1961ம் ஆண்டு தமிழர் சத்தியாக்கிரகப் போராட்ட காலத்தில் அன்றைய யாழ்ப்பாண அரசாங்க அதிபர் நிசங்க விஜெயரத்ன‌வின் அனுபவங்கள்


டி.பி.எஸ். ஜெயராஜ்


” ஒரு மனிதன் தான் வாழும் காலத்தில் பல பாத்திரங்களை வகிக்கிறான்”
என்று வில்லியம் சேக்ஸ்பியர் தனது ” நீங்கள் விரும்பிய வண்ணம் ” (As you like it ) என்ற நாடகத்தில் கூறினார். அவரது அந்த அவதானிப்பு கலாநிதி நிசங்க விஜேரத்னவின் வாழ்வையும் பணியையும் வர்ணிப்பதற்கு மிகவும் கச்சிதமாகப் பொருந்துகிறது.

நிசங்க என்று பிரபல்யமாக அறியப்பட்ட நிசங்க பராக்கிரம விஜேரத்னவின் 100 வது பிறந்ததினம் ஜூன் 14 ஆம் திகதியாகும். ஒரு இராணுவ அதிகாரியாக, கல்வியாளராக, கவிஞராக, அரசாங்க அதிபராக, நிரந்தர செயலாளராக, பாராளுமன்ற உறுப்பினராக, கபினெட் அமைச்சராக, தூதுவராக …. இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்ரீதலதா மாளிகையின் தியவதன நிலாமையாக பயனுறுதியுடைய தனது எட்டு தசாப்தகால வாழ்வில் விஜேரத்ன பல பதவிகளை வகித்தார்.

தாய்நாட்டுக்கு பெருஞ்சேவையாற்றிய பல்திறப்புலமையும் பன்முக ஆற்றலும் கொண்ட அவரின் பிறந்ததின நூற்றாண்டை முன்னிட்டு இந்த கட்டுரை எழுதப்படுகிறது.

சப்ரகமுவ மாகாணத்தின் பிரபலமான குடும்பம் ஒன்றைச் சேர்ந்த நிசங்க பராக்கிரம 2024 ஜூன் 14 ஆம் திகதி கொழும்பில் பிறந்தார். அவர் கேகாலை புத்தெனிபொல வளவ்வவின் சேர் எட்வின் மற்றும் சீமாட்டி லீலா விஜேரத்ன தம்பதியின் இரண்டாவது புதல்வர். சுதந்திரத்துக்கு பின்னர் பிரதமர் டி.எஸ். சேனநாயக்க தலைமையில் அமைந்த முதலாவது அமைச்சரவையில் சேர் எட்வின் விஜேரத்ன உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக பதவி வகித்தார். பிறகு அவர் லண்டனிலும் புதுடில்லியிலும் இலங்கையின் தூதுவராக பணியாற்றினார். நிசங்கவின் மூத்த சுகாதரர் திஸ்ஸ ஒரு பாரிஸ்டரும் இராஜதந்திரியுமாவார். ‘ பத்திரிகைகளில் சிங்கபுத்ர ‘ என்ற புனைபெயரில் திஸ்ஸ வீறுமிகு கட்டுரைகளை எழுதினார் நிசங்கவின் இளைய சகோதரர் குடா ஒரு மனநல மருத்துவர்.

இளம் நிசங்க தனது ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலைக் கல்வியை கொழும்பு றோயல் கல்லூரியில் பெற்றார். மூன்றாம் நிலைக்கல்வியை அவர் அன்றைய இலங்கை பல்கலைக்கழகத்தில் பெற்று வரலாற்றுத்துறையில் பி.ஏ. சிறப்பு பட்டதாரியானார். பல்கலைக்கழக படிப்புக்கு பிறகு ஒரு குறுகிய காலம் இலங்கை இராணுவத்தின் பீரங்கிப் படைப்பிரிவில் ஒரு அதிகாரியாக (இரண்டாவது லெப்டினண்ட்) நிசங்க பணியாற்றினார்.

இலங்கை சிவில் சேவை

அதற்கு பிறகு அவர் பெருமைமிக்க இலங்கை சிவில் சேவைப் பரீட்சைக்கு தோற்றி அதில் சித்தியடைந்து சிவில் சேவையில் இணைந்தார். இரு தசாப்தங்களுக்கும் அதிகமான கால தனது நிருவாக சேவையில் புத்தளம், காலி மாவட்டங்களின் உதவி அரசாங்க அதிபராக, பிறகு அநுராதபுரம்,மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களின் அரசாங்க அதிபராக, போக்குவரத்து, கலாசார அலுவல்கள், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சுக்களின் நிரந்தரச் செயலாளராக அவர் பல்வேறு பதிவிகளை வகித்தார்.


யாழ்ப்பாணம் அரசாங்க அதிபர்

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக 1961 ஆம் ஆண்டில் நிசங்க விஜேரத்னவுக்கு கிடைக்கப்பெற்ற நியமனம் அரசியல் அர்த்தத்தில் அவருக்கு ஒரு அக்னிப்பரீட்சையாக அமைந்தது. அன்று நடந்தவை இன்று பெரும்பாலானவர்களுக்கு தெரியாது என்பதால் அதைப் பற்றி சிறிது விரிவாக கூறவிரும்புகிறேன்.

பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கம் அப்போது பதவியில் இருந்தது.சிங்களத்தை மாத்திரம் அரசகரும மொழியாக நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்த முயற்சிகள் தமிழ் மக்களின் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது. பிரதான தமிழ் அரசியல் கட்சியான இலங்கை தமிழரசு கட்சி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 1961 பெப்ரவரியில் ‘ சத்தியாக்கிரகம் ‘ என்று அறியப்பட்ட பாரிய ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கியது.யாழ்ப்பாணம்,வவுனியா,மன்னார், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் ( அந்த நேரத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, அம்பாறை நிருவாக மாவட்டங்கள் இருக்கவில்லை) கச்சேரிகளின் முன்னால் நடத்தப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் மாவட்ட நிருவாகத்தின் உயிர்நாடியாக விளஙகிய அவற்றின் அலுவல்களை முடக்கின.

தமிழரசு கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட அகிம்சைவழிப் போராட்டங்களை சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கம் மிகவும் கடுமையான முறையில் கையாளத் தீர்மானித்தது. சத்திராக்கிரக போராட்டங்கள் நடைபெற்ற இடங்களில் பெரும் எண்ணிக்கையில் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். இராணுவமும் கடற்படையும் கூட வரவழைக்கப்பட்டது. தமிழர்களான அரசாங்க அதிபர்களை இடமாற்றம் செய்து அவர்களின் இடத்துக்கு சிங்களவர்கள் நியமிக்கப்பட்டனர்.

அப்போது யாழ்ப்பாண அரசாங்க அதிபராக இருந்த மூத்த சிவில்சேவை அதிகாரியான ஸ்ரீகாந்தா குறுகிய நாள் முன்னறிவித்தலில் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய அரசாங்க அதிபராக நிசங்க விஜேரத்ன நியமிக்கப்பட்டார். அப்போது அவர் அநுராதபுரம் அரசாங்க அதிபராகப் பணியாற்றிக் கொண்டாருந்தார். பதற்றமும் பகைமையும் நிறைந்த சூழ்நிலைக்கு மத்தியில் அவர் யாழ்ப்பாணம் அரசாங்க அதிபராகப் பதவியேற்றார். அன்று கச்சேரிக்கு அருகாக பழைய பூங்காவிலேயே அரசாங்க அதிபரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் இருந்தது. 1961 மார்ச் 2 ஆம் திகதி உத்தியோகபூர்வமாகப் பதவியேற்ற புதிய அரசாங்க அதிபரினால் கச்சேரிக்குள்ளோ அல்லது பழைய பூங்காவில் வாசஸ்தலத்திற்குள்ளோ பிரவேசிக்கக்கூடியதாக இருக்கவில்லை. அவற்றின் வாசல்களை பெரும் எண்ணிக்கையான மக்கள் மறியல் செய்து கொண்டிருந்தனர்.

சத்தியாக்கிரகிகளைக் கலைப்பதற்கு இராணுவம், கடற்படை , பொலிசார் கூட்டு நடவடிக்கையை தொடங்கினர். நிராயுதபாணிகளான சத்தியாக்கிரகிகள் மீது வன்முறை கட்டவிழ்த்து விட்ட்டது. பலர் காயமடைந்தனர். பதினேழு பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பொலிசார் நிசங்க விஜேரத்னவை தக்களது தோள்களில் தூக்கிச்சென்று மதில் மேலால் பழைய பூங்காவுக்குள் இறக்கிவிட்டனர்.

சிறந்த நிருவாகியான நிசங்க விஜேரத்ன முரண்பாடு நிறைந்த சூழ்நிலையில் பழையபூங்கா வாசஸ்தலத்தில் இருந்து தன்னால் செயற்பட முடியாது என்பதை புரிந்துகொண்டார். அரசாங்க அதிபர் வாசஸ்தலத்திலிருந்து வெளியே போவதற்கும் உள்ளே வருவதற்கும் முயற்சிக்கின்ற வேளைகளில் எல்லாம் சத்தியாக்கிரகிகளுக்கு எதிராக முரட்டுத்தனமாக படைபலத்தைப் பிரயோகிக்க முடியாது. அதனால் நிசங்க தமிழரசு கட்சியின் தலைவர்களுடன் பேச்சுவாதர்தை நடத்தி கனவான் உடன்பாடு ஒன்றுக்கு வந்தார்.

பழையபூங்காவில் உள்ள வாசஸ்தலத்தில் இருந்து உத்தியோகபூர்வமான எந்தவாரு கச்சேரிப் பணியையும் தான் செய்யப்போவதில்லை என்று தமிழ்த் தலைவர்களிடம் அவர் உறுதியளித்தார். இதற்கு பிரதியுபகாரமாக அரசாங்க அதிபரும் அவரது உத்தியோகத்தர்களும் பாதுகாப்பு அதிகாரிகளும் வாசஸ்தலத்துக்கு சுதந்திரமாக சென்றுவர அனுமதிக்கவேண்டும். வாசஸ்தலத்தில் இருந்து அவர்கள் வெளியே போகும்போதும் உள்ளே வரும்போதும் சத்தியாக்கிரகிகள் இடையூறு செய்யக்கூடாது. இந்த கனவான் உடன்பாட்டை இரு தரப்பினரும் உறுதியாகக் கடைப்பிடித்தனர்.

புதிய யாழ்ப்பாண அரசாங்க அதிபர் நேர்மையான அறிக்கை ஒன்றை வெளியிட்டதன் மூலம் அரசாங்கத்தை நினையாப்பிரகாரம் அசௌகரியத்துக்கு உள்ளாக்கினார். சத்தியாக்கிரகிகள் பற்றி செய்திப்பத்திரிகை ஒன்று மார்ச் 3 ஆம் திகதி கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

” சத்தியாக்கிரகிகள் பண்பாக நடந்துகொள்ளும் நன்மக்கள்” என்று நிசங்க விஜேரத்ன கூறினார். போராட்டம் அகிம்சை வன்முறையற்றது என்றும் கட்டுக்கோப்பான முறையில் முன்னெடுக்கப்படுகிறது என்றும் அவர் மேலும் சொன்னார். அவரின் பதில் 1961 மார்ச் 5 ஆம் திகதி பத்திரிகையில் வெளியானது.

அதேவேளை, பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க பொதுநலவாய நாடுகளின் மகாநாட்டில் கலந்துகொள்வதற்காக மார்ச் 4 ஆம் திகதி கொழும்பில் இருந்து லண்டனுக்கு பறந்துவிட்டார். நாட்டை விட்டு பறப்படுவதற்கு முன்னதாக அவரின் நாட்டு மக்களுக்கு அவர் விடுத்த செய்தியொன்று இலங்கை வானொலி ஊடாக ஒலிபரப்பானது. அந்த நேரம் தொலைக்காட்சி இருக்கவில்லை.

தனது செய்தியில் சத்தியாக்கிரகத்தை கடுமையாக கண்டனம் செய்த பிரதமர் யாழ்ப்பாண சத்தியாக்கிரகிகள் வன்முறையில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டினார். அவரின் செய்தி மார்ச் 5 ஆம் திகதி பத்திரிகைகளில் வெளியானது. சத்தியாக்கிரகிகள் பற்றி அரசாங்க அதிபர் சொன்னது பிரதமர் சொன்னதுக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருந்ததால் அரசாங்கத்துக்கு பெரும் அசௌகரியம் ஏற்பட்டது.

யாழ்ப்பாணச் சத்தியாக்கிரகம் பெரிதாக தீவிரமடையத் தொடங்கியது. மக்கள் தபாற்கந்தோர் ஒன்று அமைக்கப்பட்டது. ” சட்டவிரோத” முத்திரைகள், முத்திரை பதிக்கப்பட்ட தபாலுறைகள் மற்றும் தபாலட்டைகள் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. முன்னாள் செனட்டரும் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச்சபையின் தலைவருமான எஸ். நடராசாவை ” தபால்மா அதிபராகக் ” கொண்டு தபால்சேவை ஒன்றும் அமைக்கப்பட்டது.

இந்த முத்திரைகளைப் பயன்படுத்தி முக்கியமான அரசாங்க அதிகாரிகளுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டன .தமாழ் பாராளுமன்ற உறுப்பினர்களே தபால்காரர்களாக செயற்பட்டனர். இந்த பின்னணியில் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் நிசங்க விஜேரத்னவுக்கு அன்றைய வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் பாரியார் திருமதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கத்தினால் அனுப்பிவைக்கப்பட்டது. அதை ‘ தபால்காரர்களில் ‘ ஒருவரான அன்றைய உடுவில் பாராளுமன்ற உறுப்பினர் வி. தர்மலிங்கம் ( இன்றைய யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனின் தந்தையார்) சைக்கிளில் சென்று பழையபூங்கா வாசஸ்தலத்தில் விநியோகித்தார்.

ஆனால், சித்திரைப் புத்தாண்டுக்கு பிறகு சத்தியாக்கிரகத்துக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. ஏப்பில் 18 ஆம் திகதி அவசரகாலநிலை பிரகடனம் செய்யப்பட்டது. இராணுவம் துப்பாக்கிகளின் பின்புறத்தாலும் அரைப்பட்டிகளால் சத்தியாக்கிரகிகளை தாக்கியது. தமிழ்பேசும் பிராந்தியங்களில் மாலை முதல் காலை வரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட சத்தியாக்கிரகத்தின் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணை எதுவுமின்றி பனாகொடை இராணுவ முகாமில் தடுத்துவைக்கப்படடனர். நிலைவரம் படிப்படியாக வழமைநிலைக்கு திரும்பி வடக்கு, கிழக்கில் கச்சேரிகள் வழமைபோன்று இயங்கத்தொடங்கின.

அநுராதபுரம் மாவட்டம்

யாழ்ப்பாண அரசாங்க அதிபர் என்ற வகையில் நிசங்கவின் பதவிக்காலம் அவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட சூழ்நிரைகளினால் இடைஞ்சலுக்கு உள்ளானதை இதில் இருந்து புரிந்துகொள்ளமுடியும். யாழ்ப்பாணத்துக்கு முற்றிலும் முரணாக அநுராதபுரம் மாவட்ட அரசாங்க அதிபராக (1958 — 62 ) அவரின் பதவிக்காலம் மிகவும் ஆக்கபூர்வமானதாகவும் பாராட்டத்தக்கதாகவும் அமைந்தது. விஜேரத்ன அரசாங்க அதிபராக இருந்தவேளையில் அநுராதபுரம் நகரம் என்ற நிலையில் இருந்து மாநகராக மாற்றமடைவதில் உள்ள சோதனைகளை எதிர்நோக்கியது. அநுராதபுரம் புதிய நகரம் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது பழைய நகரில் இருந்து புதியதற்கு மக்கள் மாற்றப்பட்டார்கள். அதனால் பெரும்்பதற்றமான சூழ்நிலை தோன்றியது.மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர்களுடன் மிகுந்த இராஜதந்திரத்துடன் நடந்து அரசாங்க அதிபர் நிலைவரத்தைக் கையாண்டார்.

அரசாங்க அதிபராக பதவி வகித்த அதேவேளை விஜேரத்ன அநுராதபுரத்தின் புராதனத்தன்மை பாதுகாப்பு சபையின் தலைவராகவும் இருந்தார். முன்னர் கூறியதைப் போன்று புதிய நகரம் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருந்ததால் அநுராதபுரம் ஒரு நிலைமாறு கட்டத்தில் இருந்தது. நவீன நிர்மாணத்தை ஊக்குவிக்கவேண்டிய தேவை இருந்த அதேேளைை, அநுராதபுரத்தின் வரலாற்றுப் புராதனத்தையும் பௌத்த முக்கியத்தையும் கவனத்திற்கொண்டு அதன் சகல புகழையும் எழிலையும் பாதுகாக்கவேண்டியும் இருந்தது. கையாளுவதற்கு மிகவும் கடினயான இந்த பணியை நிசங்க தனது சாமர்த்தியமான செயற்திறனின் மூலமாக எதிர்கொண்டார். அநுராதபுரத்துக்கென்று விமானநிலையம் ஒன்றை நிர்மாணிப்தற்கான ஆரம்பப் பணிகளையும் நிசங்கவே முன்னெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய இலச்சினையும் கொடியும்

காலனித்துவ இலங்கை என்ற நிலையில் இருந்து 1972 ஆம் ஆண்டில் இலங்கை குடியரசாக மாறியபோது அதற்கு தேசிய இலச்சினையையும் கொடியையும் தயாரிப்பதில் நிசங்க வகித்த பாத்திரம் ஒரு அரசாங்க அதிகாரி என்ற வகையில் அவரின் கடந்தகாலப் பணிகளில் பெரிதாக வெளியில் தெரியாத ஒரு அம்சமாகும். அப்போது நிசங்க விஜேரத்ன கலாசார அலுவல்கள் அமைச்சின் நிரந்தரச் செயலாளராக இருந்தார். தேசிய இலச்சினை மற்றுமா கொடி வடிவமைப்பு குழுவின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். ஐக்கிய இராசசியத்தினால் வழங்கப்பட்ட இலச்சினை பதிலீடு செய்யப்பட்டது. தேசியக் கொடியையும் அவர் மாற்றியமைத்தார்.

டெடிகம தொகுதி

இலங்கை ஒரு குடியரசாக மாறிய ஒருவருட காலத்திற்குள் 1973 ஆம் ஆண்டு நிசங்க விஜேரத்ன நிருவாக சேவையில் இருந்து ஓய்வுபெற்றார். அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜே. ஆர். ஜெயவர்தனவின் தலைமையின் கீழ் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துகொண்ட அவர் சப்ரகமுவ மாகாணத்தின் டெடிகம தொகுதியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். அந்த தொகுதி நெடுகவும் ஐ.தே.க.வின் கோட்டையாக விளங்கியது. முன்னாள் ஐ.தே.க.வின் தலைவரும் பிரதமருமான டட்லி சேனநாயக்க அந்த தெ்குதியின் பாராளுமன்ற உறுப்பினராக மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலம் பதவிவகித்தார். 1973 ஆம் ஆண்டில் டட்லியின் மறைவுக்கு பிறகு அவரது சகோதரர் றொபேர்ட் சேனநாயக்கவின் புதல்வரான ருக்மன் சேனநாயக்க இடைத்தேர்தல் ஒன்றில் டெடிகமவின் பாராளுமன்ற உறூப்பினராக தெரிவானார்.

துரதிர்ஷ்டவசமாக, ருக்மனுக்கும் ஐ.தே.க. தலைவர் ஜெயவர்தனவுக்கும் இடையில் சில அரசியல் மற்றும் தனிப்பட்ட முறுகல்கள் ஏற்பட்டன. அதனால் சப்ரகமுவ மாகாணத்தில் வேர்களைக் கொண்ட நிசங்கவை 1976 ஆம் ஆண்டில் ஜெயவர்தன டெடிகமவின் அமைப்பாளராக நியமித்தார்.1977 ஜூலை பொதுத்தேரதலில் போட்டியிட்ட நிசங்க டெடிகம தொகுதியில் 24, 436 வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட தர்மசிறி சேனநாயக்கவை 6,732 பெரும்பான்மை வாக்குகளினால் நிசங்க தோற்கடித்தார்.

ஐ.தே..க. அமைச்சர்

1977 ஐ.தே.க. அரசாங்கத்தில் விஜேரத்ன கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார். அடுத்த வருடம் உயர்கல்வி அமைச்சராகவும் அவர் நியமிக்கப்பட்டார். 1980 வரை அவர் கல்வி அமைச்சராகவும் உயர்கல்வி அமைச்சராகவும் பதவி வகித்தார். 1980 ஆம் ஆண்டில் ஜனாதிபதி ஜெயவர்தன நிசங்கவை நீதியமைச்சராக நியமித்தார்.வெலிக்கடைச் சிறைக்கலகமும் பெருமளவு கைதிகள் தப்பியோட்டமும் இடம்பெற்ற 1988 ஆம் ஆண்டுவரை அவர் நிதியமைச்சராக பதவியில் தொடர்ந்தார். தானாகவே அவர் பதவியைத் துறந்தார் அதற்கு பிறகு அவர் தீவிர அரசியலில் இருந்து ஓய்வுபெற்றுக் கொண்டார்.

1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தைக் கொண்டு வந்தமை கபினட் அமைச்சர் என்ற முறையில் அவர் செய்த சாதனைகளில் ஒன்று. முன்னைய இலங்கைப் பல்கலைக்கழகத்துக்கு பதிலாக ஐந்து சுயாதீனமான பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படுவதற்கு அந்த சட்டம் வழிவகுத்தது. பேராதனை, கொழும்பு, ஸ்ரீஜெயவர்தனபுர, களனி, யாழ்ப்பாண பல்கலைக்கழகங்களே அவை.ருஹணு பல்கலைக்கழகமும் திறந்த பல்கலைக்கழகமும் விஜேரத்னவின் சிந்தனையில் உதித்தவையே.

சிறுபான்மைச் சமூகங்களின் பாடசாலை மாணவர்கள் தஙகளது இனத்துவ அடையாளங்கள் மற்றும் கலாசாரப் பாரம்பரியங்களுக்கு ஏற்றமுறையில் சீருடைகளை அணிவதற்கான உரிமையை கல்வி அமைச்சர் என்ற வகையில் நிசங்க 1980 ஆம் ஆண்டில் உத்தியோகபூர்வமாக அங்கீகரித்தார். இதனால் முஸ்லிம் மாணவர்களும் மலாயர் மாணவர்களும் பெருமளவில் பயனடைந்தனர். பின்தங்கிய மாவட்டங்களில் ஜனாதிபதி கல்லூரிகள் என்று அறியப்பட்ட தரமான பாடசாலைகள் கோட்பாட்டையும் அவரே அறிமுகப்படுத்தினார். இந்த கல்லூரிகள் மாகாணங்களில் “றோயல் கல்லூரிகளின்” சாயலில் அமைந்தன.

நீதியமைச்சர் என்ற வகையில் நிசங்க விஜேரத்னவே சீனாவின் உதவியுடன் கொழும்பில் புதிய நீதிமன்றக் கட்டிடத்தொகுதி நிர்மாணிக்கப்படுவதற்கு பொறுப்பாக இருந்தார். ஒரு விதிவசமான நிகழ்வாக, கொடிய பயங்கரவாத தடைச்சட்டம் ஒரு லிபரல் ஜனநாயகவாதியான நிசங்க விஜேரத்ன நிதியமைச்சராக இருந்த வேளையிலேயே 1982 ஆம் ஆண்டில் நிரந்தர சட்டமாகியது.

மூன்று வருடங்களுக்கு முன்னதாக கே.டபிள்யூ. தேவநாயகம் நீதியமைச்சராக இருந்தபோது 1979 ஆம் ஆண்டில் பயங்கரவாத தடைச்சட்டம் ஒரு தற்காலிக ஏற்பாடாகவே
அறிமுகப்படுத்தப்பட்டது. பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் விஜேரத்ன விசனம் கொண்டிருந்தார் என்றபோதிலும் அமைச்சரவை கூட்டுப்பொறுப்பு உணர்வின அடிப்படையில் அவர் ஒத்துப்போக வேண்டியிருந்தது என்று கூறப்படுகிறது.

கறுப்பு ஜூலையில் வெலிக்கடைச் சிறையில் தமிழ்க்கைதிகள் படுகொலையும் 1983 செப்டெம்பரில் மட்டக்களப்பு சிறையை உடைத்து பெரும் எண்ணிக்கையான தமிழ்க் கைதிகள் தப்பியோடிய சம்பவமும் நிசங்க நீதியமைச்சராக இருந்தபோதே இடம்பெற்றன.

தியவதன நிலாமை

எல்லாவற்றுக்கும் மேலாக, கண்டி ஸ்ரீதலதா மாளிகையின் தியவதன நிலாமையாக நிசங்க விஜேரத்ன தெரிவு செய்ய்பட்டமை அவரது சாதனைகளில் மகத்தானது. அது உணர்ச்சிபூர்வமாக அவரது இதயத்துக்கு மிகவும நெருக்கமான சாதனையாகும். அந்த நேரத்தில் நிலவிய நிரப்பிரபுத்துவ பாரம்பரியங்களையும் மீறி அந்த தெரிவு இடம்பெற்றது. இது எவ்வாறு சாத்தியமானது எனபதையும் நிகழ்வுகள் நிறைந்த அவரது வாழ்வின் ஏனைய அம்சங்களையும் இன்னொரு கட்டுரையில் பார்ப்போம்.

ஆங்கில மூலம்: டி. பி. எஸ். ஜெயராஜ் (Daily Mirror)

தமிழில்: வீரகத்தி தனபாலசிங்கம்

நன்றி: வீரகேசரி

****************************************************************