள்

தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் பல முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவின் தமிழ்நாட்டுக்கு குடிபெயர்ந்தனர். அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன் ஆகியோரும் அதில் அடங்குவர்.சுய அஞ்ஞாதவாசத்தில் இருந்த இந்த மூவரும் இந்தியாவின் நல்லெண்ணத்தைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட அரசியல் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றதன் மூலம் பெறுமதியானதும் ஆக்கபூர்வமானதுமான ஒரு பாத்திரத்தை வகித்தனர்.பிரபல்யமான திம்பு பேச்சுவார்த்தைகள் உட்பட பல்வேறு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அமிர்,சிவா, சாம் அன்றைய ஜனநாயக தமிழ் அரசியலில் மும்மூர்த்திகளாக நோக்கப்பட்டனர்.

ஒரு சந்தர்ப்பத்தில் இந்த மும்மூர்த்திகள் தமிழ்நாட்டின் திருச்சியில் இருந்து புதுடில்லிக்கு விசேட விமானம் ஒன்றில் அன்றைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியுடன் ஒன்றாகப் பயணம் செய்தனர். இலங்கையின் வடமாகாணமும் கிழக்கு மாகாணமும் பிரதேச ரீதியில் அருகருகாக அமைந்திருந்தாலும் மொழி அடிப்படையில் அவை ஒரு தொடர்ச்சியைக் கொண்டிருக்கவில்லை என்றும் அதனால் அதிகாரப்பரவலாக்கலுக்கான ஒரு தனி அலகாக வடக்கையும் கிழக்கையும் இணைக்கமுடியாது என்றும் அன்றைய இந்திய வெளியுறவுச் செயலாளர் றொமேஷ் பண்டாரியை இலங்கை அரசாங்கம் தவறாக வழிநடத்தி நம்ப வைத்திருந்தது.

விமானத்தில் பறந்து கொண்டிருந்தபோது இது தொடர்பாக ராஜீவ் காந்தி மூன்று தமிழ்த் தலைவர்களிடமும் விளக்கம் கேட்டார். இரு மாகாணங்களும் மொழி அடிப்படையிலான நெருக்கத்தையும்ஊ தொடர்சியையும் கொண்டவை என்பதை ஒரு வரைபடத்தினதும் துல்லியமான குடிப்பரம்பல் விபரங்களினதும் உதவியுடன் ராஜீவ் காந்திக்கு விளக்கிக்கூறி அவரை நம்பவைத்தவர் ” கிழக்குத் தமிழர் ” சம்பந்தனேயாவார். இந்திய பிரதமருடனான நீண்டநேர சம்பாஷணையின் மூலமாக உண்மையான நிலைவரத்தை தெளிவுபடுத்துவதில் சம்பந்தன் வகித்த பாத்திரமே 1987 ஜூலை இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கையில் வடக்கு — கிழக்கு றமாகாணங்களின் றஇணைப்பு ஏற்பாடு உள்ளடக்கப்படுவதற்கு வழிவகுத்தது.” இணைப்பு ஆகாயத்தில் இறுதி செய்யப்பட்டது” என்று பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் சம்பந்தன் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.

13 வது திருத்தம்

இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கையின் விளைவாக அரசியலமைப்புக்கான 13 வது திருத்தம் கொண்டுவரப்பட்டது. மாகாணசபைகள் அமைக்கப்பட்டன. 1988 ஆம் ஆண்டில் நடைபெற்ற இணைந்த வடக்கு — கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி போட்டியிடவில்லை. ஆனால், 1989 பெப்ரவரி பாராளுமன்ற தேர்தலில் அது போட்டியிட்டது. அந்த தேர்தல் முன்னைய தொகுதி அடிப்படையில் நடத்தப்படவில்லை. மாவட்ட அடிப்படையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழேயே அது நடத்தப்பட்டது. திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் சார்பில் சம்பந்தன் போட்டியிட்டு 6048 வாக்குகளை மாத்திரமே பெற்றார். பாராளுமன்றத்துக்கு அவர் தெரிவு றசெய்யப்படவில்லை.

மீண்டும் சம்பந்தன் 1994 ஆகஸ்ட் பொதுத்தேர்தலில் போட்டியிட்டார். இந்த தடவை திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணிக்கு ஒரு ஆசனம் கிடைத்தது என்றாலும் சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகவில்லை. முன்னாள் மூதூர் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திச்சபை தலைவருமான அருணாச்சலம் தங்கத்துரை மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக வந்தார். அவருக்கு 22,409 விருப்பு வாக்குகள் கிடைத்த அதேவேளை சம்பந்தனுக்கு 19, 525 விருப்பு வாக்குகளே கிடைத்தன. 1997 ஜூலை 5 ஆம் திகதி திருகோணமலையில் வைத்து தங்கத்துரை விடுதலை புலிகளினால் கவலைக்குரிய வகையில் கொல்லப்பட்டார. அதையடுத்து சம்பந்தன் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினரானார்.

2000 பொதுத்தேர்தலில் சம்பந்தன் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடவில்லை. பதிலாக அவர் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் தேசியப்பட்டியலில் இடம்பெற்றார். வடக்கிலும் கிழக்கிலும் சில ஆசனங்களில் கூட்டணி ஒரு சில ஆசனங்ளை வென்றாலும் தேசியப் பட்டியல் மூலம் ஒரு ஆசனத்தைப் பெறுவதற்கு போதுமான வாக்குகளை அது பெறவில்லை. திருகோணமலை மாவட்டத்தில் எந்தவொரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரும் கூட தெரிவாகவில்லை. 2000 பொதுத்தேர்தல் தமிழ்த் தேசியவாதக் கட்சிகளுக்கு ஒரு பாரதூரமான பின்னடைவாக அமைந்தது. தமிழ்த்தேசியவாத கட்சிகள் மத்தியில் வாக்குகள் சிதறியதால் ஐ.தே க., சுதந்திர கட்சி மற்றும் அரசாங்க ஆதரவுக் கட்சிகளின் வேட்பாளர்கள் கூடுதல் ஆசனங்களைக் கைப்பற்றக்கூடியதாக இருந்தது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு

2000 தேர்தல் தோல்வி அடுத்த வருடத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமைக்கப்படுவதற்கு வழவகுத்தது. கூட்டமைப்பு விடுதலை புலிகளின் இணக்கத்துடனும் ஆதரவுடனும் அமைக்கப்பட்டது. தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ரெலோ,ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகிய நான்கு கட்சிகளுமே கூட்டமைப்பின் முன்னோடி அங்கத்துவக் கட்சிகள். சம்பந்தன் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் பொதுச்செயலாளர் என்ற அந்தஸ்தில் 2001 தமிழ் தேசிய கூட்டமைப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார். 2001 பொதுத்தேர்தலில் கூட்டமைப்பு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்ட சம்பந்தன் 40,110 விருப்புவாக்குகளுடன் பாராளுமன்றத்துக்கு தெரிவானார்.

நோர்வேயின் அனுசரணையுடனான சமாதான முயற்சிகள் விளைவாக 2002 பெப்ரவரியில் போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. படிப்படியாக கூட்டமைப்பு விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. தங்களை விடுதலை புலிகளுக்கு பணிவானவர்களாக்கிக் கொண்டவர்களில் சம்பந்தன், மாவை சேனாதிராஜா மற்றும் ஜோசப் பரராஜசிங்கம் ஆகியோரும் அடங்குவர். விடுதலை புலிகளின் ஆதிக்கத்தை எதிர்த்த ஒரே பாராளுமன்ற உறுப்பினர் வீரசிங்கம் ஆனந்தசங்கரி மாத்திரமே. அவரை வெளியேற்றுமாறு விடுதலை புலிகள் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணிக்கு நெருக்குதலைக் கொடுத்தனர். மீண்டும் ஒரு தடவை சம்பந்தன்,ஜோசப் பரராஜசிங்கம் போன்ற கூட்டணியின் தலைவர்கள் விடுதலை புலிகளின் உத்தரவுக்கு பணிந்தனர்.

ஆனந்தசங்கரி துணிச்சலுடன் விடுதலை புலிகளை எதிர்த்து நின்றார். தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் முக்கியஸ்தர்கள் விடுதலை புலிகளின் அதிகாரத்துக்கு தங்களைப் பணிவானவர்களாக்கிக் கொண்டபோதிலும், அவர்கள் கூட்டணியை தங்கள் கட்டுப்பாட்டில் எடுப்பதை நீதிமன்றத்துக்கு சென்றதன் மூலம் ஆனந்தசங்கரி தடுத்தார். அதன் விளைவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு 2004 பொதுத்தேர்தலில் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடியாமல் போனது. அதையடுத்து இலங்கை தமிழரசு கட்சிக்கு புத்துயிரளிக்கப்பட்டு 2004 தேர்தலில் கூட்டமைப்பு வீட்டு சின்னத்தின் கீழ் போட்டியிட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்

வடக்கிலும் கிழக்கிலும் ” சுதந்திரமாகவும் நேர்மையாகவும் ” நடைபெறவில்லை என்று ஐரோப்பிய ஒன்றியத்தினால் கண்டனம் செய்ப்பட்ட ஒரு தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 22 ஆசனங்களை கைப்பற்றியது. திருகோணமலையில் மீண்டும் வெற்றபெற்ற சம்பந்தன் 47, 735 விருப்பு வாக்குகளைப் பெற்றார். விடுதலை புலிகளின் ஆசீர்வாதத்துடன் அவர் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுவின் தலைவரானார்.

2005 ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்கப்போவதாக விடுதலை புலிகள் அறிவித்தனர். இதை விடுதலை புலிகளினதும் தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் ‘ ஒரு கூட்டுத் தீர்மானமாக ” உலகிற்கு அறிவித்தவர் சம்பந்தனே. நேரடி வன்முறை மூலமாகவும் மறைமுக அச்சுறுத்தல் மூலமாகவும் வடக்கிலும் கிழக்கிலும் விடுதலை புலிகள் தேர்தல் பகிஷ்கரிப்பை நடைமுறைப்படுத்தினர் அதேவேளை மகிந்த ராஜபக்சவுடன் அவர்கள் ஒரு ‘ உடன்பாட்டைச் ‘ செய்துகொண்டனர். தனக்கு கிடைக்கக்கூடிய தமிழ் வாக்குகளைப் பெறமுடியாத நிலையில் ரணில் விக்கிரமசிங்க தோல்வி கண்டார். மகிந்த ராஜபக்ச வெற்றிபெற்று ஜனாதிபதியாக அதிகாரத்துக்கு வந்தார். போர் தீவிரமடைந்து இறுதியில் 2009 மே மாதத்தில் விடுதலை புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டனர்.

போருக்கு பின்னரான நிலைவரம்

போரின் முடிவுக்கு பின்னரான நிலைவரம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு புதிய ஒரு அரசியல் வாழ்வைக் கொடுத்தது. விடுதலை புலிகள் இல்லாத நிலையில் சம்பந்தன் கூட்டமைப்பின் கேள்விக்கிடமின்றிய தலைவராக தொடர்ந்தார்.2010, 2015, 2020 பொதுத் தேர்தல்களில் போட்டியிட்ட கூட்டமைப்பு முறையே 14, 16, 10 ஆசனங்களை பெற்றது. இந்த மூன்று தேர்தல்களிலும் சம்பந்தன் திருகோணமலை மாவட்டத்தில் வெற்றிபெற்றார். அவரது விருப்பு வாக்குகள் முறையே 2010 ஆம் ஆண்டில் 24,488, 2015 ஆம் ஆண்டில் 33, 834 மற்றும் 2020 ஆம் ஆண்டில் 21, 422 ஆக இருந்தது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு 2010, 2015 , 2020 ஜனாதிபதி தேர்தல்களில் முறையே சரத் பொன்சேகா, மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாச ஆகியோரை ஆதரித்தது. இந்த வேட்பாளர்களுக்காக வடக்கிலும் கிழக்கிலும் பெருமளவு வாக்குகளை கூட்டமைப்பினால் திரட்டக்கூடியதாக இருந்தபோதிலும் 2015 ஜனாதிபதி தேர்தலில் சிறிசேன மாத்திரமே வெற்றிபெற்றார். 2015 ஆம் ஆண்டில் சம்பந்தன் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் நியமிக்கப்பட்டு 2018 இறுதிவரை அந்த பதவியில் தொடர்ந்தார்.

அண்மைய வருடங்களாக வயது மூப்பு மற்றும் நோய்கள் காரணமாக சம்பந்தனின் உடல்நிலை பலவீனமடையத் தொடங்கியது. அவரது நடமாட்டங்கள குறைந்து சக்கரநாற்காலியைப் பயன்படுத்தியே இயங்கிக் கொண்டிருந்தார். அவரது பாராளுமன்ற வருகையும் மிகவும் கடுமையாகக் குறைந்தது. பல வருடங்களாக தனது சொந்த தொகுதியான திருகோணமலைக்கு அவரால் செல்ல முடியவில்லை. ஆனால் சம்பந்தனின் நினைவாற்றலும் மனப்பலமும் இறுதிவரை அவரின் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்தன. அவரது வாழ்வின் இறுதிக்காலத்தில் சம்பந்தன் ” பெருந்தலைவர் ” என்று போற்றப்பட்டார்.

இராஜவரோதயம் சம்பந்தன் 2024 ஜூன் 30 ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் லங்கா வைத்தியசாலையில் தனது இறுதிமூச்சை விட்டார். 2024 பெப்ரவரி 5 ஆம் திகதிஅவர் தனது 91 வது பிறந்தநாளைக் கொண்டாடினார். மனைவி லீலாவதியையும் மகள் கிரிஷாந்தினியையும் மகன்கள் சஞ்சீவன், செந்தூரன் ஆகியோரையும் சம்பந்தன் விட்டுச் சென்றுள்ளார்.

D.B.S.Jeyaraj can be reached at dbsjeyaraj@yahoo.com

ஆங்கில மூலம்: டி. பி. எஸ். ஜெயராஜ் (Daily Mirror)

தமிழில்: வீரகத்தி தனபாலசிங்கம்

நன்றி: வீரகேசரி

*********************************************************************************************