டி.பி.எஸ். ஜெயராஜ்
ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்க பண்டாரவின் ஓரங்க நாடகத்தினால் இலங்கை அரசியல் அரங்கு கடந்தவாரம் சுறுசுறுப்படைந்தது. பொலிஸ்காரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய அவர் மே 28 கொழும்பில்
செய்தியாளர்கள் மகாநாடொன்றில் உரையாற்றியபோது இவ்வருடம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலும் அடுத்த வருடம் நடத்தப்பட வேண்டியிருக்கும் பாராளுமன்ற தேர்தலும் ஒத்திவைக்கப்படவேண்டும் என்கிற அதேவேளை ஜனாதிபதியினதும் பாராளுமன்றத்தினதும் பதவிக்காலங்கள் இரு வருடங்களினால் நீடிக்கப்படவேண்டும் என்று யோசனையை முன்வைத்தார். அதற்காக பாராளுமன்றத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படவேண்டும் என்றும் மக்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்படவேண்டும் என்றும் முன்னாள் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான அவர் கூறினார்.
பாலித ரங்க பண்டார முன்வைத்த யோசனையின் சாராம்சம் இதுதான் ;
“ நாடு பாரிய பொருளாதார நெருக்கடி ஒன்றை எதிர்நோக்கிய ஒரு நேரத்தில் ரணில் விக்கிரமசிங்க நாட்டின் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்றார். நிலைவரத்தை சீராக்க விக்கிரசிங்க அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாக கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஓரளவு பொருாதார உறுதிப்பாடும் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் பெருமளவு பொருளாதார உறுதிப்பாட்டை உத்தரவாதப்படுத்துவதற்கு மேலும் கால அவகாசம் தேவை.
இவ்வருடம் ஜனாதிபதி தேர்தலும் அடுத்த வருடம் பாராளுமன்ற தேர்தலும் வருகின்றன. இந்த தேர்தல்களும் அவற்றுக்கான பிரசாரங்களும் தற்போதைய பொருளாதார மீட்சிப்போக்கை பாதிக்கக்கூடும். சீரான பொருளாதார வளர்ச்சிப் போக்கு சீர்குலைக்கப்படலாம். அதனால் பாரிய பொருளாதார உறுதிப்பாட்டையும் வளர்ச்சியையும் நோக்கிய பயணத்தை தொடருவதற்கு வசதியாக இரு தேர்தல்களும் ஒத்திவைக்கப்பட வேண்டும்.
தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலமும் பாராளுமன்றத்தின் பதவிக்காலமும் இரு வருடங்களினால் நீடிக்கப்படவேண்டும். இது தொடர்பிலான யோசனை ஒரு தீர்மானமாக பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டு சகல கட்சிகளினதும் ஆதரவுடன் நிறைவேற்றப்பட வேண்டும். மக்களின் ஆதரவையும் அங்கீகாரத்தையும் பெறுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்படவேண்டும். இதன் மூலமாக ஜனாதிபதியும் அரசாங்கமும் மேலும் இரு வருடங்களுக்கு பதவியில் இருந்து பொருளாதார உறுதிப்பாட்டைச் சாதிக்கக்கூடியதாக இருக்கும்.”
ரங்க பண்டாரவின் யோசனையின் சாதகங்களும் பாதகங்களும் எவ்வாறிருந்தாலும், அதற்கு ஆதரவு கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கவில்லை. முதலாவதாக, உத்தேச தேர்தல்கள் ஒத்திவைப்பும் பதவிக்காலங்கள் நீடிப்பும் அரசியலமைப்பு ரீதியாக சாத்தியமாகுமா என்பது தெளிவில்லை. அவ்வாறு இருந்தாலும் கூட பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெறுவது பெறுவது சாத்தியமில்லை. மேலும் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றில் மக்களின் அங்கீகாரத்தைப் பெறுவது அறவே சாத்தியமில்லை.
ரங்க பண்டாரவின் யோசனை ஒன்றும் புதியது அல்ல. ஜனாதிபதி விக்கிரமசிங்க பொருளாதார மீட்சிப்பாதையில் நாட்டை வழிநடத்திச் செல்வதற்கு வசதியாக அவர் நீண்டகாலம் பதவியில் இருப்பதற்கு சகல கட்சிகளும் ஒன்றிணைந்து ஆதரவு வழங்கவேண்டும் என்று ஐ.தே.க.வின் தவிசாளரும் ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன அடிக்கடி கூறிவருகிறார். ஆனால் அவர் கூறுவதையே ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் கூடுதலான அளவக்கு தெளிவான வார்த்தைகளில் கூறும்போது வேறுபட்ட முறையில் நோக்கப்படுகிறது.
ரங்க பண்டாரவின் யோசனை அவரது தனிப்பட்ட கருத்தாக இருக்கின்ற போதிலும், அது ஒரு யோசனை மாத்திரமே என்ற போதிலும் அவ்வாறாக அது கருதப்படவில்லை. ஊடகங்களில் சில பிரிவுகளும் சமூக ஊடகங்களும் எதிரணி அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து அதை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பாக நோக்குகின்றன. மேலும் அது ஐ.தே.க.வின் பொதுச் செயலாளரினால் அவரின் எண்ணத்தில் முனவைக்கப்பட்ட ஒரு யோசனையாக அன்றி கட்சியின் திட்டவட்டமான யோசனையாக கருதப்படுகிறது.
‘எசமானின் குரல் ‘
ரங்க பண்டாரவின் யோசனையின் நம்பகத்தன்மை கடுமையாக சந்தேகிக்கப்பட்டது. அந்த யோசனை ஐ.தே.க.வின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து வந்தது என்று நோக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவாசம் கூறுகின்றவை எல்லாமே பசில் ராஜபக்சவின் கருத்துக்கள் என்று கூறப்படுவதைப் போன்று ரங்க பண்டார விக்கிரமசிங்கவின் ஊதுகுழல் என்று சந்தேகிக்கப்படுகிறார். ரங்க பண்டார ‘எசமானின் குரல் ‘ என்றும் அந்த எசமான் வேறு யாருமல்ல ஜனாதிபதியே என்று துணிச்சலுடன் பேசும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரான மனோ கணேசன் வெளிப்பயைாகவே கூறினார். ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படப்போவதை ஏற்கெனவே ஊர்ஜிதப்படுத்திக் கொண்ட விக்கிரமசிங்க இப்போது கட்சியின் செயலாளர் ஊடாக அதைக்்குழப்பியடிக்க முயற்சிக்கிறார் என்பதே பொதுவான எண்ணமாக இருக்கிறது.
அதனால் இப்போது ரங்க பண்டார மீது தாறுமாறாகத் தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாக விக்கிரமசிங்கவும் கடுமையாக தாக்குதலுக்கு இலக்காகிறார். பல்வேறு அரசியல் கட்சிகள் இதைச் செய்கின்றன. எதிர்பார்க்கப்பட்டதைப் போன்றே ரங்க பண்டாரவின் யோசனை பலராலும் மிகவும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.
அந்த யோசனையை அரசாங்கம் முன்னெடுத்தால் வீதிகளில் இறங்கி ‘அறகலய ‘ போராட்டத்தை மீண்டும் ஆரப்பிக்கப்போவதாகக்்கூட சிலர் அச்சுறுத்தினார்கள். ரங்க பண்டாரவின் யோசனையை ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ வெளிப்படையாகவும் உத்தியோகபூர்வமாகவும் ஆதரிக்கவோ அலலது அங்கீகரிக்கவோ இல்லை என்பதைக் கூட சிலர் பொருட்படுத்துகிறார்கள் இல்லை.
தற்போதைய நிலைவரத்துக்கு ரணில் விக்கிரமசிங்கவின் அணுகுமுறையும் ஒரு உதவிக் காரணியாகும். அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போகிறார் என்பதையும் அவருக்கு ஆதரவான தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதையும் சகலரும் அறிவார்கள். செய்தியாளர்கள் மகாநாடுகளில் கேட்கப்படும்போது நேரடியாக பதில் அளிப்பதை தவிர்த்து நழுவலான பதிலையே தருகிறார். தேர்தல்கைளைப் பற்றி பேசுவதை தவிர்த்து பொருளாதாரத்தைப் பற்றியே அவர் பேசுவார்.
இரு முனைகளில் தாக்குதல்
ரணிலிடம் இருப்பதாகத் தோன்றும் தயக்கம் காரணமாக அவரின் எதிரிகள் இரு முனைகளில் தாக்குதல்களைத் தொடுக்கக்கூடியதாக இருக்கிறது. ஒன்று தேர்தல்களை எதிர்நோக்க ரணில் அஞ்சுவதால் அவர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கூறப்படுவது. மற்றையது எப்படியாவது பதவியில் தொடர்ந்து இருப்பதற்காக ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கு அவர் சதிமுயற்சியில் ஈடுபடுகிறார் என்ற குற்றச்சாட்டு.
ரங்க பண்டாரவின் யோசனை ஜனாதிபதி தேர்தலை ரணில் நடத்தப்போவதில்லை என்ற அபிப்பிராயம் கொண்டவர்களிடம் அவரைத் தாக்குவதற்கு மேலதிக ஆயுதத்தைக் கொடுத்திருக்கிறது. தான் நிச்சயமாக தோல்வியடையப்போகின்ற ஜனாதிபதி தேர்தலைத் தவிர்க்க சர்வஜன வாக்கெடுப்ப ஒன்றின் மூலம் பதவிக்காலத்தை நீடிப்பதற்கு அவர் சதிசெயாகிறார் என்று இப்போது குற்றஞ் சாட்டப்படுகிறது. இந்த குற்றச்சாட்டை முன்வைப்பவர்களில் பலர் அதில் உட்கிடையாக இருக்கும் முரண்பாட்டைக் கவனிக்கத் தவறுகிறார்கள். ரணில் ஜனாதிபதி தேர்தல் ஒன்றில் தோல்வியடையப் போகிறார் என்றால் அவர் எவ்வாறு சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றியடைய முடியும்? மறுபறத்தில், சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றில் அவரால் வெற்றியடைய முடியுமென்றால் ஏன் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைய முடியாது.
சேதத்தைக் கட்டுப்படுத்தல்
ஒரு புறத்தில் எதிர்க்கட்சிகள் ரங்க பண்டாரவையும் ரணிலையும் தாறுமாறாகத் தாக்குகின்ற அதேவேளை மறுபுறத்தில் தேர்தல் ஜனநாயகம் மீதான அவற்றின் பற்றுறுதியை வலியுறுத்துவது ஐ.தே.க.வுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்துகிறது. கட்சியில் உள்ள பலரும் பொதுச் செயலாளரின் யோசனையால் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். சிலர் சேதத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.
அவர்களில் முதன்மையானவர் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க. நீண்டகாலமாக ரங்க பண்டார வகித்துவரும் பொதுச் செயலாளர் பதவி மீது கருணாநாயக்க கண் வைத்திருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்த இரகசியம். ” அது ரங்க பண்டாரவின் தனிப்பட்ட கூற்றே தவிர வேறு வேறு ஒன்றுமில்லை. அது ஜனாதிபதியின் தீர்மானமல்ல. ஜனாதிபதி தேர்தல் தேர்தல் திட்டமிட்டபடி எதிர்வரும் அக்டோபரிலும் அதைத் தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலும் நடத்தப்படும் ” என்று டெயிலி மிறர் பத்திரிகைக்கு கூறினார்.
பிரதமர் தினேஷ் குணவர்தன
ரங்க பண்டாரவின் கருத்துக்களை நிராகரித்து அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்று வெளியிடப்படவேண்டும் ஊடகங்களில் உள்ள பலர் எதிர்பார்த்தார்கள். ஜனாதிபதியின் ஊடகப்பிரிவிடமிருந்து அறிக்கை ஒன்று வரும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத திருப்பமாக பிரதமர் தினேஷ் குணவர்தனவின ஊடகப்பிரிவினால் மே 29 அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
அந்த அறிக்கையின் விபரம் வருமாறு ;
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதைப் போன்று அரசியலமைப்பு ஏற்பாடுகளின் பிரகாரம் இந்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன திட்டவட்டமாகக் கூறினார். ஜனாதிபதி தேர்தல் செப்டெம்பர் 15 ஆம் திகதிக்கும் அக்டோபர் 17 ஆம் திகதிக்கும் இடையில் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கெனவே அறிவித்ததை பிரதமர் சுட்டிக்காட்டினார்.
” கொழும்பில் மே 29 தேசிய நூலகங்கள் சபையில் மார்ட்டின் விக்கிரமசிங்கவின் வாழ்வும் இலக்கியமும் பிரிவைத் திறந்துவைக்கப்பட்ட வைபவத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய பிரதமர் ஜனாதிபதி தேர்தலையும் பாராளுமன்ற தேர்தலையும் ஒத்திவைப்பது பற்றிய யோசனைகளை நிராகரித்தார். அரசாங்கத்தினாலும் ஆளும் கட்சிக் கூட்டணியினாலும் எந்தவொரு நேரத்திலும் ஆராயப்பட்டிருக்காத யோசனைகளை அறிவிப்பது தவறாகும்.
” தேர்தல் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரசியலமைப்பு ஏற்பாடுகளின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருக்கிறது. செப்டெம்பருக்கும் அக்டோபருக்கும் இடையில் தேர்தல் நடத்தப்படும் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள். தேர்தல் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது.
” ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு அடுத்தது பொதுத் தேர்தலாக இருக்கும் என்று பிரதமர் கூறியிருககிறார். அதே தினத்தில் மாகாணசபை தேர்தல்களையும் உள்ளூராட்சி தேர்தல்களையும் நடத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது என்றும் பிரதமர் கூறினார். சில பேர் பொறுப்பில்லாத முறையில் பல்வேறு விடயங்களைக் கூறுகிறார்கள். எந்த சூழ்நிலையிலும் ஆராயப்பட்டிராத விடயத்தைப் பற்றி சடுதியாக அறிவிப்புக்களைச் செய்து பொறுப்பற்ற முறையில் நாட்டில் அமைதியின்மையை தோற்றுவிக்க ஒரு ஜனநாயக அரசாங்கமோ அல்லது பாராளுமன்றமோ அனுமதிக்கப்போவதில்லை என்பதை நாட்டு மக்களுக்கு நான் கூறுகின்றேன் என்று பிரதமர் கூறினார்.”
ஜூன் 3 செய்தியாளர்கள் மகாநாடு
நடந்தவற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது ரங்க பண்டார கூறியவற்றுடன் அரசாங்கம் தன்னை தொடர்புபடுத்திக் கொள்ளாது என்ற பொதுவான எதிர்பார்ப்பு ஒன்று காணப்பட்டது. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. அவர் கைவிடப்படவில்லை. ஜூன் 3 ஆம் திகதி செய்தியாளர்கள் மகாநாடொன்றைக் கூட்டி தனது யோசனையின் பின்னால் உள்ள காரணங்களை விளக்கப்போவதாக அவர் கடந்த வாரம் அறிவித்தார். இவ்வாரம் தொடர்ச்சியான பல தொலைக்காட்சி நிகழ்ச்ஙாகளிலும் அவர் பங்கேற்பதற்கு ஏற்பாடாகியிருக்கிறது.
ரங்க பண்டாரவும் ரணிலும்
நிலைவரம் குறித்து ஆராய்வதற்கு ஐ.தே.க.வின் சில மூத்த தலைவர்களும் நிருவாகிகளும் கூடியபோது ரங்க பண்டாரவும் பொதுச் செயலாளர் என்ற வகையில் பிரசன்னமாகி இருந்தார். அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட சிலர் ரங்க பண்டாரவை கண்டனம் செய்யத் தொடங்கி அரசாங்கத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிட்டதாக குற்றஞ்சாட்டினர். ஆனால் ரணில் விக்கிரமசிங்க தலையிட்டு பண்டார மீதான தாக்குதல்களை நிறுத்தினார். ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் இந்த விடயத்தில் தனது சிந்தனையை வெளிப்படுத்தி தனிப்பட்ட முறையில் சில யோசனைகளை முன்வைத்திருக்கிறார் என்று ரணில் கூறினார். அந்த கருத்துக்கள் அரசாங்கத்தினுடையதோ அல்லது கட்சியினுடையதோ என்று பண்டார கூறவில்லை. அதனால் அவர் தனது சொந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தவதற்கு உரித்துடையவர். அவரை எவரும் கண்டிக்கக்கூடாது என்றும் ஜனாதிபதி கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பில் ரங்க பண்டாரவுடன் நேரடியாகப் பேச என்னால் முடியவில்லை. ஆனால் அவருக்கு நெருங்கிய தகவலறந்த வட்டாரங்களுடன் தொடர்பு கொள்ளக் கூடியதாக இருந்தது.
இந்த வட்டாரங்களின் மூலம் அறிந்த தகவல்களின்படி ஜனாதிபதி தேர்தலையும் பாராளுமன்ற தேர்தலையும் ஒன்றுக்கு பின் ஒன்றாக நடத்துவதனால் பெருமளவு காலத்தை எடுத்து தற்போதைய நிலைவரத்தை மாற்றிவிடும் என்பது குறித்து ரங்க பண்டார கடுமையான கவலை அடைந்திருக்கிறார். ” தேர்தல் காய்ச்சல் ” தற்போதைய வாழ்க்கைப் போக்கை பல வாரங்களுக்கு ஏன் மாதங்களுக்கு சீர்குலைத்துவிடும். அதனால் பொருளாதா மீட்சியை நோக்கிய தற்போதைய பயணம் பாதி்க்கப்படும் என்று அவர் கவலைப்படுகிறார்.
தனது அச்சங்கள் மற்றும் அக்கறைகள் குறித்து அவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஆராய்ந்ததுடன் ஜனாதிபதி தேர்தலையும் பாராளுமன்ற தேர்தலையும் ஒத்திவைத்து பதவிக் காலங்களை குறைந்தபட்சம் இரு வருடங்களுக்காவது நீடிப்பது குறித்த யோசனையை முன்வைத்தார். ஆனால் ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலை நடத்துவதில் தான் உறுதியாக இருப்பதாக ரணில் பதிலளித்தார். ஆனால் ரங்க பண்டார விரும்பினால் தனது யோசனையை பகிரங்கமாகக் கூறலாம் என்றும் அவ்வாறு செய்வதுை இந்த விடயத்தில் அரசியல் மற்றும் பொதுமக்களின் அபிப்பிராயத்தை பரிட்சித்துப் பார்ப்பதற்கு ஒரு வழி என்றும் ஜனாதிபதி கூறினார்.
விக்னேஸ்வரனின் ஆதரவு
அதனால் ரங்க பண்டார தனது யோசனையை பகிரங்கப்படுத்தினார். அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஊடகங்களின் சில்பிரிவுகளும் அவரை கடுமையாக கண்டனம் செய்தபோதிலும் கூட சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரை ஆரவாரமின்றி ஆதரித்தார்கள். ரங்க பண்டாரவின் யோசனையை யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் பகிரங்கமாக வரவேற்றார்.
தேர்தல்களை ஒத்திவைப்பதற்கும் பதவிக்காலங்களை நீடிப்பதற்கும் குறிப்பிட்ட சில வட்டாரங்களில் ஆதரவு இருக்கின்ற போதிலும் பொதுவில் மக்கள் அந்த யோசனைக்கு எதிராகவே இருக்கிறார்கள். யோசனையை நடைமுறைப்படுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்படு மேயானால் தன்னிச்சையாகவே மக்கள் போராட்டங்கள் வெடிப்பதை நிராகரிக்கமுடியாது. தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறவேண்டும் என்றே உண்மையில் ஜனாதிபதியும் அக்கறை கொண்டிருக்கிறார். இறுதி ஆய்வில், ரங்க பண்டாரவின் ‘உரத்த சிந்தனை ‘ ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க முடியாது என்பதை நிரூபித்திருக்கிறது.
தேர்தல் பிரசாரம்
அதேவேளை கவனத்தை திசைதிருப்பும் இந்த செயற்பாடு ஒரு குறுகிய காலத்துக்கு விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரசாரத்தை ஓரளவுக்கு சேதப்படுத்திவிட்டது. அவரது பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போதைக்காவது அவரது பிரசாரம் வடுப்பட்டுவிட்டது. அத்துடன் சமகி ஜன பலவேகய பாராளுமன்ற உறுப்பினர்களை கவருவதற்கு ‘ ஒப்பறேசன் சஜப ‘ என்ற குறியீட்டுப் பெயரில் முன்னெடுக்கப்பட விருந்த நடவடிக்கையும் பாதிக்கப்படும். கட்சி மாறுவதற்கு திட்டமிட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இப்போது வேறு சிந்நனை வந்துவிடவும் கூடும்.
ஆனால் தற்காலிக பின்னடைவுகளை காலப்போக்கில் வெற்றிகொள்ள முடியும். தேர்தல்களை ஒத்திவைக்கும் நோக்கம் ரணிலுக்கு இல்லை என்பது உறுதியாகி தேர்தலுக்கான திகதியும் அறிவிக்கப்பட்டால் நிலைவரத்தில் மாற்றம் ஏற்படும். விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ தேர்தல் பிரசாரம் பெரும் எடுப்பில் தொடங்கியதும் பிரசார இயக்கவிசையில் பெரும் மாற்றம் ஏற்படும். ரங்க பண்டார விவகாரம் பிறகு முக்கியத்துவத்தை இழந்துவிடும்.
தேர்தல்கள் நாட்டின் பொருளாதார மீட்சியை பாதிக்கும் என்ற ரங்க பண்டாரவின் உரத்த சிந்தனை பெறுமதியானதே. அதைக் கையாளுவதற்கு தேர்தல்களை ஒத்திவைப்பது அல்ல அவற்றில் வெற்றிபெறுவதை உறுிப்படுத்துவதே சிறந்த வழி. ரணில் விக்கிரமசிங்க வெற்றிக்கனியைச் சுவைப்பதற்கு வழிவகுக்கக்கூடியதாக பலம்பொருந்திய தேர்தல் பிரசாரங்களை முன்னெடுப்பதே அவரின் ஆதரவாளர்களும் நேச அணிகளும் செய்யக்கூடியதும் செய்ய வேண்டியதுமாகும்.
ஆங்கில மூலம்: டி. பி. எஸ். ஜெயராஜ் (Daily Mirror)
தமிழில்: வீரகத்தி தனபாலசிங்கம்
நன்றி: வீரகேசரி
****************************************************************